அசுரன்-3

கடவுளின் படைப்பில் ஒரு சில ஜீவன்கள் மட்டுமே இன்னொரு உயிரையும் தன்னைப்போல் நினைக்கும் மனப்பாங்கு கொண்டவை.

 

அந்த வரிசையில் ஒருத்திதான் அங்கிதாவும்…

 

மை விழியால் கண்ணசைத்து, சாயப் பூச்சால் ஜாலம் காட்டி காளையர் மனதைக் கள்ளச் சிரிப்பில் ஏய்த்து விளையாட வேண்டிய பருவ வயது பெண், கடமை, கொள்கை, சேவை என்று படைத்தவனையும் வியக்க வைத்திருக்கிறாள்.

 

கடல் போல வீடு இருந்தும், ‘என் நோயாளிகள் எப்பொழுது வந்தாலும், தாமதிக்காமல் அவர்களுக்கு நான் ட்ரீட்மெண்ட் கொடுக்க வேண்டும்…’ என்பதற்காக, தன்னுடைய க்ளினிக் உள்ளேயே தனக்காக ஒரு சிறிய அறை ஒன்றை ஏற்பாடு செய்து அங்கேயே வசித்து வருகிறாள் அங்கிதா.

 

அது ஏற்கனவே தெரிந்தவனாதலால்,  ஜோவிற்கு அவள் இருக்கும் இடத்திற்குப் போவது மிகப்பெரிய வேலையாக இருக்கவில்லை… 

 

மிகச் சுலபமாக வீடு புகுந்து… ஓ அது மருத்துவமனையோ?!…. மிகச் சுலபமாக மருத்துவமனையில் புகுந்திட்டான். பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பே தராமல், பேதைப் பிள்ளையின் கையையும் காலையும் அவன் கட்டி வைத்துவிட்டான். மேற்கொண்டு அடுத்த கட்ட ஆட்டத்திற்கு வசதியாய் அவள் வாயையும் வேறு அடைத்து விட்டான்… 

 

ஆனாலும் அவனிடம் இருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய கையையும் காலையும் ஆட்டி, அறையின் கதவு சுவர் என்று எல்லாவற்றிலும் முட்டிக் கொண்டிருந்தாள் அவள்.

 

‘நீ என்ன வேண்டுமானாலும் செய், ஆனால் என் பிடியிலிருந்து உன்னால் நழுவ முடியாது பெண் மானே’ என்று மறைமுகமாக அவளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தான் அந்த வேடன்.

 

முட்டி மோதி முடித்தவள், மூச்சு வாங்கியபடி அவனைப் பார்த்தாள்…

 

‘உன் முயற்சிகள் முடிந்ததா?..’ எனக் கேட்பது போல அவளைப் பார்த்தான் ஜோ.

 

இயலாமையால் இரு துளிக் கண்ணீர் அவளின் கடை விழியில் திரண்டு நிற்க, அதைக் காணப் பிடிக்காதது போல முகத்தைத் திருப்பிக் கொண்டான் ஜோ.

 

தன்னால் எதுவும் முடியவில்லை என்றானதும் அங்கிதா, “ம்.. ம்” என்று முணங்க, அருகில் அமர்ந்து மெது மெதுவாய் வாய்ககட்டை அவிழ்த்தான்.

 

“என்ன விட்ரு ப்ளீஸ்…” என்று இறைஞ்சினாள் அவள்.

 

ஜோ, “வாய்ப்பே இல்ல, உன்ன வச்சு எவ்வளோ வேலைகள் செய்ய வேண்டியிருக்கு” என்றவன், திரும்ப வாயைக் கட்டிவிட்டு, அவளைத் துண்டு போல தூக்கித் தன் தோளில் போட்டுக் கொண்டான். 

 

காரின் முன் பக்கம் இடது இருக்கையில் அவளை ஜோ இறக்கிவிட, அப்போதும் தன் தப்பிக்கும் முயற்சியைக் கைவிடாத விடாத பேதை, காரின் கதவில் காலால் உதைத்து ஒலி எழுப்ப முயற்சி செய்தாள். 

