இதயம்!
துடிப்பு – 12
தோழர்களின் உரையாடலை,சரிவர செவிமடுக்கத் தவறியவளுக்கு,மனம் முழுக்க குழப்பம் மண்டிக் கிடந்தது,தான் மிச்சம்.
“என்ன பூமி வாசின்னு எல்லாம் பேசிக்கிட்டு இருக்கானுங்க..? பாத்தா தப்பானவனுங்க மாதிரியும் தோணல..” தனக்குள் கேட்டுக் கொண்டு,சத்தம் செய்யாது அவள் கீழிறங்கிச் சென்ற போதிலும்,அது அரிமா அவனின் விழிகளில் இருந்து தப்பிடவில்லை.
அவனுக்கும் ஊகிக்க முடிந்தது,தாம் பேசியது அரை குறையாகவேனும்,அவளின் செவி சேர்ந்திருக்கும் என்று.அவளாக வந்து கேட்பின்,பதில் சொல்லிக் கொள்ளலாம் என்று அமைதியாக இருந்து விட்டான்.
“ஆஜு..ப்ரச்சனய விடு..நீ லவ் பண்றியா இல்லயான்னு கூட சொல்ல மாட்டேங்குற..ஆனா அந்தப் பொண்ண பாத்தா உன்ன விரும்புற மாதிரியும் தோணல..நீ விரும்புறது அதுக்கு தெரியுங்குற மாதிரியும் நடந்துக்கல..என்னடா நடக்குது இங்க..?”
“டேய் விஷ்..இவன் லவ் பண்றது ஓகே..அந்த பொண்ணுக்கு அது தெரியாம மறக்கிற மாதிரி தோணுது..பட் ஏன் அப்டி பண்ணனும்..?”
“ம்ம்..அதான் ஏன்..? ம்ம்ம்..வெயிட் வெயிட்..உங்கப்பா சொன்னாரே டா,ரேடியேஷன் இருக்குறவங்களுக்கு நார்மல் ஆளுங்கள கல்யாணம் பண்ணி வாழ முடியாதுன்னு..இவன டச் பண்ணா அது அவங்க பாடில போய் செல்ஸ்ல சேஞ்சஸ உண்டு பண்ணி வேற வேற நோய் வர்லாம்னு..ஸோ நார்மல் ஆளுங்கள கல்யாணம் பண்ணி வாழ்ந்தா அது அவங்களுக்கு தான் ஆபத்தா முடியும்..அதான் இவன் லவ் பண்றத சொல்லாம இருக்கான் போல..”
விஷ்வின்னின் கணிப்பு தவறாகிப் போகவில்லை.தன் காதல் ஒரு போதும் கை சேராது, என அரிமா அவன் முடிவுக்கு வர காரணமும் இது தான்.
ஆஜ்வினின் விழிகள் இடுங்கிட,அதில் கோபப் பிழம்பு.உலகம் எதுவாகினும்,உணர்வு ஒன்றாயிற்றே.
“சரி தான்..என்ன தான் இருந்தாலும் பூமி வாசிப் பொண்ண எப்டிடா நம்ம உலகத்துல இருக்குற இவன கல்யாணம் பண்ண விட்றது..? அது எவ்ளோ சிக்கலா இருக்கும்..”
“எந்த உலகமா இருந்தாலும்,அந்த உலகத்த காரணம் காட்டி என்னோட உணர்வ கொல பண்ணிக்கற அளவு முட்டாள் இல்ல..சப்போஸ் நான் லவ் பண்ணேன்னா இல்ல பண்றேன்னா இந்த மாதிரி சின்ன விஷயத்துக்காக என் காதல விட்டுக் கொடுக்க மாட்டேன்..நம்ம ரெண்டு உலகத்துலயும் இருக்குறது மனுஷங்க தான்..எல்லாருக்கும் இருக்குற உணர்வுகளும் ஒன்னு தான்”
“என்னென்ன ப்ரச்சன வருமோ அது எல்லாத்தயும் ஃபேஸ் பண்ற தைரியம் எனக்கு இருக்கு..என் காதலுக்காக நம்ம உலகத்தயோ இந்த உலகத்தயோ எதிர்த்து போராட வேண்டி வரும்னா அதயும் செய்வேன்..அதுக்கான தெம்பும் இருக்கு..”
