மயக்கம் தயக்கம் 27

வாணியின் மனதில் இதெல்லாம் சரியாக வருமா என்று திடீரென ஒரு சந்தேகம் வந்திருந்தது. சந்தனாவை பற்றி ஒன்றுமே தெரியாது .அவள் பிரபலமான ஒரு மருத்துவ மனையில் நர்ஸாக பனி செய்கிறாள் என்பதை தவிர்த்து.  விஜயராகவனின் மனம் அவளதுபால் முழுமையாக சாய்ந்து விட்டது தெரியும். அந்த பெண் தனது வேலையை தவிர வேறு எதையும் பெரியதாக பார்த்தது இல்லை.

குழந்தையுடன் விளையாடுவாள்.அதில் ஒரு ஈடுபாடு இருக்கும்தான். அதற்குமேல் தனது பணியை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. இதை எப்படி கொண்டுபோவது?மகன் எப்படி இந்த விஷயத்தை கையாள்வான் என்று ஒரு குழப்பம்.

 

‘ தானே சந்தனாவிடம் பேசலாமா’ என்றுகூட யோசித்தார். அது சரிவராது என்று விட்டுவிட்டார். சந்தனா மாலையில் கிளம்பும் நேரம் விஜயராகவன் அவளிடம் ,”நாம கல்யாணம் செஞ்சுக்கலாமா?எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டா நல்லா இருப்போம்னு தோணுது “என்றான்.

விஜயராகவனிடமிருந்து இந்த மாதிரி வாக்கியங்களை சந்தனா எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால் சிலையென நின்று விட்டாள். திருமணமா…நானா? என்ற கேள்வி மட்டும்தான் அவளிடம்.

அதை வாய்விட்டு கேட்டகவும் செய்தாள். “சார்  நீங்க என்ன சொல்றீங்க .என்னை கல்யாணம் செஞ்சுக்க கேட்டீங்களா? என்னை அப்படினா இந்த அழகு? “

அவளது கேள்வியில் திடுக்கிட்டவனாக விஜயன்,”நீ என்னை எப்படி எடுக்கறேன்னு தெரியல.நா… எனக்கு உன்னை ரொம்ப மாதங்களாகவே பிடிச்சிருக்கு.தயாவை ஹோச்பிடலைஸ் செஞ்சோமே. அப்போ நீங்க தானே பார்த்துக்கிட்டிங்க சந்தனா. அப்போலேர்ந்தே உங்களை ரொம்பவே பிடிக்கும். தயா தேடிய அம்மா பாசம் அது உங்ககிட்டேந்து அவளுக்கு கிடைச்சது. அதை நா உணர்ந்தேன். அப்போலேந்தே மனசுக்குள்ள ஒரு தாக்கம்.

பிறகு , எனக்கு ஆக்சிடெண்ட்ட் ஆகி ,இப்போவரைக்கும் உன்னோட பக்கத்துல இருக்கேன்.ஆரம்பத்துல உன்னோட கடமையை நீ சரியாய் செய்யுறதுல ஈர்க்கப்பட்டேன். எப்போ உன்மேலே அந்த ஈர்ப்பு காதலா மாறியதுன்னு தெரியாது. நீங்க இங்க வராம வேறே நர்ஸ் வந்திருந்த பொழுது என் உணர்வுகளை திரும்ப சுயபரிசோதனை செஞ்சுக்கிட்டேன். என்னால உங்களை பார்க்காம,பேசாம ஒருநாள் கூட இருக்க முடியாம தவிப்பு. எதுவுமே  பிடிக்கல. தூங்க முடியல. நீங்க தான் வேணும்னு மனசு தவிச்சது.

திவ்யாவை பிரிஞ்சு நா அதை மாதிரி உணரல.நானும் குழந்தையும் வேணாம்னா,ஓகே பைன் அப்படின்னுதான் தோணிச்சு.

ஒருவேளை ஏற்கனவே கல்யாணம் ஆனவன்,குழந்தைக்கு அப்பான்னு யோசிக்கிறீங்களா? அப்படி ஏதாச்சும் நெருடல் இருந்தா சொல்லிடுங்க. நா என்னோட கல்யாணம் அதைப்பற்றி சொல்றேன்.நீங்க யோசியுங்க . என்றுவிட்டு அவனுக்கும் திவ்யாவுக்கும் நடந்த கல்யாண வாழ்க்கை, குழந்தையை விட்டு திவ்யா சென்றது,அவளது சுதந்திரம் அவளது மன நிலை” எல்லாவற்றையும்  சொன்னவன் ஆவலுடன் அவளது முகத்தை பார்த்தான்.  லேசாக அவனது முகம் சுருங்கியது.

