சென்னையின் அந்தப் புகழ்பெற்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலே விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் நறுமணம் வீசும் இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள், கண்ணைப் பறிக்கும் சரவிளக்குகள் என ஆடம்பரம் அள்ளித் தெளிக்கப்பட்டிருந்தது. பாலாஜி – தனுஜா திருமணத்திற்காகச் சூர்யா செய்திருந்த ஏற்பாடுகள் ஒவ்வொன்றும் ராயல் ரகம்.
திருமண ஏற்பாடுகள் இன்னமும் ஆரம்பிக்கவில்லை. மேடைக்கு அருகே பாலாஜியும் தனுஜாவும் நின்றிருந்தனர். பாலாஜியின் முகத்தில் மகிழ்ச்சி இருந்தாலும், அவனது கண்கள் மட்டும் வாசலையே வெறித்துக் கொண்டிருந்தன. உறவினர்கள், நண்பர்கள் என ஹோட்டலே நிரம்பி வழிந்தது. ஆனால், அந்த இடத்தின் உண்மையான உறவான சூர்யாவும் பூர்ணியும் இன்னும் வரவில்லை.
சரியாக முகூர்த்த நேரம் நெருங்கும் வேளையில், ஹோட்டலின் பிரம்மாண்டமான வாசல் வழியே சிங்கம் போல நடந்து வந்தான் சூர்யா. சந்தன நிற கோட்-சூட்டில், ஒரு கையில் பரிசையும், இன்னொரு கையில் பூர்ணிமாவின் வலது கையையும் பற்றியபடி நடந்து வந்தான். உடனே கேமராக்கள் எல்லாம் அவன் பக்கம் திரும்பியது. எப்போதும் இதையெல்லாம் பார்த்து பழகியவன் என்பதால், அந்த நொடி அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அவனது வருகையால் அந்த இடத்தின் கம்பீரம் இன்னும் ஒரு படி உயர்ந்தது.
மேடையிலிருந்து கீழே இறங்கி ஓடி வந்த பாலாஜி, “வா சூர்யா! ஏன் இவ்ளோ லேட்?” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கத்தினான்.
“என்னடா விளையாடுறியா? முகூர்த்தத்துக்கு இருபது நிமிஷம் முன்னாடி வந்து இருக்கேன். இவ்வளவு சீக்கிரமா நான் எந்த ஃபங்ஷனுக்கும் போனது கிடையாது.”
பூர்ணிமா சிரித்துக்கொண்டே, “மாப்பிள்ளை சார், எதுக்கு இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க? தனுஜா உங்களுக்குத்தான். நாங்க யாரும் தூக்கிட்டு போயிட மாட்டோம். பொறுமையா தாலி கட்டுங்க” என்று கிண்டல் செய்தாள்.
ஆனால் பாலாஜி சிரிக்கவில்லை. பதற்றம் குறையாத முகத்தோடு இருந்தவன், ஆர்யாவை பார்த்து சைகை செய்தான். உடனே இரண்டு பேர் பட்டு வேட்டி, சட்டை, புடவையோடு இரண்டு பிரம்மாண்டமான மாலைகளை தூக்கிக்கொண்டு ஓடி வந்தனர்.
“இது என்ன? சீஃப் கெஸ்ட்க்கு கிஃப்ட்டா?” என்று சூர்யா புருவத்தை உயர்த்திக் கேட்க,
பாலாஜி சற்றே கோபமான குரலில், “வந்ததே லேட்டு, இதில் ஐயாவுக்கு கிப்ட் வேற தருவமாக்கும்? பெருசா ப்ளான் பண்ணிருக்கோம். சீக்கிரம் போய் டிரஸ் மாத்திட்டு வா மாப்ள” என்று அவன் தோளைத் தட்டினான்.
அந்த நொடியில் பூர்ணிக்கு விஷயம் விளங்கிவிட, “என்னங்க அண்ணா பண்றீங்க? எதுக்கு இதெல்லாம்?” என்று பயந்து விலகினாள்.
“இங்க பாரும்மா… எனக்காகவும் தனுஜாவுக்காகவும் நீங்க ரெண்டு பேரும் நிறையப் பண்ணிட்டீங்க. நாங்க திருப்பி எது செஞ்சாலும் அது நீங்க செஞ்சதுக்கு ஈடா இருக்காது. அதனால எல்லாரும் சேர்ந்து பிளான் பண்ணி, இன்னிக்கி ரெண்டு பேரையும் மேடையில உட்கார வைக்க போறோம். நீயும் பூர்ணிமாவும் ஊரறிய, முறைப்படி கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்கப்புறம் தான் நானும் தனுவும் மேடைக்கு வருவோம்” என்றான் உறுதியாக.
