வியர்த்து வழிய அவனையே பயந்த பார்வை பார்த்துக்கொண்டு தன் கால்களை குறுக்கி அமர்ந்திருந்தாள் நித்யா.
அவளைப் பார்த்து அந்த இடமே அதிரும் வண்ணம் சத்தமாக புன்னகைத்தவன், “என்ன மேடம் கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டீங்க போலருக்கே” என்றான் நக்கல் குரலில்.
அவனின் பேச்சும், பார்வையும் எதுவோ சரியில்லை என்று உணர்த்த வெளிப்படையாகவே வெடவெடக்க தொடங்கி விட்டாள்.
“ஹேய், இவ்வளவு எல்லாம் பயப்படனும்னு இல்லம்மா.. இப்பயும் நான் அதே அஜய் தான். உன் பின்னாடி ரெண்டு வருஷமா லவ் பண்றேன்னு சுத்துனேனே நாய் மாதிரி, அதே அஜய் தான்!” என்றான் அழுத்தமாய்.
அவனின் கண்கள் எல்லாம் சிவப்பேறி கிடக்க, அவள் பயம் கொள்ள அதுவே போதுமானதாய் இருந்தது.
“உனக்கு என்ன வேணும்?” என்றாள் திக்கி திணறி பயந்தபடி.
“ஏன் உனக்கு தெரியாது எனக்கு என்ன வேணும்னு? ரெண்டு வருஷமா உன் பின்னாடி நாய் மாதிரி சுத்தும் போதெல்லாம் நான் கேட்டது ஒன்னே ஒன்னு தான். நீ.. நீ தான் எனக்கு வேணும்! உன் பின்னாடி பைத்தியமா சுத்துறேன்டி. ஆனா, நீ கொஞ்சம் கூட என்னை பத்தின எண்ணம் இல்லாம எவனையோ கல்யாணம் பண்ணிக்க ரெடியாகிட்ட இல்ல” என்றவனின் பார்வையே இப்பொழுது அத்தனை பயங்கரமாய் இருந்தது.
“நான் தான் பிடிக்கலன்னு சொல்லிட்டேனே”.
“அப்போ என்னோட லவ்? அதுக்கு என்ன பதில்? உன்ன உண்மையா காதலிச்சேன். உன்ன மட்டும் தான் இந்த ரெண்டு வருஷமா நினைச்சுகிட்டு இருக்கேன். என்னை அப்படியே விட்டுட்டு வீட்ல பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொன்னா, எங்கிருந்தாலும் வாழ்கனு அட்சதைய தூவிட்டு போக நான் என்ன அம்மாஞ்சியா.. நான் எவ்வளவுக்கு எவ்வளவு உன்கிட்ட நல்லவனா நடந்துக்கிட்டேனோ, அதே அளவு ரொம்ப ரொம்ப மோசமானவன், கேடு கெட்டவன். நீ எனக்கு வேணும்.. அதுக்கு நான் எந்த எல்லைக்கும் போவேன்”.
அவனின் பார்வையே அவன் கூறுவதை நிச்சயம் செய்து காட்டுவேன் என்ற உறுதியை தேக்கி இருந்தது.
“இங்க பாரு, வீட்ல பார்த்ததுக்காக மட்டும் நான் அவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கல. நானும், அவரும் ரொம்ப வருஷமாவே லவ் பண்றோம்”.
அவள் கூறியதைக் கேட்டு சத்தமாக சிரித்தவன், “அப்போ என்னோட லவ்? அதுக்கு என்ன வேல்யூ? நீ யாரை வேணும்னாலும் லவ் பண்ணி இருக்கலாம். எனக்கு அதை பத்தி எல்லாம் எந்த கவலையும் இல்ல. ஆனா, கல்யாணம்.. அது என் கூட மட்டும்தான் நடக்கணும்” என்று அழுத்தமாக கூறினான்.
அவனின் பேச்சும், பார்வையும், செயல்களுமே அத்தனை சைக்கோ தனமாக தெரிந்தது.
விருப்பம் இல்லாதவளை பிடித்து வைத்துக்கொண்டு என்னை தான் திருமணம் செய்தாக வேண்டும் என்று கூறினால், அவளும் என்ன தான் செய்வாள்.