அவனது வடிவம் அங்கே இருந்த  கண்ணாடியில் தெரிந்தது.  முழு உருவமும் வேறு யாரோ போல் இருந்தது.முன் தலையில் லேசாக விழுந்திருக்கும் வழுக்கை.அதை இப்போதுதான் கவனிக்கிறான்.

வேறு எதுவும் அவன் பேசவில்லை.அத்தனை நேரம் அவன் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தவள் அவனது முக பாவனை பார்த்து ,”ம்ஹும்… அப்படி இல்ல சார். உடம்பு சரியானதும் திரும்ப ஜிம் போனீங்கன்னா இதெல்லாம் சரியாகிடும்.  அதோட இப்போவெல்லாம் இருபத்தஞ்சு வயசுக்கே வழுக்கை விழுது. இதெல்லாம் ஒன்னும் விஷயமில்ல.

ஆனாலும் என்னால உங்களை கல்யாணம் செஞ்சுக்க முடியாது. எனக்கு கல்யாணம் செஞ்சுக்க விரூர்ப்பம் இல்ல. எனக்கு என்னோட குடும்பம், கடமை இருக்கு. ஆனாலும்,நீங்க கேட்ட விதம் எனக்கு பிடிச்சிருக்கு என்றுவிட்டு கிளம்பிவிட்டாள். அதற்குமேல் அந்த வீட்டுக்கு அவள் வரவேண்டியது இல்லை.

அவளுக்குள் கழிவிரக்கம். தான் என்ன தவறு செய்தோம்?திருமணம் வேண்டாமென்று நிற்பதற்கு. ஆனாலும், எல்லோரை போலவும் ஒரு நல்ல திருமண உறவை வாழ்க்கையை எதிர்பார்க்கும் என் மனம், எனது எண்ணங்களை கொண்டே திருமணம் வேண்டாம் என்று சொல்ல வைக்கிறதே என்று கலங்கினாள். நடந்த yendha விஷயத்திற்கும் அவள் காரணம் இல்லை. இது காலத்தின் கொடுமை. இன்றும் எதற்கோ பயந்து , தன்னை தனது உணர்வுகளை மூழ்கவிட்டு!

அரவிந்தன் இவளது மனதில் ஏற்படுத்தாத தாக்கத்தை நிச்சயம் விஜயராகவன் இவளது மனதில் ஏற்படுத்தி இருக்கிறான். தெளிவான நீரில் கல் விட்டு எறிந்ததை போன்ற சலனம். அவன் திருமணத்திற்கு கேட்பான் என்றெல்லாம் நினைத்தது இல்லை. யாரிடமும் ஏற்படாத ஒரு உணர்வை அவனிடம் அனுபவித்தாள். அது அவள் மனம் மட்டுமே அறிந்த ரகசியம்.

நடுவில் அவர்கள் வீட்டுக்கு செல்லாமல் மருத்துவமனை வந்த பொழுதுகளில் மேல் தளத்தில் விஜயன் இருந்த அறையை கடந்து செல்லும் பொழுது அவனை தேடியிருக்கிறாள். வேறு நோயாளிகளை அந்த அறையில் பார்க்கும்பொழுது ஏற்படும் ஏமாற்றம்!

திரும்ப வாணி மூலம் அவர்கள் வீட்டுக்கு ஒன்னரை மாதங்களுக்கு செல்ல வேண்டும் என்று மருத்துவமனை பணித்தபொழுது எந்த சுணக்கமும் இல்லாமல் அங்கே சென்றாள்.இன்று திருமணம் பற்றிய எண்ணம் விஜயராகவனிடம் எழும் என்று இவள் நினைத்து இருக்கவில்லை.

வழக்கம் மாறாமல் வாணி சந்தனாவை தங்கள் வீட்டு காரில் கொண்டுவிட கார் ஓட்டுனரை பணித்திருந்தார். இல்லையென்றால் இருக்கும் மன அழுத்தத்திலும் எப்படி வீடு வந்து சேர்ந்திருப்பாளோ தெரியாது.

வீட்டுக்கு வந்தவுடன் யாரிடமும் பேசாமல் தனது அறைக்குள் சென்று குளித்துவிட்டு வந்தவளுக்கு அதற்குமேல் தாங்க முடியாது குப்புற படுத்து அழுது தீர்த்தாள். அவளுக்கு இந்த தனிமையை தாங்க முடியவில்லை.தனக்கு  என்று ஒரு ஆண் துணை இருந்தால் நன்றாக இருக்கும் என்று எவ்வளவு யோசித்திருக்கிறாள்.ஆனாலும் திருமணம் ,அந்த உறவு சார்ந்த பயம்.மருத்துவரிடம் செல்ல விருப்பம் இல்லை.