“மத்தவங்க என்ன வேணா சொல்லலாம்..எப்டி வேணா இருக்கலாம்..ஆனா,அந்த உலகம் இந்த உலகம்னு நீங்கெல்லாம் பேசறத கேட்டு கிட்டு எனக்குள்ள வர்ர உணர்வுகள்ள அப்டியோ கொன்னு பொதக்க நா ரெடியா இல்ல..காட் இட்..”
சீறலுடன்,காரமாக வந்த வார்த்தைகளில் பெரும் சூடு விரவியிருக்க,அமிதேஷுக்கும் தான் பேசியது சற்று அதிகப் படியோ எனத் தோன்றிட,அமைதியாகி விட்டான்.
விஷ்வின்னின் விழிகளும்,அரிமா அவனை ஏறிட்டு பின்,மற்றையவனை அதட்டின.அவனுக்கும்,அமிதேஷின் கூறியதில் உடன்பாடில்லை.
ஆஜ்வின்,இத்தனை நீளமாக பேசி இது நாள் வரை அவர்கள் கேட்டதில்லை.தொடரான அவனின் வசனங்களே,அதிர்வுக்குள் தள்ளியது என்றால்,அதில் இருந்த அடக்கப்பட்ட சினம்,அவர்களை அதிகமாய் அச்சுறுத்தியது எனலாம்.
எத்தகைய கோபம் என்றாலும்,அரிமா அவனின் இதழ்கள் பூட்டப்பட்டே கிடக்கும்.சினத்தின் சீறலில்,வார்த்தைகளை சிதற விடாமல்,அமைதியாய் இருப்பவனோ,பற்களை நறநறத்தவாறு பேசியது,புதுமையும் கூட.
தெளிவாகக் கூறாவிடினும்,வார்த்தைகளில் புதைந்திருந்த கோபம்,அவனின் காதலின் சாயலை பறைசாற்றிட,தோழனை பற்றித் தெரிந்தவர்களுக்கு,ஏனோ எதுவும் சொல்லவும் முடியவில்லை.
நட்புக்காக தன் இதயம் தர முன் வந்தவன்,காதலுக்காக எதையும் செய்திடக் கூடும் என்றே தோன்றிற்று.
இருவரையும் உறுத்து விழித்து விட்டு அவன் அகன்றிட,பெருமூச்சு விட்டு நிமிர்ந்தனர்,இருவரும்.
“நல்லவேள அந்தப் பொண்ணு நம்மள மாதிரி நார்மலா இருக்கு..இவன் பேசறத பாத்தா அந்தப் பொண்ணுக்கு பாதிப்பு வருங்குற சூழ்நில இல்லன்னா..அந்தப் பொண்ணுக்கும் பிடிச்சு இருந்ததுன்னா.. கண்டிப்பா இவன் கை விட்டு இருக்க மாட்டான்..சொன்ன மாதிரி உலகத்த எதிர்த்தாச்சும் அவள கல்யாணம் பண்ணி இருப்பான்..”
உணர்ந்தே விஷ்வின் உரைத்திட,அதை முழுதாய் ஒப்புக் கொள்ளத் தான் செய்தான்,மற்றையவனும்.மாற்றுக்கருத்து இருவரிடமும் இல்லை.
அவனைப் போல் யாராலும் அவளை நேசித்திட முடியாது என்கின்ற எண்ணம் இருவருள்ளும் உருப்பெற்றது,அந்நொடி.
அவளுக்காகவே அவள் மீது காதல் கொள்ளவும்,அவளுக்காகவே அவள் மீதான காதலை கொல்லவும் அவனால் மட்டுமே முடியும்.
உயிர்த்திடும் உணர்வுகளை உயிர்ப்றெச் செய்வது ஒரு வகை என்றால்,உயிர்த்தோங்கிய பின்னும் உறைந்திடச் செய்வது,காதலின் இன்னோர் பரிமாணம்.
●●●●●●●●
வருடத்திற்கு ஒரு முறை நடந்திடும் கொண்டாட்டம் என்பதால்,ஹஸேரியே விழாக்கோலம் பூண்டிருக்க,இரவு நேரம் என்பதை மறக்கடிக்கும் விதமாய் ஜோலித்துக் கொண்டிருந்தது,நகரம்.
வண்ண விளக்குககளால் அலங்கரிக்கப்பட்டிருந்த கேளிக்கை விடுதிக்குள் நுழைந்த பவனியின் விழிகளோ,அவ்விடத்தை முழுதாய் ஆராய்ந்து முடித்திருந்தன.
