கேள்வி கேட்டவனையே அச்சுறுத்தும் படியான ஜோவின் உரையாடலைக் கேட்டு கவர்மெண்ட்டிற்கும் போலீசுக்கும் பயங்கர குழப்பம். தன் தலையைத் தப்புவிக்க அரசாங்கம், இந்த கேஸை காவலர்கள் பொறுப்பிலேயே விட்டுவிட்டது.
போதாக்குறைக்கு ஜோ இப்பொழுது இந்த நிமிடம் இந்தியாவிற்குள் எங்கு இருக்கிறான் என்பதே அவர்களுக்குத் தெரியாது…
அப்படியே ஜோ இருக்குமிடம் தெரிந்தாலும் அங்கு சென்று, அவனோடு சண்டையிட்டு அந்த பெண்ணை மீட்டு வரும் தைரியம் அவர்களிடம் கிடையாது. ஆதலால் வழக்கம்போல பூசி மொழுகிடும் வேலையைச் செய்தார்கள்…
“நடவடிக்கை எடுக்கின்றோம்… பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது… மேலிடத்திலிருந்து உத்தரவு வரக் காத்திருக்கிறோம்… அரசு ஒரு முக்கிய கூட்டம் நிகழ்த்தி முடிவெடுக்க இருக்கின்றது…”
என்கிற செய்திகளே அடுத்த இரண்டு வாரம் முழுக்க எல்லா மீடியாக்களிலும் வருகை தந்தது. பொறுத்துப் பொறுத்து பார்த்த அங்கிதா தனக்குச் சாதகமாக எந்த ஒரு செய்தியும் வராததால்
பயங்கர கடுப்பானாள்.
ஜோ அவளுக்கும் ஒரு படி மேலே போய், “பேபி, வேற யாருக்காவது போன் பண்ணி உன்னை காப்பாத்தணும்னு கூப்பிட தோணுதா?
அப்படி தோணுச்சுனா எங்கிட்டயே சொல்லு. நானே உனக்கு நேரடியா போன் போட்டு பேச ஏற்பாடு செஞ்சு தர்றேன்..” என்று ஏகத்திற்கும் அவள் மனதை ரணமாக்கினான்.
ஜோ அவளுடன் சாதாரணமாக பழகியதால், அங்கிதா அவன் பலத்தை மிகவும் குறைவாக எடை போட்டு விட்டாள். ஆனால் இப்பொழுதுதான் அங்கிதாவிற்கு அவனின் உண்மையான வலிமை புரிந்தது.
‘கவர்ன்மென்ட்… போலீஸ்… மக்கள்… என அனைவரும் தலையிட்டும் கூட இவன் ஒருத்தன் கிட்ட இருந்து நம்மள காப்பாத்த முடியலையே…’ என்று அங்கிதாவிற்கு புரிந்தது.
‘இதற்கு பிறகும் காவலர்கள் வருவார்கள், ஆர்மி ஆட்கள் வந்து நம்மை காப்பாற்றுவாங்கள், என்று நாம் இங்கே உட்கார்ந்து இருப்பது வேஸ்ட்…
நான் கிழவியாகும் வரை இவன் என்னை விட மாட்டான். நானே முயற்சியெடுத்து ஏதாவது ஸ்டெப் எடுத்து வச்சாத்தான், மிச்ச சொச்ச வாழ்க்கையை என்னால வாழவே முடியும்…
இவனுங்க கூட்டாளியா காலத்த ஓட்டுறதுக்கு, அந்த முயற்சியில என் உயிர் போனாலும் பரவாயில்ல..’ என்று வாய்ப்புக்காகக் காத்திருந்தாள் அங்கிதா.
