அந்த வார இறுதி ஞாயிறு நல்ல நாளாகவும் அமைந்துவிட, குடும்பத்தோடு குலதெய்வ கோவிலை நோக்கி புறப்பட்டனர்.
திருமூர்த்தியின் முகம் கடுகடுக்க அந்த வேனில் அமர்ந்திருந்தார்.
“சரி விடுங்களேன், அதான் அவன் நேரா அங்க வரேன்னு சொல்லிட்டான்ல. நம்மளோட வந்தா என்ன, நேரா கோவிலுக்கு வந்தா என்ன? குடும்பமா சேர்ந்து பொங்கல் வச்சு சாமி கும்பிடுறது தான முக்கியம்” என்று கோபத்தின் உச்சாணிக்கொம்பில் நின்றிருந்த திருமூர்த்தியை மலை இறக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தார் பரமேஸ்வரி.
“என்ன பேசுற பரமு, கோவிலுக்கு போறோம்னு முன்னமே சொல்லியாச்சுல்ல. குடும்பத்தோட சேர்ந்து எல்லாம் ஒன்னா தானே போகணும். இது என்ன பழக்கம், அவள தனியா கூப்பிட்டு நேரா கோவிலுக்கு வரேன்னு சொல்றதெல்லாம்” என்று கடுகடுத்தார்.
“அந்த பொண்ண கூப்பிட்டு நம்மளோட வேன்ல வந்தா உங்களுக்கு பிடிக்காது இல்லங்க. அதனால தான் அவன் அப்படி சொன்னான். எனக்கும் சரியா தான் பட்டுச்சு”.
“அந்தப் பொண்ண கூப்டுட்டு எதுக்கு நம்மளோட வேன்ல வரணும்னு கேக்குறேன். அவ என்ன நம்ம குடும்பமா?”.
“ஏங்க இப்படியே பேசுறீங்க, எனக்கும் தான் இந்த கல்யாணத்துல ஆரம்பத்துல சுத்தமா விருப்பமில்ல. அந்த பொண்ண இன்னுமே முழு மனசா ஏத்துக்க முடியல. ஆனாலும், நமக்கு வேற வழி இல்லையே.. அவ தான் நம்ம மகனுக்குன்னு ஆகிப்போச்சு. எதுக்காக வம்பா இழுத்து பிடிச்சுக்கிட்டு விட்டுடுங்களேன்” என்றார் இறைஞ்சுதலாக.
“உனக்கு உன் சின்ன மகன்னா உயிராச்சே.. அவன் என்ன தப்பு பண்ணாலும் அவன் பக்கம் தான் நிப்ப. என்னால உன்ன போல மானம், மரியாதை கெட்டு அவன் பக்கம் நிக்க முடியாது பரமு. எனக்கு நம்ம குடும்ப கௌரவம் தான் முக்கியம்” என்று கொதித்துக் கொண்டிருந்தார்.
“விடு பரமு, மாப்பிள்ளை சொல்றதும் சரிதானே.. அந்தஸ்த்து, கௌரவம் பார்க்காம கூட பொண்ண எடுத்துடலாம். கொஞ்சம் கூட தராதரம் இல்லாத இடத்துலருந்து எப்படி பொண்ணு எடுக்க முடியும். அவருடைய ஆதங்கமும் நியாயம் தானே” என்று மேலும் திருமூர்த்திக்கு கொம்பு சீவி விட்டார் ஐயனார்.
“இவர் ரொம்ப ஒழுங்கு போல பேசுறாரு பாரு, இவர் பண்ண காரியத்தை எல்லாம் நாம மறந்துட்டோம்னு நினைச்சுட்டாரு போலருக்கு” என்று சிடுசிடுத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் சேரன்.
இந்துவின் குடும்பத்தாரும் இவர்களுடன் பொங்கல் வைக்க கோவிலுக்கு வந்திருந்தனர்.
நல்ல விஷயத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு கோவிலில் பொங்கல் வைத்துவிட்டு ஆரம்பிப்பது நல்லது தானே என்ற எண்ணத்தோடு அவர்களும் இவர்களுடன் இணைந்திருந்தனர்.
