அந்த பென் டிரைவில் இருந்த கோப்புகள் அனைத்தும் திடீரென மாயமாகியவுடன், அந்த நொடி… என்ன நடக்கிறது என்பதே யாருக்கும் புரியவில்லை.
அறை முழுவதும் ஒரு வினோத அமைதி பரவ, அங்கிருந்த அனைவரும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடனும்… பதட்டத்துடனும்… பார்த்துக்கொண்டிருந்தனர்…
அவன் ஒருவனைத் தவிர.
ஆம்…
கண்களில் கூர்மையான கவனத்துடன் அந்த போல்டரில் இருந்த கோப்புகளை நோட்டமிட்டுக் கொண்டிருந்தவன்,
அவை திடீரென மறைந்த அந்த நொடியே…அவன் உதடுகள் மெதுவாக முனுமுனுத்தன…
“Custom encrypted forensic USB…”
அந்த வார்த்தைகள் அவன் வாயில் இருந்து விழுந்தவுடன், அறையில் இருந்தவர்களுக்கு இன்னும் எதுவும் புரியவில்லை.
ஆனால் அவனுக்கு புரிந்துவிட்டது…
குற்றவாளி பயன்படுத்தியது சாதாரண பென் டிரைவ் அல்ல… அது ஒரு custom encrypted forensic USB.
ஆம்… அது மற்ற பென் டிரைவ் மாதிரி இல்லாமல், இதில் கோப்புகளை திறப்பதற்கு ஒரே ஒரு முறை மட்டுமே access உண்டு…
அதற்குப் பிறகு… அதில் இருந்த கோப்புகள் அனைத்தும் தானாகவே lock ஆகிவிடும்…அல்லது… முழுவதும் அழிந்து விடும்.
இப்படிப்பட்ட பென் டிரைவை பயன்படுத்தியிருக்கிறான் என்றால்…கொலையாளி சாதாரண நபர் அல்ல.
அவன் உயர்ந்த தொழில்நுட்ப அறிவும், ஹாக்கிங் திறமையும் கொண்டவன்.
அதுமட்டுமல்ல, முன்கூட்டியே திட்டமிட்டு, தடயமே இல்லாமல் செயல்படும் அளவுக்கு அனுபவமுள்ளவன் என்று கணித்தவன்,
ஒரு நொடியும் வீணாக்கக் கூடாது என்று முடிவு செய்து, உடனடியாக துரிதமாக நடவடிக்கைகளைத் தொடங்கினான்…
“செல்வா… போலாம்,” என்றவன் எந்த நேரமும் வீணாக்காமல் எழுந்தான்.
“ஷாதனா! நீ உடனடியாக ஒரு டீம் கூட்டிட்டு, அந்த கடத்தப்பட்டதாக சொன்ன இரண்டு பொண்ணுங்க வீட்டுக்கும் போய் விசாரி,” என்றவன்
அடுத்த நொடியில்…
அவன் நேராக சென்ற இடம் விக்டிமின் வீடுதான்.
—
நல்ல விசாலமான முன்கூடம்…
அங்கிருந்த ஒவ்வொரு பொருளிலும் பணத்தின் செழுமை நிரம்பி வழிந்தது.
அந்த அமைப்பே… அது ஒரு சாதாரண வீடு இல்லை… பணக்காரர்களுக்கான உலகம் என்பதைக் கூச்சமில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.
அந்த முன்கூடத்தில் இருந்த சோபாவில் ஆதியும் செல்வாவும் அமர்ந்திருந்தனர்.
அவர்களின் பார்வை அடிக்கடி மாடிக்குச் செல்லும் படிக்கட்டைப் நோக்கிச் செல்ல…அவர்கள் யாரோ ஒருவரின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்தது.
அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல், கோட்-சூட் அணிந்த நடுத்தர வயதுடைய ஒருவர் படிகளில் இறங்கி வந்தார்.
“வாங்க சார்… இந்த சிட்டியோட டெபுடி கமிஷனரே என்ன தேடி வந்திருக்கார்னா, ஏதாவது ரொம்ப முக்கியமான விஷயமாத்தான் இருக்கணும்… Am I correct?”
என்றவர், அவர்களுக்கு நேர் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தார்.
“எஸ், மிஸ்டர் ஜெயசங்கர தேவர்… ரொம்ப முக்கியமான விஷயம்தான். உங்க பையன் மிஸ்டர் மாறன் பத்திதான் பேச வந்திருக்கேன்.”
கம்பீரமான குரலில் சொன்னவன், அவர் முகத்தை நேராக பார்த்தான்.
