மயிலாவும், அவள் அம்மாவும் மட்டுமே வீட்டில் தனியாக இருந்தனர்.
பேச்சி, “ஏன்டி இளைச்சு போய் தெரியிற?”
வராத சிரிப்பை வரவழைத்தபடி, “அ… அது… உன் கூட இருந்த வரைக்கும், ஒரு வேலையும் செய்யாம இருந்துட்டேன். இங்க எல்லாத்தையும் நான் தானே இழுத்து போட்டு பார்க்க வேண்டி இருக்கு. அதான்!” என்றாள்.
“மயிலா, நான் உன்னை பெத்தவடி. நீ உண்மையா சிரிக்கிறியா, நடிக்கிறியானு என்னைத் தவிர யாருக்கு தெரியும்?” என்று கூறியதும், மயிலாவுக்கு தன் அன்னையின் மடியில் படுத்து அழவேண்டும் போல் இருந்தது. ஆனால் உணர்ச்சிகளை அடக்கி கொண்டாள்.
“எதையாவது உளராதம்மா…”
“சரி, நான் உளர்றேனே வச்சுக்க. கல்யாணத்துக்கு முன்னால ஆயிரம் அதிரசம் வேணும்னு கேட்டிருந்தீல்ல! உனக்காக அதிரசம் சுட்டு கொண்டு வந்துருக்கேன். இந்தா நல்லா சாப்பிட்டு உடம்ப தேத்து…”என்று பேச்சி சொல்ல அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத மயிலா அவரை கட்டிப்பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். அவள் முதுகில் ஆதரவாக தடவிக் கொடுத்தார் பேச்சி.
“உனக்கு என்ன பிரச்சன புள்ள? மாப்பிள்ள உன்னோட சந்தோஷமா இல்லையா? இன்னும் கூட பஞ்சாயத்து விஷயத்தை மனசுல வச்சுக்கிட்டு தான் இருக்காரா?”
“அம்மா, மச்சான் மேல எந்த தப்பும் இல்லம்மா. அவரு ரொம்ப நல்லவரு எல்லா பிரச்சனைக்கும் நான் தான் காரணம். அன்னைக்கு நான் பஞ்சாயத்துல பொய் சொல்லிட்டேன். மச்சான நான் கட்டிக்கணுங்குற ஆசைல எத பத்தியும் யோசிக்காம ஊருக்கு மத்தியில அவரு மேல அப்படி ஒரு பழிய சுமத்திட்டேன். அதனால தான் மச்சானுக்கு எம்மேல இவ்வளவு கோபம்.
கல்யாணமான இத்தனை நாள்ல மச்சான் என்கிட்ட ஆசையா ஒரு வார்த்தை கூட பேசுனதே இல்லம்மா. இப்ப மாறிடும் அப்ப மாறிடும்னு ஒவ்வொரு நாளும் போய்க்கிட்டே இருக்கே தவிர மச்சானோட மனசு மாறுன பாடில்ல. பகல் எல்லாம் தோட்ட வேலைக்கு போயிடுது, ராத்திரி லோடு எடுக்க போய்ருது… அவருக்கு என்ன பாக்க கூட பிடிக்கலன்னு நினைக்கிறேன்! அதனால தான் இந்த அளவுக்கு தன்ன தானே வருத்திக்கிதோன்னு எனக்குள்ள குற்ற உணர்ச்சியா இருக்குமா” என்று சொல்லி அழுது, தன் மனதில் இருந்த பாரத்தை எல்லாம் கரைக்க முயன்றாள்.
“கவலைப்படாத கண்ணு, நீ செஞ்சது தப்புதான். ஆனா அந்த தப்புக்கு இவ்வளவு பெரிய தண்டனை தேவை இல்ல. கல்யாணம் முடிஞ்ச கையோட நம்ம ஊரு வழக்கப்படி குலதெய்வம் கோயிலுக்கு போய் விளக்கு போடனும். இது வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் அதை செய்யாம இருக்கறதுனால தான் உங்களுக்குள்ள இந்த மாதிரி சண்டை எல்லாம் நடக்குதுன்னு நினைக்கிறேன். நீ ஒன்னு செய், மாப்பிள்ளைய கூட்டிக்கிட்டு நம்ம குலதெய்வம் கோயிலுக்கு ஒரு எட்டு போயி விளக்கு போட்டுட்டு வந்துடு. அதுக்கப்புறம் எல்லாமே சரியாயிடும்” என்று கூறினார் பேச்சி.
