விரகதாபம் தீருமோ விதுரா? 41( நிறைவு பகுதி )

விதுரனை பார்க்க வந்த  ரஞ்சித் சரஸ்வதி, ராம்தேவ்  பிரதிக்ஷா விஷம் அருந்திய செய்தியை கேட்டு அனைவரும் அழுது கொண்டே மருத்துவமனை வந்தனர். விதுரனுக்கும் தகவல் தெரிய அழுது கொண்டு மருத்துவமனைக்கு ஓடி வந்தான்.

விதுரன் உள்ளே வரவும், ரம்யா அவனை தடுத்தாள்.

“நீ எதுக்கு இங்க வந்த எல்லாம் உன்னால தான், என்னைக்கு அவ உன்னைய பார்த்தாலோ அன்னைக்கே உன் மேல பித்து புடிச்சு திரிய ஆரம்பிச்சா, எத்தனையோ தடவை இதெல்லாம் வேண்டாம்னு தல பாடா அடிச்சும் கேட்கலையே? 

உங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் மனிஷா மாதிரி கேடுகெட்டவளை தான் பிடிக்கும், கனவுல பார்த்த உன்னைய எத்தன நாள் நிஜத்துல தேடித்தேடி ரோடு ரோடா அலைஞ்சானு தெரியுமா?” என்று ரம்யா சொல்ல அனைவரும் அதிர்ந்து பார்த்தனர்.

“என்ன எல்லாரும் பாக்குறீங்க, இந்த ஆள அவ கனவுல பார்த்தேன்னு சொல்லி முதல் முறையா வரைஞ்சு என்கிட்ட காமிச்சா, இப்படி ஒரு ஆள் இருக்குறதுக்கு வாய்ப்பு இல்ல நீ கற்பனையில மிதக்காதன்னு அவ்வளவு சொல்லியும், நீ அவளுக்காக எங்கேயோ பொறந்திருக்கன்னு முழுக்க முழுக்க உன்னை நம்புனாள், உங்க யாருக்கும் நம்ப முடியலைல, இதை பாருங்க என்று சொல்லி அவள் கையில் வைத்திருந்த நோட்புக்கை தூக்கி வீச, அதில் விதுரனின் முகம் விதவிதமாய் வரையப்பட்டிருந்தது, அது வரையப்பட்டிருந்த தேதியை பார்க்க உறைந்து போனான் விதுரன். அது கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னாடி வரைக்கப்பட்டதாயிருந்தது. அஞ்சு வருஷமா கனவுல பார்த்த உன்னைய  காதலன்னு சுத்திகிட்டு இருந்தா, எத்தனையோ தடவை பைத்திய மாதிரி உன்னை தேடி தேடி அலைஞ்சா, கடைசி வர கண்டுபிடிக்க முடியல. அப்புறம் அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு கல்யாணத்துக்கு போர்ஸ் பண்ணவும் அந்த ரஞ்சித்த கல்யாணம் பண்ண ஓகேன்னு சொன்னா, அன்னைக்கு  முதல் முறையா உன்னைய பார்க்கவும் நாங்க ரெண்டு பேருமே அதிர்ச்சையாகிட்டோம்.

என் காதல் எனக்கு கிடைச்சிருச்சு என்னை தேடி வந்திருக்காருன்னு அவள் பட்ட சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. உனக்கு ரஞ்சித்தோட நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு அப்படின்னு நான் சொன்னப்ப கூட, ‘என் கல்யாணத்துக்கு முன்னாடி என் கண்ணுல பட்டுருகாரூனா என்ன அர்த்தம்? கண்டிப்பா அவர் எனக்குத்தான், கண்டிப்பா அவர் எனக்கு வேணும்னு அழுதா? இப்ப அழுது என்ன பிரயோஜனம் ஒன்னும் பண்ண முடியாது கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்குனு அவ மனசுல உள்ளதை எத்தனையோ நேரம் உன்கிட்ட சொல்ல முயற்சி பண்ணுனா, ஆனா அவளுக்கு உன்கிட்ட பேச வாய்ப்பே அமையல, உன்னைய கல்யாணம் பண்ணலைனா செத்துருவேன்னு எங்கிட்ட சொன்னா அதனால வேற வழி இல்லாம கடைசி நேரத்துல அப்படி ஒரு திட்டம் போட்டு உன்னைய அவ கழுத்துல தாலி கட்ட வெச்சா,

கடைசில ஆசை ஆசையா உன்னைய கட்டியும் அவ இந்த நிலைமைக்கு போ வான்னு எனக்கு தெரியாது!” என்று கதறி அழ ஆரம்பித்து விட்டாள்.

