ரஞ்சனும், மயூரியும் சாப்பிட்டு முடிய கிளம்பினர்.வெளியே வந்து அவன் கார் முன் இருக்கையில் அமர அவள் பின்னிருக்கைக்கு சென்றவள், பின்னே தாயும் தமயனும் நின்று தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தவள், சலித்தபடி எரிச்சலுடன் முன்னே வந்து ஏறினாள்.
அவளை பார்த்தபடி சிரிப்புடன் அவன் காரை கிளப்பினான். சிறிது தூரம் செல்லும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை, ரஞ்சனே மௌனத்தை உடைத்தான்.
“அப்போ… நான் சொன்னது நிஜம் தானே, “என்றான் சாலையை பார்த்தபடி
விசித்திரமாக அவனை திரும்பி புரியாமல் மயூரி பார்க்க, அவளை திரும்பி பார்த்தவன் மீண்டும் சாலையை பார்த்தபடி ஏளன புன்னகையுடன் சொன்னான்.
“ அதான்… ஓடி போறதுக்கு இங்கதான் வசதி.அந்த ஐடியா இருந்ததால தானே…என்ன பிரச்சனைன்னு உங்க அம்மாகிட்ட கூட சொல்லாம இருந்த அப்படித்தானே..? “ என்றான் ஏளனமாக
மயூரி கண்கள் அதிர்ச்சியில் விரிந்து வியப்படைந்தாளே,தவிர கோபப்படவில்லை. கோபத்திற்கு பதில் அவளுக்கு அழுகையே வந்தது. ஒன்றும் சொல்லாமல் வெளியே வேடிக்கை பார்த்தாள்.
ஆனால் கண்கள் கலங்க தான் செய்தது, சிறிது நேரம் கழித்து கார் வீட்டிற்கு செல்லவில்லை என்று மயூரிக்கு புரிந்தது. சுற்றும் முற்றும் பார்க்க ஒரு மாலின் பார்க்கிங்கில் சென்று நின்றது கார்.
பார்க்கிங்கில் கார் நின்றதும் ரஞ்சன் இறங்கினான். மயூரி எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க,
“கீழே இறங்கு” என்றபடி இறங்கினான் ரஞ்சன்.
அமைதியாக இறங்கியவள் அவனைத் தொடர்ந்து லிப்ட்னுள் ஏறினாள். லிப்ட் மேலே செல்ல மயூரி தலையை கவிழ்ந்தபடி அமைதியாக இருந்தாள்.
லிப்ட் ஒரு நகைக் கடை இருக்கும் தளத்தில் நின்றது.
மயூரி அவனைத் தொடர்ந்து செல்ல, அவன் நகைக் கடையினுள் நுழைந்தான்.
அவள் சுற்றும் முற்றும் வியப்புடன் பார்த்தபடி ரஞ்சன் பின்னே செல்ல, அவன் காதணிகள் இருக்கும் இடத்திற்குச் சென்று, அவளுக்குக் காதணிகள் எடுக்குமாறு கூறினான்.
மயூரியோ திகைத்து, “எனக்கு எதுவும் வேண்டாம்” என்றபடி திரும்பி வெளியே செல்ல எத்தணித்தாள்.
“நில்லு,இங்க வந்து உட்கார்” என்று அவன் குரல் அதிகாரமாக ஒலிக்க, அனைவரும் தன்னை பார்ப்பது போல் தோன்றியது , வேறு வழி இல்லாமல் அமைதியாக அவன் அருகே சென்று அமர்ந்தாள் மயூரி.
அவள் தலையை நிமிராமலே அமர்ந்திருக்க, “உன் பிறந்தநாளுக்கு எதுவும் வாங்கித் தரலைன்னா அம்மா ஏதாவது சொல்லுவாங்க” என்றவன், அழகான ஒரு காதணியை எடுத்து, “இதை ட்ரை பண்ணு” என்று ஒரு ஜோடி கம்மலை அவளிடம் நீட்டினான்.
அவளிடம் கூறிவிட்டு எழுந்து கவுண்டருக்குச் சென்று பேசிக்கொண்டு இருந்தான். திரும்பி அவனைப் பார்த்தவள், எதுவும் சொல்லாமல் எழுந்து வெளியே சென்றாள்.
