அத்தியாயம்- 5

அத்தியாயம் 5

வருண் வித்யூத் தன் இல்லத்திற்குள் நுழைந்ததும் அவர் தாத்தா அமைதியுடன் எதுவும் கேட்காமல் தன் பேரனையே பார்த்துக் கொண்டு இருந்தார். 

‘கண்டிப்பாக அவனே வந்து கூறுவான்’ என்று அவர் நினைத்தது போலவே தன் அறைக்குச் சென்றவன் ப்ரஷ் ஆகிவிட்டு கீழே வந்து 

தாத்தா பக்கத்தில் அமர்ந்து “குட் ஈவினீங் டார்லிங், என்ன செய்யுற டார்லிங் நீ? உன்னை இந்த மாதிரி புட் எல்லாம் சாப்பிட கூடாதுனு சொல்லி இருக்கேன். ஆமா யாரு உனக்கு இதை செய்து கொடுத்தது?” என தன் தாத்தாவிடம் சற்று கோபப்பட்டு சமையல் ஆட்கள் மூன்று பேரை அழைத்து லேப்ட் அன் ரைட் வாங்கியது மட்டும் இல்லாமல் அந்த பெரிய ஸ்விம்மிங் ஃபூலை  இருபது முறை சுற்றி வர சொல்லி கட்டளை விதித்தான். 

அவன் சொன்னது போலவே அவர்களும் பயந்துக் கொண்டே அப்படியே செய்தார்கள். காரணம் அவன் மேல் இருக்கும் பயத்தை விட மதிப்பு அதிகம் அவர்களுக்கு. 

என்ன தான் வருண் வித்யூத் கோபக்காரன், திமிர்பிடித்தவன், கொழுப்பு நிறைந்த ஆணழகன் எல்லாம் கலந்த கலவையாக இருந்தாலும் அவன் வேலை செய்பவர்களை அலட்சியப்படுத்த மாட்டான். 

அவர்களுக்கு என்ன தேவையோ அதை அவர்கள் கேட்கும் முன் அறிந்துக் கொண்டு செய்து முடிப்பான். இந்த நல்ல பண்பு அவனிடம் இருக்கும் மற்றதை மறக்க வைத்து அவன் சொல்படி செய்ய வைத்தது. ஆனால் அவர்கள் மேலும் தவறு இருக்கிறது என அவர்களுக்கு தெரியும் என்பதால் இந்த தண்டனையை முழுமனதோடு ஏற்றனர். 

தாத்தாவோ அப்போதும் அமைதியாக அமர்ந்து இருக்க அவனுக்கு புரிந்தது  இந்த அமைதிக்கு பின் இருக்கும் காரணம் மெல்ல தன் தாத்தாவின் தோளில் சாய்ந்தவன் தன் போனில் உள்ள அவள் பேசிய வீடியோவை காண்பித்தான். 

தாத்தாவும் அதை வாங்கி பார்த்தவர் விழுந்து விழுந்து சிரித்தார். 

தன் தாத்தாவின் சிரிப்பை பார்த்தவன் விழிகளில்  கண்ணீர் சிறிது குளமாக அதை அவருக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டு வருணும் சிரிக்க தொடங்கினான். 

“டேய் லட்டு பையா யாருடா இந்த பொண்ணுங்க? அதுவும் அந்த தாவணி போட்ட பொண்ணு தான் செம மாஸ்டா. உன்னை யாருனே தெரியாதுனு சொல்றா பாரு. ம்ம்… இதுவும் நல்லா இருக்குல, நீ யாருனு தெரியாத ஒரு பொண்ணு இந்த சிட்டியில் இருப்பது அதிசயம் தான். இவள் வயது பெண்கள் எல்லாரும் உன்னை கண்டதும் வழிந்துக் கொண்டு இருப்பார்கள் ஆனால் இவளோ உன்னிடம் சண்டைப் பிடித்திருக்கிறாள்.”

