அசுரன்-2

ஆரம்பத்தில் இருந்தே ஜோ பிறரை நம்பாமல் முக்கிய வேலைகளைத் தானே எடுத்துச் செய்வது அவன் வழக்கம். அன்றும் அப்படித்தான் ஒரு ஒப்பந்தத்தைப் பேசி முடிக்க வேண்டிய சூழ்நிலை. 

 

தன்னுடைய உயிர் நண்பன் மோகனுடன், மும்பையின் வெளிப்புறத்தில் இருக்கும் சொகுசு பங்களாவில் முகாமிட்டான்.

 

எதிர்பார்த்தபடியே ஒப்பந்தம் நல்லபடியாய் நிகழ்ந்தேறியது. நள்ளிரவு என்றும் பாராமல் ஒப்பந்த வேலை முடிந்ததும் ஜோ அங்கிருந்து புறப்பட ஆயத்தமானான்.

 

இருவரும் பங்களாவில் இருந்து வெளியில் வரும் நேரத்தில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த துப்பாக்கிக் குண்டு, ஜோவின் நெஞ்சிற்குப் பதிலாக மோகனின் வயிற்றைப் பதம் பார்த்தது.

 

அங்கே அவர்களைக் கொல்வதற்காக நான்கைந்து பேர், தத்தமது கையில் நவீன துப்பாக்கிகள் சகிதம் தயாராகக் காத்திருந்தனர்.

 

நொடிப்பொழுதையும் வீணாக்கும் பழக்கமில்லாத ஜோ, மோகனை பாதுகாப்பாகத் தூண் மறைவில் அமர வைத்து விட்டு தன் சடுகுடு விளையாட்டினை ஆரம்பித்தான்.

 

இருளின் கருமையை முறையாகப் பயன்படுத்தி, தன்னுடலை வில்லிலிருந்து புறப்படும் அம்பு போல வித்தியாசமான முறையில் இடம் மாற்றினான் ஜோ…

 

அவனைக் குறி வைக்க முயன்று தோற்ற துப்பாக்கி குண்டுகள் ஆங்காங்கே சுவற்றில் சொருகிக் கொண்டு நின்றது. 

 

ஆனால் அவன் விரல் நுனியில் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு குண்டுகளும், மிகச்சரியாக எதிரியின் நெற்றிப் பொட்டில் முத்தமிட்டது.

 

உடலால் சத்திரியனாகவும், அறிவில் சாணக்கியனாகவும் செயலாற்றும் ஜோவிற்கு முன்னால் கூலிக்கு மாரடிக்கும் அந்த கூட்டத்தால் நெடு நேரம் தாக்கு பிடிக்க முடியவில்லை.

 

‘தில் இருந்தா என் முன்னால வந்து நில்லுங்கடா..’ என்றுரைப்பது போல விண்ணிலிருந்து பாயும் மின்னல் கீற்றாய் ஜோ ருத்ர தாண்டவமாடினான்.

 

அதி விரைவாகவும் ஆக்ரோஷமாகவும் செயல்பட்ட ஜோ, கண்ணிமைப் பொழுதில் அங்கிருந்த எதிரிகள் அனைவரையும் கொன்று குவித்து விட்டான்.

 

தன்னுடலில் சிறு கீறல் கூட விழாது திரும்பி வந்த ஜோவைப் பார்த்த பிறகே, மோகன் போன உயிர் திரும்பி வந்ததைப்போல நிம்மதி கொண்டான்.

 

வயிற்றின் வழியே தன் உடலின் காற்பங்கு இரத்தத்தை வெளியேற்றி இருந்த மோகனிடம் ஜோ, “ரொம்ப வலிக்குதாடா?” என்று கேட்டுக்கொண்டே தன் சட்டையைக் கிழித்துக் கட்டுப் போட்டான். 

 

மோகன், “ஸ்ஆ…” என்று வலியால் முணங்கிட, அந்த ஒலியைக் கொண்டே அவன் காயத்தின் ஆழத்தினை அறிந்துகொண்டான் ஜோ.

 

“கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ, சீக்கிரமே உன்ன நம்ம இடத்துக்குக் கொண்டு போயிடுறேன்” என்று நம்பிக்கை தந்தவன், தடுமாறும் நண்பனைத் தூக்கி நிறுத்தினான்.

 

மோகன் நடக்க முடியாமல் திணற, ஜோ அவனைத் தூக்கித் தன் தோளில் போட்டுக் கொண்டான். அனைவரையும் கொன்றாயிற்று, இருந்தும் அவனுக்கு ஏனோ நம்பிக்கை வரவில்லை..