அங்கிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

அனைவரும் அழுது கொண்டிருக்க, பிரதிக்ஷாவை  பரிசோதித்த  மருத்துவர் அங்கு வந்தார். அவரை பார்க்கவும் விதுரன் ஓடிப்போய்   டாக்டர் பிரதிக்ஷா நல்லா இருக்கால்ல  அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே?” என்று விதுரன் ஓடிச்சென்று கேட்க,

“எங்கள மன்னிச்சிருங்க, அவங்க விஷம் குடிச்சு கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் கழிச்சு தான் கூட்டிட்டு வந்து இருக்கீங்க. அதுக்குள்ள அவங்க ரத்தத்துல விஷம் முழுக்க பரவிருச்சு,  நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணுனோம்,எங்களால காப்பாத்த முடியல!  கடைசியா ஏதாவது பேசணும்னா பேசுங்க” என்று சொல்ல, பிரதிக்ஷாவின் அம்மா கதறியழ ஆரம்பித்து விட்டார்.

” உன்னோட சந்தோசம் முக்கியம்னு நெனச்சு தானே கல்யாணத்தண்ணிக்கி நீ  தப்பு பண்றேன்னு தெரிஞ்சு கூட அமைதியா இருந்தேன், இப்படி இந்த கல்யாணம் உன்னோட உயிரை பறிக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் அமைதியா நின்றுக்க மாட்டேனே!” என்று கதறி அழுதார்.

” அம்பிகாவோ, நீனும் விதுரனும் சந்தோசமா இருக்கணும்னு நினைச்சு தானே உங்களை தனியா விட்டுட்டு வீட்டை விட்டு வெளியில் போனேன் நீ இப்படி தப்பான முடிவு எடுப்பேன்னு தெரிஞ்சிருந்தா உன் கூடவே இருந்து உன்னைய பார்த்து இருந்து இருப்பேனே!” என்று அவரும் கதறி அழுதார்.

” என்னை மன்னிச்சிரு விதுரா இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் நான் மட்டும்தான், என்னோட சுயநலத்துக்காக பிரதிக்ஷா ஓட உயிரை எடுத்துட்டேனே!” என்று ரஞ்சித்தும் கதறி அழுதான்.

 சரஸ்வதி எதுவும் சொல்லி அழுகாமல் அப்படியே உடைந்து அதிர்ச்சியில் அமர்ந்து விட்டார். ராம்தேவ் கண்கள் கலங்கிய நின்று கொண்டிருந்தார்.

“அண்ணி முதல் முறையா உங்கள பார்த்தப்ப எங்க அண்ணனுக்கு பொருத்தமான ஜோடின்னு நினைச்சு போட்டோவை எடுத்துட்டு வந்து எங்க அம்மாவுக்கு காமிச்சேனே, நானும் எங்க அம்மாவும் உங்கள அண்ணாவுக்கு பேசி முடிக்க ரொம்ப முயற்சி பண்ணுனோம், கடைசில அது நடக்காம போயிருச்சுன்னு ரொம்ப வருத்தப்பட்டோம், கடைசில ரஞ்சித் அண்ணனுக்கு தான் நீங்க மனைவியாக தெரிஞ்சதும் எப்படியும் ஒரு வழியா எனக்கு அண்ணி ஆனீங்கன்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன், கடைசில கல்யாண நின்னு விதுரன் அண்ணன நீங்க கல்யாணம் பண்ணுனப்ப, நானும் அம்மாவும் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை! எத்தனையோ நேரம் நீங்க என்கிட்ட ஏன் என்மேல நீங்க கோபப்படவில்லைனு கேட்டுக்கொண்டே இருந்தீங்க, அத சொல்ல மாட்டேன் சர்ப்ரைஸ்னு நானும் உங்க கிட்ட விளையாட்டு கிட்டே இருந்தேன், கடைசி வரை அந்த உண்மை என்னன்னு தெரியாமலேயே  இருந்துட்டீங்களே!” என்று கதறி அழுக தொடங்கினாள் ரேணு.

