அப்போது தான் மருத்துவமனையிலிருந்து வந்த இஷா, பூவிதழிடம் பேசிவிட்டு இரவு உணவு சமைப்பதற்காக சமையல் அறைக்குள் செல்ல போனவள், அப்போது கையில் காயத்துடன் உள்ளே நுழைந்த சத்தியனை கண்டு பதறி துடித்து, அவன் கையை பற்றி “சக்தி என்னாச்சி கை ஏன் இப்படி வெந்து போயிருக்கு” என்றவளுக்கு கண்களும் கலங்கி விட,
அவளின் கையை உதறி விட்ட சத்தியன் “ஏற்கனவே செம காண்டுல இருக்கேன்.. என் கண்ணு முன்னாடி வராம போடி” என்று அறைக்குள் நுழைந்து கொண்டான்.
பெண்ணவளின் சத்தம் கேட்டு வெளியே வந்த அக்னி, இஷாவை பார்த்துவிட்டு நண்பனை காண சென்றான்.
****
வீட்டியிலிருந்து கிளம்பிய சத்தியனுக்கோ அன்னை பேசிய வார்த்தைகளால் உண்டான கடுப்பு குறையாமல் இருந்தது.
அதை குறைக்க, அக்னியின் வீட்டிற்கு வரும் முன்னே கால் போன போக்கில் வண்டியை எடுத்து கொண்டு ரவுண்ட் அடித்தவனுக்கு தன்னவளின் நிராகரிப்பு வேறு மேலும் காயத்தை ஏற்படுத்த, வண்டியை ஓரமாக நிறுத்தியவன் மாறி மாறி அன்னை பேசிய வார்த்தையே நினைவுக்கு வந்ததில் கோவத்தை அடக்க வழி தெரியாமல் சூடாகயிருந்த வண்டி இன்ஜினில் கை வைத்து விட, கை நன்றாக காய்ந்து வெந்த பிறகே தான் மனம் வந்து அதிலிருந்து கையை எடுத்திருந்தான்.
இப்போது கை காயத்தையே ஆராய்ச்சி செய்தப்படி படுக்கையில் அமர்ந்திருந்தவனுக்கு காயத்தில் வலி இருந்தாலும் மனமோ அதைவிட ஒலையாக கொதித்தது.
வீட்டிற்கு சென்று வந்ததே, அவனின் இத்தகைய நிலைக்கு காரணம் என்பதை அறிந்த அக்னி, மெல்ல அவனின் அருகில் அமர்ந்து கையை இழுத்து காயத்திற்கு மருந்திட்டப்படியே “என்னடா இது” என்றதும் மடம் திறந்த வெள்ளமாக நிகழ்ந்ததை சொல்லி தீர்த்து விட்டான்.
அதைக் கேட்டு அவனை முறைத்தவன் “அதுக்காக கோவத்த இப்படியா காட்டுறது அறிவு கொஞ்சமாவது இருக்கா.. இனி ஒருமுறை இந்த மாதிரி நடந்தாலும் நீ என் மூஞ்சிலயே முழிக்க கூடாது நினைவு இருக்கட்டும்”
“என்ன என்னடா பண்ண சொல்லுற.. அவள அப்படி பேச அவங்களுக்கு என்னடா உரிமையிருக்கு.. ஒருபக்கம் வீட்டுல என்னோட மனச புரிஞ்சிக்காம டார்ச்சர் பண்ணினா.. இன்னொரு பக்கம் உன் தங்கச்சியும் என் மனச புரிஞ்சிக்காம வார்த்தையால பேசி சாகடிக்குறா இல்ல விலகியிருந்து சாகடிக்குறா.. அந்த வலிய விட” என்று காயப்பட்ட கையை காட்டி “இது வலிக்கல* என்று முடித்தவனுக்கு கண்களும் கலங்கி விட்டது.
