மயக்கம் தயக்கம் 29

note:18+ இந்த எபிசோடுக்கு கொடுக்கிறேன். தவிர்க்க முடியவில்லை. புரிதலுக்கு நன்றி

29

சந்தனா தன்னை ஆஸ்வாஸப் படுத்திக்கொண்டு மீண்டும் தொடர்ந்தாள். சுற்றி இருப்பவர்களை பற்றி கொஞ்சமும் அவள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. மூச்சு திணறியது.ஏற்கனவே எவ்வளவோ வருஷங்களுக்கு முன்பாக நடந்த விஷயங்களை அவள் இப்போது தனது கண்களால் பார்த்துகொண்டிட்ருக்கிறாள். எந்த விஷயத்திலிருந்து போராடி வெளியே வர முயற்சி செய்து தோல்வியை வெற்றிகரமாக தழுவுகிறாளோ அதே விஷயம்.

லேசாக அவளுக்கு மூச்சு திணறியது. கண்ணீரை அவள் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வெகுவாக போராடுவது வெளிப்படையாகவே தெரிந்தது.  அவள் அணிந்திருந்த அந்த அனார்கலி டைப் சுரிதார் வியர்வையில் முழுவதுமாக நனைந்திருந்தது.

முதலில் ‘தனக்கு பெண் குழந்தை இருக்கிறது என்று ஆரம்பித்தவளுக்கு அதற்கு பின்னர் ,குழந்தை எப்படி பிறந்தது’ என்று சொல்லியாகவேண்டிய கட்டம். மீண்டும் தொடந்தாள்.

“அப்பாவோட பேக்டரி புது பிரென்ச்  கடலூர்ல ஆரம்பிச்சாங்க. எங்க  அப்பாவுக்கு மாற்றல் குடுத்து நாங்க குடும்பத்தோட அங்கே மாறினோம். இந்த வீட்டை அப்பா வாடகைக்கு விட்டுட்டார்.  அப்பாவோட பூர்வீகம் அங்கே நெல்லிக்குப்பம் thaan.வேலைக்காக சென்னை வந்தாங்க.  அம்மாவோட பூர்வீகம் மதுரை பக்கம் ஒரு கிராமம்.  அப்பா பேக்டரி பக்கமே ஒரு வீட்டை லீசுக்கு எடுத்திருந்தாரு. என்னோட எட்டாவது படிக்கும் பொழுது  நாங்க அங்கே போனோம்.

வீட்டுலேந்து  கொஞ்ச நேரத்துல ஸ்கூல் வந்திரும். ரொம்ப சந்தோஷமா  எங்க லைஃப் போச்சு. நாங்க மூணு பேர். அம்மாவும் எங்க ஸ்கூல்ல  தான்  வேலை செஞ்சாங்க. அப்பா ஹவுசிங் லோன் எடுத்து தான் வீட்டை இங்கே சென்னையில் கட்டியிருந்தார்.அதுக்கு மாசா மாசம் பெய்மென்ட் கட்டியாகணும். அதுக்கு அம்மாவோட சம்பளமும் தேவைபட்டது.

நா டென்த் ஸ்டாண்டர்ட் படிச்சிட்டிருந்தேன். கோச்சிங் க்ளாஸ் வேறே . டாக்டர் ஆகணும்னு பெரிய கனவு இருந்தது.  பத்தாவதுலேயே நல்ல மார்க் எடுத்திருந்தா தானே லெவெந்த் ஸ்டாண்டர்ட்ல பயோலஜி குரூப் கிடைக்கும்?  அதனால் மேத்ஸ், சயின்ஸ் ரெண்டுத்துக்கும் கோச்சிங் போயிட்டு ராத்திரி வர ஒன்பது மணி ஆகிடும். அப்பா ட்யூஷன் சென்டர் வாசல்ல வந்து கூப்பிட்டுட்டு வருவாரு.

அங்கே வழியில ஒரு வீடு  இருந்தது.அங்கே நிறைய பேர் குடிச்சிட்டு படுத்திருப்பாங்க. எப்போதும்  ஜனநடமாட்டம் இருக்குற ஏரியா தான். யாராச்சும் போயிட்டு, வந்திட்டு இருப்பாங்க. அந்த வீட்டுலேந்து அரை கிலோ மீட்டர் தொலைவுல எங்க வீடு. அபார்ட்மெண்ட் இல்ல.. நாங்க இருந்தது தனி வீடுதான். அந்த பகுதி முழுசும் தனி வீடுகள் தான்.