வருணோ, “ஏன்னா டார்லிங் இந்த பொண்ணு ஒரு லூசு சிம்பிள்… போதுமா? இதுக்கு மேலே இதை பத்தி பேச வேண்டாம்” என்று கூற. 

தாத்தாவோ, “அதெல்லாம் விடு, ஏன் லட்டு பையா இந்த பொண்ணு பார்க்க லட்சணமா இருக்கால்ல? உனக்கு ஏத்த பொண்ணாவும் இருப்பா. பார்க்கும் போதே தெரியுது ரொம்ப பொறுப்பு உள்ள பொண்ணு மாதிரி. அவங்க அப்பா, அம்மா பொண்ணை நல்ல பொறுப்பா வளர்த்து இருக்காங்க. என் லட்டு பையனுக்கு ஏற்ற மாதிரி.”

“ஆனா டார்லிங் உனக்கு இவ்வளவு குசும்பு இருக்க கூடாது. இந்த வீடியோவ பார்த்துட்டும் இவள் பொறுப்பு உள்ள பொண்ணு அதுவும் எனக்கு ஏற்ற பொண்ணு சொல்ற பாரு. அங்க இருக்க நீ” என சொல்லிக் கொண்டே இருக்கும் போது அவனின் ட்ரைவர் வர அதை பார்த்தவன் தன் தாத்தாவின் முன் சற்று தடுமாறினான். இதை தாத்தாவும் கவனித்து விட்டார். 

“என்ன லட்டு பையா திடீர்னு டென்ஷனாகிட்ட?”  என கேட்க. 

வருணோ, பேச வாய் திறக்கும் முன் “முதலாளி அந்த பொண்ணுங்க இருக்கிற இடத்தில் வண்டியை கொடுத்துட்டேன். அந்த பொண்ணுங்க பத்திரமா ஆசிரமத்திற்கு போய்ட்டாங்க.” என்று ட்ரைவர் கூறியதை கேட்ட இருவரும் ஒரே சமயத்தில்…

“என்னது ஆசிரமமா!”

“ஆமாங்க முதலாளி, அந்த இரண்டு பொண்ணுங்களும் அனாதைங்க.” என ட்ரைவர் சொல்லி முடிக்க அவன் அனாதை என்று சொல்லும் போது கோபம் கொண்டவன் தன் ட்ரைவர் என்றும் பாராமல் அடிக்க கை ஓங்க, 

நொடி பொழுதில் நிலைமையை உணர்ந்த தாத்தா வருணின் கையை பிடித்து தடுத்தார். 

“வருண் என்ன காரியம் செய்ய போற? இது என்ன புது பழக்கம் நம்ம கிட்ட வேலை செய்யுறவங்களை அடிக்க கை ஓங்குவது. எங்கே இருந்து வந்துச்சு இந்த பழக்கம்?” என சற்று கோபத்துடன் கேட்டார். 

வருணுக்கோ, வருண் என்று தாத்தா அழைத்ததிலே தாத்தாவின் கோபத்தை பார்த்தவன், தான் என்ன தவறு செய்ய துணிந்தோம் என யோசித்தவன் கடகடவென தனது அறைக்குச் சென்றான். 

வருண் சென்றதும் தாத்தா ட்ரைவரிடம் மன்னிப்பு வேண்டிவிட்டு அவரை அனுப்பி வைத்தார். 

ட்ரைவரும் இந்த குடும்பத்தை பற்றியும் வருணின் மனதை பற்றியும் நன்று அறிந்து இருந்தவர். வருணின் இந்த கோபம் அவருக்கு புதியதாக தெரிந்தது. 

எப்போதும் ஒரு பெண்ணுக்காக, மற்றவர்களிடம் கோபம்  என்ன?  ஒரு சின்ன விஷயம் கூட பரிந்து பேசாதவர்… இன்றோ தன் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியவளுக்காக அடிக்க கை ஓங்கியது விசித்திரமாக தெரிந்தது. இதே விஷயத்தை தான் தாத்தாவும், வருணும் யோசித்துக் கொண்டு இருந்தனர் தனித்தனி அறையில். 