சூர்யா திகைத்துப்போய், “டேய்… இது உன் கல்யாணம்டா. சொந்தக்காரங்க முன்னால போய், எதுக்கு தேவையில்லாத சீன்லாம்…” என்று இழுக்க, தனுஜாவும் மேடையிலிருந்து இறங்கி வந்தாள்.
“அண்ணா… பாலாஜி சொல்றது சரிதான். நீங்க ரெண்டு பேரும் தாலி கட்டிக்கிட்டா தான் நான் தாலி ஏத்துக்குவேன்னு அவருகிட்ட சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கேன். ப்ளீஸ் அண்ணா…” என்றாள் தனுஜா.
“வேலை நடக்கணும்னா அண்ணா, வேலை முடிஞ்சதும் காண்டாமிருகம்னு சொல்ற ஆளுதான நீ?” என்று கிண்டலடிக்க, அவளோ இப்போதும் பூர்ணியின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
இதற்குள் மணமக்களின் பெற்றோரும் சேர்ந்து கொண்டு, “தம்பி, எல்லோரும் ஆசைப்படுறோம்ப்பா? நீங்க ரெண்டு பேரும் எங்களுக்காக கல்யாணம் பண்ணிக்கோங்கப்பா. உனக்கு அவதான், அவளுக்கு நீதான்னு ஆயிடுச்சு. இனி தயங்க என்ன இருக்கு?” என்று வற்புறுத்தத் தொடங்கினர்.
சூர்யா மெல்லத் திரும்பிப் பூர்ணிமாவைப் பார்த்தான். பூர்ணிமா மௌனமாக நின்றிருந்தாள். ஆனால், அவளது விழிகளில் ஒரு கணம், ஆசை மின்னலாய் தோன்றி மறைவதை சூர்யா கவனித்தான்.
தன் வாழ்வில் திருமணம் என்ற ஒன்று நடக்காது என்ற காரணத்தால், அவள் திருமணத்தைப் பற்றி எந்த எதிர்பார்ப்பையுமே வைத்திருக்கவில்லை. எனவேதான் சூர்யா இழுத்த இழுப்புக்கெல்லாம் உடன் சென்றாள்.
‘இத்தனை பேர் மத்தியில், முறைப்படி தாலிகட்டி, பெரியோர் ஆசீர்வாதத்தோடு எங்கள் இல்லற வாழ்க்கையைத் தொடங்கினால் நன்றாக இருக்குமே!’ என்கிற ஏக்கம் அவளது மிரண்ட கண்களில் தெரிந்தது.
அவளது மௌனத்தின் அர்த்தத்தை புரிந்துகொண்ட சூர்யா பாலாஜியிடம், “சரிடா… உன் ஆசைப்படியே நடக்கட்டும். ஆனா இதுக்கு அப்புறம் நீயும் தனுஜாவும் சண்ட போடாம வாழணும், சரியா?” என்று சொல்ல, ஆர்யா சத்தமாய் ஒரு விசில் அடித்தான். அதில் சுற்றி இருந்த அத்தனை பேருக்கும் காது அதிர்ந்தது.
அடுத்த சில நிமிடங்களில், மேடையில் காட்சிகள் மாறின. சூர்யா பட்டு வேட்டி சட்டையில் மிடுக்காய் வந்து நிற்க, பூர்ணிமா தங்க நிறப் பட்டுப் புடவையில் தேவதை போல நடந்து வந்தாள். இருவரையும் பெரியவர்கள் சிரித்த முகத்தோடு மேடையில் அமர வைத்தனர். அபியும் அக்காவின் அருகிலேயே தனக்கொரு இடம் பிடித்துக் கொண்டாள்.
விழியோரம் ஈரம் கசிக அதை அடிக்கடி துடைத்துக்கொண்டாள் பூர்ணிமா.
“என்னடி… பயமா இருக்கா?” என்று சூர்யா அவள் காதோரம் கிசுகிசுக்க,
“ரொம்பச் சந்தோஷமா இருக்கு சூர்யா” என்று அவள் அவன் கையைப் பற்றிக்கொண்டாள்.
மந்திரங்கள் முழங்க, கெட்டி மேளம் அதிர, பாலாஜியும் தனுஜாவும் மணமக்கள் உடன் இருக்க, பூர்ணிமாவின் கழுத்தில் சூர்யா அந்த மங்கல நாணை அணிவித்தான். ஒரு காலத்தில் யாருமற்ற அனாதையாய் தனியே நின்ற பூர்ணிமா, இன்று இந்த உலகே வியக்கும் பார்க்கும் சூர்யாவின் சரிபாதியாக மாறினாள்.
இருவரையும் அக்கினியை சுற்றி வந்தபின், “இப்போ என்னை ரிலீஸ் பண்றீங்களா? இனி நீ போய் தலைய கொடு” என்று சூர்யா கிண்டலாய் பாலாஜியை மேடைக்குத் தள்ளிவிட்டான்.
