காதல் கணம்-9

காதல் கணம் 9

அப்போது தான் அவள் தன்னை தவறாக நினைத்து விடுவாளோ என்கிற பயம் எழுந்தது அவனிடம். முன்பு கேட்ட கேள்வியை முதலுதவி செய்து ஆபத்துக் கட்டத்தை தாண்ட வைக்கும் விதமாய், “ம்? அது வந்து பிரச்சனை எதுவும் இல்லையேன்னு கேட்டேன்.” என்று சமாளித்தான்.

மனதிற்குள்ளிருப்பதை எல்லாம் யாரிடமாவது சொல்லவேண்டி இவ்வளவு நாள் தவித்துக் கொண்டிருந்தவள் கைக்குட்டையால் வாயை மூடி அழுதாள்.

“ப்ளீஸ் ஷ்ரதா. அழாத. சொல்ல விருப்பமில்லைனா விட்டிரு.” என்றவன் கிளம்ப ஆயத்தமாகவும்,

“இல்ல ஷிவாத்தான்” என்று தடுத்தவள், மீண்டும் விழிகளை நனைத்தாள்.

ஆனாலும் அழகாய் தான் தெரிந்தாள் ஷ்ரதா. அவனால் அவளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. ‘ஆல்வேஸ் யூ ஆர் மை குயின்’ என்று நினைத்துக் கொண்டான்.

அருகில் நிற்பதால் அதிகமாய் கவனித்தான் அவளை. நெஞ்சில் தொங்கிய தாலியோ அவன் கன்னத்தில் பட்டென்று அறைந்தது.

தன்னைப்போலவே அவளும் தன்னை பார்த்திருக்கிறாள் என்பதை இயல்பாய் அவள் பிரசாதத்தை நீட்டிய போது புரிந்து கொண்டான். அலட்டாமல் அவள் நீட்டிய திருநீற்றை வாங்கி நெற்றியில் பூசிக்கொண்டான்.

அப்போது பக்கத்தில் ஒரு பெண் வந்து நிற்கவும் இருவருமே கவனம் சிதறினார்கள். வந்தவள் லிப்ஸ்டிக் போட்ட சுடிதாரினியாக இருக்கவும் ஷ்ரதாவின் தோழியாக இருப்பாள் என்று எண்ணிக்கொண்டான் சிவனேஸ்வரன்.

அவள் அவனை அளவிடும்விதமாய் பார்த்தாள். என்னதான் பிரபல நாவல்களில் வருணிப்பது போலவே அவன் களையான முகம், சற்றே தடித்த மென்உதடுகள், உதட்டை பாதி மறைத்தவாறு அடர் மீசை, கூர் நாசி, அலை அலையாக கேசம், ஆகிருதியான தோற்றம் என்று அம்சமாக இருந்தாலும், இவனால் ஆக வேண்டியது ஒன்றுமில்லை என்பது போல் ஷ்ரதாவிடம் திரும்பினாள் அப்பெண்.

“என்ன மேடம் எப்படி இருக்கீங்க?” என்று எகத்தாளக் குரலில் நலம் விசாரித்தவளின் தொனி அவளை ஷ்ரதாவின் அணுக்கத் தோழியாக காண்பிக்கவில்லை அவனுக்கு.

“என்ன ஷ்ரதா சாமிக்கிட்ட வேண்டுதல் பலம் போல? ஹாஹாஹா. யார் என்ன நினைச்சாலும் அடுத்து நடக்க இருக்கிறதை யாராலயும் தடுக்க முடியாது” என்று தொடர்ந்து இப்படித்தான் பேசினாள் அப்பெண்.

‘ஏன் ஷ்ரதா இவக்கிட்ட அமைதியா இருக்கா? பார்க்க பெரிய இடத்துப்பொண்ணு மாதிரி இருக்கா. ஆனா பேச்சு தரலோக்கலா இருக்கே’ என்று நினைத்தபடியே தொண்டையை கொஞ்சம் கனைத்தான் சிவனேஸ்வரன்.

