திருக்குறள்
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.
அதிகாரம் நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1300
அத்யாயம் -30
“அது..நீங்க..நீங்க எப்படி அங்க …அதாவது நீங்க அங்கப் போகும்போது நான் கதிரை உங்க கிட்ட கொடுக்க முடியாது. “
“நானே அங்க போவேணான்னு தெரிலை இதயா “
“ஏன் ?”
“பயமா இருக்கு இதயா “
இத்தனை நேரம் அவள் முகம் பார்த்து பேசியவன் முகம் அவள் கண்களைப் பார்க்க முடியாமல் தானாகவே வேறு பக்கம் திரும்பிக் கொண்டான். இயலாமையா அல்லது அவமானமா?
“பயமா உங்களுக்கா ?”
அவன் என்ன பதில் சொல்லப் போகிறான். அவன் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் .
இது வரைக்கும் எந்த பிரச்சனை கண்டும் நான் பயந்ததே இல்லை. ஆனா அவங்களோட நம்பிக்கை துரோகம் , பொய்யான பாசம் என்னை ரொம்ப பயப்பட வைக்குது இதயா . அவனின் நிலைமை அவளுக்குப் புரிந்தது.
“சித்தி என்னை பார்த்து ராஜான்னு கூப்பிட்டா நான் என்ன பண்ணுவேன்? சித்தப்பா என்னை பார்த்து எப்படிப்பா இருக்கன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்லணும். உங்க எல்லா விஷயமும் தெரிஞ்சுருச்சுன்னு சொல்லனுமா கூடாதா? ஒருவேளை நான் என்னையும் மீறி அவங்களோட உண்மையான முகம் எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டால் உனக்கும் கதிருக்கும் உயிருக்கு கூட ஆபத்து வரலாம். ஏற்கனவே ஒரு தடவை உன்னை இரத்த வெள்ளத்துல பார்த்தவன் நான். இன்னொரு முறை உன்னையோ இல்ல கதிருக்கோ ஏன் கார்த்திக் கூட கொலை செய்ய அவங்க தயங்க மாட்டாங்க .
அவன் சொல்வது எல்லாம் உண்மைதான். போலீஸ் மூலம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. சித்தப்பா தான் அங்கே இருக்கும் காவலர்களை பத்திரமாக பார்த்துக் கொள்கிறார். அதை மீறி ஏதாவது செய்தாலும் சிறையில் இருந்து கொண்டு கூட அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஒருவேளை நேர்மையான அதிகாரி விசாரித்தா
ல் அவர் மீது பல வழக்குகள் இருக்கும்.
இவர் என்ன செய்யப் போகிறார்?
எனக்கு கொஞ்சம் டைம் கொடு இதயா . எல்லா பிரச்சனைக்கும் ஏதாவது ஒரு வழி யோசிக்கிறேன். நீயும் கதிரும் முழு உரிமையோடு அங்க வரணும். நாம சந்தோஷமா வாழனும்.
‘அங்கே வந்து அவருடன் வாழ முடியுமா ? அதற்கு நான் தயாரா?’
“என்ன தாமரை . எதுவுமே பதில் சொல்ல மாட்டேங்கற?”
“எல்லா பிரச்சனையும் சரி ஆகிடுச்சுன்னா நீங்க கதிரை கூட்டிகிட்டு போங்க. நான் வரல. வேணுன்னா நான் உங்களுக்கு விவாகரத்து கொடுக்க சம்மதிக்கறேன். வேற பொண்ண ,.”
“நம்ம கட்டில்ல வேற பொண்ணை நான் அனுமதிப்பேன்னு நினைச்சியா?”
“இல்ல அப்படி இல்ல.. நீங்க எனக்காக காத்திக்கிட்டு எதுக்கு ?”
” இதயா ப்ளீஸ்.. மனசுல என்ன இருக்குன்னு சொல்லு இதயா .நான் நிறைய தப்பு பண்ணி இருக்கேன். இல்லன்னு சொல்லல. ஆனா என்னை மன்னிக்கக் கூடாதா ?”
கணவனின் இந்த கெஞ்சலில் அவளையும் அறியாமல் கண்ணீர் முட்டியது. அவள் , அவன் காதலில் திளைத்து கட்டிலில் காமம் கொண்டவள். அவன் காமத்தில் ஆரம்பித்து இதோ இப்போது அவன் அவள் காதலுக்காக காமத்துக்காக கெஞ்சுகிறான் . தீர்வு நிச்சயம் அவளிடம் இல்லை. இப்போதைக்கு அவள் சரி என்று சொல்லி விட்டு எதிர்காலத்தில் மீண்டும் அவன் அந்த மாதிரி ஒரு வார்த்தையை சொல்லி விட்டால் இவளால் தாங்க முடியாது.