“இப்போ எட்டு மணி..கிட்டத்தட்ட நூறு ஆம்பளங்க தான் இருக்காங்க..என்ன பண்ணப் போற நீ இப்போ..? அப்போ கொடுத்த மாதிரி சாக்லேட் கொடுக்கப் போறியா..?”
“ம்ஹும் கை ரேக பாக்கப் போறேன்..” என்றவளுக்கு,சடுதியாய் யோசனை வராது இருக்க,யோசித்தவாறு தார்விக்குடன் சென்று மூலையில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
ஆண்களும் பெண்களும் பேதமின்றி ஆடிக் கொண்டிருக்க,அதைக் கண்டு அவளுக்கு எரிச்சல் வந்தது தான்,மிச்சம்.
“தண்ணித் தாகமா இருக்கு..” அவள் கூறிட,”இரு நா போய் வெயிட்டர் கிட்ட அனுப்பி விட்றேன்..” என்றவனோ,வெயிட்டரிடம் சொல்லி விட்டு வெளியே சென்றான்,அவ்னித்திடம் இருந்து அழைப்பு வரவே.
“மேம் வாட்டர்” என்றவாறு,வெயிட்டர் தண்ணீர்ப் போத்தலொன்றை நீட்டிட,ஏற்றிக் கொண்ட புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டவளுக்கு,இங்கிருக்கும் ஆண்களை எப்படி அணுகுவது என்று புரியவில்லை.
அவள் வேறொரு திட்டம் வகுத்து வந்திருக்க,அது சரிப்பட்டடு வராது என்று தோன்றவே,அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கலானாள்,தண்ணீரை வாய்க்குள் சரித்தவாறு.
ஏனோ,ஐந்து நிமிடங்கள் கடந்திடுகையில் சற்றே மயக்கம் வரும் போல் இருக்க,அதைப் பார்த்தவாறு கோணல் சிரிப்புடன் நெருங்கினர்,இரு வாலிபர்கள்.
வாசலுக்கு முன்பாக வரும் போதே,அவள் மீது அவர்களின் பார்வை மையலாய் படிய,தார்விக் அவர்களை எச்சரித்து விட்டிருக்க,ஏனோ அவளை விட்டு விடும் எண்ணம் அவர்களுக்கு இருக்கவில்லை.
தன்னிலை பிறழ்வது அவளுக்கு புரிய,தார்விக்கை தேடியவளுக்கு அவன் அகப்படாது போக,அலைபேசியை எடுத்து வந்திடா,தன் மடத்தனத்தை எண்ணி உள்ளுக்குள் வெகுவாய் கதறினாள்.
“ஷிட்!” அவள் நெற்றியில் அறைந்தவாறு எழுந்திடப் பார்த்திட,கால்கள் தள்ளாடி ஒத்துழைக்க மறுத்திட,அப்படியே அமர்ந்து கொண்டவளை,சுற்றி வளைத்தனர் இருவரும்.
போதை ஏறிய விழிகளுடன்,ஒருவன் அவளின் கரத்தை பற்றிக் கொள்ள,புத்திக்கு தவறென்று புரிந்து போதிலும்,இழுத்துக் கொள்ள முயன்றவளுக்கு உடல் ஒத்துழைக்காது போக,திணறிப் போனாள்.
அவள் நிலை கண்டு தமக்குள் கண்ணடித்து,அவளை அப்படியே எழுந்து நிற்கச் செய்து தம்முடன் தோள் சேர்த்தவாறு வெளியே செல்ல,தன்னிலை புரிந்தாலும்,அதை எதிர்க்க முடியாமல் செய்திருந்தது,அவள் குடித்த தண்ணீரில் கலந்திருந்த போதை வஸ்து.
கூந்தல் முழுவதும் முகத்தை மறைத்திருக்க,தள்ளாடிக் கொண்டு நடந்தவளை,இருபுறமும் இருவர் தாங்கியிருக்க,அவர்கள் வண்டியில் ஏற்ற முனைகையில் ஏதோ தெளிந்து,திணறியவளோ மீண்டும் தன்னிலை இழக்க முயல்கையில் அவளைப் பற்றி இழுத்து தன் பின்னே நிறுத்தியது,வலிய கரமொன்று.
வாலிபர்கள் இருவரும் திகைத்து நிற்க,அதற்குள் அவள் பார்க்கிங்கின் ஓரமாய் போடப்பட்டிருந்த கட்டுத் திண்டில் அமர வைத்திருந்தன,அக்கரங்கள்.
