இதோ அதோ என்று ரோஷினி கிளம்பும் நாளும் வந்து விட்டது. இன்று வரை வீட்டில் இருக்கும் மூவராலும் விஜய ராகவனிடம் நெருங்கி பேசமுடியவில்லை.அநேக நேரம் அலுவலகத்திலும், வீட்டுக்கு வந்தால் குழந்தையுடனும் என்று இருப்பவனுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் கூட நேரம் இல்லாமல் போனது.
ரோஷினி தான் கிளம்புவதற்கு முன் எப்படியாவது தனக்கு வரப்போகும் அண்ணியை பார்த்து முடிவு செய்து விட்டாவது கிளம்ப நினைத்திருக்க நடைமுறை முற்றிலும் வேறாக இருப்பதை பார்த்துக் கடுப்புதான். அதை தன் அம்மாவிடம் சொல்லவும் செய்தாள்.
“பேசாம விஜய்கிட்ட ஒண்ணமே கீக வேணாம்.. வர போட்டோஸ் வச்சு நாமே பாக்கலாம். ஒத்து வரதை மட்டும் வச்சு அவன்கிட்ட பேசிப்பார்ப்போம் ” என்று மகள் சொன்ன யோசனைக்கு நிச்சயம் மறுப்பு தெரிவித்துவிட்டார்கள் வீட்டுப்பெரியவர்கள்.
“என்ன ரோஷினி சின்ன குழந்தை மாதிரி பேசுற …அவன் கிட்ட கேக்காம அவனோட அனுமதி இல்லாம எப்படி பொண்ணு பார்க்க முடியும் ? ஒரு நல்லபடியா நடந்து பொண்ணு கிடைச்சா கூட உன் அண்ணன் முடியாதுன்னு சொல்லிட்டா அப்புறம் என்ன பண்ண முடியும். பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு பதில் சொல்றது யாரு ?
இது ஒன்னும் விளையாட்டு விஷயமும் இல்ல . கடத்தெருவுல நிமிஷமா யோசிச்சு முடிவெடுத்து வாங்குற பொருளும் இல்லை . நீ கெளம்பு . நாங்க எப்படியாவது அவன்கிட்ட அவனுடைய ரெண்டாவது கல்யாணத்த பத்தி பேசுறோம்.
இன்னிக்கு இல்லன்னா கூட நிதானமா பேசும் போது நிச்சயம் புரிஞ்சுக்க வாய்ப்பு இருக்கு. பேச பேச அவனோட மனசு மாறும் கல்யாணத்துக்கு மனசார சம்மதம் சொல்லி கல்யாணம் பண்ணிப்பான் . அதுவரைக்கும் நாம பொறுமையா இருந்து தான் ஆகணும் . நம்ம போர் ஸ் பண்றோம் கல்யாணம் பண்ணிட்டு ,திரும்ப கல்யாண வாழ்க்கையில் பிரச்சனை வந்தால் நிச்சயம் அவனால் அதுல இருந்து மீண்டு வரவே முடியாது . ஏற்கனவே திவ்யா பண்ணிவிட்ட குழப்பத்துல கல்யாணம் செஞ்சுக்கறது பத்தி யோசிக்கவே மாட்டேங்குறான் .
அவனோட உணர்வுகளுக்கும் நாம மதிப்பு கொடுத்து தான் ஆகணும் . ஒரு வேலை அவன் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் என்று இருந்தாலும் நாம பண்ணறதுக்கு ஒண்ணுமே இல்லை . நல்லதே நடக்கும் . நாம பொறுமையா தான் இருக்கணும் .”என்று ரோஷினிக்கு நீண்ட அறிவுரை கிடைத்தது .
அதில் பொறுமை இழந்தவள் கிளம்பும் வரை அண்ணனின் திருமணம் பற்றி பேசவே இல்லை . குழந்தை தயா வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வருவதும் ,பாட்டி தாதாவுடன் நேரத்தை கழிப்பதுமாக இருந்தாள் .இந்த முறை சிறியவளை விட்டுவிட்டு கிளம்புவதற்கு விஜயனின் பெற்றவர்களுக்கு மனமில்லை. மகனுக்கு என்று ஒரு வாழ்க்கையை அமைத்து தருவது தங்களது பொறுப்பு.அதிலிருந்து நழுவவேண்டாம் என்று இந்தியாவிலேயே இருந்து விட்டார்கள்.
