சிறிது நேரம் கழித்து இருவரும் மூன்றாம் தளத்தை நோக்கி சென்றார்கள். அந்த கப்பலின் உள்ளேயே அனைத்து வசதிகளும் இருந்தன. கப்பலில் அமர்ந்து இயற்கையை ரசித்து கொல்லும் வகையில் வசதியான இருக்கைகள், தின்பண்டங்கள் விற்கும் சிறு சிறு கடைகள், கழிவறை, ஊழியர்களின் அறை என அனைத்தும் இருந்தது. அங்கே ஒருவர் நின்று கிடார் வாசித்து கொண்டிருந்தார். அவருடைய கை அந்த கிடாரில் நடனமாடி இனிமையான இசையாக வெளிப்பட்டு கொண்டிருந்தது. அங்கிருந்த அனைவரும் அந்த இசையை மெய்மறந்து இரசித்து கொண்டிருந்தார்கள். அவர் அதனை இசைத்து முடித்ததும் ஒவ்வொருவராக வந்து அவருக்கு சில டாலர்களை பரிசாக கொடுத்தனர். அவரும் அதை புன்சிரிப்போடு வாங்கி கொண்டார். கௌரியும் வர்ஷினியும் அவருக்கு தன்னால் இயன்றதை கொடுக்க சென்ற போது அவர் கௌரியிடம் நீங்க இந்தியரா? என் பேரு பெர்னாண்டஸ், நீங்க, என்று கூறி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நான் சில வருடங்களுக்கு முன் இந்தியா சென்று இருக்கேன். இந்தியா ரொம்ப அழகிய நாடு. எல்லோரும் எங்கிட்ட ரொம்ப பிரெண்ட்லியா நடந்துக்கிட்டாங்க. நீங்க எல்லோரும் உங்க கலாச்சாரத்தையும் மொழியையும் ரொம்ப மதிக்கிறீங்க என்று நம் நாட்டை பற்றி ஆங்கிலத்தில் அவர் சொல்லிக்கொண்டே போவதை கேட்டு இருவருக்கும் ரொம்ப கர்வமாகத்தான் இருந்தது. சிறிது நேரத்தில் இறங்கும் இடம் வந்து விடவே அனைவரும் இறங்குவதற்கு தயாராக, கௌரியும் வர்ஷினியும் அவருக்கு நன்றி கூறி இறங்கிக்கொண்டனர். கௌரி வர்ஷினியை சிலை அருகே வைத்து புகைப்படம் எடுத்தான். வர்ஷினியும் அவனை தனியாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்தாள். பின் இருவரும் சேர்ந்து செல்ஃபீ எடுத்து கொண்டனர். பெரிய கடல் போன்ற பரப்பில் நடுவில் நின்று இருந்த அந்த சிலையை சுற்றிக்கொண்டு இருவரும் பேசிக் கொண்டு நடந்தனர். வர்ஷினிக்கு அந்த இயற்கையான சூழ்நிலை மிகவும் பிடித்திருந்தது. அந்த இடத்தை மிகவும் சுத்தமாகவும் வைத்திருந்தனர். அதன் அழகில் ரசித்து கொண்டே கௌரியிடம், சங்கர் என் மனசு எப்பவெல்லாம் கஷ்டமாக இருக்குதோ அப்பெல்லாம் நீ எனக்கு புத்துணர்ச்சி ஊட்ட இந்த மாதிரி ஏதாவது ஒரு இடத்துக்கு கூட்டிட்டு வந்திறே, என்னை எப்பவும் சந்தோஷமா பாத்துக்கிறே, நானும் உன்னை சந்தோஷமாக வைச்சிக்கணும்னு ஆசைப்படறேன். உனக்கு என்கிட்ட ஏதாவது கேட்கணும்னு ஆசை இருந்தா கேளுடா அல்லது என்கிட்ட ஏதாவது பிடிக்காத குணம் இருந்தா சொல்லு. நான் உனக்காக மாத்திக்கிறேன் என்றதும் கௌரி நீ முதல்ல கேட்ட கேள்விக்கு நீ என்கூட எப்பவும் இருக்கனும் வர்ஷினி, எந்த காரணத்துக்காகவும் என்னை விட்டு நீ போக கூடாது. இரண்டாவது கேள்விக்கு நீ நீயாகவே இருக்கனும். உன்னை எனக்காக மாத்திக்கவோ, திருத்திக்கவோ வேண்டாம். எனக்கு இந்த குட்டி குஷ்பூவை தான் பிடிச்சிருக்கு என்று கூற வர்ஷினிக்கு தன் தந்தை அன்று கூறியது நினைவுக்கு வந்தது. கரண், வர்ஷினியிடம்,வர்ஷினி, நான் உன் அனுமதி இல்லாம உன்னை மிரட்டி
கல்யாணம் பண்ணி வைச்சிட்டார்னு என் மீது கோபமா இருக்கே, நான் செஞ்சது தப்பில்லைனு உனக்கு போக போக தெரியும்.கௌரி உன்னை நல்லா பாத்துப்பார்னு சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அப்பா சரியாகத்தான் சொல்லி இருக்கார். நாம தான் அவர் மேல கோபப்பட்டு அவர் கிட்ட சரியாக கூட பேசல. என் அப்பா அன்னைக்கு என்னை இவருக்கு திருமணம் செய்து வைக்காம போயிருந்தா இவ்வளவு நல்ல மனிதரை நான் மிஸ் பண்ணியிருப்பேன் என்று நினைத்த போது அவளுக்கு இந்த பாட்டு நினைவுக்கு வர
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கு
வெல்ல பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது.
