அசுரன்-9

துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டு, மிகச்சரியாய் ஜோவின் இடது கையை பதம் பார்த்தது. மளமளவென வழிந்த ரத்தத்தைக் கண்டு அங்கிதா அதிர்ச்சியில் உறைந்திருந்தாள். 

 

பிற உயிர்களைக் காப்பாற்றுவதே தன் வாழ்வின் லட்சியம் என்று வாழ்ந்திருந்த ஒருத்தி, ஒரு உயிரைக் காவு வாங்குவதற்காக முதல்முறையாக துப்பாக்கியைப் பயன்படுத்தியதால், அவள் உடல் அறிவைத் துறந்து அனிச்சையாய் செயலாற்றிக் கொண்டிருந்தது.

 

ஜோ, “முட்டாள்… புல்லட் சவுண்ட் கேட்டு எல்லாரும் இப்ப வெளியில வந்திடுவாங்க. கன்ன‌ முதல்ல திருப்பிக்கொடு” என்று அவள் கையிலிருந்த ஆயுதத்தை உடனடியாய் அபகரித்தான்.

 

அந்தக் காதலனுக்கு தன் காயத்தை விடவும், அதை உருவாக்கிய காதலியே அத்தனை முக்கியமாய் தோன்றியிருக்கிறாள் போலும்!!..

 

ஜோ தன்னுடைய கைக்குட்டையை எடுத்து கையில் ரத்தம் வராத படி அழுத்திக் கட்டிக்கொண்டிருக்க, அதேநேரம் அங்கிதா வேகமாகத் தூரத்தில் ஓடிக் கொண்டிருந்தாள்..

 

கட்டு போடுவதையும் மறந்து, “ஏய்… போகதடி… நில்லு.. நில்லு…” என்று அவள் பின்னாலேயே கத்திக் கொண்டு ஓடி வந்தான் ஜோ.

 

அவன் தன் பின்னால் வருவது தெரிந்ததும் அவள் தன்னால் முடிந்தவரை வேகமெடுத்து ஓடத் தொடங்கினாள். சில நிமிடங்களுக்குப் பிறகு அவன் பின் தொடர்ந்து வரும் சப்தம் அங்கிதாவிற்குக் கேட்க வில்லை… 

 

‘காயத்தால் மயங்கி விழுந்திருப்பானோ?.. இந்நேரத்தில் இப்படி ரத்தத்தோடு கிடந்தால், காட்டு மிருகங்கள் எல்லாம் வாசனை பிடித்து வந்துவிடுமே?!..’ என்று உள்ளுணர்வு வேறு அவளைப் பரிதவிக்க வைத்தது‌.

 

ஆனாலும் தன் வேகத்தைக் குறைக்கக் கூடாதென்ற எண்ணத்தோடு கால் போன பாதையில் ஓடிக்கொண்டே இருந்தாள் அவள்.

 

மரங்களும் புதர்களும் நிறைந்த அடர்ந்த கானகம், கண் முன்னால் இருப்பது மனிதனா மரமா என்று தெரியாத அளவிற்கு இரவின் இருள், போதாக்குறைக்குப் பாதையை வழுக்கி விட இந்த மழை வேறு… 

 

இது அத்தனையும் சேர்ந்து அங்கிதாவை அச்சுறுத்த எந்த பக்கம் செல்வது என்பதே தெரியாமல், குத்துமதிப்பாக அவள் ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில், அவளின் தப்பிக்கும் முயற்சியைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் குறுக்கே ஓடிக் கொண்டிருந்தது ஒரு பெரிய ஆறு… 

 

‘இவ்வளவு பெரிய ஆற்றினை எப்படித் தாண்டி செல்வது?.. திரும்பிச் சென்றால் அவன் கூட்டத்திடம் மாட்டிக் கொள்வேனே..’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, 

 

ஓசை இல்லாமல் அவள் பின்னால் வந்து நின்ற ஜோ, “நான் வேணும்னா உனக்கு தப்பிக்க உதவி பண்ணட்டுமா பேபி?” என்று கேட்டான்.

