அவளுக்கு எப்போதும் எதிலும் சுக்கிர திசை போலும். வெகு சுலபமாய் தன்னவன் மனதில் நுழைந்துவிட்டாள்.. அவனுக்குத்தான் பேடைக் குயிலின் பிரியம் பெற தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்க வேண்டியதாயிற்று..
பெரும் பிரயத்தனத்திற்குப் பிறகு பாவையின் பார்வையில் துளிர்விட்ட காதல், தளர்வின்றி வளரும் முன்பே காலத்தின் கோரப்பிடி வலுவாகிப்போனது.
‘எங்கே என் ஜீவன்..’ என்று தேடித் தவித்த ஜோ இறுதியாய் வந்து நின்ற இடம் பரத்வாஜ் வீடு.
பரத்வாஜ் , “கண்டுபுடிச்சு கூட்டிட்டு வந்து கஷ்டப்படுத்த போறயா?..” எனும் ஒற்றை வரியில் எதிர்காலம் உணர்த்தினான்.
“என் கையில பவர் இல்லனா, இந்தியாவோட எந்த மூலைக்குப் போனாலும் என்னால உயிர் வாழ முடியாது. நானும் ஆரம்பத்துல இருந்தே நீ அவ மேல காட்டுற அக்கறைய பார்த்துகிட்டு இருக்கேன்.
அவ உனக்கு எவ்வளவு முக்கியம்னு புரியுது, அவள நீயே நல்லா பாத்துக்க..” என்று சொல்லிவிட்டு வந்த வழியே திரும்பிப் போன ஜோவின் காதல் கண்டு, பரத்வாஜ் மனம் மெழுகாய் இளகிப் போனது.
“கொஞ்சம் நில்லு.. அங்கிதா மேல எனக்கு அக்கறை அதிகம், அதுக்குக் காரணம் அவள நான் என் தங்கச்சியா நினைக்கிறேன்.
என்னால உங்க காதலுக்கு ஒரு நல்ல வழிய காட்ட முடியும், உனக்கு விருப்பம் இருந்தா ரிஸ்க் எடுத்து இறங்கிப் பண்ணலாம்” என்றான் பரத்வாஜ்.
அவளோடு வாழ வேண்டும் என்ற ஆசை, ஜோவை பரத்வாஜோடு இணைய வைத்தது..
இணைந்த இரு கரங்களும் முதலில் செய்த வேலை, அதிகார பலத்தால் அநியாயம் செய்த அத்தனை அரசியல்வாதிகளின் தில்லு முல்லுகளையும் ஆதாரத்தோடு உலகின் பார்வைக்குக் கொண்டு வந்ததுதான்.
இரண்டாவது வேலை, ஜோவின் கூட்டத்தில் இருந்த அத்தனை பேருக்கும் மூன்று தலைமுறைக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து பாதுகாப்பான பகுதி நோக்கி இடம்பெயரச் செய்தனர்.
மூன்றாவது வேலை, இதுவரை அப்ரூவராக இருந்து ரகசியமாய் தகவலைத் தந்த ஜோ, தகவல் தந்த காரணத்தால் அடையாளம் தெரியாத ஆட்கள் மூலம் கொலை செய்யப்பட்டான் எனும் வதந்தி காற்றுவாக்கில் அரசியல் வட்டார ஆட்களுக்குப் பரப்பிவிட்டனர்.
அதை அவர்கள் கடுகளவும் சந்தேகிக்க முடியாதபடி போட்டோ ஆதாரங்கள் பரவ, ஜோ இறந்துவிட்டதாய் ஆதாரப்பூர்வமாய் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதே நேரம் காதோடு காது வைத்தாற் போல ஜோ கப்பல் மூலம் கடல் கடந்து சிங்கப்பூரை அடைந்திருந்தான்.
அவன் சிங்கப்பூரை வந்தடைந்ததும் செய்த முதல் காரியம், தன்னவளின் முகம் பார்க்கச் சென்றதுதான். பாவிமகள்.. ஒரே நொடியில் அவனை இனம் கண்டு கொண்டாள்.
ஆனபோதும் மந்திரம் போட்டது போல மறைந்து போனான் மாயக்காரன்.. விழிச் சிறையில் விழுந்தவனை வீதியெங்கும் தேடித் திரிந்தாள் அங்கிதா.