டென்த் எக்ஸாம் முடிஞ்சு லீவுல வீட்டுல இருந்தேன். அம்மா பேப்பர் கரக்ஷனுக்காக ஸ்கூல் போயிட்டாங்க.அப்பா பேக்டரி போயிட்டாரு. நா மட்டும் வீட்டுல தனியா இருந்தேன். க்ரில் கேட் பூட்டிட்டு வீட்டுல என்னோட ரூம்ல டிவி பார்த்திட்டு இருந்தேன்.

அப்படியே தூங்கி போயிட்டேன்னு நினைக்கிறேன். யாரோ எதையோ உடைக்கிற சப்தம் கேட்டது. தூக்கத்துல இருந்ததுனால என்னால தெளிவா யோசிக்க முடியல. கனவு மாதிரி இருந்தது.

என்ன நடக்குதுன்னு தெரியல. நல்ல தூக்கம். என்னோட கையிலே திடீரென ஊசி போட்ட மாதிரி ஒரு திடீர் வலி. தூக்கம் கலைஞ்சு போச்சு. ஆனாலும் சுற்றுப்புறம் புரியல. ஒரே மயக்கமா,எங்கேயோ பறக்கிற மாதிரி இருந்துச்சு..

எத்தனை பேருன்னு தெரியாது. மாறி மாறி என்னை… என்னை … என்று குலுங்கி அழ ஆரம்பித்தாள். ஆனாலும் சொல்வதை நிறுத்தவில்லை. நா அவங்ககிட்டேந்து தப்பிக்க போராடினேன்.என்னால முடியல. வலி உயிர் போச்சு. பிறகு நா மயக்கம் ஆகிட்டேன். மயக்கம் போட்டுட்டேன்.அதுக்கு பிறகு என்னாச்சுன்னு தெரியாது. அப்பாவும் அம்மாவும் வந்து வீட்டு கதவை தட்டினாங்க. நா வந்து திறக்கலை. அம்மா பின் பக்கமா நா இருக்கேனா,கதவு திறந்திருக்கான்னு பாக்க வந்தவங்களுக்கு அதிர்ச்சி.கதவு உடைஞ்சு இருந்தது. “

சந்தனா சொல்வதை கேட்ட விஜயனின் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து போனது.வாணி சொல்லியே விட்டார்,”போதும் சந்தனா. எங்களால இதுக்கு மேல கேட்க தெம்பில்லை. வேணாம் ம்மா. விட்டுவிடு.” என்று .ஆனால் வாணி பேசியவை எதுவும் சந்தனாவின் காதுகளில் விழவில்லை.அவள் பேசிக்கொண்டிருந்தாள்.

“அம்மாவோட குரல் கேட்டு அப்பாவும் பின்னாடி வந்து பார்த்தாரு. ரெண்டுபேரும் உள்ளே வந்து பாக்கும் பொழுது என்னோட ஆடைகள் கிழிபட்டு,நா அலங்கோலமா…ஒருபக்கம் என்னோட ரத்தம் வேறே கீழே தரை முழுக்க. அப்பா என்னை கையில தூக்கிட்டு ஹாஸ்பிடல் போனாரு.

கஞ்சா ஊசி ஏற்றப்பட்டு நா வ*ன்பு*ணர்*வு செய்யப்பட்டிருந்தேன். விழிக்கவே மூணு நாள் ஆகிடுச்சு. விழிச்ச உடனே ஒரே ரகளை . உடம்போட அந்தரங்க உறுப்புகள் எல்லாம் கடுமையான வலி. காயங்கள். வலி தங்க முடியாம கதறினேன்.நடந்த சம்பவம் திரும்ப திரும்ப கண்முன்னே வரும். தடுக்க முற்படுவேன்.எல்லாமே முடிஞ்ச பிறகு எதை தடுக்க முடியும்?

கிட்டத்தட்ட மனநோயாளி ஆகிட்டேன்.போலீஸ் ,விசாரணை எல்லாம் நடந்தது.என்ன,யாருன்னு அப்பா- அம்மா ரெண்டு பேருக்கும் தெரியாது. செஞ்சது யாருன்னே எனக்கு தெரியாது. விழித்திருக்கும் நேரமெல்லாம் முதலில் ஆர்ப்பாட்டம் செஞ்சேன்.பிறகு வெறுமனே சுவத்தை பார்த்திட்டு உட்கார்ந்திருப்பேன். அம்மா வேலையை விட்டிட்டு என்னோடயே இருந்தாங்க.