அந்த ராங்கியின் விழிகளோ பெண்டுலம் போல் ஆடியது. “நான் சொல்லல? எங்கப்பா ஒரு விஷயத்தை நினைச்சா முடிச்சிருவாருன்னு. வீசி மேரேஜ்க்கு ஓகே சொல்லிட்டாரு. என் வேண்டுதலை துர்காம்மா நிறைவேத்தி கொடுத்ததால தான் எல்லாருக்கும் சர்க்கரை பொங்கல் கொடுத்துட்டு இருக்கேன். ம், நீயும் வாங்கிக்கோ” என்று வம்படியாய் அவள் கையில் தொண்ணையை திணித்தாள்.

சிவனேஸ்வரன், “ஹலோ! நீங்க யாரு? ஏன் பொது இடத்துல வந்து இப்படியெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க?” என்று அதட்ட,

“ம்? மேடம் கிட்ட கேளுங்க, சொல்லுவாங்க.” என்றவள் தன் மார்பில் வழிந்த கூந்தலை முதுகில் போடுகிறேன் பேர்வழி என்று சிவனேஸ்வரனின் முகத்தில் போட்டு விட்டுப்போனாள்.

அவன் அவள் கிளம்பியவுடன், “சரியான ராங்கிக்காரியா இருப்பா போலயே ஷ்ரதா? யாரிந்தப் பொண்ணு?” என்று வினவ, ஷ்ரதாவின் கண்களிரண்டும் அருவியை பொழிந்த வண்ணமிருந்தன.

அவனோ பதறிப்போனான்.

அருகில் வந்து அவள் தோளை உலுக்கி, “ஷ்ரதா, என்னாச்சு? யார் இந்தப்பொண்ணு? நீ ஏன் இப்படி அழற?” என்று ஆற்ற மாட்டாமல் கேட்டான்.

நடந்த அனைத்தையும் அவனிடம் ஒப்பித்த ஷ்ரதா, வித்யாவையும், அவளது பின்புலத்தையும் கூட விலாவரியாக தெரிவித்தாள்.

முழங்காலிட்டு அமர்ந்திருந்தவன் வீசியை நினைத்து தரையில் கோபமாகக் குத்தினான். “அவனை நான் சும்மா விடப் போறதில்ல ஷ்ரதா.” என்று வீறுகொண்டு எழுந்து நின்றான்.

ஷ்ரதா அவனது கால்களைப் பிடித்துக்கொண்டு, “ப்ளீஸ் ஷிவா அத்தான் வேண்டாம். அவரை நான் வேற மாதிரி நினைச்சேன். ஆனா, அவர் வேற மாதிரி இருக்காரு. அவர் பழக்கம் வச்சிருக்க ஆட்கள் எல்லாம் ரொம்ப மோசமானவங்களா இருக்காங்க. உங்களுக்கு என்னால ஆபத்து எதுவும் வர வேணாம்.” என்று கெஞ்சினாள்.

“அப்போ இதை வேடிக்கைப் பார்த்துட்டு சும்மா இருக்க சொல்றியா ஷ்ரதா? இப்படிப்பட்டவனோட நீ ஏன் இருக்கணும்? பேசாம டைவர்ஸ் பண்ணிடு ஷ்ரதா.” என்ற சிவனேஸ்வரனை நேருக்கு நேராகப் பார்த்தவள், அவனிடம் சொல்லிக் கொள்ளாமலேயே விடைபெற்று விட்டாள்.

செல்லும் அவளையே பின்னிருந்து பார்த்துக் கொண்டிருந்த சிவனேஸ்வரனுக்கு அவள் வீசியின் மேல் வைத்திருந்த காதல் ரொம்பவே வலியைக் கொடுத்தது.

கோவிலிலிருந்து வீட்டிற்கு திரும்பிய ஷ்ரதா பூக்கூடையை வரவேற்பறையிலேயே விட்டுவிட்டு, வேகவேகமாய் தன் அறைக்குப்போய் மனம்விட்டு அழுதாள். சுவருக்கும் காதுண்டு என்பார்கள். அதேயிது வாயுண்டு என்றிருந்தால் அது அவளுக்கு உற்ற தோழியாய் உபாயம் கூறியிருக்குமோ என்னவோ?