நண்பனின் வலி புரிந்து தோலோடு அணைத்த அக்னி “விடு சத்யா.. பேபிக்கு உன்ன பிடிக்கும்டா.. பட் உன் அம்மா சொன்ன அதே ரீசனுக்காக தான் அவளும் உன்ன அவாய்ட் பண்றாடா.. சீக்கிரமே புரிஞ்சிப்பா ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதடா”
“ம்ம்..” என்று அவ்விஷயத்திற்கு அதோடு முற்று புள்ளி வைத்த சத்தியன் “நீ ஸ்வீட் ஹார்ட் கூட இருடா பாவம் ஏற்கனவே ரொம்ப பயந்து இருக்கா.. நான் கொஞ்ச நேரம் தனியாயிருந்துட்டு வரேன்” என்க, அதற்கு மேல் தொந்திரவு செய்யாத அக்னி எழுந்து வெளியே வந்து விட,
அங்கு கதவின் அருகில் நின்றபடி தாங்கள் பேசியதை கேட்டு வேதனையை இதழ் கடித்து அடக்கியவண்ணம் இருந்தவளை கண்டு, அறையை கதவை அடைத்துவிட்டு பெண்ணவளின் கையை பற்றி சற்று தள்ளி இழுத்து வந்த அக்னி “இப்படி மனசுல இருக்கிற காதல மறைச்சி.. நீயும் வேதனைப்பட்டு அவனையும் எதுக்கு வேதனை படுத்துற பேபி”
“நான் ஒரு ராசி இல்லாதவ அண்ணா.. என்னால உங்க நண்பன் உயிருக்கு ஆபத்து வந்திட கூடாதுன்னு தான் தள்ளி நிக்கிறேன்.. உங்களுக்கு கூடவா என்னோட நிலை புரியல”
“நீ தேவையில்லாம உன்ன நீயே பிலேம் பண்ணிட்டு பழச புடிச்சி தொங்கிட்டு இருந்தா.. அவன் மனஓலைச்சலயே செத்து போயிடுவான் பரவாயில்லாயா” என்றதும் பட்டென்று நிமிர்ந்தவள் “அண்ணா..” என்று கத்தி விட,
“என்ன..”
“பிளீஸ் அண்ணா நீங்க வேற வார்த்தையால கொல்லாதீங்க.. சரி இவ்வளவு பேசுறீங்களே உங்க வீட்டுல கூட என்ன ஏத்துக்க மாட்டாங்க.. எதுக்கு தேவையில்லாம அவன் பிடிவாதம் பிடிக்கிறான்..”
“உனக்கு பிடிவாதமா தெரியலாம்.. ஆனா அது காதல் அவன் லைஃப்.. பெத்தவங்க இன்னைக்கு ஏத்துக்கலன்னா நாளைக்கு ஏத்துக்குவாங்க.. ஆனா லைஃப் ஆர் லவ் ரெண்டுமே அப்படியில்ல போனா திரும்ப வராது” என்றதில் கடுப்பானவள் “இப்போ என்ன தான் பண்ண சொல்லுறீங்க அண்ணா”
“சிம்பிள் ரெண்டு பேரும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கங்க.. தட்ஸ் இட்” என்றதை கேட்டு இதழ் குவித்து ஊதிய இஷா “முடியவே முடியாது.. இங்க பாருங்க அண்ணா எனக்கு அவன் ஒரு நல்ல ப்ரெண்ட்.. ஒரு ப்ரெண்ட்டா அவன் கஷ்டப்படும் போது எனக்கு வருத்தமா தான் இருக்கு.. அதுக்காக என் வாழ்க்கைய தியாகம் பண்ண முடியாது.. ஒத்துக்குறேன் ஒரு காலத்துல எனக்கு அவன்மேல விருப்பம் இருந்துச்சு பட் இட்ஸ் ஜஸ்ட் அட்ராக்சன்..” என்ற நொடி பெண்ணவளின் கன்னத்தில் இடியன அடியை இறக்கி இருந்தான் அவளின் சக்தி.
***
நண்பன் சென்று சில நிமிடத்தில் தன்னை இயல்புக்கு கொண்டு வந்த சத்தியன், அறையை விட்டு வெளியே வர தன்னவள் இறுதியாக கூறியதில் கண்கள் சிவந்தவன் பெண்ணவளை இழுத்து அடித்துவிட்டான்.
ஆடவன் அடித்த அடியில் பெண்ணவளின் கன்னம் வின்னென்று வலிக்க கண் கலங்கி எதிரே ருத்ரமூர்த்தியாக நின்றவனை கண்டு “சக்தி” என்று அழைத்தவளுக்கு வாயில் காற்று தான் வந்தது.