பைத்தியம் என்ற சொல் கீர்த்தியை துரத்தியது போலத் தான் இதுவும். கொண்டவன் சொல்லும் வார்த்தை ஈட்டி போல இன்னும் அதிகமாக குத்துகிறது.
“ப்ளீஸ் இதயா சொல்லு “
மௌனம்.
“இங்க பாரு இதயா . ஏற்கனவே நான் உன்ன புரிஞ்சுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனக்கு மனிதர்களைப் படிக்கச் தெரியாது . நீ தான் எனக்கு சொல்லிக் கொடுக்கணும் “
மௌனம் .
“நமக்குள்ள இனி எந்த ஒளிவு மறைவும் வேண்டாம் இதயா . ப்ளீஸ்..”
மௌனம் ..
“சரி இதுக்கு மேல எனக்கு என்ன சொல்லறதுன்னு தெரியல. வேற கல்யாணம் செய்துக்கணுமா? சரி. நீயே ஒரு நல்ல பொண்ணா பாரு . ஆனா ஒரு கண்டிஷன். அவ கூட நான் இருக்கும்போது நீ மட்டும் தான் என் நினைவுல இருப்ப. சரி என்றால் எனக்கும் ஓகே தான்.
அவள் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவன் எழுந்துக் கொண்டான். அவன் மணிக் கட்டை பிடித்து நிறுத்தினாள்.
“அது .. அன்னிக்கி.. உங்க உடம்புக்காக நான் அலையறேன்னு..”
“இப்போது அவனின் தப்பு என்ன என்பது அவனுக்கு புரிந்தது .
“இது தான் விஷயமா? அன்னிக்கு நான் சொன்னது தப்புதான். என்னால மன்னிப்பு எல்லாம் கேக்க முடியாது. அப்போ எல்லாம் முட்டாப்பயலா இருந்தேன் . உனக்கேத் தெரியும். அதை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு..”
மௌனம். அவள் முகம் இன்னும் தெளியவில்லை .
முகம் திரும்பியவள் முகத்தை தன்னை நோக்கிப் பார்க்க வைத்தான்.
“இவ்ள தானே உன் பிரச்சனை. ப்ளீஸ் இதயா . என்னை ஏத்துக்கோ . எனக்கு உன் காதல் வேணும். அள்ளி கொடுக்கற முத்தம்., உன்னுடைய இதய துடிப்பு., அழகான அந்தரங்கம் , கொஞ்சல் சிணுங்கல் , முனகல் எல்லாம் வேணும். உன்னோட உடம்புக்கு நான் அலையறேண்டி. நீதாண்டி என்னோட கற்புக்கு சொந்தக்காரி.”
அவன் சொன்னதில் வெட்கத்துடன் கலந்த சிரிப்பு.
“ஜில்லு !”
எத்தனை நாட்கள் கடந்து வருடங்கள் ஆகி விட்டன இந்த ஒற்றை வார்த்தை., அவளின் அமைதியான புன்னகை அவளின் சம்மதம் சொன்னது. கட்டை விரலால் லேசாக கன்னம் தடவி இதழோடு இதழ் பதித்தான். இரண்டு கைகளும் அவள் முகத்தை ஏந்திக் கொண்டிருந்தது. இவள் கைகளையோ தலையணை அழுத்திக் கொண்டிருக்க பிடிவாதமாக அவள் கைகளை தன் தோள்களில் வைத்துக் கொண்டான்.
“இனிமே நான் எப்பவாவது உடம்புக்கு அலையறேன்னு சொன்னா, என் மண்டைல ஒரு கொட்டு குட்டி ஆமாண்டா புருஷா உன்னோட உடம்புக்கு தான் அலையறேன்னு சொல்லு . “
மறு வார்த்தை பேச விடாமல் அவள் வெட்கம் அவளைத் தடுத்தது.
கதிர் விளையாடிக் கொண்டிருந்த வாத்து இவர்கள் அறைக்கு வரவும் இருவரும் அமைதியானார்கள் . இதற்கு மேல் மனைவி அருகில் அமர்ந்தால் ஆபத்து என்று பிடிவாதமாக பிள்ளையுடன் சென்றவன் அவள் எதிர் பாராத நேரம் மீண்டும் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து விட்டுச் சென்றான்.
நாட்கள் யாரைப் பற்றியும் எனக்கு எந்த கவலையும் இல்லை என்று ஓடிக் கொண்டிருந்தது. கதிருக்காக இந்த இதயம் துடிக்கும் என்று பிள்ளைக்காக உயிர் மீண்டவள், இப்போதெல்லாம் தன் இதய துடிப்பாக மாறியவனை சைட் அடிக்க நாள் போதவில்லை .