மறுநாள் வேலைக்கு செல்லாமல் படுத்துக்கொண்டிருக்கும் அக்காவை வினோதமாக பார்த்தாள் ராகினி. ஒன்றும் சொல்லாமல் ராகினி பள்ளிக்கு கிளம்பி சென்றுவிட்டாள். கீதாவும் அரங்கனும் கவலையுடன் மகளை பார்த்தார்கள். வேலைக்கு சென்றால்தான் குடும்பம் ஓடும் எனும் நிலையில் விடுப்புகள் அதிகமாக எடுக்க முடியாது. இருவரும் சந்தனாவிடம் சொல்லிவிட்டு வேலைக்கு கிளம்பிவிட்டார்கள்.

முதல்நாள் அழுத தடம் எதுவும் மறுநாள் காலையில் இல்லை ஆனாலும் மனது சரியாக  இல்லை. மருத்துவமனைக்கு தகவல் அனுப்பிவிட்டு வீட்டில் இருந்துவிட்டாள்.

 

 

வளர்ந்த மகளிடம் என்னவென்று கேட்கவும் பெற்றவர்களுக்கு தயக்கம். அவளுடைய முகம் சொல்லும் சோகம் எதனால் என்றும் புரியவில்லை.கொஞ்சம் அவள் சமநிலைக்கு  வரட்டும் என்று தான் பெற்றவர்கள் பொறுமையாக இருப்பது. சில சமயங்களில் பொறுமையைவிட வேகமாக செயல்படும்பொழுது அந்த விஷயம் சரியாக இருப்பதுண்டு. ஏற்கனவே இவ்வளவு வருஷங்கள் சந்தனா சொன்னதை கேட்டு பெற்றவர்கள் அவளை அழுத்தம் தராமல் விட்டதே தவறு என்று தோன்றுகிறது.

ஒரு வாரம் சென்றிருக்கும். மனம் முழுவதும் விஜயனின் வீட்டில் இருந்த நினைவுகள். அவன் இப்போது என்ன செய்து கொண்டிருப்பான் என்பதில் ஆரம்பித்து அவனுக்கு சாப்பிட உதவிசெய்தது, மருந்துகளை புகட்டியது, வீல்சேரில் அவனை அமரவைத்து அவனும் அவளுமாக தயாவை கூட்டிக்கொண்டு தோட்டத்துக்கு சென்று நேரம் செலவிட்டதும், அவனை நடுவில் அமர்த்தி  தயாவும் அவளுமாக ஓடிப்பிடித்து விளையாடியது என்று வெறும் நினைவுகளே அவளை கொன்று தின்றது.

“இது எப்படி சாத்தியம், காதல் எப்படி மலரும் என்று கேட்பீர்கள் எனில் ,”ஒரு மூங்கில் காடேறிய சிறு பொறி ஒன்று போதும் .அந்த பொறி  இன்று தோன்றியதே ” என்பதுதான் விடை.

மொத்தமாக சொல்லவேண்டும் என்றால்,’ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு மேலாகவே அவனுடனே இருந்திருக்கிறாள். ஒருவருக்கொருவர் நீண்ட நாட்களுக்கு குணத்தை மறைத்து நடிக்க இயலாது. பாலின ஈர்ப்பும் பொதுவானது. இயற்கை.. எல்லாவற்றையும் விட ஒருவருக்கொருவர் பிடித்திருக்கிறது என்பதற்கு மேலே காரணங்கள் எதற்கு?

மனதை அடக்கும் வழி புரியாமல் தடுமாறியது பெண்ணின் மனம். ஆனால், அவளால் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொள்ள முடியும்.மற்றவை? இந்த கேள்விக்கான பதில் இல்லையே!இது வெறும் உடல் சார்ந்த விஷயமாக இருந்தால் சுலபமாக கையாள முடியும். மனம் சார்ந்த விஷயத்திற்கு ? 

திடீரென ஒருநாள் அரவிந்தனின் அப்பா இவர்கள் வீட்டுக்கு வந்தார். கையில் இனிப்பு பெட்டியுடன் வந்தவரை வரவேற்று அமரவைத்து காபி கலந்து கொடுத்தார் கீதா. சந்தனா இரவு ஷிப்ட் முடித்துவிட்டு வந்தவள் நல்ல தூக்கத்தில் இருந்தாள்.ராகினி பள்ளிக்கு சென்று விட , அரங்கனிடம் இனிப்பை கொடுத்தவர்,”என்னோட மருமக இப்போ அஞ்சு மாசம் கர்ப்பமா இருக்கா டா.பிடிக்காத கல்யாணம் ஆச்சே .பையன் வாழாம சண்டித்தனம் செய்வானோன்னு பயந்தேன். அப்படியில்லாம இப்படி நல்ல செய்தி சொல்லியிருக்கிறது ரொம்பவே சந்தோஷமா இருக்குடா ” என்றார்.அவரது முகத்தில் உண்மையான மகிழ்ச்சியின் சாயல் தெரிந்தது.

