நேசப்பிணி-9

(இந்த நாவலை ஆடியோ வடிவில் Rhea Moorthy Novels சேனலில் கேட்டு ரசிக்கலாம்)

அன்று மாலையே, டாடா ஏஸ் அவன் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டது. குமரன் மலை கிராமத்தில் இருந்து காய்கறிகளை லோடு எடுத்துச் சென்று, டவுனில் இருக்கும் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். இதுதான் அவனுடைய வேலை. புறப்படுவதற்கு முன் எல்லாவற்றையும் தயாராக வைத்துக் கொண்டு, மயிலாவை கூப்பிட்டான். 

அவன் தன்னிடம் பாசமாக தான் பேசப் போகிறான் என்று நினைத்த மயிலா ஆசையாக ஓடி வந்தாள். ஆனால் அவளிடம் அவன் சொன்ன வார்த்தைகள் அவள் இதயத்தில் ஈட்டியை இறக்கியது போல் இருந்தது.

“நல்லா கேட்டுக்க, நான் வீட்டுல இல்லன்றதுக்காக அனுமதி இல்லாம என் பொருள் மேல கை வைக்க கூடாது! புரிஞ்சுதா?” என்று சொல்ல, அவள் சிலை போல நின்றாள். 

“உன்னத்தான் கேக்குறேன். புரிஞ்சதா இல்லையா?”

குமரனுக்காக என்னவெல்லாம் செய்தும் கூட அவன் தன்னிடம் எரிச்சலோடு நடந்து கொள்வதை நினைத்து அவளுக்கு அழுகை வந்து விட்டது. ஆனாலும் முதல் முறை அவன் லோடை எடுத்துக் கொண்டு டவுனுக்கு செல்ல போவதால், தன்னுடைய அழுகையை தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டாள். 

“புரிஞ்சது மச்சான், நீ பத்திரமா போயிட்டு வா…” என்று தழுதழுத்த குரலில் கூறினாள்.

குமரனுக்கு அவளுடைய வார்த்தைகள் வழியே அவளின் மனம் நன்றாகவே புரிந்தது. அவள் என்ன நினைக்கிறாள்? என்ன சொல்ல விரும்புகிறாள்? தன்னிடம் என்ன எதிர் பார்க்கிறாள்? என்று எல்லாமே தெரிந்தாலும், ஒரு வார்த்தை கூட அதை பற்றி பேசாமல் அமைதியாக அங்கிருந்து சென்று விட்டான். 

அது ஒரு மலை கிராமம். சில வருடங்கள் முன்பு வரை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்தது. நகரவாசிகளின் வசதிக்காக, காட்டின் எல்லைகள் சுருங்கிட, இப்போது இந்த கிராமமும் சாதாரண மாலை கிராமமாக மாற்றப்பட்டிருக்கிறது.  

அங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் தினக்கூலிகளே. எனவே சீக்கிரமாக அறுவடைக்கு வரும் கீரை, முள்ளங்கி, வெள்ளரிக்காய், தக்காளி, கருவேப்பிலை, கொத்துமல்லி போன்ற பொருட்கள் தான் அவர்களால் விளைவிக்கப்படும். ஆனால் பிரச்சனை என்னவென்றால், அதை எல்லாம் எடுத்துச் செல்ல ஒரே ஒரு வண்டி தான் இருந்தது. அக்கம் பக்கத்தில் இருக்கும் மூன்று கிராமங்களுக்கும் சிகாமணி வைத்து இருக்கும் டாடா ஏஸ்தான் ஆஸ்தான வாகனம். 

அவர் கடந்த பதினைந்து வருடமாக இந்த வேலையை தான் பார்த்துக் கொண்டு இருந்தார். இதனால் அவருக்கு டவுனுக்கு போய் வரும் பாதை எல்லாம் அத்துபடி. வழியில் இருக்கும் கடைகள், காவல் துறை செக் போஸ்ட் என எல்லா இடங்களிலும் சிகாமணியிடம் நல்ல பரிட்சயம் உண்டு. அதனால் யாருமே அவரை தடுத்து நிறுத்த மாட்டார்கள். அவர் எங்கேயும் நிற்காமல் வேகமாக டவுனுக்குச் சென்று லோடை இறக்கி விடுவார். 

குமரன் முதல் முறையாக அந்த வேலைக்கு வருவதால், தனக்கு பழக்கமான எல்லா இடங்களிலும் நிறுத்தி அவனை அறிமுகப்படுத்தி வைத்தார். வழியில் இருக்கும் செக் போஸ்டினையும் விட்டு வைக்கவில்லை. கடைசியாக சரக்குகளை சிட்டிக்கு கொண்டு சேர்க்ககும் லாரி டிரைவர் ரமேஷிடமும் அறிமுகப்படுத்தி வைத்தார் தன் மருமகனை. 

