ரசிகை – 27

ஞாயிற்றுக்கிழமை காலை… திருமண மண்டபமே களைகட்டியிருந்தது. 

ஒன்றுமே நடக்காதது போல போலிச் சிரிப்போடு மண்டபத்திற்குள் நுழைந்தது பிரபாவின் குடும்பம். மங்கையின் கழுத்திலும் காவ்யாவின் மேனியிலும் தகதகவென ஜொலித்த கவரிங் நகைகள், அவர்களின் கௌரவத்தைச் சுமக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தன. 

“வாயாடி திவ்யா எங்க காணோம்?” என்று கேட்டவர்களிடம் எல்லாம், 

“அந்தக் கழுதை இன்னும் மேக்கப் பண்ணிக்கிட்டு இருக்கு. அவ வர்றதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் போல தெரியுது! அதுவரைக்கும் நாம உட்கார்ந்துட்டு இருக்க முடியுமா?” என்று பொய் சொல்லி சமாளித்தனர்.

பட்டு வேஷ்டி பட்டு சட்டையில் மணமகன் அறைக்குள் குறுக்கு நெடுக்காக நடந்து கொண்டிருந்தான் முத்து.

“சூர்யா இன்னும் வரலையே? ஒருவேளை அவன் வராமலே போயிடுவானோ?” என்ற தவிப்போடு, அடிக்கொரு முறை வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான். நேரம் ஒரு பக்கம் நகர்ந்து கொண்டே இருக்க, விதி அவனைக் கைபிடித்து இழுத்துச் சென்று மணமேடையில் அமர வைத்தது. 

ஐயர் மந்திரங்களை ஓதியபடி, “பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ!” என்று கூற, காவ்யாவை மேடைக்கு அழைத்து சென்றார் மங்கை. 

‘எழுந்து ஓடி விடலாமா?’ என்ற மனநிலையில் இருந்த மாப்பிள்ளை, தப்பி தவறி கூட அவள் பக்கம் திரும்பி பார்க்கவில்லை.

காவ்யாவோ, ஒரு தேவதையைப் போலத் தலைகுனிந்து மேடையை நோக்கி நடந்து வந்தாள். மண்டபத்தில் இருந்த அத்தனை கண்களும் அவளையே மொய்த்துக் கொண்டிருந்தன. மங்கை தன் மகளின் அழகைப் பார்த்துப் பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டே நடந்தார். மண மேடைக்கு இரண்டு அடி தூரம் இருக்கையில் அந்த விபரீதம் நிகழ்ந்தது!

மேடைக்கு இருபுறமும் இருந்த அந்தப் பெரிய எல்.ஈ.டி (LED) திரை திடீரென கறுப்பானது. அதுவரை கல்யாண வீடியோ கவரேஜ் ஒளிபரப்பாகி கொண்டிருந்த டிவி திடீரென நின்று போனதால், எல்லோர் பார்வையும் அதன் பக்கம் திரும்பியது. கல்யாண மண்டபத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒரு வீடியோ அதில் ஒளிபரப்பாக ஆரம்பித்தது.

அன்று ஷாப்பிங் மாலில் காவ்யாவும் திவ்யாவும் பூர்ணிமாவின் கையில் இருந்த வாட்ச்சை பிடுங்கிக் கொண்டு, அவளை அடித்து கீழே தள்ளி கேவலமாகப் பேசிய வீடியோ அப்பட்டமாக ஒளிபரப்பானது. 

பதறிப்போன காவ்யா, “இல்ல, இது நான் இல்ல… வேற‌ யாரோ… ஏஐ வச்சு பண்ணிருக்காங்க… நான் இப்படி எல்லாம் பண்ண மாட்டேன்” என்று பதறிக் கொண்டு பிதற்றினாள்.