காஞ்சனா எப்படியாவது தன் மகள் திலகாவை யஷ்வந்திற்கு கட்டி வைத்துவிட வேண்டும் என்பதாலேயே வலிய சென்று தாங்களும் வருவதாக கூறி இவர்களுடன் இணைந்து கொண்டார்.
ஐயனாரின் குடும்பமும் இவர்களுடன் வருவதைப் பற்றி எல்லாம் யஷ்வந்த் அறிந்திருக்கவில்லை.
“இதெல்லாம் ஆரம்பத்திலேயே அதட்டி வைக்கிறது தான் நல்லது அண்ணி. அண்ண கோபம் நியாயம் தான, நீங்க எதுவும் பேசாதீங்க விடுங்க. இந்நேரத்துக்கு அந்த பொண்ண நீங்க வீட்டை விட்டே விரட்டி அடிச்சிருக்கணும்” என்று தன் மனதில் இருப்பதையும் மேலோட்டமாக கூறி வைத்தார் காஞ்சனா.
அவரின் வார்த்தையில் திடுக்கிட்டு பார்த்தனர் அனைவரும். திருமூர்த்தியை தவிர்த்து மற்ற குடும்ப உறுப்பினர்கள், எங்கே குலதெய்வ கோவிலில் ஏதேனும் பிரச்சனை வந்து விடுமோ என்ற பதட்டத்தோடு தான் அமர்ந்திருந்தனர்.
இவர்கள் அனைவரும் ஒன்றாக வேனில் வந்து அங்கே இறங்கும் முன்பே கோவிலை அடைந்திருந்தான் யஷ்வந்த் பவித்ராவுடன்.
அவளை பார்த்ததுமே ஐயனாரின் குடும்பத்தினருக்கும், திருமூர்த்திக்கும் முகம் மாறிவிட்டது. அவளை கிஞ்சித்தும் சட்டை செய்யாமல் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றனர்.
காஞ்சனா வலிய சென்று யஷ்வந்திடம், “எப்படி இருக்கீங்க மாப்ள?” என்றார் வாயெல்லாம் பல்லாக.
“நல்லா இருக்கேன் அத்த. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றான் இயந்திர கதியில்.
“நல்லா இருக்கோம் பா. எல்லாம் நல்லபடியா நடந்து முடிஞ்சிருந்தா இந்நேரத்துக்கு உங்களயும், என் மகளையும் தம்பதி சகிதமா இங்க கூப்பிட்டு வந்து உங்க கையால பொங்கல் வச்சு சாமிய வழிபட்டு இருக்கலாம். என்ன பண்றது.. எதுவும் நடக்காம போயிடுச்சு” என்றார் பெருமூச்சை வெளியேற்றியபடி.
அவரின் பேச்சில் பவித்ராவின் முகம் மாறிவிட.
“அதான் நடக்கலையே, நடக்காதத பத்தி எதுக்கு வீண் பேச்சு” என்றவன் பவித்ராவின் கையை அழுத்தமாய் பற்றிக்கொண்டு, “வா பவி” என்று முன்னே அழைத்து சென்று விட்டான்.
“எப்படி பேசிட்டு போறான்னு பாத்தியா. இதுக்கு மேல இவன் கிட்ட என்ன கெஞ்சவா முடியும்” என்று சிடுசிடுத்தார் ஐயனார்.
“அதெல்லாம் நான் பாத்துக்குறேன். நீங்க உங்க வேலைய மட்டும் பாக்குறீங்களா”.
இந்த கோவிலின் விசேஷமே பொங்கல் வைத்து முடித்ததும், பூசாரியின் மேல் சாமி அருள் வந்து அனைவருக்கும் கேட்கும் கேள்விகளுக்கு குறி கூறுவது தான்.
பரமேஸ்வரியும் அதற்காக தான் தன் குடும்பம் மொத்தத்தையும் அழைத்துக் கொண்டு இங்கே வந்தது.
சமீப காலமாக அவர்களின் குடும்பத்தில் நடந்து கொண்டிருக்கும் குழப்பங்களும், பிரச்சனைகளும் எப்பொழுது தீரும் என்றும், தன் மகள் நித்யாவின் திருமணம் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்ற வேண்டுதலோடும் தான் இங்கே வந்திருந்தார்.
அனைவரும் குடும்பமாக ஒன்று கூடி பொங்கல் வைத்தனர்.