பிறகு ஒரு மாறுதலுக்காக அம்மம்மா வீட்டுக்கு மதுரைக்கு அம்மாவையும் என்னையும் அப்பா அனுப்பி வச்சாரு. சுய நினைவு கொஞ்சமும் இல்ல. அம்மாதான் டிரஸ் போட்டு விடுவாங்க. அப்போதான் அம்மாவுக்கு சந்தேகம் வந்தது. எனக்கு அந்த சம்பவத்துக்கு பிறகு பீரியட்ஸ் வரவே இல்ல. உடனே அம்மாவும்,அம்மம்மாவும் என்னை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனாங்க. நா அஞ்சு மாசம் கர்ப்பம்னு அடுத்த வெடிகுண்டு வெடிச்சுது.  அப்பா மதுரைக்கு மாற்றல் வாங்கிட்டு வந்துட்டாரு.

கருக்கலைப்பு செஞ்சா என்னோட உயிருக்கும் ஆபத்து.யோசியுங்கன்னு சொல்லிட்டாங்க டாக்டர். ஒரு விஷயம் தெரியுமா..நா டென்த்ல நானூற்று தொண்ணூறு மார்க் எடுத்திருந்தேன். பள்ளிக்கூடத்துலேயே முதல் மதிப்பெண்.” சொல்லும்பொழுது அவளது குரலில் திடீரென ஒரு சந்தோசம் ஒரு நொடிக்கும் குறை வாக வந்து சென்றதை அங்கிருந்த அனைவராலும் உணர முடிந்தது.

அவள் தொடர்ந்தாள்,” குழந்தை வயத்துல வந்த பிறகு என்கிட்ட மாறுதல்கள் தெரிஞ்சுது. புத்தி கொஞ்சம் தெளிய ஆரம்பிச்சது. என்னோட வேலைகளை நானே செஞ்சுக்க ஆரம்பிச்சேன். அந்த வருஷம் குழந்தை பிறந்ததுனாலே என்னால ஸ்கூல் போகவே முடியல. அம்மாவும்,அம்மம்மாவும் சேர்ந்து  ,என்னோட அம்மாவுக்கு தான் குழந்தை பிறந்திருக்குன்னு உறவுகாரங்க எல்லார் கிட்டேயும் சொல்லி நம்ப வெச்சாங்க. அம்மாவுடைய கிராமத்துல வெறும் இருபது வீடுகள் தான்.எல்லோருக்கும் என்னுடைய நிலைமை தெரியும். யாரும் வெளியே எதையும் சொல்லல. எல்லாருக்கும் என்னோட நிலைமை பார்த்து பரிதாபம் தான்.

குழந்தையை ஆஸ்ரமத்துல சேர்க்க நா ஒப்புக்கல.என்னோட வயத்துல பிறந்த ஒரே காரணத்துக்காக அனாதையா விட மாட்டேன்னு சொல்லிட்டேனே!

அப்பாவும் அம்மாவும் வெளியுலகத்துல ராகினி அவங்களோட மகள்னு சொன்னாங்க.அதுக்கும் எவ்வளவு கேலி,கிண்டல்கள். பொண்ணுக்கு பதினஞ்சு வயசு ஆகுது.இப்போ இன்னொரு குழந்தையானு? ரெண்டுபேரும் எனக்காக இந்த குழந்தை பொறுப்பை சுமந்தாங்க.

இப்படியே விட்டா சரி வராது. குழந்தையை வீட்டுல விட்டு நா ஸ்கூல் போகவும் முடியாதுன்னு நிலைமை. அப்பா என்னோட மனசை மாற்ற வேண்டி என் ஐ ஓ எஸ் (ஓபன் ஸ்கூலிங் சிஸ்டம் ) அதுல சேர்த்து விட்டாரு. அதுல படிச்சு,பிறகு மதுரைல இருக்குற காலேஜில் நர்சிங் படிச்சேன்.

நானுமே,என்னோட பொண்ணுக்காக , அவளுடைய வாழ்க்கை -பொறுப்புக்காகவே வீம்பா படிச்சேன். நா படிச்சு முடிக்கும் பொழுதே அப்பாவுக்கு சென்னைக்கு மாற்றல் வந்துவிட எங்கள் குடும்பம் சென்னைக்கு வந்துவிட்டது. போதை மருந்து புழக்கமும்,குடியும் எப்போவும் சமூகத்தை சீரழிக்கும்.என்னோட வாழ்க்கையையும் அது பிச்சு போட்டிருச்சு “என்று அவள் சொல்லி முடிக்கும் முன் அவளது உடல்மொழியும், நடுக்கமும் விஜயனை மட்டும் இல்லை.அவனது மொத்த குடும்பத்தையும் புரட்டியது.

நடந்தவை அவர்கள் கண்முன் நடப்பது போன்று உணர்ந்தார் வாணி.திருமணம் ஆகி ,ஒரு பெண்குழந்தைக்கு அம்மாவாகி ,இப்போது பாட்டியும் ஆகிவிட்ட பொழுதும் ,சந்தனா அன்று உணர்ந்த வலியை இன்று  உணாந்தார் வாணி. வெகுநேரம் அங்கே மௌனம் தான் ஆட்சி செய்தது. யாருக்கும் பேச வரவில்லை. வெகுநேரத்திற்கு பிறகு மீண்டும் தொடர்ந்தாள் சந்தனா.

