அத்தியாயம் 5
லவ் யூ அம்மா…
என்றும் இல்லாமல் இன்று அலுவலகத்தில் பைரவிக்கு வேலை நிறைய இருக்கவே, அதை அவள் முடித்துவிட்டு வருவதற்கே மாலை 6 மணியைத் தாண்டியது.
“ஏய்… தாரா, சாரிடி! கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்றவாறே தன் பேக்கை எடுத்துக்கொண்டு அக்னி பைரவி ஓடிவர, அவளை முறைத்துப் பார்த்த தாரா,
“இப்போ டைம் என்னனு தெரியுமா? ஆல்ரெடி ரொம்ப நேரம் ஆகிடுச்சு. அங்க அவங்க எல்லாம் ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. சீக்கிரம் வா, போன் மேல போன் வந்துகிட்டு இருக்குது” என்று தாராவும் அவசரப்படுத்த, பைரவியும் வேகமாக ஓடிவந்து காரில் ஏறினாள். காரும் அந்த இடத்திலிருந்து வேகமாகப் புறப்பட்டுச் சென்றது.
அவர்களின் அலுவலகத்திலிருந்து அரை மணி நேரப் பயணத்திற்குப் பின், கார் அந்த நகரத்தின் ஒரு முக்கியப் பகுதியில் அமைந்திருந்த ஆதிநாதன் நாட்டியாலயாவின் முன் வந்து நின்றது.
காரிலிருந்து இறங்கியவர்கள் அவசர அவசரமாக நாட்டியாலயாவிற்குள் செல்ல, அங்கு இவர்களுக்காக நிறைய குழந்தைகள் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு வாசலையே பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். அப்போது உள்ளே வந்த பைரவியை பார்த்ததும் அனைவரின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. பைரவியும் அவர்களைப் பார்த்து அன்போடு புன்னகைத்துவிட்டு,
“என்ன குட்டீஸ், எல்லாரும் கொஞ்சம் சீக்கிரமாவே வந்துட்டீங்க போல?” என்று ஆச்சரியமாகக் கேட்க,
“ஆமா மிஸ்… இன்னைக்கு நீங்க முக்கியமான ஸ்டெப்ஸ் எல்லாம் சொல்லி தரேன்னு சொல்லி இருக்கீங்க, அதான் நாங்க எல்லாரும் சீக்கிரமா வந்துட்டோம். ஆனா… இன்னைக்கு நீங்கதான் ரொம்ப லேட்டா வந்து இருக்கீங்க!” என்று அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு குட்டி வாண்டு, பைரவியைக் கேலி செய்யும் விதமாகக் கூறியது.
‘இது உனக்கு தேவையா?’ என்பது போல் தாரா பைரவியைப் பார்த்துச் சிரிக்க,
“நீ மூடு…” என்று தாராவைத் தன் கண்களாலேயே அடக்கிய பைரவி,
“சாரிடா செல்லங்களா… இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு…” என்று கெஞ்சலாகக் கூறினாள்.
“ஹான்… அது எப்படி? நாங்க எல்லாம் லேட்டா வந்தா நீங்க எங்களுக்குப் பனிஷ்மென்ட் தர்றீங்கள்ல? அதே மாதிரி இன்னைக்கு நீங்க லேட்டா வந்ததுக்கு பனிஷ்மென்ட் அனுபவிச்சே ஆகணும்” என்று அதே குட்டி வாண்டு கூறியது.
“என்ன பையூ… இந்த அனன்யா உன்னால ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கா போல!” என்று கூறி தாரா உதட்டை மடித்துச் சிரிக்க, அவளை ஒருமுறை முறைத்த பைரவி, அந்த வாண்டின் புறம் திரும்பினாள்.
“அடியே குட்டி பிசாசே… என்னடி ரொம்ப ஓவரா பேசுற?” என்று பைரவி செல்லக் கோபமாகக் கூற,
“அப்படித்தான் பேசுவேன்!” என்று அனன்யாவும் பைரவியைப் பார்த்து முறைத்தாள்.
“இவளே…” என்று பைரவி அனன்யாவை நெருங்க,
“ஏய் பையூ… என்னடி பண்ற?” என்று அவளின் கை பிடித்துத் தடுத்த தாரா, தன் கண்களை அந்த இடம் முழுக்கச் சுழல விட்டாள். அப்போதே தான் இருக்கும் இடத்தை உணர்ந்த பைரவி, அனன்யாவை முறைத்துவிட்டு மற்ற குழந்தைகள் பக்கம் திரும்பினாள்.