மனைவி தன்னை ரசிக்க வேண்டும் என்பதற்காகவே சின்சியராக கிளீன் க்ஷேவில் காட்சி அளித்தான் .
ஒமேகா, டிஸோட், என்று விதவிதமாக அவன் கட்டும் கை கடிகாரம், மீசைக்குள் அடக்கிக் கொள்ளும் புன்னகை , மனைவிக்குப் பிடிக்கும் என்று புதியதாக நெற்றியில் இட்டுக் கொள்ளும் விபூதி, டி ஷர்ட், வேட்டி என்று படு ஜோராய் இருந்தான். என்ன ஒரே ஒரு குறை. அவள் ரசித்த கன்னத் தழும்பு இல்லை .
“நீ இல்லாத நேரத்துல அந்த தழும்பை பாக்கவே பிடிக்கலடி. சாரி “
“நான் கூட வேற ஏதோ பொண்ணு பார்த்து கல்யாணம் செய்துக்கத் தான் அதை நீக்கினீங்க ன்னு நினச்சேன் “
“இனிமே ஏதாவது இந்த மாதிரி பேசின ..” நாய் கடித்துவிடுவது போல போல சைகை செய்து காட்டி விட்டு சென்றான் .
இப்போதெல்லாம் மெதுவாக நடக்க நிற்க, பிறகு நடக்க ஆரம்பித்து விட்டாள் .
“அம்மா உந்தாத (விழுந்து விடாதே )”கதிர் தான் பெரிய மனிதன் போல இவள் நடக்க உதவுவான்.
மகனின் திருப்திக்காக அவன் கையை பிடித்துக் கொண்டாலும் அவள் அருகில் இருக்கும் பொருட்களை பிடித்துக் கொண்டே நடப்பாள் . அவனின் கைகளைப் பிடித்து அவள் நடக்க வைத்த நினைவுகள் அவ்வப்போது வந்து அவளை சந்தோஷமாக்குகிறது .
‘அம்மா இந்தா தண்ணி . அவன் குடித்து விட்டு மீதம் தருவான்.
“ஹனி போட்டியா கதிர் ?”
“இல்லையே !”
“அப்புறம் ஏண்டா இவ்ளோ ஸ்வீட்டா இருக்கு “
“அது பாப்பா குடிச்ச தண்ணி”கிளிக்கி சிரிப்பான்.
” அம்மா மேல பாப்பா இடிச்சுட கூடாது. அப்பாகிட்ட வாங்க.”
அம்மாவிடம் இல்லாமல் புதியதாக அப்பா மீது கால் போட்டு தூங்கும் பழக்கம் வந்திருந்தது.
வாழ்க்கை இப்படியே இருந்துவிடுமா ?
இப்போதெல்லாம் சித்தப்பாவிடம் இருந்து வரும் அழைப்புகளை இவன் ஏற்பதில்லை . மாறாக அலுவலக ஆட்கள் மூலமாக அல்லது whatsapp மூலமாக மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறான் . அவனுக்கு அவரின் குரல் கேட்க கூட பிடிப்பதில்லை .
இங்கு தாமரையிடம் கீர்த்தி வந்து அவ்வப்போது போது பேசிக் கொண்டிருப்பாள் .
“இந்தா குளோப் ஜாமுன். அத்தை செய்தாங்க.”
” ரொம்ப நல்லா இருக்கு. கதிர் சாப்பிட்டானா ? அவனுக்கு ரொம்ப புடிக்கும் “
“ம் ! ஒரே சமயத்துல மூணு அமுக்கிட்டான் . அத்தை தான் இது மேல வேண்டாம்னு நிறுத்திட்டாங்க “
மகனை நினைத்து அவளுக்கு புன்னகை வந்தது.
“என்ன விசேஷம் ?”
“அவங்க பையன் அப்பா ஆகப் போறானே “
“ஸூபர்டீ நீ அத்தையா ?”
முகத்தில் சந்தோஷம் இருந்தாலும் ஏதோ ஒரு கவலை.
“என்ன மேடம் என்ன ஆச்சு ?”