சிறிது நேரம் கழித்து நகையை வாங்கிக்கொண்டு ரஞ்சன் வெளியே வந்தான். அவன் புன்னகையுடன் வருவதைக் கண்டு ரசித்தாள், அவளை கண்டவன் முகம் இறுகுவதைக் கண்டு பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.
இருவரும் எதுவும் பேசாமல் காரை நோக்கி நடந்தனர். பார்சலைப் பின் இருக்கையில் வைத்தவன், அவளைக் கண்டு ஏளனமாக புன்னகைத்துவிட்டு காரைக் கிளப்பினான்.
வீடு வரும் வரை அமைதி நிலவியது. வீட்டை அடைந்ததும் மயூரி வீட்டினுள் வந்தவள் மாமியாரை கண்டவுடன் ஓடிச் சென்று மரகதத்தைக் கட்டிக்கொண்டாள்.
பின்னே வந்த ரஞ்சன், நகை பெட்டியை அவரிடம் நீட்டிவிட்டு, மயூரியை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் பையை எடுத்துக்கொண்டு அலுவலகம் கிளம்பினான். அவன் கிளம்புவதை ஓரக்கண்ணால் பார்த்த மயூரியின் கண்கள் கலங்கின.
மரகதம் அவள் தோள் தட்டி, “எல்லாம் சரியாகிவிடும் மயூரி..கவலைப்படாதே” என்றார்.
மயூரியோ அவரை அணைத்து, பெருமூச்சுடன் அழுகையை அடக்கினாள்.
இரவு உணவிற்கு தான் ரஞ்சன் வந்தான்.மயூரி அமைதியாக சோபாவில் அமர்ந்திருந்தாள். அவளை ஒரு பார்வை பார்த்தவன்,எதுவும் சொல்லாமல் மாடிக்குச் சென்றான்.
மரகதம் அவளையும் உண்ண அழைக்க, ரஞ்சனும் வந்து சேர்ந்தான். உணவை உண்டபடி கேட்டான் ரஞ்சன்,
“ உங்க மருமகளுக்கு நான் கொடுத்த கிப்ட் பிடிச்சிருக்கா அம்மா” என்றான்.
“ அதை அவகிட்டயே நேரடியா கேட்க வேண்டியது தானடா” என்றார் மரகதம்.
“ அவதான் பேசினா முத்து உதிர்ந்திடும் போல அமைதியா இருக்காளே…அதான் உங்ககிட்ட கேட்டேன்..!”என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை
அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள், அமைதியாக தலையை குனிந்த படி உண்டாள் மயூரி. மூவரும் உண்டு முடிக்க, ரஞ்சன் எழுந்து தன் அறைக்குச் சென்றான்.
மயூரி தயங்கியபடி, “அத்தை, நான் உங்க கூட படுத்துக்கிறேன்” என்றாள்.
மரகதம் பதில் கூறும் முன், மாடியேறிக் கொண்டிருந்த ரஞ்சன் திரும்பி அவளை பார்க்காமலே,
“நான் ஒன்னும் உன்னைக் கொன்னுட மாட்டேன்” என்றபடி அறைக்குள் சென்றான்.
மயூரி வேறு வழியின்றி அவன் பின்னே அறைக்குள் செல்ல, ரஞ்சன் ஏற்கனவே படுத்திருந்தான். மயூரி அமைதியாகச் சென்று, அவன் அருகே இருந்த தலையணையை எடுத்து அங்கிருந்த சோபாவில் படுத்துக்கொள்ள, ரஞ்சன் தலையை மட்டும் தூக்கி அவளை பார்த்துவிட்டு படுத்துக் கொண்டான்.
மயூரிக்கு வெகுநேரம் தூக்கம் பிடிக்கவில்லை. அவள் வெகு நேரம் தான் என்ன செய்யப் போகிறோம் என்று சிந்தித்து இருந்தாள்.இனி பரதநாட்டியம் ஆடச் செல்ல இயலாது, ஆர். ஜே. வாக வேலையைத் தொடர இயலாது என்று எண்ணும்போதே கண்கள் கலங்கின.அதைத் துடைத்தவள் மனதை கட்டுப்படுத்த முயன்று தோற்று போனாள்.