தனுஜாவின் கழுத்தில் சந்தோஷமாக மூன்று முடிச்சுட்டான் பாலாஜி. ஒரே மேடையில் இரண்டு ஜோடிகளின் திருமணமும் கோலாகலமாக நடந்து முடிந்தது. அருந்ததி பார்ப்பது, மெட்டி போடுவது என அடுத்தடுத்த சம்பிரதாயங்களிலும் விளையாட்டும் கலாட்டாவுமே அதிகம் இருந்தது.
கனவா நனவா என்று அடிக்கடி கிள்ளி பார்க்கும் மனைவியிடம், “மேடையில வச்சு உன்னை நீயே கிள்ளிக்காதடி. ராத்திரி நான் வேணும்னா உடம்பு ஃபுல்லா கிள்ளி வைக்கிறேன்…” என்று சொல்லி ஒரு அடியை பரிசாக வாங்கிக் கொண்டு சிரித்தான்.
அதே நேரம் பாலாஜிக்கும் தனு கையால் ஒன்று விழுந்தது. அதைப்பார்த்து சூர்யாவும் பூர்ணியும் இன்னும் அதிகமாக சிரித்தனர்.
முதன்முறை தன் அண்ணனை இப்படி சந்தோஷமாக பார்க்கும் ஆர்யாவுக்கு, பூர்ணியின் வடிவில் அவன் வாழ்க்கை வசந்தமாக மாறும் என நம்பிக்கை பிறக்க, மனம் லேசானது…
கல்யாண வைபவம் முடிந்து, ஹோட்டலில் நடந்த அந்த பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி முடிந்தபோது இரவு வெகுநேரமாகியிருந்தது. இதற்கு மேல் தன்னால் பொறுக்க முடியாது என்று நினைத்த சூர்யா, மனைவியை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு விரைந்தான். அவனுக்கு முன்னால் வீடு வந்து சேர்ந்திருந்த ஆர்யா, ஹாலில் கணினியை பார்த்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தான்.
பூர்ணி அசதியாக அறைக்குச் சென்றுவிட, சூர்யா தன் தம்பியிடம் வந்து உட்கார்ந்தான்..
“என்னடா ஆர்யா… எப்போ வந்த நீ? லேப்ல ரொம்ப சின்சியரா ஏதோ வேலை பார்த்துட்டு இருக்க போல? எந்த பொண்ணோட கடலை போடுற?”
“இல்லண்ணா… நம்ம கம்பெனி வேலைய பார்த்துட்டு இருக்கேன்.”
“என்னடா ஆச்சு உனக்கு? மறுபடியும் மெமரி லாஸ் ஏதாவது வந்துருச்சா?” என்று கேட்க, ஆர்யாவோ சின்ன சிரிப்போடு அவன் முகம் பார்த்தான்.
“என்னடா?”
“உன்னை இவ்வளவு சந்தோஷமா நான் பார்த்ததே இல்லை. அண்ணி வந்ததுல இருந்தே, உன் முகத்துல ஒரு நிம்மதி தெரிஞ்சது. அந்த நிம்மதியும் சந்தோஷமும் எப்பவும் உன்னோட இருக்கணும்னு ஆசைப்படுறேன். இனிமே நீ பிசினஸை பத்தி கவலைப்படக்கூடாது. கம்பெனிய பொறுப்பா நான் பார்த்துக்கிறேன். நீ உன் வாழ்க்கைய கொஞ்சம் வாழுண்ணா…” என்றான் உறுதியாக.
அவன் வார்த்தைகளால் நெகிழ்ந்த சூர்யா, “தனியா சமாளிக்க முடியாது. கொஞ்ச நாள் நான் கைடு பண்றேன். அப்புறம் முழுசா நீ பார்த்துக்கோ” என்று ஆர்யாவின் கேசம் வருடினான்.
“எனக்கு துணைக்கு தனு இருக்கா. எங்க ரெண்டு பேரால சமாளிக்க முடியும்… முடியலனா நானே ஹெல்ப் கேக்குறேன்” என்றவன், சொன்னதைப் போல அடுத்த பத்து நாட்களும் தன்னந்தனியே நிர்வாகத்தை சமாளித்தான். தனு விடுமுறை முடிந்து வேலைக்கு வர, அவன் பழு பாதியாக குறைந்து விட்டது.
சூர்யாவுக்கு அவ்விருவரும் பொறுப்பாக மாறிவிட்டனர் என்று புரிந்தது! எனவே மனைவியோடு வாழ்க்கையை என்ஜாய் பண்ண முடிவெடுத்து விட்டான்…
அதற்கு இடைஞ்சலாய் இருந்த ஏர்லைன்ஸ் பிசினஸை தூக்கி பாலாஜியிடம் கொடுத்து, “இனி இது உன்னோட பொறுப்பு. நீ தான் பார்த்துக்கணும்” என்று கூறிவிட்டான்.
