நின் காதல் சுடுவதேனோ
திக்ஷிதா லட்சுமி
அத்தியாயம்- 1
மிகவும் இருள் அடைந்த வானம் தன் மேகத்தின் உதவியோடு மழையை அடித்து பெய்துக் கொண்டிருந்தது.
அந்த மழையின் சத்தம் மட்டும் போதாதென்று நொடிக்கு ஒரு முறை மின்னலுடன் கூடிய இடியின் சத்தமும் அந்த இடத்தில் அதிகமாக கேட்க, அத்தெருவில் உள்ள வீட்டு மனிதர்கள் யாருமே மழைக்கும் இடிக்கும் பயந்து வெளியே வரவில்லை.
வழக்கம் போல் இல்லாமல் இன்று இடியின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
மழை, மின்னல், இடியின் வருகையால் மின்தடை வேறு இலவசமாக வந்து மேலும் மக்களை அச்சுறுத்தியது.
இப்படி அனைவரும் பயந்து போய் இருக்க, அந்த நேரத்தில் உடைந்து போன மனத்துடன் பாதங்கள் நடந்து போகும் திசையை நோக்கிச் சென்றுக் கொண்டு இருந்தாள் அமிர்தயாழினி.
அவளின் இடிந்து போன இதயம் மிகவும் வலியை கொடுக்க, அது கண்ணீராக அவள் விழிகளில் வழிந்தது.
எத்தனை முறை அந்த கண்ணீரை அவள் துடைத்து விட்டாலும் கண்ணீர் நிற்பேனா என்று அவளுக்கு சவால் விடுவது போல் மேலும் மேலும் தேங்கிக் கொண்டே வந்தது.
அவள் மனமோ ‘அப்படி நான் என்ன பாவம் பண்ணிட்டேன்..?அவரை காதலிச்சதை தவிர வேற எந்த தப்பும் பண்ணாத எனக்கு எதுக்காக இத்தனை வலிகள்..? காதலித்தால் வலிகளை சுமக்க வேண்டுமா? வலிகள் இல்லாமல் காதல் இல்லையா?’ என்று கேட்ட பேதைக்கு தெரியவில்லை.
வலிகளை கொடுப்பதே இந்த காதல் தானே என்று.
அதுவும் வலிகளை விரும்பி ஏற்பவனை அல்லவா அவள் காதலித்து விட்டாள்.
அவன் கூறிய வார்த்தைகள் வேறு அவளின் செவிகளில் மீண்டும் மீண்டும் விழுந்து சித்திரவதை செய்தது பெண்ணவளை.
நடுங்கிய இதயத்துடன் “என்ன சொன்னீங்க திரும்ப சொல்லுங்க” என்று அவன் சட்டையின் இருப்பக்க காலரையும் கொத்தாக பிடித்தபடி, மனதில் உண்டான வலிகளால் அவள் உதடுகள் நடுங்க, வதனம் துடிக்க, கரங்கள் கூட உதறல் எடுக்க, கண்கள் நிறைந்து வழிந்த கண்ணீர் அவள் கன்னம் தாண்டி, கழுத்தின் பகுதியின் கீழ் சென்று அடைந்தது.
அவனோ அசட்டையாக அவளின் இருக்கரத்தையும் அழுத்தமாக பிடித்து தன் சட்டையின் காலரிலிருந்து பிரித்து எடுத்தவன்,
“என்ன பொய்யா சொல்லிட்டேன்? உண்மையை தானே சொன்னேன். இப்படி இன்னொருத்தி புருஷனை வளைச்சி போட பார்க்கிற நீயெல்லாம் ஒழுக்கமான பெண்ணா? அதுவும் ஒரு புள்ளைக்கு தகப்பனா இருக்கிறவன் கிட்டயே உன் உடம்பு சுக” என்று அவன் முழுமையாக சொல்லி முடிக்கும் முன் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தாள் அமிர்தயாழினி.
அவனோ தன் இமையை அழுத்தமாக முடி திறந்தவன் நொடியும் தாமதிக்காமல் அவள் கன்னத்தில் மாறி அறைந்து இருக்க, அவனின் இரும்பு போன்ற அந்த ஒரு அடியில் சுருண்டு தரையில் விழுந்து விட்டாள் பேதையவள்.
தரையில் இருந்தபடியே சட்டென்று சிவந்து வீங்கி போன அவள் கன்னத்தில் கரத்தை வைக்க போக, அதில் எரிச்சல் தர வலியை பொறுத்துக் கொண்டு உயரமாக நின்று இருந்தவனை வழிந்த நீரோடு தான் பார்த்தாள்.
அவள் வார்த்தைகளோ ‘இன்னொருத்தி புருஷன் என்றால், அப்போ எனக்கு? நானும் உன் மனைவி தானே?’ என்று கேட்க துடித்த நாவினை முயன்று கட்டுபடுத்தியவள் யார் உதவியும் இன்றி எழுந்து நின்று அவனை நேருக்கு நேர் பார்த்து தைரியத்துடன்,
“சரி மிஸ்டர் ருத்ரதேவ் நம்ம டிவோர்ஸ் பண்ணிக்கலாம்” என்று உடைந்து போன குரலால் சொன்னாள் அமிர்தா.
