தனுஜா பயத்தில் நடுங்குவதை பார்த்ததும், அவளை இழுத்து தன் முதுகுக்கு பின்னால் ஒளித்துக்கொண்டாள் பூர்ணிமா. ஒரு தாய்க் குருவி தன் குஞ்சைப் பாதுகாக்கப் பருந்தின் முன்னே சிறகை விரித்து நிற்பது போல இருந்தது அவளது அந்தத் தோரணை.
தனுஜாவின் துடுக்கான பேச்சைக் கேட்டு, உதட்டைக் கடித்து சிரிப்பை அடக்க முயன்றிருந்த பாலாஜியும்,
‘மாட்டுனியா? இன்னிக்கி உன்னை இங்கேயே குழி தோண்டி புதைக்க போறான் என் அண்ணன்!’ எனும் ரீதியில் நின்றிருந்த ஆர்யாவும், பூர்ணிமாவின் செயலை ஒரு நொடி புருவம் உயர்த்தி பார்த்தனர்.
சூர்யா தன் கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டிக்கொண்டு, விரைப்பாக நின்றான். அவனது பார்வை தனுஜாவிலிருந்து விலகி, பூர்ணிமாவின் முகத்தில் நிலைத்தது.
“ஏன் முறைக்கிறீங்க? நாங்க சும்மா வேற விஷயத்தை பத்தி பேசிக்கிட்டு இருந்தோம். நீங்க மூணு பேரும் எதுக்காக இங்க வந்தீங்க?” என்று பொத்தாம் பொதுவான ஒரு கேள்வியை அவன் முன் வைத்தாள்.
பாலாஜி, “ஒரு முக்கியமான விஷயம் தனுஜாட்ட பேசணும்.”
அவளோ, தலையை மட்டும் வெளியே நீட்டி, என்ன என்பது போல அவனிடம் சைகையால் கேட்டாள்.
“நான் இல்ல, பாஸ்தான் அந்த வேலையை உங்கிட்ட ஒப்படைச்சா சரியா இருக்கும்னு சொன்னாரு. அவருட்டயே கேட்டுக்க” என்று கூறவும், திரும்ப சத்தம் இல்லாமல் பூர்ணியின் பின்னால் ஒளிந்து கொண்டாள். கோபம் வந்துவிட்டால், அவனை கடவுளாலும் கட்டுப்படுத்த முடியாது என்று அவளுக்கும் தெரியுமன்றோ!
“என்னனு சொல்லுங்க, அவ பண்ணுவா…” என இப்போதும் பூர்ணிமா தான் அவளுக்காக பேசினாள்.
சூர்யா, “எனக்கு அடுத்த வாரம் ஒரு சக்சஸ் மீட் இருக்குது. பெரிய டிவி சேனல்ல லைவ்ல டெலிகாஸ்ட் பண்ண போறாங்க. வேர்ல்டு கப்ல விளையாடின எல்லா ப்ளேயர்ஸும் வருவாங்க. ட்ரடிஷனல் டிரஸ்னு ஏற்கனவே சொல்லிட்டாங்க. எனக்கு யுனிக்கா ஒரு புது மாடல் டிரஸ் வேணும். அதுக்குத்தான் ஆர்யாவையும் தனுஜாவையும் இன்னைக்கு இங்க வரச்சொன்னது…”
பொறுப்பு என்றதும் தங்கள் குழந்தைத்தனத்தை மூட்டை கட்டி வைத்த இருவரும், “கண்டிப்பா பண்ணிடலாம்” என்றனர் ஒரு சேர.
“நான் இன்னும் சொல்லி முடிக்கல. மூணு நாளுக்குள்ள, ஆளுக்கு பத்து டிசைன் ரெடி பண்ணி ஆகணும். வேற ஏதாவது டிசைனரோட ட்ரெண்டிங் கலெக்ஷன்ல இருந்து காப்பி அடிச்சீங்கன்னு தெரிஞ்சது, கொன்னு போட்ருடுவேன்…” எனக்கூற, எச்சில் விழுங்கினான் ஆர்யா.
சூர்யா எந்த அளவுக்கு சிறந்த விளையாட்டு வீரனோ, அதே அளவுக்கு பக்கா பிஸ்னஸ் மேன் கூட! ஏழு வருடங்களுக்கு முன்னால் தனக்கு சொந்தமாக, ப்ரைடு ப்ரைவேட் லிமிட்டடு! எனும் ஆடையகத்தை உருவாக்கினான். அதன் பொருட்டே தன் தம்பி ஆர்யாவை, பேஷன் டிசைனிங் படிக்க வைத்தான். அங்கே ஆர்யாவுக்கு வகுப்பு தோழியாக கிடைத்தவள்தான் தனுஜா. சும்மா ஆடும் மாட்டுக்கு சலங்கை கட்டியது போல் ஆனது அவர்கள் நட்பு.