“என்னால இந்த சம்பவத்துக்கு பிறகு கல்யாணம் பற்றி நினைக்கக்கூட பிடிக்கவில்லை. கல்யாணம் செஞ்சுக்க வர வரன்கிட்டே என்னை பற்றி சொல்லணும். இதை திரும்ப திரும்ப சொல்வது மூலமா என்னால இந்த சம்பவத்தின் தாக்கத்துல இருந்து மீள முடியாம போகுது. அதுமட்டுமேயில்ல,என்னால கணவன் – மனைவி  வாழ்க்கைக்கு தயாராக முடியும்னு தோணல. அந்த விஷயத்தை நினைத்தாலே மனம் நடுங்குது.” என்றுவிட்டாள்.

இதற்கு மேல் தன் நிலைமையை சொல்ல முடியாது. தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தும் பெற்றவர்களுக்கும் என் நிலை புரியட்டும் என்று தான் எல்லோரையும் வைத்துக் கொண்டு  சந்தனா உடைத்துப் பேசியதே!

பெற்றவர்கள் உணராததா?

தனது பயிற்சியை  முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ராகினி  யாரோ வீட்டுக்கு வந்திருக்கிறார்களே என்று தயங்கி வாசலில் நின்று கொண்டிருக்க,உள்ளே அக்கா பேசுவது கேட்டது. “அக்காதான் என்னுடைய உண்மையான அம்மாவா “என்று அடைத்துக்கொண்டு வந்தது ராகினிக்கு. அம்மா சிறுவயதில் பட்ட கஷ்டத்தை கேட்டிருந்த ராகினி இனி கடைசி வரை இந்த ரகசியம் தனக்கு தெரிந்தது போல காட்டிக்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

வெகு நேர அமைதியை கிழித்துக்கொண்டு விஜய் ராகவன் பேசினான். ” எனக்கு நா தேடுறது என்னோட வாழ்க்கை துணையை. நீ சொன்ன எந்த விஷயமும் என்னோட முடிவை பாதிக்காது. செ*க்*ஸ் கல்யாண வாழ்க்கையோட பகுதி தான்.வாழக்கை அதோடு முடியறது இல்லை. எனக்கு உன்னை ரொம்பவே பிடிச்சிருக்கு.எப்போ கல்யாணம் வச்சிக்கலாம் சொல்லு.” என்றான்.

வாணிக்கும் ஆனந்துக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை.வெறும் பரிதாபம் மட்டும் கொண்டு என்ன செய்ய முடியும்?  கீதா அரங்கன் இருவருக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவசரமாக உள்ளே சென்று ஒரு தட்டில் வெல்லம் வைத்து எடுத்துக்கொண்டு வந்து தனது ஒப்புதலை கொடுத்தார் கீதா.

இப்போது தடுமாறுவது சந்தனாவின் முறை ஆனது.அவள் இந்த திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. விஜயன் அரங்கனிடம்,”சார், உங்க பெண்ணை நா வெளியே கூட்டிட்டு போயிட்டு வரட்டுமா?” என்று அனுமதி கேட்டு நின்றான்

” சார் இல்ல,மாமான்னு கூப்பிடுங்க மாப்பிள்ளை.தாராளமா கூட்டிட்டு போங்க.ராத்திரி ரொம்ப நேரம் செய்யாதீங்க”என்று அனுமதி கொடுத்தார் அரங்கன். இனியும் வாசலில் நின்றால் சரியாக இராது என்று நினைத்த ராகினி அப்போதுதான் வருவது போல உள்ளே நுழைந்தாள். கீதா ராகினியிடம்,”உன்னோட அக்காவுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கு ராகி “என்றுவிட்டு அவள் வாயில் வெல்லத்த்துண்டை ஊட்டினார்.ராகினிக்குள் ஏதோ அடைத்தது.அம்மா என்று தெரிந்த பிறகும் அக்கா என்று அழைக்க வேண்டும்.

கீதாவுக்கு அரங்கனுக்கும் இத்தனை வருஷங்களில் ராகினி தங்கள் மகள் இல்லை ,பேத்தி என்பது எப்பபோதாவது தான் ஞாபகம் வரும். விஜயன் ராகினியை பார்த்த பார்வையில் வாஞ்சை இருந்தது. அதை குறித்துக்கொண்ட சந்தனா அவனுடன் சந்தோஷமாகவே கிளம்பினாள்.

❤️ Loading reactions...
1 Comment
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page