பரபரப்பான கடை வீதியின் நடுவே சூர்யாவின் கார் ஊர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது. ஒரு துணிக்கடை வாசலில் கார் நிற்கவும், துள்ளலோடு இறங்கினாள் பூர்ணிமா. கூடவே ஆர்யாவும் இறங்கினான்.
“அவ கூடவே இருக்கணும், பத்திரமா பாத்துக்கோ” என்று சொல்லித்தான் ஆர்யாவை அனுப்பியிருந்தான் அவன் அண்ணன்.
அந்த கடை வாசலில்தான் தனுஜாவின் குடும்பமும் பாலாஜியின் குடும்பமும் அவளுக்காக காத்திருந்தது. பத்து நாளில் திருமணம்! பாலாஜிக்கு கை பரிபூரணமாக சரியாகட்டும் என்றுதான் இத்தனை நாட்கள் விட்டுவிட்டு இப்போது ஷாப்பிங் வந்திருக்கின்றனர்…
‘அபியின் பிறந்தநாள் பார்ட்டியில் முகம் கருத்து, தேகம் இளைத்து இருந்த பிள்ளை இதுவா?’ என்று அவர்கள் யோசிக்கும் அளவு தேஜஸோடு நின்றிருந்த பூர்ணியை, அனைவரது விழிகளும் ஆனந்தமாக வருடியது.
“வாம்மா பூர்ணி…” என்று தனுஜாவின் அம்மா வரவேற்க, பூர்ணிமா புன்னகையோடு அனைவரையும் நலம் விசாரித்தாள்.
“சூர்யா வரலையாம்மா?” என்று பாலாஜியின் அம்மா கேட்க,
ஆர்யா முந்திக்கொண்டு, “அண்ணன் வந்தா கூட்டம் கூடிடும். நம்மால கல்யாண வேலையை பார்க்க முடியாது. தனுவ நான் கலாய்க்க நிறைய ப்ராக்டிஸ் வேற பண்ணிட்டு வந்து இருக்கேன். அதான் அண்ணன அப்படியே கட் பண்ணிவிட்டுட்டோம்…”
“என்னப்பா நீ?… சரி வாங்க, உள்ள போவோம்” என்று கூட்டமாக உள்ளே நுழைந்தனர்.
ஏசி குளிரில் பட்டுச் சேலைகளின் வாசம் ஆளைத் தூக்கியது. இளஞ்சிவப்பு, மாம்பழ மஞ்சள், மரகத பச்சை, கத்தரிப்பூ வண்ணம் என அடுக்கடுக்காகச் சேலைகள் வந்து விழுந்தன. பெரியவர்கள் அனைவரும் மும்மரமாய் பட்டுச் சேலைகளை பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பாலாஜியும் தனுஜாவும் ஒருவரை ஒருவர் ஓரப்பார்வை பார்த்துக் கொள்வதும், பின் வெட்கத்தில் பார்வையைத் திருப்பிக் கொள்வதுமாக இருக்க, பூர்ணி தனுவின் தோளைத் தட்டிச் சிரித்தாள்.
“என்னம்மா புதுப் பொண்ணு, கன்னம் தக்காளியா சிவக்குது…”
“அச்சோ சும்மா இருங்க அண்ணி! யாருக்காவது கேட்டுறபோகுது.”
ஆர்யா, “அதுக்கெல்லாம் அஞ்சுற ஆளா நீ? மலைய முழுங்கி ஏப்பம் விட்ருவ, மாமா குடும்பம் என்ன ஆகப்போகுதோ?…” என கலாய்க்க, அவ்விடமே குறும்பு பேச்சுக்களால் மூழ்கி இருந்தது.
கண்ணுக்கு லட்சணமாக இருந்த ஒரு புடவையை தூக்கிக் கொண்டு வந்த மலர், “தனு… இந்த மெஜந்தா கலர் உனக்கு செமையா இருக்கும் பாரு” என்று ஒரு சேலையை எடுத்து அவள் மேல் வைத்துப் பார்த்தாள்.
