அத்தியாயம் 02
அவர் கூறியதை கேட்டு ஒரு கணம் அதிர்ந்து போன நகுலனோ அப்போது தான் அவரது செவியில் இருந்த காதொலிக் கருவியை அவதானித்தான். அதை அவதானித்தபடியே,
“மிஸ்டர் நாதன் நீங்க தூங்கும் போது உங்க ஹியரிங் எயிட கழட்டி வச்சிருவீங்களா என்ன?”
என்றதும் அவரோ, “ஆமாம்ப்பா ” என்றார் ஆமோதிப்பாய்
நகுலனோ தொடர்ந்து “ஓகே இந்த மெடிசின்ஸ் ஏன் எடுத்துக்குறீங்க?”
என்று ஒரு மருந்து குப்பியை கையில் எடுக்க அதற்கு ஆரியநாதனோ,
“எனக்கு இரவு தூக்கம் போறது குறைவு அதுக்காக டாக்டர் சஜஷன் அதுசரி இதெல்லாம் ஏன்ப்பா நீங்க கேட்குறீங்க?”
என்று எதிர்க்கேள்வி கேட்க நகுலனோ தன் கையிலிருந்த மருந்தை ஒரு பொலித்தீன் கவரில் போட்டபடி, “தனா, இந்த ட்ரக் பத்தின டீடெயில்ஸ் எனக்கு வேணும் மேக் இட் பாஸ்ட்”
என்று வைகார்த்தனை அங்கிருந்து அனுப்பியவன் ஆரியநாதனிடம் திரும்பி, “மிஸ்டர் நாதன், உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் அது ரொம்ப டிஸ்டர்பிங்கா இருக்கலாம்”
என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அங்கு ஓடோடி வந்தான் ஆரியநாதனின் பேரனான ஆதித் சக்ரவர்த்தி, அதே பதற்றத்துடன்,
“கிரேன்ட்பா உங்களுக்கு ஏதும் ஆகலையே? நீங்க ஓகே தானே” என்று அவரை மேலிருந்து கீழ் ஆராய,
அவன் தோளளவு வளர்ந்த முடியை இறுகப் பற்றியிருந்தான் நகுலன், அத்துடன் நில்லாது அவனை வெளியே தரதரவென இழுத்து வந்தபடி,
“டேய்! யாருடா உன்ன கிரைம் ஸ்பாட்டுக்குள்ள விட்டது., இடியட் படிச்சவன் தானே நீ”
என்று கன்னத்தில் செங்குத்தாக இரண்டு அறைக் கொடுத்தவன்,
“உன் தாத்தனுக்கு என்ன இளமை திரும்புதா?இப்போ தான் இருக்கானா செத்தானானு பார்க்க அப்டியே க்ரைம் ஸ்பாட்ட கண்டமினேட் பண்ணிட்டு உள்ள வர்ற பன்னி”
என்று திட்ட ஆதித்தோ தனது தன்மானம் அடிப்பட்ட கோபத்தில், “நான் யாரு தெரியுமா?”
என்றதும் நகுலனோ, “ஏன் தெரியாது? நல்லா தெரியுமே ‘ட்ரிபிள் ஏ’ கம்பெனியோட ஒன் ஆப் போர்ட் மெம்பர்,
சக்ரா கிலோத்திங் பிரேண்டோட பவுண்டர் உள்ள இழுத்துட்டு கிடக்குற கிழத்தோட பேரன் வேற இன்னொன்னும் சொல்லட்டுமா? உன் கம்பெனிக்கு வேலைக்கு வர பொண்ணுங்கள படுக்க கூப்பிட்ற கேவலமான பிறவி”
என்று முடியை பிடித்து ஆட்ட ஆதித்தோ, “இதெல்லாம் தெரிஞ்சுமா அடிச்ச?”