 

ஆதலால் அங்கிருந்த தன் காரை எடுக்காமல், வேறொரு காரில் புறப்பட்டான்… ஆபத்தான அந்த தனிமைப் பகுதியைக் கடந்து, பொது ஜனங்கள் வாழும் பகுதிக்குள் கார் நுழைந்த பிறகே ஜோவிற்கு இனி எந்த ஆபத்தும் இல்லை எனும் நம்பிக்கை வந்தது.

 

மோகனுக்கு நிற்காமல் ரத்தம் ஒழுக, கொஞ்சம் கொஞ்சமாக நினைவு பிறழ்ந்து கொண்டிருந்தது. உடனடியாக ட்ரீட்மென்ட் கொடுத்து காப்பாற்றவில்லை எனில் மோகன் உயிருக்கு ஆபத்து என்று ஜோ புரிந்துகொண்டான்…

 

அந்த நேரம் பார்த்து அவன் எதிரில் ஒரு க்ளினிக் தெரிந்தது. மருத்துவமனையின் பெயர் பலகையோடு இன்னொரு பலகையும் தொங்கியது. அதில்,

 

‘இருபத்தி நான்கு மணி நேரமும் இங்கே சிகிச்சை அளிக்கப்படும்.. 

ஏழைகளுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் குறைந்த கட்டணம்.. 

கருக்கலைப்பு கண்டிப்பாகச் செய்யப்பட மாட்டாது..’ 

 

என்று எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் பார்த்த ஜோ, எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த க்ளினிக்கிற்கு மோகனை அழைத்துச் சென்றான்.. 

 

அது நம் நாயகி அங்கிதாவின் மருத்துவமனைதான்..

 

டாக்டர் இருக்கையில் உட்கார்ந்த நிலையில் உறங்கிக் கொண்டிருந்தாள் அங்கிதா. துப்பாக்கியால் அவள் தலையைத் தட்டி எழுப்பினான் ஜோ.

 

துப்பாக்கியைப் பார்த்ததும் மிரண்டு பதறிய பூவை, அதைச் சுமந்து நிற்பவனின் முகத்தைப் பார்த்து பேயறைந்ததைப் போல் ஆனாள். மும்பையே நடுங்கும் அந்த முரடனைக் கண்டு, அவள் அதிர்ச்சி கொள்ளாமல் இருந்தால் தான் அதிசயம்..

 

அவள் மூச்சு விடவும் அவகாசம் தராமல், “இவனோட வயித்துல புல்லட் இறங்கிடுச்சு, சீக்கிரமா வெளிய எடுக்கனும்‌. இல்ல செத்துடுவான், அவனுக்கு எதும் ஆச்சுனா உன்ன சும்மா விடமாட்டேன்” என்று இன்னும் அச்சுறுத்தினான் அந்த அரக்கன்.

 

மோகன் சட்டையில் படிந்திருக்கும் ரத்தத் திட்டுகளைக் கண்டு நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட அங்கிதா, தன் பயத்தைத் தள்ளிவைத்துவிட்டு அவனுக்கு ட்ரீட்மெண்ட் செய்ய ஆரம்பித்தாள்.

 

அவள் முறையாய் அனைத்தும் செய்து கொண்டிருந்தாலும், ஜோ தன் துப்பாக்கி முனையினை அங்கிதாவின் தலையை விட்டு நகர்த்துவதாய் இல்லை.

 

காயத்தின் தூரத்தைக் கணக்கிட்ட அங்கிதா, “சார், ரத்தம் ஹெவியா போயிருக்கு. புது ரத்தம் ஏத்தனும், என்னோடது சின்ன க்ளினிக், இங்க ரத்தம் ஸ்டாக் இல்ல… பெரிய ஹாஸ்பிடல் போயிடலாம்” என்றாள்.

 

ஜோ, “அது எனக்கு தெரியாதா? எனக்கும் அவனுக்கும் ஒரே ரத்தம், எங்கிட்ட இருந்து எடுத்துக்க. இந்த ட்ரீட்மென்ட்க்கு ஒரு ஆள் ரத்தம் கொடுத்தா போதும்ல..” என்றவன், அவள் பதில் சொல்லும் முன்பே தன் முழுக்கை பனியனை கழட்டிக் கொண்டு நின்றான்.