அவளின் இந்த சொற்கள் அவனின் இரும்பு மனதினை சிறியதாக அசைத்து பார்க்க நினைக்க… அதை சட்டென்று வேரோடு வெட்டி எறிந்த ருத்ரதேவ்,
“ஓ பண்ணிடலாம். அப்போ தானே இன்னொருத்தனை தேடி போக முடியும் உன்னால. ஏன்னா உனக்கு தான் தனியா இருந்தே பழக்கமில்லையே. முதல ஒருத்தன், இப்போ நான், அடுத்து வேற ஒருத்தனா?” என்று அவன் வார்த்தைகள் அமிலமாக வந்து விழ அதில் மொத்தமாக உடைந்து போய் விட்டாள் பெண்ணவள்.
அவளனவன் என்னென்ன வார்த்தைகள் அவளை பார்த்து கூறிவிட்டான்.
இது நாள் வரை அவனை மட்டுமே நினைத்து வாழ்ந்துக் கொண்டு இருந்தவளின் இதயத்தை பிய்த்து கிழித்து கசக்கி எறிந்து விட்டான் அவளின் உயிரில் கலந்தவன்.
ஆம் அவளின் உயிரானவன் தான் அவன்.
ஆனால் உரியவன் அவனுக்கு தான் தெரியாமல் போய் விட்டது.
அதன் பிறகு அவ்வீட்டில் அவளுக்கு என்ன வேலை. தளர்ந்த நடையோடு அடிப்பட்ட இதயத்தோடு, வலிகள் நிறைந்த பார்வையாக கடைசி முறை அவளவனை பார்த்தவள் அவனை விட்டு பிரிந்து நடக்க ஆரம்பித்தாள் அமிர்தயாழினி.
அப்படியே நடந்து வந்தவள் பார்வையில் அந்த வழியாக பயணிகளை சுமந்துக் கொண்டு வந்த பேருந்து தென்பட, ஒரு கணம் தயங்கியவள் அடுத்த நொடி உறுதியான முடிவுடன் அழுத்தமாக கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு அந்த பேருந்தின் முன் தன் கரத்தை நீட்டினாள் அதை நிற்க வைப்பதற்காக.
பேருந்தின் ஓட்டுநர் இந்த மழையில் ஒரு வயது பெண் நனைந்தபடி பேருந்தை நிறுத்து சொல்லி கையை ஆட்டுவதை பார்த்து சட்டென்று நிறுத்தினார்.
பேருந்தில் ஏறியவள் ஓட்டுநருக்கு நன்றியை கூறிவிட்டு பேருந்தினுள் அமர்ந்து இருந்த மனிதர்களை பார்த்தாள்.
அனைவருமே ஆண்கள் தான். ஒரு பெண் கூட இல்லை. கிட்டதட்ட ஆறு பேர், ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் சேர்த்து.
தவறாக ஏறிவிட்டோமோ என்று பயத்தில் அவள் தொண்டைகுழி ஏறி இறங்கியது.
ஏனென்றால் அவள் நின்று இருந்த கோலம் அப்படி.
ஆடைகள் முழுவதும் நனைந்து அவள் உடலுடன் ஒட்டிக் கொண்டு பெண்ணவளின் உடல் வளைவுகளை அப்பட்டமாக காட்டிக் கொண்டு அல்லவா இருந்தது.
மனவேதனையில் இருந்தவளுக்கு யோசிக்க கூட முடியாத நிலை தான்.
ஆனாலும் இப்பொழுது பேருந்தில் ஏறிவிட்டாள். பேருந்தும் புறப்பட்டு விட்டது.
இனி பயந்து நிற்பது சரியாக இருக்காது என்று எண்ணியவள், தைரியத்துடன் அவர்களை பார்த்தாள்.
இத்தனை நேரம் பயப்பட வைக்கும் கரடு முரடான முகத்தோடு இருந்தவர்கள், இப்பொழுது மென்மையாக அவளை பார்த்து புன்னகைத்தனர்.
அவள் இருந்த நிலையை அப்பொழுது யார் பார்த்து இருந்தாலும், புரிந்துக் கொண்டு இருப்பார்கள் அவள் இக்கட்டானச் சூழலில் இருந்து வந்து இருக்கிறாள் என்று.
மனிதர்கள் பல எண்ணங்களை கொண்டவர்கள் தான். ஆனால் அனைத்தும் நாம் பார்க்கும் கோணத்தில் தான் இருக்கிறது.
இப்பொழுது அவர்களுக்கு முன் தன்னை குறுக்கிக் கொண்டு நின்று இருந்த பெண், பாவப்பட்ட பெண்ணாக தான் அவர்களுக்கு தெரிந்தாள்.
இதுவே வேறு மனிதர்கள் அதாவது பெண்களை உடல் சுகத்திற்காக மட்டும் பார்க்கும் சில மிருங்களுக்கு முன் அவள் இந்த கோலத்தில் நின்று இருந்தால், இந்நேரம் அந்த மிருகங்களுக்கு வேட்டையாடி தின்னும் இரைப் போல் தான் அவள் தெரிந்து இருப்பாள்.