பேதையின் கண்ணில் கசிந்துருகிய காதலைக் கண்டு போதையுண்டானது மன்னவனுக்கு. மறுபடி மறுபடி அவன் மாயத்தனம் செய்து விளையாடிட, தேடித்தேடி மாய்ந்து போனாள் அங்கிதா.
மயக்கம் தீராமல் தவித்த ஜோ, போலீஸ்காரன் வீடு எனும் அச்சமின்றி இரவிலும் சுவரேறிக் குதித்தான். அசந்து உறங்கிக் கொண்டிருக்கும் அங்கிதாவை, தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு உறங்குவதில் அத்தனை ஆனந்தம் அந்தக் கள்வனுக்கு.
விளையாட்டு வினையாவது புரிந்த பரத்வாஜ், இதை இத்தோடு முடிவடையச் செய்ய முனைந்தார். அதற்குத்தான் இந்த அதிர்ச்சி வைத்தியம்..
முந்தைய சம்பவங்களை அங்கிதாவுக்கு சுருக்கிச் சொன்ன பரத்வாஜ், “ரொம்ப நாள் பிரிஞ்ச காதலர்கள் ஒண்ணு சேர்ந்திருக்கீங்க, இள ரத்தம், கொஞ்சம் அப்படி இப்படினு இருப்பீங்க.
எமோஷனல் ரொமான்ஸ்னு ஏகப்பட்ட படம் ஓடுமே, நாம ஏன் நந்தி மாதிரி நடுவுல நின்னுகிட்டு இருக்கனும்? டீசண்ட்டா வெளியில இருப்போம், கடைசியில வந்து பேசிக்கலாம்னு ஒதுங்கி இருந்தேன்.
ஆனா நீங்க? பாம்பும் கீரியும் தோத்துப் போற அளவுக்கு அடிச்சு புடிச்சு சண்டைப் படம் ஓட்டுறீங்க. உங்களால காதலுக்கான கெத்தே போச்சுடா. எப்ப சண்ட முடியுதோ அப்ப வந்து என்ன மீட் பண்ணுங்க, நான் காருக்கு போறேன்” என்று தலையிலடித்துக் கொண்டே வெளியேறினான்..
ஜோ, “ஐயோ பரத் போகாதடா, நான் ஒண்ணுமே பண்ணல.. நீ குடுத்த ஸ்கிரிப்ட் படி ஒழுங்கா ஆக்ட் பண்ணேன், இவதான் என்ன மொதல்ல அடிக்க ஆரம்பிச்சா..” என்று அங்கிதாவின் பக்கம் தன் சுட்டு விரலை நீட்டினான்.
அந்த விரலை அப்படியே பிடித்துக் கொண்ட அங்கிதா, “அவரு போயி ஆறுமாசமாச்சு கண்ணு..” என்றாள்.
“ஐயோ.. அம்மா.. என்ன யாராவது இந்த ராட்சஷிட்ட இருந்து காப்பாத்துங்களேன்..” என்று அங்கிதா கதையின் ஆரம்பத்தில் கதறியதைப் போலவே இப்போது ஜோ கதறினான்.
“ஹா..ஹா..” என்று வீரப்பா ரேஞ்சுக்கு வில்லத்தனமாய் சிரித்தவள், “அந்தக் கடவுளே வந்தாலும் எங்கிட்ட இருந்து உன்ன காப்பாத்த முடியாது ஜோ. இனி இஷ்டப்படி அடிப்பேன், தேவைப்பட்டா உதைப்பேன், மனசு மாறினா கடிப்பேன், என்னடா பண்ணுவ நீ?..” என்று ஏகத்திற்கும் ரவுடிசம் செய்தாள்.
ஜோ, “ஆமா, இது ஏ டயலாக்ல?!..” என்றான்.
அவள், “இனிமே அது ஏ டயலாக்..” என்று இல்லாத மீசையை முறுக்கிக் கொண்டிருக்க, பாத்ரூமிலிருந்து டப் டப்பென்று ஏதோ சப்தம் கேட்டது.
அங்கிதா யோசனையோடு, “என்ன சத்தம் அது?..” என்றாள்.
ஜோ குழைந்தபடி, “அதுதான் ஒரிஜினல் கெவின்..” என்றான்.
அங்கிதா, “அடப்பாவி, என்னடா செஞ்ச அவர?..”