பூர்ணி, “அட, நச்சுனு இருக்கு தனு…”
“எனக்கு இது ஓகே… அத்தானுக்குப் பிடிச்சிருக்கான்னு கேளுங்க” என்று சொன்னதும் எல்லோர் பார்வையும் அவன் பக்கம் திரும்பிற்று.
அந்த நொடியில் பாலாஜியின் கண்கள் இரண்டும் தனு மேல், இனிப்பை மொய்க்கும் ஈ போல ஒட்டிக் கொண்டிருந்தது.
வைரமணி, “மாப்பிள்ளை இதுக்கு மேல ஓகேன்னு சொல்லனுமா…” என்று கிண்டல் செய்ய, மொத்த கூட்டமும் விழுந்து புரண்டு சிரித்தது.
இதையெல்லாம் பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அபி. அவள் கைகள் பூர்ணிமாவின் ஆடை நுனியை பற்றிக் கொள்ளத் துடித்தன.
பூர்ணிமாவுமே இங்கு வந்ததும் அபியைத்தான் முதலில் தேடினாள். அவளை அள்ளி அணைத்துக் கொள்ள கைகள் இரண்டும் பரபரத்தது. ஆனால் அதை கட்டி வைக்கும் விதமாக சூர்யா சிலபல உத்தரவிட்டு அனுப்பி இருக்கிறான்.
“ஏற்கனவே சொன்னது தான், அபி இனிமே அவங்க பாப்பா. அவளுக்குமே அந்த குடும்பத்தை பிடிச்சு போச்சு. நாம உரிமை கொண்டாடக்கூடாது. புரிஞ்சு நடந்துக்கோடி…” என ஒன்றுக்கு பத்து முறை கூறியிருந்தான்.
அதனாலேயே பூர்ணிமா தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்வதற்காக அபியின் பக்கம் திரும்பாமல் இருந்தாள்.
ஆனால் அபி அடிக்கடி பூர்ணிமாவை ஏறிட்டுப் பார்த்தாள். அவள் இதுவரை ஒரு முறை கூட பூர்ணியை இவ்வளவு அழகாகவும் சந்தோஷமாகவும் பார்த்ததே இல்லை. ஏனோ அவளுக்கு தன் அக்காவை ஓடிப் போய் அணைத்துக் கொள்ளத் தோன்றியது. ஆனாலும், ஏதோ ஒரு தயக்கம்…
வந்திருந்த எல்லோருக்கும் உடைகளை எடுத்துக்கொண்டு கிளம்ப தயாரான நேரம், “அக்கா….” என்று அழைத்தாள் அபி.
பூர்ணி அதிர்ந்து திரும்ப, “அக்கா…” என்று கண்ணை கசக்கிக் கொண்டு அழத் தொடங்கிவிட்டாள் அபி.
அத்தனை பேரும் ஸ்தம்பித்துப் போக, பூர்ணிக்கோ இன்னதென்று சொல்ல முடியாத உணர்வு.
அக்கா என முதல்முறை அழைத்திருக்கும் தங்கையை ஓடிப் போய் அணைத்துக் கொள்ளத் துடித்தது அவளது மனது. அதே சமயம், அவளைத் தத்தெடுத்து வளர்க்கும் குடும்பத்தினர் மனது ஒருவேளை இதனால் உடைந்து போகுமோ என்ற தயக்கம் அவளைக் கட்டிப்போட்டது. உணர்ச்சிகளை அடக்க முடியாமல் அவள் தவித்த தவிப்பு, அந்த இறைவனுக்கே அடுக்காது!
மலர் தன் மகளை பூர்ணியின் கையில் பிடித்துக் கொடுத்து, “அபி உன்னை ரொம்ப மிஸ் பண்ணிட்டா பூர்ணி. நீ வேணும்னா ரெண்டு நாள் உன் கூட கூட்டிட்டு போய் வச்சுக்கிறியா?” என்றாள் அன்பாக.
“இப்போ வேணாமே, நான் இன்னொருநாள் கூட்டிட்டு போறேன்.”
அவள் முன்னால் வந்த வைரமணி, “உனக்கும் சூர்யாக்கும் இன்னும் எங்க மேல கோபம் குறையலையாம்மா?” என்று கேட்க, அதிர்ந்து விழித்தாள் அவள்.