அந்த சமயத்தில்தான் அங்கே மழை பொழிய ஆரம்பித்தது. நிமிடத்திற்கு நிமிடம் மழையின் வேகம் அதிகமாகியது. இப்படி மழை வரும் என்று தெரிந்துதான் ஜோ மலையின் அடிவாரத்திலிருந்து அனைவரையும் மலை உச்சிக்கு இடம் மாற்றினான்…
ஆனால் தற்போது மலை உச்சியில் கூட இருக்க முடியாத அளவிற்குப் பேய் மழை பெய்தது. எதிரில் நிற்பவர் யார் என்று தெரியாத அளவிற்கு மழை தன் வேகத்தால் வெளுத்து வாங்கியது…
இந்நேரம் இவர்கள் மலையின் அடிவாரத்தில் இருந்திருந்தாலோ, பாதி வழியில் நின்றிருந்தாலோ நிச்சயமாக மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு இருப்பார்கள்.
அந்த அளவிற்கு மழை கோரத்தாண்டவம் ஆடியது. அதன் சீற்றத்தைத் தாங்க முடியாத காட்டு மரங்கள் ஆங்காங்கே வேரோடு பெயர்ந்து விழுந்திற்று…
காட்டு மிருங்கங்கள் வேறு எங்கே செல்வது என்று தெரியாமல், சிலது அடிவாரத்திற்கும் சிலது மலை உச்சிக்கும் இடம் பெயர்ந்தன.
ஜோ ஏற்கனவே முன்னெச்சரிக்கை உணர்வோடு, குகைக்கு அருகில் மரங்கள் அடர்ந்த பகுதியாய் பார்த்து, கிராமம் அமைத்திட ஏற்பாடு செய்திருந்தான்.
அதனால் அந்த மரங்கள் கரம் சேர்த்து நிற்கும் காவலர்களைப் போல அவர்களுக்குப் போதுமான அளவிற்குப் பாதுகாப்பைக் கொடுத்தது…
அதுவும் போதாதென்று அவன் அனைத்து மர வீடுகளையும் மரங்களோடு சேர்த்து கயிறு கொண்டு கட்டி வைத்திருந்தான்…
தற்போது மழையின் வேகத்தினை உணர்ந்து, ஒவ்வொரு வீட்டின் நிலையையும் அவனே நேரடியாகச் சென்று சரி பார்த்து விட்டு வந்தான்.
நேரம் ஆக ஆக மழையின் வேகம் கூடிக்கொண்டே சென்றது. காற்றும் கிட்டத்தட்ட புயல் காற்று போல் வீசத் தொடங்கியது…
சீக்கிரமே வீடுகள் உடையுமென்று உணர்ந்து கொண்ட ஜோ, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினான்…
மழைக்காற்றின் உக்கிர தாண்டவத்தை முதன்முறையாக நேரில் பார்க்கும் அங்கிதா, என்ன செய்வதென்று தெரியாமல் பேய் முழி முழித்திருந்தாள். கூட்டத்திலிருந்த சிலருமே இந்த மழையில் தாக்குபிடிப்பது கடினம் என்று தெரிந்து அஞ்சி நடுங்கத் தொடங்கினர்.
அப்போதும் ஜோ எந்த பதற்றமும் இல்லாமல், தங்களுக்கு மிக அருகிலேயே இருக்கக்கூடிய குகையில் தங்க ஏற்பாடு செய்யும்படி மோகனிடம் சொன்னான்…
தலைவன் உத்தரவைக் கேட்டதும், மோகனும் திடகாத்திரமான ஆட்களை உடன் வைத்துக் கொண்டு முக்கிய பொருட்களை எல்லாம் குகைக்கு இடம் மாற்றினான்.
குழந்தைகளும் பெண்களும் கைக்குக் கிடைத்ததை அள்ளிக்கொண்டு குகையை நோக்கிப் பயணப்பட்டனர். அந்த நேரத்தில் ஒரு பெரிய மரக்கிளை உடைந்து கீழே விழத் தயாரானது.
அதற்கு நேர் கீழே நின்றிருந்த மோனிகாவை, அங்கிதா வேகமாக ஓடிப்போய் கட்டிப்பிடித்தாள். கிளை ஒடியும் முன் குழந்தையோடு சேர்ந்து அங்கிதாவும் அருகிலிருந்த பள்ளத்தில் உருண்டு விழுந்தாள்.
சிறிய பள்ளந்தான் என்றாலும், மழையின் காரணமாகக் கல்லும் கரடும் அதிகமாய் கிடந்தது. குழந்தைக்கும் அவளுக்கும் கை கால்களில் சிற்சில அடி பட்டதோடு தப்பிவிட்டனர்.