அந்த அறை இதுவரை அவனும் அவளும் சிரித்துப் பேசி கண்டதில்லை. அன்றொரு நாள் இருட்டில் நடந்த கூடலையும் அது பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஷ்ரதாவின் அழுகையையும், புலம்பலையுமே கண்ட நரகபுரி அது. இப்போதும் அவளின் புலம்பலையே ஜாக்கிரதையாய் கேட்டுக் கொண்டிருந்தது.

கண்ணாடியின் முன் நின்ற ஷ்ரதா, தன் முகத்தை திருப்பி திருப்பிப் பார்த்தாள். கண்ணில் காலையில் போட்டிருந்த காஜல் கரைந்துப்போய் கன்னத்தில் இறங்கியிருந்தது. அழுது அழுது மூக்கும் கண்ணும் சிவந்திருந்தன. தன்னுடைய இப்பிம்பம் அவளைத் தான் அகோரியாக இருப்பது போன்ற மாயையை தோற்றுவித்தது.

“அசிங்கம், அசிங்கம், அசிங்கம் நீ” என்று கோப மிகுதியில் ட்ரெஸ்ஸிங் டேபிளைப்போட்டு தன் இரு கைகளாலும் குத்தினாள்.

அப்போது அவள் போட்டிருந்த தங்க வளையல்கள் இரண்டும் மணிக்கட்டில் காயத்தை உண்டாக்கின. ஆனால், அது அவளுக்கு வலிக்கவேயில்லை. ஓய்ந்தவள் போல் அதன் மேலேயே சரிந்து உட்கார்ந்தாள்.

முன்பே மாடியேறிய ஷ்ரதா மதியம் இவ்வளவு நேரமாகியும் சாப்பிட வராததைக்கண்டு, அவளறைக்கே சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வந்த அபிராமி, அங்கு அவள் தரையில் அலங்கோலமாக படுத்திருப்பதைக் கண்டு பதறிப்போனார்.

“ஷ்ரதா, என்னாச்சும்மா?” என்று வினவி, நெற்றியிலும் கழுத்திலும் கைவைத்துப் பார்த்த மாமியாரை கட்டிப் பிடித்து கதறியழுதவள், மெதுவாக நடந்ததைக் கூறினாள்.

அவர் அவளின் முதுகை தட்டிக் கொடுத்து இந்தப் பிரச்சினைக்கு இன்றே ஒரு முடிவு கட்டுகிறேன் என்று அவளுக்கு வாக்களித்தார்.

அவரின் ஆதரவான பேச்சில் விழிகளை துடைத்துக் கொண்டவள், அவர், “சாப்பிடும்மா” என்று கூறியபோது வேண்டாமென்று தலையாட்டி மறுத்தாள்.

ஆனால், அபிராமி அவளை விடவில்லை. பிடிவாதமாய் சாதத்தைப் பிசைந்து அவள் வாயருகே கொண்டு சென்றார். ஷ்ரதாவும் தன் அடத்தைவிட்டு ஆக்காட்டி வாங்கிக் கொண்டாள்.

அன்றையநாள் அவளின் மனசஞ்சலத்தை நீட்டிக்கும் வகையில் இரவு வெகுநேரம் சென்றே வீடு திரும்பியிருந்தான் வீசி.

வந்தவன் இன்னும் தூங்க செல்லாமல் வரவேற்பறையில் தனக்காகவே காத்துக் கொண்டிருந்த பெற்றோரையும், ஷ்ரதாவையும் கண்டு சற்று நிதானித்தான். பெரும் பிரளயம் ஒன்று நிகழப்போவதை அவன் உள்ளுணர்வு அவனுக்கு உணர்த்தியது.

சரியாக முதல் பாணத்தை எய்தவர் அபிராமி. “வருண், ஷ்ரதா சொல்றது உண்மையா?” என்றார்.