“இப்படி எல்லாரும் சொல்லி சொல்லி அழுகுறீங்க என் மனசுல உள்ளத நான் யார்கிட்ட சொல்லி அழுகிறது!” என்று கதறி அழுக ஆரம்பித்தான் விதுரன். விதுரன் அழுகவும் அனைவரும் அவனை அதிர்ச்சியாக பார்க்க,

“ஏண்டி இப்படி பண்ணுன? எனக்கு டைவர்ஸ்சே வேண்டாம்னு நம்ம டைவர்ஸ் பண்ணுனதுக்கு அடுத்த நாளே வக்கீல பாத்து  சொல்லிட்டேனே, உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு தானே இத்தனை நாள் அமைதியா இருந்தேன், இந்த மூணு மாசத்துல எத்தனையோ தடவை உன்கிட்ட என்னோட கா தல மறைமுகமா சொன்னேனே, நீ அப்ப கூட நீ என்னைய புரிஞ்சுக்கலையா? உன் காதல் நான் புரிஞ்சுக்களைன்னு நான் உன்னை காதலிச்ச பின்னாடி நீ என்னை விட்டுட்டு போயி நான் உனக்கு கொடுத்த வலிய நீ எனக்கு திருப்பிக் கொடுக்கணும்னு முடிவு பண்ணி விஷத்தை குடிச்சிட்டியா?” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுக ஆரம்பிக்க, அனைவருக்கும் அப்போதுதான் புரிந்தது விதுரனுக்கும் பிரதிக்ஷாவின் மேல் அளவு கடந்த காதல் இருந்திருக்கிறது என்று!

“கடைசியா உன்கிட்ட என்னைய பேச சொல்றாங்களே? நான் என்னத்த பேச, உன்கிட்ட பேசுற அன்னைக்கி என்னோட காதலை சொல்லனும்னு நெனச்சேனே? அன்னைக்கு உன் முகத்துல வர்ற சந்தோசத்தை பார்த்து சந்தோஷத்துல நானும் பூரித்து  போகணும்னு நினைச்சேனே, அந்தக் கொடுப்பனையை எனக்கு கொடுக்காம  இவ்வளவு பெரிய தண்டனையை குடுத்துட்டியே? நீ இல்லாம நான் என்ன செய்வேன்!” என்று ஆண் என்ற அகங்காரத்தையும் மறந்து, தன்னுடைய பொசிஷன் அனைத்தையும் மறந்து அங்கிருந்த தரையில் உருண்டு அழுக ஆரம்பித்தான். அவனுடைய கண்ணீரும் புலம்பல்களும் அங்கிருந்த அனைவருக்கும் அவன் காதலின் அளவை உணர்த்தியது. 

இவ்வளவு நேரம் விதுரன் மேல் கோபம் கொண்டிருந்த ரம்யா கூட, ” ஒரு நாள் பொறுமையா இருந்தா நீ ஆசைப்பட்ட காதல் உனக்கு கிடைச்சிருக்குமேடி, இப்படி அவசரப்பட்டு முடிவெடுத்துட்டியே? ” என்று கூறினான்.

“இங்க பாருங்க, உங்க எல்லாரோட வலியும் தெரியுது! இதுதான் அந்த பொண்ணு கிட்ட கடைசியா நீங்க பேசுறதுக்கு கிடைச்ச வாய்ப்பு அதை பயன்படுத்திக்கிறுங்க!” என்று மருத்துவர் சொல்ல, ” நான் அவ கிட்ட பேச மாட்டேன். அவ மேல கோவத்துல இருக்கேன்னு அவ கிட்ட சொல்லுங்க, என்னைய விட்டுட்டு போக முடிவு பண்ணுன அவகிட்ட நான் பேசமாட்டேன்!” என்று சிறுபிள்ளையாய் விதுரன் கதறி அழுக, அவனை அணைத்துக் கொண்டார் ராம்தேவ்.

“அப்பா உங்க கிட்ட இதுவரை நான் எதையுமே கேட்டதில்லை, ஆனா இன்னைக்கு ஒன்னு கேட்கிறேன், என்னோட பிரதிக்ஷாவ எனக்கு இந்த டாக்டர்கிட்ட சொல்லி திருப்பி கொடுக்க சொல்லுங்க! எனக்கு வேற எதுவும் வேண்டாம்!” என்று விதுரன் அழுக அங்கிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

“இங்க பாருங்க நீங்க அவளை காதலிக்கலைனு  தப்பா நினைச்சுக்கிட்டே இருந்துட்டா, கடைசியாவாவது அவளை காதலிக்கிற விஷயத்தை நீங்க சொன்னீங்கன்னா நிம்மதியா போய் சேருவா, இந்த உதவி மட்டும் பண்ணுங்க!” என்று விதுரனை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள் ரம்யா.