துடுக்குத்தனம் இருந்தாலும், வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் தனுஜாவைக்கூட ஒருவகையில் சேர்த்து விடலாம். ஆர்யாவுக்கு, அந்த பொறுப்பும் கூட இல்லை. அப்போதைக்கு மனதில் தோன்றும் டிசைன்களை உருவாக்கி தந்துவிட்டு, அண்ணனிடம் காசை வாங்கிக் கொண்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிடுவான். காசு தீர்ந்ததும் திரும்ப வந்து நிற்பான்.
பல நேரங்களில் பணத்திற்காக, ஏற்கனவே உருவாக்கப்பட்டு சந்தையில் இருக்கும் டிசைன்களில் தன் பெயர் போட்டு கொடுத்து விட்டு ஓடுவதும் உண்டு. பாலாஜி பொறுப்பாக இருக்கும் காரணத்தால், இதுவரை அவன் செய்யும் பிழைகள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டுவிடும்.
தனுஜாவுக்கு டிசைனிங்கில் ஆர்வம் அதிகம். படிப்பை முடித்ததுமே சூர்யாவின் கம்பெனியில் சேர்ந்துவிட்டாள். அவன் அவசரம் புரிந்து, கைவசம் எல்லாவிதமான உடைகளுக்கும் சில டிசைன்களை தயாராக வைத்திருக்கும் புத்திசாலியும் கூட. இப்போதும் அவளிடம் ஐந்து டிசைன்கள் ரெடியாக இருக்கிறது.
எனவே, “பாஸ், நான் ரெடி பண்ணி தர்றேன். பட் இந்த வேலைக்கு எங்களுக்கு என்ன பரிசு தருவீங்கனு சொன்னா, எங்களுக்கும் கொஞ்சம் சுவாரசியமா இருக்கும்.”
“ஒரு லட்சம், ப்ளஸ் ஒன் வீக் லீவ். ஓகேவா?” என்று கேட்டதும், ஆர்யா அவளுக்கு முன்பாக சம்மதம் சொன்னான்.
தனுஜா, “எனக்கு ஒரு வாரம் லீவெல்லாம் வேண்டாம், ஒரு நாள் போதும். இந்த வீக் எண்டுலயாவது இந்த உம்மணாமூஞ்சிய எங்கூட டேட்க்கு அனுப்பி வைங்க. ப்ரைஸ் பணத்தைக் கூட பாதியாக குறைச்சுக்க ரெடியா இருக்கேன்.”
சூர்யா யோசிக்கவே இல்லை…
“ஓகே!” என்று கூறிவிட்டான்.
“மச்சான்?” என்று கத்த,
சூர்யாவோ, ‘அவ ஜெயிச்சாத்தான?…’ என்பது போல பதில் பார்வை பார்த்தான். பாலாஜிக்கு போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது.
வந்தவேலை முடிந்தது எனும் ரீதியில் வேக எட்டுக்களோடு சூர்யா நடக்க, “போட்டிக்கு நானும் வரலாமா?” என்றாள் பூர்ணிமா.
பாலாஜி, “இது நீ நினைக்கிற மாதிரி, டிரஸ் தைக்கிற வேலை கிடையாது பூர்ணி. டிரஸ் டிசைனிங்! கஷ்டமானது…” என்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே,
“சேர்த்துக்க” என்று கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டான் சூர்யா.
பாலாஜி மூவரையும் சூர்யாவின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான். பூர்ணிமாவுக்கு அதன் அழகை காண இரண்டு கண்கள் போதவில்லை. நவீனக் கட்டடக்கலை, கண்ணாடியால் ஆன சுவர்கள் என அவ்விடமே மிகப்பிரமாண்டமாக காட்சியளித்தது. சூர்யாவின் இத்தனை வருட உழைப்பின் வெற்றியை, அந்த அலுவலகம் மறைமுகமாக பறைசாற்றுவதாய் எண்ணிக்கொண்டாள் பேதை.
அவளது முகம் காட்டும் நவரசத்தையும் பார்த்த பாலாஜி, “என்ன பூர்ணிமா, எப்படி இருக்கு?” என்று மெல்லிய புன்னகையுடன் கேட்டான்.