விழுந்து எழுந்த உடனே அங்கிதா மோனிகாவைத் தூக்கிச் சென்று காயத்திற்கு முதலுதவி செய்தாள். சிறிய காயம் என்பதால் குழந்தையும் விரைவிலேயே சகஜநிலைக்கு வந்து விட்டது. அங்கிதா கொஞ்சம் நேரம் தாழ்த்தி இருந்தாலும் அந்தக் குழந்தை இப்போது உயிரோடு இருந்திருக்காது…
அங்கே இருப்பவர்கள் அனைவரும் அங்கிதாவைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர். ஜோ அமைதியாக அனைத்தையும் தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
இது வரையில் ஒரு நாள், ஒரு பொழுது கூட, “நீ நல்லா வேலை செஞ்ச” என்று அவன் அவளிடம் கூறியதே இல்லை.
விருப்பமில்லை என்றாலும் மாங்கு மாங்கென ராத்திரி பகல் பார்க்காமல் உழைத்து, அத்தனை நோயாளிகளையும் குணமாக்கியிருந்தாள் அங்கிதா. அதற்கும் அவன் மனம் திறந்து, நன்றி என்றொரு வார்த்தை சொன்னதில்லை.
இப்பொழுதும் அப்படித்தான், செய்து வைக்கப்பட்ட சிலை போல் நின்று அங்கே நடப்பவைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஜோ.
மோகன் ஜோவிடம், “டாக்டர சைட் அடிச்சது போதும், குகை ரெடியாகிடுச்சு, வந்து வேலைய கவனி..” என்றான்.
முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு மோகனுடன் நடந்தான் ஜோ. ஜோவுக்கு குகையில் இருப்பதிலேயே ஒரு உயரமான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கிதா வந்ததும் ஜோ தனக்காக ஒதுக்கப்பட்ட இடத்திலேயே அவளையும் உட்கார வைத்தான்.
எண்ணி அரை மணி நேரத்தில் அங்கிருந்த அனைவருக்கும் உணவு தயாராகி விட்டது. சாப்பிட்டு முடித்து ஒருவர் பின் ஒருவராய் உறங்கிட, அங்கிதா மோனிகாவின் அருகில் உறங்க முயற்சித்தாள்.
ஜோ அங்கிதாவைத் திரும்ப தான் இருக்கும் இடத்திற்கே அழைத்துச் செல்ல முயல, “பாப்பாவுக்கு ஃபீவர் வருதானு ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தரம் செக் பண்ணனும். இன்னிக்கி ஒரு நாள் மட்டும் நான் இங்க தூங்குறேன்” என்று இறைஞ்சினாள் அவள்.
ஜோ, “வேணும்னா ராத்திரி நானே உன்ன எழுப்புறேன், இப்ப என்னோட இடத்துக்கு வா” என்று இரக்கமின்றி அவளை இழுத்துச் சென்றான்.
அவன் செய்கையால் பொறுமை துறந்த அங்கிதா, “என்ன விருப்பமில்லாம நீ கடத்திட்டு வந்த, பொறுத்துகிட்டேன். மழை வெயில்னு பார்க்காம வேலை தந்த, அதையும் செஞ்சேன்.
இப்ப வரைக்கும் இங்க இருக்குற எல்லாரையும் சக மனுஷனா நினைச்சு வைத்தியம் பண்றேன். ஆனா நீ என்னை ஒரு தடவை கூட மனுஷியா பார்க்க மாட்டிக்கிற.
நாய் மாதிரி நீ போற இடத்துக்கெல்லாம் என்னையும் இழுத்துட்டு போற. நானும் வேற வழியே இல்லாம வந்து தொலைக்கிறேன்.
இங்க இவ்வளவு பேர் நம்மள சுத்தி இருக்கிறாங்க, அவங்க அத்தனை பேர் கண்ணும் என் மேல தான் இருக்கு. இருந்தும் இங்கிதம் இல்லாம இப்படி இழுத்துட்டு போறியே?