என்றான் அதிர்ச்சியாக அதற்கு நகுலனோ தோளை குலுக்கியபடி, “இதெல்லாம் தெரிஞ்சனால தான் அடிச்சேன்”
என்றதும் ஆதித்தோ தலையை தேய்த்தபடி, “என்னடா மிரட்டுறீயா? உன்ன இப்போவே வேலைய விட்டு தூக்க முடியும்டா அடுத்த வேலை சோறுக்கே வழியில்லாம தான் நிப்ப”
என்றதும் நகுலனோ, “அப்டியா சார் ரொம்ப சந்தோஷம்,” என்று பவ்யமாக கைக்கூப்பியவன்
அடுத்தநிமிடமே, “டேய்! அடங்குடா சும்மா சும்மா கத்தினா வாய கிழிச்சிருவேன் பார்த்துக்க”
என்றது தான் தாமதம் அவன் அழைப்பேசிக்கு ஐஜியிடமிருந்து அழைப்பு வர, அழைப்பையேற்றவன், “ஹலோ! சொல்லுங்க” என்றான் ஒற்றை வரியில்
அத் தோரணையில் உயரதிகாரியின் மீதான பயமோ ஒரு மரியாதையோ ஒரு பொட்டளவு கூட இல்லை மாறாக அவன் குரல் தான் ஓங்கி ஒலித்தது.
இங்கு ஐ.ஜியோ, “மிஸ்டர் நகுலன், அவங்ககிட்ட கொஞ்சம்” என்று ஏதோ சொல்ல வர
இங்கு நகுலனோ, “எப்படி? தொட்டில்ல போட்டு தாலாட்டி புட்டிப்பால் கொடுக்கட்டுமா?”
என்று எரிந்து விழுக ஐ.ஜி விஜிதவோ, “நகுலன் அவங்க பிக் ஷாட்ஸ்” என்றதும் அவனோ
“ஓஹோ! அப்போ எங்க அப்பா என்ன தெருக் கோடில பிச்சை எடுக்குறாரா?” என்று நக்கலாக கேட்க விஜிதவுக்கோ வியர்த்துக் கொட்டியது. வியர்வையை துடைத்தபடி,
“அது அப்படியில்ல நகுல்.. அது எனக்கு தெரியும் ஆனா” என்று இழுக்க நகுலனோ அங்கிருந்து நகர்ந்தபடி,
“அது தெரிஞ்சனால தானே ஓய், எங்க அத்தைய கூட்டிக்கிட்டு நைட்டோட நைட்டா ஓடி போனீர்”
என்றதும் விஜிதவோ எச்சில் கூட்டி விழுங்கியபடி, “இப்போ பழைய கதை எதுக்குப்பா நம்ம எல்லாம் பேமிலி ஆச்சே”
என்றதும் நகுலனோ, “ம***ராச்சு, நான் உங்கள மாமான்னு கூப்பிட்ருக்கனா? இல்லைல,
இங்கே பாரும் எனக்கு என் மெத்தட்ல தான் கேஸ விசாரிக்க முடியும் முடிஞ்சா காப்ரேட் பண்ண சொல்லுங்க இல்லையா வேற ஆபிஸர போட்டு கேச விசாரிங்க ஐ டோன்ட் கேர்”
என்றதும் இப்போது அடங்கி போவது விஜிதவின் முறையானது., “சரி சரிப்பா உன் விருப்பப்படியே விசாரி”
என்றது தான் தாமதம், “குட் டெசிஷன்” என்று அவர் பதிலை எதிர்பாராமலேயே துண்டித்து விட,
விஜிதாவுக்கோ இங்கு ஒரு போரை முடித்த களைப்பு இதே சமயம் அவரது மனைவி சந்திராவோ, “விஜி, உங்களுக்கு டீயா? காபியா?” என்று கேட்க
விஜிதவோ, “ரெண்டும் வேணாம் எலி பாசனத்த கொடு குடிச்சுட்டு போய் சேருறேன்”
என்று முணுமுணுத்துக் கொண்டாரே தவிர கத்தி சொல்லவில்லை. கத்தி பேசி பூரிக் கட்டையால் அடி வாங்குவது யார்? அதனால் அமைதியாக இருந்துக் கொண்டார்.
இங்கு பெலிங்டன் பங்களாவில் பிணங்கள் ஒவ்வொன்றையும் அம்பியுலன்ஸ்கள் ஏற்றி செல்ல, ஹன்ஸா தான் அங்குமிங்கும் ஓடி தடயங்களை சேமிப்பதும் பிணங்களின் காயங்களை ஆராய்வதும் அடையாளப்படுத்துவதுமாக களைத்து போனாள்.