 

அவன் குரல் கேட்ட அடுத்த நொடியே, தன்னை மறந்து பயத்தில், ‘வீல்…’ என்று அலறிவிட்டாள் அங்கிதா. 

 

“பயப்படாத செல்லம், நான் உதவி பண்றேன்” என்று ஜோ பேசிக் கொண்டிருக்க, அங்கிதா எதைப் பற்றியும் யோசிக்காமல் வேகமாய் ஓடும் அந்த ஆற்றில் பொத்தென்று குதித்துவிட்டாள்.

 

ஜோ இதைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.. அவள் குதித்து விட்டாள் என்று தெரிந்த அடுத்த கணமே, ஜோவும் அதே வேகத்தில் குதித்தான்…..

 

ஆற்றோடு போய்க் கொண்டிருந்த அங்கிதாவிற்கு, ஜோவும் குதித்துவிட்டான் என்பது தெரிந்துவிட்டது. ஆற்று நீரின் வேகத்தால் அதற்குமேல் அவளால் எதையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை..

 

வெள்ளத்தில் சிக்கிய சிற்றிலை போல நீரோட்டம், அவளைத் தான் திரும்பும் திசையெல்லாம் இழுத்துச் சென்றது…

 

அந்த சூழ்நிலையிலும் ஜோ அவளைப் பின்தொடரவே வழி தேடினான். தெய்வாதீனமாக அவனருகில் வந்த ஒரு மரக்கட்டையைப் பிடித்துக் கொண்டு, தன்னால் முடிந்தவரை முன்னோக்கிச் செல்ல முற்பட்டான்…

 

அவன் தன்னை சரியாகப் பின்தொடர்வது தெரியாத அங்கிதா, மிகவும் போராடி இறுதியில் ஓரிடத்தில் கரை ஒதுங்கினாள். அவ்விடம் பாறைகள் இன்றி, சாதாரண மண் பாதையாக இருந்தது. 

 

‘இனி தப்பித்துவிடலாம்..’ என்று எண்ணி நடக்க ஆரம்பித்தாள் அங்கிதா…

 

இருந்தாலும், ‘என்னோடு ஆற்றில் குதித்த ஒரு வேளை ஜோ என்னைக் கண்டு பிடித்து விடுவானோ?’ எனும் பயம் அங்கிதாவின் மனதில் இருக்கத்தான் செய்தது…

 

விருட்டென ஒரு பாறை மறைவுக்குப் பின்னால் அமர்ந்தவள், சுற்றும் முற்றும் ஜோ வருகிறானா? எனக் கொஞ்ச நேரம் வேவு பார்த்தாள். 

 

ஆனால் ஜோ வரவில்லை… மாறாக ஆற்றில் நீரோட்டம் முன்பைவிட இப்போது மூன்று மடங்காய் உயர்ந்திருந்தது.

 

‘சே.. எனக்கு ஏன் இப்படியெல்லாம் புத்தி யோசிக்கின்றது? இவ்வளவு பெரிய ஆற்று வெள்ளத்தில் அவன் நான் கரை ஒதுங்கும் அதே இடத்திலா ஒதுங்கிட முடியும்? 

 

உயிர் பிழைக்க, வேறு எங்காவது கரை ஒதுங்கியிருப்பான். இதற்கு மேலும் நாம் இங்கே உட்கார்ந்து நேரத்தைக் கடத்திக் கொண்டிருப்பது வீண்..

 

வேகமாக இந்த காட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும்..’ என்று நினைத்து அங்கிதா எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

 

பேய் மழையின் காரணமாக, மண்ணெல்லாம் சரிந்து விழுந்ததனால் ஆங்காங்கே நிறைய புதிய பாதைகள் தெரிந்தது..

 

‘இதில் ஏதாவது ஒரு பாதை என்னை மலையின் அடிவாரத்திற்குக் கூட்டிச் சென்றிடும்..’ என்ற நம்பிக்கையுடன் வேகவேகமாக இறங்கிக் கொண்டிருந்தாள்.

