அத்தியாயம் 30

 அன்று கவிதா கௌரிக்கு போன் பண்ணியிருந்தாள். கௌரி, வர்ஷினிக்கு ஐந்து மாதம் ஆகப்போகுது. மதுமதிக்கு பண்ணினது போல இவளுக்கும் ஐந்து மாதத்திலேயே வளைகாப்பு பண்ணிடலாமா? என்று கேட்க, கௌரி, அம்மா நான் இப்போ லீவு போட்டுட்டு ஊருக்கு வந்தா மறுபடியும் வர்ஷினிக்கு குழந்தை பிறக்கும்போது லீவு போட்டுட்டு என்னால வர முடியாதும்மா. அதனாலே ஒன்பது மாதத்திலேயே வளைகாப்பு வச்சிக்கலாம் அப்பத்தான் என்னாலே வர்ஷினிக்கு டெலிவரி சமயத்தில் அவ கூடவே இருக்க முடியும் என்றிட, கவிதா ஒன்பதாவது மாசம் அவளுக்கு ரொம்ப சிரமமாக இருக்குமேன்னு பார்த்தேன். உன்னுடைய நிலைமையும் புரியுது, சரி கௌரி, உன் விருப்பம் போல ஒன்பதாவது மாதமே வச்சிக்கலாம் என்று

கூறி போனை வைத்துவிட்ட கவிதாவிக்கு  ஏனோ சற்று மனம் கலக்கமாகத்தான் இருந்தது.

நான் ஓடிக்கொண்டேதான் இருப்பேன். யாருக்காகவும் நான் நிற்க மாட்டேன். யாராலும் என்னை தடுக்க முடியாது என்று சொல்வது போல் நாட்களும் மாதங்களும்  வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. வர்ஷினியின் வளைகாப்பு நாளும் வந்தது. கௌரி விசேஷத்திற்கு இரு நாள் முன்பு தான் வர முடிந்தது. வந்ததுமே வர்ஷினிக்கு பிடித்த கலரில் புடவையும் அதற்கேற்றாப்போல் அணிகலன்களும் வாங்கியிருந்தான்.

 

அன்று வர்ஷினி மஞ்சள் வண்ணத்தில் அரக்கு பாடர்  போட்ட பட்டு புடவையும், சிவப்பு வண்ணத்தில் காதுக்கு தோடும், அதே நிறத்தில் கழுத்திலும் கைகளிலும் அணிந்திருந்தாள்.  அவள் வயிற்றில் இரு குழந்தைகளையும் தாங்கி  நடக்க முடியாமல் நடந்து வர, கவிதாவும் மதுமதியும் அவளை அழைத்து கொண்டு வந்தாலும் கௌரி ஓடி போய்  அவளை பிடித்து கொண்டு அழைத்து வந்தான். முதலில் கவிதா அவளுக்கு வளையல் போட்ட பின் வரிசையாக அனைவரும் அவளுக்கு வளையல் போட்டு நலங்கு வைத்து வாழ்த்தினர். ஐந்து வகையான  சோறும் அவளுக்கு ஊட்டப்பட்டது. கௌரி அவளுடைய வளைகாப்பை பெரிய மண்டபத்தில் வைத்து  விமர்சையாக தான் ஏற்பாடு செய்திருந்தான். மேடை  அழகாக அலங்கரிக்கப்பட்டு, அறுசுவை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு என  அமர்க்களமாக வர்ஷினியின் வளைகாப்பு நடந்து கொண்டிருந்தது. 

 