 

‘அட்லீஸ்ட் இந்த சத்தத்தைக் கேட்டு யாராவது போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ணுவாங்க..’ என்ற நப்பாசை அவளுக்குள்..

 

அது அவனுக்கும் புரிந்தது. ஆனாலும் அதைப்பற்றி அவன் துளியளவுகூட வருத்தப்பட்டதாய் தெரியவில்லை. அவள் செய்யும் முயற்சிகளை ஜோ ஒரு சின்ன சிரிப்புடன் வேடிக்கை பார்த்தபடியே காரைக் கிளப்பினான்.. 

 

நெடுநேரமாக காரின் கதவோடு முட்டியதால் அங்கிதாவிற்கு கை கால்கள் எல்லாம் வலிக்க ஆரம்பித்தது..

 

அதன்பிறகு தொடர்ந்து காரின் கதவை அடிக்காமல் ஏதாவது வாகனம் எதிரே வந்தால் மட்டும் வேகமாக காரின் கதவை அடித்தாள்.

 

அப்பொழுதும் ஒரு ஈ காக்கா கூட அந்தக் காரை திரும்பிப் பார்ப்பதாக இல்லை…

 

கார் ஊர் எல்லையைத் தாண்டும் நேரம் அவர்கள் வழியில் ஒரு டோல்கேட் வந்தது. அங்கே காவலர் உடையில் யாரோ ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

 

‘இப்போது சத்தம் செய்தால் அவர் நம்மைப் பார்ப்பார். என்னைக் காப்பாற்ற ஏதாவது முயற்சி செய்வார்…’ என்று நினைத்தாள் அங்கிதா. 

 

‘கடவளுக்கு இன்னும் என் மேல இரக்கம் இருக்கு, இல்லனா என்ன காப்பாத்த இப்படி ஒரு வாய்ப்ப உருவாக்கி தருவாரா?’ எனும் நம்பிக்கை ஒளி தெரிந்தது அவளுள். 

 

கார் டோல் கேட்டை நெருங்கியதும் சற்று பலத்தோடு காரின் கதவை டமால்! டமால்! என்று உதைக்க தொடங்கினாள் அவள். ஆனால் அங்கே நின்று கொண்டிருந்த காவலரோ ஜோவிற்கு சலாம் செய்து கேட்டை திறந்து விட்டான்.. 

 

அதைப் பார்த்த அங்கிதா….

 

“அடப்பாவிங்களா!!.. நீங்க சலாம் போட்டு வழியனுப்பி வைக்கத்தான் நான் என்னோட உயிரை பணயம் வச்சு இவன பிடிச்சுக் கொடுத்தேனா?” என்பதுபோல் நொந்து போனாள். 

 

ஜோ மிகவும் கேஷுவலான குரலில், “நான்தான் சொன்னேனே… உன்ன படைச்ச கடவுளால கூட எங்கிட்ட இருந்து உன்னை காப்பாத்த முடியாதுனு. இப்பவாவது புரிஞ்சதா? நீ அழுதாலும் புரண்டாலும் ஏன்னு கேட்க இந்த உலகத்துல இருக்குற எவனுக்கும் தைரியம் வராது…

 

நாம நம்மளோட இடத்துக்குப் போக இன்னும் பன்னிரெண்டு மணி நேரம் ஆகும்… உனக்கு களைப்பா இருந்தா நீ தூங்கி ரெஸ்ட் எடு பேபி..

 

இல்ல அழத்தான் போறேன்னா தாராளமா அழு, நான் உன்னை தடுக்கமாட்டேன்” என்று சொல்லிச் சிரித்தான்.

 

ஏற்கனவே அன்றைய நாளின் பகல் பொழுது முழுவதும் நோயாளிகளைப் பார்த்ததால் அவளுக்கு உடல் அசதி அதிகமாய் இருந்தது..