எனக்காக இல்லனாலும் மோனிகாவுக்காக கொஞ்சம் மனுஷத் தன்மையோட நடந்துக்கோயேன்..” என்றாள்.
அப்போதும் அவன் அவளின் புலம்பல் மொழியை ரசித்தானே அன்றி, தன் நிலையிலிருந்து அசையவே இல்லை..
தலையில் அடித்துக் கொண்ட அங்கிதா, “எல்லாம் என் நேரம்.. அந்த ஆண்டவன் நான் அனுபவிக்கனும்னு என் தலையில எழுதினது எல்லாத்தையும் இந்த ஜென்மத்துல அனுபவிச்சுத் தானே ஆகணும்…” என்று கூறிவிட்டு அவன் சொன்ன இடத்திலேயே, அவனுக்கு முதுகைக் காட்டியபடி சுருண்டு படுத்துக் கொண்டாள்…
நேரம் நள்ளிரவை நெருங்கிய பிறகும் ஜோ உறங்காமல், அங்கிதாவிற்கு வாட்ச்மேன் வேலை பார்ப்பது போல் முழித்தபடி படுத்திருந்தான்.
நள்ளிரவில் முழித்துக்கொண்ட அங்கிதா மெதுவாகப் புரண்டு படுப்பது போல் திரும்பிப் படுத்தாள். அவள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் அனைவரும் தூங்கியிருந்தனர். மிச்ச சொச்சமென யாரேனும் உறங்காமல் இருக்கிறார்களா என்று பார்த்தாள்.
அவள் எதிர்பார்த்தபடியே அத்தனை பேரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். நிம்மதிப் பெருமூச்சுடன் எழுந்து அமர்ந்த பிறகுதான், ஜோவின் முகத்தைப் பார்த்தாள்.
அவள் பக்கத்திலேயே உறங்குவதைப் போல படுத்திருந்த ஜோ அங்கிதாவையே முறைத்துக் கொண்டிருந்தான். அவன் கத்திமுனை கண்களைக் கண்டு அரண்டு போனாள் அவள்.
ஆயினும் அதை அவனுக்குக் காட்டி விடக்கூடாது எனும் எண்ணத்தோடு, “நீ இன்னும் தூங்கலயா? நேரம் இப்ப நடுராத்திரிக்கு மேல இருக்குமே?” என்று பாசத்தைப் பொழிவது போலக் கேட்டாள்….
ஜோ சின்ன சிரிப்போடு, “ஏன்? நான் தூங்கிட்டா நீ சுலபமா இங்கிருந்து தப்பிச்சு ஓடிடலாம்னு நினைச்சயா?…” என்று கேட்டான்.
“ச்சே!… சே… அப்படி எல்லாம் இல்லையே. கடவுளே வந்து கை நீட்டிக் கூப்பிட்டாலும் உங்ககிட்ட இருந்து என்னால தப்பிச்சு போக முடியுமா?…” என்று அவன் வார்த்தைகளை அவனுக்கே சொல்லிக் காட்டினாள்.
“அப்புறம் எதுக்கு பேபி ஓரக்கண்ணால எல்லாரையும் ஒரு தடவை நோட்டம் விட்ட?”
“நா.. நான்.. சும்மா திரும்பி படுத்தேன், அவ்வளவுதான்..” என்று சமாளிக்க முயற்சி செய்தாள்.
“ஹா.. ஹா.. அசந்து தூங்குறவ ஒண்ணு டக்குனு திரும்பி படுக்கனும். இல்ல கண்ண மூடிக்கிட்டு மெதுவா திரும்பி படுக்கணும். நீ ரெண்டையுமே செய்யலடி…
உன்னுடைய பார்வையே சொல்லுது. நீ என்ன செய்ய நினைக்கிறனு. ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்க, உன்னுடைய தந்திரம் எதுவும் இந்த நரிகிட்ட பலிக்காது…” என்று சொல்லிக்கொண்டே தன் சட்டைக் காலரைத் தூக்கி விட்டான்.