“அண்ணி இந்த மாதிரி உண்டாகி இருக்காங்கன்னு தெரிஞ்சதும் சொந்தகாரங்க சிலர் அத்தைக்கு போன் பண்ணி பேசினாங்க. அப்ப எல்லாரும் இங்க என்னை பத்தியும் கேட்டுருக்காங்க., இங்க எதுவும் விசேஷம் இல்லன்னு சொல்ல அத்தைக்கு ரொம்ப சங்கடமா இருந்துச்சு. அதான் “
“அவங்களுக்கு அப்புறம் தானே உங்களுக்கு ஆச்சு. அதுக்குள்ள என்ன அவசரம். இன்னும் ஒரு வருஷம் கூட ஆகலை . கொஞ்ச நாள் ஜாலியா இருக்க வேண்டியது தானே “
“அது எல்லாம் சரிதான். ஆனா கார்த்திக், சூர்யா சார் கிட்ட வேலைய விட்டுட்டு வந்ததுலேர்ந்தே சரியா இல்ல . கொஞ்ச நாள் லவ் பண்ணனும்னு சொன்னது அவன்தான். அதுக்கு அப்புறம் தான் ஆதவன் பிரச்சனை வரவும் உடனே என்னை கல்யாணம் செய்துக்கன்னு வந்து நின்னான் “
“எல்லாம் தெரியுமே. அது சரி உங்க ரெண்டு பேருக்குள்ள அந்த விஷயம் எல்லாம்..”
“அது எல்லாம் நல்லாத்தான் இருக்கு. இருந்தாலும் சாரை விட்டு வந்ததுல அவனுக்குள்ள அந்த விஷயம் ஒரு முள்ளு மாதிரி குத்திகிட்டே இருக்கு. அவருகிட்ட சொல்லவும் முடியாம அவன் ரொம்ப கஷ்டப்படறான். கார்த்திக் சூர்யா சார் கிட்ட எந்த ஒரு சின்ன விஷயத்தையும் மறைச்சதே இல்ல. அதுக்கு அப்புறம் பெரிசா காண்டாக்ட் எதுவும் இல்ல. இப்ப தினம் தினம் பாக்கறோம். அப்பவும் அவனுக்கு சொல்ல முடியாம மனசுக்குள்ள ரொம்ப கஷ்டப்படறான். ஏதோ சார் கிட்ட சொல்லாம மறைக்கிற மாதிரி அவனுக்கு மனசுக்குள்ள குத்திக்கிட்டே இருக்கு .எனக்கு இதை எப்படி டீல் பண்ணறதுன்னு தெரியல தாமரை .”
“புரியுது. கவலைப்படாத. ஏதாவது வழி கண்டுபிடிக்கலாம் “
“அது இருக்கட்டும் . உங்க அம்மா பையன ஏத்துக்கிட்டாங்களா ?
“அவங்க எங்க. ஆனா அண்ணி விடல. எங்க அம்மாவை போட்டு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாங்க போல. உங்க பிள்ளைக்கே பிள்ளை பொறக்க போகுது. இன்னும் உங்களுக்கு என்ன அவ்ளோ அடங்காத கோபம் பெத்த மகன் மேல. இப்ப நானும் அம்மா ஆகப் போறேன். ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கும் போதும் குழந்தை குழந்தைன்னு மனசுக்குள்ள தோனிகிட்டே இருக்கு. நீங்களும் அப்படித்தானே பார்த்து பார்த்து அவரை பெத்து எடுத்து வளர்த்திருப்பீங்க . இப்பவாவது உங்க மகன் மேல இருக்கற கோபத்தை தூக்கி குப்பைல போடுங்க. இந்த நிமிஷம் வரைக்கும் ஒரே ஒரு தடவையாவது நீங்க அவரை கட்டி அணைச்சு ஒத்த முத்தம் குடுப்பீங்களான்னு ஏங்குதுஉங்க பிள்ளை . அம்மா இருந்தும் எதுக்கு அவரை இப்படி அம்மா பாசத்துக்கு ஏங்க விடறீங்க . நீங்க பண்ணறது கொஞ்சம் கூட சரி இல்லை . நீங்க இனி எப்ப அவரு கிட்ட பேசி சகஜமா இருந்தா நானும் பேசுவேன். இல்லன்னா உங்க இஷ்டம்னு சொல்லிட்டு அமைதியா அவங்க அறைக்கு போய்ட்டாங்களாம். அண்ணா வீடு வந்ததுக்கு அப்புறம் அம்மாவே ராத்திரிக்கு மகன் மருமகன் ரெண்டு பேருக்கும் தோசை செய்து பையனுக்கு ஊட்டி விட்டுருக்காங்க “
“ஓ சூப்பர் ” என்றாள் தாமரை.
“சூப்பர் தான். பெத்த பொண்ணு என்னால செய்ய முடியாதது அண்ணி செய்துட்டாங்க. கிரேட் தான் அண்ணி “
“உங்க அண்ணி பயங்கர புத்திசாலி. தனக்கு பிள்ளை வர போகுதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமா பேசி இருக்காங்க. டைமிங் தான் அங்க வேலை செய்தது .
