மயக்கம் தயக்கம் 26

நீண்ட நாட்களுக்கு தங்க வேண்டி இருந்ததால் ஏற்கனவே வாணி, சந்தனாவிடம் இங்கே வீட்டிலேயே தங்கிவிடலாமே என்று கேட்டிருந்தார். ஆனால், சந்தனா மறுத்துவிட்டாள். நடைமுறையில் தனக்கு இது சாத்தியம் இல்லை என்று தெளிவாகவே சொல்லிவிட்டாள்.

முதல் மூன்று நாட்களாக அதிக சோர்வாக உணர்ந்திருந்த விஜயராகவனுக்கு நான்காம் நாள் நன்றாக ஜுரம் வந்துவிட்டிருந்தது. அவனை  கவனித்துக்கொள்ளவென்று இரண்டு நாட்களுக்கு சந்தனா அங்கே அவர்களுடனேயே தங்கவேண்டிய நிர்பந்தம். பகலிலும்,இரவிலும் அவனது தேவைகளை கவனிக்கவென்று ஆண் உதவியாளர்கள்  உண்டுதான்.ஆனால்,அவனது ஜுரத்தின் அளவை அவ்வப்பொழுது கணிக்கவும்,மருந்துகள் தரவும், அதைப்பற்றிய ரிபோர்டுகளை மருத்துவமனைக்கு தெரியப்படுத்தவும்  அங்கேயே தங்கிவிட்டாள்.

அவளுடன் இருந்த அந்த இரண்டு நாட்களில் அவளை இன்னமும் புரிந்துகொள்ள முயன்றான் விஜயராகவன்.அவளது பார்வையில் ஒரு நோயாளியை பார்த்துக்கொள்ளும் கடமையின் தீவிரம் தவிர வேறு எதுவும் இல்லை.நிர்மலமாக இருக்கும் முகம் அவனை வெகுவாக சோதித்தது.

மூன்றாம் நாள் காலையில் பணிக்கென குளித்துவிட்டு தயாராகி வந்தவளிடம் இருக்கும்  புத்துணர்ச்சி விஜயராகவனிடமும் பிரதிபலித்தது. இப்போது  எப்படியாவது சொல்லிவிடலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கும்பொழுது  அவனது அறை வாசலில் நிழலாடியது.

நிமிர்ந்து பார்த்தவனுக்கு நிச்சயம் அதிர்ச்சி தான்.அங்கே நின்று கொண்டிருந்தவள் திவ்யா. திவ்யாவை பார்த்தவனுக்கு என்ன பேசவேண்டும் என்று புரியவில்லை. கட்டிலில் சாய்ந்த வாக்கில் அமர்ந்திருந்தவன் வாயில் வார்த்தைகள் வராமல் வெறுமனே ‘வா’ என்று மட்டும் தலையசைத்தான்.

உள்ளே திவ்யா வந்தவுடன் சந்தனா விஜயராகவனை கேள்வியாகப் பார்த்தாள். அவளின் பார்வையை புரிந்து கொண்டவனாக ,”என்னோட எக்ஸ் தான்.தயா வெளியே வர காரணமா இருந்தவங்க.இப் யு டோன்ட் மைண்ட். கொஞ்சநேரம் வெளியே இருக்க முடியுமா? “என்று கேட்டான்.

அவனது குரலில் எப்போதும் பேசும்பொழுது இருக்கும் மென்மை இல்லை.கடினம் கூடிவிட்டிருந்தது. சந்தனாவுக்கு புரிந்தது.இருவருக்கும் நிறைய பேச வேண்டியிருக்கும் என்று நினைத்தவளாக வெளியே வந்துவிட்டாள். தனது அறையிலிருந்து அப்போதுதான் பாட்டியுடன் ஹாலுக்கு வந்த தயாவை பார்த்தவளுக்கு ,ஏதோ தோன்றியது.

“நீ என்ன இங்கே வெளியே நிக்குறம்மா? விஜயனுக்கு டிரஸ் மாத்தி விடறாங்களா என்ன ?” என்றாள் பெரியவள்.

“இல்ல மேடம், சாரோட..எக்ஸ் வந்திருக்காங்க.சார் என்னை வெளியே கொஞ்சநேரம் இருக்க சொன்னாரு.”என்றாள் சந்தனா.

சந்தனாவின் பதிலை கேட்ட வாணிக்கு அவ்வளவு கோவம் வந்தது. தன்னை மீறி வார்த்தைகள் வெளியே வந்து விழுந்தது.”இப்போ அந்த பொண்ணு எதுக்கு இங்கே வந்திருக்கா. மனசாலே அடிபட்டு நிறைய அவமானப்பட்டு, தன்னைத்தானே தேத்திக்கிட்டு மீண்டு வந்திருக்கான். இப்போ வந்து அவனை முழுசா உடைக்க பாக்குறாளா..” என்று புலம்பினார்.