அதை கண்ட கௌரி, ஏய், வர்ஷினி என்னாச்சி? இப்படி உன் முகம் சிவந்திருக்கு என்று புன்னகையுடன் கேட்க, உங்கள இப்போ பார்க்கிறப்போ மனசுக்குள் ஒரு பாட்டு ஞாபகம் வந்திச்சு என்று பதிலுரைக்க, என்ன பாட்டு வர்ஷினி ?பாடு கேட்போம் என்று ஆவலுடன் அவளை பார்க்க, நான் சொல்ல மாட்டேனே என்று அவள் அங்கிருந்து ஓடிட, கௌரி என்ன பாட்டுன்னு சொல்லிட்டு போடி என அவளை துரத்த , இதை பார்த்துக்கொண்டிருந்த இரு வயதானவர்கள் cute couple என்று தங்களுக்குள் பேசி சிரித்து கொண்டனர். கௌரி வர்ஷினியை பிடித்த பிறகு என்ன பாட்டுன்னு சொல்லுடி என்று கெஞ்ச, அவள் மறுபடியும் சொல்லமாட்டேன் என்று மிஞ்ச, இப்போ நீ சொல்லலைனா நாம வரும்போது ஒரு ஜோடி கப்பலில் முத்தம் கொடுத்தாங்களே அதுமாதிரி நான் இங்கேயே பண்ணுவேன் என்று அவளை செல்லமாக மிரட்ட, வர்ஷினி அவனை அதிர்ந்து பார்த்து அய்யய்யோ இந்த இடத்திலா என்று கூறி மீண்டும் ஓட, ஒருவழியாக இருவரும் ஓர் இடத்தில் மூச்சு வாங்க நின்றனர்.
நாட்களும், வாரங்களும் ஓடிக் கொண்டு தன் கடமையை செவ்வனே செய்து கொண்டு இருந்தன. கௌரியும் வர்ஷினியும் அமெரிக்கா வந்து மூன்று வருடங்கள் உருண்டோடிவிட்டன. இந்த மூன்று வருடத்தில் இருவரால் இந்தியாவிற்கு செல்லவே முடியவில்லை. கௌரிக்கு வேலை நெருக்கடி கடுமையாக இருந்த காரணத்தால் அவனால் செல்ல முடியவில்லை. மதுமதிக்கு இன்னொரு ஆண் மகவும் பிறந்துவிட்டான். மகன் பிறந்து ஒரு வருடமும் ஆகிவிட்டது. இரண்டாவது குழந்தையையும் அலைபேசி காணொளி மூலம் தான் இருவரும் பார்த்து மகிழ்ந்தார்கள். கவிதாவுக்கு மகன் நேரில் வரவில்லையே என்ற ஏக்கம் இருந்தாலும் அவன் வேலை காரணமாக அவள் ஒன்றும் கேட்கவில்லை. இந்த மூன்று வருடமும் கவிதா வர்ஷினியிடம் அன்பாகதான் பேசினாள். அதுவே வர்ஷினிக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.
