பூர்ணிமா சத்தியமாக இந்த திருப்பத்தை எதிர்பார்த்து இருக்கவே இல்லை!
“அப்பா… அப்பாவா?” ஒரு துளி கூட நம்பிக்கை வராது போக, சந்தேகமான முக பாவனையுடன் கேட்டாள் அவள்.
“ஆமா பூர்ணி… எப்படியாவது உங்க அப்பா கிட்ட சொல்லி என் மேல போட்ட கேஸை திருப்பி வாபஸ் வாங்க சொல்லுமா… இல்லன்னா, அந்த வசந்தா மாதிரி நானும் ஜெயிலுக்குப் போக வேண்டியதுதான்.”
“சித்தி ஜெயில்ல இருக்காங்களா?”
“ஆமாம்மா, அதே கேஸ்லதான் நானும் மாட்டி இருக்கேன். ஏற்கனவே எங்க பொழப்பு நடுத்தெருவுக்கு வந்துடுச்சு. நான் இல்லனா பொம்பளைங்க தனியா என்ன பண்ணுவாங்க? கொஞ்சம் கருணை காட்டுமா…” என்று அவள் கையை பிடித்துக் கொண்டு அழுதார்.
“நான் அப்பாட்ட பேசுறேன், ஆனா அவர் எந்த ஊர்ல இருக்காருன்னு எனக்கு தெரியாதே.”
“நம்ம வீட்லதான்மா இருக்கான்…” என்று சொல்ல வந்து, “இருக்காரு!” என்று முடித்தார் பிரபா.
“உங்க வீட்டுலயா? அவரு அங்க என்ன பண்றாரு?”
மங்கை கேவி அழுதபடி, “எங்களுக்கு கல்யாணம் ஆன நாள் தொட்டு அந்தப் பரம்பரை வீட்டுல நாங்கதானே குடியிருந்தோம்? இப்போ உங்கப்பா அதை எடுத்துக்கிட்டாரு. வெயிலுக்கும் மழைக்கும் கூட ஒதுங்க இடம் இல்லாம தவிக்கிறோம். பாட்டிய அனாதை மாதிரி முதியோர் இல்லத்துல சேர்த்து விட்டிருக்கோம். எங்கள காப்பாத்து பூர்ணி…” என கை குவித்து கும்பிட்டு கேட்டார்.
“நான் இப்பவே அப்பாக்கிட்ட பேசுறேன்” என்று சொல்லவும் அவர்கள் இருவரின் முகமும் மலர்ந்தது.
“நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் ஓரமா ஒளிஞ்சு நில்லுங்க, நான் சொல்ற வரைக்கும் வெளிய வர வேண்டாம்…” என்று மறைவாக நிற்க வைத்தாள்.
ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வந்த ஆர்யாவிடம், “நீ அபியை கூட்டிட்டு வீட்டுக்கு கிளம்பு. நான் ஒரு சின்ன வேலையை முடிச்சிட்டு வந்துடறேன்” என்றாள்.
“அண்ணன் உங்களை தனியா எங்கேயும் விடக்கூடாதுன்னு சொல்லி இருக்காரு…” என இழுத்தான்.
“நான் தனுவுக்காக என்னோட சேவிங்ஸ்ல ஒரு கிப்ட் வாங்க போறேன். சூர்யாவுக்கு தெரிஞ்சா ரொம்ப காஸ்ட்லியா வாங்கி தருவாரு. அப்போ அது என் பரிசுனு நான் எப்படி சொல்ல முடியும்…”
ஓர் நொடி யோசித்தவர், “சரி, சீக்கிரம் வந்துடுங்க” என்று கூறிவிட்டு அபியை தன்னோடு காரில் கூட்டி சென்றான்.
பூர்ணி பெரியப்பா பெரியம்மாவோடு கிளம்பிச் சென்றாள். அந்த பழைய வீடு, ரெனோவேட் செய்யப்பட்டு இப்போது புதுப்பொலிவோடு காட்சி தந்தது. காலிங் பெல்லை அழுத்திவிட்டு மூவரும் காத்திருக்க, தங்கதுரை வந்து கதவை திறந்தார். பூர்ணியை பார்த்ததும் அவர் முகத்தில் பயம் அப்பிக் கொண்டது.
ஆனால் கூட, “எதுக்கு இங்க வந்தீங்க? தேவையில்லாம என் பொண்ணையும் வேற இழுத்தடிக்கிறீங்க? வாங்கினது பத்தலையா?” என்று தன் அண்ணனையும் அண்ணியையும் பார்த்து அதட்டலாய் கேட்டார்.