“நீ பயப்படுற மாதிரி ஒண்ணும் பண்ணல பேபி, பத்து நிமிஷம் டாக்டரா நடிக்க பர்மிஷன் கேட்டேன். தரல, சரினு கொஞ்சமே கொஞ்சம் மயக்க மருந்து கொடுத்து தூங்க வைச்சுட்டேன்.
பாவம், இப்பதான் முழிக்கிறாரு போல. நீ போய் வெளியில இருக்குற ரெட் கலர் கார்ல ஏறு, நான் அவருக்கு டோர ஓப்பன் பண்ணி விட்டுட்டு ஓடி வந்திடுறேன்..” என்றான்.
“ஓகேடா..” என்று கட்டை விரலை உயர்த்தி ஒத்துழைப்பைத் தந்தவள், அவன் சொன்னபடியே ரெட் கலர் காரைத் தேடி ஓடினாள்.
சில வினாடி இடைவெளியில் ஜோவும் வந்துவிட, பரத்வாஜ் காரைக் கிளப்பினான். கார் கால் மணி நேர பயணத்திற்குப் பிறகு ஒரு அப்பார்ட்மெண்ட் அருகே நின்றது.
பரத்வாஜ், “இங்க ஆறாவது ப்ளோர்ல உங்களுக்கான வீடும், உங்களுக்கு தேவையான எல்லா பொருட்களும் ரெடியா இருக்கு. இன்னைல இருந்து ஜோ பேரு தனஞ்செய், ரெண்டு பேரும் அந்த பேர சொல்லி கூப்பிட பிராக்டிஸ் பண்ணிக்கோங்க..” என்றிட,
இடைமறித்த ஜோ, “என்னது தானம் செய்யனுமா? இந்த பேர் எனக்கு புடிக்கல, அழகா அர்ஜூன், அபிஷேக், ஆரவ்னு எனக்கு பேர் வை பரத்..” என்று மூஞ்சியைத் தூக்கினான்.
பரத்வாஜ், “அத உன் புள்ளைக்கு வை.. நானே எவனெவன் கையில கால்லயெல்லாமோ விழுந்து உனக்காக தரமான ஒரு டூப்ளிகேட் ஐடென்டிட்டி உருவாக்கியிருக்கேன். இது நொட்ட அது சொட்டனு வெறுப்பேத்திகிட்டு இருக்காத..” என்றிட, அங்கிதா அடக்கமாட்டாமல் சிரித்தாள்.
ஜோ, ‘சிரிக்கிறயா? சிக்கும் போது வச்சுக்குறேன்டி உன்ன..’ என்று சொல்வது போல ஓரக்கண்ணால் முறைத்துப் பார்த்தான்.
பரத்வாஜ், “வீட்டுக்குள்ள போய் அடிச்சுக்கோங்க, புடிச்சுக்கோங்க. இப்ப ஆட்டத்த கவனிங்க.. அங்கிதா, உன்னோட அம்மா அப்பாவுக்கு ஜோ ஏற்கனவே விஷயத்த சொல்லிட்டான், அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.
செல்வராஜ்ட்ட சொல்ல வேண்டியது மட்டும்தான் பாக்கி, ஆனா அவரு எப்படி ரியாக்ட் பண்ணுவாருனு தெரியல. என்ன இருந்தாலும் அவரு போலீஸாச்சே, அதனால ஜோவ நேரடியா அவரோட பேச வேண்டாம்னு சொல்லிருக்கேன்.
முதல்ல நான் போய் என்னால முடிஞ்ச வரை அவர கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்றேன். ஓரளவு நார்மலா பேசினார்னா அதுக்குப் பிறகு நீங்க பேசுங்க…” என்றான்.
அங்கிதா தயங்கியபடியே, “இன்னிக்கி மதியம் நான் வீட்டுக்கு போகலனா மாமாவும் அத்தையும் என்ன தேடுவாங்களே. என்ன பொய் சொல்றது?..” என்று கேட்டாள்.
பரத்வாஜ், “அத நான் பாத்துக்குறேன்மா.. நீங்க கொஞ்ச நாள் சோஷியல் மீடியா பக்கம் உங்க போட்டோவ கொண்டு வராம இருந்தாலே எல்லா பிரச்சனையும் சீக்கிரம் முடிஞ்சிடும். அத மட்டும் கவனமா நியாபகத்துல வச்சுக்கோங்க..