தன்னை நோக்கி சீறிக் கொண்டு வந்த இருவரையும் லாவகமாய் அடித்து வீழ்த்திய நபரோ,நொடி தாமதியாது பவனியை நெருங்கி இருந்தார்.
தார்விக் உடன் அவள் உள்ளே வருவதைக் கண்டவருக்கோ,அந்த வாலிபர்களின் நடவடிக்கை வித்தியாசமாய்த் தோன்றிடவே,எதற்குமென்று அவள் மீது சிறு கவனத்தை வைத்திருக்க,அவர் அசந்த அவகாத்தில் அவளை வெளியே இழுத்துக் கொண்டு வந்து இருந்தனர்,அவர்கள்.
“ஹேய் கேர்ள்!” அவளின் கன்னத்தை தொட்ட,அரை விழி சொருகலுடன் நிமிர்ந்தவளுக்கு,ஏதோ வித்தியாசம்.
கரம் உணர்ந்த வெம்மையில்,அவருக்கும் ஏதோ தட்டுப்பட,விழிகளில் சிறு சுருக்கம்.
“ஏய் பொண்ணு..இங்க பாருமா!” அவளின் கன்னத்தை மறுமுறையும் பலமாய்த் தட்டிட,இமை பிரித்தவள் தன்னிலையில் இல்லை என்பது புரிந்திட,தன் காருக்குள் இருந்த தண்ணீர்ப் போத்தலில் இருந்து நீர்த்திவலைகளை தெளித்திட,அவளுக்கும் மயக்கம் கலைவது போல்.
“ஆர் யூ ஓகே கேர்ள்..?” அவளின் கரத்தைப் பற்றி சரியாய் அமர வைத்தவாறு வினவிட,முழுதாய் விழி திறந்தவளுக்கு காணக் கிடைத்தது,என்னவோ திறந்திருந்த சட்டைப் பட்டன்களின் வழியே தெரிந்த திண்ணிய மார்பு தான்.
தார்விக் வருவதைக் கண்ட நபரோ,அவ்விடத்தை விட்டு அகல,அவளோ அவரின் முகம் காணவில்லை.
“ஏய் பவனி என்னாச்சு..?” தார்விக் பதறித் தட்டிய போதிலும்,அவள் முழுதாய் தெளிந்து இருக்கவில்லை.
●●●●●●●●
விடியற்காலை மூன்று மணிக்கு இன்னும் சில நிமிடங்களே இருக்க,உறங்காமல் விழித்து இருந்தான்,அரிமா அவன்.
நேற்றிரவே,அவளிடம் பேசியாக வேண்டும் என்று நினைத்திருக்க,அவளோ தூங்கி வழிந்ததில் அதை செய்ய முடியவில்லை.
எழுந்து முதல் வேலையாக அவளுடன் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கட்டிலில் விழுந்தவனுக்கு,ஏனோ உறக்கம் வர மாட்டேன் என சண்டித் தனம் செய்திட,விட்டத்தில் விழிகளை மேய விட்டு விழித்தே கிடந்தான்.
ஆறுமணியைக் கடந்ததும்,மெல்ல விழிப்புத் தட்டியது,பாவையவளுக்கு.உறக்கக் கலக்கத்தில் விழிகளை சுழற்றியவளுக்கு,தான் இருப்பது புதிய இடம் என்பது புரிந்திட,அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தவளுக்கு,மூச்சு வாங்கியது.
நெஞ்சில் கை வைத்து,சுற்றத்தை பார்வையிட்டவளுக்கு,பக்கத்தில் உறங்கியிருந்த ராகவியைக் கண்டதுமே,நிம்மதி பெருமூச்சு.
அதன் பின்னரே,நேற்றைய நிகழ்வுகள் யாவும் வரிசை கட்டி நினைவிலாடிட,ஆசுமாசப் பெருமூச்சு விட்டவளுக்கு நிம்மதியான மனநிலை என்றாலும்,அரிமா அவனின் வாழ்க்கையையும் இழுத்து விட்டதில் ஏனோ,சிறு தவிப்பு.
கட்டிலில் இருந்து எழுந்தவளோ,அங்கு அவளுக்குத் தேவையான பொருட்கள் யாவும் மேசையில் வைக்கப்பட்டிருப்பதை கண்டு திகைத்து,பற் தூரிகையை கையில் எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்திட்டாள்.