ஆண்கள் ஒரு புறம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க.
பெண்கள் தங்கள் வேலையில் பரபரப்பாயினர்.
எதற்கு வீண் பிரச்சனை என்று பவித்ரா ஒதுங்கி நிற்கவும். அவளையும் ஓரிரு வேலைகளில் தங்களுடன் இணைத்துக் கொண்டாள் இந்து.
பரமேஸ்வரி வழக்கம் போல் கண்டும் காணாமலும் இருந்து கொண்டார்.
இந்துவின் செயலில் காஞ்சனாவிற்கு தான் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ஆனாலும், வெளிப்படையாய் அவளை ஏன் இதையெல்லாம் செய்ய செய்கிறாள் என்று உரிமையோடும் கேட்க முடியாமல் உள்ளுக்குள்ளேயே குமைந்துக் கொண்டிருந்தார்.
நல்லபடியாக பொங்கல் வைத்து முடியவும், சாமிக்கு படையல் வைத்து கும்பிட்டனர்.
அனைவரும் மனம் உருகி கரம் கூப்பி கடவுளை வேண்டிக் கொண்டு நிற்கவும். பவித்ராவின் அருகில் நின்றிருந்த யஷ்வந்த் அவளை நோக்கி குனிந்து அவள் காதில் கிசுகிசுப்பாக, “சீக்கிரம் நமக்கு குட்டி பவி வேணும்னு வேண்டிக்கோ பவி”.
அதில், சட்டென்று தன் விழிகளை மலர்த்தியவள், “ஏன் குட்டி பவி தான் வேணுமா.. ஆனா, எனக்கு குட்டி பாவா தான் வேணும்” என்றாள் அவளும் அவனைப் போன்றே கிசுகிசுப்பாக.
“ஓகே கிராண்டட்! முதல்ல குட்டி பவி அப்புறமா குட்டி பாவா” என்று அவளை நோக்கி ஒற்றைக் கண்ணை சிமிட்டி இருந்தான்.
இதையெல்லாம் பார்க்க பார்க்க காஞ்சனாவிற்கும், ஐயனாருக்கும் தான் பற்றிக் கொண்டு வந்தது.
சாமி கும்பிட்டு முடியவும் மாலை போல் குறி சொல்லும் நிகழ்வும் துவங்கியது. மொத்த குடும்பத்தினருமே அத்தனை பயபக்தியோடு நின்றனர்.
“எங்க குடும்பம் ரொம்ப கௌரவமான குடும்பம். யாருக்கும் மனசளவுல கூட நாங்க கெடுதல் நினைச்சது கிடையாது. எங்க பசங்க எல்லாரையும் அப்படி பார்த்து பார்த்து எந்த குறையும் இல்லாம வளர்த்தோம். ஆனா, எங்க பையன் பெரிய தப்பு பண்ணிட்டு வந்துட்டான் ஆத்தா. வெளியில தல காட்ட முடியல. அவமானமா இருக்கு. அந்த பொண்ணு தப்பான பெண்ணுன்னு அவனுக்கு நீ தான் புரிய வைக்கணும். அதுக்காக தான் அவன இங்க கூப்பிட்டு வந்திருக்கோம்” என்று திருமூர்த்தி அனைவருக்கும் முன்னால் முந்திக்கொண்டு முதல் ஆளாக கூறவும்.
பவித்ராவிற்கு அங்கு நிற்கவே உடல் கூசி விட்டது.
அதிலும், ஐயனார் மற்றும் காஞ்சனாவின் பார்வை வேறு அவளை கூனிக் குறுகச் செய்ய.
குடும்பத்தினர் அனைவருமே திகைத்துப் போய் பார்த்தனர் திருமூர்த்தியின் பேச்சை.
“என்ன பேசுறீங்க நீங்க?” என்று பதட்டமாகினார் பரமேஸ்வரி.
“நீ கொஞ்சம் சும்மா இரு பரமு. மனுஷங்க வார்த்தையை தான் உன் மகன் நம்ப மாட்டானே.. தெய்வத்துடைய வார்த்தையையாவது நம்புறானான்னு பார்ப்போம். ஆத்தா சொன்னா நம்புவான்ல. அந்தப் பொண்ணு எப்படிப்பட்டவன்னு ஆத்தாவே சொல்லட்டும்” என்று அப்பொழுதும் திடமாக தான் பேசினார்.