“ஐயோ, நாங்க இல்ல. பூர்ணிமாதான் உங்களை பாக்கணும்னு சொன்னா” என்று தம்பியிடம் பம்மினார் பிரபா.
“நீ மட்டும் உள்ள வாம்மா…”
பூர்ணி பிரபாவை திரும்பி பார்க்க, “போ… போம்மா…” என்றார் முணுமுணுப்பான குரலில்.
உள்ளே சென்றவள் அந்த வீட்டின் மாறுதல்களை பார்த்து பிரம்மித்தாள். கண்ணை பறிக்கும் சீலிங், அதே வண்ணத்தில் ஆன டிவி யூனிட், விலை உயர்ந்த சோபா, கால் வைக்கும் இடமெல்லாம் கார்பெட் என அந்த இடமே சொர்க்கம் போல காட்சி தந்தது.
“உட்காருமா, ஜூஸ் எடுத்துட்டு வரட்டுமா?”
“வேணாம்… நீங்க பெரியப்பா மேல கேஸ் போட்டு இருக்கீங்களா?” என்றாள். அவள் வாயில் இருந்து தப்பி தவறி கூட அப்பா என்ற வார்த்தை வர மறுத்தது.
“ஆமாம்மா… இது பரம்பரை வீடு. இத்தனை வருஷமா அவங்க தானே இந்த சொத்தை அனுபவிச்சாங்க. இனி நான் அனுபவிக்க போறேன். நான் போதையில இருக்கும்போது கையெழுத்து வாங்கிருக்காங்கன்னு கோர்ட்ல நிரூபிச்சாச்சு. இனி இந்த வீடு சட்டப்படி எனக்குத்தான் சொந்தம்.”
கோர்வையாக பேசினாலும் குரலில் தடுமாற்றம் இருந்தது.
“எப்படி அதுக்குள்ள சொத்து கேஸ்க்கு தீர்ப்பு வந்துச்சு? அட்லீஸ்ட் அவங்களுக்கு கொஞ்சம் பணமாவது கொடுக்கச் சொல்லி இருப்பாங்களே?”
“இத்தனை வருஷமா என் சம்பள பணத்துல ஒரு பங்கை, உனக்காகவும் அபிக்காகவும் நான் மாசா மாசம் அனுப்பிட்டு தான் இருந்தேன். அவ்வளவு காசையும் முழுசா முழுங்கிட்டாங்க. அதுக்கும் சேர்த்துதான் கேஸ் போட்ருக்கேன்…”
“வேற என்னென்ன கேஸ் போட்டீங்க?”
“வசந்தாவை பிளாக்மெயில் பண்ணி வேற ஒருத்தனோட ஓடிப்போக தூண்டினதுக்காக ஒரு கேஸ். உன்னையும் அபியையும் கண்ணுல காட்டாம என்னை விரட்டினதுக்காக ஒரு கேஸ். உங்க ரெண்டு பேரையும் படிக்க வைக்காம வீட்டு வேலை செய்ய வச்சு கொடுமைப் படுத்தினதுக்காக ஒரு கேஸ்னு நாலஞ்சு கேஸ் போட்டேன்.”
“சட்டத்துல இத்தனை வழி இருக்குன்னு கூட உங்களுக்கு தெரியாது. யார் சொல்லி நீங்க இதெல்லாம் பண்றீங்க?”
“யாரும் சொல்லலம்மா, நான் ஒரு லாயரை பார்த்து பேசினேன். அவர் தான் எனக்காக எல்லாமே பண்றாரு…”
“நம்பர் கொடுங்க, அவர் கிட்ட பேசுறேன்.”
“தரமாட்டேன், பிரபா லாயரை பார்த்து பேசி கேஸை மாத்தி விட்ருவான். உனக்கு வேற என்ன வேணும்னு கேளு, நான் பண்றேன்…”
பயந்தபடி பேசும் அவரை ஒருமுறை மேலிருந்து கீழாக பார்த்தாள் பூர்ணி. அந்நேரம் சூர்யாவிடம் இருந்து அழைப்பு வந்துவிட்டது அவளுக்கு.
“எங்க இருக்க?” என்று கிட்டதட்ட கர்ஜித்தான்.