மத்ததெல்லாம் அப்பப்ப நியாபகம் வரும் போது சொல்றேன், பார்த்து பத்திரமா இருங்க” என்றவன், வீட்டுச் சாவியை அங்கிதாவின் கையில் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.
இருவரும் அவனுக்கு டாட்டா சொல்லி வழியனுப்பி வைத்துவிட்டு, தங்களின் புது வீட்டைத் தேடிச் சென்றனர்.. அது ஒரு ஒற்றை படுக்கை அறையிலான சின்னஞ்சிறு வீடு. இருந்தும் வீட்டிற்குத் தேவையான அத்தனை பொருட்களையும் பரத்வாஜ் முன்கூட்டியே வாங்கி வைத்திருந்தான்.
டிவி, கட்டில், கபோர்டு எனத் துவங்கி பால் பாக்கெட் வரை அத்தனையும் அங்கே இருந்தது. அங்கிதா கிச்சன் பக்கம் சுற்றிப் பார்க்க, ஜோ அலமாரிகளை ஆராய்ந்தான்.
லைசென்ஸ், பேங்க் டாகுமெண்ட், பாஸ்போர்ட், அங்கிதாவின் டாக்டர் சர்டிபிகேட் போன்ற முக்கியமான பொருட்கள் அனைத்தும் அலமாரியில் பத்திரமாக வைக்கப் பட்டிருந்தது.
படுக்கையறை முதல் பால்கனி வரை சுற்றிவிட்டு வந்த அங்கிதா, “எல்லாமே பக்காவா இருக்குடா..” என்றாள் ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கியபடியே..
“ஆமா பேபி, ஆனா வீடுதான் ரொம்ப சின்னதா இருக்கு. நான் டபுள் பெட்ரூம் கேட்டிருந்தேன், அந்த பரத் லூசு இத வாங்கித் தந்துட்டான். பரவாயில்ல, கொஞ்ச நாள் கழிச்சு நாம பெரிய வீடு வாங்கிப்போம்” என்றான் ஜோ.
“இதுக்கு பேருதான் தானம் கொடுத்த மாட்ட பல்ல புடிங்கி பாக்குறது. அவரே ஐயோ பாவம்னு நமக்கு உதவி செஞ்சிருக்காரு, அதுல குத்தம் சொல்றியேடா..” என்று ஜோவின் தலையில் செல்லமாய் ஒரு கொட்டு வைத்தாள்.
“யாரு? அவனா உதவி செஞ்சான்?.. நான்தான்டி அவனுக்கு உதவி செஞ்சேன்.. பிரணவ் தோட்டேவையும் அவன் கூட்டாளிகளையும் மாட்டிவிடுறதுக்கு ஏத்த மாதிரி ஏகப்பட்ட ஆதாரங்கள பரத் கையில கொடுத்தேன். அதையெல்லாம் தன் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணிட்டு, என்னைக் கொல்ல ஏகப்பட்ட லட்சத்தை லஞ்சமா வாங்கினான்.
பணம் கைக்கு வந்ததுக்குப் பிறகுதான், அந்த பரத் பக்கி நான் இங்க வர்றதுக்கு டிக்கெட்டே போட்டுச்சு. அப்பவும், என் தங்கச்சிக்கு விருப்பமில்லனா விட்ரனும்னு ஆயிரத்தெட்டு சத்தியம் கேட்டான். அன்னைக்கி நல்ல மூடுல இருந்ததால நானும் சத்தியம் செஞ்சு தந்துட்டேன்..
எனக்கு விலையா அவன் கைக்கு வந்த பணத்தையும், எட்டு வருஷ கடத்தல் பிஸினஸ்ல நான் சம்பாதிச்ச பணத்தையும் அப்படியே சிங்கப்பூருக்கு எடுத்துட்டு வந்திருந்தா, அந்த ‘மரீனா பே சாண்ட்ஸ்’ ஹோட்டலையே விலைக்கு வாங்கியிருக்க முடியும் தெரியுமா?
போனா போகட்டும்னு பாதிய கவர்ன்மென்ட் கையில கொடுத்துட்டு, மீதிய எனக்கு கீழ வேலை பார்த்தவங்களுக்கு ஆளுக்கொரு துண்டா பிரிச்சுட்டேன். அதுல ஒரு பங்க உனக்கும் எடுத்து வச்சேன், அந்த பணத்த வச்சு வாங்கின வீடுதான் இது..