மறுநாள் காலை விடியல் இங்கே இருவரின் வாழ்க்கையையே மொத்தமாக திருப்பிப் போட காத்திருப்பதை அறியாமல் இருவரும் அவர் அவர்கள் பணிக்கு தயாராகிச் சென்றனர். 

வருண் இன்று எப்படியாவது இந்த டேக்கை முடித்துவிட வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வசனத்தை படித்துப் பார்த்துக் கொண்டு நடிக்க போக ஏனோ அந்த வசனம் அந்த நடிகை சாராவின் அருகில் நின்று பேச முடியாமல் திணறினான். 

இதோ காலையில் இருந்து இருபது டேக் போக… டைரக்டரோ சற்று எரிச்சல் அடைந்தார். சிறிது நேரம் அனைவருக்கும் ப்ரேக் விட்டவர் வருண் அருகில் சென்று 

“என்ன சார் ஆச்சு? எப்போவும் இந்த மாதிரி ரொமான்ஸ் சீன் எல்லாம் ஒரே டேக்ல முடிச்சிடுவீங்க இன்னிக்கு என்னாச்சு? இருபதுக்கு மேலே போய் கூட வசனத்தை பேச முடியல. இது ஒன்றும் பெரிய விஷயம் இல்ல சார், உங்க கண்ண கட்டி இருக்கும் போதே நீங்க மனதில் விரும்புன பொண்ணு உங்க பக்கத்தில் வரா, அதை உணர்ந்து நீங்க இந்த” என்று அவர் பேச முற்பட வருணோ அவரை இடைமறித்து,

“எனக்கு எல்லாம் தெரியும் நீங்கள் போகலாம்.” என்று சைகையாலே சொன்னான். 

அவர் சென்றதும் தன்னை தானே கேள்வியாக கேட்டுக் கொண்டு கண்ணை மூடி அமர்ந்தான். 

‘என்னாச்சு வித்யூத் உனக்கு? எல்லாத்திலும் சரியா இருப்ப அந்த பொண்ணை பார்த்ததிலிருந்து எதுவும் சரியா ஓட மாட்டிக்குது. அப்படி அந்த பொண்ணு என்ன வசியம் செய்தாள்?’ என மீண்டும் ஒரு முறை தன் போனில் இருக்கும் அவளின் புகைப்படத்தை எடுத்து பார்த்தான். இன்று காலையில் இருந்து பலமுறை இதை பார்த்தாலும் ஏனோ அவனுக்கு அது சலிப்பாக தெரியவில்லை. 

“ஏய் இப்போ எதுக்குடி இங்க கூட்டிட்டு வந்த? உன் ஆளை பார்க்கவா இன்னிக்கு உன் ஆளு இந்த சூட்டிங் ஸ்பாட்லையா டான்ஸ் ஆடுறான்.” என யாழினி கேள்விக்கு மேல் கேள்வியாக கேட்டுக் கொண்டு வர.

வர்ணிகாவோ, “மூடிக்கிட்டு வா டி அமைதியா. நான் அந்த பைதியக்காரனை பார்க்க வந்தேன். அவனுக்கு எவ்வளவு திமிரு இருந்தா நம்மள பத்தி நியூஸ்ல சொல்லி அம்மா முன்னாடி அசிங்கப்பட வைச்சி இருப்பான். இது போதாதுனு செக்கை முகத்தில் தூக்கி எறிவான். அதுவும் இல்லாமல் அவன் கேட்ட லாபத்தை திருப்பி கொடுக்க வேண்டாம்? அவனுக்கு பதிலடி கொடுக்கணும்ல அதான் ப்ரெண்ட்ஸ் மூலமா இன்னிக்கு இவன் இங்க இருக்குறத தெரிஞ்சிக்கிட்டேன்.” என்று அவள் சொல்வதை கேட்டவளுக்கு பயம் வந்தது. 