“ஆமா தாமரை . நீ சொல்லறது சரிதான்” என்றாள் கீர்த்தி
“உன்கிட்ட பேசினத்துக்கு அப்புறம் ரொம்ப ரிலாக்ஸ்சா இருக்குடி “
“எதுக்கும் கவலைப் படாத பாத்துக்கலாம் ” கீர்த்திக்கு தாமரை தைரியம் சொல்லி அனுப்பினாலும் இந்த பிரச்னையை எப்படி கையாள்வது என்பது அவளுக்கும் புரியவில்லை. இந்த விஷயங்களுக்கு தீர்வு சொல்லக் கூடியவன் தன் கணவன் தான். இரண்டு கல்லூரி நண்பர்களும் மனம் விட்டுப் பேச வேண்டும் .
கீர்த்தி சென்றதும் என்ன வழி செய்வது என்று இவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.
“இந்த இல்லாத மூளை என்ன யோசிக்குது ?”
வேட்டியின் நுனியை பிடித்துக் கொண்டு வந்து அமர்ந்தான் சூர்யா .
கீர்த்தி வந்து பேசிவிட்டுப் போன விஷயத்தைப் பற்றி சொன்னாள் .ஆனால் முழுவதும் சொல்லவில்லை . கார்த்திக்கு மன உளைச்சல் என்று மட்டும் சொன்னாள் அவள் .
“அவனுக்கு என்ன ஸ்ட்ரெஸ்? நான் அவன் கிட்ட பேசறேன்.”
“அதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட பேசணும் .”
“சொல்லு “
“உங்க அலுவலகத்துல பாலியல் தொல்லை நடந்தா என்ன பண்ணுவீங்க?”
“எப்படிப் பட்டதுன்னு பார்த்து விசாரிச்சு முடிவெடுப்பேன் . தேவைப்பட்டா வேலை விட்டு நீக்கி போலீஸ் கம்பளைண்ட் கூட குடுப்பேன்.”
“ஆணுக்கு ஆண் கொடுமை செய்தால் கூடவா ?”
“என்ன சொல்லுற நீ ” சூர்யாவின் குரல் இப்போது கடுமையாக மாறி இருந்தது .
“கார்த்திக்கு நம்ம ஆபிசுல அந்த மாதிரி நடந்துருக்கு “
“சில்லியா பேசாத. நம்ம ஆபிஸ்ல அவன் தான் எனக்கு அடுத்தது. தெரியும் தானே. அவனுக்கு மேல இருக்கறதே நான் தான். “
“நீங்க மட்டும்தானா?”
“அப்படின்னா ? புரியலை. சித்தப்பாவா?”
“இல்லை. ஆதவன் “
“போதும் தாமரை. எல்லாத்துக்குமே ஒரு லிமிட் இருக்கு “
“எனக்கும் தெரியும். நீங்க இந்த விஷயத்துல யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டீங்கன்னு ரொம்ப நல்லாவே தெரியும் . அதுனால தான் நாங்க யாருமே உங்ககிட்ட இதைப் பத்தி சொல்லவே இல்லை. உங்க கூடவே இருந்த கார்த்திக் திடீர்னு ஒரு நாள் வேலைய விட்டுப் போகிறேன்னு சொல்லறாரு. ஒடனே கல்யாணம் . ஒடனே வேற ஊரு. எதுக்கு? இப்பக் கூட அவன் மனசுக்குள்ள வச்சுக்கிட்டு புழுங்கிட்டு இருக்கான். நான் இன்னும் உண்டாகலையானு கேக்கறாங்கன்னு கீர்த்தி கவலையோடு சொல்லறா . அவ சொல்லறது பார்த்தா அவர்களுக்குள்ள உறவு கூட திருப்திகரமா இருக்கான்னு தெரியலை. அதை பத்தி நாம பேஸக் கூடாது. ஆனா கார்த்திக்கிட்ட அடுத்து பத்தி நீங்க பேசுங்க.” நீளமாக பேசினாலும் அவள் சொல்வதில் பொய் இருக்காது. ஆதவனுக்கு பெண்கள் மீது மட்டும் ஈர்ப்பு என்று நினைத்தான் அனிதா விஷயம் தெரிந்த போது . இது வேறு மாதிரி இருக்கிறதே. அவன் ஏற்கனவே அந்தப் போராட்டத்துக்கு போன போது அவனும் அதில் உறுப்பினரா?