அவனைப் பார்த்து வக்கனைத்த அங்கிதா, “காமாலையில இருக்கிறவன் கண்ணுக்கு பார்க்குறது எல்லாம் மஞ்சளாத்தான் தெரியும். அது போலத்தான் உனக்கும் நான் எது செஞ்சாலும் தப்பாவே தெரியுது…
எனக்கு இப்போ பாத்ரூம் வருது. இந்த நேரத்தில் ஏதாவது லேடிஸ் முழிச்சுகிட்டு இருந்தாங்கனா துணைக்கு கூப்பிட்டுட்டு வெளிய போயிட்டு வரலாமேனு நினைச்சேன்…
என்னதான் டாக்டரா இருந்தாலும் காடும் மலையும் எனக்கு புதுசு இல்லையா? திடீர்னு ஏதாவது மிருகமோ பாம்போ என்ன அட்டாக் பண்ண வந்தா எப்படி தப்பிக்கனும்னு கூட எனக்கு தெரியாது.
அதுக்காகத்தான் எனக்கு துணைக்கு யாராவது கிடைப்பாங்களானு தேடிப் பார்த்தேன். அதையும் நீ எப்படித்தான் தப்பான கண்ணோட்டத்தோடவே பார்க்கிறயோ…” என்று புலம்பித் தள்ளினாள் அங்கிதா.
ஜோ தன் தலையணைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியைத் தன் இடுப்பில் சொருகிக் கொண்டு, “சரி வா, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே பாத்ரூம் போயிட்டு வரலாம்” என்று அவளை அழைத்தான்…
அங்கிதா பயங்கர அதிர்ச்சியுடன், “ஜோ, என்ன விளையாடுறியா? ஒரு பொண்ணு கிட்ட என்ன பேசுறோம், எப்படி பேசுறோம்னு யோசிக்காம பேசாத.
இங்கிதம் இல்லாம பேசினா பொறுத்துப் போக நான் ஒன்னும் உனக்கு அடிமை கிடையாது” என்று எரிந்து விழுந்துவிட்டு, திரும்பவும் தன் இடத்திலேயே படுத்துக் கொண்டாள்.
ஜோ, “நான் ஒன்னும் உன் கிட்ட பர்மிஷன் கேட்கல, வானு சொன்னா வரணும்” என்றவன், அவள் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்….
“என்ன விடு… விடுடா… எனக்கு பாத்ரூமே வரல… என்ன விட்டுடேன்…” என அவன் பிடியிலிருந்து தன் கைகளை விடுவிக்க நினைத்துத் திமிறினாள் அவள்.
“உனக்கு வரலனாலும் பரவாயில்லை. எனக்கு இப்ப வருது. சத்தம் போட்டு ஊரைக் கூட்டாம வாய மூடிட்டு வா..” என்று கட்டாயப்படுத்தி குகைக்கு வெளியில் இழுத்துச் சென்றான்.
“அவங்க வேடிக்கை பார்க்க புதுசா என்ன இருக்கு? என்ன நீ இழுத்துட்டு போறதும், நான் கத்தி கதறுறதும் வாரம் ஒருதரம் நடக்குறதுதான?..”
“உனக்கே தெரியுதுல, அப்புறம் ஏன் கத்துற?”
“குத்தாம கத்துறனேனு சந்தோஷப்படு.. இப்ப எதுக்காக என்ன தர தரனு இழுத்துட்டு போற? உனக்கு என்ன கட்டிப்புடிக்கணுமா? இல்ல முத்தம் கொடுக்கணுமா? வா வந்து பண்ணிக்கோ…” என்று ஜீசஸ் போல கை விரித்து நின்றாள்.
ஜோவின் பார்வை அவளின் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் மெதுமெதுவாய் படர்ந்தது.
அவன் பார்வை பயணம் போகும் பாதை புரிந்ததும் திரும்பிக் கண்ட அங்கிதா, “ஏன்டா என்ன இப்படி டார்ச்சர் பண்ற? உனக்கு பாத்ரூம் வந்தா நீ மட்டும் போயிட்டு வாயேன்.