வளைகாப்பிற்கு மித்ராவும், சந்தோஷும் ஜோடியாக வந்திருந்தனர். சந்தோஷ் கையில் இரண்டு வயது பெண் குழந்தையும் இருந்தது. மித்ராவை பார்த்ததும் வர்ஷினிக்கு மிகுந்த சந்தோஷம். மித்ரா எப்படி இருக்கே? உங்க இரண்டு பேருக்கு கல்யாணமாகி குழந்தையும் இருக்கு போல, ஏன்டி  உங்க கல்யாணத்துக்கு கூட என்னை கூப்பிடலே? ஆமாம்டி, நான் கூப்பிட்டா நீ உடனே அமெரிக்காவில் இருந்து வரவா போறே, பாரு, இந்த வளைகாப்புக்கு கூட நீ என்கிட்ட சொல்லல, கௌரிதான் சொன்னார். நீ உன் கல்யாணத்திற்கும் என்னை கூப்பிடலே, அப்புறமா என்கிட்ட போன்ல கூட பேசறதே இல்லையே என்று ஆதங்கத்துடன் கூற வர்ஷினி, சாரிடி.  என் கல்யாணம் நடந்த அன்னிக்குத்தான்  எனக்கே தெரியும், எனக்கு இன்னைக்கு கல்யாணம்னு, அப்புறம் எப்படி நான் உன்னை கூப்பிட முடியும்? அத விடு, எலியும் பூனையுமாய் இருந்த நீங்க இரண்டு பேரும் எப்படி ஜோடி சேர்ந்தீங்க? என்றதும்,ம் அது ஒரு பெரிய கதை, அதை பற்றி அப்புறமா பேசிக்கலாம் என்று மித்ரா கூறியதை  கேட்ட சந்தோஷ், அவ்வளவு பெரிய கதை எல்லாம் இல்ல வர்ஷினி. இரண்டு பேரும் ஒரே ப்ராஜெக்ட்ல வேலை செய்யிற சந்தர்ப்பம் கிடைச்சுது. முதல்ல மோதலா இருந்தாலும் பின் அதுவே காதலா மாறிடிச்சு. மோதலுக்கு பின் தானே காதல் என்றதும் வர்ஷினி அடுத்து வரும் ஆபத்தை அறியாமல் சிரித்தாள்.  

 

அன்று கௌரி மிகவும் சந்தோஷமாக இருந்தான். வர்ஷினியின் பெரிய வயிறும், கர்ப்பகாலத்தில் உண்டான முக பொலிவும் அவனுக்கு பார்க்க பார்க்க மகிழ்ச்சியை கொடுத்தது. தனக்கும் பிள்ளைகள் வரப் போகிறார்கள்  என்ற எண்ணமே அவனுக்கு களிப்பை கொடுத்தது. காலையில் ஆரம்பித்த வளைகாப்பு முடிய மதியம் மூன்று மணி ஆகியது. விருந்தினர் ஒவ்வொருவராக சென்றுவிட மண்டபத்தில் கௌரியின் குடும்பம் மட்டும் இருக்க, தான் ஏற்பாடு செய்திருந்த வேனில் செல்ல முடிவெடுத்து அனைவரும் கிளம்ப தயராக, தீடீரென்று வர்ஷினி  அம்மா என்று கத்த தொடங்க, கௌரி அவள் அருகில் வந்து என்ன வர்ஷினி என்ன செய்யறது? என்று பதட்டத்துடன் கேட்க, ரொம்ப வலிக்குதுங்க என்று வலி தாளாமல் அவன் மேலேயே  சரிய, கவிதா அவள் அருகில் வந்து பயப்படாதம்மா, இது பிரசவ வலி தான் நினைக்கிறேன், கௌரி நாம சீக்கிரமாக இவளை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு போலாம். விக்னேஷ் நீயும் எங்க கூட வா, அப்பாவும் மதுவும்  மண்டபத்துக்கு  கணக்கு பார்த்து மீதம் இருக்கிற பணத்தை கொடுத்துட்டு வருவாங்க என்று அவசரமாக கூறி வெளியில் வர  அனைவரும் திடுக்கிட்டு அப்படியே நின்று விட்டனர்.

 

