ரஞ்சன் உண்டு முடித்து எழுந்தவுடன் மரகதம் பேசினார்,
“ரஞ்சன் உன் கூட பேசணும்,” என்றார்.
அலுவலகத்திற்குத் திரும்பி நடந்தவன் திரும்பாமல் அப்படியே நிற்க,
அவரும் கையை கழுவி விட்டு எழுந்தவர், “மரத்தடிக்கு வா,” என்று விட்டு அவனை கடந்து சென்றார்.
நேரத்தைப் பார்த்தவன் அவர் பின்னே நடந்தான்.
மரத்தடியில் இருவரும் அமர்ந்திருக்க, ரஞ்சன் கையை மார்புக்குக் குறுக்கே கட்டியபடி நேரே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
மரகதம் அவனைத் திரும்பிப் பார்த்தார்.
“உன்கிட்ட நான் இத்தனை நாள் பேசாமல் இருந்தது எவ்வளவு.. பெரிய தப்புன்னு இப்பதான் புரியுது. உனக்கும் வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகள், ஆனாலும் நீயா எல்லாத்தையும் சரி பண்ணிக்கிட்டு வெளியே வந்த..!ஆனால் புது ரஞ்சனா..! யாரையும் நெருங்க விடாமல், ஏன்..? என்கிட்ட இருந்து கூட நீ விலகி போயிட்ட..! நான் அதை அப்படியே விட்டது தப்புன்னு எனக்கு இப்ப புரியுது ரஞ்சன்,” என்றவர் கண்கள் கலங்கியது.
”அந்த பொண்ணு..ரொம்ப பாவம் ரஞ்சன். அவள மாதிரி பொண்ணுங்க எல்லாம் கண்டிப்பா யாருக்கும் கிடைக்க மாட்டா, புரிஞ்சுக்கோ. உன் கஷ்டம் எனக்கு புரியுது, ஆனா… நீ அவ்ளோ அவளை டார்ச்சர் பண்ணாலும், உன் நிலையை தெரிஞ்சுக்கிட்டு அவ உன்ன விரும்ப ஆரம்பிச்சுட்டா… நீ நேத்து உடைச்சியே, அது அவளோட கனவு. அதை அடைய அவ அதிகமா போராடி இருக்கா, இதுக்கு மேல போராட அவகிட்டயும் தெம்பு இல்ல,” என்றவர் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார்.
”அது கடந்த காலம் ரஞ்சன். அதை விட்டுட்டு வெளியே வா. அவ உன்னை எவ்வளவு விரும்புறான்னு உனக்கு தெரியல. உன்னோட புகைப்படங்களில் இருக்க சிரிப்பைத்தான் பார்க்க ஆசைப்பட்டா..! . அதை மீட்டு கொண்டு வர அவ என்ன வேணா செய்வதற்கு தயாரா இருந்தா..! ஆனா நீ.. அவளோட மொத்த சந்தோஷத்தையும் தொடச்சி எறிஞ்சிட்டயே,பாவம் ரஞ்சன் அவ..,” என்றார் அழுதபடி.
மடியில் கோர்த்து இருந்த அவர் கரத்தைப் பற்றி லேசாக இறுக்கம் தந்தவன்,அவர் கையை தட்டிக் கொடுத்துவிட்டு,
“நான் பார்த்துக்கிறேன்,” என்றவன், எழுந்து நடந்து சென்றான்.
செல்லும் மகனின் முதுகைப் பார்த்தவர், அவன் நடையில் மட்டும் பழைய ரஞ்சனை பார்க்கவில்லை, அவன் மனதிலும் பழைய ரஞ்சன் திரும்புவதை உணர்ந்தார்.
காரில் அலுவலகம் செல்ல அமர்ந்த ரஞ்சனைத் திரும்பிப் பார்த்தான் ஆனந்த்.
ரஞ்சன் நெற்றியை நீவியபடி, “என்னை ஏன் அப்படி பார்க்குற..? கிளம்பு,” என்றான். வண்டியை கிளப்பினான் ஆனந்த்.