அடுத்து குளித்து விட்டு வந்து,அங்கிருந்த சுடிதார் ஒன்றுக்குள் தன்னை நுழைத்தவளுக்கோ,அரிமா அவனிடம் மன்னிப்புக் கேட்டிட,உள்ளம் பரபரத்தது.கூடவே,நன்றி நவிழவும் மறந்த தன்னை எண்ணி மானசீகமாய்,தலையில் குட்டிக் கொள்ளவும் செய்தாள்.
கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவளுக்கு,அவனின் அறை எதுவென்பது கூட தெரியாது இருக்க,அந்த வீட்டில் எங்கு செல்வது என்பதும் புரியவில்லை.
அவளின் நேரம் போலும்.அவளின் தவிப்பு முழுவதும் அவனுக்குத் தெரியும் என்பது போல்,பக்கத்து அறையில் இருந்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்,ஆஜ்வின்.
இரு அறையின் கதவுகளுக்கு இடையில் இருக்கும் நடைப்பகுதியில் நடந்தவாறு இருந்தவளோ,கதவு திறக்கும் சத்தத்தில் மெல்ல திரும்பிட,அங்கு அவளின் தேடலுக்கு சொந்தக்காரன்,தலையை துவட்டியவாறு நின்றிருந்தான்.
அங்குமிங்கும் நடந்து,கதவோசையில் மெல்ல நடை நிறுத்தி,யாரோ என்கின்ற வினாவை விழிகளில் தேக்கியவாறு தன்னை நோக்கி திரும்பி,தன்னைக் கண்டதும் அதிர்வுடன் மெல்லியதாய் விழி விரித்து,பின்னர் சின்னப் புன்னகையுடன் விழி சுருக்கி அவள் இயல்பாகிட,அவன் தான் அவளில் வந்து போன பாவனைகளில் தொலைந்து நின்றிருந்தான்.
துவட்டியும் துவட்டாத கூந்தலை அப்படியே,அள்ளி முன்னே இட்டிருக்க,விரித்து போட்டிருந்த துப்பட்டாவின் ஒரு முனை தரையை உரசிக் கொண்டிருந்தது.
அதுவும் அவனை அவ்விடம் கண்டதும்,கூந்தலை பின்னே இழுத்துக் கொண்டவளோ,அவனை நோக்கி நடந்து வர,தலையை துவட்டிக் கொண்டிருந்த அவனின் கரங்கள் வேலை நிறுத்தம் செய்திருந்தன,அவனை மீறி.
விழிகளில் வழிந்த ஆசுவாசம் ஏதோ செய்தது என்றால்,இதழ் கடையில் தொக்கியிருந்த புன்னகை கீற்று அவன் ஆழம் கொன்றது.
ஹேசல் நிற விழிகளில் மெல்லிய மினுமினுப்பு தோன்றியிருக்க,அவள் இமை வெட்டும் ஒவ்வொரு அவனுள் மின்னல் வெட்டி அடைமழை பெய்திட,அவன் அவனாக இல்லை.
அவனருகே வந்து அவள் நிற்க,அவனுக்குள் படபடப்பு என்ற போதிலும்,அவளுக்கு சட்டென பேச வரவில்லை.
இயல்பாய் பேசியிருக்காத பட்சத்தில்,வார்த்தைகள் சதி செய்திட,அங்கு மௌனம்.
வார்த்தைகள் இன்றி அவன் விழி பார்த்தவாறு,திருதிருவென விழித்து,மையத்துக்கும் முனைக்குமாய் கருமணிகளை நகர்த்தி,அசட்டுப் புன்னகையுடன் அவள் விழியுருட்டிய கோலத்தில்,இவனுக்குத் தான் மொழி மறந்திடும் போல் இருக்க,இதழ் குவித்து ஊதியவாறு,பின்னந்தலையில் தட்டிக் கொண்டான்.
“வேதாஜி!” சன்னமாய் இதழ்கள் அசைந்திட,அவன் மீசைக்குள் புன்னகையை ஒளித்துக் கொண்டு,”என்ன அரசி..?” என்று கேட்டான்,இயல்பாக.
“நா..நா..சாரி..” என்றவளுக்கு,அவனிடம் மன்னிப்புக் கேட்பது எப்படி என்று கூட தெரியவில்லை.அவன் வாழ்க்கையையும் சிக்கலாக்கி விட்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பதில்,உள்ளுக்குள் அத்தனை குற்றவுணர்வு.