“பதிலடியா? என்ன பதிலடி கொடுக்க போற? அவரு எவ்வளவு பெரிய நடிகர் தெரியுமா? அவரை சுத்தி எத்தனை பேரு காவலுக்கு இருப்பாங்க தெரியுமா? ஒரு கொசு அவரை கடிக்கணும்னா கூட பாடிகார்ட் தாண்டி போய் தான் கடிக்கணும். இது எதுவும் யோசிக்காமல் நீ பாட்டுக்கு வேலையை லீவ் போட்டு வந்துட்ட? இதுல என்னையும் சேர்த்து வேற கூட்டிட்டு வந்து இருக்க. இது மட்டும் வார்டனுக்கும், அம்மாக்கும் தெரிஞ்சா நம்மள உண்டு இல்லைனு பண்ணிடுவாங்க. சொல்றதை கேளு டி. வா நம்ம வந்த வழியாவே போயிடலாம். அவங்க கிட்டலாம் நம்ம நெருங்க கூட முடியாது. அந்த வானத்தில் இருக்கும் நட்சத்திரம் போல் இவங்களாம்… சொல்றதை புரிஞ்சிகிட்டு வா என் கூட” என யாழினி வர்ணிகாவின் கையை பிடித்து இழுக்க. 

அவளோ, “முடியாது டி நான் முடிவு பண்ணது பண்ணது தான்… நீ என் கூட இருக்குறதா இருந்தா இரு. இல்லனா உன் வேலையை பார்த்துட்டு கிளம்பு. ஆனா ஒன்னு ஞாபகம் வைச்சிக்கோ, நீ கிளம்பிட்டா அதுக்கு அப்புறம் உனக்கும் எனக்கும் உள்ள நட்பு முடிந்தது. நட்பு முடிந்தால் நான் உனக்கு கொடுத்த சாக்லேட், கடலைமிட்டாய், அவல், ஜாங்கிரி, லட்டு, என் சுடிதார், அப்புறம் நான் என்ன என்ன கொடுத்தேனோ அது எல்லாம் திரும்ப கொடுக்கணும் ஞாபகத்தில் வைச்சிகிட்டு போ” என்று கூறியவளை பார்த்து வாய் மேல் கை வைத்துக் கொண்டு முழித்தாள் யாழினி. 

“இது எல்லாம் மோசம் டி, நீ வாங்கி கொடுத்தது எல்லாத்தையும் நான் திரும்ப கொடுத்துடுறேன்… என் முதல் மாசம் சம்பளம் வந்ததும். இப்போ நான் கிளம்புறேன். நீயாச்சி வருணாச்சு?” என கூறிவிட்டு போக நினைக்கையில் அந்த இடத்தில் சினிமா சூட்டிங் நடப்பது மக்களுக்கு பரவ ஒரு கூட்டமே கூடியது. யாழினியால் அங்கே இருந்து நகர கூட முடியவில்லை. திரும்பி தன் தோழியை பார்க்க அவளோ தன் ஷோல்டரை தூக்கி ஒழுங்கு காட்டி சிரித்தாள். நடக்க இருக்கும் நிகழ்வை அறியாமல். 

வேறு வழியின்றி தன் தோழியிடம் முன்னேறி நடக்க அங்கே வந்த கும்பலோ இவர்களை தள்ளிக் கொண்டுச் சென்றது. கும்பலில் சிலர் யாழினியை தள்ளிவிட யாழினியோ தன் தோழியின் மேல் விழுந்து அவளை முன்னுக்கு தள்ளினாள்.

அவளோ எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும் என்று நினைத்து இருந்த நேரத்தில் தானாக உள்ளே வந்தது. சற்று மகிழ்ச்சியை கொடுத்தாலும் ஏனோ மனதில் படப்படப்பாகவே உணர்ந்தாள். 

அங்கே இருக்கும் நடிகர்களில் ஒருவளாக கலந்தவள், வருண் இருக்கும் இடத்தை பார்த்தாள். 