அன்று கவிதா, கௌரியிடம் அலைபேசியில் பேசினாள். என்னடா இரண்டு பேறும் இந்தியா வரதா உத்தேசமே இல்லையா? அமெரிக்கா போனதும் அப்பா, அம்மாவை மறந்துடீங்களா? என்று ஆதங்கத்துடன் கேட்க, அப்படியெல்லாம் இல்லம்மா. என் வேலை பளு அப்படி இருக்கு, இந்த வருடம் கண்டிப்பா வர முயற்சி செய்யிறேன் என்று கூற, இந்த வருஷம் விக்னேஷின் இரண்டு பிள்ளைகளுக்கும் நம்ம குலதெய்வ கோயில்ல மொட்டை அடித்து காது குத்தணும். நான் நல்ல நாளா பாத்து சொல்றேன் நீங்க இரண்டு பேரும் காரணம் எதுவும் சொல்லாம இந்தியாவுக்கு கிளம்பி வந்துருங்க என்று கௌரியிடம் சொல்லிவிட்டு வர்ஷினி கிட்ட போனை கொடு என்றதும் கௌரி வர்ஷினியிடம் போனை கொடுக்க கவிதா, வர்ஷினி எப்படி இருக்க? நல்ல இருக்கேன் அத்தை, நீங்க எப்படி இருக்கீங்க ?என்று கேட்டதும், கவிதா, வர்ஷினி நீ என் கண்ணிலே இருக்க, உன்னை நேரில் பாக்கணும்னு ஆசையா இருக்கு. இன்னும் இரண்டு மூணு மாசத்தில் ஒரு நல்ல நாளா பாத்து விக்னேஷ் குழந்தைகளுக்கு மொட்டை அடிச்சு காது குத்தணும்மா. நீங்க இரண்டு பேரும் கண்டிப்பா வரணும். நீ சொன்னா கௌரி கண்டிப்பா கேப்பாம்மா. கௌரியையும் அழைச்சிட்டு சீக்கிரமா ஊருக்கு வாங்கம்மா என்று கூறியதை கேட்ட வர்ஷினிக்கு அவர் பேச்சை மீற முடியாமல் சரி அத்தை என்று கூறி போனை வைத்தாள்.
போனை வைத்ததும் கௌரி வர்ஷினியிடம் நாம அந்த விசேஷத்துக்கு கண்டிப்பா போகணுமா என்று கேட்க, ஏன் சங்கர் இப்படி கேக்குற? விக்னேஷ் மாமா குழந்தைகளுக்கு விசேஷம் நடக்கிறது. அவருடைய தம்பி நீங்க, நாம இல்லாம இருந்தா நல்லாயிருக்குமா? என்று கேட்க, அதில்லை வர்ஷினி அங்கே போனா யாராவது உன்னை பார்த்து இன்னும் ஏன் குழந்தை பெத்துக்கலனு உன் மனசு கஷடப்படும்படி பேசினா என்னாலே தாங்க முடியாது வர்ஷினி, அதனால் தான் நான் தயங்குறேன் என்றதும், வர்ஷினிக்கு இந்த மூன்று வருடத்தில் சற்று முதிர்ச்சி வந்திருந்தது. முன்பெல்லாம் குழந்தையை நினைத்து மறுகும் அவளுக்கு இப்போது அதனை தாங்கி கொல்லும் மனப்பக்குவமும் வந்திருந்தது. தன்னை சுற்றி இருப்பர்வர்களை பற்றிய புரிதலும் இருந்தது. அதனால் அவள், வெளியிலே இருப்பவங்க அப்படி தான் பேசுவாங்க . அவங்களுக்காக நாம் நம்ம சந்தோசத்தை இழக்க முடியாது . அவங்களுக்கு ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கணும். படிக்கற புள்ளையா இருந்தா எப்படி படிக்கிறே? எவ்வளவு மார்க் எடுத்தேன்னு கேப்பாங்க, அந்த புள்ளை கல்லூரிக்கு போகும் போது எந்த குரூப் எடுக்க போற? டாக்டர்க்கு படிக்கப்போறியா அல்லது என்ஜினீயர்க்கு படிக்கப் போறியானு அந்த புள்ளையின் படிப்பை இவர்களே தீர்மானிப்பார்கள். படிப்பு முடிச்சுதுனா எப்ப கல்யாணம்னு நச்சரிப்பாங்க, கல்யாணம் ஆகிடுச்சுனா குழந்தை எப்போன்னுவாங்க ? குழந்தை பிறந்துச்சின்னா மறுபடியும் அதே பழைய கேள்வி குழந்தை எப்படி படிக்குது எவ்வளவு மார்க் எடுக்கும்னு இப்படியே கேள்விகள் நம்மை சுத்தி சுத்தி வந்துட்டேதான் இருக்கும். அவங்கள பார்த்து பயந்த நாம நம்மை கூட இருக்கிறவங்களை, நம்ம மேல அன்பா பாசமா இருக்கிறவங்களை நாம கஷ்டப்படுத்த வேண்டியிருக்கும் நாம இந்த தடவை கண்டிப்பா இந்தியா போகணும் அத்தான் என்று வர்ஷினி கூறியதை கேட்டதும் கௌரி திகைத்து போய் அவளை பார்த்தான் . இங்கு வந்த புதுசில் இருந்த வர்ஷினியா இவள், இவளுக்கு எப்படி இத்தனை முதிர்ச்சி வந்தது என்று நினைத்து கொண்டு அவளை பார்த்து உடலை வளைத்து தங்கள் உத்தரவு மகாராணி என்று கூறியதும் வர்ஷினி அவனை பார்த்து புன்னகை புரிய அவனும் அவளை அனைத்துக் கொண்டான்.