பொருட்களை கொண்டு செல்ல ஒரு பெரிய வேனும், மற்றும் குடும்ப உறுப்பினர் அனைவரும் வர வீட்டில் இருக்கும் மூன்று கார்களும் மண்டபத்தில் இருந்தன. அனைத்தும் உடைக்கப்பட்டு டயர்களும் பஞ்சர் ஆகி இருந்தன. அங்கிருந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. வர்ஷினியோ வலி தாங்க முடியாமல் கத்திக்கொண்டிருந்தாள்.  அவள் கௌரி, என்னால வலி தாங்க முடியல என்று சொல்லிக்கொண்டே மயக்கத்தில் சென்று கொண்டிருக்க, அவளுடைய பனிக்குடமும் உடைந்து அவள் ஆடையை நனைத்து கொண்டிருந்தது. கவிதா,கௌரி சீக்கிரமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லனும்டா, வயித்தில் இருக்குற குழந்தைகள் பத்திரமா வெளியே வரணும், சீக்கிரமா வேறு வண்டியை ஏற்பாடு செய் என்று கூற அவனும் கால் டாக்ஸியை அழைத்தும்  கால் போகாதலால் அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்படியே சிலையாக நின்றுவிட்டான். கவிதா அவனை கௌரி, கௌரி என்று உலுக்கியவுடன் தான் அவன் நினைவுக்கு  வந்தான். அங்கிருந்த பெரியவர் ஒருவர் இவர்கள் தவிப்பதை கண்டு அருகில் வந்து, என்னம்மா வண்டி  எதுவும் கிடைக்கலையா? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஏதோ ஒரு முக்கியமான அமைச்சரை போலீஸ் கைது செய்து கூட்டிட்டு போய்ட்டாங்க, அதனால அவரது ஆதரவாளர்கள் எல்லாரும் இருக்கிற வண்டி,போற வர வண்டி எல்லாதையும் அடிச்சு உடைக்கிறாங்க. கடையில புகுந்து அமர்க்களம் பன்றாங்க. அதனால இந்த பக்கம் எந்த வண்டியும் வராதுப்பா. கடை எல்லாம் மூடுறாங்க பாருங்க என்று  எதிர் பக்கம் சுட்டி காட்ட, அங்கே ஒருவர் அவசர அவசரமாக கடையை மூடிக்கொண்டிருந்தார் . இங்க பக்கத்தில் எந்த ஆஸ்பத்திரியும் இல்லப்பா, இரண்டு, மூன்று கிலோமீட்டர் தள்ளி தான் போகணும் என்றதும்  கௌரி உடனே வர்ஷினியை கையில் தூக்கி கொண்டு ஓடிக்கொண்டிருந்தான். அவனால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு 

வேகமா ஓடினான். அவளை கையில் தாங்கி கொண்டே ஒரு கிலோ மீட்டர் ஓடியிருப்பான். எதிரே ஒரு கார் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தது. அவன் அந்த காரின் முன்னாள் வர்ஷினியை தாங்கி கொண்டு நிற்க, கார் அவனருகில் வந்ததும் நின்றது. காரில் இருந்து பிரகாஷ் இறங்கி வந்தான்

  

கௌரி அவனை பார்த்ததும் இவன் வர்ஷினி கூட படித்த பிரகாஷ் தானே. இவன் கோமாவில் இருந்து எப்போது கண் விழித்தான் என்று எண்ணி கொண்டே அவனை பார்க்க, பிரகாஷும் இவனையும் வர்ஷினியையும் பார்த்து அடையாளம் கண்டு கொண்டு , என்னாச்சு வர்ஷினிக்கு? வாங்க நம்ம காரிலே ஹாஸ்பிடலுக்கு போலாம் என்று கதவை திறந்து கொண்டு நிற்க, கௌரிக்கு இவன் காரில் போகலாமா வேண்டாமா என்று தயங்கி கொண்டு ஒரு நொடி நின்றபோதும் வேறு வழியில்லை இப்போது வர்ஷினியையும்  

குழந்தைகளையும்  காப்பாற்றுவது தான் முக்கியம் வருவதை பார்த்துக்கொள்ளலாம் என்று அவன் காரில் ஏறிக்கொண்டான். அதற்குள் வர்ஷினி மயக்கத்திற்கு போயிருந்தாள். 

 

