காதல்- 12

அத்தியாயம்- 12

தந்தை சம்மதம் சொல்லிய அடுத்த ஒரே வாரத்தில் தந்தை தாயுடன் அத்தை வீட்டிற்கு புறப்பட்டு விட்டாள் மெல்லிசை. 

வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்றார் லதா நடராஜனின் தங்கை. 

வந்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்து பின் நலம் விசாரிக்க, குமுதவள்ளியின் விழிகள் அந்த வீட்டை பார்வையால் அளந்தது. 

சிறிய வீடு தான். ஆனால் ஆதையே மிகவும் கஷ்டப்பட்டு தான் கட்டி முடித்து இருந்தான் லதாவின் மகன் மகிழன். 

மகிழன் கல்லூரி இறுதி ஆண்டு படித்து முடித்த நேரம் அவன் தந்தை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறைவனடி சேர்ந்து விட, அதன் பின் தான் தாயை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு மகிழனுக்கு வந்தது. 

நல்லவேளையாக காலேஜ் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி இருந்ததால் வேலை கிடைப்பதில் சிரமம் இன்றி போனது அவனுக்கு. 

ஒரு வருடம் தன் அயராது உழைப்பை அந்த பெரிய கம்பெனியில் போட்டவனுக்கு, அடுத்த வருடமே லோன் அப்ரூவல் ஆகி சொந்த வீட்டை கட்டினான். 

சிறியதாக இருந்தாலும், ஒரு குடும்பம் வாழ போதுமானதாக இருந்தது. 

ஒரு ஹால், இரு படுக்கை அறை. சிறிய சமையலறை அதிலே பூஜை அறை என்று சின்ன இடம், என்று நன்றாக தான் இருந்தது. 

குமுதவள்ளியின் பார்வையை அவதானித்த லதா, “என்னங்க அண்ணி நம்ம வீட்டை விட இது பெருசா தானே இருக்கு. என் மவன் தான் வேலைக்கு போய் கஷ்டப்பட்டு கட்டினான்” என்று மகன் பெருமையை பேச ஆரம்பிக்க, குமுதவள்ளிக்கும் சரி மெல்லிசைக்கும் சரி அய்யோடா இருந்தது.

ஏனென்றால் இதை தானே தினம் தினம் கைப்பேசி மூலம் பேசுவார். இப்பொழுது நேரில் பேசுகிறார். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்றால், லதாவின் முகம் பாவம் இப்பொழுது பார்த்துக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். 

லதாவின் பேச்சு முடிந்ததும் அவரின் பேச்சை நிறுத்துவதற்காக குமுதவள்ளி “ஏன்டி அதுக்குள்ளவா வேலை கிடைச்சது?” என்று கேட்ட தாயிடம் “இன்னும் இல்லைங்கம்மா. அத்தை வீட்டுக்கு போய் தான் வேலை தேடணும்னு இருந்தேன். அப்பா சம்மதம் சொன்னதே பெருசும்மா. அதான் என்ற அப்பா மனசு மாறதுக்குள்ள கிளம்பிட்டேன்ம்மா” என்று பேசிய மகளை வாயை பிளந்து தான் பார்த்தார். 

“அப்பனுக்கு ஏத்த மவ தான்டி நீ. அந்த மனுஷன் உன்னை கைக்குள்ள வச்சி வளர்த்தா கஷ்டப்படணும்னு அடம் பிடிக்குறவ. இதுக்கு மேல நான் என்ன சொல்ல” என்று குமுதவள்ளி குறைபட,

“வேலைக்கு போவுறது கஷ்டம்னு யாரும்மா சொன்னது? ஒரு பொண்ணு தன் சொந்தக்காலுல நிக்கிறது தப்பா?” 

“இப்போ மட்டம் என்னடி அடுத்தவ காலிலா நிக்குறவ. உன்ற கால தானே நிக்குற” என்று குமுதவள்ளி மகளின் காலை காட்டி பேச,

“அம்மாவ் ஒரு பஞ்ச் டைக் பேசுனா கேட்டுக்கணும் இப்படி காலை வார கூடாது” என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே வேலைக்கு போய் இருந்த மகிழன் வீட்டுக்கு வந்தான். 

இரவு எட்டு மணி வாக்கில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த மகிழன் தன் மாமா அத்தையை வரவேற்று கூடுதல் பாசத்துடன் மெல்லிசையை வரவேற்றான். 

இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டு இருந்த மகிழன் “ஏன் இசை வேலை கிடைச்சிடுச்சா?” என்று கேட்டான். 

அவளோ உணவை வாய்க்குள் அப்பொழுது தான் திணித்தாள். 

மகிழனின் கேள்வியில் சங்கடப்பட்டவள் நெளிந்தபடி “இன்னும் இல்ல மகி அத்தான். இனி தான் தேடணும்” என்று சொன்னவள் அதன் பின் தலையை நிமிர்த்தவேயில்லை. 

“அப்போ சரி இசை. நான் எங்க கம்பெனியிலே வேக்கன்சி இருக்கானு பார்க்கிறேன்” என்று தன் பேச்சை முடித்துக் கொண்டான். 

இதை கேட்ட நடராஜன் “இதுவும் நல்லது தான் மாப்பிள்ளை. உங்க கூடவே வேலைக்கு வந்தாவுனா நீங்களே கூப்பிட்டு போய் கூப்பிட்டு வரலாம் பாருங்க. வேலை மேல ஏதாவது பிரச்சனைனா நீங்களே பார்த்துப்பீங்க. எனக்கு இப்போ தான் நிம்மதியா இருக்கு. எங்கே மவ வேலைக்கு போறானு சொன்னதும் நீங்க ஏதாவது தப்பா நினைச்சிடுவீங்களோனு பயந்துட்டேன்” என்றவரை நோக்கி,

“இது என்ன தப்பு இருக்கு மாமா. வேலைக்கு தானே போக ஆசைப்பட்டா. போயிட்டு வரட்டும் மாமா. அதான் நான் கூட இருக்கேன்ல நல்லா பார்த்துக்கிறேன்” என்று மெல்லிசையை ஓரக்கண்ணால் பார்த்தவன் இதழ் மெலிதாக விரிந்தது. 