வெகு நேரம் கழித்து ரஞ்சனுக்கு முழிப்பு வந்தது.சோபாவில் மயூரியை தேடியவன் அவள் அங்கு இல்லாமல் இருக்க,எழுந்து அமர்ந்து நேரத்தை பார்த்தான். அது நள்ளிரவு ஒரு மணி என்று காட்டியது,சுற்றும் முற்றும் பார்க்க, பால்கனி கதவு திறந்து இருந்தது,எழுந்து அங்கு சென்று பார்த்தான்.
அங்கே முகத்தை முட்டியில் புதைத்து, கைகளால் முட்டியை கோர்த்துக்கொண்டு, குலுங்கி அழுது கொண்டிருந்தாள் மயூரி. பார்க்கையில் ரஞ்சனுக்கு மனது வலித்தது. அருகே சென்றவனை கவனிக்க கூட இல்லாமல் அழுது கரைந்தாள் மயூரி.
அந்தக்காட்சி ரஞ்சனின் மனதை என்னவோ செய்தது. அவள் தலையை வருட சென்ற கையை கட்டுப்படுத்திக் கொண்டு முகத்தை இறுக்கமாக்கி குரலை செறுமினான்.சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களை துடைத்துக்கொண்டு எழுந்தவள், விறு விறுவென சோபாவில் சென்று படுத்துக் கொண்டாள்.
அவளையே பார்த்திருந்தவன் பெருமூச்சுடன் , “இப்ப எதுக்கு இப்படி அழுது சீன் கிரியேட் பண்ணிக்கிட்டு இருக்கே?” என்றான் கடினமாக.
அவள் பதில் சொல்லாமல் இருக்க, அமைதியாக சென்று தன் இடத்தில் படுத்துக்கொண்டே அவளை பார்த்தான். அவள் உடல் அழுகையில் குலுங்குவதை ரஞ்சன் உணர்ந்தான்.
அப்படியே அவளைப் பார்த்தபடி எப்போது உறங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை.
காலை விடிந்ததும் ரஞ்சன் முதலில் பார்த்தது மயூரியின் முகத்தைத் தான். அவள் சோபாவில் அவன் புறம் திரும்பி உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவள் முகத்தில் முன்பு இருந்த நிர்மலமான அமைதி இப்போது இல்லை.முகம் கசக்கி எறிந்த காகிதம் போல் களைந்துப் போயிருந்தது. முகத்தில் களைப்பும் தெரிந்தது இரண்டு நாள் அழுததற்கு அடையாளமாக கண்களுக்கு கீழே லேசாக கருவளையம் இருந்தது.
அவள் முகத்தை கண்டவனுக்கு, தான் ஏதோ தவறு செய்தது போல் அவன் மனம் அவனை சாடியது.அதை ஒதுக்கி விட்டு எழுந்து அமர்ந்தான். மயூரியை பார்த்தபடி எழுந்து அவள் அருகே சென்றான்.
கைகளை கட்டிக்கொண்டு,கால்களை குறுக்கி படுத்திருந்தாள்.அவள் கலைந்திருந்த முடியை வருடிக் கொடுக்க நினைத்தவன் அவள் உச்சியில் இருந்த முடியை லேசாக வருடினான். அவள் முகத்தில் விழுந்த காதோர சிகையையும் பின்னே விலக்கி விட, அவன் கரம் உணர்ந்தது அவள் உடல் சூட்டை.
புருவங்களை சுருக்கியவன் அவள் நெற்றியில் தன் புறங்கையை வைக்க, அது அனலாக கொதித்தது. அவன் கைப்பட்டவுடன் சட்டென்று விழித்த மயூரி வேகமாக எழுந்து நின்றாள்.
காய்ச்சலின் வேகமோ, அவ்வளவு நேரம் குறுகி படுத்திருந்ததோ, இல்லை தூக்க கலக்கமோ, நிற்க முடியாமல் தள்ளாடிய அவளை ரஞ்சன் பிடிக்கப் போக,அவளே மீண்டும் சோபாவில் அமர்ந்தாள்.
“என்ன அவசரம்?” என்று காய்ந்தவன், மீண்டும் அவள் நெற்றியில் கை வைத்தான். மயூரி அவன் கையைத் தட்டிவிட,
“ப்ச் “ என்று சலித்தவன்.”காய்ச்சல் நெருப்பா கொதிக்குது, எதுக்கு இவ்வளவு சீன் போடுற ?” என்றான் கோபமாக.