“சூர்யா, இங்க நான்…” என்று இழுக்க,
“ஆர்யாவும் அபியும் சின்ன பிள்ளைங்க, அவங்களே வீட்டுக்கு வந்தாச்சு. கல்யாண மாப்பிள்ளை கூட ஷாப்பிங் முடிச்சுட்டு, வேலைக்கு போயிட்டான். ஷாப்பிங்க வேடிக்கை பார்க்க போன நீ இன்னும் வீடு வந்து சேரல? எண்ணி அஞ்சு நிமிஷத்துக்குள்ள நீ என் முன்னால் வந்து நிக்கிற. இல்லனு வச்சுக்கோயேன், உன் எதிர்ல இருக்கிறவங்க இப்ப இருக்கிறதை விடவும் ரொம்ப கஷ்டப்படுவாங்க…”
அதைக்கேட்ட பூர்ணிமாவுக்கு திக்கென்று இருந்தது…
அவள் விழிகள் தன்னிச்சையாய் தன் தந்தை பக்கம் திரும்ப, அவர் கால்களோ கதகளி ஆடிக் கொண்டிருந்தது. பூர்ணிக்கு அனைத்தும் புரிந்து விட்டது. இதற்கு மேல் இவரோடு பேசி என்ன செய்ய? என்று கிளம்பிவிட்டாள்.
பின்னாலேயே ஓடிவந்த பிரபா, “பார்த்தியா பூர்ணி, உன் அப்பா எப்படி பேசுறாருனு?” என்று அழாத குறையாய் புலம்பினார்.
மங்கை, “நாங்களாவது கிழடு கட்டைங்கம்மா. கோவில் வாசல்லையோ, குப்ப மேட்டுலயோ படுத்துக்குவோம். காவ்யா வயசு பொண்ணு. அவ எப்படி தெருவுல தூங்குவா? நாங்க எங்க போனாலும் குடிகார நாய்ங்க தேடி வந்து வம்பு பண்றாங்க. நல்லா தூங்கி பத்து நாளாச்சும்மா. சோறு தண்ணி இல்லாம செத்து சுண்ணாம்பாகிட்டு இருக்கோம். தயவு செஞ்சு எங்கள காப்பாத்தும்மா…”
“ஏன் தெருவுல தூங்குறீங்க? வாடகைக்கு ஒருவீடு பிடிக்க வேண்டியதுதான?” என்று கேட்க, இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“என்ன?”
“பெரியப்பா ஆபீஸ்ல இருந்து பணத்தை திருடிட்டார்னு சொல்லி அவரை வேலையை விட்டு அடிச்சு விரட்டிட்டாங்க. அந்த கேஸ் வேற இவர் மேல விழுந்திருக்கு. இது போதாதுனு காவ்யா சம்பந்தப்பட்ட வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவுல ரிலீஸ் ஆயிடுச்சு. இத்தனை பிரச்சனை இருக்கிறதால எங்களுக்கு வீடும் கிடைக்கல, வேலைக்கும் சேர்த்துக்கல. இப்போதைக்கு காவ்யா கூலி வேலைக்கு போயிட்டு வர்றா. அவ சம்பளத்துல தான் எங்களுக்கு சாப்பாடு! சின்னவ வேற எங்க இருக்கா? எப்படி இருக்கான்னு தெரியல. கையில ஒத்த பைசா இல்லாம கஷ்டப்படுறோம் பூர்ணி…”
அடுத்த நொடியே தன் ஹேண்ட்பேகில் இருந்து நான்கைந்து ஐநூறு ரூபாய் காகிதங்களை அள்ளி அவர்கள் கையில் கொடுத்தாள். அதை வாங்கவா வேண்டாமா என்ற பயம் அவர்களுக்குள் பேயாட்டம் போட, மறுப்பாய் தலையசைத்தனர்.
“சூர்யா கிட்ட நான் சொல்லிக்கிறேன். நீங்க இப்போதைக்கு இந்த பணத்தை கையில வச்சுக்கோங்க. ரெண்டு நாள்ல உங்களுக்கு ஏதாவது ஒரு வழி பண்றேன்…” என்றவள், பணத்தை கட்டாயப்படுத்தி திணித்தாள்.
“நீ நூறு வருஷம் நல்லா இருக்கணும்மா…” என்று கண்களில் கண்ணீர் வழிய இருவரும் கும்பிட்டு வழியனுப்பி வைத்தனர்.
எப்போதும், “ஏய், நாயே, சனியனே, தரித்திரமே…” என்று மட்டுமே அழைத்திருந்த அவர்களின் வாய், இன்று தப்பி தவறி கூட டி போட்டு பேசத் துணியவில்லை.