இவனிடமிருந்து தப்பிக்க ஏதேனும் வழி கிடைக்காதா என்ற அச்சத்தோடு அமர்ந்திருந்தாள்.
சட்டென்று எழுந்து அவள் அருகில் வந்தவன். தன் கரத்தை அவள் தலையில் வைக்கப் போகவும், பட்டென்று அவனின் கரத்தை தட்டிவிட்டாள்.
“ஓ! உனக்கு இவ்வளவு கோபம் எல்லாம் வருமா.. ரொம்ப சீன் போடாம படுத்து தூங்கு. இன்னைக்கு நைட் ஃபுல்லா நீ என் கூட தான் இருக்கணும்”.
அவனின் வார்த்தையில் அதிர்ந்து விழிப் பிதுங்கி அவனைக் கண்டாள்.
“என்ன பாக்குற? உன்ன ரொம்ப லவ் பண்ணிட்டு அவ்வளவு சீக்கிரம் எவனோ ஒருத்தனுக்கு உன்ன தூக்கி கொடுத்துடுவேனா.. இன்னைக்கு முழுக்க நீ இங்க தான். ஆனா பயப்படாத, என் சுண்டு விரல் கூட உன் மேல படாது. இங்க நீ சேஃபா இருக்கலாம். நாளைக்கு காலையில நானே உன்ன கொண்டு போய் உன் வீட்ல விட்டுட்டு வருவேன். அதுக்கப்புறம் இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு பாக்கலாம்”.
“நீ பண்றது எவ்வளவு பெரிய தப்புன்னு உனக்கு புரியலையா.. விருப்பம் இல்லாதவங்கள இப்படி கம்பெல் பண்ணி கஷ்டப்படுத்துறதால உனக்கு என்ன கிடைக்கப் போகுது?”.
“நீ தான்! நீ தான் கிடைக்க போற! ஒரு நைட் நீ என் கூட இருந்துட்டு வந்தேன்னு தெரிஞ்சா, உனக்கு நிச்சயம் பண்ணியிருக்க மாப்பிள்ளை தல தெறிச்சு வேண்டாம்டா சாமி இப்படி ஒரு பொண்ணுன்னு ஓடிடுவான். வேற எவனும் உன்ன கட்டிக்க வர மாட்டான். வேற வழி இல்லாம, நீ என்னை தான கட்டியாகணும்” என்று அத்தனை குரோதமாக கூறினான்.
“என் அண்ணனுங்களுக்கு தெரிஞ்சா உன்ன கொன்னே போட்டுடுவாங்க” என்று அழுகையும் ஆத்திரமுமாய் கத்தினாள்.
“அப்படியா! அதையும் பார்க்கலாம். வீட்டுக்கு வரப் போற வருங்கால மாப்பிள்ளை மேல கை வைக்கிற அளவுக்கு உன் அண்ணனுங்களுக்கு தைரியம் இருக்கானு நாளைக்கு காலையில பாக்கலாம் பேபி” என்று அவனும் அவளின் கன்னத்தில் தட்டி விட்டு அதே இடத்தில் போடப்பட்டிருக்கும் நாற்காலியில் சென்று அமர்ந்து விட்டான்.
விடிய விடிய துளி உறக்கம் இன்றி அழுது கொண்டே அமர்ந்திருந்தாள். இது என்ன மாதிரியான காதல்.. அவனின் செயலே எத்தனை சைக்கோ தனமாக இருக்கின்றது என்று அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.
எத்தனை சுயநலமிக்கவனாய் இருக்கிறான். தான் வேறு ஒருவனை விரும்புவது தெரிந்தும், அவனின் சுயநலத்திற்காக தன்னை அடைய இத்தனை கீழ்தரமாக நடந்து கொள்கிறானே என்று அவனைப் பார்க்க பார்க்க அருவருப்பாக இருந்தது.
யஷ்வந்தின் வீட்டிலும் அன்றைய இரவு ஒருவருக்கும் பொட்டு தூக்கம் இல்லை. தாயும், தந்தையும் அழுது கொண்டே இருக்க. சேரனும் யஷ்வந்த்தும் தெரிந்த இடங்களில் எல்லாம் விசாரித்துக் கொண்டு அலைந்து கொண்டிருந்தனர்.