கொஞ்சநேரம் பேசியிருந்துவிட்டு அவர் கிளம்பி சென்றுவிட்டார்.மதியம் சாப்பிடவென்று எழுந்து வந்த மகளின் தட்டில் கீதா ,அரவிந்தனின் அப்பா கொடுத்துவிட்டு சென்ற இனிப்பை வைக்க என்னவென்று பார்த்தது பெண். டைனிங் டேபிளின் இன்னொரு சேரில் அமர்ந்தவாறே விஷயத்தை கீதா தனது மகளிடம் சொல்ல கேட்டுக்கொண்டிருந்த சந்தனாவின் மனதில் உண்மையான நிறைவு. தன்னை திருமணம் செய்துகொண்டிருந்தால் அவன் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? என்று நினைத்துக்கொண்டு இனிப்பை சாப்பிட்டாள்.

விஜய ராகவனின் உடல் நலம் நன்றாகவே சீராகிவிட்டது.தன்னை அந்த பெண்ணுக்கு உண்மையாகவே பிடிக்கவில்லையா அல்லது பிடித்திருந்தும் மறுத்துவிட்டு சென்றாளா? என்று திரும்ப திரும்ப அவனது மனம் கேட்டுக்கொண்டே இருந்தது. அதற்க்கான விடை தெரியாமல் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. நிச்சயம் அவள் போன்ற பெண் தனக்கு மனைவியாக,தயாவுக்கு அம்மாவாக வந்தால் எங்கள் இருவரின் வாழ்க்கையும் சொர்கமாகிவிடும் என்று அவன் மனம் நிச்சயமாய் நம்புகிறது.

அவனுக்காக காத்திருக்கும் வேலைகள் அவனை சுழற்றி அடித்தாலும் அவளது நினைவுகளில் இருந்து அவனால் மீள முடியவில்லை.எப்படியோ நாட்களை கடக்கிறான்.அவள் கிளப்பி சென்று நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. இவன் எழுந்து நன்றாக நடமாட ஆரம்பித்து   மூன்று மாதங்கள் . ஒவ்வொரு நாளும் மனம் ஒருநிலையில் நிற்காமல் தவிக்கிறது.

முழுமையான முன்புபோலான உடற்பயிற்சிகள் செய்ய இன்னமும் ஆரம்பிக்கவில்லை. பிசியோ தெரப்பி டாக்டர் சொல்லி கொடுத்த பயிற்சிகளை seidhu கொண்டிருக்கிறான். அதனாலோ என்னவோ வலி நன்றாக குறைந்திருக்கிறது. அதிகநேரம் அலுவவலக வேலை, அமர்ந்திருக்க வேண்டி இருப்பதால் முதுகுவலிக்கு நிச்சயம் அவன் அதிகம் பயிற்சிகள் கொடுக்கிறான்.

அந்த வார இறுதியில் ஆனந்தும் -வாணியும் ஹாலில் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருக்க , தயா இன்னமும் தூங்கி கொண்டிருந்தாள். அடிபட்டிருந்த நாட்களில் பாட்டி தாத்தாவுடன் தூங்கியவள் அப்பாவுக்கு குணமான பிறகு மீண்டும் அப்பாவிடம் ஒட்டிக்கொண்டாள்.

குளித்து தயாராகி வந்தவன்,  ஹாலில் இருந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்து கொண்டான். எப்படி ஆரம்பிப்பது என்று சிறிய தயக்கம். அவனது தயக்கத்தை புரிந்துகொண்ட ஆனந்த் ,”என்ன விஜி ஏதாவது சொல்லணுமா ?” என்று எடுத்துக்கொடுக்க ‘ஆம் ‘ என்று தலையசைத்தவன்,

“நாம இன்னிக்கு சந்தனா வீட்டுக்கு போகலாம்ப்பா.சந்தனாவை பொண்ணு கேக்கலாம்” என்றானே பார்க்கலாம்!

‘ரொம்ப வேகம் தான் . என்னிக்கோ எதிர் பார்த்தேன் .இப்போதான் தோணுது போல ‘ என்று தனது கணவனின் காதுகளில் வாணி சொல்லிக்கொண்டிருந்தார். ஆனந்துக்கு சிரிப்பு வந்து விட்டது. இது பற்றி மனைவி தன்னிடம் பேசி நான்கு மாதங்களுக்கும் மேலாகிறது. மகன் இது பற்றி  எவ்வளவு யோசித்திருப்பான் என்று அவருக்கு புரிந்தது.

இவ்வளவு வருஷங்களாக திருமணத்தை மறுத்தவள்,காதலே வேண்டாம் என்று தூர நின்றவள் இப்போது மட்டும் ஒப்புக்கொள்வாளா?அவள் என்ன சொல்ல காத்திருக்கிறாளோ!

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page