அன்றைய நாள் முழுதும் அவனுக்கு ஒன்றும் ஓடவில்லை. எழுந்து தன் அறைக்குள்ளேயே நடந்தபடி இருந்தான் ரஞ்சன்.
ஆனந்த் உள்ளே வந்தான். “இன்னைக்கு ஒரு மீட்டிங் இருக்கு போலாமா?” என்றான்.
“ம்ம்…மீட்டிங் ஹாலில் எல்லோரையும் அசெம்பிள் பண்ண சொல்லு,” என்றவன்.
அவன் அறையில் இருந்த குளியலறையினுள் சென்று முகத்தினை அடித்துக் கழுவினான். நீர் சொட்ட சொட்ட வாஷ்பேஷனில் இரு கைகளையும் ஊன்றி முகத்தினை கண்ணாடியில் பார்த்தவனுக்கு மனம் லேசானது போல இருந்தது.
மெல்லிய புன்னகை ஒன்று அவன் இதழ்களில் தோன்றியது. முகத்தைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தான்.
மீட்டிங்கை முடித்தவன்,எப்பொழுதும் போல் தன் அலுவல்களை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது இரவு மணி எட்டு இருக்கும். மரகதம் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்தபடி இருக்க, அவரைப் பார்த்தவன்,
“அம்மா சாப்பிடீங்களா ?” என்றான்.
இத்தனை வருடங்கள் கழித்து கேட்ட மகனைத் திரும்பிப் பார்த்தவர் கண்கள் கலங்க, புன்னகையுடன்,
“சாப்பிட்டேன் பா. நீ சாப்பிடுறியா? சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?” என்று எழுந்தார்.
“ம்ம்.. பிரெஷ் ஆகிட்டு வரேன்..”என்றான்.
டைனிங் டேபிள் அருகில் காத்திருந்த மரகதம்,முன் வந்து அமர்ந்தான் ரஞ்சன்.
உணவை அவனுக்குப் பரிமாறியவர் கண்கள் பனிக்க, அவன் தலையை வாஞ்சையாகத் தடவினார். அவரை நிமிர்ந்து பார்க்க
லேசாக பெருமூச்சு ஒன்றை விட்டு, மரகதம் “சாப்பிடு பா,” என்றார்.
உணவை உண்டவன் தாயிடம் சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்று படுத்துக் கொண்டான்.
காலையில் எழுந்தவன் அருகே இருந்த வெற்றிடத்தைப் பார்த்துவிட்டு மெல்லிய புன்னகையுடன் எழுந்து விரைந்து கிளம்பினான். கீழே வந்தவனை உணவு மேஜையில் மரகதம் உணவை எடுத்து வைத்தபடி
” வா ரஞ்சன் சாப்பிடலாம்,” என்றார்.
நெற்றியைத் தேய்த்தவன் , “க்கும்… அவளைப் போய் கூட்டிட்டு வரேன், அங்கேயே சாப்பிட்டுகிறேன்,” என்றான்.
மகனின் மாற்றம் புரிந்தாலும் ஏதும் தெரியாதது போல,
“யாரைக் கூட்டிட்டு வரப்போற?” என்றார் வந்த புன்னகையை அடக்கியபடி,
அவரைச் செல்லமாக முறைத்தவன், கழுத்தைக் கையினால் தேய்த்தபடி, “அதான்…க்கும்….மயூரியை கூட்டிட்டு வரேன்,” என்றவன் வெளியே நடந்தான் .
போகும் மகனை புன்னகையுடன் பார்த்தவர், “சரளா, மத்தியானத்திற்கு பாயாசமும் சேர்த்து செய்,” என்றார்.
காரில் ஏறியவன் மயூரியின் வீட்டை நோக்கி சென்றான்.முகத்தில் புன்னகை பூத்திருந்தது. வீட்டின் வாயிலில் இறங்கியவனுக்குச் சற்று தயக்கம் ஏற்பட்டது. தயங்கியபடி கேட்டைத் திறந்து உள்ளே சென்றான்,முதன்முறை அந்த வீட்டுக்கு வந்திருந்தான்.