“ நான் போக மாட்டேன் நான் போகமாட்டேன்” என்று விதுரன் அடம்பிடிக்க, ” விதுரா, உயிரோடு அவ இருக்கும்போது தான்  உன்னோட காதலை எதிர்பார்த்து ஏங்குனா, அவ சாகப் போறேன் நேரத்திலயாவது சந்தோசமா அவ முடிவு இருக்கட்டும், நீ உள்ள போயி அவளை பாரு!” என்று ரஞ்சித்தும், ராம்தேவும் கூறினார்கள்.

 இங்கு நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சரஸ்வதி கண்களை துடைத்துக் கொண்டு, ” விதுரா அம்மா சொன்னா கேப்பில எந்திரி, போயி பிரதிக்ஷாவ பாரு!” என்று சொல்ல,” அம்மா என்னால முடியலமா? ” என்று அழுதான் விதுரன்..

“வேற வழி இல்ல நீ பார்த்து தான் ஆகணும் உள்ள வா!” என்று விதுரனின் கையை பிடித்து, பிரதிக்ஷா அனுமதிக்கப்பட்டிருந்த அறையை நோக்கி கூட்டி வந்தார் சரஸ்வதி.

விதுரன் தயங்கிக்கொண்டே கண்கள் கலங்கி கொண்டு உள்ளே சொல்ல பிரதிக்ஷா அங்கு செயற்கை மூச்சுக்காற்று செலுத்தப்படும் உபகரணத்தோடு  தன் உயிரை கையில் பிடித்து வைத்திருந்தாள்.

விதுரன் அந்நிலையில் பிரதிக்ஷாவை பார்க்க முடியாமல்  அங்கிருந்து வெளியே வர “ப்ளீஸ் விதுரன்  உள்ள போங்க” என்று ரம்யா சொல்ல, வேறு வழி இல்லாமல்  உள்ளே சென்றான்.

 “பிரதிக்ஷா உன்னோட விதுரன் வந்து இருக்காரு! கண்ண தொறந்து பாரு” என்று ரம்யா சொல்ல, மெதுவாக கண்ணை திறந்தாள் பிரதிக்ஷா.

விதுரனை பார்த்ததும் மெதுவாக அசைக்க முடியாத தன் கைகளை அசைத்து விதுரனை அழைக்க, விதுரன் தயங்கி நின்றான்.

“விதுரன் போங்க உங்களை தான் கூப்பிடுறா?” என்று ரம்யா சொல்ல, மெதுவாக எட்டெடுத்து அவள் அருகில் சென்றான் விதுரன். அவள் முன்னாள் எக்காரணத்தை கொண்டும் அழுது விடக்கூடாது என்று அடக்கி வைத்திருந்த அழுகை அவனையும் மீறி அலையாக ஆர்ப்பரித்து வெளியே வந்தது.

பிரதிக்ஷா ஏதோ  சைகையில்சொல்ல அங்கிருந்த டாக்டர்  பக்கத்தில் வந்து, அந்த கருவியை கழட்ட  பிரதிக்ஷாவின் மூச்சு ஏறி இறங்கியது. ” ப்ளீஸ் டாக்டர் அத பிரதிக்ஷாவுக்கு மாட்டுங்க, இல்லைனா அவளுக்கு ஏதாவது ஆயிரும்!” என்று விதுரன் சொல்ல, கண்கள் கலங்கிக் கொண்டே “நீங்க பேசுங்க விதுரன்” என்று கூறினார் மருத்துவர். 

இங்கு நடப்பதை எல்லாம் பெற்ற தாயாக பார்க்க முடியாத லட்சுமி வேகமாய் வெளியில் செல்ல அவரை சமாதானப்படுத்த எண்ணி ரம்யாவும் அவர் பின்னால் சென்றார்.