ரோஷினி குழந்தையை கூட்டிக்கொண்டு சென்ற பிறகு அவர்கள் இல்லாத அந்த தனிமையை தயா உணரத்தொடங்கினாள்.
ஒருநாளைக்கு நூறுமுறையாவது அத்தை புராணம் தான். தகப்பனுக்கும் வேலை பளுவில் அதிக நேரம் மகளுடன் செலவிடமுடியாத நிலை. அடிக்கடி வரும் வெளிநாட்டுப் பயணங்கள் என்று சோர்ந்து தான் போனான் விஜயராகவன்.அவனை தேற்றவோ, தோளில் சாய்த்துக்கொண்டு தோழமை பாராட்டவோ பெற்றவர்களால் முடியவில்லை. இத்தனை வருஷங்கள் அவனுடன் இல்லாமல் விட்டதில் பெரிய இடைவெளி வந்திருந்தது.
இப்போது எந்த செங்கலையும் சிமெண்டையும் வைத்து நிரப்புவது?
ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆனந்தன், காலைநேரம் விஜயன் உணவு சாப்பிட அமர்ந்திருக்கும் பொழுது மனைவிக்கு கண்சாடையில் அழைத்து அங்கே டேபிளில் அமர்த்திக்கொண்டார். அப்பாவும் அம்மாவும் தன்னிடம் ஏதோ பேச முயற்சி செய்கிறார்கள் என்று புரிந்தவனும் வார்த்தைகளை விடாமல் அமைதியாக சாப்பிட்டுகொண்டிட்ருந்த்தான்.
அவனது உடல்மொழி கொண்டே பெரியவர்கள் புரிந்து கொண்டார்கள்.அவன் தாங்கள் பேசத்தான் காத்திருக்கிறான் என்று .
பாதி சாப்பாட்டில் இருந்து இரண்டு முறை நிமிர்ந்து பார்த்தவன் மறந்தும் கூட வார்த்தைகளை விடவில்லை . இத்தனை வருஷ கார்ப்பரேட் உலகம் எதிரில் அமர்ந்து இருப்பவர் பேசி முடிக்கும் வரை அமைதியாக கேட்டுக் கொள்வதை அவனுக்கு பழக்கி வைத்திருந்தது . வெகு நிதானமாக அவர்கள் வார்த்தைகளுக்காக காத்திருந்தான் .
விஜயராகவனை ஏமாற்றாமல் அவனது பெற்றவர் பேச ஆரம்பித்தார் .” விஜயா … உனக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு நானும் அம்மாவும் யோசிக்கிறோம் . எங்களுக்கு தெரிஞ்ச உன்னோட கல்யாண வாழ்க்கை நிறைய ஆசைகளோடு ஆரம்பித்தது . ஆனால் , அது முடிஞ்ச கதை . இப்போ உனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கா . அவளுக்கு கண்டிப்பாக அம்மாவோட துணை தேவை .
இப்போ அவளுக்கு உடம்பு சரியில்லாமல் போன போதே , நீ எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு உன்னோட பி.ஏ சுந்தரம் சொன்னாரு
இந்த முறை நாங்க உனக்காக பெண்ணை தேடுறோம். அவசரப்படாம நிதானமா பொண்ண பத்தி எல்லா விஷயங்களும் நல்லா விசாரிச்சு அதுக்கு பிறகு முடிவு செய்கிறோம் .உனக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும்னு மட்டும் நீ சொல்லு .
ஏற்கனவே கல்யாணம் ஆகி , விவாகரத்து ஆன பெண்ணையோ, இல்ல கணவனை இழந்த பெண்ணையோ பார்க்கலாமா ? இல்ல … வயசு அதிகமாகியும் இதுவரைக்கும் திருமணம் ஆகாத பெண்ணை உனக்காக பார்க்கலாமா ? உன்னோட சாய்ஸ் எப்படின்னு நீ சொல்லு.அதுக்கு தகுந்தா மாதிரி தேடலாம்.”