“ரொம்ப… ரொம்ப பெருசா இருக்கு. உள்ள எத்தனை பேர் இருப்பாங்க?” என ஆச்சரியம் விலகாமல் இழுத்தாள்.
“சுமாரா ஐநூறு பேர். இது வெறும் ஆபீஸ் பில்டிங் மட்டும்தான். இதோட மெயின் ஃபேக்டரி சிட்டி அவுட்டர்ல இருக்கு! அங்க நாலாயிரம் பேருக்கு மேல வேலை செய்றாங்க…” என்று பாலாஜி விவரிக்கவும், பூர்ணிமாவின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர் ததும்பியது.
சூர்யா ஒரு நிறுவனம் நடத்துகிறான் என்று அவளுக்குத் தெரியும். ஆனால், அது இவ்வளவு பிரம்மாண்டமாக வளர்ந்து, பல்லாயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
நான்கு பேரும் உள்ளே நுழைந்ததும், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஊழியர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்தனர். அவர்கள் இடத்தைக் கடந்து செல்கையில், ஒரு சில வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கான்பரன்ஸ் ஹாலில் இருந்து மீட்டிங் முடிந்து வெளியே சென்றனர்.
“வெளிநாட்டுக்கு எல்லாம் கூட எக்ஸ்போர்ட் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா பாலாஜி?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.
“ஆமா பூர்ணி… எப்பவோ ஆரம்பச்சாச்சு. சொல்லப்போனா இப்போ உள்நாட்டை விட வெளிநாட்ல இருந்துதான் நமக்கு நிறைய ஆர்டர் வருது. அதுலயும் லண்டன்ல சூர்யாவோட ‘ப்ரைடு’ பிராண்டுக்கு நல்ல வரவேற்பு இருக்கு.”
“அப்ப மாச வருமானமே லட்சத்துல இருக்கும்ல?” என்று அப்பாவியாகக் கேட்டாள்.
சின்னச் சிரிப்போடு தன் கண்ணாடி நுனியைச் சரி செய்து கொண்டவன், “இல்ல… கோடில இருக்கு!” என்றான் ரகசியமாக.
பூர்ணிமாவின் முகம் இன்னும் பிரகாசமானது. தன் சூர்யா இன்று இவ்வளவு உயரத்தில் இருப்பதை எண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்தாள். ஆனால், அவளுக்குப் பின்னால் இருந்த இரண்டு ஜீவனுக்கும் முகம் வாடிப் போயிருந்தது.
ஆர்யா, “என்ன லாபம் வந்து என்ன பிரயோஜனம்? எங்களுக்கு சம்பளம் வெறும் இருபதாயிரம்தான். இந்த காலத்துல இருபதாயிரம் எந்த மூலைக்கு பத்தும்?”
தனுஜாவும் அவனுடன் சேர்ந்து கொண்டு, “ஆமா! எனக்கெல்லாம் ஒரு நாளைக்கு ஸ்நாக்ஸ் செலவே ஆயிரம் ரூபாய்க்கு மேல ஆயிடுது. இருபதாம் தேதிக்கு மேல வெக்கமே இல்லாம அப்பா பர்ஸ்ல இருந்து பணத்தை திருடுறேன். என்னைக்கு இன்கிரிமென்ட் வந்து, நாங்க எப்போ வீடு காரெல்லாம் வாங்குறது?” என்று பின்பாட்டுப் பாடினாள்.
பாலாஜி சற்றே கடுப்புடன், “அவனாவது சொத்துக்கு சொந்தக்காரன். அண்ணன் காசு தரலியேனு அழுறான். நீ ஏன் கூட சேர்ந்து அழுற? உனக்கும் சொத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?”
தனுஜா, “சம்பந்தம் இல்லனு உனக்கு யார் சொன்னா? அவன் என் நண்பன், என் உயிர், நா ஜீவன்லு, நா ப்ரேமம்… என் நண்பன் போட்ட சோறு. தினமும் தின்னேன் பாரு…” என்று பாட,
ஆர்யா அவளது தோளை அணைத்துக் கொண்டு, “நட்பைக்கூட கற்பைப்போல எண்ணுவேன்…” என்று ஓவர் ஆக்டிங் கொடுத்தான்.