மூன்று வருடம் கழித்து கௌரியும் வர்ஷினியும் இந்தியா வந்தனர். கவிதாவுக்கும் மாசிலாமணிக்கும் அவர்களை பார்த்ததும் அத்தனை மகிழ்ச்சி. அவர்களை ஆர தழுவி வரவேற்றார்கள். வர்ஷினியின் தந்தை கரணும் அங்கிருந்தார், வர்ஷினி ஓடி சென்று அவர் காலில் விழுந்து விட்டாள். என்னை மன்னித்து விடுங்கள் அப்பா. உங்களை புரிஞ்சுக்காம உங்கள் மேல கோபம் பட்டுட்டேன். கௌரி என்னை நல்லா பாத்துகிறார் அப்பா என்று கண்கலங்கி சொல்ல கரணும், எனக்கு தெரியும்மா, கௌரி உன்னை நல்லா பாத்துபாருனு. மன்னிப்பு எல்லாம் வேணாம்மா, உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்பே வர்ஷினி என்று அவளை எழுப்பி கட்டி கொண்டார். கௌரியும் வர்ஷினி மதுமதியின் இரண்டு குழந்தைகளுக்கும் பல வித விளையாட்டு பொருட்களை வாங்கி குவித்திருந்தனர். மதுமதியின் இளைய மகனான கவிஷை கையில் வைத்து கொஞ்சி கொண்டும், மாதேஷுடன் விளையாடி கொண்டும் இருந்தாள். அந்த இரு குழந்தைகளின் அழகில் தன்னை மறந்து அவர்களோடு பொழுதை கழித்தாள். இப்போதெல்லாம் வர்ஷினிக்கு குழந்தைகளை கண்டு தனக்குள் ஏக்கம் வருவதில்லை ஏனென்றால் தனக்கும் ஒரு குழந்தை பிறக்கும் என்று முழுவதுமாக நம்பி தன்னை தேற்றிக்கொண்டிருக்கிறாள். இதற்கு காரணம் கௌரி தான். அவன் தான் அவளுக்குள் நம்பிக்கை ஊற்றை வர வைத்துக்கொண்டிருந்தான்.
திருத்தணி முருகன் கோவிலில் உற்றவர் உறவினர் புடை சூழ காதணி விழா இனிதே நடந்துகொண்டிருந்தது. கவிஷ் மிகவும் அழுததால் வர்ஷினி அவனை சமாதானம் படுத்த வெளியே தூக்கி கொண்டு வந்தாள் . சாப்பிடும் அறைக்கு பக்கத்தில் நின்று குழந்தைக்கு வேடிக்கை காட்டி கொண்டு இருந்தாள். அப்போது அந்த சாப்பிடும் அறையில் இருந்து கவிதாவின் உறவினர் ஒருவர் பேசுவது வர்ஷினியின் காதில் தற்செயலாக கேட்டது.
அந்த பெண்மணி கவிதாவிடம், ஏன் கவிதா, உன் பெரிய மருமக ஒன்னுக்கு இரண்டு சிங்கங்களை பெத்து கொடுத்துட்டா, ஆனா உன் சின்ன மருமகள் கல்யாணம் ஆகி மூணு வருஷத்துக்கு மேல ஆகுது. இன்னும் ஒன்னும் இல்லை. உன் மருமகளை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனீங்களா? உன் புள்ளைக்கும் வயசாகிறது இல்ல , அவனும் காலாகாலத்தில் ஒரு குழந்தைக்கு அப்பா ஆகா வேண்டாமா! நீ சரினு சொல்லு, என் சொந்தத்திலேயே நல்ல பொண்ணுங்க இருக்கு, இந்த வர்ஷினியை டிவோர்ஸ் பண்ணிட்டு நம்ம கௌரிக்கு வேறு நல்ல பொண்ணா பார்த்து முடிச்சிடலாம், நான் சொல்ற பொண்ணை உன் புள்ளைக்கு கட்டிவச்சா ஒரே வருஷத்திலே உன் சின்ன பையன் அப்பா ஆயிடுவான் பாரு என்று சொன்னதும் வர்ஷினிக்கு மனம் பிசைந்தது. இவங்க எல்லாம் மனுஷங்களா, இப்படி எல்லாம் கூடவா மனிதர்கள் இருப்பார்கள், இவங்களுக்கு எல்லாம் மனசுனு ஒன்னு இருக்கிறதாவே தெரியலையே! இவர்கள் வீட்டு பெண்ணாய் இருந்தால் இப்படி தான் பேசுவார்களா? என்று மருகினாள். இதற்கு அத்தை என்ன சொல்லுவார்கள் என்று பயமும் ஆவலும் கலந்து மேற்கொண்டு உரையாடலை கேட்க ஆரம்பித்தாள்.