 

அப்பொழுது அவள் நடந்து கொண்டிருந்த பாதையில் திடீரென்று மண் சரியத் தொடங்கியது. மணல் சரிவு மெதுவாக தான் இருந்தது. என்றாலும், முன்னாலும் போகமுடியாமல் பின்னாலும் வரமுடியாமல் மிகச் சரியாக பாதி வழியில் நின்றிருந்தாள் அவள். 

 

அங்கிதா, ‘எப்படி இங்கிருந்து தப்பிப்பது?..’ என சிந்திக்கும் முன்பே, மணல் சரிவின் அகலம் அதிகமாக ஆரம்பித்தது. 

 

அது அந்த சிறு மானின் மனதில் பயத்தினை தோற்றுவித்தது‌. ஆற்றுக்கும் மணலுக்கும் நடுவே தான் வசமாய் சிக்கிக் கொண்டது புரிந்ததும், எப்படியாவது இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று எண்ணி தன் தொண்டை வரளக் கத்தினாள். 

 

அத்துவானக் காட்டில் அவளுக்குப் பதில் தர யார் வருவார்? 

 

அவளுக்குத் துணையாய் ஒரு ஆலமரம் மட்டுமே அங்கே இருந்தது. மணல் தன் பக்கம் சரியத் துவங்கும் முன் வேகமாக அருகிலிருக்கும் பெரிய ஆலமரத்தின் மேலே ஏறி விடலாம் என்று பார்த்தால், அம்மரத்தின் மேல் ஒரு பெரிய கரடி உட்கார்ந்து இருப்பதை இப்போதுதான் பார்த்தாள்.

 

அதுவே மணல் சரிவைக் கண்டு அஞ்சி நடுங்கியபடி அங்கே பதுங்கி இருந்தது. ஆனால் உயிர் பயத்தோடு இருக்கும் அங்கிதாவின் கண்களுக்கு, அந்தக் கரடி அவளையே முறைத்துப் பார்ப்பது போலத் தோன்றியது.

 

‘தற்போது கரடி பக்கமும் போக முடியாது.. மண்ணுக்குள்ளும் சிக்காமல் இருக்கவேண்டும்… வந்த பாதையிலும் போக முடியாது, ஆற்று வெள்ளம் அதிகமாகிவிட்டது.. இனி என்ன செய்வேன் நான்?’ என்று திக்குத் தெரியாமல் திக்குமுக்காடி நின்றிருந்தாள் அங்கிதா. 

 

அதே நேரம் தூரத்திலிருந்த ஈரம் சொட்ட ஓடி வந்த ஜோ, துப்பாக்கியால் கரடியின் அருகில் சுட்டான். உயிர் பயத்தில் கரடி மரத்திலிருந்து இறங்கி ஆற்றுப் பக்கம் ஓடியது.

 

துரித கதியில் அங்கிதாவை அங்கிருந்து அழைத்துச் சென்ற ஜோ, ஆல மரத்தின் விழுதினைக் கொண்டு மரத்தில் ஏற வழி செய்தான். மண் சரிவில் மரம் தாக்குப்பிடிக்காது எனத் தெரிந்தாலும், இப்போதைக்கு அவனுக்கு இதை விட்டால் வேறு வழியில்லை.

 

பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தவளை, “ம்.. ஏறு..” என்று அவன் அரட்டி விரட்டிட, அவசர அவசரமாய் மரத்தில் ஏறினாள் அங்கிதா. அவளைத் தொடர்ந்து அவனும் மரத்தில் ஏறினான்.

 

‘கரடியிடமிருந்து தப்பித்து புலியிடம் மாட்டிக் கொண்டேன்…’ என்று அங்கிதாவின் மைண்ட் வாய்ஸ் அவள் காதிற்குள் சத்தமாய் கதறியது…

 

பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனால் மண் சரிவு அவர்கள் இருந்த பகுதியை அவ்வளவாய் சேதப் படுத்தாமல் அப்படியே நின்றுவிட்டது. மரத்தின் வேரில் சிறு அசைவும் தோன்றாது போக, அதன் உச்சியில் உட்கார்ந்திருந்த இருவருக்கும் இப்பொழுதுதான் போன உயிர் திரும்பி வந்தது..