லதாவோ “அதென்னண்ணா இப்படி சொல்லிட்ட. அவனுக்கு வர போற பொண்டாட்டிய அவன் நல்லா தான் பார்த்துப்பான்” என்று சந்தர்ப்பத்தை அவர் சாதகமாக செயல்படுத்திக் கொள்ள, மெல்லிசைக்கு தான் அதற்கு மேல் உணவு தொண்டைக்குழிக்குள் போவேனா என்று அடைத்துக் கொண்டு நின்றது. 

குமுதவள்ளி இப்பொழுது அங்கே ஒரு பார்வையாரளாக தான் இருந்தார். 

அதன் பிறகு ஒரு இரண்டு நாள்கள் நடராஜனும் குமுதவள்ளியும் தங்கையின் வீட்டிலே தங்கி மகளுக்கு ஆயிரம் புத்திமதி சொல்லியவர் வந்த மூன்றாவது நாள் ஊரை பார்த்து கிளம்பிவிட்டார்கள். 

குமுதவள்ளி தான் ஏதோ மகளுக்கு திருமணம் முடித்து புகுந்த வீட்டில் விட்டு வருவது போல் வழிநெடுக்க ஒரே அழுகை. கடைசியாக கணவனின் அதட்டலில் தான் அழுகையை நிறுத்தினார் என்றே சொல்லலாம்.

முதல் முறை தாய் தந்தையை பிரிந்த மெல்லிசைக்கு வேதனையாக இருந்தது. அதன் பிரிதிபலிப்பு அவள் வதனத்திலும் தெரிய, மகிழன் தான் அவளுக்கு ஆறுதல் கூறினான். 

லதாவோ “ஏன்டிம்மா வேலைக்கு போகணும்னு சொல்லிட்டு வந்தவ இப்போ இப்படி முகத்தை தூக்கி வச்சி இருந்தா எப்படி?” என்று அதட்டியே கேட்க, சடுதியில் மெல்லிசையின் முகம் மாறி போனது. 

மகிழன் தான் “அம்மா சும்மா இருங்க. அவளை ஏன் பேசுறீங்க. யாருக்கா இருந்தாலும் அப்பா அம்மாவை பிரிஞ்சி இருக்கும் போது கஷ்டமா தான் இருக்கும்” என்றவன் மெல்லிசையை உள்ளே சென்று ஓய்வு எடுக்க சொன்னான். 

லதாவோ கழுத்தை நொடித்துக் கொண்டு “இன்னும் தாலியே கட்டல அதுக்குள்ள சப்போர்ட் பாரு” என்றவர் மகனுக்கு உணவை கட்ட ஆரம்பித்தார். 

ஷுவை மாட்டிக் கொண்டு இருந்த மகிழனின் முகம் தாயின் வார்த்தையில் மலர, அறைக்குள் இருந்த மெல்லிசைக்கு ஏனோ இந்த வார்த்தை கசப்பாக தான் இருந்தது.

மகிழனின் வண்டி அந்த வீட்டை விட்டு தாண்டி போவதை சத்தத்தை வைத்து உணர்ந்தவள், அதன் பிறகு வெளியே வந்தாள்.

வெளியே வந்தவளை பார்த்த லதா “என்னம்மா அம்மா அப்பா இருந்த வரை எல்லா வேலையை இழுத்து போட்டு பண்ணவ. இப்போ சொன்னா தான் செய்வ போல” என்று கேட்டார்.

“அப்படி எல்லாம் இல்ல அத்தை” என்று சொன்னவள் தானாகவே சென்று பாத்திரங்களை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். 

அச்சமயம் அங்கே பக்கத்து வீட்டு பெண் வர அவரோடு சேர்ந்து அவர் மகள் பவித்ரவும் உள்ளே வந்தாள். 

“ஹாய் ஆன்ட்டி” என்று சொன்ன பவித்ரா லதா அருகில் அமர்ந்துக் கொள்ள மற்றொரு பக்கத்தில் பவியின் அன்னை அமர்ந்தார். 

“என்ன லதா வீட்டுக்கு விருந்தாளிங்கலாம் வந்து போனாங்க போல?” என்று பக்கத்து வீட்டில் நடப்பதை எட்டி பார்த்து தெரிந்துக் கொண்டு அதை அந்த ஏரியாவில் பரப்பும் கூட்டத்தின் தலைவியாக அவர் கேட்க,

“ஆமாடி விஜி என் அண்ணனும் அண்ணன் சம்சாரம் அப்புறம் என்ற மருமகளும் வந்தாங்க. அண்ணனும் அண்ணியும் ஊரை பார்த்து போய்ட்டாங்க. மருமக மட்டும் வேலைக்கு போகணும்னு இங்கே இருந்துட்டா” என்று சொன்னார். 

மருமகள் என்ற சொலை கேட்டு பவித்ராவுக்கு தூக்கி போட, “மருமகளா?” என்று அவளையும் அறியாமல் கேட்டு விட்டாள். 

விஜி மகளை முறைக்க, பவியோ அதை கண்டு கொள்ளாமல் லதாவை நோக்க, “ஆமாடி பவி என் அண்ணன் மவ எனக்கு மருமக தானே” என்று அவள் வயிற்றில் பாலை வார்க்க, விஜிக்கே அப்பொழுது தான் ஆசுவாசமானது. 