அந்த அளவுக்கு தன்னவன் பயத்தை காட்டி விட்டான்! என்று நினைத்தபடியே வீடு வந்து சேர்ந்தாள். நடு ஹாலில் தன் சிம்மாசன சோஃபாவில், தனியே அமர்ந்திருந்தான் சூர்யா. ஏதோ ஒரு சண்டைக்காக, அவன் முன்கூட்டியே தயாராகி காத்திருப்பது போலத்தான் அவன் முக பாவனை இருந்தது. ஆனால் அதற்கு முற்றிலும் எதிர்பதமாய் அவன் உடல் மொழி இருந்தது.
ஆவி பறக்கும் காபி கோப்பையை கையில் ஏந்தியபடி, அவளை உறுத்து விழித்திருந்தான். நிதானமாக ஒரு மிடறு காபியைப் பருகியவன், தன் தீர்க்கமான பார்வையை பூர்ணி மீது படரவிட்டான்.
“என்ன பூரி… பெரியப்பாவையும் பெரியம்மாவையும் பார்த்தியா? நடுரோட்டுல வச்சு உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டிருக்காங்க போல? நீயும் வழக்கம் போல உன் பரந்த மனசைக் காட்டி, பணமெல்லாம் தந்துட்டு வந்திருக்க. எப்படி இத்தனை வருஷ கொடுமையை எல்லாம் ஒரே நிமிஷத்துல மறந்து மன்னிக்கிற? எனக்கும் அந்த ட்ரிக்ஸ்ஸ சொல்லிக் கொடேன்…”
சூர்யாவின் கேள்விகள் பூர்ணிமாவை நிலைகுலையச் செய்தது. அவள் மிரட்சிக்கு காரணம் நடந்து முடிந்த சம்பவம் இல்லை. அதை அத்தனையையும் துல்லியமாய் இவன் சொல்லுவதுதான்…
‘அங்கு நடந்த ஒவ்வொரு அசைவும் இவனுக்கு எப்படி தெரிந்தது? ஒருவேளை என்னை யாராவது பின்தொடர்கிறார்களா?’ என்று யோசித்தபடி, அப்படியே சிலையாக நின்றாள்.
சூர்யா மெல்ல எழுந்து அவள் அருகே வந்தான். அவளது மிரண்ட விழிகளை அருகில் பார்த்தவனுக்கு ஏனோ கோபத்தை தாண்டி காதல் ஊற்றெடுத்தது.
“நல்லா மயக்கி வச்சிருக்கடி என்னை…” என்று அவன் குரல் தணிந்து ஒலிக்க, ‘நானா?’ என்பது போல் விழி விரித்தாள்.
“முட்டக்கண்ணி, என்னடி வேணும் உனக்கு? எதுக்கு தேவையில்லாம எங்கெங்கையோ சுத்திட்டு இருக்க?”
“நீதான் எல்லாத்துக்கும் காரணமா சூர்யா?” என்று சிறுபிள்ளை போல முகம் சுருக்கி கேட்க, உடனே ஆம் என்று தலையாட்டினான் தலைவன்.
பூர்ணிமா குழப்பம் தீராமல், “ஆனா அப்பாவை… எதுக்கு… கேஸ்லாம்… போடச் சொல்லி…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
வாஞ்சையோடு அவளது கன்னத்தைத் தட்டி, “ரொம்ப குழம்பாதடி, அவரையும் பிளாக் மெயில் பண்ணி தான் இதெல்லாம் செய்ய வச்சேன். நீயே இந்நேரத்துக்கு கண்டுபிடிச்சிருப்பியே, அப்புறம் எதுக்காக என்கிட்ட கேக்குற?…” என்று அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தந்தான்.
“ஆனா, ஏன்?”
“ஏனா?… பெத்த பிள்ளைனு உன்னையும் அபியையும் ஒரு நாளாவது நினைச்சு பார்த்திருக்காரா? ஊர் உலகத்து முன்னால வர பிடிக்கலனு ஓடி ஒளிஞ்சிட்டே இருந்தாருல. அதுக்குத்தான் இந்த பனிஷ்மெண்ட். இனி தினம் தினம் எல்லாரோட பார்வையையும் சந்திக்கணும். அவங்க கேட்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லணும். நீங்க பட்ட கஷ்டத்தை எல்லாம் திரும்ப திரும்ப காதால கேட்டு, சாகுற வரைக்கும் ரத்தக்கண்ணீர் வடிக்கணும்…”
“சரி , திவ்யாவ என்ன செஞ்ச?”