பவித்ராவும், இந்துவும் தான் வீட்டில் அவர்களுக்கு ஆறுதலாய் பேசிக் கொண்டிருந்தனர்.
அதிகாலை ஏழு மணி, அவன் கூறியது போலவே அவளை அழைத்துக்கொண்டு அவர்களின் வீட்டு வாயிலுக்கு வந்து நின்றான். அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் இவர்களின் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
நித்யாவிற்கு யாரையும் நிமிர்ந்தும் பார்க்க முடியவில்லை. கண்களில் கண்ணீர் அருவியென வழிய, தலைகுனிந்தபடியே வீட்டிற்குள் நுழைந்தாள்.
தங்கள் மகளை சற்றும் எதிர்பாராத பரமேஸ்வரியும், திருமூர்த்தியும் அதிர்ந்து போய் பார்க்க.
“அம்மா!” என்ற கூவலுடன் ஓடி வந்து பரமேஸ்வரியை அனைத்துக் கொண்டாள் நித்யா.
அவளின் பின்னோடே வீட்டிற்குள் நுழைந்தவன், “உங்க பொண்ணு நேத்து முழுக்க என் கூட தான் கம்பெனி கொடுத்துட்டு இருந்தா. சீக்கிரம் கல்யாணத்துக்கு தேதி பிக்ஸ் பண்ணுங்க தாலி கட்ட வரேன்” என்றவனோ யாரும் சுதாரிப்பதற்குள்ளாகவே வெளியேறி இருந்தான்.
அவன் கூறியதை உள்வாங்கவே அனைவருக்கும் சற்று நேரம் பிடித்தது.
யஷ்வந்த்தும், சேரனும் இன்னும் வீடு வந்து சேராமையால் அவர்களுக்கு இங்கே நடந்த விஷயம் எதுவும் எட்டவில்லை.
சேரனை தொடர்பு கொண்ட இந்து இங்கே நடந்தவற்றை கூறி உடனே வீட்டிற்கு வருமாறு அழைக்கவும். அடுத்த அரை மணி நேரத்தில் அவர்களும் வீடு வந்து சேர்ந்தனர்.
நித்யாவை தன்னிலிருந்து பிரித்த பரமேஸ்வரி அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டவர், “என்னடி காரியம் பண்ணிட்டு வந்திருக்க? என்ன பண்ணிட்டு வந்திருக்க? அவன் என்ன சொல்லிட்டு போறான். யார் அவன்? நேத்து முழுக்க அவனோட தான் இருந்தியா?” என்று மாற்றி மாற்றி கேட்டு அவளின் கன்னங்கள் இரண்டிலும் மாறி மாறி அறைந்திருந்தார்.
அவளோ அழுகைனோடு, “அம்மா அவன் சொல்றது எல்லாமே பொய். நான் எந்த தப்பும் பண்ணலமா” என்று கதறிக் கொண்டிருந்தாள்.
“நேத்து ராத்திரி எங்க இருந்த.. அவனோடவா?”.
இதற்கு என்னவென்று பதில் கூறுவாள். ‘ஆமாம்’ என்பது போல் தலையசைத்தாள்.
அவளின் முதுகில் அடித்துக் கொண்டே இருந்தவர், “இப்படி பண்ணிட்டியே டி. குடும்ப மானத்தையே வாங்கிட்டியே.. கமலேஷ் கூட கல்யாணத்துக்கு பேசி முடிச்சுட்டு இப்படி வந்து நிக்கிறியே” என்று கூறிக் கொண்டே அடித்தார்.
அவரிடமிருந்து நித்யாவை பிரித்து எடுத்த பவித்ரா, “அவள கொஞ்சம் பேச விடுங்களேன். அவ என்ன சொல்ல வரான்னு கேளுங்க” என்றாள் நிதானமாய்.
அவனின் வார்த்தையில் பவித்ராவிற்கு துளியும் நம்பிக்கை இல்லை. கமலேஷை காதலித்து விட்டு ஏன் வேறொருவனுடன் போகப் போகிறாள் என்று சந்தேகமாய் இருந்தது.
நேற்று இரவு நடந்த மொத்தத்தையும் இவர்களிடம் கூறி முடித்தாள் நித்யா.