அந்தோ பரிதாபம்! வீடியோக்கள் அதோடு நிற்கவில்லை… கடந்த வருடம் கல்லூரி இறுதியாண்டு படிக்கையில், நெருங்கிய தோழி ஒருத்தியை படிக்கட்டில் இருந்து தள்ளி விட்டு, அந்த பெண் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து சிரிக்கும் வீடியோ வந்தது. பாவம், அந்த பெண் உயிர் பிழைத்தாலும் இன்னும் கோமாவில் இருக்கிறாள்…

இதற்குள் அடுத்த வீடியோ வந்துவிட்டது. வீதியில் ஓரமாக விளையாடிக் கொண்டிருந்த நாய் குட்டி ஒன்றை உதைத்து தள்ளினாள். சின்னஞ்சிறு பிஞ்சு உயிர் சுற்றில் பறந்து போய் மோதி, சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது. 

மொத்த கூட்டமும், “என்னம்மா இது? ஒன்னு போனா ஒன்னுனு வரிசையா வந்துகிட்டே இருக்கு. இது எல்லாத்தையும் ஏஐனு சொல்ல போறியா?” என்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர். 

காவ்யா பதில் சொல்வதற்காக குரல் உயர்த்தும் முன், அவள் குரலில் ஒரு ‘கால் ரெக்கார்டிங்’ மண்டபம் முழுக்க எதிரொலித்தது.

“ஏய், அந்த சுனிதா இருக்காளே… அவளைப் பத்தி அவ பாய் ப்ரெண்ட் கிட்ட ஒரு பொய்யைச் சொல்லி விட்டுட்டேன். அவன் இவ இன்னொரு பையனோட அஃபேர்ல இருக்குறானு நம்பிட்டான். இப்போ ரெண்டு பேருக்கும் பெரிய சண்டை. அவன்‌ சுனிதாவ கார் எடுத்துட்டு வந்து ஆக்ஸிடென்ட் பண்ணிட்டான்டி. இப்போ தான்‌ ஹாஸ்பிடலுக்கு போய் அவளை பார்த்துட்டு வரேன்… நான் எந்த தப்பும் பண்ணலனு அவ எங்கிட்ட வந்து அழுறாடி… எனக்கு எவ்வளவு காமெடியா இருக்கு தெரியுமா?” என்று அவள் கர்வமாகச் சிரித்துப் பேசிட,

பரிசு பொருளோடு முதல் வரிசையில் அமர்ந்திருந்த சுனிதா விருட்டன எழுந்தாள். 

“த்தூ… நீயெல்லாம் ஒரு மனுஷியாடி? பிசாசு…” என்று திட்டியவள், கொண்டு வந்த பரிசையும் தூக்கி எரிந்து விட்டுப் போனாள்.

அடுத்து வந்த ஆடியோ, அங்கிருந்தவர்களின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

“ஆமாடி, எங்க பக்கத்துவீட்டு சுமதி அக்கா அவங்க ஹஸ்பெண்ட் வேலைக்கு போனதும் பின் வாசல் கதவை திறந்து வச்சுருவாங்க. அவங்க வீட்டுக்கு தினம் ஒரு ஆம்பளை வருவான். மத்தியானம் 12 மணிக்கு, ஜன்னல் பக்கம் போய் நின்னா கிளுகிளுப்பா ரெண்டு பேரும் பேசிக்கிறது எல்லாம்  காதுல விழும்…” என்று பேசிக்கொண்டே போனாள்.

மிரண்டு போன சுமதி, “ஐயோ, எங்க வீட்டுக்கு பின் வாசலே கிடையாதுங்க. என்னமா பொய் சொல்றா இவ?” என்று கண்ணைக் கசக்க, 

அவள் கணவனோ தன் செல்போனை எடுத்து, “ஹலோ சித்தப்பா, நான் ரவி பேசுறேன். எங்க பக்கத்து வீட்டு பொண்ணு மேல உடனே ஒரு கேஸ் போடணும். என்ன ப்ரொசீஜர்னு சொல்றீங்களா?” என்று கேட்டு, அந்த இடத்தையே அதிர வைத்தான்.