நிறையத் தேடினான் . ஒன்றும் தெரியவில்லை. பிறகு முக நூலில் தேடி அவனின் உடலில் இருக்கும் டேடூக்களை வைத்து நண்பர்கள் பெயர் வைத்து பல விஷயங்களை பார்த்து அதிர்ந்து போய் விட்டான்.
இதற்கு நடுவே அவன் சித்தியிடம் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்து க் கொண்டே இருந்தது .
“ஆதவனிடமிருந்து எந்த தகவலும் இல்லை ரெண்டு நாளா அவனுக்கு நான் பேச முயற்சி செய்துக்கிட்டு இருக்கேன் . ஆனா அவன் நம்பர் போகவே இல்ல .”பயத்தில் அழுது கொண்டே சொன்னார் சித்தி .
“சரி. நான் பாக்கறேன்.” கவனமாக சித்தி என்ற வார்தையைத் தவிர்த்து விட்டான்.
அவன் மொபைல் நாட் ரீச்சபிள் என்றது. நண்பர்களை பற்றித் தெரியாது . அவன் தங்கி இருக்கும் வீட்டு விலாசம் கூட பெற்றவர்களுக்கு தெரியவில்லை .
‘செல்லம் கொடுக்க வேண்டியதுதான் அதற்குனு இப்படியா’ என்று இவன் பல்லை கடித்துக் கொண்டான் . வேறு என்ன செய்ய முடியும் ?
அவன் தோழமைகள் யார் என்று முக நூல் மூலம் கண்டு பிடித்து யார் யாருக்கோ செய்தி
அனுப்பினான் எந்த பதிலும் இல்லை . தனக்கு ஏற்கனவே உதவி செய்த அந்த தனியார் நிறுவனத்திடம் மீண்டும் பொறுப்பை ஒப்படைத்தான் .
அதேநேரம் இங்கே கார்த்திக்கிடம் பேசினான். இப்போது சூர்யாவுக்கு ஆதவன் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் . அதனால் இந்தப் பிரச்சினையை தள்ளிப் போடாமல் கார்த்திக்கிடம் சென்று பேச வேண்டிய நிலை அவசரமாக வந்துவிட்டது . இவன் சென்று கார்த்திக்கிடம் பேச ஆரம்பிக்கவும், கார்த்திக் தேம்பி தேம்பி அழுதான் . ஆண்களுக்கான அவமானம் தான் இது. தோளில் சாய்த்து சமாதானம் செய்தாலும் அடங்காதவன் முதுகில் இரண்டு அடிபோட்டதும் தானே சமாதானம் ஆனான் கார்த்திக்.
அன்றைய இரவில் நீண்ட கூடல். என்னை பைத்தியமாக்குற டா அவனின் பின் கழுத்தில் கைகளை அளித்துக் கொண்டவள் இதை தான் சொன்னாள் . அக்ஷய பாத்திரமாக அவன் வழங்கிய முத்தங்கள் புரிந்தது கீர்த்திக்கு . நானும் சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுவேன். உறங்கிய கணவனுக்கு லேசாக மீசை கடித்து முத்தம் வைத்தாள் மனைவி.
மறு நாள் மதியம் ஆதவன் எண்ணில் இருந்து சூர்யாவுக்கு அழைப்பு வந்தது .
தாமரை ஒரு நாள் பட்டுப்புடவை கட்டிக் கொண்டு ஒரு ஆண் வந்தான் என்று சொன்னாள் இல்லையா ? அவன் தான். ஆதவன் பெண்ணாக மாற எங்கோ அறுவை சிகிச்சைக்கு சென்றான். அவன் ஒரு போலி மருத்துவர் . ஆதவன் சீரியாசாக இப்போது வேறு ஒரு மருத்துவமனையில் இருக்கிறான். இடம் ஆந்திரா.
இதை எப்படி நம்ப? அவன் லொகேஷன் அனுப்பி இருந்தான்.
“நீங்க தனியாகப் போக வேணாம்.அகன் சாரை கூட்டிகிட்டு போங்க. எந்த ஹெல்ப் வேணுன்னாலும் அரவிந்தா மேடத்துக்கு கால் பண்ணுங்க. அவங்க உங்களுக்கு கைட் பண்ணுவாங்க “
வாயில் வரை சென்றான். திரும்ப வந்து மனைவியைக் கட்டிக் கொண்டான். அழுதவனின் முதுகை நீவி சமாதானம் செய்தாள் . “ஒன்னும் ஆகாது. கவலைப்படாதீங்க. கடவுள் இருக்கார்” சமாதானம் செய்து அனுப்பினாள் .