இதனை எதிர்பாராமல் திகைத்த அக்னியும் கூட “டேய் எதுக்கு அவள கை நீட்டுற”
“பின்ன என்னடா வாய் இருக்குன்னு இஷ்டத்துக்கு பேசுறா கேட்டுட்டு பெருமையா வேடிக்க பாக்க சொல்லுறீயா” என்றவன் தன்னவள் புறம் பார்வையை பதித்து “என்னடி சொன்ன அட்ராக்சன்ல.. ஆமாடி உண்மை தான் அட்ராக்சனா இருக்க போய் தான.. என்ன மறந்துட்டு இன்னொருத்தனுக்கு கழுத்து நீட்டுன..” என்று கத்தியவன் “வழக்கம் போல இந்த தடவையும் ஏமாந்த முட்டாள் நான் தான்.. பட் தேங்க்ஸ் இந்த முறை என் புத்திய சீக்கிரம் தெளியவச்சதுக்கு” என்றவனின் குரலில் வலியின் சாயல் அப்பாட்டமாகவே தெரிய,
பெண்ணவளை அழுத்தமாக பார்த்த சத்தியன் “மச்சி நீ வாடா” என்று அவனையும் இழுத்து கொண்டு பூவிதழை காண செல்ல, அவனின் வார்த்தையில் இதயத்தில் பெரும் வலியை உணர்ந்த இஷாவோ இடிந்து சோஃபாவில் பொத்தென்று அமர்ந்தாள்.
****
ஆடவர்கள் இருவரும் உள்ளே நுழைய, அப்போது தான் பெண்ணவள் கண் விழித்திருந்தாள்.
சத்தியனோ “ஹாய் ஸ்வீட் ஹார்ட் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா”
“இல்..ல அப்..போவே எழுந்..துட்டன்” என்றப்படி பெண்ணவள் கடினப்பட்டு எழுந்து அமர முயற்சிக்க,
“பாத்து ஸ்வீட் ஹார்ட்” என்ற சத்தியன் பெண்ணவள் எழும்ப உதவி செய்து, தலையணை முதுகோடு கொடுத்து அமர வைக்க, அதில் புன்னகைத்த இதழ் அவனின் காயத்தை கண்டு திகைத்து “கை..ல எப்..படி கா..யம்” என்றவளுக்கு சற்று மூச்சு விட சிரமமாகி விட, மூச்சை இழுத்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டாள்.
சத்தியனோ “அது பைக்ல என்ன பிராப்ளம் செக் பண்ணும் போது இன்ஜின்ல கைய வச்சிட்டன்.. மச்சி மருந்து போட்டுட்டான் சரியாயிடும்”
“அ..ச்சோ.. பா..த்து பண்ண..லாம்ல ரொ..ம்ப வலிக்..குதோ” என்றவளுக்கு ஏனோ அந்த காயத்தை பார்க்க பார்க்க கட்டுப்படுத்திய மூச்சு திணறல் கூட அதிகமாகி விட, மூச்சுக்கு சிரமப்பட்டு கண்கள் சொருகும் நிலைக்கு செல்ல போனவளை கண்டு கொண்ட இரு ஆடவர்களும் அவளை பிடித்து கன்னத்தை தட்ட,
சத்தியனோ “மச்சி.. இஷா கூட்டிட்டு வரேன் நீ பாத்துக்க” என்று அறையை விட்டு பெண்ணவளை அழைக்க வெளியே ஓடினான்.
ஒரு கட்டத்தில் பெண்ணவளின் நெஞ்சு கூடு ஏறி இறங்க சிரமப்படும் போராட்டத்தை பார்க்க முடியாத அக்னி, பெண்ணவளின் பின் கழுத்தை பிடித்தப்படி இதழோடு இதழ் சேர்த்து, தன்னுடைய சுவாசத்தை இதழ் வழியே அவளுக்கு கடத்தி மங்கை அவளின் திணறலை நிறுத்தியிருக்க, மூச்சு சீராகிய பெண்ணவளோ ஆடவன் தந்த திடீர் முத்தத்தில் திகைத்து மயக்க நிலைக்கு சென்று விட்டாள்.
***
தன்னவன் பேசி சென்ற வார்த்தைகளை நினைத்தப்படியே கண்ணீர் வடிய எதையும் உணராமல் அமர்ந்திருந்தவள் ஆடவன் “இஷா” என்று பதற்றமாக அழைத்ததும், கண்ணீரை கூட துடைக்க மறந்து பதறி எழுந்தவள் “என்னாச்சி”
“ஸ்வீட் ஹார்ட்டுக்கு பிரீத் பண்ண கஷ்டமா இருக்கு போல.. சீக்கிரம் வா” என்றதை கேட்டு வேகமாக சென்று தன்னுடைய பையை எடுத்தவள் அவனுடன் இழுப்பட்டு செல்ல, அங்கு அக்னி செய்த காட்சியில் இருவருமே விழி பிதுங்கி நின்று விட்டனர்.