“ஹ்ம்… அதுக்கு அவர் என் கூட கோயிலுக்கு வர ஒத்துக்கணுமே. நான் கூப்பிட்டா, அந்த பக்கம் வேலை இருந்தாலுமே கண்டிப்பா வர ஒத்துக்காது என் மச்சான்!” என்று சொல்ல, உடனே மயிலாவின் அம்மா ஒரு யோசனை செய்தார்.
“கவலப்படாத, கண்டிப்பா அவரு உன்ன கோயிலுக்கு கூட்டிட்டு போவாரு. அது என் பொறுப்பு” என்று கூறி, அவளை ஆறுதல் படுத்திவிட்டு அங்கிருந்து சென்றார் பேச்சி.
நாலைந்து நாட்களுக்குப் பிறகு, குமரன் லோடு எடுக்க செல்லும் போது மயிலாவின் அப்பாவும் அம்மாவும் அவனை பார்க்கச் சென்றார்கள்.
“என்ன இந்த பக்கம்?” குரலில் ஸ்ருதி ஏற்றி பேசினான்.
“இல்ல மாப்ள உங்களோட ஒரு முக்கியமான விஷயம் பேசலாம்னு…” என்று இழுத்தார் சிகாமணி.
“அதுக்கு வீட்டுக்கு வர வேண்டியதுதானே. ஏன் வேலை செய்ற இடத்துக்கு வர்றீங்க?”
“எங்க மாப்பிள்ள, நீங்க வீட்ல இருந்தாத்தானே! எப்ப பாத்தாலும் வேலை வேலைன்னு அலஞ்சிட்டே இருக்கீய. இந்த நேரத்துல நீங்க இங்க இருப்பீங்கன்னு தெரியும், அதான் வந்தோம்.”
“சரி என்ன விஷயம் சொல்லுங்க?”
“மாப்ள வீட்டுக்கு குறி சொல்ல ஒருத்தி வந்தா. வந்தவ அவ்வளவு நல்லதா சொல்லல. அதுல இருந்தே பேச்சி, சதா பொலம்புறா. அதனால நீங்களும் மயிலாவும் வர வெள்ளிக் கிழமை நம்ம குல தெய்வம் வன துர்க்கை கோயிலுக்கு போய் விளக்கு போட்டுட்டு வாங்க. அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்” என்று சிகாமணி கூற,
குமரன், “இல்ல இல்ல, எனக்கு நிறைய வேலை இருக்கு. என்னால வேலைய விட்டுட்டு அங்க இங்கனு போயிட்டு இருக்க முடியாது. எனக்கு அதுல நம்பிக்கையும் இல்ல” என்றான் சட்டென.
அருகே இருந்த முதியவர் ஒருவர், “அப்படி சொல்லாதப்பா! குலதெய்வ விஷயத்துல விளையாடக் கூடாது. பெரியவங்க சொல்றாங்கள்ல. அவங்க பேச்சைக் கேட்டு நடந்துக்கோ” என்று சொல்ல,
“ஆமாம்பா நம்ம ஊரு வழக்கப்படி கல்யாணம் முடிஞ்ச கையோட பொண்ணு மாப்பிள்ளை, வன துர்க்கை கோயிலுக்கு போய் விளக்கு போட்டுட்டு வர்றது வழக்கம். உனக்கு வேணும்னா, இதுல நம்பிக்கை இல்லாம இருக்கலாம். ஆனா இந்த ஊருக்குன்னு ஒரு வழக்கம் இருக்குல்ல. அதுக்கு மரியாதை குடுக்கணுமில்ல. ஒரு நாள் கூட்டிட்டு தான் போயேன்” என்று மற்றொருவர் தொடர்ந்தார்.
“அட ஆமா கண்ணு. அப்படியே எங்களுக்கும் சேர்த்து வேண்டிக்கிட்டு வா. வன துர்க்கை ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன். மனசார என்ன கேட்டாலும் குடுக்கும்” என்று இன்னொருவர் கூறினார்.
இதற்குள் ஊர் தலைவர் வீரய்யன் அங்கு வந்துவிட்டிருக்க, “அட, ஏன்யா அவனை புடிச்சு கெஞ்சிட்டு இருக்கீங்க? ஒரு வாரத்துக்கு சரக்கு அனுப்ப வேற ஆளு புடிங்க. மாப்ளைக்கு வேலை கொறஞ்சுடும். தன்னால போகப்போறாரு…” என்று விளையாட்டாக சொல்ல, சிகாமணி முகத்திலும் லைட் எரிந்தது.