அவன் பேசுவதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தவர், தன் மகனின் பெயர் கேட்டதும் திடீரென எழுந்து நின்றார்.
“சாரி, கமிஷனர் சார்… அவனைப் பத்தி பேசணும்னா… இங்க பேச எதுவும் இல்லை.
அவன் எங்களுக்கு தேவையில்லைன்னு தலை முழுகி ரொம்ப நாளாச்சு.”
அவரை அலட்சியமாக பார்த்தவன்,
“அது உங்க குடும்ப பிரச்சனை, சார்… நான் வந்தது மிஸ்டர் மாறன் இறந்துட்டார்னு சொல்லத்தான்.
அவரை யாரோ கொடூரமா கொலை பண்ணியிருக்காங்க.” என்றவன் அழுத்தமாக சொல்லி முடிக்க…
காதில் கேட்ட வார்த்தைகளின் தாக்கத்தில் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டார் அவர்…அவை உண்மைதான் என்று உணரவே சில நொடிகள் எடுத்தது.
“என்… என்ன? என்ன சொன்னீங்க சார்!” என்றவர் அதிர்ச்சியில் கண்கள் அகல விரிய நின்றார்…
“எஸ்… your son is dead.” என்றவனின் குரலில் இருந்த தீவிரம் அவரை நடுங்கச் செய்தது…
கண்கள் இரண்டும் தன்னிச்சையாக கலங்க, கைகால்கள் நடுக்கத்தில் தள்ளாட, பொத்தென அப்படியே அமர்ந்தவர், விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தே விட்டது…
“எப்…படி… எப்படி சார்… யார் இதைப் பண்ணது?” என்றவரின் குரல் கமறியே வெளிவந்தது.
என்னதான் மகன் மீது கோபம் இருந்தாலும், மகனின் இறப்புச் செய்தி அவரை தடுமாற வைத்தது.
“அது நீங்கதான் சொல்லணும், சார்…உங்களுக்கு எதாவது பர்சனலா எனிமி இருக்காங்களா?” என்றவன், அவரின் முகத்தை கூர்ந்து கவனித்தான்.
“எனக்கு அப்படியெல்லாம் யாரும் இல்லை சார்…தொழிலிலும் யாரோடையும் எந்த பிரச்சனையும் இல்லை…” என்றவரை பார்த்தவன்,
“சரிங்க சார்… அப்படின்னா உங்க மகனை யாரோ கொலை பண்ணியிருக்காங்க. அதை கண்டுபிடிக்க சொல்லி எங்களுக்கு ஒரு கம்ப்ளெயிண்ட் மட்டும் கொடுங்க…”
“சாரி ஃபார் யோர் லாஸ்…” என்றவன் சொல்லி முடிக்க,
கண்களை அழுத்தத் துடைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டவர்… “சார்… என் பையன்…” என்றார்.
“சார், போஸ்ட்மார்டம் எல்லாம் முடிஞ்சுருச்சு…நீங்க வந்தா பாடியை எடுத்துட்டு வரலாம்…” என்றவன் அவ்வளவுதான் என்பதுபோல் எழுந்துக் கொள்ள… அவனுடன் செல்வாவும் எழுந்துக் கொண்டான்.
“சார்… நான் எந்த கம்ப்ளெயிண்டும் கொடுக்கல… என் பொண்ணுக்கு இந்த நேரத்துல கல்யாணம் இருக்கு.
என் பையன் கொலை செய்யப்பட்டான்னு தெரிஞ்சா என் குடும்ப ரெப்யுடேஷன் போயிடும்… அதுக்கப்புறம் என் பொண்ணை யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க… அதனால என்னை மன்னிச்சிடுங்க சார்.”
“உங்களால முடிஞ்சா நீங்களே ரிஸ்க் எடுத்து இந்த கேஸ்ல என் பையன கொன்னது யார்னு கண்டுபிடிச்சு தாங்க… ப்ளீஸ்!” என்றவர் கையெடுத்து கும்பிட்டுவிட…
அதற்கும் மேலும் அவரை வற்புறுத்த விருப்பமில்லாமல்… அங்கிருந்து கிளம்பினர்.
—
அதன்பிறகு…
அந்த பென் டிரைவிலிருந்து கிடைத்த குறைந்த தகவல்களை வைத்து, எல்லா கோணத்திலிருந்தும் விசாரணையை ஆரம்பித்தான் ஆதி.