அதற்குள் வாசலில் வேறு அக்கம் பக்கத்தினர் கூடி விட்டிருந்தனர். அவன் கூறியதற்கும், இவள் கூறியதற்கும் முரணாக இருக்க யாருக்கும் என்ன கூறுவது என்று தெரியவில்லை.
“ஆனா, அந்த பையன் வேற மாதிரி சொன்னானே” என்றார் பரமேஸ்வரி.
அந்நேரம் சரியாக அண்ணன்கள் இருவரும் வீட்டிற்குள் வர.
“டேய் சேரா இங்க என்ன நடந்துச்சுன்னு தெரியுமா” என்றவர் அவர்களிடம் நடந்த மொத்தத்தையும் கூறினார்.
இருவருக்குமே அப்படி ஒரு அதிர்ச்சி.
சட்டென்று சுதாரித்த யஷ்வந்த் வீட்டின் வாசல் கதவை சாற்றிவிட்டு உள்ளே நுழைந்தான்.
சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் சப்பென்று ஆகிவிட. அவரவர் வீட்டிற்கு தங்களுக்குள்ளேயே ஏதேதோ கிசுகிசுத்தப்படி சென்றனர்.
கமலேஷின் பெற்றோர் அப்படியே இடிந்து போய் அமர்ந்து விட்டனர்.
“ரெண்டு வருஷம் கல்யாணத்தை தள்ளி வச்சது தான் தப்பா போச்சு. பேசி முடிச்சதுமே கல்யாணத்த முடிச்சிருந்தா இன்னைக்கு இவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்காது” என்று திருமூர்த்தி வேறு ஒரு புறம் புலம்ப.
“இவ்வளவு நடந்த பிறகு என்னன்னு இந்த கல்யாணத்தை நடத்த முடியும்” என்று பரமேஸ்வரி வேறு தன் பங்கிற்கு அழுதார்.
பக்கத்து வீட்டு பெண்மணி சாரதா, “அந்த பையன் யாரு என்னன்னு விசாரி பரமு, நல்ல பையனா இருந்தா அவனுக்கே கட்டி வைக்கிறது தான் சரியா இருக்கும். இவ்வளவு நடந்த பிறகு வேற என்ன செய்ய முடியும்” என்றார் தன் பங்கிற்கு.
“ஐயோ! நான் தான் எந்த தப்பும் நடக்கலன்னு சொல்றேனே.. என்னை நீங்க யாருமே நம்ப மாட்டீங்களா.. அவன் அவனோட என்னை வச்சிருந்தது உண்மை தான். இந்த கல்யாணத்த நிறுத்துறதுக்காக தான் அவன் அப்படி எல்லாம் செஞ்சுருக்கானே தவிர, எந்த தப்பும் நடக்கலமா.. ஏன் என்னை நம்ப மாட்டேங்குறீங்க?” என்று தன் தலையில் அடித்துக் கொண்டு கதறினாள்.
“தப்பே நடக்கலனாலும், இதை எப்படி ஏத்துக்க முடியும். எல்லாரும் தப்பு தப்பா பேசுவாங்க” என்றார் சாரதா.
“அவனோட சுயநலத்துக்காக, தான் நெனச்சது நடக்கணும்ன்றதுக்காக அவன் என் தங்கச்சிய கொண்டு போய் அவனோட வச்சிருந்தா, உடனே அவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கனும்னு சொல்றீங்களா ஆன்ட்டி. இவ்வளவு அசிங்கமா நடந்திருக்கவன் எப்படி நல்லவனா இருப்பான்னு எதிர்பாக்குறீங்க” என்றான் யஷ்வந்த்.
“வெளியில் இருந்து பார்க்கிறவங்க எல்லாருக்கும் இப்ப தப்பு நடந்த போல தானே யாஷ் தெரியும். ஒவ்வொருத்தர்கிட்டயும் நாம போய் விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா?”.
அவரின் வார்த்தை யாருக்கும் உவப்பாக இல்லை. குடும்பமே நிலைந்துக் குலைந்து போய் இருந்தது.
அதன் பிறகு, பவித்ராவின் பேச்சை கேட்டவர்கள், அவளுக்கு இத்தனை பேச வருமா என்று வாயைப் பிளந்து தான் அவளை பார்த்தனர்.