“தம்பி ரமேசு, இவர்தான் என் பொண்ண கட்டுன மாப்பிள்ளை. இனிமே இவர்தான் சரக்கு எடுத்துட்டு வருவாரு.” 

“அப்படியா ரொம்ப சந்தோஷம்ணே‌. ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு வண்டி வாங்கி ஓட்டலாம்ல?” என்ற நாசுக்காக அவர் விலகுவதை பற்றி கேட்டான். 

“இல்லய்யா, முன்ன போல உடம்பு சொல்பேச்சு கேக்குறது கிடையாது. முதுகு வலி பின்னி எடுக்குது. அதான் முடிச்சுக்கலாம்னு பார்த்தேன்.”

“சரிண்ணே… இனிமே நாங்க பாத்துக்குறோம்.”

சிகாமணி வண்டியில் காய்கறிகளை ஏற்ற போனதும் குமரன், “அப்படி வாங்க, ஒரு தம்ம போடுவோம்” என்று ரமேஷை அழைத்தான்.

இருவரும் கிட்டத்தட்ட ஒரே வயது என்பதால், சுலபமாக ஒட்டிக்கொண்டார்கள்.

“நான் வண்டிய ஊருக்குள்ள கொண்டு வந்த‌ நேரத்துக்கு கடையெல்லாம் மூடிட்டு போயிட்டாக. நமக்கு இந்நேரத்துல நல்ல சரக்கு எங்க கிடைக்கும்னு எதுவும் தெரியுமா?”

ரமேஷ், “இது சின்ன டவுனு. நடு ராத்திரியில இங்க கடை இருக்குறது கஷ்டம்.”

“போச்சுடா” என்று பின்னந்தலையை தடவினான் அவன்.

“என்ன சரக்கு வேணும்னு சொல்லு. வாரத்துக்கு ஒரு தடவை நான் வாங்கி தரேன்.”

உடனே பல்லைக் காட்டிய குமரன், “மாமாகிட்ட…” என்று இழுத்தான்.

“அதெல்லாம் சொல்ல மாட்டேன்.”

“ஃபோன்‌ நம்பர் தாரேன். எப்ப கொண்டு வந்தாலும் முன்னயே சொல்லு ரமேசு.” 

 

இப்படி அவனுடன் நன்றாக பேசிப் பழகும் அளவிற்கு நட்பை வளர்த்துக் கொண்டான் குமரன். 

கிளம்ப வேண்டிய நேரம் வந்ததும், “எனக்கு உன்ன பார்த்ததும் புடிச்சு போச்சு ரமேசு. நாளைக்கு வரும் போது உனக்காக ஒரு வாழைத்தாரு கொண்டு வந்து தரேன். அதே மாதிரி நாளைக்கு எனக்கு நீ சரக்கு பாட்டில் கொண்டு வரணும் சரியா?” என்றான்.

“அதுக்கென்ன! கொண்டு வந்துட்டா போச்சு…” என்று அவன் பதில் சொல்ல இருவரும் சிரித்துக் கொண்டார்கள். 

ரமேஷின் லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்ற ஐந்தாவது நிமிடத்தில் குமரன் தன்னுடைய ரகசிய செல்போனில் இருந்து, வாட்ஸ் அப் மூலமாக லாரி டிரைவரின் நம்பரை யாருக்கோ அனுப்பி வைத்தான். கூடவே லாரி நம்பரையும் அனுப்பி வைத்தான். இதைப் பற்றி எதுவுமே தெரியாத சிகாமணி, சாதாரணமாக பேசிக் கொண்டே மீண்டும் வண்டியை கிராமத்தை நோக்கி செலுத்தினார். 

குமரன் வண்டி ஓட்டத் தொடங்கி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியிருந்தது. செங்குத்தான மலைப்பாதைகளிலும், குறுகலான வளைவுகளிலும் அவன் திறமையாக வண்டி ஓட்டக் கற்றுக்கொண்டதால், அவனது மாமனார் சிகாமணி இப்போது அவனோடு வருவதில்லை. 

பகல் முழுவதும் பரந்து விரிந்த தோட்டங்களில் வேலை பார்ப்பான். இரவானால் டவுனுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்வான். இப்படி ஓய்வில்லாமல் அவன் உழைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த மயிலாவின் மனம் வேதனையால் துடித்தது. அவனது கஷ்டத்தைப் எப்படியாவது குறைக்க வேண்டும் என்று அவள் ஒவ்வொரு நொடியும் நினைத்தாள்.