அழைப்பு மணியை அடித்து விட்டு காத்திருக்க மகேந்திரன் தான் கதவை திறந்தான். ரஞ்சனை பார்த்தவன் முறைத்தபடி நின்றிருந்தான்.ரஞ்சனை ‘வா’ என்று அழைக்கவும் இல்லாமல்,வழியும் விடாமல் அவனை மேல் இருந்து கீழ் வரை ஆராய்ச்சியாக நோட்டமிட்டான்.
ரஞ்சன் ஊன்றுகோல் இல்லாமல் நிற்பதை கவனித்தான், ஆனாலும் அவனை முறைத்தபடி நின்றிருந்தான்.
அழைப்பு மணி சத்தம் கேட்டு கதவு திறந்த மகன் எதுவும் சொல்லாமல் நிற்க,மாலினி வெளியே வந்து பார்த்தவருக்கு பதற்றமும் மகிழ்வும் தொற்றிகொண்டது.
, “வாங்க மாப்ள… டேய், வந்தவரை வாசல்ல நிக்க வச்சுக்கிட்டு, விலகுடா..,” என்றபடி மகேந்திரனைத் தள்ளிவிட்டு, “நீங்க வாங்க மாப்பிள்ளை,” என்றார் மாலினி பரபரப்பாக,
ரஞ்சனின் பார்வையும் மகேந்திரனின் பார்வையும் முறைத்து கொண்டே இருக்க, ரஞ்சன் உள்ளே சென்றான்.
“உட்காருங்க மாப்ள,. அவர் இப்ப தான் ஆபீஸ் கிளம்பினார். “என்றார்.
மகேந்திரன் எதுவும் கூறாமல் அவன் அறையை நோக்கி செல்ல
“மாப்ள, நீங்க..சாப்பிட வாங்க. டேய் மாப்ள கூட சேர்ந்து நீயும் சாப்பிடு, அப்படியே மயூரியைக் கூப்பிடு,” என்றவரை அறை வாயிலில் நின்றபடி மகேந்திரன் முறைத்தான்.
”மயூரி” என்ற பெயரில் அவரை நிமிர்ந்து பார்த்த ரஞ்சன் குரலைச் செருமி,
“இல்லை, நான் முதல்ல அவளை…க்கும்…மயூரியைப் பார்க்கணும்,” என்றான். தயங்கியபடி,
“ஹான்…உள்ள ரூம்ல இருக்கா மாப்பிள்ள, இதோ கூப்பிடறேன்,” என்று மாலினி செல்ல முயல,
“இல்லை, நானே அவ ரூமுக்கு போய் பார்க்கிறேன்,” என்று எழுந்தவன், “நீங்க சாப்பாடு ரெடி பண்ணிட்டு கூப்பிடுங்க,” என்றபடி திரும்பியவன் மீண்டும் அவரிடம், “அவ ரூம்…?” என்றான் தயக்கமாக.
“உங்க வீடு மாதிரி இது பெரிய மாளிகை இல்ல, இது தான் அவ ரூம்,” என்றான் மகேந்திரன் அருகே இருந்த கதவைக் காட்டி.
அவனை முறைத்த ரஞ்சன், அவனைத் தாண்டி அறையைத் திறந்தபடி உள்ளே சென்றான்.
இவ்வளவு நேரம் வெளியே மகேந்திரன் உரக்கப் பேசியது மட்டும் கேட்க, பிரியா புரியாமல் வாயிலைப் பார்க்க, அங்கே ரஞ்சனைப் பார்த்தவளுக்குப் பதட்டம் தொற்றிக்கொண்டது.
படுத்திருந்த மயூரியை வேகமாக உசுப்பினாள் பிரியா. “ம்ம்…ப்ச்… ஏய் முழிச்சுத்தான் டி இருக்கேன், சொல்லித் தொலை,” என்றாள் மயூரி.