பெண்ணவளை காக்க எண்ணியே இத்தகைய முதலுதவியை செய்த அக்னி, அவள் மயங்கவும் தான் தன் இதழை பிரித்தவன், வாசலில் நின்றவர்களை கண்டு “பேபி வந்து என்னாச்சி பாரு” என்றதும் தான் சுயம் பெற்றவள், ஆடவர்களை வெளியே அனுப்பிவிட்டு இதழுக்கான பரிசோதிப்பை பார்க்கலானாள்.
பத்து நிமிடம் கழித்து வெளியே வந்த இஷா “அவங்களுக்கு வீசிங் வந்துடுச்சு.. இதான் ஃபர்ஸ்ட் டைம் போல ரொம்ப பயந்து போயிருக்காங்க.. மே பீ இதுக்கு முன்ன அவங்க இருந்த இடத்தில உண்டான அழுத்தத்துல வந்திருக்குன்னு கூட சொல்லலாம்” என்றவள் சக்தியிடம் மருந்து சீட்டை நீட்டி “சக்தி இந்த இன்ஹேலர் மட்டும் வாங்கி வாங்க.. இனி வீசிங் வரும் போதெல்லாம் தேவைப்படும்” என்க, ஆடவனும் அதனை வாங்கி வர சென்று விட, அக்னியோ சிந்தித்தப்படியே அறைக்குள் நுழைந்து கொண்டான்.
***
அரைமணி நேரம் கழித்து கண்விழித்த இதழுக்கோ அக்னியை பார்க்க சிரமமாகி விட்டது, அவன் தன்னை காக்க தான் முதலுதவி செய்தான் என்று புரிந்தாலும் ஏனோ மங்கையவளுக்கோ ஆடவனை பார்க்க திரணியில்லாமல் போக தலையை கவிழ்த்தப்படி அமர்ந்திருந்தாள்.
அப்போது தான் மருந்தகம் சென்று இஷா கூறியதை வாங்கி வந்த, சத்தியன் பெண்ணவளிடம் கொடுத்து “ஸ்வீட் ஹார்ட் வீசிங் பிராப்ளம் வரும் போதெல்லாம் இன்ஹேலர் எடுத்து அடிச்சிக்க ஓகே வா.. அப்புறம் எப்போவும் பக்கத்துலயே வச்சிக்க” என்றதை கேட்டு பெண்ணவள் சம்மதமாக தலையாட்ட,
அவள் நிமிர்ந்து பாராததின் காரணம் உணர்ந்த சத்தியன் “ஸ்வீட் ஹார்ட்.. எங்க கூட இருக்க அன்கம்பட்டபளா ஃபீல் பன்றியா.. இங்க இருக்க பயமா இருக்கா” என்றதுக்கு இல்லையென்று பெண்ணவள் வேகமாக தலையாட்ட,
“பின்ன ஏன் அமைதியாவே இருக்க”
“அ..து அ..து உங்க கை..ல உள்ள கா..யத்த பா..த்து தா..ன் என..க்கு வீசி..ங் வந்..துச்சு..” என்று பெண்ணவள் திக்கி திக்கி முடித்திருக்க,
அவள் முடிக்கும் வரை பொறுமையாக கேட்ட சத்தியனுக்கு தன்னுடைய காயம் அவளுக்கு ஏதோ நினைவுப்படுத்தி மனதை அழுத்துக்கிறது என்று தெளிவாக புரிய,
என்னவென்று தெரிந்தும் கொள்ளும் நோக்கில் தெரியாதது போல் “இல்ல எனக்கு புரியல.. என் கைலயிருந்த காயத்த பாத்து.. உனக்கு என்ன பிராப்ளம்” என்றதும் கண் கலங்கியவள் “பிளீ..ஸ் என்..கிட்ட அத..பத்தி கேட்கா..தீங்க” என்ற பெண்ணவள் இவர்களுடன் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தாலும் எண்ணங்கள் முழுவதும் தான் பழைய இடத்தில் இருந்ததை பற்றியே நினைவுப்படுத்துவதிலே அதிலிருந்து வெளியே வர முடியாமல் பயத்தில் பேச்சு கூட சாதரணமாக வர மறுத்து திக்கியிருக்க, இதில் அவனின் காயமும் மேலும் கடந்தவையை நினைவுப்படுத்தி அழுத்தியதில் மூச்சு திணறல் ஏற்பட்டது.