 

அவன் கையிலிருந்து இன்னும் ரத்தம் வழிவதை கண்டவள், “மன்னிச்சிடு ஜோ, தப்பிக்கனுன்ற நினைப்புல…” என்று சொல்லி முடிக்கும் முன்பாக பளாரென்று ஓர் அறை அவள் கன்னத்தில் வந்து விழுந்தது.

 

“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? அவ்வளவு உயரத்திலிருந்து அதுவும் அவ்வளவு வேகமாக பாயிற ஆத்து தண்ணியில போய் விழுந்துட்ட?

 

கம்பு கட்டைனு ஏதாவது சொருகியிருந்தா அப்ப தெரிஞ்சிருக்கும், காட்டு வெள்ளம்னா என்னனு. இப்ப கூட நான் இங்க வர ஒரு நிமிஷம் லேட்டாகியிருந்தா நீ என்ன கதியாகிருப்ப?…

 

ஒண்ணு, மண்ணு சரிஞ்சு செத்துப்போய் இருப்ப,  இல்ல கரடி அடிச்சு செத்துப்போய் இருப்ப. சின்ன சின்ன விஷயத்தைக் கூட சமாளிக்கத் தெரியாத நீயெல்லாம் ஏன் காட்டுக்குள்ள தப்பிச்சு ஓட நினைக்கிற…? 

 

அதுவும் இவ்வளவு பெரிய ஆபத்து இருக்கும் போது..” என்று பாய்ந்தோடும் காட்டாற்றினைச் சுட்டிக்காட்டினான்.

 

அங்கிதா திக்கித் திணறியபடி, “அதுக்குனு காலம் முழுக்க உங்க கூட்டத்துக்கு அடிமையா இருக்க முடியுமா?..” என்றாள்.

 

“வாய மூடு.. அடிமையாம்ல.. இன்னொரு தடவ என் பர்மிஷன் இல்லாம காலை முன்னால் தூக்கி வை. அப்ப தெரியும் இந்த ஜோ யார்னு…” என்று ஆவேசத்தோடு திட்டித் தீர்த்தான்..

 

அங்கிதாவும் பயத்தில் மேற்கொண்டு வாயைத் திறக்காமல் அமைதியாக இருந்தாள். 

 

அவளது அமைதி ஜோவின் கோபத்தைச் சற்றே கட்டுப்படுத்த, இழுத்துப் பிடித்த பொறுமையோடு, “இனிமே தப்பிக்க முயற்சி செய்யமாட்டேன்னு சத்தியம் பண்ணு..” என்றான்.

 

அவளோ அதிர்ச்சியாய், “என்ன?” என்றாள்.

 

“சத்தியம் பண்றயா இல்லையா?” என்றவனின் கண்கள் லேசாகக் கலங்கி விட்டது.

 

அங்கிதா அவனைப் பார்த்த முதல் நாளிலிருந்து இன்று வரை அவன் யாருக்காகவும் எதற்காகவும் கலங்கியது இல்லை. 

 

அவள் துப்பாக்கியால் சுட்டபோது கூட கலங்காமல் இருப்பதைப் பார்த்து, பயந்து தான் அவன் கேட்டதும் துப்பாக்கியை அவன் கையிலேயே திருப்பிக் கொடுத்தாள். 

 

அப்படிப்பட்டவன் இப்போது கலங்கிய கண்களோடு நிற்பதைக் கண்டதும் அவள் இதயத்தினுள் இனம்புரியாத ஒரு புதுவித உணர்வு உருவானது. அதை வருத்தம், கவலை, மனிதாபிமானம் என் எந்த ஒரு வரையறைக்குள்ளும் அவளால் நிறுத்த முடியவில்லை..