 

அவள் விழிகள் தூக்கத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் போதுதான் பரத்வாஜிடமிருந்து இருந்து ஜோ தப்பித்து விட்ட தகவல் வந்தது…

 

அவனிடமிருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அடித்து உதைத்ததில் கை கால் வேறு அசந்து விட்டது. காப்பாற்ற வேண்டிய காவலரும் கையைக் கழுவிவிட்டான். இனி வண்டிகள் வருவதே கடினம், அப்படி வந்தாலும் யாராவது ஒருவர் அவளைக் காப்பாற்றுவார்களா எனக் கேட்டால், பதில் ஜீரோதான். 

 

மூச்சு விடுவதே மலையைப் புரட்டும் வேலை போல் அங்கிதாவுக்கு இருக்க, ‘இதற்குமேல் இவனிடமிருந்து நம்மால் தப்பிக்க முடியாது.

 

பேசாமல் அவன் சொல்வதைப் போல நன்றாக உறங்கி ஓய்வெடுத்தாலாவது உடல் பழையபடி திடமாகும். நாளை நமக்குத் தப்பிக்க ஏதாவது நல்லதொரு வாய்ப்பு கிடைக்கலாம்..

 

அந்த நேரம் பழைய உடல் பலத்தோடு இருந்தால், எப்படியாவது முயற்சி செய்து நான் தப்பித்து விட வேண்டும்..’ என்று நினைத்தபடியே கண்களை மூடி உறக்கத்திற்குத் தயாரானாள் அங்கிதா…

 

“வெரி குட், இப்பவாவது என் பேச்சை கேக்கனும்னு உனக்கு புரிஞ்சதே. இனி உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல… 

 

நம்ம இடம் வந்ததும் உன்னை எழுப்பி விடுறேன், அதுவரைக்கும் நிம்மதியா தூங்கு. மத்த வேலைகள நாம அங்க வச்சு பேசிக்கலாம் பேபி..” என்ற ஜோ, அவள் அமர்ந்திருந்த இருக்கையை நன்றாகச் சாய்த்து வைத்தான். 

 

கூடவே தயாராக வைத்திருந்த ஒரு போர்வையை அவளின் தேகத்தை மறைக்கும்படி அழகாய் போர்த்தி விட்டான்..

 

ஜோ இவ்வளவு நாகரிகமாய் நடந்து கொண்ட போதும் அங்கிதா, ‘இவன் சாதாரணமா பேசுறானா? இல்ல டபுள் மீனிங்ல பேசுறானா? எதுக்கும் ஜாக்கிரதையா இருக்கனும்..’ என்று யோசித்தபடியே உறங்கத் துவங்கினாள்.

 

அவள் உறங்குவது உறுதியானதும் ஜோ தன் காரை ஒரு ஓரமாக நிறுத்தினான். எதிர்காற்றின் உபயத்தால் நன்றாக அசந்து உறங்கிக் கொண்டிருந்த அங்கிதாவை அருகில் சென்று உற்றுப் பார்த்தான் ஜோ…

 

இதுவரைக்கும் அவன் தன் வாழ்வில் பார்த்திராத ஒரு அழகிய கண்கள் அவளுக்கு…. மங்கை மான்விழி அம்புகள், முதல் தடவை அவன் மார்புக் கூட்டைத் துளைத்திருந்தது.

 

முகில் கொண்டு செய்த தேகத்தாளின் அழகில் மயங்கிய அரக்கன், தன்னை மறந்து இன்னும் கொஞ்சம் நெருங்கி அமர்ந்தான். 

 

தோகை மயிலின் எழில் கொஞ்சும் வண்ணங்களைப் போல மின்னிய அவள் வதனம் பார்த்து சொக்கி நின்றது அந்த முரடனின் கண்கள்.

 

‘கடவுளே வந்தாலும் எங்கிட்ட இருந்து உன்னை அவ்வளவு சுலபத்துல என் பிடியில இருந்து விட மாட்டேன் பேபி’ என்று முணுமுணுத்தது அவன் அதரம்.

 

காதல் ஒரு சுகமான போதை.. துளியாய் நெஞ்சில் இடம் பிடித்தாலும் அது தரும் கற்பனை ஊற்று கடலைப் போன்றது. 