லதாவின் பக்கத்து வீடு தான் இந்த விஜியின் குடும்பம். லதா இங்கே வீடு கட்ட ஆரம்பித்ததிலிருந்தே இருவருக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட, அது நல்ல நட்பாகவே வளர்ந்தது. 

அதுவும் பவித்ராவுக்கு மகிழனை காணும் போதெல்லாம் உள்ளுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும். அவனின் பொறுப்பும் அமைதியும் மற்றவர்கள் முன் சிரித்த முகத்துடன் கனிவாக அவன் பேசும் அழகும் அவளை அவன் பால் தானாகவே இழுத்துக் கொண்டது. 

விஜிக்குமே மகிழனின் பொறுப்பை கண்டு வியப்பு தான். இவன் வயது உள்ள பிள்ளைகள் எல்லாம் நண்பர்களுடன் சேர்ந்து குடி தம் கூத்து என்று இக்காலத்துக்கு ஏற்றது போல் மாறி இருக்க, அதில் தனித்து இருந்தான் மகிழன். 

தந்தையின் இழப்பு அவனை இப்படி தனித்தவனாக மாற்றி இருக்கிறது என்று கூட சொல்லலாம். 

மகிழனின் நல்ல குணமே விஜிக்கு தன் மகளுடன் ஜோடி சேர்க்க போதுமனதாக இருக்க, மேலும் லதாவுடன் நன்றாகவே பழக ஆரம்பித்து இருந்தார். 

தாயின் எண்ணம் புரிந்த பவித்ராவுக்குமே சந்தோஷம் தான். அதே போல் மகிழனை காணும் போதெல்லாம் மகளின் முகம் மலர்வதை கண்ட விஜிக்கு திருப்தி தான். 

இவர்கள் இப்படி ஒரு கனவில் இருக்க புதியதாக மருமகள் என்று லதா கூறினால் அவர்களுக்கு தூக்கிவாரி போடாதா என்ன? 

அப்பொழுது சுடிதார் முனையில் கையை துடைத்தபடி அங்கே வந்த மெல்லிசை “அத்தை பாத்திரம் எல்லாம் கழுவிட்டேன்” என சொல்லியபடி வந்தவள் புதியதாக இருந்த இருவரையும் பார்த்ததும் அப்படியே தன் வார்த்தையை நிறுத்திக் கொண்டாள். 

மெல்லிசையை கண்டதுமே விஜியின் முகம் மாற, பவிக்கோ மெல்லிசையின் பால் வண்ணம் அவளிடம் சினேகமாக புன்னகைக்க செய்து இருந்தது. 

தன்னை நோக்கி புன்னகையை சிந்திய பவித்ராவுக்கு மறு புன்னகை வீசியவள், விஜியையும் நோக்கி புன்னகைத்தாள். 

ஆனால் விஜிக்கோ மெல்லிசையின் பால் அழகு அவர் மகளின் வாழ்க்கையை நினைத்து அவர் வயிற்றில் பீதியை கலக்க, வேண்டா வெறுப்பாக புன்னகைத்தார். 

அந்நிய தன்மையான அவரின் பார்வையை சடுதியில் உணர்ந்துக் கொண்ட மெல்லிசை, வந்தர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க எண்ணி மீண்டும் சமையலறை நோக்கிச் சென்றாள்.

தண்ணீர் சொம்புடன் வந்வளை பார்த்த விஜி “நாங்க ஒன்னும் உன்னை போல விருந்தாளிங்க இல்லம்மா. பக்கத்து வீட்டுக்காரங்க. லதாவோட தோழி தான் நானு” என்று சொல்லிக் கொண்டே தண்ணீரை வாங்கிக் கொள்ள, பவித்ராவோ தன் அன்னையை ஏன்ம்மா என்பது போல் சலிப்பாக பார்த்தாள்.

லதாவோ விஜி பேசியதற்கு ஒரு வார்த்தை கூட பதில் பேசாமல் அமைதியாக இருந்து விட மெல்லிசையின் மனம் தான் சுணக்கம் கொண்டது. 

‘தாய் தந்தை இருந்தவரை தன்னிடம் அன்பாக பழகியவர் இன்று தனக்கு யாரென்றே தெரியாத சம்மந்தம் இல்லாத ஒருவர் தன்னை சொந்த அத்தை வீட்டில் விருந்தாளி என்று சொல்வதை கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்கிறாரே, அப்போ தனக்கு இந்த வீட்டின் மதிப்பு வெறும் விருந்தாளிக்கு உள்ளது மட்டும் தானா?’ என நினைத்தவளுக்கு வருங்காலத்தில் இந்த வீட்டிலா நாம் மருமகளாக வாழ வேண்டும் என்ற எண்ணமே கசந்து போனது. 

பவித்ராவோ மெல்லிசையிடம் நல்ல விதமாக பேச ஆரம்பிக்க விஜியால் மகளை முறைக்க மட்டுமே முடிந்தது.

அன்றிலிருந்து பவித்ராவுக்கும் மெல்லிசைக்கும் நல்ல நட்பு உருவாக ஆரம்பித்து இருந்தது. 

தினமும் காலை மாலை என்று லதா வீட்டை தேடி வரும் விஜியுடன் பவியும் சேர்ந்துக் கொள்ள, ஆரம்பத்தில் தயங்கி தயங்கி பேசிய மெல்லிசை அதன் பிறகு பவித்ராவின் நல்ல குணம் புரிந்துக் கொண்டு நன்றாக பேச ஆரம்பித்து இருந்தாள்.