 

அவன் கண்களினுள் மூழ்கிக் கொண்டிருந்த அங்கிதா, ‘இவன் ஏன் இப்பொழுது அழுகிறான்? அவன் கண்ணில் தெரியும் வலி மரணத்திற்கு நிகராகத் தோன்றுகிறதே?! 

 

அவன் ஆழ்மனதில் பதியும்படியாக, நான் எப்போதும் அவனிடம் நல்லபடியாக நடந்து கொள்ளவில்லையே? 

 

எனில் என்மேல் உருவான அபரிமிதமான காதல்தான் இதற்குக் காரணமா? காதலெனும் ஒற்றை உணர்வு, அரக்க குணம் கொண்ட ஒரு மனிதனை இவ்வளவு கோழை ஆக்குமா? ..’ என யோசித்தபடியே இருந்தாள்.

 

எவ்வளவு முயன்றும் அவனது முகத்தையும் கண்களையும் விட்டு வேறு திசையில் அவளால் தன் பார்வையைத் திருப்ப முடியவில்லை…

 

ஜோ, “சத்தியம் பண்ணுடி…” என்று ஒரு சத்தம் போட்டதும், கனவுலகிலிருந்து விழித்தெழுந்தாள். 

 

அனிச்சையாய் அதுபோக்கில் உடல் நடுங்கிட, அவளின் வலது கரம் தன்னிச்சையாய் மேல் எழுந்து அவனுக்குச் சத்தியம் செய்து தந்து விட்டது.

 

நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஜோ, அடுத்த நொடியே அவளைக் கட்டியணைத்துக் கொண்டான். அவள் அந்த திடீர் அணைப்பின் காரணத்தை உணரும் முன்பே, ஜோ அங்கிதாவின் இரு கைகளையும் அவள் துப்பட்டாவால் கட்டிவிட்டான்.

 

“ஜோ.. என்ன பண்ற? நான் இப்ப எப்படி கீழ இறங்குறது? கைய கட்டாத ஜோ, இனி நான் தப்பிக்க ட்ரை பண்ணவே மாட்டேன்” என்று அவள் புலம்பிய அத்தனை வார்த்தைகளும் விழலுக்கு இறைத்த நீர்தான்.

 

பொம்மை போல அவளைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு, மரத்திலிருந்து இறங்கினான் ஜோ.

 

“வா..” என்று ஒற்றைச் சொல்லோடு, அவளை ஒரு நாய்க்குட்டி போல தன்னுடன் அழைத்துச் சென்றான்…

 

அவன் தனக்கு விருப்பமான பாதையில் அவளை இழுத்துச் செல்ல, ‘இதற்கு மேல் நான் என் செய்வேன் இறைவா? உயிரையே பணயம் வைக்கின்ற அளவுக்கு ஆற்று வெள்ளத்தில் குதித்து தப்பிக்க முயற்சித்து விட்டேன்..

 

அப்பொழுதும் என்னால் இவன் பிடியிலிருந்து தப்பிக்க முடியவில்லை. இதன்பிறகு என்னால் என்ன செய்து தப்பிக்க முடியும்? அவ்வளவுதான் எல்லாம் முடிந்து விட்டது..

 

கனவெதுதான் நிஜமெதுதான் உலகினிலே இவனை யார் வெல்லுவார்.. ஓ.. ஓகோகோ…’ என்று மனதிற்குள் பாட்டு பாடிய படியே அவனுடன் சென்றாள் அங்கிதா.

 

அப்போது அந்தப் பகுதியில் யாரோ சில பேர் சத்தமாகப் பேசிச் சிரித்தபடி நடந்து செல்கின்ற சத்தம் ஜோவிற்கு கேட்டது… 

 

உடனே சுதாரித்தவன், அங்கிதாவின் கையையும் வாயையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து நின்றான். மறைவில் இருந்த படியே ஜோ தன் கண்களை கூர் தீட்டிப் பார்க்க, காவலர்கள் சிலர் அந்க் காட்டில் உலவிக் கொண்டிருப்பதைக் கண்டுகொண்டான் அவன். 