“என்ன பொண்ணு இதெல்லாம்? பாக்குறதுக்கு மகாலட்சுமி மாதிரி இருந்துட்டு மனசுக்குள்ள இவ்வளவு நஞ்சை வச்சிருக்காளே?” என்று கூடியிருந்தக் கூட்டம் மொத்தமும் அவளை ஒரு கேவலமானப் பிறவியைப் போல வேடிக்கைப் பார்த்தது.

காவ்யா சிலையாக உறைந்து நிற்க, மங்கையின் முகம் சாம்பல் பூத்தது போல மாறியது. பிரபாவுக்குத் தன் காலடியில் இருந்த பூமி மெல்ல நழுவுவது போலத் தோன்றியது. ஊர் உலகமெல்லாம் கூப்பிட்டு வைத்துவிட்டு, இப்போது தன் மகளின் அசல் முகத்தை எல்லோரும் அசிங்கமாகப் பார்ப்பதை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

ஆனால் பாவம்! சூர்யாவின் ஆட்டம் இப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது என்பது அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை! 

இத்தனை கூட்டத்தில் சந்தோஷமாக இருந்த ஒரே ஜீவன் என்றால், அது முத்து மட்டும்தான்.‌ சம்மணம் போட்டு மேடையில் அமர்ந்திருந்தவன் முகமே பிரகாசமாக ஜொலித்தது. 

இந்த அதிர்ச்சியிலிருந்து முதலில் மீண்டது மோகனா தான்! தன் வீட்டுக்கு வரப்போகும் மருமகளைப் பற்றி ஊரே பேசத் தொடங்கியதும், கௌரவத்திற்காக அவர் குரல் உயர்த்தினார்.

“யார் இதெல்லாம் பண்ணிட்டு இருக்கிறது? என் மருமகளைப் பத்தி எனக்குத் தெரியும். அவ யாருக்கும் எந்தத் துரோகமும் நினைக்காதப் பொண்ணு. சும்மா ஏதோ ஒரு வீடியோவும் ரெண்டு ஆடியோவும் கிடைச்சா என்ன வேணா பேசுவீங்களா? நிப்பாட்டுங்க இதெல்லாம்!” என்று மோகனா சபையில் சத்தமிட்டார்.

“ஏம்மா, இத்தனை ஆதாரம் தந்திருக்காங்க. நீ என்னன்னா முழு பூசணிக்காயை சோத்துக்குள்ள மறைக்க பார்க்கிறியே?” என்று ஒரு சிலர் குரல் எழுப்ப, 

“ஒரு ஓட்ட கம்ப்யூட்டர் இருந்தா என்னையும் உன்னையும் வச்சுக்கூட இதெல்லாம் பண்ண முடியும். இதோ என் பையன் முத்து, அவனே விஜய் மாதிரி அஜித் மாதிரி வீடியோ பண்ணி காட்டிருக்கான் தெரியுமா? எதுவா இருந்தாலும் நேரடி சாட்சி கொண்டுவாங்க. இல்லனா எங்க வீட்டு பொண்ண பத்தி குறை சொல்லாதீங்க.”

அவளது ஆக்ரோஷமானப் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது போல, சபையின் நடுவே கூட்டத்தைப் பிளந்து கொண்டு வந்து நின்றாள் ஒருத்தி. 

“சாட்சிதான மதினி, இதோ வந்துட்டேன்….” என்று சொல்லிக்கொண்டே அங்கு வந்தது, சாட்சாத் பத்து வருடங்களுக்கு முன்னால் ஊரை விட்டு ஓடிப்போன வசந்தா. பூர்ணிமாவின் சித்தி!

“இப்ப நீங்க பார்த்த வீடியோ எல்லாத்தையும் இங்கே ஒளிபரப்பு செஞ்சது நான்தான்.”

“ஓடுகாளி கழுத, உனக்கு இங்க என்னடி வேலை?”