“நாங்க கோபமா இருக்குறதா சூர்யா சொன்னானா?”
“இத்தன வருஷமா நானும் பாலாஜியும் உங்கள கண்டும் காணாம இருந்ததால சூர்யாவுக்கு எங்க மேல ரொம்ப கோபம். அதனாலேயே பாப்பாவோட பர்த்டே பார்ட்டில உன்னை யாரும் நெருங்க கூடாதுனு ஸ்ட்ரிக்ட்டா ஆர்டர் போட்டுட்டான். உண்மையில நாங்க சின்ன வயசுல உன்ன பல தடவை பார்க்க வந்தோம். அப்போல்லாம் உங்க பெரியம்மா எங்களோட உன்னை சேர்த்து வச்சு, தப்புத் தப்பா பேசிட்டே இருந்தாங்க. என்ன இருந்தாலும் நீ பொம்பள பிள்ளை. எங்களுக்கும் விவரம் தெரியாத வயசு! அதான் அதுக்கப்புறம் நாங்க வராம இருந்துட்டோம். எங்களை மன்னிச்சிடு பூர்ணி…” என்றான் கவலையாய்.
“ஐயோ, என்னண்ணா பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க? நான் அப்பவும் இப்பவும் உங்களை அண்ணனாத்தான் நினைக்கிறேன். இல்லனா அபிய உங்க கையில கொடுத்திருப்பேனா? அவதான் என் உயிரு, பழசெல்லாம் மறந்துட்டு நீங்க அவளோட சந்தோஷமா இருந்தாலே போதும். இன்னொரு தடவை இப்படி எல்லாம் பேசாதீங்கண்ணா, ப்ளீஸ்.”
பாலாஜி, “இப்பகூட மத்தவங்கள பத்தியே நினைப்பியா? உன்னை நினைக்க மாட்டியா?” என்று கேட்க, பூர்ணியின் பார்வை விநோதமாய் அவன் மீது பதிந்தது.
“ஆமா, நானும் தனுவும்தான் அபிகிட்ட உன்னை பத்தி பேசி, அவளுக்கு உண்மைய பத்தி புரிய வச்சோம்.”
“ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க?” என்றாள் இயலாமையோடு.
தன் தங்கை புது வாழ்வில் தன்னை புகுத்திக் கொள்ளுவதுதான் பூர்ணியின் விருப்பமாய் இருந்தது. ஆனால் பாலாஜியும் தனுவும் அப்படி நினைத்திருக்கவில்லை. பூர்ணியும் எல்லா சந்தோஷத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.
“அபிக்காக நீ செஞ்சதெல்லாம் உனக்கு வேணா கடமையா தெரியலாம். என் பார்வையில தியாகம் பூர்ணி. அவ உன்னை அவாய்ட் பண்றான்ற விஷயமே எனக்கு அந்த பர்த்டே பார்ட்டில தான் தெரிஞ்சது. அதான் தினமும் கொஞ்சம் கொஞ்சமா நீ பட்ட கஷ்டத்தை எல்லாம் எடுத்து சொன்னேன். புத்திசாலி பொண்ணு, புரிஞ்சுகிட்டா…”
“இல்ல… நான்… வந்து…” என்று உளறிக் கொண்டிருக்க, அடுத்த நொடி அபி அவளை தாவி அணைத்திருந்தாள்.
“அக்கா… சாரிக்கா…” என்று மழலை மொழி மாறாமல் பேசியவளை, அதற்கு மேல் அவளால் தள்ளி வைக்க முடியவில்லை.
கன்றைத் தொலைத்த பசுவாய் இத்தனை நாட்கள் தவித்திருந்தவள், தன் தங்கையின் முகத்தை இரு கையிலும் ஏந்தி ஆசை தீர பலநூறு முத்தங்கள் தந்தாள்.