ஒரு நெடுமூச்சை எடுத்தவள் கால்களை நன்றாக ஊன்றி, கையை சோபாவில் நன்கு பிடித்தபடி எழுந்து நின்றாள்.பூமி தட்டாமாலை சுற்றியது மீண்டும் தள்ளாடிய அவளை பற்றி அமர வைத்தான் ரஞ்சன்
“அமைதியா உட்கார்ந்து இரு, அம்மாவை கூப்பிடுறேன்” என்று அவன் கூற,அவன் கரிசனையில் அவளுக்கு கண்கள் கறித்தது.
அவன் அறை வாயிலுக்கு சென்று கதவை திறந்து தன் தாயை அழைத்தான்.மேலிருந்தே அவளுக்கு காய்ச்சல் என்று கூறிவிட்டு திரும்ப, அவள் அதற்குள் குளியலறைக்குச் செல்வதை கண்டான்.அவளை பார்த்தபடி உள்ளே சென்று கட்டிலில் கைகளை கோர்த்தபடி அமர்ந்தான் ரஞ்சன்.
மரகதம் அறையினுள் வந்தவர்
“ மயூரி…எங்க ரஞ்சன்..? “ என்று கேட்க, குளியலறையை கண்களால் காட்டினான்.
“ஓ “ என்றவர், “நான் போய் சூடா பாலும், உனக்கு காபியும் எடுத்துட்டு வரேன்.. அவ வந்தான்னா படுத்திருக்க சொல்லு.. “ என்றவர் கீழே இறங்கி சென்றார்.
ரஞ்சன் எழுந்து பால்கனிக்கு சென்று வெளியே வெரித்தான். காலை இளம் காற்றை உள்ளிழுத்து கண்களை மூடியபடி நின்றவன், எவ்வளவு நேரம் அப்படியே நின்றான் என்று அவன் அறியவில்லை” ரஞ்சன் “என்ற தாயின் குரலில் கண்களை திறந்தவன் திரும்பி உள்ளே வந்தான்.
தாயின் குழப்பமான முகத்தை கண்டு புருவங்களை
சுரக்கியவனிடம்,
“ அவ இன்னும் வெளியே வரலையா..? “ என்றார் மரகதம்.
உதட்டைப் பிதுக்கி தோள்களை குலுக்கியவனை முறைத்த மரகதம்,
“என்ன ரஞ்சன்..? அரை மணி நேரத்துக்கு மேல ஆகப்போகுது..!” என்றவர் குளியலறை கதவை தட்டினார்.
“மயூரி… மயூரி…” என்று அழைத்தும் பதில் இல்லை.
பதில் ஏதும் வராமல் இருக்க ரஞ்சனை திரும்பி பார்த்தவர் மீண்டும் கதவை தட்டினார்
“மயூரி..என்ன செய்ற..? “என்று கத்தினார்.
“ஆ…வரேன் அத்தை “என்று மெல்லிய குரல் மட்டும் கேட்டது.
மரகதம் ரஞ்சனை திரும்பி மீண்டும் பார்க்க,அவனும் குளியலறை அருகே சென்று கதவை தட்டினான்
“மயூரி, கதவை திற” என்று கொஞ்சம் பலமாக தட்டினான்.
கதவை முழுதாக கூட திறக்காமல் மயூரி கதவின் பின் மயங்குவதை கண்ட ரஞ்சன், சட்டென கதவை திறந்து அவளை இடையோடு கைகளில் தாங்கித் தன் மேல் சாய்த்து கொண்டான்.வேகமாக காலை எடுத்து வைத்ததில் அவனுக்கு கால்களில் லேசான வழி எடுக்க, அவன் முகம் சுருங்கியது அதை கவனித்த மரகதம்,
“ ரஞ்சன்.!கால் வலிக்குதாப்பா?அவளை என் மேல சாய்ச்சுகிறேன்.. “ என்று அவள் அருகே சென்றார் மரகதம்.