அதை கவனித்து விட்ட குமரன், வேறு வழி இன்றி சரி என்று சம்மதிக்க, மயிலாவின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நிம்மதியாக இருந்தது.
பேச்சி, “அப்போ வர்ற
வெள்ளிக்கிழமை போயிட்டு வாங்க. விளக்கு ஏத்துறதுக்கு மட்டும் அவள ஏற்பாடு பண்ண சொல்லுங்க. மத்த பிரசாதமெல்லாம் நாங்க வாங்கி தர்றோம். நீங்க போய் வச்சு கும்பிட்டா மட்டும் போதும்” என்றார் வாயெல்லாம் பல்லாய்.
“சரிங்க அத்த…”
“இந்த விஷயம் மயிலாக்கு இன்னும் தெரியாது. விளக்கமா சொல்லிப்புடுங்க” என்று கூறிவிட்டு, இருவரும் சந்தோஷமாய் அங்கிருந்து சென்றனர்.
குமரனுக்கு அவர்கள் இருவரும் விடாப்பிடியாக இருக்கிறார்கள், நிச்சயம் கோயிலுக்குப் போகாமல் விடமாட்டார்கள் என்று நன்றாகப் புரிந்துவிட்டது. எனவே, அவர்கள் சொன்னது போலவே வெள்ளிக்கிழமை மயிலாவோடு வன துர்க்கை கோயிலுக்குப் புறப்பட்டான். திருமணத்திற்குப் பிறகு மயிலா முதன்முறையாக குமரனுடன் சேர்ந்து வெளியே கிளம்பியிருந்தாள். அவள் மனம் ஒருவித எதிர்பார்ப்பிலும், சந்தோஷத்திலும் துள்ளிக் குதித்தது.
அதனால், தன்னிடமிருந்த பட்டுப் புடவைகளில் மிகவும் அழகான நீல நிறப் புடவையை எடுத்து உடுத்திக்கொண்டாள். கூந்தலில் மல்லிகை மற்றும் கனகாம்பர மலர்களை அடர்த்தியாகச் சூடியிருந்தாள். அவளது முகம் வெட்கத்திலும் மகிழ்ச்சியிலும் சிவந்திருந்தது.
அந்த வன துர்க்கை கோயில் அவர்கள் கிராமத்திலிருந்து சற்று தூரத்தில், அடர்ந்த மலைகளுக்கு இடையே அமைந்திருந்தது. அதற்குச் செல்ல நேரடியான பாதைகள் எதுவும் கிடையாது. பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு காட்டுப் பாதையில் அவர்கள் நடந்து செல்ல வேண்டியிருந்தது. கரடு முரடான அந்தப் பாதையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடக்க வேண்டும்.
அவ்வப்போது காட்டு மிருகங்கள் குறுக்கிடவும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால் குமரன் அருகில் இருந்ததால் மயிலாவுக்கு வேறு எந்த சிந்தனையும் இல்லை. அவனது அருகாமை அவளுக்கு ஒருவித சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. அவள் அவனைப் பார்த்தபடியே அந்தப் பாதையில் நடந்து கொண்டிருந்தாள்.
கிராமத்தை விட்டுச் சிறிது தூரம் அவர்கள் வந்தபோது, அந்த இடமே ஒருவித அமைதியான சூழ்நிலையில் மூழ்கியது. பறவைகளின் சத்தம் கூட மங்கலாகக் கேட்டது. மரங்களின் இலைகள் அசையாமல் அமைதியாக நின்றன. அந்த நிசப்தம் குமரனின் மனதில் ஏதோ ஒரு விவரிக்க முடியாத அசௌகரியத்தை ஏற்படுத்தியது. அந்த அடர்ந்த காட்டின் அமைதி அவனுக்குள் ஒருவித தற்காப்புடன் இருக்கச் சொல்லியது.
அந்த இடத்தை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே, “இன்னும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டி இருக்கும்? இந்த காட்டுக்குள்ள ஒரு சரியான பாதை கூட இல்லை!” என்று அவன் சொல்ல,
“அவ்வளவுதான் மச்சான், இன்னும் ஒரு அரை மணி நேரம் நடந்தா கோயில் வந்துரும்!” என்று குஷியான குரலில் கூறினாள் அவள்.