பெற்றோர்களின் பேச்சில் இருந்த மன கஷ்டத்தை புரிந்து கொண்டவன் ,” எனக்கு கல்யாணம் செஞ்சுக்கணும்னு தோணலியேப்பா…ஏற்கனவே பட்ட அடி ,அதோட வலி மரண வலி. கைல ஒரு குழந்தையை வச்சிக்கிட்டு எப்படி திரும்ப மணமேடை ஏறுவேன்?அவ குடுத்துட்டு போன காயம் இந்த ஜென்மத்துல ஆறாது.புதுசா வரவகிட்ட காயத்துக்கு மருந்துங்கற பேருல அவளை மரணகாயம் படவெச்சிருவேனோன்னு பயமா இருக்கு. நீங்க சொல்ற விஷயங்கள் மூளைக்கு நல்லாவே புரியுது. மனசுக்கு புரியல.”என்று விட்டு எழுந்துவிட்டான்.
கையை கழுவிக்கொண்டு வந்தவன்,மீண்டும் தொடர்ந்தான்,”நீங்க எனக்காக மேட்ரிமோனி சைட்ல பணம் கட்டி, தெரிஞ்சவங்ககிட்டே சொல்லின்னு பொண்ணு தேடுறது எனக்கு தெரியும். கொஞ்ச நாள் எனக்கு யோசிக்க டைம் வேணும். நானே வந்து எப்படிப்பட்ட பொண்ணு பாக்கலாம்னு சொல்றேன்.அதுவரைக்கும் அமைதியா இருங்க. இப்போ,நானும் தயாவும் வெளியே ஒரு லாங் டிரைவ் போயிட்டு வரோம்.” என்றுவிட்டு கிளம்பினான்.
பெண்ணரசியை கூட்டிக்கொண்டு மகாபலிபுரம் வரை சென்றவன், மாலை நேரம் வரை அங்கேயே பெண்ணுடன் நேரம் செலவிட்டான் .மகளுடன் இருப்பதே பாதி மனசோர்வை அவனிடமிருந்து நீக்கியது. அப்பாவும் மகளும் விளையாடினார்கள்.ange இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மதியம் சாப்பிட்டார்கள்.காரிலேயே கொஞ்ச நேரம் தூங்கினார்கள்.தயா வெகுநாட்கள் கழித்து அப்பாவுடன் இருப்பதால் பட்டாம்பூச்சி ஆனாள். அவளது தேடுதலில் அப்பாவுக்கான அவளது ஏக்கம் அப்பட்டமாக தெரிந்தது.
குழந்தையுடன் இன்னமும் நேரம் செலவழித்திருக்க வேண்டும் என்று தனக்குள் மருகினான் விஜயராகவன்.மாலை இருவரும் வீட்டுக்கு வரும்பொழுதே தயா காரில் மீண்டும் தூங்கிவிட்டாள். விளையாடிய களைப்பு. இரவு இருவரும் வீடு வந்து சேரவே எட்டு மணியாகியது.
ஒரு குளியல் போட்டுவிட்டு,தயாவையும் எழுப்பி குளிப்பாட்டி ,வேறு இரவுக்கான ஆடையை போட்டுவிட்டு,குழந்தையை கூட்டிக்கொண்டு வந்து அவளுக்கு ஊட்டி,தானும் சாப்பிட்டு முடித்தான்.தயா சோஃபாவில் அமர்ந்திருந்த தகப்பனின் மடியில் படுத்துக்கொண்டு இடுப்பை கெட்டியாக இறுக்கிக்கொண்டே தூக்கத்தை தொடர்ந்ததில் விஜயனின் கண்கள் கலங்கியது.
நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருந்த பெரியவர்களுக்கும் மனம் உணர்ச்சிப் பிழம்பானது. மனைவி மகளுடன் சந்தோஷமாக வாழவேண்டிய மகன் இன்று நான்குவயது குழந்தையை வைத்துக்கொண்டு தனித்து இருப்பது அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
மனைவி இறந்து போயிருந்தால் அது ஒருவகை.குழந்தை பிறந்தபிறகு, கணவனும் குழந்தையும் எனக்கு வேண்டாம். எனக்கு விருப்பமான முறையில் சுதந்திரமாக வாழவேண்டும் என்று மனைவி கணவனையும் குழந்தையையும் உதறி தள்ளிவிட்டு சென்றுவிட்டால் அடிபட்டவர்களின் மனம் எப்படி இருக்கும்? பெற்றவர்களுக்கு மகனின் நிலைமை புரிந்தது. அவனாக தேடிக்கொண்ட வாழ்க்கை. இன்று மகன் கஷ்டப்படுவதை பார்த்து வீம்பாக நிற்க முடியவில்லை.பெற்றவர்கள் மனம் அப்படித்தானே!