அவள் கலங்கியதும் பதறிய சத்தியன் கண்ணீரை துடைத்துவிட்டு “ஏய் ஸ்வீட் ஹார்ட்.. சாரிடா உன்ன கஷ்டப்படுத்துறன்ல இனி எதுவும் கேக்கல அண்ட் என் கைய பாத்தா தான பிராப்ளம்.. நான் பின்னாடி வச்சிக்குறேன்” என்று கையை பின்னாடி மறைத்துக்கொள்ள, இன்னும் அவளின் கண்ணீர் நிற்காததில் வருந்தியவன் “ஐ அம் சாரி ஸ்வீட் ஹார்ட்.. நான் உன்ன தொல்லை பண்றேன் நினைக்குறேன்.. நான் இனி உன்ன டிஸ்டர்ப் பண்ணல பட் அழாத ரொம்ப கஷ்டமாயிருக்கு” என்க,
தனக்காக அவன் வருந்துவதில் அழுகை விட்டவள் “தொல்..லாம் இல்ல.. நீங்க பேசு..றது தான் என்..ன ரிலக்ஸ் பண்ணு..து.. நீங்க அத..பத்தி கேட்..டதும் என்..னால ஃபீலிங்..ஸ் கன்..ட்ரோல் பண்ண முடி..யாம அழுது..ட்டன்”
“ஓகே ஓகே இனி அதபத்தி கேட்க மாட்டேன்.. உனக்கா தோனினா சொல்லு..” என்றதுக்கு சம்மதமாக தலையாட்டியவளை கண்டு இதழை பிதுக்கிய சத்தியன் “இப்போ தான் கைய மறைச்சு தான வச்சிருக்கேன்.. என்ன பாக்கலாம்ல” என்றதும் மெல்ல நிமிர்ந்த பாவையோ அவனை பார்த்து கண் சிமிட்டி புன்னகைக்க,
“குட் சிரிச்சா கியூட்டாயிருக்க.. இப்படியே இருக்கணும்” என்றதுக்கும் பெண்ணவள் புன்னகையை பதிலாக அளித்தாள்.
சிறிது நேரம் வேற இருவரும் கதைகளை பேசி கொண்டிருக்க, அவளின் கண்களோ நொடிக்கு ஒரு முறை எதிரே திறன்பேசியை நொண்டியப்படியிருந்த அக்னியை தொட்டு செல்லவும் தவறவில்லை.
இதில் அவன் தன்னை கண்டுகொள்ளவில்லை என்று முகம் சுருங்கிவிட, பாவம் பேதையவளுக்கு தெரியவில்லை அவ்வளவு நேரம் அவர்கள் இருவரையும் பேசியதை கேட்டு கொண்டிருந்த அக்னி,
அவள் கூறும் ஒவ்வொரு பதிலையும் காதை தீட்டி கேட்டு அவளையே பார்த்திருந்தவனுக்கு அவள் கண் கலங்கியதும் மூச்சு திணறி இன்ஹேலர் எடுத்து அடித்ததும், அவளை அணைக்க பரபரத்த கைகளை சமாதானம் படுத்த துடிப்பதில் கையை இறுக்கி மூடி கட்டுப்படுத்தியவன், பின்
பெண்ணவள் கண் சிமிட்டி புன்னகைத்ததில் திண்டாடி போனான்.
இதில் நண்பன் அவனிடம் கதைப்பது வேறு ஒரு வித பொறாமையை அளித்து தானும் அவளின் அருகில் அமர்ந்து பேச வேண்டுமென்று ஆசை வர, தன் மனம் போன போக்கில் திடுக்கிட்ட அக்னி அவளின் புறம் பார்வையை தவிர்க்கவே திறன்பேசியில் தலையை விட்டு கொண்டான். அப்படியிருந்தும் அவளின் பேச்சுகள் கேட்க, கூடவே அவளின் பார்வையை தீண்டலையும் உணர்ந்தவனுக்கு சில்லென்ற உணர்வு எழுவதையும் தடுக்க முடியவில்லை.
****
நண்பணிடம் சில வித்தியாசத்தை உணர்ந்த சத்தியன், உணவு முடியவும் வேறொரு அறையில் புகைப்படத்தை வெறித்தப்படி நின்ற அக்னியிடம் சென்று தன் சந்தேகத்தைக் கேட்க நண்பன் தந்த பதிலில் திகைத்து விட்டான்.
சுவாசம் தொடரும்..