அதை நினைக்கும் போதே, அவன் உடல் மெல்ல அதிர்ந்தது. அவனுக்குள் பயம் வந்திருப்பது, அவளுக்கும் அப்பட்டமாக தெரிந்தது. அவள் வேண்டுமென்றே அவனை சீண்டிப் பார்க்க நினைத்தாள்.
“என்ன மச்சான்? உனக்கு இந்த பாதையை பார்த்தா பயமா இருக்கா? கவலப்படாத! இந்த பாதையில போனவங்க யாரும் தொலைஞ்சுடல. ஆனா, இங்க சில விஷயங்கள் மர்மமா நடக்கும்னு சொல்லி கேள்விப் பட்டு இருக்கேன்!” என்றாள்.
அதை கேட்டவுடன், குமரனின் பயம் மேலும் கூடி விட்டது.
“என்னடி சொல்ற நீ? ஏதாவது பயங்கரமா நடந்திருக்கா?” என்று அதிர்ந்து கேட்டான்.
“நீ ஏற்கனவே நடுங்குற. அதனால, இப்போதைக்கு அதை நீ தெரிஞ்சுக்க வேண்டாம் மச்சான். வீட்டுக்குப் போனதுக்கு அப்புறமா சொல்றேன், இப்போ நம்ம வேகமா நடக்கலாம்” என்று சொல்லி விட்டு அவள் நடக்க, அவளை பின் தொடர்ந்தான் குமரன்.
அவர்களின் காலடி ஓசை காய்ந்த சருகுகளிலும், சிறு கற்களிலும் மெலிதாய் பட்டு எதிரொலித்தது. அதை ரசித்தபடியே நடந்தாள் மயிலா. அடர்ந்த மரங்களின் ஊடாகச் சென்ற குறுகிய பாதையின் முடிவில், அவர்கள் ஒரு அமைதியான ஆற்றங்கரையை அடைந்தார்கள். மரக்கிளைகளின் இலைகளுக்கிடையே சூரிய ஒளி ஊடுருவி வந்து, நீருக்குள் மறைந்திருந்த பாறைகளின் மீது பட்டுப் பிரதிபலித்தது. அவை வைரங்களைப் போல பளபளத்தன.
அந்த இடத்தில் பல பாறைகள் நீரின் ஓட்டத்தால் பச்சை பசேலன பாசிபடித்து இருந்தது. அவ்வப்போது மரக்கிளைகளில் அமர்ந்திருந்த காட்டுப் பறவைகளின் ரீங்காரம் காதினுக்கு இனிய இன்னிசைபோல ஒலித்தது. அடர்ந்த மரங்கள் சூழ்ந்த அந்தப் பசுமையான சூழலும், ஆற்றின் குளிர்ச்சியும் மெல்லக் காற்றில் கலந்து அவர்கள் தேகங்களை வருடியது. அந்த இயற்கையின் எழில் குமரனின் மனதை ஒரு கணம் அமைதியடையச் செய்தது.
ஆற்றங்கரையில் நின்று நீரினை எட்டிப் பார்த்தபடி, “மயிலா, இந்த ஆறு ரொம்ப ஆழமா இருக்கும் போல தெரியுது. எப்படி இத கடந்து போறது? இங்க பாலமே இருக்குற மாதிரி தெரியலையே!” என்றான் குமரன்
“இந்த தண்ணிக்குள்ள கல்லு தெரியுதுல? அது மேல வழுக்கிடாம பொறுமையா நடந்தா அந்தப் பக்கம் போயிறலாம். ஆனா, தப்பித் தவறி லேசா கால் வழுக்கினாலும் கூட அவ்வளவுதான்… ஆத்தோட அடிச்சிட்டுப் போயிடும்!” என்றாள்.
நெற்றியை நீவியவன், “உனக்கு நீச்சல் தெரியுமாடி?” என்று கேட்க,
“தெரியும் மச்சான், உனக்கு?” என்று அவள் பதில் கேள்வி கேட்டாள்.
“நீதானே பார்த்திருக்கியே…” என்று அவன் குறும்புத்தனமாகச் சிரித்தான்.