“ஏய் உன் ஆளு…” என்று கூறியவள் ரஞ்சனைக் கண்டு வாயில் கை வைத்து நாக்கைக் கடித்தபடி, “உன் வீட்டுக்காரர் மய்யூ,” என்றாள்.
சட்டென எழுந்து அமர்ந்தாள் மயூரி,
கட்டிலில் சாய்ந்து காலை மடக்கி கைகளை அதில் கோர்த்தபடி விரல்களைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
ரஞ்சன் திரும்பிப் பிரியாவைப் பார்க்க,”நான் வரேன் மயூரி.. “என்று ரஞ்சனைக் கடந்து வெளியே செல்ல முயன்றாள்.
அவளைச் சொடக்கிட்டு அழைத்தான் ரஞ்சன். அவள் திரும்பி பார்க்க “உனக்கு வேற வேலையே கிடையாதா? எப்ப பார்த்தாலும் இவ கூட சுத்திட்டு இருக்க,” என்றான் முறைத்தபடி.
“அவ தான் கூப்பிட்டா..”என்றாள் பிரியா பதட்டமாக,
“பிரியா நீ போ,” என்றாள் மயூரி.
அவளைத் திரும்பிப் பார்த்த ரஞ்சன் அமைதியாக இருக்க, மயூரி தலையை குனிந்து கொண்டாள். பிரியா வெளியே சென்றாள்.
”கதவைச் சாத்திட்டுப் போ,” என்றான் ப்ரியாவை பார்க்காமல் மயூரியின் மீது பார்வையை வைத்தபடி.
பிரியா கதவைச் சாத்திவிட்டு வெளியே செல்ல, ரஞ்சன் தன் பாக்கெட்டினுள் இரு கைகளையும் நுழைத்தபடி சுற்றி அறையை நோட்டமிட்டான்.
ஒரு ஆள் படுக்கக்கூடிய சிறிய கட்டில், அதன் அருகில் ஒரு மேஜை நாற்காலி, அதன் மேல் புத்தகங்களும், பேப்பர்களும், அதன் அடியில் மயூரியின் பைகள், அதன் எதிர் முனையில் கண்ணாடியுடன் ஒரு மேஜை அலமாரி, மேஜைக்கும் அலமாரிக்கும் நடுவில் குளியலறைத் திறப்பு.
மயூரியின் கட்டிலின் பின்னே ஒரு ஜன்னல் திறந்திருக்க, திரைச்சீலைகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தது. ஜன்னலின் மேலே சுவற்றில் ஒரு ஏர்கூலர். கட்டிலில் டெடி பியர் டிசைன் போட்ட மெத்தை விரிப்பும்,தலையணைகளும் என்று இருந்தது.
அதில் மரூன் நிற சுடிதாரில் கண்கள் சிவக்க, முகம் வாடி, தலைமுடிகள் கலைந்து, தலையைக் கவிழ்ந்தபடி அமர்ந்திருந்த மயூரியின் மீது வந்து நின்றது ரஞ்சனின் பார்வை.
”ம்ம்…பரவால்ல, என் ரூம் அளவுக்கு இல்லைனாலும் ஓகே தான்,” என்றான்.
அவனை நிமிர்ந்து முறைத்த மயூரியை ஒற்றைப் புருவம் உயர்த்திப் பார்த்தான் ரஞ்சன். அவள் கண்களில் பழைய குறும்பும் உயிர்ப்பும் இல்லை. அவன் பார்வையில் மீண்டும் தலையைக் கவிழ்ந்து கொண்டாள் மயூரி.
“ஓகே,… வா, சாப்பிட்டு கிளம்பலாம்,” என்றான் வாயிலை நோக்கித் திரும்பியபடி.
“நான் வர முடியாது,” என்றாள் அவனைப் பார்க்காமல்.