வைரமணி, “இவ்வளவு பாசத்தை வச்சுக்கிட்டு ஏன்மா மனசை அடக்குற? உனக்காக இல்லனாலும், அபியோட சந்தோஷத்துக்காக ரெண்டு நாள் கூட்டிட்டு போயிட்டு வா…” என்று கட்டாயப்படுத்தி இருவரையும் அனுப்பி வைத்தான்.
பூர்ணிமாவின் மனது இப்போது ஆகாயத்தில் மிதப்பதைப் போல இருந்தது. இத்தனை வருடங்களாக அவளது இதயத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த அந்த இரும்பு சங்கிலி அபியின் ‘அக்கா’ என்ற அழைப்பில் நொறுங்கிப் போயிற்று.
சூர்யாவுக்கு எதிராக சாட்சி சொன்ன கோபத்தில் இத்தனை வருடங்கள் முகம் கொடுக்காமல் இருந்தவள், இப்போது தன்னிடம் பேசிவிட்டாள் என்பதை நினைக்கும் போதே அவளது நரம்புகளில் புது ரத்தம் பாய்ந்தது. சந்தோஷமாய் அவளை கூட்டிக்கொண்டு காரில் ஏறினாள்.
“அக்கா… அக்கா…” என்று வாய் ஓயாமல் அழைத்துக் கொண்டே இருந்தாள் அபி.
பின்பாட்டு போல ஆர்யா வேறு, “அண்ணி… அண்ணி…” என்று வம்புக்கு இழுத்தான்.
தொலைத்த பொக்கிஷம் இரண்டும் கை சேர்ந்துவிட, சந்தோஷத்தில் மனது நிறைந்து வழிந்தது.
இருவரையும் ஐந்து குழந்தைகள் போல பார்த்தவள், “என்ன வேணும் உங்க ரெண்டு பேருக்கும்? இந்த நிமிஷம் நீங்க என் உயிரையே கேட்டாலும் தந்துடுவேன். அவ்ளோ சந்தோஷமா இருக்கேன்” என பாச மழை பொழிந்தாள்.
ஆர்யா பல்க்காக பணத்தை அமுக்க ஐடியா யோசித்துக் கொண்டிருக்க, அபி வழியில் ஓர் திருப்பத்தில் ஐஸ்கிரீம் கடையைப் பார்த்தாள்.
“அக்கா… ஐஸ்கிரீம்… ஐஸ்கிரீம் வேணும்…” என்று ஆசையாகக் கேட்டாள். உடனே காரை நிறுத்திவிட்டான் ஆர்யா.
“நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருங்க, நான் போய் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரேன்” என்று கூறிவிட்டு கடைக்குள் சென்றான்.
அருகிலேயே சில விளையாட்டுப் பொருட்களைத் தள்ளுவண்டியில் வைத்து ஒருவன் வியாபாரம் செய்து கொண்டிருந்தான்.
“அக்கா… பொம்ம…” என்று அபி கைநீட்டி கேட்க, ஆர்யா வருவதற்குள் பொம்மை வாங்கி விடலாம் என்று நினைத்து தங்கையை கூட்டிக்கொண்டு இறங்கினாள்.
அழுக்கு வேட்டியும், கலைந்த கேசமுமாய் தரையில் உட்கார்ந்து இருந்த அந்த உருவத்தை உற்றுப் பார்த்த பூர்ணிமாவுக்குத் தூக்கி வாரிப்போட்டது.
அது… அவளின் பெரியப்பா பிரபா!
“பொம்மை வேணுமா? பொம்மை… தம்பி… பாப்பா… வாங்கிக்கோங்கப்பா…” என்று அவர் தழுதழுத்த குரலில் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார்.
பதறிப்போன பூர்ணிமாவுக்கு முதலில் ஒளிந்துகொள்ள தான் தோன்றியது. இத்தனை வருடம் அவர்கள் இவள் மனதில் உருவாக்கிய பயம் ஒரு சில நாட்களில் அழிந்து விடுமா என்ன? ஒரு மறைவிடம் பார்த்து ஒதுங்கி நின்றவள், குழப்பத்தோடு விழிகளை அலைபாய விட, சற்றுத் தள்ளி வெயிலில் வாடிப் போய் நின்றிருந்த மங்கையை பார்த்தாள்.