பிரகாஷும் கௌரியும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பிரகாஷ் விரைந்து காரை ஓட்டிட விரைவாகவே மருத்துவமனை வந்து அடைந்தனர். வந்ததும் அவளை ஐ.சி.யு.வில் அனுமதித்து விட்டு வெளியே காத்திருக்க, அவளை பரிசோதித்த மருத்துவர் வெளியே வந்து, அவங்க மயக்கத்துக்கு போனதாலே அறுவை சிகிக்சை பண்ணி தான் குழந்தைகளை எடுக்கணும். குழந்தைகளும் பொசிஷன் மாறியிருக்கு. அதனால ஒன்னு அம்மாவை அல்லது குழந்தைகளைனு ஏதாவது ஒன்னைதான் காப்பாத்த முடியும் என்றிட கௌரிக்கு உலகமே தலைகீழாக இருப்பது போல் தோன்றியது. டாக்டர் நீங்களே இப்படி சொல்லலாமா, எனக்கு இரண்டு பேருமே முக்கியம் டாக்டர், குழந்தைகள் இல்லனா வர்ஷிணியால தாங்கி கொள்ளவே முடியாது என்றிட, அந்த மருத்துவர்  நாங்க எங்களால் ஆனா முயற்சியை செய்கிறோம் என்று சொல்லி உள்ளே செல்ல, கௌரிக்கு இவ்வளவு நேரம்  அடைத்து வைக்கப்பட்ட கண்ணீர் வெளியே வந்தது. அங்கிருக்கும் சிறிய விநாயகர் சிலை முன் நின்று  கதறி அழுதான். விநாயகா, இதுவரைக்கும் நான் உங்கிட்ட எதுவுமே கேட்டதில்லை. நீயே எல்லாமே எனக்கு கொடுத்தே.  வர்ஷினியை கொடுத்ததும் நீதான். இப்ப நீ அவளை என்கிட்ட இருந்து எடுத்துடீன்னா நீ கொடுத்த எல்லாமே என்னை விட்டு போய்டும், என் உயிர் உள்பட. அதனாலே வர்ஷினியை எனக்கு கொடுத்திரு. என்னால அவ இல்லாம வாழ முடியாது. ஏன்னா என் உயிர் அவ கிட்ட தான் இருக்கு. வர்ஷிணியால் குழந்தைகள் இல்லாம இருக்க முடியாது, அவ இந்த குழந்தைகள் மேல ரொம்ப ஆசை வச்சிருக்கா. அதனாலே வர்ஷினியையும் குழந்தைகளையும் காப்பாத்தி கொடுத்திரு என்று முட்டி போட்டு கொண்டு கதறி கொண்டிருந்தான். அங்கு வருவோரும் போவரும் அவனை பாவமாக பாத்து விட்டு சென்றனர். ஒரு சிலர் இவனது மனைவியின் மீது கொண்ட காதலை கண்டு அப்படியே அங்கு நின்று கொண்டு அவனையே பார்த்து இருந்தனர். அப்போது அங்கு கவிதா, மாசிலாமணி விக்னேஷ் மதுமதி மற்றும் அவர்களுடைய குழந்தைகள் என்று அனைவரும் எப்படியோ தேடி கண்டு பிடித்து வந்து சேர்ந்தனர். கவிதா அவனின் நிலைமையை கண்டு தானும் கண்ணீர் விட, கௌரி, அம்மா வர்ஷினி திரும்பி வந்திடுவா தானேம்மா என்று சிறு குழந்தை போல் கேட்க, கவிதா அவனை அணைத்து கொண்டு கண்டிப்பா வருவாப்பா. அவ உன்னை விட்டு போக மாட்டா என்று  அவனுக்கு ஆறுதல் கூற விக்னேஷுக்கும் தன் தம்பியின் நிலைமை கண்டு கண்ணீர் வந்தது. யாரும் அறியாமல் கண்ணீரை துடைத்து கொண்டான். பிரகாஷ் இதனை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தான். அவனுக்கும் கௌரியை கண்டு மனம் வேதனை கொண்டது . கௌரி போல ஒரு கணவன் அமைய வர்ஷினி கொடுத்து தான் வைத்திருக்க வேண்டும். நான் அவள என் ஆசைக்கு பயன்படுத்தி குப்பை போல தூக்கி போடணும் நினச்சேன். ஆனா இவன் அவளை தன் மனசில கோபுரம் போல பாதுகாத்து  வச்சிருக்கான். வர்ஷினிக்கு ஏத்த ஒருவன் கௌரிதான் என்று நினைத்து கொண்டு அவன் அருகில் வந்து எழுந்துக்கோங்க கௌரி, நீங்க வர்ஷினி மேல் வச்ச அன்புக்கு அவ கண்டிப்பா உங்கிட்ட வருவா என்று அவனை அங்கிருக்கும் ஒரு நாற்காலியில் அமர வைத்தான். 

 

ஒரு மணிநேரம் கழித்து குழந்தைகள் அழும் சத்தம் கேட்டது. மருத்துவர் வெளியே வர கௌரியும் அவன் குடும்பத்தினரும் அவரை சூழ்ந்து கொண்டனர். அவர் கௌரியை நோக்கி உங்களுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று பிறந்திருக்கு. வாழ்த்துக்கள் என்று கூறியவுடன் டாக்டர்,வர்ஷினி எப்படி இருக்கா? என்றதும் மருத்துவர் சற்று நேரம் மௌனம் காத்தார். கௌரி அவரிடம் சென்று ஏன் எதுவுமே சொல்லாம இருக்கீங்க என்றதும் டாக்டர் அவங்க இன்னும் மயக்கத்தில் தான் இருக்காங்க. பல்ஸ் கீழே இறங்கிட்டு  இருக்கு. ஒரு நாள் கழித்து தான் எதுவுமே சொல்ல முடியும் என்று சொல்ல கௌரி அப்படியே சிலையாக நின்று இருந்தான்.