சந்தனாவுக்குள் மெலிதான அதிர்வலைகள். குழந்தையை கூட விட்டு சென்று விட்டார்களா? என்ற கேள்வி மனதுக்குள் எழுந்தது. அதை வாய்விட்டு அவள் கேட்கவில்லை. அது தனக்கு தேவையில்லாத விஷயம்.அவரவர் குடும்பத்தில் நிறைய இருக்கும்.அடுத்தவர் வீட்டு விஷயம் பற்றி பேசுவது அவர்கள் வீட்டு கழிவறையை எட்டிப்பார்ப்பது போன்றது ‘ என்று அமைதியாகி விட்டாள்.

ஏறத்தாழ இரண்டு மணி நேரம் திவ்யா விஜயனின் அறைக்குள் இருந்தாள். தயாவுடன் நேரத்தை செலவிட ஆரம்பித்திருந்தாள் சந்தனா. தயாவை குளிக்க செய்து ,சாப்பிட வைத்து அவளுடன் 

பூக்கள் வரைந்து , ரைம்ஸ் சொல்லிக்கொடுத்து , அந்த வாரத்தில் பள்ளியில் கற்றுக் கொடுத்தவற்றை மீண்டும் ஞாபகப் படுத்தி என்று  அவளுக்கு நேரம் நன்றாகவே கழிந்தது.

நடப்பவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த வாணிக்கு கண்கள் கலங்கியது. உள்ளே என்ன நடக்கிறது என்று படபடப்பு ஒருபுறம்.மகனது அறைக்குள் நுழைய ஒருவித தயக்கம். அவரால் தயாவை இந்த சமயத்தில் கையாள முடியாது. அந்தப் பொறுப்பை யாரும் கேட்காமலே சந்தனா எடுத்துக்கொண்டவிதம் வாணிக்கு பெரிய ஆறுதல் தான்.

உள்ளே சென்ற திவ்யா அங்கே இருந்த சந்தனாவின் இருக்கையில் அமர்ந்தாள். விஜயராகவனுக்கு அது பிடிக்கவில்லை. ஆனாலும் எதுவும் சொல்லவில்லை. விஜயனை பார்த்தவளுக்கு வார்த்தைகள் வெளியே வரவில்லை. அவன் இவ்வளவு தூரம் அடிபட்டு படுக்கையில் இருப்பான் என்று அவள் நினைக்கவில்லை. எதிர்பாராத நிகழ்வு.

விஜயராகவனை இப்படி பார்த்தது தொண்டையில் நெருஞ்சி முள்போல் ஏதோ ஒன்று அடைத்தது. அவனை நிமிர்ந்து பார்த்து முழுதாக அவதானித்தவளுக்கு நடப்பை எப்படி நம்புவது என்று தெரியவில்லை.

எந்த விஜயராகவனின் அழகில் மயங்கி திருமணம் செய்து கொண்டாளோ, அந்த அழகு இப்போது இல்லை.  எப்போதுமே விஜயராகவன்  சினிமா, நாவல்களில் வருவது போல் சிக்ஸ் பேக்,எயிட் பேக் ஆணழகன் இல்லை.எப்போதும் உடம்பை சீராக கச்சிதமாக வைத்திருப்பான்.அவனது உயரத்திற்கு சரியாக பொருந்தும் உடல்வாகு.

தினமும் உடற்பயிற்சி செய்பவன் என்று எளிதாக சொல்லிவிடலாம்.

இப்போதோ அவள் ஆசைப்பட்டு மணந்துகொண்ட அந்த அழகனைக் காணவில்லை. உடல் எடை வெகுவாகக் கூட்டிப்போய் இருந்தது. கழுத்து பகுதியில் நன்றாக சதை போட்டு அமுங்கியிருந்ததது. லேசாக தொப்பை வந்திருப்பது அவன் அணிந்திருக்கும் ஆடையை மீறி தெரிந்தது. முன் தலையில் முடிகள் உதிர்ந்து அநேக முடிகள் உதிர்ந்திருக்க ஆள் அடையாளமே தெரியவில்லை.கண்களை சுற்றி லேசாக வந்திருக்கும் கருவளையம் அவனை வேறு யார்போலவோ காட்டியது.

அவனை நிதானமாக பார்த்தவளிடம்,” மாதக்கணக்கா பெட்ரிடன்ல இருக்கேன்.இப்போ ஒரு பத்து நாளாத்தான் எழுந்து சாஞ்சு உக்கார முடியுது.அதுவும் ரொம்பநேரம் உக்கார முடியாது. கால் ,கை எலும்பு முறிவு வேறே. ஸ்லோவாதான் ரேகவர் ஆகும்.இன்னமும் டைம் எடுக்கும்” என்றான்.