சற்று தள்ளி தான் அவனும் அவனுடன் நடிக்கும் நடிகையும் ஏதோ வசனம் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்தவள்,

‘இன்னிக்கு எல்லார் முன்னாடியும் உன்னை அசிங்கப்படுத்துறேன்’ என அவள் மனம் கூறிய அந்த கணம். 

அதே வார்த்தைகள் “என்னையே கேவலமா பேசிட்டல. உன்னை இன்னிக்கு அசிங்கப்படுத்தாம விட மாட்டேன் சாரா” என்று அங்கே இருக்கும் துணை நடிகை கூறியதை கேட்டு அதிர்ந்து போனாள். வர்ணிகா.

‘அய்யோ இது என்ன வம்பா போச்சு. நம்மளை மாதிரி எல்லாரும் பழிவாங்கவே கிளம்பி வந்து இருக்காங்க போல’ என யோசித்துக் கொண்டே அவள் எட்டி பார்த்த கணம்.

அந்த துணை நடிகை அருகில் புதிய முகமாக தெரிந்த அவளை யோசனையாக பார்த்த அந்த கணம்… மின்னல் போல் ஏதோ ஒன்று ஒளிக்க வர்ணிகா எதிர்பார்க்காத சமயம்… அவளை பின்னால் இருந்து பிடித்து ஷூட்டிங் நடக்கும் இடத்தில் வேகமாக தள்ளி விட்டாள். 

மனதில் தோன்றிய வன்மத்தோடு.

அவளோ சரியாக டேக் நடக்கும் இடத்தில் வருணுக்கு முன் நடித்துக் கொண்டு இருந்த நடிகையை கீழே தள்ளிவிட்டு வருண் மேலே விழுந்து இருவரும் கீழே விழ போக. தன் கண்ணை கட்டிக் கொண்டு இருந்தாலும் வருண் சுதாரித்து அவளை தாங்கிப் பிடித்து தன் முன் நிற்க வைத்தான். 

ஏனோ வருணின் இதயம் அவளின் நெருக்கத்தை உணர்ந்தது போல் அந்த டேக்கை முடிக்க அவள் தன் முன்னே நின்று இருப்பதாக கற்பனை செய்துக் கொண்டு இருந்த சமயம். 

டைரக்டரோ, எதிர்பாராத நேரத்தில் ஆக்சன் என்று குரல் கொடுக்க வருணோ, தன் பாக்கெட்டில் வைத்து இருந்த மாங்கல்யத்தை எடுத்து வர்ணிகாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு அவள் கன்னம் பற்றி,

“நீ எனக்கானவள் ஒரு பொழுதும் உன்னை கைவிட மாட்டேன். இந்த அகிலமே எதிர்த்தாலும் உன்னை விட்டுவிட மாட்டேன். நீ எனக்காகவும் நான் உனக்காகவும் பிறந்து இருக்கிறோம். நம் காதல் உண்மையானது அதனால் தான் உன்னை தேடிக் கண்டு பிடித்தேன். 

உன்னிடம் இருந்து என்னை மீட்டெடுக்க வந்த நான்! உன் சிறு விழி அசைவில் மொத்தமாக உன்னவன் ஆனேன். இனி அந்த கடவுளே நினைத்தாலும் என்னிடம் இருந்து உன்னை யாராலையும் பிரித்து விட முடியாது. என் காதலை உனக்கு உணர்த்தவே இந்த சர்ப்ரைஸ்” என்று சொல்லிக் கொண்டே அவள் இதழில் தன் இதழை பதித்தான். 

இதழ் முத்திரையில் விழி நீர் கலந்து அவனுக்கு உணர்த்த ஏதோ ஒன்று தவறாக நடந்து இருக்கிறது என அறிந்தவன் தன் கண்ணை கட்டி இருந்த துணியை கழட்டினான். 

அங்கே அவன் கண்ணை திறந்து பார்க்க அவன் முன் அவள் விழிகளில் கண்ணீர் வழிந்து அதிர்ச்சியில் சிலைப் போல் நின்று இருப்பதை பார்த்தவன் அதிர்ந்தான். 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!