தலையில் அடித்துக் கொண்ட பாலாஜி, “லூசு மாதிரி பேசாதடி, என் வாயில நல்லா வந்துடும்! கொடுத்த காசுல ஒத்த பைசா மிச்சம் வைக்காம, தீவனமா நொறுக்குற… சரியான உதவாக்கறை! அப்புறம் இந்த பைத்தியம்… எப்பப் பாரு பொண்ணுங்களோட கூத்தடிச்சுட்டு, கற்பு நட்புனு உளறுது. இது ஒரு உதவாக்கறை. உங்களுக்கு ரஜினி பாட்டு ஒன்னுதான் கேடு. மரியாதையா உங்க கேபினுக்கு ஓடிடுங்க!” என்று திட்ட, இருவரும் குடுகுடுவென தங்கள் கேபினுக்கு ஓடினார்கள்.
அப்போதும் கூட ஆர்யா, “நேத்து உன் ஆளு நாட்டாமை படம் பார்த்தானா என்ன?” என்று கலாய்ப்பது பூர்ணிமாவின் காது வரைக்கும் கேட்டது.
அவர்களின் குறும்பைப் பார்த்து இதழ் பிரித்துச் சிரித்த பூர்ணிமா, “பாவம், இன்னும் குழந்தையா இருக்காங்க. அவங்களை ஏன் திட்டுறீங்க?” என்றாள் பாலாஜியிடம்.
“உனக்குத் தெரியாது பூர்ணி… ரெண்டு பேருமே செம கேடிங்க. சம்பளமா இருபது கோடி கொடுத்தாலும், அப்பவும் இப்படித்தான் பஞ்சப்பாட்டுப் பாடுவாங்க. நீ அவங்ககூட இருக்கும்போது கொஞ்சம் உஷாரா இருந்துக்கோ, இல்லன்னா உன்னையே தின்னு ஏப்பம் விட்ருவாங்க…” என்று எச்சரித்தான்.
பூர்ணிமா லேசாகத் தலையை சாய்த்து, “அது இவங்களால முடியாது பாலாஜி… அதுக்குனுதான் ஒருத்தன் இருபத்தி நாலு மணி நேரமும் கண் கொத்தி பாம்பா பார்த்துட்டு இருக்கானே…” என்று சூர்யாவை மனதிற்குள் நினைத்து, புலம்பிக்கொண்டே அந்த கேபினை நோக்கி நடந்தாள்.
பாலாஜி மேற்கொண்டு எதுவும் சொல்லி அவள் மனதை காயப்படுத்தவில்லை. ஆளுக்கொரு டிராயிங் புக்கை கொடுத்தான்.
“ஈவினிங் வரைக்கும் நிறைய டிசைன் பண்ணுங்க. அதுல உங்களுக்கு எது பெஸ்டா தோணுதோ, அதை என்கிட்ட கொண்டு வந்து காட்டுங்க” என்று கூறிவிட்டு தான் வேலையை பார்க்க போய்விட்டான்.
பூர்ணிமா தன் மனதில் இருந்த ஆடையின் டிசைனை நேர்த்தியாக வரைய ஆரம்பித்தாள். மனதால் எத்தனை முறை, எத்தனை விதமான ஆடைகளை அவனுக்கென அணிவித்து பார்த்திருப்பாள். அதில் தன் மனதிற்கு பிடித்ததை எல்லாம் வரைந்து தள்ளினாள்.
தனுஜா ஒரு பௌலில், நொறுக்கு தீனிகளை கொட்டி வைத்துக்கொண்டு வேலையை ஆரம்பித்தாள். அவள் கையும் வாயும் சேர்ந்து வேலை செய்தது. ஆர்யா அவ்வப்போது ஏஐ உதவியை கேட்டுக் கேட்டு வேலை செய்தான்.
நாள் முடிவில் சூர்யா அலுவலகத்தை மேற்பார்வை விட அங்கு வந்து சேர்ந்தான். பூர்ணிமா ஏழு டிசைன்களையும், தனுஜா எட்டு டிசைன்களையும் கொண்டு வந்திருந்தனர்.
“ஆர்யா, உன்னோட புக்கை எடுத்துட்டு வா” என்று குரல் கொடுத்தான் பாலாஜி.
டிராயிங் புக்கை சூர்யாவின் டேபிளில் தூக்கி போட்ட ஆர்யா, “நான் பதினஞ்சு டிசைன் கொண்டு வந்திருக்கேன். பங்கப் பிரி! பங்கப்பிரி!” என்று அட்டகாசம் செய்தான்.
சூர்யா முதலில் தன் தம்பியினுடைய புத்தகத்தை தான் திறந்தான். முதல் பக்கத்திலேயே ஒரு பெரிய முட்டை மார்க் விழுந்தது. இரண்டாம் பக்கத்திலும் அதே கதைதான்.