அரவிந்தனின் வீட்டிலும் கல்யாணம் பற்றிய பேச்சுகள் தான்.அவனுடைய அம்மா பெண்பார்க்க வந்தே ஆகவேண்டும் என்று பிடிவாதமாக நின்றார். இதிலிருந்து தப்பிப்பதற்க்காகத்தான் எங்காவது செல்லுவதற்கு திட்டமிட்டதே.கேம்ம்புக்கு மற்ற மருத்துவர்கள் சில நாட்களுக்கு மட்டும் சென்று வருவதற்கு ஒத்துக்கொண்டிருக்கும்பொழுது அரவிந்தன் மட்டும் தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு அங்கேயே தங்கியிருக்க அவனாகத்தான் கேட்டான். விஷயத்தை ஒத்திப்போடுவதன் மூலமாக தனது விருப்பமின்மையை பெண்வீட்டார் தெரிந்து கொள்வார்கள் என்று அவன் கணக்கிட ,அவன் அம்மாவோ அவனது திருமணத்தை சீக்கிரமாக நடத்தியாகவேண்டும் என்று நிற்கிறார்.
சமீப காலமாக அரவிந்தன் சந்தனாவை தொடர்வது போல அவருக்கு தோன்றுகிறது. இரண்டொருமுறை அவர் சந்தனாவுடன் அரவிந்தனை பார்க்கவும் செய்திருக்கிறார். ஒருமுறை அவளை அவர்கள் வீட்டில் காரில் விட்டு செல்லும் பொழுது,மற்றொருமுறை காபி ஷாப்பில் . எதுவும் கைமீறி போய் விட்டதாக அவர் நினைக்கவில்லை. அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று கூட அவருக்குத் தோன்றவில்லை.
இருவருக்குமான திருமண வயதும், இருவரின் அப்பாக்களும் தோழர்களாக இருப்பதாலும் காதலுக்கு சாத்தியம் உண்டு என்று தோன்றுகிறது.தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க அவர் தயாராக இல்லை. இன்னமும் தனது மகன் சந்தனாவை காதலிக்கிறான்,அவள்தான் மறுக்கிறாள் என்று தெரியாது.இது பொதுவில் நடக்கும் விஷயம் தான். ஊருக்கே தெரியும் காதல், பெற்றவர்களுக்கு மட்டும் கடைசியாகத்தான் தெரியும்.
மறுக்க முடியாத நிலையில் நிறுத்தி அரவிந்தனை பெண்பார்க்கவென்று அழைத்தும் சென்று விட்டார்கள். அந்த பெண்ணும் மருத்துவர் தாம். மகப்பேறு மறுத்த்துவர் . வீட்டில் பேசும் பொழுது சிரித்துக்கொண்டே பெண்ணின் மாமா, ” பையன் குழந்தைகள் நல டாக்டர்.பொண்ணு கைனகாலஜிஸ்ட்.எதிர்காலத்துல ரெண்டு பெரும் சேர்ந்து கிளினிக் ஆரம்பிக்கலாம் “என்று எடுத்துக்கொடுக்க அரவிந்தனின் அம்மா அதை கெட்டியாக பிடித்துகொண்டாள். பெண் தன் மகளின் புகுத்தவீட்டு உறவு.நாத்தனார் முறை. பெரிய பணம் கொண்டவர்கள். இந்த திருமணம் முடிந்தால் கிடைக்கும் சம்பத்துகள் அனேகம். அதனாலேயே திருமணம் சீக்கிரம் நடக்கவேண்டும் என்று அவர் விரும்ப மகனோ எல்லோர் முன்னிலையிலும்,”எனக்கு பொண்ணை பார்க்க பிடிச்சிருக்கு. ஐ மீன் என்னோட தங்கை கல்யாணத்துல பார்த்திருக்கேன். பட், இப்போ எனக்கு யோசிக்க நிறைய நேரம் வேணும். ஆட்டு மாசம் கூட ஆகலாம். அதுவரைக்கும் வெயிட் செஞ்சாலும் ஓகேய்,இல்ல வேற பாருங்க ” என்றுவிட்டான்.