அவள் மனநிலை அவனுக்குப் புரிய,ஏனோ அவனுக்குள் சிறு தளர்வு.அள்ளி அணைத்து ஆறுதல் கூற பரபரத்திடினும்,அதை கட்டுபடுத்திக் கொண்டு பேச்சை மாற்றினான்.
அவளை அழைத்துச் சென்று ஓரிடத்தில் அமர வைத்தவனோ,அவளுக்கு முன்னே தானும் அமர்ந்து என்னவாயிற்று என்று கேட்டது தான் தாமதம்,ஓவென்று அழுதவாறு அனைத்தையும் அவள் ஒப்புவிக்க,ஆறுதல் மொழிய இயலா கையறு நிலையில் தவித்தவனுக்கு,கணேஷ்வரியின் மீது கொலைவெறியே வந்தது.
அவளின் குடும்பத்தினரை நிச்சயம் விட்டு வைப்பதில்லை என்பதை குறித்தும் கொண்டான்.
“சரி சரி அழாத..கண்ணத் தொட..” கனிவாய் கூறிட,மறுத்தவளோ அவன் அதட்டிடவும் விழி துடைத்துக் கொண்டு நிமிர்ந்திட,வெளிப்படுத்த இயலா நேசம்,அவனை வெகுவாய் கொன்று தின்றது.
“சரி இப்போ என்ன பண்றதா உத்தேசம்..?” அவன் வினவிட,தெரியாது என்பது போல் அவள் விழியுருட்டி உதடு பிதுக்க,ஆயாசமாக இருந்தது அரிமா அவனுக்கு.
“கேள்வி கேட்டா வாயத் தொறந்து பதில் சொல்லனும்..இப்டி ரியாக்ஷன் காட்டாத..” அவளின் பாவனைகள் அவன் அகத்தை ஏதோ செய்திட,அதை தவிர்த்திட கூறியது,அவளுக்கு புரிந்திடும் வாய்ப்பில்லை.
“ம்ம்..சரி..” பதிலுடன் அவன் விழியுருட்டிட,முகபாவனைகளும் பதிலைத் தந்திட,பாவமல்லவா அடங்காதவனும்..?
அண்ணாந்து பார்த்து,இதழ் குவித்து ஊதிக் கொண்டவனின்,மனதிலோ சடுதியாய் சில பல திட்டங்கள்.
“வேதாஜி!” அவள் கலைத்தாள்.
“ம்ம்”
“நீங்க என்ன கல்யாணப் பண்ணிகிட்டது தெரிஞ்சா உங்க லவ்வர் கோவப்பட மாட்டாங்களா..?” அவன் கட்டிய தாலியையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தவாறு,அவள் வினாத் தொடுத்திட,விழுக்கென நிமிர்ந்தான்,சுருங்கிய விழிகளுடன்.
“லவ்வரா..?” அவனுக்குப் புரியவில்லை.
“ஆமா டெல்லில உங்களுக்கு லவ்வர் இருக்காங்கன்னு முன்ன என் ஃப்ரெண்ட்ஸ் சொல்லுவாங்க..அதுல்லாம உங்களுக்கு சீக்ரம் கல்யாணம்னும் சொல்லி கிட்டு இருந்தாங்க..” அவள் கூறிட,வேற்றுக் கிரக தன்னை பற்றி வந்திருந்த கட்டுக்கதையில் அவன் இதழ்களில் மெல்லிய முறுவல் தோன்றிட,அதை அவளுக்கு காட்டாமல் மறைத்திட்டான்,கேடி.
“நெஜமா அவங்களுக்கு கோவம் வராதா..?”
“அப்டி எல்லாம் ஒன்னும் இல்ல..அவங்க அடிச்சு விட்டு இருக்காங்க..நீயும் நம்பி இருக்க..”
“அப்போ லவ் இல்லியா..?” அவள் கோலங்களுடன் கோள விழிகளை விரித்திட,”இவ ஒருத்தி கண்ணால பேசி சாகடிப்பா..” தனக்குள் முணுமுணுத்தவனோ,இல்லை என்பதுடன் எழுந்து கொள்ள,அவள் மனதில் ஏனென்றில்லாமல்,சிறு நிம்மதி.
“வேதாஜி!”
“ம்ம்ம்ம்..” எழுந்து நின்றிருந்தான்,அவன்.