வைகார்த்தனனுக்கும் அதற்கு இணையாய் என்ன தான் வேலைகளிருந்தாலும் காதலியின் முக சுருக்கத்தையும் களைப்பையும் கவனிக்க தவறவில்லை. அவள் தலையை கோதி கொடுத்தவன்,
“என்ன ஹன்சு ரொம்ப கஷ்டமா இருக்கா? கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு ஒர்க் பண்ணலாமில்ல”
என்று போத்தல் நீரை பருக கொடுக்க, எங்கிருந்து கரடிக்கு மூக்கு வியர்த்ததோ,
” ஆமா நாளைக்கு பொறுமையா பண்ணா போதும் இப்போ என்ன அவசரம் ஹன்ஸா?” என்று அழுத்தமான குரல் கேட்க இருவரும் சட்டென விலகிக் கொண்டனர்.
குரலை செருமியபடியே அவளை ஒற்றை புருவமுயர்த்தி நக்கல் பார்வை பார்த்தவன், குரலோ ஒருவித இறுக்கத்துடன்
“எதுக்காக அந்த ஆதித்த கிரைம் சீனுக்குள்ள அல்லாவ் பண்ணீங்க?”
என்றது தான் தாமதம் இங்கு ஹன்ஸாவுக்கு மட்டுமல்ல அங்கிருந்த அத்தனை அதிகாரிகளுக்கும் பயத்தில் நா வறண்டு போனது. கோபம் வந்தால் தான் யார் என்ன என்று பார்க்க மாட்டானே,
அதுமட்டுமா அவனது குடும்பமும் ஆரியநாதனின் குடும்பத்தை போல செல்வாக்கான குடும்பம் தான் ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு காவல் துறையில் பணிப்புரிகிறான். கேட்டால், “எனக்கு புடிச்சத நான் செய்றேன் உனக்கு என்னடா வந்துச்சு?” என்று முகத்தில் அறைந்தாற் போல பதில் வரும் அதனாலோ என்னவோ
யாரும் அவனிடம் அதிகம் நட்பாக பழக மாட்டார்கள். அவனும் தன் வட்டத்துக்குள் நுழைய விடமாட்டான்., அதைமீறி நுழைந்தவன் வைகர்த்தனன் மாத்திரமே, வைகர்த்தனனுக்கும் நகுலனுக்கும் இடையில் எந்த ஒழிவு மறைவுமில்லை.
பள்ளிப்பருவம் தொட்டு இன்று வரை இருவரும் உனக்கு நீ எனக்கு நான் என்று வாழ்ந்து வர அதற்கிடையில் வைகர்த்தனுக்கும் ஹன்ஸாவுக்கும் காதல் வர நகுலனுக்கு ஏனோ உலகத்தில் தனித்து விடப்பட்ட உணர்வு,
அதற்காக தான் ஹன்ஸாவின் மீது வன்மத்தை கொட்டுகிறது இந்த கொடூர ஜந்து,
அவன் கேட்ட கேள்வியில் எல்லோரும் உறைந்து நிற்க முயன்று தைரியத்தை வரவழைத்த ஹன்ஸாவோ,
“அது வந்து சார்” என்று ஏதோ சொல்ல வர அவளது பேச்சை இடைமறித்த வைகர்த்தனோ,
“இல்ல மச்சி நான் தான் அவன.. அவன் தாத்தாவ பார்க்கணும்னு அழுததும் விட்டுட்டேன்”
என்று ஹன்சாவை காப்பாற்ற, நகுலனோ நக்கலாக அவனை பார்த்தவன், ஏதோ சொல்ல வர பங்களாவின் பின்புறத்திலிருந்து “வீல்” என்ற அலறல் சத்தம் கேட்கவும் நேரம் சரியாக இருந்தது.
நகுலன் உடனடியாக அவ்விடத்திற்கு விரைய அவனை தொடர்ந்து ஹன்ஸா மற்றும் வைகார்த்தனும் சென்றிருக்க, அங்கு அவர்கள் கண்ட காட்சி இரத்தத்தை உறைய வைத்தது.,
இங்கு அபர்ணதியின் வீட்டில், அபர்ணதி பெயருக்கேற்றாற் போல அத்தனை அழகு நெளிவு சுழிவான உடல், தேன் நிறக் கண்கள் இயற்கையிலேயே சிவந்த இதழ்கள் ஆனால் அத்தனை அழகிய பெண்ணவளின் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை., கல்யாண கலையில்லை.