தான் ஏன் இங்கே வந்து இருக்கிறோம் என்று சொல்ல, பவித்ராவுக்கு மெல்லிசையின் மீதே அப்பொழுது தான் நம்பிக்கை பிறந்தது. 

மெல்லிசையிடம் நெருங்கி பழகாதே என்று தாய் கூறினாலும், அதை கண்டுக் கொள்ளாமல் அவளுடன் ஒரு ஆழமான நட்பை வளர்த்துக் கொண்டு இருந்தாள். 

எதுவரை என்றால், மகிழன் நடைபயிற்சி செய்வதை கவனித்து ஒரு நாள் அவனுக்கே தெரியாமல் அதிகாலையில் அவனை ஃபாலோ செய்து அவளும் அவனுடன் நடைபயிற்சி செய்ய ஆரம்பிக்க, அது ஒரு வாடிக்கையாக தினமும் தனியாக போனவள் இப்பொழுது லதாவிடம் கூறி மெல்லிசையுடனும் நடைபயிற்சி செய்ய ஆரம்பித்து இருந்தாள். 

ஆனால் மெல்லிசைக்கு மகிழன் மீது பவித்ரா கொண்டு உள்ள ஆசை பற்றி தெரியாது. பவித்ரா தெரிந்துக் கொள்ளவும் விடவில்லை. 

உடற்பயிற்சி செய்தால் உடலுக்கு நல்லது என்று சொல்லியே அவளை அழைத்துச் செல்வாள்.

தினமும் வீட்டிலே அடைந்து கிடப்பது என்னவோ போல் இருக்க, சரி என்று மெல்லிசையும் கிளம்பி விடுவாள். 

இப்படி தான் இருவரும் அந்த ஊரில் உள்ள பெரிய பூங்காவில் பவித்ராவின் வண்டியிலிருந்து இறங்கி நடைபயிற்சி செய்ய ஆரம்பித்தனர். 

மகிழன் இவர்களுடன் வந்தாலும் அவன் தனியாகவே நடப்பான். பெண்கள் இருவரையும் தன் வட்டத்திற்குள் கொண்டு வர மாட்டான். அவர்களும் செல்ல மாட்டார்கள். 

மெல்லிசைக்கும் அவன் தள்ளி இருப்பது ஒரு வித நிம்மதி கொடுக்க, தோழியுடன் பேசிக் கொண்டும் பாட்டை கேட்டுக் கொண்டும் நடப்பாள். 

பார்க்கில் வாக்கிங் வரும் பெரியவர்களுடன் சிறிது சிறிதாக பழக்கம் ஏற்பட்டு அது நன்றாக  பேசிக் கொள்ளும் அளவுக்கு போய் இருந்தது. 

இதற்கு முக்கிய காரணம் மெல்லிசையின் பிறந்த நாள் தான். 

எப்பொழுதும் அப்பா அம்மாவுடன் பிறந்த நாளை கொண்டாடுபவள், இந்த வருடம் அவர்களை பிரிந்து இருப்பது வேதனையை கொடுக்க, அதை பவித்ராவிடமும் பகிர்ந்து இருந்தாள். 

அதை கேட்ட பவிக்கு என்னவோ போல் இருக்க, தோழியின் கவலையை போக்க நினைத்தாள்.

இரவு தாய் தந்தை அலைப்பேசியில் மகளுக்கு வாழ்த்துகள் கூற, தன் வருத்தத்தை மறைத்துக் கொண்ட மெல்லிசை அவர்களுக்கு நன்றி கூறி “உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் ப்பா…” என்றாள் குரல் கரகரக்க. 

மகளின் குரல் வித்தியாசத்தை உணர்ந்த நடராஜன் உடனே புறப்பட்டு வருவதாக சொல்ல, “அச்சோ வேண்டாம் அப்பா. அப்புறம் அத்தை ஏதாவது தப்பா எடுத்துக்க போறாங்க. அவங்க இங்க என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிறாங்க. நீங்க வராதீங்க” என்று அவரை சமாதானம் செய்தவளிடம்,

“ஏன்ம்மா லதா ஏன்டா தப்பா எடுத்துப்பா. அவ என்ற தங்கச்சிம்மா. அதெல்லாம் அம்மணி அப்படிலாம் எடுத்துக்க மாட்டா” என்று பேசிய தந்தையிடம்,

‘நீங்க நினைக்கிற மாதிரி அத்தை இல்லப்பா’ என்று சொல்ல துடித்த நாவினை கஷ்டப்பட்டு அடக்கியவள்,

“வேண்டாம்ப்பா விடுங்க” என்றாள் விட்டேற்றியாக.

நடராஜனோ “சரிம்மா. ஆனா ஏன்டா என்ற அம்மணி கிட்ட போன்ல கூட பேச வேணாம் சொல்லிட்டீங்க. நீங்க சொன்னதுல இருந்து நான் இன்னும் தங்கச்சிகிட்ட பேசலங்க” என்று கேட்டவருக்கு,

“அதான் அன்னைக்கே சொன்னேனேப்பா. நீங்க சும்மா சும்மா போன் போட்டு விசாரிச்சிட்டே இருந்தா, அவங்க எங்க உங்க பொண்ணை சரியா கவனிச்சிக்கலனு தப்பா எடுத்துக்க போறாங்கனு தானே பேச வேணாம் சொன்னேன்” என்று சொன்னவளுக்கு ஏனோ தந்தைக்கு அவரின் தங்கையின் குணத்தை பற்றி தெரிந்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது என்றே நினைத்தாள். 

அதன் பின் தாயிடம் சிறிது நேரம் பேசியவள் உறங்கச் சென்று விட்டாள். 