“என்னோட சிட்டுவேஷன்ல என்ன காப்பாத்த நீங்க தாலி கட்டி இருக்கீங்க..அதனால நீங்க பெருசா அலட்டிக்க வேணாம்..இது நமக்குள்ள வெறும் மஞ்சக் கயிறாவே இருக்கட்டும்..இங்க இருந்து போனதும் நா கழட்டி வச்சிர்ரேன்..” அவள் தரையை பார்த்து பிசிரடிக்கும் குரலில் உரைத்திட,”ம்ம்” என்கின்ற ஒற்றை உறுமலுடன் அவ்விடத்தை விட்டு அகன்று இருந்தான்,அரிமா அவன்.
●●●●●●●●
போதயின் முக்குளித்து விட்டு எழுந்தவருக்கு தலை வலித்திட,நெற்றியை நீவியவாறு எழுந்து சென்று குளியலறைக்குள் நுழைந்தவரின் முகத்தில் ஏனோ பெரும் இறுக்கம்.
இன்றைய நாளின் நினைவுகள்,அவரை அதிகம் தாக்கிடவே,விடியும் வரை போதையில் மூழ்கி இருந்தது.
ஆயினும்,போதை கூட அவரின் ரணங்களை மறக்கடிக்கச் செய்திட தோற்றுப் போக,உடலும் மனமும் ஒரு சேர வலித்தது.
குளித்து விட்டு வந்நவரோ,அவ்விடம் அதிரும் வகையில் அடித் தொண்டையில் இருந்து கத்திட,அதில் ஒளிந்திருக்கும் வலி நிச்சயம் யாருக்கும் புரிந்திடும் சாத்தியம் இல்லை என்பதே பொருத்தம்.
கைகளை மடக்கி சுவற்றில் ஓங்கிக் குத்தியவருக்கோ,பழைய நினைவுகள்.
ஆளும் வம்சத்தினர்,அவரின் வம்சம்.பதவியுடன் பணமும் அளவுக்கதிகமாகவே இருந்திட,தான்தோன்றித் தனமான வாழ்க்கை அவரது.
வீட்டில் பெரியவர்களின் பேச்சை செவிமடுக்காது போனவருக்கு,வாழ்க்கையை அதன் போக்கில் வாழவே இஷ்டம் இருந்தது.
அதன் விளைவு,மதுவுடன் பெண்களின் சகவாசமும்.பெண்களுடன் தாராளமாகப் பழகும் அவருக்கு,திருமணத்தின் மீதோ காதலின் மீதோ,துளியும் நம்பிக்கை இருக்கவில்லை.
நாளொரு பெண்ணுடன் அவரின் வாழ்க்கை கழிய,அவர் எதிர்பாராமல் விதத்தில் அவரின் வாழ்வில் வந்தாள்,பெண்ணொருத்தி.
பாவாடை தாவணியில் கையில் பூஜைக் கூடையுடன் அவர் முன்னே வந்து நின்றவளை முதல் பார்வையிலேயே பிடித்துப் போனது,அவருக்கு.
அதன் பின்னர்,வித வழி விட்ட தொடரான சந்திப்புக்கள்.அவள் காதல் என்று நினைத்திருக்க,அவருக்கு அப்பொழுது இருந்தது,வெறும் உடல் சார்ந்த ஈர்ப்பு மட்டுந்தான்.
அவ்வீர்ப்பு,எச்சமயம் காதலாகிற்று என்று,இதுவரைக்கும் அவருக்கு தெரியாது.ஆராய்ந்த போதிலும்,கண்டறிய முடிந்ததில்லை.
அதன் பின் அடுத்தடுத்து தொடராய் நடந்தவை.நினைக்கும் போதே,மனம் கனத்திட இதழ்கள் வலியுடன் புன்னகைத்திட,விழிகளில் மெல்லிய ஈரம்.
“ஹஸ்தேனி!” என பக்கத்து அறையில் தங்கியிருக்கும் தோழர் அழைப்பது கேட்ட போதிலும்,பதில் சொல்லாமல் அப்படியே கட்டிலில் படுத்து விட்டிருந்தார்.
கையில் இருந்த மோதிரத்தை பார்த்தவரின் மனம் கசந்து நோக,”சாந்தி” என உச்சரித்தவாறு அதை வருடியவரின் இதயம் வேகமாக துடித்தது.
துடிக்கும்.
2026.03.25