“விது நீங்க அழுகாதீங்க, எனக்கு ஒன்னும் ஆகாது. நீங்க ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ  நான் எந்த விதத்திலயும் இடைஞ்சலா இருக்கக் கூடாதுன்னு நினைச்சு தான் இப்படி ஒரு காரியம் பண்ணுனேன், இப்பயும் நான் பண்ணுன விஷயத்தை நினைத்து கொஞ்சம் கூட கவலைப்படல! காரணம்  என்னோட காதலுக்காக நான் எடுத்த நல்ல முடிவுன  நம்புறேன், அம்மாவுக்கு என் மேல கோபம் அதனால தான் அம்மா எதுவும் பேசாம என்கிட்ட எதுவும் கூட கேட்காம கோபமா போறாங்க, ஆனால் அம்மா என்னைய கூடிய சீக்கிரத்துல புரிஞ்சுப்பாங்க!” என்று மெலிதாய் சிரிக்க,

“ஏண்டி இப்படி பண்ணுன? நீ போன பின்னாடி நான் என்ன பண்ணுவேன்! இப்படி அவசரப்பட்டுட்டியே? நான் டைவர்ஸ் வேண்டாம்னு கோர்ட்ல சொல்லி  ஆறு மாசம்  ஆயிடுச்சு!” என்று சொல்ல தன் கண்களை ஆச்சரியத்தில் அகல விரித்தாள் பெண்ணவள்.

“நீ காதலிக்கும் போது நான் காதலிக்கலைன்னு நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்ச பின்னாடி அந்த வலியை நீ எனக்கு திருப்பி தரணும்னு நினைச்சு இப்படி பண்ணியா?” என்று விதுரன் உடைந்து கேட்க, பிரதிக்ஷாவின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

” விது அத்தான் எல்லாரும் உங்களை இப்படி பொய் சொல்ல சொன்னாங்களா? ” என்று மெதுவாக தன் சந்தேகத்தை கேட்டாள் பிரதிக்ஷா

“பொய் சொல்லலடி உண்மையிலேயே நான் உன்னை காதலிக்கிறேன், உன்னைய என்னைக்கு முதல் தடவையா பார்த்தேனோ  அன்னைக்கே உன்னைய எனக்கு புடிச்சுச்சு, அன்னைக்கு நீ ரஞ்சித்துக்கு பார்த்த பொண்ணா இருந்ததால அமைதியாக இருந்தேன்.இல்லைனா கட்டாயம் உன்னைய நான் கல்யாணம் பண்ண முயற்சி செஞ்சிருப்பேன்!” என்று விதுரன் செல்ல “உண்மையாகவா?” என்று அதிர்ந்து கேட்டாள் பிரதிக்ஷா.

“உண்மை தாண்டி,நான் ஏண்டி பொய் சொல்ல போறேன், நீ இப்படி அவசரப்பட்டு முடிவு எடுப்பேன்னு தெரிஞ்சிருந்தா,  முன்னாடியே என் மனசுல உள்ளதை உன் கிட்ட வெளிப்படையா சொல்லி இருப்பேன்!” என்று விதுரன் சொல்ல, “இந்த உலகத்துல கடைசி பொண்ணா நான் மட்டும் இருந்தாலும் என்னை திரும்பி கூட பாக்க மாட்டேன்னு சொன்னீங்களே? ” என்று பிரதிக்ஷா கேட்க,

“அது நீ என்னைய பொய் சொல்லி கல்யாணம் பண்ணிட்டேன்னு கோபத்துல சொன்னது,  என் மனசுல இருந்த உன் மீதான காதல்  எந்த இடத்திலையும் என்ன மீறி வந்துட கூடாதுன்னு நெனச்சு  உன்கிட்ட அப்படி சொன்னேன்!” என்று கதறி அழுதான் விதுரன்.

“ஆனா இப்ப சொல்லிட்டீங்களே?” என்று பிரதிக்ஷா சிரிக்க, உடைந்து போனான் விதுரன். சிறிது நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு அதிகப்படியான மூச்சு திணறல் ஏற்பட்டது.

உடனே விதுரன் அவள் தலையில் தடவி “உனக்கு ஒன்னும் இல்லடி நான் இருக்கேன் உன் கூட!” என்று அவளை ஆசுவாசப்படுத்த,” ஆனா நான் உங்க கூட இருக்க மாட்டேனே, உங்க கூட வாழ்றதுக்கு எனக்கு குடுத்து வைக்கல!” என்று சொல்லி விரக்தியாக புன்னகைத்தாள்.

” அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நீயும் நானும் ரொம்ப வருஷம் சேர்ந்து வாழுவோம் என்று விதுரன் சொல்ல, ” சிரித்துக் கொண்டே, எனக்கு ட்ரீட்மென்ட் பார்த்த டாக்டர் நர்ஸ் எல்லாரும் பேசிகிட்டு இருந்தது என் காதுல விழுந்துச்சு ” என்று சிரிக்க அனைவரும் உடைந்து விட்டனர்.

” எனக்கு…. ஒரு சந்தேகம் அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க 

விது…. “என்று பிரதிக்ஷா கேட்க,

“ என்ன சந்தேகம், நான் உன்னைய காதலிக்கிறத இன்னும் நீ நம்பலையா?”  என்று கேட்க, ” நம்புறேன், உங்க கண்ணுல நீங்க என் மேல வச்சிருக்கிற காதல் தெரியுது!” என்று கூறினாள் பிரதிக்ஷா.

“அப்புறம் என்ன சந்தேகம் என்று விதுரன் கேட்க, ” என்னைய காதலிச்ச நீங்க எதுக்கு, உங்க உயிரை கூட பொருட்படுத்தாம மனிஷாவை தேடி ஓடினீங்க”என்று பிரதிக்ஷா கேட்க,

“அவளப் பத்தின உண்மைகள எனக்கு தெரிஞ்ச டிடெக்டிவ் ஆபீசர் மூலமாக தெரிஞ்சுகிட்டேன், என்னைய ஏமாத்துன அவளை சும்மா விட கூடாதுன்னு நினைச்சேன் , அவள கூட்டிட்டு வந்து உன் முன்னாடி நிறுத்தி உன்னைய தான் காதலிக்கிறேனு அவகிட்டசொல்றதுதான் நான் அவளுக்கு கொடுக்கிற பெரிய தண்டனைன  நெனச்சேன்   . அதனாலதான்  தான் அவளை தேடி போனேன், அன்னைக்கு நான் நினைச்சது நடந்திருந்தால்  இன்னைக்கு இப்படி ஒரு நிலைமைய நம்ம சந்திக்க வேண்டியது வந்திருக்காது!” என்று கதறி அழுதான் விதுரன். 

“விது அழாதீங்க, நீங்க அழுகுறத பார்த்தா எனக்கும் அழுக வருது! இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சி இருந்தா நான் இப்படி ஒரு முடிவை தேடி இருக்க மாட்டேன், இதுதான் விதி போல! நீங்க என்னைய காதலிக்கிறிங்கன்னு இப்பயாவது எனக்கு தெரிஞ்சிச்சு இனிமேல் நிம்மதியா போய் சேருவேன்!” என்று பிரதிக்ஷா கூற, ” என்னைய விட்டுட்டு போகாதடி”என்று கதறி அழுதான் விதுரன். 

“விது என்னைய இறுக்கி கட்டிப்புடிச்சு ஒரு முத்தம் மட்டும் தருவீங்களா? ” என்று பிரதிக்ஷா கேட்க, உடைந்து போனான் விதுரன்.

“நான் கட்டிப்பிடிக்க மாட்டேன்”, என்று விதுரன் சொல்ல,” ப்ளீஸ் விது, என் உயிர் போற இந்த நேரத்துலயாவது உங்க ஸ்பரிசம் என் மேல படணும்னு ஆசைப்படுறேன், ப்ளீஸ் விது என்னைய கட்டிப்புடிங்க!” என்று சொல்ல, ரஞ்சித் விதுரனை  பார்த்து கண் கலங்கிக் கொண்டே கண் அசைத்தான்.

அனைவரும் சைகையால் சொல்ல விதுரனும் எதுவும் சொல்லாமல் அவளை கட்டி அணைத்து அவள் இதழில் முத்தமிட, அவளின் இத்தனை வருட விரகதாபம் தீர்ந்த சந்தோஷத்தில் அவள் உயிர் அவளை விட்டு பிரிந்தது.

அவள் உயிர் பிரிந்ததை அறிந்த விதுரன், ” போகாதடி  என்னை விட்டு போகாத! திரும்பி வந்துரு!” என்று அவளின் கன்னத்தை அடித்துக் கொண்டே கதறி அழுதான்.

இவ்வளவு நேரம் மௌனமாக இருந்த அனைவரும் மருத்துவமனையே  அதிரும் அளவிற்கு கதறி ஓலமிட்டனர்.

           ( முற்றும்)

 

❤️ Loading reactions...
1 Comment
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page