ஆனால் அங்கே இருந்த அந்த ஆறு பேருமே எண்ணத்திலும் சரி பார்வையிலும் சரி தூய்மையானவர்களாக தான் இருந்து இருப்பார்கள் போல்.
இது அவளின் நல்ல நேரமா? இல்லை அந்த கடவுள் அவளுக்கு அளித்த வரமா? என்று அந்த கடவுளுக்கு தான் தெரியும்.
பேருந்தில் இருந்த ஆறு பேரில் ஒருவரோ, அவர் கட்டப்பையில் இருந்த ஒரு துண்டை எடுத்துக் கொடுத்து “ஏன்ம்மா இப்படி நனைஞ்சிட்டு வந்து இருக்க..? இந்தா புடி முதல தலையை துவட்டு” என்றார்.
இன்னொருவரோ அவர் பையிலிருந்து ஒரு சட்டையை எடுத்து கொடுத்தவர் “தாயி இதை மேல் உடுப்பா போட்டுக்கோம்மா” என்று கொடுக்க. அதை சங்கடத்துடன் வாங்கிக் கொண்டு முதலில் அதை அணிந்துக் கொண்டாள்.
பின் துண்டு மற்றும் சட்டையை கொடுத்தவருக்கு நன்றியை கூறியவள் பின் பக்கமாக நடந்து கடைசி இருக்கையில் ஜன்னல் ஓரமாக அமர்ந்துக் கொண்டாள்.
அப்பொழுது மற்றொருவர் “ஏன்ம்மா அதான் மழை பெய்து ஜன்னல் பக்கம் தண்ணீ உள்ளே ஊத்திட்டு இருக்குனு தெரியுதுல, அப்புறம் எதுக்கு திரும்ப அங்கே போய் உட்கார்ந்து நனையுற?” என்று சற்று அதட்டலான குரலில் கேட்டார்.
அவரின் குரலிலே அமிர்தா பயந்து போக, அடுத்த நொடி தண்ணீர் ஊற்றாத இடத்தை பார்த்து அமைதியாக அமர்ந்துக் கொண்டாள்.
அப்பொழுது நடத்துனர் “எங்கேம்மா போகணும்?” என்று டிக்கெட் கொடுக்கும் இயந்திரத்தை கையில் எடுத்து அவளை கேள்வியாக பார்த்தார்.
அவளோ திருதிருவென முழித்தபடி முதல் முறையாக தன் உதட்டை அசைத்தாள் அமிர்தயாழினி.
“இந்த பஸ் எந்த ஊருக்கு போகுது?” என்று வழக்கம் போல் இவள் மனநிலையில் ஏறுபவர்கள் கேட்கும் அதே கேள்வியை தான் அமிர்தாவும் கேட்டாள்.
இதை எதிர்பார்த்தது போல் நடத்துனர் மெலிதாக சிரித்து விட்டு “இது விழுப்புரம் வண்டிம்மா” என்றவர் “இப்போ டிக்கெட் எடுக்க கூட உன் கிட்ட பணம் இருக்காதே?” என்று கேட்டார்.
அவளும் ஆம் என்பது போல் தலையை ஆட்ட, நாலாவதாக இருந்த ஒருவரோ “அதான் அம்மணி காசு இல்லனு சொல்லுதுல. இந்தா புடி விழுப்புரத்திற்கே ஒரு டிக்கெட் போடு. பார்க்கவே ரொம்ப பாவம் போல இருக்கா பொண்ணு” என்றவர் அமிர்தாவை கருணையாக பார்த்தார்.
இந்த நொடி ஏனோ அவர்களை தவறானவர்கள் என்று அவளால் பார்க்க முடியவில்லை.
பின் அவருக்கும் நன்றியை கூறியவள் “கண்டிப்பா நீங்க எல்லாரும் செய்த உதவியை நான் காலத்துக்கும் மறக்க மாட்டேன். கண்டிப்பா நான் திரும்ப ஏதாவது செய்வேன். உங்க போன் நம்பர், வீட்டு அட்ரஸ் எல்லாம் கொடுங்க ப்ளீஸ்” என்றவள் தன் சுடிதாரின் பாக்கெட்டிலிருந்து அவள் கைப்பேசியை தேடினாள்.
ஆனால் வழக்கமாக அவள் சுடிதாரில் இருக்க வேண்டிய அலைப்பேசி இன்று இல்லாமல் போக, அதை எங்கே வைத்தோம் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
ஆனால் அவளுக்கு அது நினைவில் வரவேயில்லை.
கடைசியாக பாக்கெட்டில் வைத்தது போல் தான் இருந்தது அவளுக்கு.
‘ஆனால் இப்பொழுது அதை காணவில்லையே? எங்கேயாவது விழுந்து இருக்குமா?’ என்று யோசித்தாள்.
அதே நேரம் அவளின் கைப்பேசியின் தொடுத்திரையில் இருந்த புகைப்படத்தை அழுத்தமாக பார்த்துக் கொண்டு இருந்தான் ருத்ரதேவ்.