 

‘இது நிச்சயம் இவள் போன் செய்ததால் வந்த வினைதான்..’ எனப் புரிந்துகொண்டான் ஜோ.

 

பொதுவாக சாதாரண மழை பெய்தாலும், இங்கேயே பிறந்து வாழும் மலை கிராமத்து மக்களே இந்த காட்டுக்குள் வரத் தயங்குவார்கள். அவ்வளவு ஆபத்தான பாதை கொண்டது இந்தக் காடு.

 

‘இவ்வளவு மழை பொழியும் போது, இருள் விலகாத இந்த நேரத்தில் போலீஸ் வந்து என்னைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் எனில், இது எனக்கான தேடுதல் வேட்டை கிடையாது. இவளுக்கானது..

 

அரசுக்கு ஏதோ ஒரு விதத்தில் இவளைத் திரும்ப அழைத்து வரச் சொல்லி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆதலால் என்னிடம் சப்பைக்கட்டு கட்டிவிட்டு, இந்த பக்கம் இப்படி ஒரு வேலையை ஆரம்பித்து இருக்கிறார்கள்..

 

ஆனது ஆகிவிட்டது, தற்போதைக்கு போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு எங்கேயாவது போய் ஒளிந்து கொள்ள வேண்டும்.

 

அவர்கள் சென்றவுடன் நம் கூட்டத்துடன் சென்று இணைந்து கொள்ள வேண்டியதுதான்.. அதுவரை இந்த ராட்சசி எந்த அடங்காப்பிடாரித் தனமும் செய்யாமல் இருக்க வேண்டும்…’ என்று எண்ணிக் கொண்டான் ஜோ.

 

காவலர்களைக் கண்டதும் அங்கிதாவும் தன் பங்குக்குத் துள்ளித் தாவி ஓசை எழுப்ப முயற்சி செய்தாள். அந்த அகாய சூரனிடம் அவளின் ஆட்டம் எடுபடுமா?

 

அங்கிதாவின் துப்பட்டாவில் கொஞ்சம் போலக் கிழித்து, அவள் வாயைக் கட்டி தூக்கிக் கொண்டவன் ஒரு பெரிய புதர் பின்னால் அவளை மறைத்து வைத்தான்.

 

அந்த புதர் அசைவதைப் பார்த்தவுடன் சில போலீஸ்காரர்கள் அதற்கு பக்கத்தில் வந்தனர். அவர்கள் வந்து பார்க்கும் பொழுது புதரினுள் விசித்திரமாக எதுவும் அவர்களுக்குத் தென்படவில்லை. 

 

மாயக்காரன் தன் மானோடு மறைந்துவிட்டான்..

 

சேரும் சகதியுமாய் இருக்கின்ற அந்த இடத்தில் தங்கத்திலான பிரேஸ்லெட் ஒன்று மிளிர்வதை அவர்களில் ஒருவன் பார்த்தான்.

 

அதன் மீது எந்த ஒரு சகதியும் படாமல் தூய்மையாய் இருந்தது. மண்ணின் மீது மேலோட்டமாக விழுந்து கிடந்த அதனைக் கண்டவுடன், அவன் உடனே தங்கள் குழுவின் தலைவனான பரத்வாஜிற்கு தகவல் தந்து விட்டான்.

 

எதிர் முனையில் இருந்த பரத்வாஜ், “அப்படினா அந்த பிரேஸ்லட் இன்னைக்குதான் அங்க விழுந்திருக்கனும்.. அங்கிதா அங்கதான் எங்கயோ இருக்குறா, நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வர்றேன். நீங்க கொஞ்சம் எஃபர்ட் போட்டு தேடுங்க…” என்றான்.

 

“ஓகே சார்…” என்ற காவலன், உடனிருந்த தன் நண்பர்களுக்கும் தகவலைப் பகிர்ந்தான்.

 

இதனைத் தூரத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஜோ, உச்சந்தலையில் பித்தம் ஏறியது போல் வெறியோடு அங்கிருந்து புறப்பட்டான்‌…

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!