விக்டிமின் கால் ரெக்கார்ட்ஸ், பேங்க் டிரான்ஸாக்ஷன்ஸ், அவனுடன் தொடர்பில் இருந்த ஒவ்வொரு நபரையும் விசாரித்தான்…
ஆனால் ஒவ்வொன்றாக ஆய்வு செய்தும் எந்த பயனுள்ள தடயமும் கைக்கு வரவில்லை.
சந்தேகப்பட்ட சிலரை பிடித்து விசாரித்தும் பார்த்தான்… ஆனால், அவர்கள் எல்லாம் ஒரு கட்டத்துக்கு மேல் பயனில்லாமல் போனார்கள்.
ஒவ்வொரு தடயமும் அவன் கைகளில் வந்தவுடன் உடைந்து போவது போல… அந்த கேஸ் அவனைச் சுற்றி வளைத்துக் கொண்டே இருந்தது.
நாட்கள் நகர்ந்தன…
ஆனால் அவனால் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியவில்லை.
அதே நேரத்தில் காணாமல் போன பெண்களைப் பற்றியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
அப்படியே காலம் நகர,
அடுத்த கொலை நடந்த நாளும் வந்தது…
—
மார்ச் 8, 2025
முதலாமவன் எப்படி கொலை செய்யப்பட்டானோ, அதேபோல எந்த மாற்றமும் இல்லாமல் இந்த கொலையும் நடந்திருந்தது…
ஆனால்… அதில் ஒன்றே ஒன்றில் மட்டும் மாற்றம் இருந்தது.
ஆம், கைகளில் கத்தியால் வெட்டி எழுதப்பட்டிருந்த எழுத்துகள் மட்டும் வேறுபட்டிருந்தன.
இடது கையில் — 3M…
வலது கையில் — 0…
அதிலிருந்து…
முன்பைப் போல இறந்தவனின் குடும்பத்தினரும் கம்ப்ளெயிண்ட் கொடுக்க மறுத்துவிட்டனர்…
ஆனால்… இந்த முறை காணாமல் போனது பெண்கள் இல்லாமல் ஆண்களாக இருந்ததால், அவர்களைப் பற்றியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அதன்பிறகுதான்…
தொடர் கொலைகளும் கடத்தல்களும் ஆரம்பமாகின.
ஆனால்… ஒவ்வொரு கொலையும்… அதே பேட்டர்னை மட்டும் மாற்றாமல் தொடர்ந்தது.
கொலை செய்யப்பட்ட தேதியும்,
கைகளில் கத்தியால் வெட்டி எழுதப்பட்ட எழுத்துகளும் மட்டும் வேறுபட்டிருந்தன.
அவையாவும்…
—
ஜூன் 6, 2025
இடது கையில் — 4W…
வலது கையில் — 8…
—
ஜூலை 22, 2025
இடது கையில் — 3M…
வலது கையில் — 6…
—
நவம்பர் 25, 2025
இடது கையில் — 2W…
வலது கையில் — 7…
—
டிசம்பர் 7, 2025
இடது கையில் — 0…
வலது கையில் — 6…
ஆறு கொலைகளும்… அச்சு பிசகாமல் ஒரே பேட்டர்னில் நடந்திருக்க…
அதே நேரத்தில்… கடைசியாக கொல்லப்பட்டவரின் வயிற்றில் மட்டும் பென் டிரைவ் இல்லாமல் இருந்தது…
ஆனால்… அவன் யார் என்பதை மட்டும் தெரியப்படுத்தும் வகையில், அவனது புகைப்படம் மட்டும் அந்த இடுப்பு பகுதியில் இருந்தது…
திரையில் கொலைகளுக்கான தேதிகளும்… கைகளில் வெட்டி எழுதப்பட்ட எழுத்துகளும் மாறி மாறி தோன்றின…
இவ்வளவு நேரம் நடந்ததை ஒரே மூச்சாக சொல்லி முடித்தவள், தனது நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்…
கண்களில் கூர்மையுடன் திரையை தீவிரமாக நோக்கிக் கொண்டிருந்தவன், மெதுவாக இருக்கையிலிருந்து எழுந்து நின்றான்…
அவன் முகத்தில் இருந்த உணர்வை அங்கிருந்த யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை…
ஆம்… எப்போதும் இறுகியே இருக்கும் அவன் முகம்…
அவன் என்ன நினைக்கிறான் என்பதை ஒருபோதும் வெளிக்காட்டாது.