“பூ வாங்கிக்கம்மா… பூவும்மா… ஒரு முழம் முப்பது ரூபாதான்… வாங்கிக்கம்மா…” என்று வருவோரையும் போவோரையும் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
“என்னக்கா? அக்கா… என்னக்கா?” என்று சிணுங்கியே அபி, இவள் இருக்கும் இடத்தை அவர்களுக்கு காட்டி கொடுத்துவிட்டாள். சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பிய பிரபாவின் கண்கள், ஒரு சில வினாடிகள் அப்படியே நிலை குத்தி நின்றன.
லாரியின் ஹாரன் சப்தத்தில் உணர்ச்சி பெற்றவர், “அம்மாடி பூர்ணி, உன்னைத்தான் பெரியப்பா இத்தனை நாளா தேடிட்டு இருந்தேன்” என்று கத்திக்கொண்டே ஓடி வந்து அவள் காலில் விழுந்துவிட்டார்.
அரவம் தீண்டியது போல், வீல்! என பெருங்குரல் எடுத்து அலற, அந்த சத்தத்தில் மங்கையும் இங்கே பார்த்து விட்டாள்.
பூக்கூடையை அப்படியே நடு ரோட்டில் போட்டுவிட்டு, “பூர்ணி… அபி…” என்று அவரும் கண்ணீரோடு ஓடி வந்தார்.
‘எங்களைப் பார்த்ததும் நிச்சயம் சண்டை கட்டி, தெருவே வேடிக்கை பார்க்கும் படி அசிங்கப்படுத்தி விடுவாவார்கள். நான் மட்டும் இருந்தால் கூட பரவாயில்லை, கூடவே ஆர்யாவும் அபியும் இருக்கிறார்களே…’ என்ற அச்சத்தில் தான் அங்கிருந்து ஓடிவிட நினைத்திருந்தாள் பூர்ணிமா.
இப்போது பிரபா அவள் காலைப் பற்றி இருக்க, பூர்ணிக்கு நடப்பது கனவா நனவா என்று தெரியவில்லை.
அதிர்ச்சியில் பின்வாங்கியவள், “பெரியப்பா… என்ன பண்றீங்க? கால விடுங்க…” என்று பதறியபடி பேச, மங்கையும் திடீரென நியாபகம் வந்தது போல அவளது இன்னொரு காலைப் பற்றிக் கொண்டாள்.
“நீ மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொன்னா மட்டும்தான் நாங்க உன் காலை விடுவோம்…” என்று சொல்லி அவள் பாதத்தில் தலையை வைத்துக் கொண்டனர்.
திட்டி சண்டை போட்டு இருந்தால் கூட இவ்வளவு சங்கடமாக இருந்திருக்காது போல. இப்போது தப்பிக்க வேண்டி தத்தளித்தவள், “சரி, மன்னிச்சிட்டேன். எழுந்திரிங்க…” என்றாள் வேகமாய்.
தட்டு தடுமாறி எழுந்து நின்ற இருவரும், “உன்னையும் உன் தங்கச்சியையும் நாங்க நிறைய கொடுமைப்படுத்திட்டோம். அந்த பாவம் எல்லாம் எங்களை சும்மா விடாது, செத்தாலும் விமோசனம் இல்லாம நாங்க நரகத்துக்கு தான் போவோம். எங்களை மன்னிச்சிடும்மா பூர்ணி…” என்று திரும்பத் திரும்ப கூற, இவளுக்கு நடந்தது என்ன என்று புரிந்து விட்டது.
“சூர்யா என்ன செஞ்சான்?” என்று நேரடியாக கேட்டுவிட்டாள்.
ஆனால் அவள் எதிர்பார்ப்பிற்கு முரணாக, இருவரும் குழப்பமாய் ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“என்ன முழிக்கிறீங்க? அவன்தான இதெல்லாம் செஞ்சது? எனக்கு தெரியும்” என்று அவள் போக்கில் பேச,
பிரபா, “இதெல்லாம் பண்ணினது உங்க அப்பா தங்கதுரை” என்று ஒரு அணுகுண்டை போட்டார்.