இப்போது அவள் மகனின் முகம் பார்க்க செல்வியின் ஜாடை தெரிந்தது. ஆமாம் ! கடவுள் இருக்கறாரு குமாரு . இது சொன்னது ஆத்தர்.
ஆதவனின் நிலை ரொம்ப கோரமாக இருந்தது. ரொம்ப சீரியஸ். பாக்கலாம் என்றார்கள். அவனுக்கு சுய நினைவு இல்லை.
அவன் எப்படி இருந்தாலும் எத்தனை தப்புகள் செய்தாலும் இவனைப் பொறுத்தவரை அவன் இவனுக்கு குழந்தை தானே. தம்பியின் தலை கோதினான் . எத்தனை அழகானவன். படிப்பில் கெட்டிக் காரன் . எங்கும் எதற்கும் பயந்தது இல்லை. அதுதான் இங்குப் பிரச்சனை . தப்பு செய்ய பயப்பட வேண்டும் . அது இல்லாததால் வந்த நிலை தான் இது.
யாருக்கு சொல்லணுமோ சொல்லிடுங்க. மருத்துவர் சொல்லி விட்டார். மூளை இறந்து விட்டதாம். இதயம் துடிக்கிறதாம். வென்டிலேட்டர் எடுத்து விட்டால் என்ன ஆகும் என்று தெரியவில்லை .அகன் தான் சித்தப்பாவுக்கு மற்றவர்களுக்கு விஷயம் சொன்னான். அவனின் ஆண் காதலி வரவில்லை. தாய்லாந்தில் இருக்கிறானாம் . வேறு சில நண்பர்கள் மட்டும் வந்தார்கள் .
மகனுக்கு தந்தை கொல்லி வைத்தார். அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த சித்தி எதுவும் பேசவில்லை தங்களின் பாவம் தான் இப்படி என்றுப் புரிந்தது. அம்மா அம்மா என்ற மகனின் குரல் காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது . பெட்ற வயிறு கலங்கியது . இங்கே ஆதவனின் காரியத்துக்கு ஆண்கள் செல்ல , அறையில் தனியாக இருந்த சித்திக்கு ,
“அம்மா வேண்டாம்மா ப்ளீஸ் மா ரொம்ப வலிக்குது ரத்தமா வருது. ரொம்ப பயமா இருக்கும்மா ” செல்வியின் குரல் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது. காதை மூடிக் கொண்டார். அப்போதும் நிற்கவில்லை . அதை கேட்டுக் கேட்டு பைத்தியம் பிடித்த மாதிரி ஆனார்.
” போ செத்துப் போ . இப்பவே செத்துப் போ . அப்பதான் உனக்கு நிம்மதி.”காதில் கேட்டுக் கொண்டே இருந்தது . ‘ஆமா! ஆமா! நான் செத்து போகணும் அப்ப தான் எனக்கு இந்த குரல் கேக்காது . எனக்கு இந்த குரல் கேக்க வேணாம். போ போ” என்று கத்திக் கொண்டே அவசரமாக தூக்கில் தொங்கினார்.
செய்த பல தப்புகளுக்கு மனைவி நாக்கை பிடுங்கி கொண்டு செத்து விட்டாள் . இனி நான்? புரியாமல் இருந்தார் சித்தப்பா
குலுங்கி குலுங்கி அழுதால் மட்டும் என்ன ? மனைவியின் முகமும் மகனின் முகமும் கண்ணில் வந்துக் கொண்டே இருந்தது. அவர்களின் அஸ்தியை வைத்துக் கொண்டிருந்தவருக்கு, இனி தான் இங்கு இருக்கக் கூடாது . உடனே வேகமாக எழுந்து வெளியில் கண்மண் தெரியாமல் ஓடியவரை பெரிய லாரி அடித்து தூக்கி வீசப்பட்டார். லாரி ட்ரைவர் தொலைந்துப் போன தாமரையின் தந்தையாக இருக்கலாம் . கையில் வைத்திருந்த மனைவி மகன் இருவரின் அஸ்தி பாத்திரம் மாட்டும் காலியாக கிடைத்தது .
பொட்டலமாக கட்டி கொடுத்த சித்தப்பாவுக்கு அவர் மகன் தான் கொல்லி வைத்தான் . வேறு யார் கதிர் தான் .
சித்தப்பாவின் அஸ்தியையும் கையில் வைத்துக் கொண்டிருந்தான் சூர்யா.
அவர்கள் ஊர் ஆறு இன்னும் சரியாகவில்லை. அருகில் இருந்த தொழிற்சாலை சாயப்பட்டறை கழிவுகளுடன் பல வண்ணங்களுடன் நுரை அப்பி க் கிடந்தது.