 

ஜோவும் அந்த கற்பனைக் கடலில் மூழ்கி எழ ஆசை கொண்டான். அவனுக்கு அங்கிதாவைப் பார்த்ததும் பிடித்துவிட்டது. ஆனால் அவனைப் பார்த்ததும் அவளுக்கு உயிர் போகுமளவு பயம்தான் வந்தது. 

 

அவளுக்கும் தனக்கும் வாழ்க்கைப் பாதை பொருந்தாது, எட்டி நின்று ரசிப்பதோடு இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்று தான் அவனும் முதல் நாள் நினைத்திருந்தான். 

 

ஆனால் அந்த எலி தானாகச் சென்று பொறியில் மாட்டிக் கொண்டது. அங்கிதா அவனைப் பற்றிய விபரங்களை போலீசில் போட்டுக் கொடுத்து, தனக்குத் தானே குழி தோண்டிக் கொண்டாள். அந்த தகவல்களை இனி அவனே நினைத்தாலும் அழிக்க முடியாது, அவ்வளவு தூரம் போயாகிவிட்டது.

 

ஆயிரம்தான் இருந்தாலும் அவள் தன் நண்பனின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறாள் எனும் நினைப்பு வேறு அவன் மனதை இம்சித்தது. ஆதலால் சிறையில் இருந்து வெளியே வந்ததும் முதல் வேலையாய், தன் ஆட்கள் மூலம் அவளைப் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து கொண்டான் அவன். 

 

ஜோவிற்கு இனியும் அவளை இங்கு தனியே விட்டு வைக்கத் தோன்றவில்லை. தப்பித்த கையோடு தகவல்கள் கிடைத்ததால், அடுத்த சந்தர்ப்பம் தேடி அலையாமல், அந்த நேரத்திலேயே தன் வேலையைக் காட்டிவிட்டான்..

 

‘என் வாழ்வை என் விருப்பப்படி வாழ்வது என் உரிமை..’ எனும் எண்ணங்கொண்ட அவனையும், ‘இந்தப் பிறவியே பிறருக்கு சேவை செய்யத்தான்’ எனும் லட்சியம் கொண்ட அவளையும், காலம் ஒரே வாழ்க்கை பாதையில் இணைத்து வைத்துவிட்டு கைகொட்டிச் சிரித்தது.

 

முதல்நாள் தன்னைப் பார்த்துப் பயந்து மருண்டு விழித்த விழிகளைக் கண்டு இரக்கம் கொண்ட ஜோ, இன்று அந்த பயத்தை மிகவும் ரசித்தான்…

 

‘அவளின் பயந்த பார்வைக்கே என்னில் இத்தனை பித்தம் ஏறுகிறது என்றால், அவள் சிரித்தால் எப்படி இருக்கும்? அந்தக் கண்களில் மின்னும் ஒளியழகு பெரும் சமுத்திரத்திற்கு ஒப்பானதாய் தோன்றிடுமா?…

 

அதில் நான் நீந்தி கரை காண வேண்டுமடி சகியே!!..’ என நினைத்துக் கொண்டே காரை திரும்பக் கிளப்பினான் ஜோ.

 

நாளை தப்பிக்க வேண்டும் எனும் ஆசையோடு இன்றைய உடல் எனர்ஜியை சேமித்தபடி காரில் தூங்க ஆரம்பித்த அங்கிதா, கண்விழித்துப் பார்க்கையில் ஒரு அறையில் படுத்திருந்தாள்..

 

அந்த அறை மிகவும் சிறியதாக இருந்தது.. அதுவும் அங்கிருந்த சுவர்கள் அனைத்தும் மரத்தால் செய்யப்பட்டிருந்தது.. சொல்லப் போனால் அங்கே ஒரு படுக்கை, ஒரு பாத்ரூம், ஒரு அலமாரி அவ்வளவு தான் இருந்தது…. 