“என் வாழ்க்கையைக் கெடுத்த உன் அண்ணனையும் அண்ணியையும் பழிவாங்க வந்து இருக்கேன். அவங்கள அவ்வளவு சுலபத்துல விட்டுட்டுப் போயிடுவேனா என்ன?” என்று வசந்தா ஆவேசமாகக் கேட்க, அத்தனை பேர் பார்வையும் அவள் பக்கம் திரும்பியது. மங்கையின் முகம் சட்டென வெளிறிப் போனது.

கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர், “என்னம்மா சொல்ற? நீ யார்கூடயோ ஓடிப் போயிட்டதா இல்ல சொன்னாங்க?” என்று சந்தேகமாகக் கேட்க, வசந்தாவின் விழிகளில் கண்ணீர் முட்டியது.

“ஆமா… ஓடிப்போனேன். ஆனா என்னை ஓட வச்சதே இவங்கதான்! என் புருஷனுக்கு ரெண்டாவது கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சும், கட்டாயப்படுத்தி என்னை அவருக்குக் கட்டி வச்சாங்க. ஆனா அந்த மனுஷன் என் கூட வாழவே இல்ல. வயசும் வாலிபமும் என்னைச் சில தப்புகள் செய்ய வச்சது நிஜம்தான். ஆனா அதையே இவங்க தங்களுக்குச் சாதகமா மாத்திக்கிட்டாங்க. என் தப்பை என் புருஷன் கிட்ட சொல்லிடுவேன்னு மிரட்டினாங்க. என் குழந்தைகளை நடுத் தெருவுல நிறுத்திடுவேன்னு பயமுறுத்தினாங்க!”

வசந்தா பேசப் பேச மண்டபமே நிசப்தமானது. 

அவள் தொடர்ந்து, “இது எதுவும் நடக்காம இருக்கணும்னா என் புருஷன் போதையில் இருக்கும் போது அவர்கிட்ட வெத்துப் பத்திரத்துல கையெழுத்து வாங்கித் தரச் சொன்னாங்க. வாங்கித் தந்தா என்னை விட்டுடுவாங்கன்னு நம்பி நானும் செஞ்சேன். ஆனா, காரியம் முடிஞ்சதும் என்னை ராத்திரியோட ராத்திரியா அடிச்சு விரட்டிட்டாங்க!” என்று தேம்பி அழுதாள்.

வசந்தா சொன்னதில் கட்டாய கல்யாணமும், தங்கதுரை அவளோடு வாழவில்லை என்பதும் மட்டுமே உண்மை. 

சொத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்டவர்களை, ‘அப்படிலாம் சொத்து வேண்டாம்னு கையெழுத்து வாங்கி தர முடியாது. உன்னால ஆனதை பாத்துக்க’ என்று மிரட்டலாக சண்டைக்கு சென்றாள்.

ஆனால், இப்போது சூர்யாவின் மிரட்டலும் அவனுக்குப் பின்னால் இருக்கும் அதிகாரமும் அவளைப் பணிய வைத்திருந்தது. சூர்யா போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச்சின்படி, மொத்தப் பழியையும் பிரபா குடும்பத்தின் மீதே திருப்பிப் போட்டுவிட்டாள்.

வசந்தாவின் இந்தத் திடீர் வாக்குமூலத்தை மறுத்துப் பேசக் கூடப் பிரபாவிற்கும் மங்கைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏற்கனவே காவ்யாவின் குரூரமானக் குணங்கள் திரையில் பட்டியலிடப்பட்டிருந்ததால்,  மொத்த குடும்பமும் இப்படித்தான் போல என ஊரே ஒரு முடிவுக்கு வந்துவிட்டிருந்தது. 

“இதுக்கு மேல இவங்க கல்யாணத்துல கை நனைக்கணுமா? இவங்க போடுறச் சாப்பாட்டுல விஷம் வச்சாலும் வைப்பாங்க… வாங்கய்யா கிளம்பலாம்!” என வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராய் முணுமுணுத்தபடி வாசலை நோக்கிக் கிளம்ப ஆரம்பித்தனர்.