“என்னடா… விளையாடுறியா? நான் உன் பிஏடா. இவ்வளவு பெரிய பிசினஸை நான் எப்படி…” என்று பாலாஜி திகைக்க, சூர்யா அவன் தோளை அழுத்தினான்.
“உன்னால முடியும்னு நான் நம்புறேன். உனக்கு மூணு அசிஸ்டன்ட் வேற ஏற்பாடு பண்ணி இருக்கேன். ட்ரை பண்ணுடா” என்று நம்பிக்கை கொடுத்தான்.
பாலாஜியின் உழைப்பில் அந்த நிறுவனம் அசுர வளர்ச்சி அடைய, மாத வருமானமே பல லட்சங்களைத் தாண்டியது. அது மொத்தத்தையும் பாலாஜி கையிலே தந்துவிட்டான் சூர்யா. வழக்கமான வருமானத்தை தவிர, ஒரு பைசா கூட கூடுதலாக எடுத்துக் கொள்ளவில்லை பாலாஜி. பத்து மாதத்தில் அது மிகப்பெரிய தொகையாக வளர்ந்து விட்டது.
“இனியும் நீ பணத்தை எடுக்கலைன்னா, வேலை விட்டு தூக்கிடுவேன்” என்று மிரட்ட ஆரம்பித்துவிட்டான் சூர்யா
இவ்வளவு பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்க, மலர் முன் வந்து நின்றாள்.
“அந்தப் பணத்தை ஒரு நல்ல காரியத்துக்கு செலவு பண்ணுவோமா? அபி மாதிரி இருக்கிற குழந்தைகளுக்காக ஒரு ஸ்கூல் கட்டினா நல்லா இருக்கும்ல!” என்றிட எல்லோரும் ஆமோதித்தனர்.
மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக, அவர்களின் உலகத்தை அழகாக்க ஒரு ‘சிறப்புப் பள்ளி’யைத் தொடங்கி, குழந்தைகளின் சிரிப்பில் இறைவனைக் காண ஆரம்பித்தாள் மலர்.
நிர்வாகப் பொறுப்புகள் சரியான கைகளில் இருப்பதை உறுதி செய்த சூர்யா, தன் ஆத்மார்த்தமான காதலான கிரிக்கெட்டிற்கு திரும்பினான். வாழ்க்கை அதன் போக்கில் மிக அழகாக நகரத் தொடங்கியது.
அவன் பேட்டைச் சுழற்றும் போதெல்லாம் கேலரியில் இருந்து “சூர்யா… சூர்யா…” என்கிற கோஷம் விண்ணைப் பிளந்தது. அவன் தொட்டதெல்லாம் வெற்றியாக மாறியது. இந்திய அணியின் கேப்டனாக அவன் மைதானத்தில் வலம் வந்த அழகு, பழைய காயங்களை எல்லாம் மறக்கச் செய்தது.
பழைய வேகமும், புதிய உற்சாகமும் சேர, அவன் கால் தடம் பதித்த இடமெல்லாம் வெற்றிக் கனிகள் வரிசையாக விழுந்தன. அவனது வெற்றிகளுக்குப் பின்னால் ஒரு பலமான சக்தியாக பூர்ணிமா நின்றாள்.
சூர்யாவின் கூடவே ‘வால்’ பிடித்துக் கொண்டு சுற்றினாலும், தன் ஆர்வத்தையும் அவள் கைவிடவில்லை. வாரத்திற்கு இரண்டு புது டிசைன்களை வரைந்து தனுஜாவிற்கு அனுப்பிக்கொண்டு, தன் படைப்பாற்றலையும் சூர்யாவின் காதலையும் ஒருசேர அனுபவித்தாள்.
துயரங்கள் மேகங்களாய் கலைந்து போக, பூர்ணிமா சூர்யாவின் வாழ்வில் மகிழ்ச்சி எனும் சூரியன் பிரகாசமாக உதித்தது.
வாழ்க்கை என்பது ஒரு சதுரங்க ஆட்டம் போலத்தான். சில நேரங்களில் துன்பங்கள் நம்மை இருளில் தள்ளலாம். ஆனால், உண்மையான அன்பும் தார்மீகமான நீதியும் சேரும்போது, எந்த ஒரு இருளையும் வீழ்த்தி விடலாம் என்பதற்குச் சூர்யா – பூர்ணிமாவின் வாழ்க்கையே சாட்சி. காயங்கள் ஆறிப்போயின, கண்ணீர் புன்னகையாக மாறியது. அதிகாரம் வீழ்ந்த இடத்தில் அன்பு அரியணை ஏறியது. இனி அவர்கள் வாழ்வில் என்றும் தீராத வசந்தம் மட்டுமே!
சுபம்.