திவ்யாவிடமிருந்து மிரட்சியுடன் கூடிய வெறும் தலையசைப்புதான்.

“எனக்கு ஆக்சிடென்ட் ஆகிருச்சுன்னு உனக்கு தெரியாதா ? சாரி, எப்போ தெரியவந்தது?”

ஹூம்…என்று தன்னை சுதாரித்த திவ்யா ,”எனக்கு லாஸ்ட் வீக் தான் தெரியும். நா யு எஸ் போயிட்டு லாஸ்ட் மன்டே தான் திரும்ப வந்தேன். நம்ம சுந்தரம் சாரோட மனைவி அவங்களை ஏர்போர்ட்ல பார்த்தேன். அவங்க தான் சொன்னாங்க.உன்னை பார்க்க வரணும்னு தோணிச்சு. ஆஃபீஸ்ல ரிப்போர்ட் செஞ்சாகவேண்டிய நிலைமை.  ஒர்க் கம்ப்ளீட் செஞ்ச உடனே உன்னை பார்க்க வந்திட்டேன்.”

 

அவளிடமிருந்து வந்த பதிலை கொஞ்சம் கசப்புடன் உள்வாங்கிக்கொண்டான்,”அப்புறம், இப்ப எங்கே இருக்கே? உன்னோட பேரன்ட்ஸ் உன்னோடத்தான் இருக்காங்களா? காண்டாக்ட்ல இருக்கியா?” — விஜய்

” தெரிஞ்சுக்கிட்டே கேக்குறீங்க விஜய்.நா அவங்களோட தொடர்புல இல்ல.  இன்னமும் சொல்லனும்னா அவங்க எங்கே இருக்காங்கன்னு கூட எனக்கு தெரியாது.தெரிஞ்சுக்கவும் இன்டெரெஸ்ட் இல்ல.நா வேணாம்னு சொல்லிட்டுதானே போனாங்க. அவங்களா காண்டாக்ட் பண்ணா பாக்கலாம்.”

அவளின் பதிலில் விஜயன் அவஸ்தையாய் உணர்ந்தான். இதென்ன யாரையோ பற்றி பேசுவதுபோல பேசுகிறாள் என்றுதான் தோன்றியது.”ஓஹ், தென் உன்னோட ஒர்க் எப்படி போகுது?ப்ரமோஷன் ஏதாச்சும் கிடைச்சுதா? ” என்றவன் மறந்தும் அவள் எப்படி இருக்கிறாள் என்ற கேள்வியை கேட்கவே இல்லை. தீபனுடன் அவளுடைய பல புகைப்படங்களை முகநூலிலும்,இன்ஸ்டாவிலும் இவள் போட்டிருந்தது அவன் பார்த்திருக்கிறான்.அதனால் தீபனுடன்தான் இப்போதும் இருக்கிறாள் என்று நினைத்திருந்தான் விஜயன்.

”அதெல்லாம் நினைச்சதை விடவே சூப்பரா போகுது. இப்போ ப்ராஜெக்ட் ஹெட் ஐரோப்பா,ஏசியா ரெண்டு பேருக்கும் அஸ்சிஸ்ட் பண்றேன். லாஸ்ட் டைம் ஆஸ்த்ரியா போயிட்டு வந்தேன். ஒரு ஹாஸ்பிடல் ப்ராஜெக்ட். நல்லா இருக்கு. ஏன் விஜய் நா எப்படி இருக்கேன்னு ஒப்புக்கு கூட கேக்க மாட்டியா?”

மனதில் இருந்த நெருடலை வார்த்தைகளில் கேட்டுவிட்டாள்.

அப்பொழுதும் விஜயன் ‘எப்படி இருக்கே’ என்று கேட்கவில்லை. அவனது மவுனம் அவளுக்கு அவனிடம் இருக்கும் அன்னியத்தன்மையை சொல்ல  ,நா இப்போ சிங்கிளா தான் இருக்கேன். தீபனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இப்போ தீபனும் அவருடைய மனைவியும் ஜப்பான் போயிட்டாங்க. இனிமே அங்கே தான் போலிருக்கு “என்று அடைத்துக்கொண்டு இருந்ததை விஜயனிடம் சொன்னாள்.

அவள் கண்களின் பளபளப்பு அவள் கலங்கி இருப்பதை சொன்னது.  விஜயனுக்கு இதற்க்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று விஜயன் யோசித்தான். அவளுக்கு இவனது பதில் தேவைப்படவில்லை போலும். மேலே பேசிக்கொண்டே சென்றாள்.