ஒரு நாள்… மலைக் கிராமத்தின் அமைதியான காலைப் பொழுதினில், செவியை கிழிக்கும் விதமாக சேவல் கூவியது. வழக்கமாக இந்த நேரத்திற்குள் சுறுசுறுப்பாகத் தயாராகிவிடுவான் குமரன். ஆனால் அன்று அவனால் படுக்கையை விட்டு எழ முடியவில்லை. உடல் அசதியிலும், தூக்கக் கலக்கத்திலும் உழல, அவன் கட்டிலில் ஒரு பக்கமாகப் புரண்டு படுத்திருந்தான். 

மீண்டும் ஒருமுறை சேவல் உரக்கக் கூவி அழைக்க, குமரன் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தான். சுவரில் தொங்கிய பழைய கடிகாரத்தில் மணி ஏழைக் காட்டியது. சட்டென்று அடித்துப் பிடித்து எழுந்து உட்கார்ந்தான். பொழுது இவ்வளவு விடிந்துவிட்டதா என்று அவன் மனம் பதறியது.

இன்னும் கொஞ்ச நேரம், போர்வையின் கதகதப்பில் தூங்கினால் உடம்புக்கு எவ்வளவு இதமாக இருக்கும் என்று அவனுக்குமே தோன்றியது. ஆனாலும் கடமையுணர்வும், நேரமாகிவிட்டதே என்ற பதற்றமும் அவனைத் தூக்கத்தை உதறி எழச் செய்தது. கட்டிலில் இருந்து எழுந்து உட்கார்ந்தான். ஆனால் அவனால் கண்களைக் கூடச் சரியாகத் திறக்க முடியவில்லை. நேற்று இரவு முழுவதும் லாரி ஓட்டிய களைப்பு அவனை வாட்டியது.

இதையெல்லாம் அடுப்பங்கரையில் இருந்தவாறே மயிலா பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். அவனது சோர்வும், களைப்பும் அவளது மனதை வாட்டியது. எப்படியாவது அவனை இன்று ஒரு நாள் ஓய்வெடுக்க வைக்க வேண்டும் என்று அவள் தீர்மானித்தாள். அவன் குளிக்கச் செல்வதற்காக கொல்லைப் பக்கத்து வழியை நோக்கி நடந்தபோது, மயிலா வேகமாகச் சென்று அந்த வழியை மறித்துக்கொண்டு நின்றாள். அவள் முகத்தில் ஒருவித உறுதியும், கவலையும் கலந்திருந்தது.

“ஏய், என்ன பண்ற? எதுக்கு இப்போ பாதைய மறச்சு நிக்கிற? ஒழுங்கா வழிய விடு. எனக்கு நேரம் ஆகிடுச்சு. தோட்டத்துக்கு போகணும்” என்று கடுப்பாக கூறினான்.

“வேணாம் மச்சான்… நீ தோட்டத்துக்கு போக வேணாம். ஒனக்குத்தான் உடம்புக்கு முடியலையே! பொழுதுக்கும் தோட்டத்துலேயே கஷ்டப்பட்டு வேலை பாக்குற. பொழுது சாஞ்சா டவுனுக்கு லோடு ஏத்திட்டுப் போற. இப்படியே போனா உன் உடம்பு என்னத்துக்கு ஆகும்? நீ லோடு எடுக்கிற வேலைய மட்டும் பாரு. தோட்டத்து வேலைய நான் பாத்துக்குறேன். நீ போயி இன்னும் கொஞ்ச நேரம் நல்லாத் தூங்கு மச்சான்…” என்றாள் மயிலா. 

அவள் குரலில் இருந்த அக்கறை குமரனின் மனதைத் தொட்டது. அவனது சோர்வான கண்களை அவள் கனிவுடன் பார்த்தாள்.

“அதெல்லாம் யாரும் எனக்கு எதுவும் செய்யத் தேவையில்லை. நீ உன்னோட வேலைய மட்டும் பாரு. இப்போ வழிய விடு…” என்றவன் குரலில் எரிச்சல் தொனித்தது. 

“எனக்கு தெரியும்… கண்டிப்பா நீ எம் பேச்ச கேக்க மாட்டேன்னு. சரி, நீ உன் இஷ்டம் போலவே நடந்துக்கோ. ஆனா எனக்காக இன்னைக்கு ஒரே ஒரு நாளாவது ஓய்வு எடுத்துக்க. நீ நல்லா தூங்கியே பல நாள் ஆகிருச்சு! உன் உடம்புக்கு கொஞ்சமாவது ஓய்வு ஒளிச்சல் வேணாமா? எனக்காக இன்னைக்கு ஒரே ஒரு நாள் மட்டும் வீட்டோட இரு மச்சான்” என்று கெஞ்சலோடு கூறினாள். 

அவளை ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டு, அந்த இடத்தை விட்டு நகர முயன்றான். ஆனால் மயிலா விடாப்பிடியாக நின்றாள். 