“பார்ரா, எல்லாத்தையும் என் பேர்ல எழுதுற. அவ ஓடிப்போனதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பட் ஆள் வச்சு விசாரிச்சதுல, பணத்தை ஏமாந்துட்டானு மட்டும் என் காதுக்கு வந்தது…”
“அப்போ அவளை திருப்பி வீட்டுக்கு கூட்டிட்டு வர ஏதாவது பண்ணலாம்ல?”
“நான் ஏன் பண்ணனும்?” என்று அசராமல் கேட்டான் அவன்.
பூர்ணிக்கு ஆயாசமாக இருக்க, “புரிஞ்சுக்கோ சூர்யா, அவங்க யாருக்குமே வலி தாங்கி பழக்கம் கிடையாது. ஒரு வாரம் கூட தாங்க மாட்டாங்க. வேணும்னா பாரு, ஒண்ணு ஊர விட்டு ஓடிப் போயிடுவாங்க, இல்ல தற்கொலை பண்ணிப்பாங்க…” என்று கிட்டத்தட்ட கெஞ்சினாள்.
“அவங்களோட குணத்தை சரியா கெஸ் பண்ணின நீ, என் குணத்தை யோசிக்க மறந்துட்ட பாத்தியா? எனக்குத் தெரியாம அந்த குடும்பத்துல இனி அணு கூட அசையாது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், அவங்க அனுபவிக்கிற கஷ்டமும் அவமானமும் என் காதுக்கு வந்துட்டே இருக்கும். ஐயாவோட ஸ்கெட்ச் அப்படி!” என்றான் திமிராய்.
திட்டமிட்டு, நாள் பார்த்து காய் நகர்த்தி, நகர விடாதபடி எதிரிகளை தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்து வைத்திருக்கும் அவனோடு, பேதைப் பெண்ணால் என்ன தர்க்கம் செய்ய முடியும்?
எனவே, அவன் கைகளை பற்றிக் கொண்டு, கெஞ்சலாய் பேச ஆரம்பித்தாள்.
“இதெல்லாம் தப்பில்லையா சூர்யா. மத்தவங்க கஷ்டத்தை பார்த்து, நாம சந்தோஷப்படலாமா? அப்புறம் அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கு?”
“நான் என் சந்தோஷத்துக்கு பண்ணல. அவங்க செஞ்ச தப்புக்கு சட்டப்படி தண்டனை வாங்கி தரேன். சட்டப்படி செய்ய முடியாத விஷயங்களை மட்டும் நானே பார்த்துக்கிறேன். ரெண்டு அப்பாவி குழந்தைகளுக்குச் செஞ்ச பாவத்தை எல்லாம் அவங்க பின்ன எப்படி கழுவுவாங்க? என் மனசு ஆறுர வரைக்கும் அவங்க இதெல்லாம் அனுபவிச்சுத்தான் ஆகணும்!”
“எப்போதான் உன் மனசு ஆறும்?”
“உன்ன பார்க்கும் போதெல்லாம் பிரபாவும் மங்கையும் உன் கால்ல விழனும்னு சொல்லி இருக்கேன். அட்லீஸ்ட் ஒரு நூறு தடவை விழட்டும், என் மனசு ஆறுதானு பார்க்கலாம்…”
“எனக்கு இதெல்லாம் பிடிக்கல. செஞ்ச தப்புக்கு ஊர் ஜனங்க முன்னால தலை குனிஞ்சு நின்னுட்டாங்க. வாழ்ந்த வீட்டையும் இழந்துட்டாங்க. குடும்பமே சிதறி போச்சு. இதுக்கு மேல அவங்கள அவமானப்படுத்தி பார்க்குறது அநாகரீகம். நான் நாளைக்கே அவங்களுக்குக் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து, இந்த ஊரை விட்டு எங்கயாவது போகச் சொல்லிடுறேன். நீ இதோட எல்லாத்தையும் நிறுத்திடு, ப்ளீஸ்…”
“சொல்லு… சொல்லிப் பாரு! நான் போட்ட வட்டத்தைத் தாண்டிப் போனா செத்துடுவாங்கன்ற பயத்தை ஏற்கனவே அவங்க மனசுல ஆழமா விதைச்சிட்டேன். உன்னால எதையும் மாத்த முடியாது பூரி…”
அவனது பிடிவாத குணம், பூர்ணிமாவைச் சோர்வடையச் செய்தது. அவளால் அதற்கு மேல் அவனோடு விவாதிக்க முடியவில்லை. ஓய்ந்து போய் அங்கிருந்த சோபாவில் பொத்தென அமர்ந்தாள்.