“என்னை முறைப்படி யாரையாவது கல்யாணம் செஞ்சுக்கோ. ஐம்பது வயசு ஆனா மனசு சரியான ஒரு துணையை தேடும்.தோள் சாய தோழனை புதுசா கண்டுபிடிக்க முடியாதுன்னு ” சொல்லிட்டு போனாரு தீபன். எனக்கும் இப்போ தனிமை கஷ்டமா இருக்கு. பாக்கணும் “என்றாள்.

அந்த வார்த்தைகள் தனக்கும் சேரும் என்று உணர்ந்திருந்தான் விஜயராகவன். சூடாக அவளுக்கு பிடித்த பதத்தில் காபியை அனுப்பி வைத்தார் வாணி. அதன் பொருள் ‘வந்து நேரமாகிவிட்டது.கிளம்பு ‘ என்பதுதான். காபியை குடித்து முடித்தவள் ,”கெட் வெல் சூன்.விஜய்.உன்னை இப்படி பாக்க கஷ்டமா இருக்கு. சீக்கிரம் எழுந்திரு.உனக்காக ஒரு துணையை தேடுக்கோ. என்னையும் உன்னோட கல்யாணத்துக்கு கூப்பிடு. “என்று சாதாரணமாக சொல்லிவ்ட்டு கிளம்பினாள்.

திவ்யா  சென்று வெகு நேரத்த்திற்கு அதன் தாக்கம் விஜயிடம் இருந்தது. அவன் சாப்பிடவென்று உணவை கொண்டு வந்தாள் சந்தனா. அவனுக்கு சாப்பிட உதவி செய்தவள் அவனது கவனம் இங்கே இல்லை என்று புரிந்து கொண்டாள்.

விஜயன் சாப்பிட்ட பிறகு அவனுக்கு வழக்கமாக கொடுக்கும் மருந்துகளை கொடுத்தாள். ஜுரம் நன்றாக இறங்கி இருந்தது. வழக்கமாக வரும் பிசியோதெரபிஸ்ட் வந்தார். விஜயராகவனுக்கு நடை பயிற்சி ஆரம்பமாகியிருந்தது.நடந்து விட்டு வந்தால் கடுமையாக வலியை அனுபவிப்பான். இன்றும் அப்படிதான்.

திவ்யாவை பற்றிய எண்ணத்தை பின்தள்ளிவிட்டு  உடல்வலி ஆக்கிரமிக்க , பயிற்சி முடிந்துவந்தவனால் வலி பொறுக்க முடியாமல் படுத்துவிட்டான்.  அடுத்தடுத்த நாட்களில் உடையாளரின் துணையுடன் இன்னும் அதிகநேரம் நடைப்பயிற்சியும்  கைகளுக்கு பயிற்சியும் செய்ய சொன்னார் பிசியோ.

அதற்க்கு பிறகு வந்த நாட்களில் அவன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் வந்தது. கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடியே கொஞ்சம் கொஞ்சமாக அலுவலக வேலைகளை கவனிக்க தொடங்கினான்.

சந்தனாவை திரும்ப அழைத்துக்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. ஆண் உதவியாளர்கள் மட்டும் இன்னமும் தேவைப்பட்டார்கள்.

சந்தனா இனி வரப்போவதில்லை என்று தீர்மானமாகும் வரை  எதுவும் சொல்லாமல் மனதிற்குள் அவள் மீதான காதலை சொல்ல வழி தேடியவனுக்கு இப்போது அவள் கிளம்பப் போகிறாள் என்று மனம் வேகமாக அடித்துக்கொண்டது.

வாணி தனது மகனுக்கு அந்த பெண் சந்தனா  மீது காதல் என்று தெரிந்த பிறகும் ,வாணிக்கு இந்த மௌன நாடகத்தை பார்க்க கவலையாக இருந்தது.தனது கணவர் ஆனந்திடம் சொன்னதற்கு ,”அவசரப்படாத வாணி. ஹி இஸ் மெச்சூர்ட்.அவனுக்கு சிச்சுவேஷன நல்லாவே ஹாண்டில் பண்ண தெரியும்.உன்னோட பிள்ளை ஒரு பெரிய நிருவாகத்தோட சிஇஓ .பொறுமை அவசியம்.அவனே அந்த பொண்ணுகிட்ட பேச முயற்சி செய்யட்டும் “என்றுவிட்டார்.

ரோஷினியிடம் சொல்லி வாணி குறைபட்டுக்கொண்ட பொழுது ,அவளும் அதையேதான் சொன்னாள் வேறு வார்த்தைகளை கோர்த்து. வாணியின் மனதில் இருக்கும் விஷயமே வேறு.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page