 

அவனுக்கு பேச கூட வாய் எழவில்லை. இல்லை அவ என்னையும் குழந்தைகளையும் விட்டுட்டு போக மாட்டா என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான். சிறிது நேரம் கழித்து குழந்தைகளை சுத்தம் செய்து கொடுக்க, கவிதா ஒரு குழந்தையையும், இன்னொரு குழந்தையை மாசிலாமணியும் பெற்று கொண்டார். குழந்தைகளை பார்த்ததும் கவிதாவின் கண்கள் கலங்கின. அவள் கௌரிடம் காண்பிக்க போக, கௌரி நான் என் வர்ஷினி என்கிட்ட திரும்பி வராம குழந்தைகளை பார்க்க மாட்டேன் என்று திரும்பி கொள்ள, கௌரி ஒரு குழந்தை உன்னை போலவும் இன்னொரு குழந்தை  அப்படியே கஸ்தூரி போல இருக்காடா என்று சொல்லியும் அவன் குழந்தைகள் முகத்தை பார்க்கவில்லை. அவன் மனம் முழுவது ம் வர்ஷினி திரும்பி என்னிடத்தில் வரவேண்டும்  என்று சொல்லி கொண்டே இருந்தது. அவன் மீண்டும் போய் அந்த விநாயகர் சிலை அருகில் அமர்ந்தான். நீங்க என் வர்ஷினியை என்னிடத்தில் தரும் வரை நான் உங்களை விட மாட்டேன் என்று அங்கேயே அமர்ந்து விட்டான். கவிதாவுக்கு தன் பிள்ளையின் நிலையை காண வருத்தமாக இருந்தது. குழந்தைகள் பிறந்த சந்தோசம்  அங்கு ஒருவரின் முகத்திலும் இல்லை. பிரகாஷுக்கு அவன் நிலையை பார்க்க வியப்பாய் இருந்தது. பெற்ற குழந்தைகளை கூட பார்க்காமல் வர்ஷினி வர்ஷினி என்று கடவுள் முன் அமர்ந்திருக்கும்  அவனை பார்க்கும் போது வர்ஷினியின் மேல் அவனுக்கு இருக்கும் எல்லையில்லா காதல் பிரகாஷுக்கு புரிந்தது. தான் இப்போது திருந்தி இருந்தாலும் முன்பு தான் பெண்களை எவ்வாறு போக பொருளாக நடத்தினோம் என்று  நினைக்கையிலேயே அவனுக்கு தன் மேலேயே வெறுப்பாக இருந்தது.  தானும் கௌரியை போல் ஒரு பெண்ணை காதலித்து மணந்து கொள்ள வேண்டும். அவனை போல் அந்த 

பெண்ணின் மீது அன்பு செலுத்த வேண்டும் என்று நினைத்து கொண்டான். அன்று இரவு வந்ததும் விக்னேஷ் கௌரியிடம் வந்து கௌரி சாப்பிடலாம் வா. நாங்க சாப்பிட்டிட்டு வீட்டுக்கு போகிறோம். ரொம்ப நேரம் மாதேஷும் , கவிஷும் இங்கு வைச்சு இருக்க முடியாது. உன்கூட இரவு அம்மாவும் அப்பாவும் இருப்பாங்க என்றதும் கௌரி நீங்க எல்லோரும் போய் சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போங்க. நான் இங்கேயிருந்து வரமாட்டேன் என்று திட்டவட்டமாக  சொல்லிவிட்டான். என்ன சொன்னாலும் அவன் இங்கிருந்து வரமாட்டான் என்று உணர்ந்த விக்னேஷ், கவிதாவிடம் அவனை தொந்தரவு செய்ய வேண்டாம்மா. நீங்க இங்கேயே இருங்க. நான் நாளைக்கு காலையிலேயே வந்திறேன்  என்று சொல்லிவிட்டு விக்னேஷ் மதுவையும் தன் குழந்தைகளையும் கூட்டி கொண்டு சென்று விட்டான். 

 

மறுநாள் விடிந்தும் விடியாததுமாக விக்னேஷ் வந்து பார்க்கும் போது மாசிலாமணியும் கவிதாவும் அமர்ந்திருந்த இருக்கையிலே  உறங்கி கொண்டிருக்க, கௌரி அந்த சிலையின் முன் கண் விழித்து அமர்ந்திருந்தான். கண்கள் சிவந்து, தலை களைந்து அவன் இருந்த நிலையே அவன் இரவு முழுவதும் தூங்கவில்லை என்று தெரிந்தது.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page