மறுநாள், காலை காற்று அவளுக்கு உயிர் வரை சென்று வீசுகின்ற உணர்வை கொடுக்க, அது அவள் இதழ்களில் புன்னகையாக மாறியது. 

அதிகாலையிலே எழுந்து வீட்டை பெருக்கி சுத்தம் செய்து வாசலை கூட்டி தண்ணீர் தெளித்து கோலம் போட்டு முடிக்க, பவித்ரா தயாராகி எழுந்து வந்தாள். 

“வந்துட்டியா?” என்று கேட்டுக் கொண்டே கோலமாவு டப்பாவை அதன் இடத்தில் வைத்தவள் “இருடி கையை அலம்பிட்டு வரேன்” என்று சொல்லி கையை கழுவிக் கொண்டு பவித்ராவின் ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தவள் “போலாம் பவி” என்றதும் இருவரும் விடிந்து விடியாத அந்த அதிகாலையில் பூங்காவை நோக்கிச் சென்றார்கள்.

அன்று வழக்கம் போல் நடைபயிற்சி செய்துக் கொண்டு இருக்க, இவர்களுக்கு முன்னால் மகிழனும் நடந்துச் செல்ல, அப்பொழுது அவர்களை தாண்டி ஒருவன் ஓடிய சமயம் மெல்லிசையின் தோள் மீது இடித்து விட்டு அவன் கடந்துச் செல்லவும், 

சட்டென்று மெல்லிசை “ஏய்…” என்று அவனை திட்ட வாய் திறக்க, அவனோ திரும்பிக் கூட பார்க்காமல் கையை மட்டும் நீட்டி “சாரி சாரி” என்று சொல்லி விட்டுச் சென்றான்.

“சரியான ஒட்டகசிவிங்கி மாதிரி பையன் எப்படி இடிச்சிட்டு போறான்” என்று திட்டி விட்டு தன் தோளை தடவிக் கொண்டு “அப்பா வலிக்குது பவி” என்று அவன் சாதாரணமாக இடித்ததுக்கே மெல்லிசைக்கு அவள் தோள்பட்டை மிகவும் வலியை கொடுத்தது. 

தோழியின் முகம் வலியில் சுணங்குவதை பார்த்த பவி, “இரு இன்னிக்கு அவனை” என்று முன்னே செல்ல போக, 

அவள் கரத்தை பற்றியவள் “வேணாம் விடுடி. அவன் என்ன வேணும்னா இடிச்சி இருப்பான். நம்ம தான் இடம் இருக்கேனு தாராளமா நடந்து வந்தோம். இனி கொஞ்சம் தள்ளி ஓரமா தான் நடக்கணும்” என்று இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே ஒரு தாத்தா,

“என்னங்க பேத்திங்களா இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி வேகமாக நடங்க” என்று போகிற போக்கில் அவரும் சொல்ல, தோழிகள் இருவரும் சரி தாத்தா என்று சொல்லிக் கொண்டே திரும்பி பார்த்தவர்களுக்கு அவர்கள் அருகில் யாருமே இல்லை.

எங்கே போனார் என்று இருவரும் அவரை தேட, அவரோ இவர்களுக்கு பத்தடி முன்னே வேகமாக நடந்துச் சென்றுக் கொண்டு இருந்தார்.

“என்னடி மனுசன் அந்த தடிமாட்டை விட வேகமா நடக்கிறாரு. இவர் கூட நம்ம சேர்ந்து நடந்தோம் வை. நம்மளுக்கு இன்னைக்கே சங்கு ஊதிடுவாங்க” என்று பவித்ரா சொல்ல,

“பெரியவங்களை மரியாதை இல்லாம பேசாத டி” என்று கண்டித்தாள். 

பவியோ “சரிதான்” என்று சொல்லி மீண்டும் நடக்க தொடங்கி இருந்தனர். 

பின் ஒரு வழியாக அன்றைய நடைபயிற்சியை முடித்துக் கொண்டு இருவரும் ஓய்வாக அங்கே இருந்த கல்பெஞ்சில் அமரவும் அவர்கள் அருகில் வந்த மகிழன்,

“இசை எனக்கு இன்னிக்கு சின்ன வேலை ஒன்னு முடிக்க வேண்டி இருக்கு. சோ நான் கிளம்புறேன். நீங்க பத்திரமா வீடு வந்து சேருங்க” என்று சொல்ல, இசை சரியென்று தலையை ஆட்டினாள். 

பவித்ராவும் உடன் தலையை ஆட்ட, மகிழனும் தலை அசைத்து விட்டு அங்கே இருந்து சென்றான். 

அவன் போனதும் வேகமாக நடைபயிற்சியை முடித்து விட்டு வந்த தாத்தா அவர்கள் அருகில் இருந்த மற்றொரு பெஞ்சில் அமர்ந்தார். 

பவித்ராவோ தோழியை குறும்புடன் பார்த்து விட்டு, “ஒரு நிமிசம் இருடி வண்டில இருந்து தண்ணீயை எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி வேகமாக வெளியே சென்றவள் அடுத்த இரண்டாவது நிமிடம், ஒரு சின்ன கேக்கை கையில் எடுத்துக் கொண்டு வந்தாள். 

“சர்ப்ரைஸ்!” என்று மெல்லிசையின் முன் அவள் நீட்ட, நிஜமாகவே அதிர்ந்து தான் போனாள் மெல்லிசை.  

பார்க்குல இருந்த பெரியவர்கள் எல்லாரும் ஆச்சரியமாக திரும்பிப் பார்க்க மெல்லிசை வெட்கப் புன்னகையோடு கேக் வெட்டினாள்.