ஆற்று மணல் திருடுபவனுக்குக் கூட அஸ்தி கரைக்க ஆறு தேவ(தை) தான் இல்லையா ?
அமைதியாக எல்லாம் நடந்து முடிந்து விட்டது.
இரவில் சூர்யா யோசித்துக் கொண்டிருந்தான் . இவர்களைக் கொன்றது அவர்களின் பாவமா ? அல்லது செல்வியா ? எனக்கும் அந்த கேள்வி இருக்கிறது .
பல கோர சம்பவங்களை உள் வாங்கிய அந்த அரண்மனை வேண்டாம் என்று இடித்து தள்ளி விட்டான் சூர்யா. அரண்மனையாக இல்லாமல் சின்ன பங்களா போல கட்டி விட்டான் . மனைவியோடு சேர்ந்து புது வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தவன், தங்கத்தால் ஆன தாலியை அவளுக்கு கட்டி விட்டான். பெண் வீடு பிள்ளை வீடு ஆட்கள் யாருமே ஆசிர்வதிக்க இல்லை. இருந்தாலும் அவர்களை சுற்றி பல பேர் இருந்தார்கள். அத்தனை பேரும் நல்ல உள்ளங்கள் . அனிதாவுக்கு இரட்டை பிள்ளைகள், வந்தனாவுக்கு ஒரு பெண் அப்ப கீர்த்தி ? ஆன் திவே . இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். கார்த்திக் கூட சூர்யா கூடவே வந்துட்டான். அப்ப அந்த பெட் கேர் ? ஒரு ரிட்டையர்டு ஆர்மி அதிகாரி வாங்கிக் கொண்டார். அவர் அங்கே பல நாய்களை பயிற்சிக்கு தயார் செய்தவர் . அவரால் வரும் நாய்களை நன்றாக பார்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் அத்தையும் சரி சொல்லி விட அவரிடம் அதை கொடுத்து விட்டு இவர்கள் இங்கே வந்து விட்டார்கள் . அகனின் அந்த ரிஸார்டு இப்போது சூர்யா தான் பார்த்துக் கொள்கிறான்.
சூர்யா இதயாவுக்கு இடையே இன்னும் பழையபடி உறவு ஆரம்பிக்கவில்லை. இவளுக்கு அங்கே மைசூரில் பக்கத்தில் இருந்த அம்மா இப்போது இவர்களுடனேயே உதவிக்கு வந்து வந்து விட்டார் . முதலில் எல்லாம் அவருக்கு சூர்யாவை பிடிக்காது தான் என்றலும் இப்போதெல்லாம் தன்னுடைய மகள் மீது மருமகன் வைத்திருக்கும் காதலை தான் பார்த்துக் கொண்டிருக்கிறாரே .
“பிள்ளையை நான் வச்சுக்கறேன்” பிடிவாதமாக வளர்ப்பு மகளுக்கு அலங்காரம் செய்து அனுப்பி விட்டார் அவர்.
பிறகு என்ன தழும்பு இல்லாத அவன் கன்னத்தில் அவளின் முத்த ஊரவலங்கள் போக மொத்தமாக அவளை எடுத்துக் கொண்டான் அவளின் நாயகன். இனி எப்போதும் அவனின் இதயம் அவளுக்காக துடிக்கட்டும்….
ஹை பிரண்ட்ஸ், இது ஒரு லாங் ஜர்னி தான் இல்லையா? அதாவது பிரயாணம். நான் கதைல ஏற்கனவே சொன்ன மாதிரி தான் . ஒவ்வொரு பிரயாணம் ஒவ்வொரு மாதிரி தான் இல்லையா? இந்த பிரயாணம் உங்களுக்கு கண்டிப்பா பிடிச்சுருக்கும் .
கதை உன்னிப்பா படிச்சவங்களுக்கு இன்னும் அவன் வேண்டுதல் நிறைவேத்தலன்னு பொறி தட்டும்.
அவங்களுக்காக இது…
அவங்களோட பெண் குழந்தை . அந்த நீர் நிலையில் காலை வைத்து வைத்து எடுத்தார்கள். புத்தம் புது சின்ன பூ பாதம். கையில் சிறு வண்ண மலர்கள் . தவளமும் வாகையும் கையில் கொடுத்து அந்த நீருக்கு போட்டுகை கூப்பினார்கள் . அந்த அழகிய சுத்தமான நீர் நிலையில் கணவனும் மனைவியும் குழந்தைக்கு காதில் பேர் சொன்னார்கள்
காவிரி காவிரி காவிரி ..
இயற்கை அன்னையின் ஆசீவாதங்களுடன் …
சுபம் .