என் பேபிம்மாவுக்கு இந்த குட்டி வீடு எப்படி சரிப்படும்? உன்ன ஒரு அரண்மனையில கொண்டு வந்து உட்கார வைக்கலனாலும் ஓரளவு பெரிய வீட்டுல தங்க வச்சிருக்கனும் நானு..” என்று உளறிய ஜோவை பின்னால் இருந்து கட்டிப் பிடித்துக் கொண்டாள் அங்கிதா.
“எனக்கு இந்த குட்டி வீடுதான் பிடிச்சிருக்கு ஜோ.. உண்மைய சொல்லனும்னா பதுங்குக் குழி போல, மரத்துக்கு கீழ ஒரு வீடு செஞ்சு வச்சிருந்தியே அதுதான் என் வாழ்க்கையிலயே எனக்கு ரொம்ப புடிச்ச வீடு.
ஏன் தெரியுமா? அங்க நாம ரெண்டு பேரும், எப்பவும் கைக்கு எட்டுற தூரத்துலதான் இருப்போம். இஷ்டப்படும் போதெல்லாம் கட்டிப் புடிச்சுக்கலாம், சண்ட வரும் போதெல்லாம் அடிச்சுக்கலாம்..” என்று பிதற்றியவளின் கண்களில் காதல் நிறைந்து வழிந்தது.
அடுத்த கணமே ஒற்றைக் கையால் அவளைத் தன் அணைப்பிற்குக் கீழ் கொண்டு வந்த ஜோ, மற்றொரு கையால் அவள் சற்று முன் திறந்து வைத்த ஜன்னல் திரைச் சீலைகளைத் திரும்ப மூடத் துவங்கினான்.
அபலைப் பெண்ணுக்கு அந்த அசுரனின் புத்தியில் ஓடும் அத்தனையும் தெளிவாய் தெரிய, அதரம் கடித்தபடி நாணி கோணினாள்.
காதலனின் ஆசைக்குத் தீனியே, வெட்கம் கொண்டு தலை சாயும் காதலியின் வதனம்தானே..
உள்ளே உறங்கிக்கிடந்த எரிமலையின் உஷ்ணம் தாங்காமல், செப்புச் சிலையென நிற்கும் செந்தாமரை தேகத்தாளின் பட்டுக் கன்னத்தில் தன் முத்த முத்திரையைப் பதித்தான் ஜோ.
முழுதாய் அவன் வசம் சென்றுவிட்ட பேதை, சரியெது தவறெது என்றெல்லாம் யோசிக்க மறந்து, இன்னொரு கன்னத்தையும் அவன் இதழுக்கு நேராகத் தூக்கிக் கொடுத்தாள்.
அங்கே இல்லம் எனும் சொல், இனிதே இன்னிசை பாடத் துவங்கியது..
பரத்வாஜ் எல்லா பிரச்சனைகளையும் முன் நின்று சரி செய்ய, அடுத்த வாரத்திலேயே ஜோசித்தும் அங்கிதாவும் முறைப்படி பெரியோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
அத்தனை பேரையும் தன் விரல் அசைவில் ஆட்டுவித்த அந்த மாயாவி, இன்று அமைதியே உருவாக ஒரு பொக்கே ஷாப் நடத்திக் கொண்டிருக்கிறான்.
அவனின் தர்ம பத்தினி, தன்னைப் போல சேவை மனம் கொண்ட ஒரு சிறிய மருத்துவமனையில் பகுதி நேர டாக்டராக பணியாற்றுகிறாள். இருவரின் அன்புக்கும் அத்தாட்சியாய், விரைவிலேயே அழகுப் பெண் குழந்தை ஒன்று அந்த வீட்டிற்கு வரவிருக்கின்றது..
தினமொரு வண்ணம் காட்டும் இம்மாய உலகுதனில், அன்பு ஒன்றே அத்தனை ஜீவராசிகளையும் கட்டி வைக்கும் அற்புத சக்தியென்று பறைசாற்றும்படி அவ்விரு காதல் பறவைகளும் அழகாய் தம் கூட்டில் சிறகடித்துப் பறந்தன..
(முற்றும்)