 

சதை சதையாய் குத்துச்சண்டை வீரனைப் போன்ற உடல் பலம் கொண்டிருக்கும் ஜோவின் தேகத்தைக் கண்ட அங்கிதா, ‘இவனுக்கெல்லாம் துப்பாக்கியே தேவை இல்ல. ஓங்கி ஒரு அடி அடிச்சா கண்டிப்பா ஒன்ற டன் வெயிட் இருக்கும். 

 

அடி வாங்குறவன் அடுத்த செகண்ட் சொர்கத்துல இருப்பான். செத்தவன் உடம்ப பொதைக்கிற செலவே இருக்காது. அடி வாங்குன வேகத்துக்கு தானா மண்ணுக்குள்ள உடம்பு புதைஞ்சிடும்…’ என்று எண்ணிக் கொண்டாள்.

 

அவள் தன் உடலை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பது புரிந்ததும், “ஏய்.. பராக்கு பாக்காம சீக்கிரமா வேலைய முடி” என உறுமினான் ஜோ.

 

அங்கிதாவும் பயந்துகொண்டே அவன் சொல்வதையெல்லாம் செய்தாள். அவள் திறமையால் புல்லட் மிகச்சுலபமாக மோகனின் உடலை விட்டு வெளியே வந்து விழுந்தது. 

 

அங்கிதா, “அவ்ளோதான் முடிஞ்சது, இனி உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல” என்று அரை மயக்கத்தில் இருப்பவனுக்குத் தைரியம் சொல்லிக்கொண்டே மீதி வேலைகளையும் முடித்துவிட்டாள்.. 

 

க்ளுகோஸின் உபயத்தாலும், உடலில் புது ரத்தம் பாய்ந்ததாலும் மோகன் கொஞ்சம் சுதாரிப்புடன் கண் திறந்தான்.. 

 

ஜோ, “ஆச்சா? நாங்க கிளம்புறோம்” என்றிட,

 

அங்கிதா, “சார் இப்படியே இவர கூட்டிட்டு போக கூடாது, குறைஞ்சது ஒரு நாள் ரெஸ்ட் எடுக்கனும்” என்றாள்.

 

“ஒரு நாளா?..” என்று தன் புருவம் உயர்த்தி இளக்காரமாய் சிரித்தான் ஜோ..

 

“அட்லீஸ்ட் ஒரு மணி நேரம்..” என்று இழுத்தாள்.

 

அவள் குரல் ஜோ பக்கம் சென்றாலும், பார்வை என்னவோ படுத்திருந்தவனின் காயத்தின் மீதே இருந்தது. 

 

ஜோ முதல் முறையாக தன் அறிவின் அறைகூவலை மதியாது, மனதின் விருப்பத்திற்குச் செவி சாய்த்து துப்பாக்கியைத் தரையை நோக்கித் தாழ்த்தினான்.

 

“தேங்க்ஸ்…” என்றவள், பக்கத்து அறையிலிருந்த தன் ப்ளாஸ்க்கினை எடுத்துக் கொண்டு வந்தாள்.

 

அதில் இருந்த சூடான பாலை இரண்டு டம்ளரில் ஊற்றி, அவனுக்கொன்றும் தனக்கொன்றுமாய் பிரித்து வைத்தாள். 

 

அதுவரை அவனுக்குள் உறங்கிக்கொண்டிருந்த மிருகம் அப்போது விழித்துவிட, “பால்ல எதையாவது கலந்து வச்சிருக்கிறயா?” என்றான்.

 

தனது தன்மானம் தீண்டப் பட்டதால் கோபம் கொண்ட அங்கிதா, அவனுக்கென வைத்த டம்ளர் பாலைத் திரும்ப தன் ப்ளாஸ்க்கில் ஊற்றி மூடி வைத்துவிட்டாள்.

 

‘கண்ணு முன்னாலதான் பண்றேன், ஆனாலும் என்ன பார்த்து இப்படி சொல்லிட்டானே‌..’ என்று அவள் முணுமுணுப்பதைக் கேட்டு அவனின் சந்தேக மேகம் விலகிப் போனது. 

 

ஒரு மிடறு மட்டுமே பருகியிருந்த பாவையிடமிருந்து, வழிப்பறியாய் பாலைப் பறிமுதல் செய்தான் ஜோ. அவள் பதில் வினையாற்றும் முன்பே, அவளைப் பார்த்து நக்கலாய் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு அந்த பாலை அவன் குடித்துவிட்டான்.