எதையோ பறிக்கொடுத்த உணர்வு அவள் உள்ளத்தை பீடித்திருந்தது. கண்களில் ஒரு வெறுமை சுவரை வெறித்தபடி அமர்ந்திருந்தவளின் கைகளில் ஒரு புகைப்படம் அதை உள்ளங்கையில் சுருட்டி வைத்தபடி மெத்தையில் அமர்ந்திருக்க,
“அக்கா! அக்கா!” என்ற குரல் நிகழ்காலத்துக்கு அழைத்து வர, “ஹான் என்ன ரேவதி? என்ன ஆச்சு?”
என்றாள் பதற்றமாக அதற்கு ரேவதியோ அவளருகில் அமர்ந்தபடி, “ஒண்ணுமாகல, இன்னைக்கு தான் உனக்கு முகுர்த்தப் பட்டு எடுக்க போறோம் அதுக்கான எந்த சந்தோஷமும் உன் முகத்தில இல்லையே ஏன்?”
என்றதும் நதியோ மனதுக்குள், ‘எதுக்கு சந்தோஷப்படனும்? என்னத்துக்கு ஆசைப்படணும்? யாருன்னே தெரியாத ஒருத்தனுக்கு பலியாடா போறத நினைச்சு சந்தோஷப்படணுமா என்ன?’
என்று நினைத்துக் கொண்டவள், “அதெல்லாம் ஒண்ணுமில்ல ரேவு லைட்டா தலைவலி அதான்”
என்றாள் சமாளிப்பாக அதற்கு ரேவதியோ, “சரி அதைவிடு மாமா எப்படி ரொமான்டிக்கா? உனக்கும் அவருக்கும் ஒரே டேஸ்ட்டா? என்ன டிஷ் பிடிக்கும்?”
என்று சித்தி மகள் அடுக்கடுக்காய் கேள்வியை அடுக்க நதியோ சட்டென கோபத்திலும் அழுகையிலும்,
“தெரியாது ரேவு எனக்கு ஒண்ணுமே தெரியாது அந்த மனுஷன் கூட நான் நாலுவார்த்தை கூட ஒழுங்கா பேசுனது கிடையாது”
என்று உடைந்து அழுதேவிட்டாள். அவளுடைய நிச்சயதார்த்தத்தின் போது நடந்த நிகழ்வை நினைவு கூர்ந்தவளுக்கு இன்னும் அவன் கூறிய வார்த்தைகள் காதில் எதிரொலித்தது.
“இங்கே பாரு உனக்காக எல்லாம் எனக்கு செலவழிக்க முடியாது., இண்டிபெண்டன்ட் வூமன் தானே நீயே சம்பாரிச்சுக்கோ உனக்கு தேவையானத வாங்கிக்கோ ஐ டோன்ட் கேர், சும்மா நகுல், கோகுல்னு அட்டை பூச்சி மாதிரி உறிஞ்சலாம் இளிச்சவாயன் மாட்டிட்டான்னு நினைச்ச அவ்ளோ தான் பார்த்துக்க”
என்றதும் அவளோ, “சரிங்க ஸார்” என்றதும் நகுலோ, “பார்றா அறிவுள்ள பொண்ணா இருக்கு, அப்பறோம் மூவி போறது, மால் போறது, லேட் நைட் கால்ஸ் இதெல்லாம்”
என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே அவளோ, “ம்கூம், அதுக்கெல்லாம் ஆசைப்படமாட்டேன் உங்கள தொந்தரவு பண்ணவும் மாட்டேன்”
என்றதும் அவனோ, “குட் கேர்ள் இதெல்லாம் லீகலா ஒரு காண்ட்ரேக்ட்டா எழுதி சைன் பண்ணிருவோம் இன்னும் ரெண்டு மூணு இருக்கு அது வெட்டிங் அன்னைக்கு ப்ரிண்ட் பண்ணி எடுத்து வாரேன் ரெண்டு பேரும் பேசி மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்க்கு வந்து சைன் பண்ணலாம் என்ன சொல்லுற?”
என்று கேட்க அபர்ணதியோ சரியென தலையசைத்து வைத்தாள்.
இவற்றையெல்லாம் கேட்ட ரேவதியோ, “அக்கா உனக்கு அறிவிருக்கா? இதுக்கெல்லாம் ஏன் சரின்னு சொன்ன? அது சரி இதெல்லாம் பெரியம்மாவுக்கு தெரியுமா?”