ஆர்யாவோ, “டிசைன் பண்ணும்போதே எனக்குத் தோணுச்சு, இது ரொம்ப ஃபியூச்சரிஸ்டிக்கா இருக்குனு. உங்களுக்கு இதோட நுணுக்கம் புரியல!” என்று சமாளித்தான்.
ஆனால், சூர்யா எதையும் காதில் வாங்காமல் அடுத்த பக்கத்தை திருப்ப, அங்கும் அவனது கை முட்டை மார்க்கைத்தான் இட்டது. நான்காவது பக்கத்தில் இருந்த டிசைனைச் சூர்யா உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில், பக்கத்தில் இருந்த தனுஜாவால் அதற்குமேல் அடக்க முடியவில்லை. வாய்விட்டுச் சிரித்துவிட்டாள்.
“ஏய் தகரடப்பா! எதுக்குடி சிரிக்கிற?” என்று ஆர்யா முறைக்க,
“சிரிக்காம? ஸீரோக்கு கீழ மார்க் போடுவோமா வேணாமானு பாஸ் கன்ஃபியூஷன் ஆகுற அளவுக்கு கொண்டு வந்து தந்திருக்கியேடா?” என்று கூற, அது சரி என்பது போல சூர்யா இவனை முறைத்தான்.
“ஆக்ச்சுவலி பாஸ், இவன் போட்டிருக்குற பதினைஞ்சு டிசைனும், போன மாசம் வந்த ‘லண்டன் ஃபேஷன் வீக்’ல ஒரு ஃபேமஸ் டிசைனர் ரிலீஸ் பண்ணது. ஏஐகிட்ட ஒழுங்கா கேட்டு இருந்தா அதுவே கூட ஒரு நல்ல டிசைன தந்து இருக்கும். இந்த லூசு ஃபேமஸானதுனு கேட்டுட்டான் போல, அது இதையெல்லாம் எடுத்துத் தந்துடுச்சு. ஐயாவும் யோசிக்காம அப்படியே வரைஞ்சு வச்சிருக்காரு…” என்று தனுஜா மொத்தமாக அவன் குட்டை போட்டு உடைத்தாள்.
“அண்ணா… அப்படியெல்லாம்…” என்று சொல்ல முயலும் முன், அவன் புக்கை மூடி குப்பைத்தொட்டியில் போட்டு விட்டான் சூர்யா.
பாலாஜி, “ஏன்டா படுத்துற? ஒரு நாள் முழுக்க உனக்கு டைம் தந்திருந்தோம். ஒழுங்கா ஒரு டிசைன் வரைஞ்சு இருக்கலாம்ல?”
“செய்யாத தப்புக்கெல்லாம் திட்டுறீங்க. போங்க…” என்று பாலாஜியிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்க, சூர்யா அடுத்துத் தனுஜாவின் புத்தகத்தைத் திறந்தான்.
அவள் வரைந்திருந்த எட்டில் நான்கு டிசைன்கள் நேர்த்தியாகவும், நவீனமாகவும் இருந்தன. சூர்யா அதற்கு மட்டும் டிக் போட்டான், மற்ற நான்குக்கும் எவ்வித மார்க்கும் போடவில்லை.
“இதை இப்படியே புரொடக்ஷன் டிம்க்கு கொடுத்திடு பாலாஜி. அடுத்து என்ன ஃபெஸ்டிவல் வருதோ, அதுக்கு புது கலெக்ஷன்னு மார்க்கெட்ல விட்ரு. உள்நாடு வெளிநாடு எல்லா பக்கமும் விளம்பரம் போட்டு நல்லா ப்ரமோட் பண்ணிடு.”
“எஸ் பாஸ்…”
“குட் தனு…” என்று பாராட்டியவன் முகம், ‘நான் எதிர்பார்த்தது இது இல்லை!’ என்பது போல ஒரு சமிக்ஞையைத் தந்தது.
இறுதியாகப் பூர்ணிமாவின் புத்தகம். சூர்யாவின் கைகள் அந்தப் புத்தகத்தைத் தொட்டபோது பூர்ணிமாவுக்கு மூச்சே நின்றுவிடும் போல இருந்தது. ஏதோ பள்ளிக்கூடத் தேர்வின் ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கும் மாணவியைப் போலப் பதற்றத்தில் தன் துப்பட்டா முனையைச் சுருட்டிக் கொண்டிருந்தாள்.