 

கையளவு ஜன்னல் கூட அங்கே இல்லை. சுற்றும் முற்றும் பார்த்தவள் அப்போதுதான் கவனித்தாள்.. அவன் கடத்தி வரும் போது கை கால்களில் கட்டியிருந்த கயிறுகள் தற்போது இல்லை..

 

வேக வேகமாக எழுந்தவள் அந்த அறையிலிருந்து தப்பிப்பதற்காகத் தரை முதல் சீலிங் வரை எல்லாவற்றையும்  சோதனை செய்து பார்த்தாள்.

 

ஆனால் காற்று வருவதற்குக் கூட சிறிய ஓட்டை இல்லாத இரும்புக்கோட்டை போன்று இருந்தது அந்த அறை. பேருக்கும் எந்த பொருளும் இல்லாத அந்த அறையில் எதைப் பயன்படுத்தி அவளால் தப்பிக்க முடியும்…?

 

தன்னால் முடிந்த வரை அனைத்தையும் சோதனை செய்து பார்த்த பிறகு அசந்துபோய் அமர்ந்த வேளையில், கதவு டமால் என்று திறந்தது…

 

கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் ஜோ..

 

அவன் முகத்தைப் பார்த்த அடுத்த கணம், பயங்கர ஆவேசத்துடன் அவனின்‌ சட்டையைப் பிடித்து சண்டையிட்டாள் அங்கிதா..

 

“ராஸ்கல்… பாவிப் பயலே… ஈவு இரக்கம் இல்லாம ஒரு பொண்ண கடத்திட்டு வந்திருக்குற… பொறுக்கி நாயே, என்ன ஏன்டா இங்க தூக்கிட்டு வந்து வச்சிருக்குற?.. நான் இப்பவே இங்கிருந்து வெளிய போகணும்…” என்று கூறி தன்னால் முடிந்தவரை அவனை அடித்தாள் அங்கிதா..

 

துப்பாக்கி குண்டுகளையே சுலபமாகத் துடைத்து எறியும் ஜோவிற்கு, அவள் அடிப்பது ஒரு பெரிய விஷயமாகவே தோன்றவில்லை..

 

காலைச் சுற்றும் நாயை உதைத்துத் தள்ளி விடுவது போல அவளைத் தரதரவென்று இழுத்துச் சென்று படுக்கையில் போட்டான்..

 

அப்போதும் அவள் அவனோடு வாய் வார்த்தையால் சண்டை போட்டுக் கொண்டே இருக்க, அவனோ தன் அலமாரியிலிருந்து ஆடைகளை எடுத்துக்கொண்டு அங்கே எதுவுமே நடக்காதது போல விசிலடித்துக் கொண்டே குளிக்கச் சென்றான்…

 

என்ன செய்வதென்று தெரியாத பேதை அந்த இடத்திலேயே அமர்ந்து தலையில் கை வைத்தபடி அழுது கொண்டிருந்தாள். எண்ணி இரண்டே நிமிடத்தில் குளித்து முடித்து வெளியே வந்துவிட்டான் அவளின் வில்லன்.. 

 

முழுக்கை பனியனும், முழங்கால் அளவு ஷாட்ஸும் போட்டுக் கொண்டு தலையைத் துவட்டியபடியே அவள் முன்னால் வந்து நின்றான் ஜோ..

 

இவ்வளவு நேரம் தப்பிக்க முடியாததை எண்ணி அழுது தீர்த்திருந்தவள், அவன் ஈரத்தலையைத் துவட்டியபடி தன் முன் வந்து நிற்பதைக் கண்ட பிறகே சித்தம் தெளிந்து யோசிக்க ஆரம்பித்தாள்.. 

 

‘இவன் தான் ஒட்டுமொத்த கடத்தல் கூட்டத்துக்கும் தலைவன். அப்படி இருக்கும்போது இவனுக்கென்று உருவாக்கப்பட்ட அறை கண்டிப்பாக பிரம்மாண்டமாகத் தானே இருக்க வேண்டும். 

 

தனது அறையை விட்டு விட்டு இவன் ஏன் என்னுடைய அறைக்கு வந்து குளிக்கிறான்? அப்படி என்றால் இப்போது இவன் என்னை ஏதாவது செய்யப் போகிறானா?!..’ 