என்றதும் அபர்ணதியோ இல்லையென்னும் விதமாக தலையசைக்க நெற்றியை பற்றிக் கொண்ட ரேவதியோ, “இது என்ன சீரியலா? சினிமாவா? அவன திருத்தி கூட வாழ”
என்றதும் அபர்ணதியோ, “எனக்கு தெரியல ஆனா அம்மா அப்பாவுக்கு இந்த கல்யாணம் நடந்தாகணும்”
என்று பெருமூச்செறிய ரேவதிக்கோ ஒன்றுமே புரியவில்லை.
இங்கு ஏரியில் கண்ட காட்சியை ஜீரணிக்கவே நகுலனுக்கு ஒரு நிமிடம் தேவைப்பட்டது. உடனே சுதாரித்துக் கொண்டவன்,
“ஹன்சா இந்த மொத்த இடத்தையும் சீல் பண்ணுங்க இங்கே இருந்து எந்த இன்போர்மேஷனும் வெளியே போகக் கூடாது. இந்த எஸ்டேட்க்குள்ள யாரும் இனி வரக் கூடாது அடுத்து இனி அம்புலன்ஸ் மட்டுமில்ல புல்லி கவர்ட் வேகிகள்ஸ்
அதாவது டீப்பார்ட்மண்ட் வேகிகள்சயும் யூஸ் பண்ண சொல்லுங்க இட்ஸ் மை ஆர்டர் இங்கே உள்ள அத்தனை பாடிஸ் பத்தின இன்போர்மேஷன வேகமா கலெக்ட் பண்ணுங்க”
என்றவன் கண்டது சாதாரண விஷயமல்ல ஒன்றல்ல இரண்டல்ல இருபதிற்கும் மேற்பட்ட பிணங்கள் ஒவ்வொன்றும் வெள்ளைத்துணியால் சுற்றப்பட்டிருக்க நகுலனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதனால் அதற்கான விடையை தேடி மறுபடியும் ஆதித் இருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தான்.
அவனை தீர்க்கமாக பார்த்தபடி, “இங்கே பாரு நான் கேட்குற கேள்விக்கு பொறுமையா யோசிச்சு பதில் மட்டும் சொல்லு குறுக்க குறுக்க பேசுனா எனக்கு பிடிக்காது ஓகே”
என்றவன் பெருமூச்செறிந்தபடி, “சொல்லு, நீ தான் கெட் டூ கெதர் ஆர்கனைசரா?”
என்றதும் ஆதித்தோ, “யெஸ் சார்” அதனை தொடர்ந்து நகுலனோ,
“ஓகே, வழமையா டிசம்பர் வைக்குற கெட் டூ கெதர ஆகஸ்ட் வச்சதுக்கான ரீசன் என்ன?”
அதற்கு ஆதித்தோ, “ரெண்டு ரீசன் ஸார், ஒன்னு எங்க அக்கா அனுஷா அவ பேமிலியோட அமேரிக்கா மூவ் ஆகுறா, அப்பறோம் புதுசா ஒரு இன்ஸிட்டிட்யூட் ஆரம்பிச்சிருக்கோம் அதனால தான்”
என்றதும் நகுலனோ, “ஓகே,உன்னோட தம்பிமார், அதான் ஆர்னவ் அண்ட் ஆரோன் எங்க?”
என்றதும் ஆதித்தோ, “அவங்க ரெண்டு பேரும் அக்காவ செண்ட் ஆப் பண்ண எயார்போர்ட் போய்ட்டாங்க”
என்று கூற நகுலனோ சந்தேகமாக, “அப்போ நீ ஏன் போகல?” அதற்கு பதில் சொல்ல தயங்கியபடி திருதிருவென விழித்த ஆதித்தின் முன் சொடக்கிட்டு
“வை? ரீசன் சொல்லு இல்லன்னா கேஸ் உன் பக்கம் தான் திரும்பும் ஒழுங்கா பதில் சொல்லுறீயா?”
என்றதும் அவனோ தயங்கி தயங்கி காரணத்தை கூற நகுலனுக்கோ ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஓங்கி மீண்டும் கன்னத்தில் ஒரு அறை விட்டவனுக்கு கோபம் அடங்கியபாடில்லை.
தொடரும்…