பெண்ணை பெற்றவர்களுக்கு அதிருப்தி படர்ந்தது. விரைவில் இந்த திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்று அவர்களுக்கு. பெண்ணுக்கோ “இவன் நம் பணத்தையோ,மருத்துவர் என்பதையோ,எதிர்காலத்தில் மருத்துவமனை பற்றியோ நினைக்காமல் யோசிக்க வேண்டும் என்று சொன்னது பிடித்தது.
“டேக் யுவர் டைம். நா இப்போ மேல படிச்சிட்டு இருக்கேன்.இன்னும் எட்டு மாசம் மீதம் இருக்கு. ஜஸ்ட் அப்பாம்மா சொன்னாங்களேன்னு கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கிட்டேன்.எனக்கு உங்கள பிடிச்சிருக்கு. வெயிட் பண்ணி பாக்கலாம்னு தோணுது. எஸ், ஐ கென் வெயிட் ” என்று முடித்துவிட்டாள்.
ஒரு பெண் நேரடியாக தனது அவன் மீதான பிடித்ததை சொன்னபிறகும் அவனால் சந்தனாவை விட்டு வேறு யோசிக்க முடியவில்லை. கேம்ப் செல்ல நாட்கள் அருகே வந்தது.முதல் பேச்சில் ஒருசில சீனியர் மருத்துவர்களும்,நிறைய இன்டெர்ன் மருத்துவர்களும் வந்தார்கள். அப்போது அரவிந்த் மருத்துவமனையின் சார்பாக நடக்கும் வேறு ஒரு கேம்புக்கு சென்றுவிட சந்தனா நிம்மதியாக உணர்ந்தாள்.
மூன்று நாட்கள் கழித்து அரவிந் வருவதாக ஏற்பாடு.ஆனால், மருத்துவ மனையில் இருக்கும் இன்னொரு குழந்தைகள் நல மருத்துவர் அவசரம் என்று இரண்டு நாட்களுக்கு விடுப்பு எடுத்துவிட அரவிந் மருத்துவமனைக்கு சென்றாக வேண்டிய கட்டாயம். ஆறாவது நாள் மாலையில் அவன் கேம்புக்கு வர,அடுத்தநாள் முழுவதும் நோயாளிகளை பார்ப்பதும்,அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை சொல்வதிலும் சென்றது. இந்த வாரம் இங்கே .அடுத்த வாரம் திருவண்ணாமலை அருகில் இருக்கும் கிராமங்களுக்கு செல்ல வேண்டும்.
மறுநாள் மாலை வேலை முடிந்தபிறகு, அதற்கு மேல் தங்காமல் சந்தனா கிளம்பிவிட்டாள்.மாலை ஐந்து மணிக்கு கேம்ப் முடிந்து சில செவிலியர்களும், மருத்துவர்களும் மருத்துவமனையின் வேனில் கிளம்ப சந்தனாவும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.
வேலூரில் இருந்து சென்னை வந்தாக வேண்டும். எப்போது வீட்டை பார்ப்போம் என்றுதான் அவளுக்கு தோன்றியது. அவள் கிளம்பிவிட்டதை அறிந்த அரவிந்தணுக்குள் ஏமாற்றம் படர்வதை தவிர்க்க முடியாது. எப்படியாவது அவளோடு இன்று பேச வேண்டும் என்று அவன் நினைத்திருக்க,விதி வேறு கண்ணாமூச்சி ஆட்டத்தை தொடங்கி விட்டது.
மயில் இறகு போல் மெல்லிய மனம் கொண்ட நாயகன். சிறுவயதில் இருந்தே குடும்ப பாரத்தை தோள் மீது சுமந்து மனம் பாறை போல் இறுகி நிற்கும் நாயகி. நாயகனின் காதல் – திருமண உறவு, நாயகியின் எதிர்பார்ப்புகள் அவை தவறும் தருணங்கள்.…