அவன் தன் புத்திசாலித்தனத்தைக் காட்டினான். “ஷ்ரதா நான் உங்கப் பையன்னு சொல்லி இருந்தா உண்மைம்மா. இல்லைன்னு சொல்லி இருந்தா பொய்ம்மா. இப்போ அவ என்ன சொன்னாம்மா?” என்றான்.

அபிராமி பிரகாஷ் சக்கரவர்த்தியை திரும்பிப் பார்த்துவிட்டு, “என்ன இது எடக்கு மடக்கு பேச்சு? நீ அந்த ராஜமாணிக்கத்தோட பொண்ணை ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கப் போறதா ஷ்ரதா சொல்றாளே, உண்மையாடா?” என்று கோபாவேசமாய் கேட்டார்.

அவன் ஒரு பெருமூச்சுடன், “ஆமாம்” என்றான்.

அவர், “உனக்கு புத்தி எதுவும் கெட்டுப்போச்சா வருண்? வீட்டுல கல்லு மாதிரி பொண்டாட்டியை வச்சிக்கிட்டு இப்படி பேசுறியே; உனக்கு வெக்கமாயில்ல.” என்றார்.

அவன் நிர்தாட்சண்யமாய், “நீங்க நினைக்கிற அளவுக்கான தப்பு ஒண்ணும் இல்லைம்மா இது” என்றான்.

வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பிரகாஷ் சக்கரவர்த்தியோ, “சரி அபிராமி, அவன் அந்தப் பொண்ணை ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கட்டும். நாமளும் ஷ்ரதாவுக்கு நல்லப் பையனாப் பார்த்து ரெண்டாம் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்.” என்றதும், வீசியின் முகம் கருத்தது.

அவர் என்றும் நியாயத்தை முன்னிறுத்தியேப் பேசுபவர் என்பதால் அமைதியாய் நின்றவனைப் பார்த்து, அபிராமி உடைந்த குரலில் சொன்னார், “எங்கப் பையனை நாங்க இழந்திட்ட மாதிரி இருக்கு வருண்” என்று.

“ம்மா, மாணிக்ஜி இந்த ஊருக்கு கெட்டவர்னாலும் நமக்கு எவ்வளவோ நல்லது செஞ்சிருக்கார். அவர் என்கிட்ட கேட்டது இது ஒண்ணு தான்மா.”

“அப்புறம் ஏன் நீ ஷ்ரதாவை கல்யாணம் பண்ணிக்கிட்ட?”

“இவ்வளவு சொன்னவ, அதை சொல்லலையா உங்கக்கிட்ட?”

“சொன்னா, மதுபாலாவுக்காக பண்ணிக்கிட்டேனு. இவளை கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த நீ, இன்னொருப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கையையுமே நரகமாக்கிறாத வருண். இந்தப் பணம், காசு, அந்தஸ்து எல்லாம் இப்போ வந்தது. நேத்து இது நம்மக்கிட்ட கிடையாது. நாளைக்கு இருக்குமான்னும் தெரியாது. ஆனா, பந்த பாசம்ங்கிறது அப்படியில்ல. வேண்டாம் வருண், என் புள்ளை எந்த அவப்பேரையும் சுமக்க வேண்டாம்.” என்று பிசிரற்ற குரலில் பேசினார் அபிராமி.

தன் நிலை புரியாமல் ஆட்சேபிப்பவர்களை வீசிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. விறுவிறுவென்று மேலே மாடிப்படி ஏறிவிட்டான்.

பிரகாஷ் சக்கரவர்த்தியோ ஷ்ரதாவிடம், “அவன் தப்பான முடிவு எதும் எடுக்கமாட்டான் ஷ்ரதா. அப்படியே எடுத்தாலும் நாங்க உன் பக்கம் இருக்கோம்மா” என்று தைரியம் கூறினார்.

அபிராமியும், “சஞ்சலப்படாத ஷ்ரதா.” என்றார்.