நான் நல்ல பிள்ளையா அதே இடத்துல படுத்துக்குறேன். சத்தியமா இருக்குற இடத்த விட்டு அசையக்கூட மாட்டேன்” என்று கெஞ்சினாள்.
“உன்ன தனியா விட்டுட்டு அஞ்சு நிமிஷம் கூட என்னால எங்கயும் போக முடியாது. அவ்வளவு பெரிய ராங்கி டி நீ.. இவ்வளவு தூரம் வந்துட்டல, அப்படியே இன்னும் கொஞ்ச தூரம் வந்துடு பேபி” என்றபடியே அவளைத் தர தரவென்று இழுத்துச் சென்றான்..
‘போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ… இப்பொழுது இவனிடம் மாட்டி இப்படிப் பரிதவிக்கிறேன். கடவுள் உட்படக் காப்பாற்ற வேண்டிய அத்தனை பேரும் கண்களை மூடிக் கொண்டனர். தனி ஒருத்தியாய் என்னால் இவனை எதிர்த்து என்ன செய்ய இயலும்?..’ என்று மனதிற்குள் புலம்பிய வண்ணமே ஜோவுடன் சென்றாள்…
வெளியே மழை இன்னும் தன் வேகத்தைக் குறைக்காமல் வீராவேசமாய் நாட்டியமாடியது…
ஒரு பெரிய மரம் அந்த குகையின் வாசலுக்குப் பக்கத்திலேயே இருப்பதைப் பார்த்தான் ஜோ. அந்த இடம் மழைநீர் தீண்டாத படி ஓரளவு பாதுகாப்பாய் இருந்தது.
ஜோ அங்கிதாவிடம், “நான் அந்த மரத்திற்குப் பின்னால பாத்ரூம் போக போறேன். உனக்கு அவசரம்னா சொல்லு நீ முதல்ல போறதுக்கு நான் வசதி செஞ்சு தரேன்” என்று கூறினான்…
அங்கிதா கோபத்தில் முகம் சிவக்க, “உன் உதவி எனக்கு தேவையில்ல. யாராவது லேடிஸ் எழுந்தா நான் அவங்களோட போய்க்குவேன். இப்ப நீ மட்டும் போயிட்டு வா” என்றாள்.
“அப்போ சரி, நான் வர்ற வரைக்கும் இங்கேயே நில்லு. தப்பிக்க நினைச்சு அங்கிட்டு இங்கிட்டு போகாத. அட்டைப்பூச்சி இந்த பக்கம் அதிகம்” என்று சொல்லிக் கொண்டே மரத்தின் பின்னால் சென்றான்.
“உன்னோட கம்பேர் பண்ணும்போது, அட்டைப்பூச்சி எவ்வளவோ பரவாயில்ல” எனக் கூறியதும், ஜோவின் முகம் கோபத்தில் அனலாய் ஜொலித்தது.
போனவன் திரும்பி வந்து அவளுடைய துப்பட்டாவின் ஒரு முனையால் அவளுடைய இரு கைகளிலும் கட்டி, மறுமுனையை தன் கையில் பிடித்துக்கொண்டே மரத்திற்கு அந்த பக்கம் சென்றான்…
“சீ.. அசிங்கம் புடிச்சவனே.. அநியாயம் பண்றடா.. உனக்கு எல்லாம் செத்ததுக்கு பிறகு கண்டிப்பா நரகம்தான்.. என் சாபம் பலிக்குதா இல்லையான்னு பாரு..” என்று கலியுக விஸ்வாமித்திரரைப் போல, கணக்கு வழக்கில்லாமல் அவனுக்கு சாபங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தாள் பேதை.
ஆண்டவனுக்கே அஞ்சாதவன், அவளின் சாபங்களைக் கண்டா அஞ்சப் போகின்றான்? நின்று நிதானமாக அவன் தன் வேலையை முடித்துவிட்டு வெளியே வரும்பொழுது, கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்தாள் அங்கிதா.
‘இவளுக்கு எப்படி இந்த துப்பாக்கி கிடைத்தது?..’ என்று ஜோ யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அங்கிதா யோசிக்காமல் ஜோவின் இடது கையில் டமால் என்று சுட்டு விட்டாள்…