இப்போதும் அதேபோலவே அவன் முகம் மாறாமல் இருந்தது…
தன் இறுகிய, முரட்டு இதழ்களை மெதுவாக திறந்தவன், அழுத்தமாக பேசத் தொடங்கினான்…
“Well… ஒரு கொலையாளி இவ்வளவு clever-ஆ game ஆடுறது… இதுதான் முதல் முறை…”
அவன் அமைதியான குரல், அந்த அறை முழுவதும் மெதுவாகப் பரவி எதிரொலித்தது. அங்கிருந்த அனைவரின் கவனமும் தன்னிச்சையாக அவன் மீது திரும்பியது.
“கடந்த ஒரு வருடமா கிட்டத்தட்ட ஆறு பேரை கொடூரமா கொன்னு, 14 பேரை கடத்தி இருக்கான்…
ஆனா அவன் யாருன்னு ஒரு சின்ன தகவல்கூட நம்மால கண்டுபிடிக்க முடியல…”
“பொதுவா ஒரு கொலையாளி கொலை பண்ணும்போது எங்காவது ஒரு சின்ன தப்பாவது பண்ணுவான்…
இல்ல அவனுக்கே தெரியாம ஒரு தடயத்தையாவது விட்டுட்டு போவான்.
ஆனா இவன் கேஸ்ல… அப்படி எதுவுமே இல்லை.” என்றவன் ஒரு நொடி நிறுத்தினான்.
“ஒரு சின்ன தப்புகூட பண்ணாம, ஒரே பேட்டர்ன்ல ஆறு பேரை கொலை பண்றது சாதாரண விஷயம் கிடையாது…
அவன் வெறும் சீரியல் கில்லர் மட்டும் இல்ல…
இந்தக் கொலையை ரொம்ப வருஷமா பிளான் பண்ணி, பர்ஃபெக்ட்டா எக்ஸிக்யூட் பண்ண ஒரு நம்பர் ஒன் இன்டெலிஜென்ஸும் கூட…”
அவன் பார்வை மெதுவாக அறையைச் சுற்றியது.
“அதுமட்டுமில்ல… சீரியல் கில்லர்னா பொதுவா அவனுக்குனு அடையாளம்னு ஒரு குறியீடு இருக்கும்…
ஆனா அந்த குறியீடும் கூட பெரும்பாலும் கொல்லப்பட்டவங்களோட கொலைக்கான காரணத்தோட தொடர்புல தான் இருக்கும்.
ஆனா இவனோட கேஸ்ல… அவன் விட்டுட்டு போற ஒவ்வொரு குறியீடும்…
கடத்தப்பட்டவர்களோட லிஸ்ட்டையும்… கொல்லப்பட்டவர்களோட அடையாளத்தையும் தான் காட்டுது…” என்றவன் ஒரு நொடி அமைதியாக நின்றான்…
மீண்டும் மெதுவாக சொன்னான்…
“அதுக்கு சாட்சி…”
அவன் பார்வை நேராக மேசையின் மீது இருந்த காலியான பென் டிரைவ்-ஐ நோக்கிச் சென்றது.
“அந்த பென் டிரைவ்தான்.” என்றவன் அழுத்தமாக சொல்ல, அறையில் இருந்தவர்கள் தன்னிச்சையாக அதைப் பார்த்தார்கள்.
“ஒரு தடயம்கூட விடாம இருக்கிறவன்…எதுக்காக பாதிக்கப்பட்டவர்களோட தகவல்களை நமக்கே கொடுக்கணும்?” என்றவனின் குரல் இப்போது கூர்மையடைந்தது.
ஒரு நொடி ஆழ்ந்து யோசித்தவன், மெதுவாகத் தலையசைத்தான்.
“அவன் ஒவ்வொரு தடவையும் விக்டமோட information குடுக்குறதுக்கு காரணம்…
உண்மையா சொல்லணும்னா… அவன் நம்மள guide பண்ணுறான்.”
அந்த வார்த்தைகள் அறை முழுவதும் சுமையாக விழுந்தது.
“அதாவது ஒவ்வொரு தடவையும் நாம அவனை நெருங்கிட்டோம்னு நினைச்சு முன்னேறுறோம்…
ஆனா உண்மையில…” என்றவனின் கண்கள் மின்னின.
“அவன்தான் நம்மள அவனோட பாதையில் நடத்திக்கிட்டு போறான்.” அவன் மெதுவாக முன்னே வந்தான்.
“உண்மையிலே இந்த கேஸ்ல அவன் பென்டிரைவ் வைச்சது நமக்கான clue இல்லை…” என்றவன் ஒரு நொடி இடைவெளிவிட்டு…
“இது ஒரு trap.”
தொடரும்…