ஆனால், அவளுக்குத் தான் ‘கெதக்’கென்று இருந்தது.

பயந்தபடியே செல்லத் தயங்கிய கால்களை எட்டி வைத்து நடைபோட்டாள். அங்கு அவன் கையில் கத்தியுடன் அறையின் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருந்தான்.

“முருகா! முருகா!” என்று தன்னால் உருப்போட்டன ஷ்ரதாவின் உதடுகள்.

அவள் வந்ததும் அறையின் கதவை எட்டி சாத்திவிட்டு அவள் கையைப் பிடித்தவன், எடுத்த எடுப்பிலேயே, “உனக்காகத் தான் காத்திருக்கேன் ஷ்ரதா.” என்றான்.

ஷ்ரதாவிற்கு அவன் சிவப்பேறிய விழிகளைப் பார்க்க பயமாக இருந்தது. வியர்த்து குலை நடுங்கினாள்.

அவன் தன் பிடியை சற்றும் தளர்த்தாமல், “என்ன என் அம்மா அப்பாக்கிட்ட சொன்னா கல்யாணத்தை நிறுத்திடலாம்னு நினைச்சியா? ம்ஹூம், நடக்கப்போறதை யாராலயும் தடுக்க முடியாது. வெளிப்படையா செஞ்சா தானே எல்லாருக்கும் தெரியும். ரகசியமா செஞ்சா? ஆமா வித்யா உன்னை இன்னைக்கு கோவில்ல பார்த்தாளாமே? அப்போ உன் கூட பேசிக்கிட்டு இருந்தது யாரு? உன் ஷிவா அத்தானா?” என்று விசாரணை நடத்தினான்.

‘கடவுளே! இந்தக் கேள்விய கத்தியால என் கன்னத்தைத் தட்டி தான் கேட்கணுமா?’ என்று கதறியது ஷ்ரதாவின் மனம்.

“கேட்கிறேனில்ல?”

“ஆ.. ஆ.. ஆமா..”

“அப்போ வாராவாரம் கோவிலுக்குப் போறது முருகனைப் பார்க்க இல்ல. உன் ஷிவா அத்தானைப் பார்க்கத்தான்?”

இவை தன்னை ஈவு இரக்கம் இல்லாமல் பலியிடும் வார்த்தைகள் என்று நினைத்தாள் ஷ்ரதா. அவள் இரு கண்களிலும் கரகரவென்று கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

“உன் ப்ளட் க்ரூப் ஓ பாசிட்டிவ் தானே ஷ்ரதா? ஈஸியா கிடைக்கக்கூடியது தானே? ஏன் இந்தப் பயம் பயப்படுற?”

அந்தக் கத்தி அவள் முகத்தில் விழுந்த முடிகளை மெள்ள காதோரம் ஒதுக்கி விட்டது. பின், கண்ணீரையும் துடைத்து விட்டது.

“நீ.. நீ.. நீங்க.. வித்யா கூட பேசினா தப்பில்ல. நான் ஷிவா.. ஷிவா.. ஷிவாத்தான் கூடப் பேசினா மட்டும் தப்பா?”

“தப்பு தான்?” என்றவன் அவள் மடக்கியிருந்த வலக்கையைப் பிரித்து கத்தியால் விருட்டென்று கீறிவிட்டான், அதுதானே சிவனேஸ்வரனுக்கு திருநீற்றை  வழங்கியது என்று.

“ஆ..” என்று அலறிய ஷ்ரதா அங்கேயே மூர்ச்சையடைந்து விழுந்தாள்.

அவளைத் தூக்கிக்கொண்டுபோய் மெத்தையில் கிடத்தியவன், ஒருவித குரூர திருப்தியுடன் அவள் நெற்றியில் முத்தமிட்டான். வயிற்றின் மீது கிடந்த அவள் வலக்கையிலிருந்து ரத்தமோ சொலுசொலுவென்று சொட்டிக் கொண்டிருந்தது.

 

காதல் கணம் கூடும்…

❤️ Loading reactions...
3 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!