“எல்லாரும் வாங்கஸ நீங்க இல்லாம இந்த மோர்னிங் கம்ப்ளீட் ஆகாது” பவித்ரா கேக் துண்டுகளைப் பகிர்ந்தாள்.

அந்த சிறிய தருணமே பெரிய நட்பாக மாறிடுச்சு அங்கே இருந்த அனைவருக்கும்.

அதுக்குப் பிறகு அந்த பெரியவர்கள், மெல்லிசைக்கும் அவளோட தோழிக்கும் மனதார ஆசிர்வாதம் செய்தார்கள். 

அதிலும் ஒரு எழுபது வயது தாத்தா “இனிமேல் நீ என் பேத்திம்மா” என்று மெல்லிசையை அழைக்க ஆரம்பித்தார். 

அந்நொடியிலிருந்து காலை நடைபயிற்சி ஒரு பழக்கமா இல்லாமல், ஒரு குடும்பத்தோட சந்திப்பா மாறி விட்டது அனைவருக்கும். 

அதன் பிறகு என்ன, மெல்லிசையும் அந்த எழுபது வயது தாத்தாவும் வயது வித்தியாசம் இல்லாமல் நண்பர்களாக பழக ஆரம்பித்து இருந்தனர். 

அவரோ மெல்லிசையிடம் எந்த ஊர் என்று கேட்க ஆரம்பித்தவர் அவளை பற்றியும் கேட்டார்.

அவளோ தன் லட்சியத்தை பற்றி கூறியவள் வேலை தேடுவதாக தான் முதலில் கூறினாள். 

பிறகு நாள்கள் போக போக, அவள் மீதான அக்கறையில் தாத்தாவின் கவலையான தோற்றத்தை கண்டு, தனக்கு வேலை கிடைத்து விட்டதாக கூறி உண்மையை மறைத்தாள். 

ஒருவரின் உண்மையான பாசத்திற்காக தன் கவலையை மறைத்துக் கொண்டு பொய் கூறுவது ஒன்றும் தவறில்லையே என்று எண்ணி இருந்தாள் மெல்லிசை. 

இப்படியே நாள்கள் செல்ல ஒரு நாள் இரவு பொழுது வேலையை முடித்து விட்டு வந்த மகிழன் மெல்லிசைக்காக பேக்கரி ஐட்டம்ஸ் வாங்கிக் கொண்டு வர, அப்பொழுது பார்த்து விஜி அவர்கள் வீட்டில் தான் அமர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டு இருந்தார். 

உள்ளே வந்த மகிழனோ அவருக்கு ஒரு சிரிப்பை மட்டும் சிந்தியவன் “இசை” என்று அழைத்தபடி லேப்டாப் பேக்கை கழட்டி டேபிள் மீது வைத்தான்.

மாமனின் குரல் கேட்டதும் “இதோ வரேன் மாமா” என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தவளிடம் தன் கையில் இருந்த பையை அவன் நீட்ட அதை வாங்கிக் கொண்டு “தேங்க்யூ மாமா” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் நுழைந்துக் கொண்டாள். 

இதை கழுகு பார்வை பார்த்துக் கொண்டு இருந்த விஜியின் மனம் உலையாய் கொதித்தது. 

மறுநாள் லதாவிடம் மெல்ல இதை பற்றி சொல்ல அவரோ “அவன் தினமும் தான்டி அவளுக்காக ஏதாவது வாங்கிட்டு வந்து கொடுப்பான். இப்போ மட்டும் இல்ல. சின்ன வயசுல இருந்தே இசையை பார்க்க போகும் போதெல்லாம் அவளுக்காக ஏதாவது வாங்கிக் கொடுப்பான்.” என்று அவர் தலையில் புதிய குண்டை தூக்கி போட, 

“தினமுமா?” என்று வாயை பிளந்தார் விஜி. லதா ஆம் என்று தலையை ஆட்டியவருக்கு ஏனோ மகனையும் மெல்லிசையும் தவறாக நினைக்க தோன்றவில்லை இந்நொடி வரை. 

ஆனால் அடுத்த பத்து நிமிடத்தில் விஜியின் கைகோர்த்த வார்த்தைகளால் மெல்லிசையை தவறாக நினைக்க தொடங்கியவருக்கு மெல்லிசையை காயப்படுத்தும் எண்ணம் தானாகவே எழுந்தது. 

“இங்க பாரு லதா, இது என்ன கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே புருஷன் பொண்டாட்டிக்கு வாங்கிக் கொடுப்பது போல தினமும் வாங்கிட்டு வந்து தருவது எல்லாம் நல்லாவா இருக்கு. அதுவும் உன் முன்னாடியே. ஆமா இதுக்கு முன்னாடி நம்ம மகிழன் தம்பி இது போல உனக்கு என்னைக்காவது ஏதாவது வாங்கி வந்து கொடுப்பானா? அதுவும் ஒரு கவர் முழுக்க தீனிகள் தான். ஆனா உனக்கு மாத்திரை மருந்து தவிர வேற என்ன வாங்கிக் கொடுத்து இருக்கான் நீயே சொல்லு?” என்றவரின் வார்த்தைகள் லதாவின் தெளிவான இதயத்தில் சிறிய கல்லை எறிய, அது சிறிது சிறிதாக கலங்க ஆரம்பித்தது.