மங்கை நிலைகுலைந்து போனாள். தன் கௌரவம் கபளீகரம் செய்யப்படுவதைத் தாங்க முடியாமல், “ஐயோ… நல்ல நாளும் பொழுதுமா என் குடும்பத்தை வஞ்சம் வச்சுப் பழிவாங்குறாங்களே! என் பொண்ணும் நானும் இப்பவேப் போய்க் கிணத்துல விழுகிறோம். அதுக்கப்புறம் யார் என்ன வேணாலும் பேசிக்கோங்க…” என மார்பில் அடித்துக்கொண்டு கதறினாள். ஆனால், அந்த ஒப்பாரிக்கு அங்கே ஒரு துளி இரக்கம் கூட கிடைக்கவில்லை.

அதே நேரம், விருட்டென மணமேடையில் இருந்து எழுந்தான் முத்து. 

“அம்மா! இதுக்கு மேல நாம இங்க இருக்கக் கூடாது. ஏற்கனவே பாதி கூட்டம் கிளம்பிடுச்சு. இனி போலீஸ் வந்தா நாமதான் கல்யாணத்துல பிரச்சனை பண்ணினோம்னு கேஸை நம்ம பக்கம் திருப்பினாலும் திருப்பிடுவாங்க. உடனே கிளம்புவோம் வாங்க…” என்று மோகனாவையும் சந்தானத்தையும் பிடித்து இழுத்தான்.

“டேய்… முத்து! என் அண்ணன் பொண்ணுடா… நடுத்தெருவுல நிர்கதியா நிக்குதேடா!” என்று மோகனா கடைசியாக ஒருமுறை இறைஞ்சினார். இரத்த பாசம் ஒன்றும் அவரை நிறுத்தவில்லை, சொத்தும் சீரும் அவரைத் தடுத்தது.

“ஏம்மா அவளுக்குப் பாவம் பார்க்கிற? நாளைக்கு நமக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா பாவம் பார்க்க யாரும் இருக்க மாட்டாங்க. அப்பாவால ஏற்கனவே படிக்கட்டு ஏற முடியல… இவ கையைப் பிடிச்சு கூட்டிட்டுப் போற மாதிரி போய், அவரை உருட்டிவிட்டுக் கொன்னுட்டு ‘அவரா தடுக்கி விழுந்துட்டாரு’னு சொல்லுவா. ஏன்… நீ தூங்கும்போது உன் தலையில கல்லைத் தூக்கிப் போட்டுக் கொன்னாலும் கொன்னுடுவா!” என்று அவன் அச்சுறுத்த, மோகனாவுக்கு உண்மையிலேயே பயம் வந்துவிட்டது.

திரையில் தெரிந்த காவ்யாவின் அந்த விகாரமானப் பேச்சுக்கள் அவர் நினைவுக்கு வர, “சரிடா… வா போயிடலாம்!” என்று அவசர அவசரமாகத் தன் கணவனையும் கூட்டிக்கொண்டு, பிரபாவின் முகத்தைப் பார்க்கக் கூடத் துணியாமல் மண்டபத்தை விட்டு வெளியேறினாள்.

மணமேடையில் காவ்யா அலங்காரப் பொம்மையாகத் தாரை தாரையாகக் கண்ணீர் வடிக்க, மங்கையும் பிரபாவும் மண்டபத்தின் நடுவே அனாதைகளாக நின்றிருந்தனர். சூர்யா போட்ட அந்தப் பகடைக்காய், அவர்களின் கௌரவத்தை ஒரே நாளில் சுடுகாட்டுக்கு அனுப்பிவிட்டது!

சோகம் என்னவென்றால், சூர்யாவின் ஆட்டம் இதோடு முடியவில்லை…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page