“இப்ப என்கூட கிளம்பச் சொன்னேன், வரியான்னு உன்கிட்ட பெர்மிஷன் கேட்கல,” என்றான் ரஞ்சன்.
சலிப்பாகத் தலையைத் திருப்பி பதில் சொல்லாமல் மயூரி அமர்ந்திருக்க அவளைப் பார்த்தபடி, “ஓகே,.. தென்,” என்றபடி அவள் கட்டிலில் வந்து அமர்ந்தான் ரஞ்சன்.
அதிர்வாக அவனை நிமிர்ந்து பார்த்த மயூரியின் கண்கள் கலங்க, “ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க,” என்றாள் கெஞ்சலாக.
அவளை திரும்பிப் பார்த்தவன், “அதான் இருபத்திநாலு … இல்ல அதுக்கு மேலயும் பன்னிரண்டு மணி நேரம் கொடுத்தாச்சே..போதும். நீ என்ன வேண்டாம்னு சொல்லிட்டு இங்க வருவ, பார்த்துட்டு சும்மா இருப்பேன்னு நினைச்சியா?” என்றான் ஒற்றைப் புருவத்தைத் தூக்கி அவளை நேராகப் பார்த்து.
அவள் கண்களில் இருந்து இரு துளி கண்ணீர் கீழே விழுந்தது. முகத்தைத் முட்டியில் புதைத்து அழத் துவங்கினாள்.
ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவன் எழுந்து கொண்டு,
“நான் விடமாட்டேன்னு உனக்கே தெரியும். தேவையில்லாம சீன் கிரியேட் பண்ணாம கிளம்பி வா. நான் வெளிய வெயிட் பண்றேன்,” என்றபடி கதவை நோக்கி நடந்தான்.
செல்லும் அவன் முதுகைப் பார்த்தவளுக்குத் தான் ஒன்றும் செய்ய இயலாமல் இருப்பதை கண்டு தன் மீதே கோபம். அவனுடன் போகத் துடிக்கும் மனதின் மீது அந்த கோபம் அதிகமாயிற்று.
வெளியே வந்தவனைப் பார்த்த மாலினி, “சாப்பாடு ரெடி மாப்பிள்ளை, நீங்க வாங்க சாப்பிடலாம்,” என்றவரைத் தொடர்ந்து
அடுக்களையின் உள்ளே சேர்ந்திருந்த சிறிய டைனிங் ரூமிற்குச் சென்றான். அங்கே சென்று உணவு உண்ண அமர்ந்தான் ரஞ்சன். அவனுக்கு மகிழ்வுடன் உணவை வைத்த மாலினி, அவன் உண்ணத் துவங்கியதும்,
“மாப்ள.. நான் சொல்றத தப்பா… நினைக்காதீங்க. என் பொண்ணு கொஞ்சம் பிடிவாதக்காரி தான், ஆனா கெட்டவ இல்ல,” என்றவர் அவன் நிமிர்ந்து பார்க்க அமைதியானார்.
“ம்ம்…சொல்லுங்க,” என்றபடி மீண்டும் உணவை உண்ணத் துவங்கினான்.
”அவளை..கூட்டிட்டுப் போகத் தான் வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு தெரியல, இருந்தாலும் என் பொண்ணைக் கொஞ்சம் பார்த்துக்கோங்க,” என்றார் மெதுவாக.
அவர் சொன்னதில் உண்பதை நிறுத்தி, “அப்போ அவ எதுவுமே சொல்லலையா?” என்றான் வியப்பை வெளியே காட்டாமல்.
“அவங்க அப்பாவும் அவ அழுகுறதப் பார்த்துட்டு எவ்வளவோ கேட்டார், நானும் கேட்டேன் அவ சொல்லல. ‘ஏன் ரெண்டு நாள் மனசு மாற்றத்திற்காக இங்க வரக்கூடாதா?’ அப்படினு மட்டும் தான் கேட்டா. அவங்க அண்ணன் கூட… அவன் கூட… மன்னிச்சுருங்க மாப்ள, அவன் சொன்னதை அப்படியே,” என்று தயங்கியவர், “பிரச்சனைன்னா வாயைத் திறந்து சொல்லித் தொலை, அதை விட்டுட்டு எதுக்கு ஒப்பாரி வச்சிட்டு இருக்கன்னு கேட்டான். கோபப்பட்டுச் சாப்பிடாமல் எழுந்து போய்ட்டாளே தவிர எதுவும் சொல்லல,” என்றார் தயக்கத்துடன்.