தன் மகனை விட்டு கொடுக்க கூடாது என்ற லதா “ஏன்டி விஜி என் புள்ளை தானே எனக்கு எல்லாமே பண்றான். இதோ இந்த சேலை கூட அவன் வாங்கிக் கொடுத்தது தான். வீட்டுக்கு தேவையானது எல்லாம் அவன் தான் வாங்கித் தரான். எனக்கு தேவையானதும் அவன் தான்” என்று பேசியவரை கையமர்த்தி,

“ஹான் தேவையானது மட்டும் தான். ஆனா அவளுக்கு தேவையில்லாததும் வாங்கி கொடுக்கிறானே. இங்க பாரு லதா நான் நம்ம பையனை பத்தி குறை பேசல. நான் சொல்றது நேத்து வந்த அந்த இசையை பத்தி தான். அவ வந்து ஒரு ஒன்றரை மாசம் இருக்குமா? இந்த ஒன்றரை மாசத்துல ஏதாவது வேலைக்கு போறேன்னு இந்த வீட்டை விட்டு வெளியே போய் இருப்பாளா? காலையில என் மக கூட வாக்கிங் போறதை தவிர அவ இந்த வீட்டை விட்டு வெளியே போனதை சொல்லு பார்ப்போம். வேலைக்கு போகணும் குடும்பத்தை உயர்த்தணும்னு தானே இங்கே வந்தா. ஆனா வந்தவ வேலையை தேடின மாதிரியும் இல்லை. வேலைக்கு போன மாதிரியும் இல்ல. எனக்கு என்னவோ நம்ம மகிழன் தம்பியை வளைச்சி போட்டு அவளுக்கு தேவையானதை நம்ம மகியே செய்யுற அளவுக்கு கொண்டு வரணும்னு முடிவு பண்ணி தான் இங்கே வந்து இருக்கா போல.” என்று தன் பேச்சு திறமையை லதாவிடம் இறக்கி வைத்துக் கொண்டு இருந்தார் விஜி. 

விஜி சொன்னதும் தான் லதாவுக்கே இசை இன்னும் வேலைக்கு போகாமல் வீட்டில் இருப்பது உரைத்தது.

ஆரம்பத்தில் பெண் பிள்ளை எதுக்கு வேலைக்கு போக வேண்டும் என்று கேள்வி கேட்டவர் தான். ஆனால் இன்று விஜியின் வார்த்தை அக்கேள்வியையே மறக்க வைத்து இருந்தது.

“நீ சொல்றது நிஜமா இருக்குமா விஜி?” என்று அம்பு எய்தவரிடமே லதா கேட்க, இதற்கு மேல் வேறு என்ன வேண்டும் விஜிக்கு.

“அட ஆமா லதா. இத்தனை வருஷமா இல்லாம ஏன் உங்க அண்ணா தன் சொந்த பொண்ணையே இங்க கொண்டு வந்து விடணும்? நீயே யோசி” என்றவர் லதா யோசிக்கும் முன்,

“ஏன்னா இதுக்கு மேல தன் சொந்த பொண்ணுக்கே சோறு போட முடியாம தான் இங்க கொண்டு வந்து தள்ளி இருக்காரு. நீ தான் பெரிய தியாகி மாதிரி அண்ணன் மவ தான் என் வீட்டு மருமகனு சொல்லிட்ட. இதுக்கு மேல வேற என்ன வேண்ணும் சொல்லு? அதான் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே இங்கே கொண்டு வந்து விட்டு போயிட்டாரு. ஒரு விஷயத்தை யோசிச்சியா நீ?” என்று மீண்டும் விஜி லதாவை சிந்திக்க சொல்ல,

“என்னது?” என்று லதா சிந்திக்கும் முன்,

“உங்க அண்ணன் இங்க வந்து அவரோட பொண்ணை விட்டு போனதுக்கு அப்புறம் இடையில ஒரு நாளாவது வந்து எட்டி பார்த்தாரா? தொல்லை ஒழிஞ்சிதுனு கையை கழுவிட்டாரு பாரு. ஏன் மவ பிறந்த நாளுக்கு போன் பண்ணி தான் வாழ்த்து சொன்னாருனு இசை சொல்லுச்சே தவிர நம்ம முன்னாடி பேசலையே. அவ்வளவு ஏன் அவ பிறந்த நாளைக்கு நம்ம மகிழன் தம்பி அவளுக்கு பிறந்த நாள் பரிசா ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்துச்சில” என்று லதாவின் கலங்கிய இதயத்தில் மேலும் மேலும் கல்லை எறிந்து குட்டையாக மாற்றி இருந்தார் விஜி. 

லதாவோ “அது செகண்ட் ஹாண்ட் வண்டி விஜி” என சொல்ல,

“எதுவா இருந்தா என்ன லதா. செகண்ட் ஹாண்ட்டா இருந்தா பணம் கொடுக்கமாலையா வாங்கிட்டு வந்து இருக்கும். எப்படியும் முப்பதாயிரம் ஏன் ஐம்பதாயிரம் கூட ஆகி இருக்கும்” என்று விஜி லதாவின் அதிர்ச்சியான முகத்தை கவனித்து உள்ளார மகிழ்ந்தவர் தொடர்ந்து,

“என்ன சொக்கு பொடி போட்டு இருந்தா மகி தம்பி உன் கிட்ட கூட சொல்லாம வாங்கி வந்து கொடுத்து இருக்கும் யோசிச்சியா?” என்று மொத்தமாக லதாவை மாற்றி இருந்தார் விஜி. 

லதாவின் மனம் பெரும் குழப்பத்தில் சுழல ஆரம்பித்தது. ஒருவேளை விஜி கூறுவது போல் இருக்குமோ என்று தோன்ற தோன்ற மெல்லிசையின் மீதும் தன் அண்ணன் மீது கோபம் எழ, அந்நாளிலிருந்தே மெல்லிசையிடம் மேலும் எரிந்து விழ ஆரம்பித்து இருந்தார் லதா. 