 

அச்சத்தில் அவள் மனம் அநியாயத்திற்குக் கற்பனைக் குதிரைகளைப் பறக்கவிட, பயத்தில் பேயறைந்தது போல் முழித்தாள் அங்கிதா…

 

ஆனால் ஜோ, அவள் அழுகையை நிறுத்தியதுமே தான் நின்று கொண்டிருந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான். அவள் இருக்கும் பக்கம் திரும்பிக் கூட பார்க்காமல் தன்னுடைய அலமாரியிலிருந்து மேல் சட்டை ஒன்றை எடுத்து அணிந்து கொண்டிருந்தான்.

 

அங்கிதாவோ கடைவிழியில் தேங்கி நின்ற கண்ணீரை வெகு பிரயத்தனப்பட்டு உள்ளிழுத்துக் கொண்டிருந்தாள்.

 

ஜோ, “இங்க உனக்கும் போட்டுக்க நிறைய டிரஸ் இருக்கு, எப்போ எத வேணும்னாலும் போட்டுக்க. ஆனா தண்ணீர் எப்பவும் வராது, அதிகாலை ராத்திரினு இரண்டு நேரம் மட்டும்தான் கிடைக்கும்.

 

எப்போ பாத்ரூம் யூஸ் பண்ணினாலும் பக்கெட்ல பிடிச்சு வச்சிடு, மறந்திடாத” என்று வீட்டிற்கு வந்த உறவுக்காரர்களுக்கும் தகவல் சொல்வது போல தானாகப் பேசிக் கொண்டிருந்தான்.

 

அங்கிதாவுக்கு அப்போதும் அவன் மேல் நம்பிக்கை வரவில்லை. கைவசம் எதுவும் கிடைக்காததால் தன் வளையலைக் கழற்றி பிடித்துக் கொண்டாள். அவன் அருகில் வந்தால், இதை வைத்து அவனை அட்டாக் செய்ய வேண்டும் என்று மனதிற்குள் திட்டங்களைத் தீட்டியபடி தயாராகக் காத்திருந்தாள்.

 

ஓரக்கண்ணால் அவளின் செய்கைகளைப் பார்த்தவனது இதழுக்குள் ஒரு சின்ன சிரிப்பு மலர்ந்து அடங்கியது. அவள் வளையலுக்கு வேலை வைக்காமல் ஜோ அமைதியாக அந்த அறையிலிருந்து வெளியேறிச் சென்றுவிட்டான்..

 

ஜோ வெளியே சென்றவுடன் ஆசுவாசம் அடைந்த அங்கிதா மீண்டும் கதவைத் திறக்க முற்பட்டாள். ஆனால் இம்முறையும் அவளால் ஏதும் செய்ய முடியாமல் போனது.

 

‘அவன் கை பட்டதும் திறந்து கொள்ளும் இக்கதவு, எனக்கு மட்டும் ஏன் ஓர வஞ்சகம் செய்கின்றது?…’ என்று வெம்பியவள், பலம் கொண்ட மட்டும் கதவை நன்றாகத் தட்டினாள்.

 

“ப்ளீஸ்… யாராவது வெளியில இருக்கீங்களா? என்ன காப்பாத்துங்க… இந்த கதவை திறந்து விடுங்க, நான் எப்படியாவது இங்கிருந்து என் வீட்டுக்கு திரும்பிப் போகணும்.. 

 

என்னோட அப்பாவும் அம்மாவும்  என்ன காணும்னு ரொம்ப தவிச்சு போயிருப்பாங்க. நான் அவங்ககிட்ட போகணும், என்னை விட்டுடுங்களேன்….” என்று கத்திக் கொண்டே கதவை திரும்பத் திரும்ப தட்டினாள்…

 

அவள் கதறலுக்கு இரக்கப்படும் நெஞ்சம் எதுவும் அங்கில்லாததால்,  கதவின் மறுபுறம் சிறு ஒலி கூட எழவில்லை. 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!