தலையை குனிந்து சாப்பிடத் துவங்கியவனுக்கு மெல்லிய புன்னகை உதட்டில் தோன்றி மறைந்தது. மீண்டும் மாலினி தொடர்ந்தார்,
“என்ன பிரச்சனைனாலும் அவ கிட்ட பேசித் தீர்த்துக்கங்க மாப்ள. பிடிவாதக்காரி தான் ஆனா கொஞ்சம் பதமா எடுத்து சொன்னா கேட்டுக்குவா…அவ இவ்வளவு அழுது நான் பார்த்ததில்லை. தப்பா… எதுவும் சொல்லி இருந்தா… மன்னிச்சிடுங்க,” என்று அவர் முடிக்கும் போது மயூரி அங்கே வந்தாள்.
தாயை முறைத்தபடி நின்ற மயூரியிடம், “வாம்மா சாப்பிட வா,” என்றார்.
“எனக்கு வேண்டாம். கிளம்பச் சொன்னார் கிளம்பிட்டேன்,” என்றாள் ரஞ்சனைப் பார்க்காமலே.
ஆனால் ரஞ்சன்,மஞ்சள் நிறச் சுடிதாரில் அழகாகக் கிளம்பி இருந்தவளைப் பார்த்துக் கொண்டே தான் இருந்தான்.
“சாப்பிடு கிளம்பலாம்,” என்றான்.
“எனக்கு பசிக்கல,” என்றபடி அங்கிருந்து வெளியே செல்ல எத்தனித்தாள்.
“வந்ததிலிருந்து சரியாகச் சாப்பிடல மய்யூ. இட்லி தானே, உனக்கு பிடிச்ச வெங்காயச் சட்னி கூட வச்சிருக்கேன். சாப்பிட்டு கிளம்புடா,” என்றார் அவள் தலையைத் தடவி.
மாலினி மயூரியின் பக்கம் திரும்பி இருக்க, ரஞ்சன் புருவங்களை ஆச்சரியத்தில் உயர்த்தி இறக்கி, அவள் தாயின் கொஞ்சலைப் பார்த்து அவளை ஏளனப் பார்வையால் பார்க்க, மாலினிக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் மயூரிக்கு அனைத்தும் தெளிவாகத் தெரிந்தது
.
மனதில் கருவினாள், ‘உண்மையான அன்பைப் புரிஞ்சுக்கத் தெரியாது, நக்கல் மட்டும் நல்லா வரும்,’என்று எண்ணியவள் அவன் எதிரே இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள்.
மயூரிக்கும் உணவைக் தட்டில் வைத்தார் மாலினி,”ரெண்டு தோசை ஊத்துறேன், மாப்பிள்ளை நீங்களும் தோசை சாப்பிடுங்க,” என்றபடி அடுக்களைக்குள் ஓடினார்.
மயூரி தலையைக் குனிந்தபடி இட்லியைப் பிய்த்து வாயில் வைக்க, அவன் புறம் இருந்த அந்த வெங்காயச் சட்னியை அவள் புறம் தள்ளி, ஒரு கரண்டி எடுத்து அவள் தட்டிலும் வைத்தான். அவனை நிமிர்ந்து பார்த்தவளிடம், அவன் கண்களால் தட்டைக் காட்டி உண்ணும்படி சைகை செய்தான்.
அவள் ஏதும் பேசாமல் உண்டாள். கண்களில் நீர் கோர்க்காமல் இருக்க அவள் அரும்பாடு படுவது அவனுக்குப் புரிந்தது…