அமைதியான குணம் கொண்ட மகிழனுக்கோ இது எதுவுமே தெரியாது. காலையில் வேலைக்குச் சென்றால் இரவு எட்டு மணி போல் தான் வீடு திரும்புவான். என்ன தான் வேலை வேலை என்று அவன் ஓடினாலும் தாயிற்கு தேவையான அனைத்தையும் பார்த்துக் கொள்வான். 

தந்தையில்லாமல் தாய் பட்ட கஷ்டத்தை கண்டவனுக்கு தன்னால் தன் அன்னை எந்த கவலையும் பட கூடாது என்று முடிவெடுத்தவன் லதாவுக்கு தேவையான அனைத்துமே அவர் கேட்கும் முன் செய்து முடிப்பான்.

இப்படி தாயை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு, வசந்தம் வீசுவது போல் மெல்லிசையின் வருகை அவனின் மிஷின் போன்ற வாழ்க்கையில் வண்ணங்கள் தீட்ட வந்தவளாக எண்ணியவன் தாயிற்கு என்ன செய்தானோ அதையே தான் மெல்லிசைக்கும் செய்ய ஆரம்பித்தான்.

எப்படி தாயிற்கு தேவையானதை எல்லாம் செய்தானோ அதே போல் மெல்லிசை கேட்கும் முன்பே அவளுக்கும் அனைத்தும் வாங்கி வந்து கொடுப்பான். தான் வாங்கி வரும் பொருட்கள் மெல்லிசைக்கு பிடித்து இருக்கிறதா இல்லையா என்ற கவலையெல்லாம் இல்லை அவனுக்கு. அவனை பொறுத்தவரை பெண்களுக்கு தேவையானதை கேட்கும் முன் செய்து முடித்திட வேண்டும். 

இப்படிப்பட்டவனை தான் பவி மனதார காதலிக்கிறாள். ஆனால் அந்த காதல் கூட அவனுக்கு தெரியாது. அவளும் சொல்லவில்லை. சொல்லும் தைரியமும் பவித்ராவுக்கு இல்லை. 

காதலை கூறி அதை மகிழன் மறுத்து விட்டால் அதை அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் போய் விடுமோ என்ற பயம் தான் அவளுக்கு.  

ஆரம்பத்தில் மகிழன் அவன் வேலை செய்யும் கம்பெனியிலே ஏதாவது காலியிடம் இருக்கிறதா என்று பார்த்து கூறுகிறேன் என்றவன், அடுத்த இரண்டு வாரத்தில் எந்த காலியிடமும் இல்லை என்று மெல்லிசையிடம் மன்னிப்பு வேண்டினான் மகிழன். 

சரியென்று அவள் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாலும் மனதினுள் வேதனை படர ஆரம்பித்து இருந்தது. 

எங்கே வேலைக்குச் செல்லாமல் போய்விடுமோ, தந்தையின் கஷ்டத்தை போக்காமல் இருந்து விடுவோமோ, மேலும் மேலும் கடனை வாங்கி தன் திருமணத்திற்காக தந்தையை கடனாளியாக மாற்றி விடுவோமோ என்ற அச்சம் அவள் மனதில் எழ தொடங்க, அதன் விளைவு பெண்ணவளின் முகம் வாடி போனது. 

பெண்ணவளின் முகம் வாடுவதை கண்ட மகிழன் “நீ எதுக்கும் கவலைப்படாத இசை. நான் எப்பாடியாவது உனக்கான ஒரு நல்ல வேலையை தேடி தரேன். அதுவரை நீ வீட்டிலே இரு. நீ வேலைக்கு போறது கண்டிப்பா என் பொறுப்பு” என்று வாக்கு கொடுத்தவனால் இன்று வரை அந்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை. 

அவனும் பாவம் என்ன தான் செய்வான். அவனுக்கு தெரிந்த இடத்தில் எல்லாம் மெல்லிசைக்காக வேலைக்கு சொல்லி வைத்து இருக்கிறான் தான். ஆனால் வேலை கிடைத்தபாடு தான் இல்லை.

மெல்லிசையும் வெளியே சென்று வேலையை தேடலாம் என்று தான் இருந்தாள், ஆனால் வெளியே சென்று விட்டு தாமதமாக வந்தால் எங்கே ஊர் சுத்திட்டு வந்து இருக்கேனு அவள் அத்தை கேட்கும் கேள்வியும், மிச்சம் இருக்கும் தந்தை கொடுத்த பணமும் தீர்ந்து விடுமோ என்று பயந்தவள் மகிழனை தான் முழுவதாக நம்பினாள். 

கண்டிப்பாக அத்தை மகன் தனக்கான வேலையை வாங்கிக் கொடுப்பான் என்று. 

கட்டிக் கொள்ள போகும் பெண்ணுக்காக இதை கூட செய்ய மாட்டானா என்ற எண்ணம் அவளுள் எழ, அதன் விளைவே அவள் இத்தனை நாள்களாக அமைதியாக அந்த வீட்டில் இருந்தாள். 

ஆனால் இப்பொழுது? விஜியின் சதி அவள் வாழ்க்கையை புரட்டி போட போவதை பாவம் மங்கையவள் அறியவில்லை. 

இப்படி அவர் அவர்கள் வாழ்க்கை செல்ல, தினமும் மெல்லிசையை வார்த்தையால் குத்திக் கொண்டு லதா இருக்க, அதை கேட்டு சகித்துக் கொண்டு அமைதியாக தன் வேலையை தேடிக் கொண்டு இருந்தாள் மெல்லிசை. 

ஆனால் எத்தனை நாள் தான் மெல்லிசையும் அமைதியாக இருப்பாள். 

சாது மிரண்டால் காடு கொள்ளாதுனு சும்மாவா சொன்னாங்க. 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page