“வீட்ல இரு மச்சான்…”

“ஏய், நிறுத்துடி உன் நாடகத்தை. நீ எப்படி பேசி நடிச்சாலும் என் மனசு மாறப் போறதும் இல்ல. இந்த ஜென்மத்துல நான் உன்ன பொண்டாட்டியா ஏத்துக்க போறதும் இல்ல…” என்று கோபமாக கூறினான் குமரன். 

“நீ என்ன என்ன வேணா திட்டிக்கோ. இதெல்லாம் எனக்கு பழகிப் போன விஷயம் தான். நான் இன்னிக்கி கண்டிப்பா உன்ன போக விடமாட்டேன்!” என்று அவள் சொல்ல, குமரன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி பார்த்தான். 

அவனது கூர்மையான பார்வை மயிலாவின் உள்ளத்தினுள் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியது. என்ன பேசுவது என்று தெரியாமல் அவள் அமைதியாக நின்றாள். மெதுவாக அவளை நெருங்கி வந்தான் குமரன். அவனது ஒவ்வொரு அடியும் அவளது இதயத் துடிப்பை அதிகரித்தது. அவனது மூச்சுக்காற்று அவள் முகத்தில் படும் அளவுக்கு நெருக்கத்தில் வந்துவிட்டான். மயிலாவுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. ஒருவித பதற்றத்துடன் அவள் சில அடிகள் பின்னோக்கி நகர்ந்தாள். 

இப்போது அவள் தன் பாதையில் இருந்து விலகி விட்டதை புரிந்து கொண்ட குமரனின் பாவனைகள் மாற ஆரம்பித்தது. அவளை முறைத்தப்படி துண்டை வேகமாக உதறி விட்டு குளிக்க சென்று விட்டான். 

‘நான் அவ்வளவு மன்றாடியும் அவன் என் பேச்சை கொஞ்சமும் கேட்கவில்லை. அவனுக்காக எவ்வளவோ இறங்கி வந்த பின்னும், இன்னும் அவன் மனம் இளகாது இருக்கிறானே!’ என்று நினைத்து மயிலா மிகுந்த வேதனையடைந்தாள். 

தன் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டதே என்ற எண்ணம் அவளை வாட்டியது. கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. விரக்தியுடன் அவள் அங்கேயே சிலை போல நின்றாள். அந்த நேரத்தில் மயிலாவின் அம்மாவும் அப்பாவும் மயிலாவை பார்க்க வந்தனர்.

அவள் முகத்தை சிரித்தபடி மாற்றிக்கொண்டு, “அம்மா அப்பா வாங்க. என்ன காலங்காத்தால வந்து இருக்கீங்க…” என்று சகஜமாக பேசினாள்.

பேச்சி, “மாப்பிள்ள எங்கம்மா?”

“மச்சான் குளிச்சிட்டு இருக்கும்மா. இப்போ வந்துரும்” என்று சொல்லி விட்டு, அவர்களுக்கு காபி போட்டு கொடுத்தாள் மயிலா. 

அவர்கள் அதை குடித்துக் கொண்டிருக்கும் போது குமரன் தோட்ட வேலைக்கு தயாராகி வெளியே வந்தான். அவர்களை ஒரு பெயருக்கு வரவேற்று விட்டு மயிலாவிடம், போய் வருகிறேன் என்று கூட சொல்லாமல் அவசரமாக புறப்பட்டு சென்று விட்டான். 

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பேச்சி, இருவருக்குள்ளும் உறவு சரி இல்லை என்று உடனே அறிந்து கொண்டார். தன் அம்மாவின் முகம் மாற்றத்தை மயிலாவும் கவனித்துவிட்டாள்!

அவர்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாக, “அது ஒன்னும் இல்லமா. மச்சான் ரெண்டு வேலை பார்த்து உடம்பை பாழாக்குது. இன்னிக்கி தோட்டத்துக்கு போக வேண்டாம், நான் போறேன்னு சொன்னேன். உன்னால ரெண்டு வீட்டு தோட்டத்தையும் தனியா சமாளிக்க முடியாதுன்னு சண்டைக்கு வருது. அதான் மூஞ்சிய தூக்கி வெச்சிக்கிட்டு கெளம்பிருச்சி… சரி அத விடுங்க, நீங்க என்ன இவ்ளோ தூரம்?” என்றாள் சிரித்துக் கொண்டே.

சிகாமணி, “எனக்கு ஒன்னும் இல்ல புள்ள! உங்க அம்மா தான் உன்ன பாக்கணும் பாக்கணும்னு நேத்துலருந்து சொல்லிக்கிட்டே இருந்தா. அதனால தான் கூட்டியாந்தேன். எனக்கு வேலை இருக்கு கண்ணு நான் கிளம்புறேன். நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க” என்று சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!