“சாரிடா செல்லங்களா… ஜஸ்ட் 5 மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க, இதோ வந்துடுறேன்” என்ற பைரவி, ஆசிரியர்களுக்கான அறைக்குச் சென்று அடுத்த 5 நிமிடங்களிலேயே நாட்டியமாடுவதற்குத் தகுந்தாற்போல் சேலை கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.
அங்கு அழகிய தேவதைகள் போல் வரிசையாக நின்றிருந்த குழந்தைகளைப் பார்த்து அன்பாகப் புன்னகைத்தவள், அவர்கள் அருகே சென்று அனைவரையும் ஆசை தீரக் கொஞ்சி தீர்த்துவிட்டு தன் வகுப்பை தொடங்கினாள். இவ்வளவு நேரமும் இவள் குழந்தைகளைக் கொஞ்சுவதையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அனன்யாவை திரும்பிப் பார்த்த பைரவி,
“என்ன, மகாராணிக்கு மட்டும் தனியா வெத்தலை பாக்கு எல்லாம் வச்சு கூப்பிடணுமோ?” என்று முறைப்புடன் கேட்க, அவளிடம் தன் முகத்தைச் சுளித்துப் பழிப்பு காட்டிய அனன்யா, அந்த வரிசையில் நடுநாயகமாக வந்து நின்றுகொண்டாள். பைரவி அந்த குழந்தைகளுக்குத் தன் நடனக்கலையைக் கற்றுக்கொடுத்தாள்.
(ஆதி தாள ஜதிகள் மற்றும் ஸ்வரங்களை) சின்னஞ்சிறு மொட்டுகளுக்கு மிகவும் பொறுமையாக ஜதி, ஸ்வரம் என அனைத்தையும் பார்த்துப் பார்த்துப் பைரவி சொல்லிக்கொடுக்க, இவ்வளவு நேரம் பைரவியை முறைத்துக் கொண்டிருந்த 6 வயது சிறுமி அனன்யா, அனைவருக்கும் நடுவில் அழகாக அபிநயம் பிடித்து ஆடினாள். அவளை ரசித்தவாறே பைரவியும் குழந்தைகளுக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்தாள்.
குழந்தைகளுக்கு ஒரு மணி நேரம் நடனம் கற்றுக்கொடுத்த பைரவி, அடுத்து 18, 19 வயதுடைய இளம் பெண்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தாள்.
இப்படியே கிட்டத்தட்ட மூன்று, நான்கு மணி நேரம் போக, நேரத்தைப் பார்க்கமல் போக, தாராவும் அனன்யாவுடன் விளையாடியதில் நேரத்தைக் கவனிக்காமல் போனாள்.
“ஓகே கேர்ள்ஸ், இன்னைக்கு இது போதும். மீதியை நாளைக்கு பார்த்துக்கலாம். எல்லாரும் வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுங்க. அப்புறம் இன்னும் நல்லா பிராக்டிஸ் பண்ணுங்க. ஏன்னா காம்பெடிஷனுக்கு ரொம்ப நாள் எல்லாம் டைம் இல்லை. நமக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் டைம் இருக்கு, அதனால நல்லா பிராக்டிஸ் பண்ணா தான் நம்ம அந்த காம்பெடிஷன்ல ஜெயிக்க முடியும்” என்று பைரவி கூற,
“ஓகே மேம்…” என்று அந்தப் பெண்கள் அனைவரும் கூறினார்கள். அவர்களைப் பார்த்து அன்பாகப் புன்னகைத்த பைரவி, எதேச்சையாக நேரத்தைப் பார்க்க, நேரமோ 9.30 என்று காட்டியது.
“ஓ ஷிட்…” என்று தன் தலையிலேயே அடித்துக்கொண்ட பைரவி,
“ஓகே கேர்ள்ஸ்… ரொம்ப நேரம் ஆகிடுச்சு, நான் கிளம்புறேன். நீங்க எல்லாரும் விடாம பிராக்டிஸ் பண்ணுங்க, புரியுதா?” என்க, அந்தப் பெண்களும் புரிகிறது என்று தலையாட்டினார்கள்.