 

அவனின் இந்த அதிகப்பிரசங்கித்தன செய்கையால் அவளுக்கு பால் குடிக்கும் ஆசையே விட்டுப் போனது. கையை கட்டிக்கொண்டு அறையின் மூலையிலிருந்த இருக்கையில் இறுக்கமாய் அமர்ந்துகொண்டாள் அங்கிதா.

 

இருளில் ஒளிரும் கற்பக விருட்சம் போன்ற தேக வனப்பும், ஆழ்கடல் முத்து போல ஈர இதழுள் மெலிதாய் மிளிரும் புன்னகையும், நேர்மை தவறேன் என்றுரைக்கத் துடிக்கும் விழியும் ஜோவின் மன உறுதியை முதல் முறை அசைத்துப் பார்த்தது. 

 

அவன் புறம் திரும்பாதிருக்கும் தேவதையை உச்சி முதல் பாதம் வரை மனதில் பதிய வைத்துக் கொண்டிருந்த நேரம், வெளியே ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

 

ஜோ ஜன்னல் வழியே மெல்ல எட்டிப் பார்த்தான். ஆம்! அது அவனுக்காக வந்த கார் தான்.

 

பாதிக்கப்பட்டவனை பத்திரமாக அழைத்துச் செல்வதற்காக நல்லதொரு கார் வேண்டுமென்று, இங்கு வருவதற்கு முன்பே ஜோ தனக்கு நெருக்கமான அரசியல்வாதிக்கு தகவல் தந்து இருந்தான்.

 

இனி தாமதிக்காது புறப்பட வேண்டும் என்று முடிவானதும், ஜோ அவளின் மேஜைமேல் இருந்த செல்போனை தூக்கி சுவற்றில் அடித்தான். அந்த தாக்குதலால் அப்பாவியான அவளின் செல்போன் சல்லி சல்லியாக நொறுங்கி விழுந்தது.

 

“அடப்பாவி, அது என் பெர்த் டேக்கு என் அப்பா ஆசையா வாங்கித் தந்த செல்போன் டா.. நான்தான் நீ சொன்ன வேலை எல்லாத்தையும் செஞ்சுட்டேன்ல. அப்புறம் ஏன்டா அதை உடைச்ச?” என்று கோபமாய் கத்தினாள் அங்கிதா.

 

கோபமும் கவலையும் சம விகிதத்தில் கலந்திருந்த அவள் முகத்தை பார்த்துச் சிரித்துக்கொண்டே அங்கிருந்த டெலிபோன், லேப்டாப் போன்ற அனைத்து தகவல் தொடர்பு பொருட்களையும் அடித்து நொறுக்கினான் ஜோ…

 

அங்கிதா அவன் சட்டையைப் பிடித்து, “பொறுக்கி ராஸ்கல்.. உங்கள பத்தி தெரிஞ்சும், மனிதாபத்தோட பார்த்து பார்த்து ட்ரீட்மெண்ட் செஞ்சேனே, எனக்கு இது தேவைதான். உன்னப்பத்தி போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்காம விட மாட்டேன்டா..” என்று அழுதுகொண்டே ஆக்ரோஷமாகச் சபதம் எடுத்தாள்.

 

ஜோ எகத்தாளமாய், “நீ போலீஸ தேடி போக வேண்டியது இல்ல பேபி. நாங்க இங்கிருந்து போன அடுத்த செகண்ட் போலீஸே கண்டிப்பா எங்களத் தேடி இங்க வரும்..

 

அப்படி அவங்க இங்க வந்து விசாரிக்கும் போது, ‘நீங்க சொல்றது போல இங்க யாரும் வரவே இல்ல. நான் யாரையும் பார்க்கல’னுதான் நீ சொல்லனும்..

 

மீறி ஏதாவது ஒரு வார்த்தை சொன்னாலும் அதோட பின் விளைவுகள் நீ எதிர்பார்க்காத அளவுக்கு படு பயங்கரமாக இருக்கும். என் உறுதியைப் பத்தி நான் சொல்ல தேவையில்ல, இந்த உலகத்துக்கே தெரியும். ஒழுங்கா இருந்துக்க” என்று பிளாக்மெயில் செய்து விட்டுதான் அங்கிருந்து விடை பெற்றான்.. 

 

ஆனால் அங்கிதாவோ, ‘பொய் என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது…’ என்பதைப் போல, போலீஸ் வந்தவுடன் ஒரு வார்த்தை தவறாமல் அங்கு நடந்த அனைத்தையும் அப்படியே சொல்லிவிட்டாள்.