“ இல்லம்மா,ஒன்னும் பிரச்சனை இல்ல சட்டுனு காலை ஊன்றியதால வலிச்சது, இப்ப பரவாயில்ல, வாங்க.. “ என்றவன் தோளில் சாய்ந்திருந்தவளை குனிந்து கைகளில் ஏந்தி கொண்டான்.
“பார்த்து.. கவனம் ரஞ்சன்.. “ என்றவர் படுக்கையில் தலையணையை சீர் செய்தார். அவளை படுக்கையில் கிடத்தியவன் அவள் முகத்தை பார்த்தபடி நிற்க,
மரகதம் அருகில் இருந்த நீர் குவளையிலிருந்து நீரை லேசாக அவள் முகத்தில் தெளிக்க, சோர்வாக கண்களைத் திறந்து பார்த்தாள் மயூரி.அவள் முகத்தை துடைத்த மரகதம் அவள் நெற்றியில் கை வைத்தார்
“என்ன மயூரி..! இப்படி நெருப்பா கொதிக்குது..? என்றார்.
அவள் கண்கள் ரஞ்சனை ஒருமுறை தொட்டு, மீண்டும் அவரைக் கண்டபோது கண்களில் நீர் கோர்த்தது.
“ம்ம்… ரெண்டு நாளா ஒழுங்கா சாப்பிடாம இப்படியே அழுதுட்டு இருந்தா..?காய்ச்சல் வராமல்..? “ என்றவன் தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
மரகதம் மயூரியை கண்டிப்புடன் பார்க்க
“ அத்தை… நான் பாத்ரூம்ல இருந்து.. இங்க எப்படி வந்தேன்..? “ என்றாள் கண்ணீரை துடைத்தபடி
“ம்ம்…நான் தான் ஒற்றை கையாள உன்ன தூக்கிட்டு வந்தேன். நான் சூப்பர் உமனாக்கும்..!” என்றவரை கண்ணீரும் சிரிப்புமாக மயூரி பார்த்தாள்.
“ இது ஒரு கேள்வியா..? இங்க இருக்கிறது நாங்க ரெண்டு பேர்,அப்ப உன் புருஷன் தானே உன்னை தூக்கிட்டு வந்து இங்கே படுக்க வச்சிருப்பான்..? “ என்றார் மரகதம் அவள் கன்னத்தை பிடித்து கிள்ளி
“அவரா? அவர்…அவர் கால்கள் வலிக்கலையா..? “ என்றாள் தயக்கமாக
“ம்ம்..அதை மயங்கி விழுந்தயே.. அப்ப இல்ல யோசிச்சு இருக்கணும்..? “என்று கண்டிப்புடன் அவர் கூற அவள் முகம் லேசாக வாடியது.
அவள் தாடையை பற்றி தன்னை பார்க்க வைத்தவர் “ஒன்னும் பிரச்சனை இல்ல..சரியா..? மனச போட்டு குழப்பிக்காம ரெஸ்ட் எடு,கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகிவிடும்.. “ என்று அவர் கூறிக் கொண்டிருக்கும்போதே ரஞ்சன் உள்ளே வந்தவன், மயூரியை பார்த்தபடி மரகதத்திடம் பேசினான்.
“ அவள முகம் கழுவி ரெடியாக சொல்லுங்கள் அம்மா, நீங்க ஹெல்ப் பண்ணுங்க டாக்டர் கொஞ்சம் பிஸியா இருக்கார். கிளினிக் தான் கூட்டிட்டு போகணும்.. “என்றான்.
மயூரியோ “அத்தை நானே கிளம்பிக்குவேன். “என்றபடி எழ முயன்றாள்.
“எதுக்கு திருப்பி மயங்கி விழவா..? இன்னொரு தடவை எல்லாம் நான் பிடிக்க மாட்டேன்..!” என்றவன். “பார்க்க குட்டையா ஒல்லியா இருக்கான்னு தூக்கினா..? என்ன வெயிட்..?!”என்று முணுமுணுத்தபடி வெளியே சென்று விட்டான்.
மரகதம் வாய்விட்டு சிரித்தபடி மயூரிக்கு பாலை முதலில் கொடுத்தார்.மயூரி அவன் சென்ற வழியை பார்த்து முறைத்தபடி, பாலை குடித்தவளுக்கு மரகதம் மாற்று உடையை எடுத்துக் கொடுத்து கிளம்ப வைத்தார்.