அவரின் வார்த்தையில் குடும்பத்தினர் மற்றவர்கள் அனைவருக்குமே ஒரு மாதிரியாகிப் போனது.
“எங்க பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கோம். அவ கல்யாணம் நல்லபடியா நடக்கணும். எந்த தடையும் வராம நீ தான் நல்லபடியா நடத்தி தரணும்” என்று சட்டென்று இடைப்பகுந்து கூறினார் பரமேஸ்வரி.
“அப்படியே எங்க மனசுல இருக்குறதையும் சொல்லிடுறோம் ஆத்தா” என்று அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கூறிய காஞ்சனா, “என் மகளுக்கு இவங்க மகன கட்டி வைக்கணும்னு தான் பேச்சு. ஆனா, அவங்க மகன் குடும்பத்துக்கு சேராத ஒருத்திய கட்டிக்கிட்டு வந்துட்டான். இப்ப அதனால என் மக கல்யாணம் தடைப்பட்டுப் போச்சு. அவ தப்பானவன்றத உணர்த்தி அவள விரட்டி அடிச்சுட்டு, என் மகளுக்கும் அவங்க மகனுக்கும் கல்யாணம் நடக்கணும்ன்ற நல்ல செய்திய நீ தான் சொல்லணும்” என்று அத்தனை பவ்யமாய் கூறினார் காஞ்சனா.
குடும்பத்தினர் மொத்த பேருமே அவரை எரிச்சலான பார்வை பார்த்தனர்.
பவித்ராவிற்கோ கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. அழுகவே துவங்கி விட்டாள்.
ஆனால், யஷ்வந்திடம் எந்த ஒரு உணர்வுமே தென்படவில்லை. அப்படியே இறுகிப் போய் அமைதியாய் நின்றிருந்தான்.
அவனின் இறுக்கமும், மனநிலையும் பவித்ராவின் கைகளில் அழுத்தமாய் பிரதிபலித்தது.
அவன் அழுத்தம் கொடுத்த கையின் மேல் தன் கையை வைத்தவளும் அவனின் கையை அழுத்தமாய் பற்றி கொண்டு அமைதியாய் அழுதுக் கொண்டிருந்தாள்.
அருள் வந்த பூசாரி அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “என்ன பேசுற நீ, இந்த பொண்ணு தப்பான பெண்ணுன்னு உனக்கு யாரு சொன்னா? நீ பாத்தியா? எதை வச்சு அந்த பொண்ண தப்பான பொண்ணுன்னு சொல்ற?”.
“சாமி அந்த பொண்ணு வளர்ந்த இடம் அப்படி”.
“இருந்த இடம் தப்பா இருந்தாலும், அந்த பொண்ணு உத்தமி! எந்த தப்பும் செய்யாதவ.. கோவில், குளம்னு சுத்தி சாமிய கும்பிட்டு நீங்க எத்தனை புண்ணியம் சேர்த்து இருக்கீங்களோ.. அதே அளவு அந்த பொண்ணும் புண்ணியம் செஞ்சவ தான். அந்த பொண்ணு உங்க வீட்டுக்கு மருமகளா வர நீங்களும் புண்ணியம் செஞ்சிருக்கணும்”.
திருமூர்த்திக்கும், ஐயனாருக்கும், காஞ்சனாவிற்கும் முகத்தில் ஈ ஆடவில்லை.
திருமூர்த்தி அப்படியே அதிர்ந்து போய் நின்று விட்டார்.
அவர்களின் குடும்பத்தில் எந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும், முக்கிய நிகழ்வாக இருந்தாலும், இங்கே வந்து அருள் கேட்டு தான் அதை செய்வார்கள்.
அதை அவர்கள் பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றனர். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நம்பிக்கை, அப்படி திருமூர்த்திக்கும், பரமேஸ்வரிக்கும் இதில் பலமான நம்பிக்கை அப்பொழுதிருந்தே.
இப்பொழுது குறி கூறுபவரே இப்படி கூறி விடவும் செய்வதறியாது நின்றுவிட்டார் திருமூர்த்தி.