 

அதுவும் போக அவன் இங்கிருந்து பயணிக்க வரவழைத்த வாகனத்தின் வகை, அதன் வண்ணம், அதன் எண், அது போன திசை என அத்தனையையும் புட்டுப் புட்டு வைத்து விட்டாள். அந்த நொடியில்தான் அவளின் வாழ்க்கைப் பாதையே தடம் மாறியது..

 

அவளுடைய கெட்ட நேரம், அன்று அந்த விசாரணைக்கு அங்கே வந்தது நேர்மைக்கு இலக்கணமான இன்ஸ்பெக்டர் பரத்வாஜ். மற்ற காவல்துறை அதிகாரிகள் அனைவரும் ஜோவின் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே ஒதுங்கிக் கொள்வது போல அவனால் விலகிட முடியவில்லை.

 

‘ஜோ மும்பையே பயப்படக்கூடிய ஒரு நிழலுகத் தாதா, இந்தியா முழுவதும் அவன் பெயர் பிரபலம், அவனோடு வம்பு வைத்துக் கொண்டால் நிச்சயம் தன் உயிருக்கே ஆபத்து வரும்’ எனத் தெரிந்தும் துணிச்சலோடு எதிர்த்து நிற்க முடிவெடுத்தான் பரத்வாஜ்.. 

 

‘இந்த முயற்சியில என் உயிரே போனாலும் பரவாயில்ல, கைக்கு கிடைச்ச வாய்ப்ப பயன்படுத்தி அந்த ஜோவை பிடிக்கனும்..’ எனும் எண்ணத்தோடு, ஜோவைத் தேடி விரைந்து சென்றான்.

 

ஆட்கொல்லி புலியின் வேட்டையில் மிகச் சுலபமாக அந்த காட்டுச் சிங்கம் அகப்பட்டுக் கொண்டது. காவலர்கள் குழுவோடு சென்றிருந்த பரத்வாஜ், ஜோவையும் மோகனையும் காரோடு சேர்த்து வளைத்துப் பிடித்துவிட்டான்.

 

‘இதுதான் என் வாழ்க்கையில நான் ஜெயிச்ச மிகப்பெரிய ஜாக்பாட்..’ என்று பெருமிதம் கொண்ட பரத்வாஜ், துரித கதியில் செயல்பட ஆரம்பித்தான்.

 

துணிச்சலுக்கு பெயர் போன கமிஷனரிடம் சிறப்பு அனுமதி வாங்கி, அரை மணி நேரத்திற்குள் ஜோவையும் மோகனையும் அவர்கள் பயணித்த காரையும் யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் அடைத்து வைத்தான். 

 

இருவரும் ஜோ கைது செய்யப்பட்ட விவகாரமும், அவன் இருக்கும் இடமும் வெளி உலகத்திற்குத் தெரியாதபடி படுபயங்கர பாதுகாப்புடன் பார்த்துக் கொண்டனர்.

 

‘ஜோ மூலம் பல அரசியல்வாதிகளின் வண்டவாளத்தை தண்ட வாளம் ஏற்ற முடியும். அதற்கு இந்த வாரத்தின் இறுதியில் டிஜிபி முன்பு ரகசிய விசாரணை நடத்த அனுமதி வேண்டும்…’ என்று கமிஷனர் தனது மேல் மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்க, எண்ணி இரண்டே நாட்களில் ஜோ தன் வேலையைக் காட்டி விட்டான்.

 

பிறருக்கு ஜால்ரா தட்டும் எண்ணத்தோடு கோடி மக்கள் வாழும் இவ்வையகத்தில், நேர்மையான குணம் கொண்ட இருவர் மட்டும் தனக்கு விருப்பமான தனிப் பாதையில் சென்றிட முடியுமா? அப்படி போனால்தான் விட்டுவிடுவார்களா?

 

ஜோ விஷயத்தில் பணமும், பதவியும் வென்று விட, பரத்வாஜும் கமிஷனரும் ஏமாற்றப் பட்டனர்..

 

ஜோ, மோகன் இருவரும் தங்களுடைய ஆட்களின் உதவியோடு வெகு சுலபமாகக் காவலர்களின் ரகசிய இடத்திலிருந்து தப்பிவிட்டனர்…

 

அங்கிருந்து தப்பித்த ஜோ, மோகனை முதல் வேலையாக தங்களுடைய இடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டான். அதன் பின் அவன் நேராகச் சென்று நின்ற இடம் அங்கிதாவின் அறை தான்…

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!