“ஓகே, நான் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்த ஆபிஸ் அறைக்குள் சென்றவள், அங்கிருந்த ஒரு ஆசிரியரிடம் சில தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டாள். பின்பு உடை மாற்றும் அறைக்குச் சென்று தன் பழைய ஆடையை மாற்றி விட்டு வெளியே வர, அங்கு தாராவும் அனன்யாவும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
“வாட்ஸ் திஸ் தாரா?” என்று பைரவி தன் இடுப்பில் கைவைத்துக் கொண்டு கோபத்தோடு கேட்க, இவ்வளவு நேரம் தாராவுடன் சிரித்து ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்த அனன்யா, பைரவியைப் பார்த்ததும் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவளைப் பார்த்து அழகாகப் புன்னகைத்த பைரவி, அனன்யாவின் அருகே சென்று அவள் உயரத்திற்குக் குனிந்து,
“ஏன் என் அனன்யா குட்டி கோபமா இருக்காங்க?” என்று அவள் தாடையைத் தன் புறம் திருப்பி கேட்க, அந்த குட்டி வாண்டோ பைரவியின் கையைத் தட்டிவிட்டு,
“தாரா… என்கிட்ட யாரும் பேசத் தேவையில்லை. என்மேல அக்கறை இல்லாத யாரும் எனக்கு வேண்டாம், அவங்களை போகச் சொல்லு!” என்ற அனன்யா மீண்டும் தன் முகத்தைத் திருப்பிக் கொள்ள, பைரவியின் முகம் சட்டென்று வாடிப்போனது.
“அனன்யா… எதுக்கு உனக்கு இந்த கோபம்? பாவம் அவ! நீ மட்டும் அவளைப் பார்க்காம கஷ்டப்படல, அவளும் உன்னைப் பார்க்காம ரொம்ப கஷ்டப்பட்டா, தெரியுமா?” என்று தாரா கூறினாள்.
“நிஜமாவா?” என்று தன் குண்டு கண்களை உருட்டி அனன்யா கேட்க,
“நிஜமாத்தான்! உனக்கு நம்பிக்கை இல்லைனா இதைப் பாரு…” என்று நாட்டியாலயாவிற்கு வரும் வழியில் அத்தனை அவசரத்திலும் பைரவி அனன்யாவுக்காக வாங்கிய சாக்லேட்களை அவளிடம் காட்டினாள் தாரா.
“வர்ற வழியில இத வாங்கிட்டு வரத்தான் அவ்வளவு லேட், தெரியுமா? அவ உன்மேல உயிரையே வச்சிருக்காடி. அப்படி இருக்கும்போது நீ இப்படி அவகிட்ட கோச்சுக்கிட்டா அவ என்ன பண்ணுவா சொல்லு?” என்று தாரா அந்தச் சின்னஞ்சிறு மொட்டிடம் கேட்க, அடுத்த நொடியே அனன்யா,
“லவ் யூ அம்மா…” என்று ஓடிச்சென்று அவள் கால்களைக் கட்டிக்கொண்டாள்.
இவ்வளவு நேரம் வாடிய முகத்தோடு அமர்ந்திருந்த பைரவி, அனன்யாவின் ‘அம்மா’ என்ற அழைப்பில், கண்களில் கண்ணீரோடு திரும்பி அவளைப் பார்த்தாள். அனன்யாவோ பைரவியைத் தன் உயரத்திற்குக் குனியுமாறு கூறி, அவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு,
“சாரி அம்மா… இனிமேல் நான் உங்க மேல கோபப்படவே மாட்டேன். நீங்க அழாதீங்க!” என்று கூறினாள். அந்தச் சின்னஞ்சிறு மொட்டின் வார்த்தையைக் கேட்டுத் தன் கண்களிலிருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு, அவள் முகம் முழுக்க முத்தமிட்டுக் கொஞ்சி தீர்த்தாள் அக்னி பைரவி!
யார் இந்த அனன்யா? அனன்யா பைரவியின் குழந்தையா? பைரவி திருமணம் வேண்டாம் என்று சொல்வதற்கு இந்த அனன்யா தான் காரணமா? அனன்யாவின் தாய் பைரவி என்றால் தந்தை யார்? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்…
தீராத காதல் தீயாக மோத…