அவன் எதைச் சொல்கிறான் என்று அவளுக்கு ஒரு கணம் புரியவில்லை. பிறகுதான், அவன் குளிக்கும்போது மறைந்திருந்து அவள் பார்த்ததையெல்லாம் இப்போது கிண்டல் செய்கிறான் என்று உணர்ந்தாள். இதயத்தில் ஒரு மெல்லிய படபடப்பு ஏற்பட, அவளது கன்னங்கள் சட்டென்று சிவந்துவிட்டன. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாகிப் போனது அவள் நாவு. ஆழிப் பேரலையாய் வெட்கமும் நாணமும் ஒருங்கே அவளைச் சூழ்ந்திட, நாணலாய் தலை கவிழ்ந்து நின்றாள் மாது.
தன் வார்த்தை அவளைக் கூச்சப்பட வைப்பது புரிய, இதழ் பிரித்துச் சிரித்தான் குமரன். அவனது அந்த குறும்பான சிரிப்பு அவளது வெட்கத்தை மேலும் அதிகமாக்கியது.
“சீக்கிரமா கோவிலுக்கு போகணும், வா…” அவளை அழைத்துக் கொண்டு ஆற்றுக்குள் இறங்கினான்.
ஆற்று நீரின் குளிர்ச்சியை உணர்ந்தபடி, இருவரும் கவனமாக பாறைகளில் மெதுவாக கால்களை வைத்தனர். அப்போதுதான் அவர்கள் இருவருக்கும் அந்த விசித்திரமான வாசனை வந்தது. முதலில் லேசாகவும், பின்னர் அடர்த்தியாகவும் உருவானது.
அது பல வருடங்கள் பழமையான, ஈரப்பதம் தோய்ந்த மரத்திலிருந்து வரும் ஒருவித புழுக்க நாற்றம் போல இருந்தது. கூடவே, ஏதோ அழுகிய இலைகளின் வாடையும் கலந்திருந்தது. அந்த வாசனை மிகவும் வித்தியாசமாகவும், சற்று குமட்டல் உண்டாக்குவதாகவும் இருந்தது. மயிலா அந்த துர்நாற்றத்தை உணர்ந்ததும் தன்னையறியாமல் தனது மூக்கை இறுகப் பொத்திக்கொண்டாள். அவளது முகத்தில் ஒருவித அருவருப்பு தெரிந்தது.
“என்ன மச்சான் இது? ஏன் இப்படி நாத்தம் அடிக்குது?” என்று முணுமுணுத்தாள்.
குமரன் சுற்றுமுற்றும் பார்த்தான். ஆற்றின் கரையோரத்தில் பெரிய பெரிய மரங்கள் சிலது வேரோடு சாய்ந்து கிடந்தன. ஒருவேளை அந்த மரங்களில் இருந்துதான் இந்த வாடை வருகிறதோ என்று அவன் யோசித்தான். அந்த இடத்தில் நீரின் சலசலப்பு சத்தத்தை மீறி அந்த நாற்றம் அவர்களைச் சூழ்ந்திருந்தது. காட்டின் அமைதி அந்த வாசனையால் ஒரு கணம் கலைந்தது போல உணர்ந்தனர்.
“என்னாச்சு மயிலா? ரொம்ப வாடை அடிக்குதா?” என்று கேட்டான் குமரன்.
“ஆமா, அடி வயிறு வரை போகுது. தலை வேற சுத்திட்டு வருது. உனக்கு வாடை அடிக்கலயா மச்சான்?” என்று கேட்க, அவன் முகம் மாறியது.
“உனக்கு வாடை வரவே இல்லையா?” அவள் கண்களில் பயம் தெரிந்தது.
“எனக்கு லேசாத்தான் தெரியுது. உனக்கு ஒரு மாதிரி இருந்தா, என் கைய பிடிச்சுக்கோ,” என்று சொல்லி, அவள் கையை பிடித்தான்.
திருமணத்திற்கு பிறகான முதல் தீண்டல் அது. அதுவும், அவள் மீது அக்கறை கொண்டு கரம் பற்றி இருந்தான் குமரன். அந்த நொடிக்காக தன் வாழ்நாள் மொத்தத்தையும் தந்துவிடச் சொல்லிக் கேட்டால், மயிலா சம்மதித்து விடுவாளோ என்னவோ! அப்படி ஒரு ஆனந்தம் அவள் வதனத்தில். தன்னவன் கையை பிடித்துக் கொண்டு மெதுவாக ஆற்றை கடந்தாள் மயிலா.
