காதல் கணம் 10
கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்த சிவனேஸ்வரன், “ஷ்ரதா எப்படிப்பட்டவ! அவ அழகு எப்படி ஆராதிக்கப்பட வேண்டியது! இந்த வீசி அவளை இப்படி சித்திரவதை பண்றானே, மடையன்!” என்றே கோபமாக நடைபோட்டான்.
அவன் மனம் அவனிடம் ஷ்ரதாவிற்கு ஏதேனும் நன்மை செய்யச்சொல்லி மன்றாடிக்கொண்டே இருந்தது.
அப்போது வீட்டினுள் திடும் பிரவேசமாக வந்த அவனது தாய் கோகிலா, கோபமாக தன் பர்ஸை விட்டெறிந்தார்.
அவரின் இந்த நடத்தைக்கு காரணம் புரியாமல், “என்னாச்சிம்மா?” என்றான்.
“என் புள்ளைக்கு என்ன குறை? என்ன வார்த்தை சொல்லிட்டா அந்த செல்வி?” என்று புதிராகப் பேசினார் அத்தாய்.
சம்பவம் அவன் சம்பந்தப்பட்டது என்பதால் நிச்சயம் தெரிந்தாக வேண்டுமென்கிற உத்வேகம் பிறக்க, தூண்டிலை வீசினான்.
“யாரு? அப்பாவோட சித்தப்பா பொண்ணு செல்வியாம்மா?” என்றான்.
“அவளே தான். உனக்கு ஏதோ குறை இருக்குதாம். அதான் கல்யாணம் நின்னுப்போச்சாம். கன்னாபின்னான்னு பேசுறாப் பாத்துக்க. எனக்கு அவளை அப்படியே கடிச்சுக் கொதறனும் போல இருந்தது.” என்று ஆவேசப்பட்டார்.
ஏன் இந்தப் பெண்கள் மட்டும் ஜோடிக்கும் வேலைகளில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள்? என்று சிவனேஸ்வரன் யோசித்த வேளையில், “அடடடடா! என்ன இப்படி காட்டுக்கத்து கத்திட்டு இருக்க கோகிலா?” என்று தன்னறையிலிருந்து வெளிப்பட்டார் காசிராஜன்.
“என்ன கத்திட்டு இருக்கேனா? என் புள்ளைக்கு கல்யாணம் நின்னதும் நின்னது எல்லார் வாய்க்கும் அவல் இப்போ நம்ம வீட்டு சங்கதி தாங்க.” என்றவர் மனத்தாங்கலாக கூறவும், அவரும் பேச முடியாமல் வாயடைத்துப்போனார்.
பத்திரிக்கை வரை வந்த திருமணம் நின்று போகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
“நாம யாருக்கு என்ன பாவம் செஞ்சோம்? நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது? ரெண்டு பிள்ளை பெத்தும் நம்ம மட்டும் இப்படி நிம்மதி இல்லாம இருக்கோமேங்க?” என்று துக்கம் தொண்டையடைக்க பேசிக்கொண்டிருந்தவரிடம், எதையெதையோ சொல்லி சமாதானப்படுத்த முயன்றார் காசிராஜன்.
தன் திருமணம் நின்றதற்கு காரணம் வீசி தான் என்று ஏற்கனவே ஷ்ரதாவின் மூலம் அறிந்திருந்த சிவனேஸ்வரனுக்கு ரத்தம் கொதித்தது.
ஆத்திரத்தில், “தப்பு செஞ்சிட்ட வீசி. பெரிய தப்பு செஞ்சிட்ட. என் வலியையும் வேதனையையும் நீயும் ருசி பார்க்கணும்டா.” என்று சூளுரைத்துக்கொண்டான்.
கோகிலா புடவையில் தன் கண்களைத் துடைத்தவாறே புதுக்கதை ஒன்றை சொன்னார்.
“உனக்கு சின்ன வயசுல அம்மை போட்டப்ப சமயபுர மாரியாத்தாவுக்கு சேலை வாங்கி சாத்துறதா வேண்டியிருந்தேன். ஏனோ அது அப்போ நிறைவேத்த முடியாம போயிடுச்சி. அந்தக்கடன் தான் இப்போ நம்ம கழுத்தை வந்து நெரிக்குதுன்னு நினைக்கிறேன். நானும் உங்கப்பாவும் ஒரு ரெண்டு நாள் கோவில் கொளம்னு போயிட்டு வர்றோம் சிவா. நீ வீட்டைப் பார்த்துக்க” என்றதும், அவனும் சரியென்றான்.
மறுநாள் காலையில் ஆறு மணிக்கெல்லாம் கோவிலுக்கு கிளம்பிவிட்டார் கோகிலா.
சிவனேஸ்வரனின் ஞாபகக் குஞ்சுகளோ ஓசனிச்சிட்டு போல் பின்னோக்கி பறந்தன. அதுவும் களைப்பேயில்லாமல் பதினைந்து வருடங்கள் பின்னோக்கி!
இதேபோல் ஒருமுறை தன் மொத்தக் குடும்பமும் வெளியூருக்கு கிளம்பியபோது தான் தன் நண்பன் ஒருவனுக்கு அழைப்பு விடுத்து தன் வீட்டிற்கு வரச்சொன்னான் சிவனேஸ்வரன். அந்தப் பூட்டிய வீட்டிற்குள் அவனும் அவனது நண்பனும் மட்டுமே இருந்தனர்.
அவர்களுக்கு முன்னால் டீபாயில் சிகரெட் பாக்கெட், தீப்பெட்டி, குண்டு விஸ்கிபாட்டீல், தண்ணீர் பாட்டீல், கண்ணாடி தம்ளர்கள் மற்றும் சிப்ஸ் பாக்கெட் என அனைத்தும் கனகட்சிதமாய் இருந்தன.
“சிவா, யாருக்காவது இந்த விஷயம் தெரிஞ்சா என்னாகும்டா?” என்றான் நண்பன் பயந்தபடியே.
“என்னாகும்? நாம பெரிய மனுசங்களா ஆகிட்டோம்னு நினைப்பாங்க.” என்றவாறே தன் கையிலிருந்த சிகரெட்டை எதிரிலிருந்தவனிடம் நீட்டினான் சிவனேஸ்வரன்.
“இல்ல வேணாம் சிவா. வீட்டுல உன் கூட சேர்ந்து படிக்கிறதா பொய் சொல்லிட்டு வந்திருக்கேன்.” என்று நெளிந்தவனிடம்,
“போடா இவனே” என்றபடியே கிளாஸில் ஊற்றிய விஸ்கியை முகர்ந்துப் பார்த்து, முகத்தை சுளித்தான் சிவனேஸ்வரன்.
“அதான் நாறுதில்ல? அப்புறம் ஏன்டா குடிக்கிற?” -அவன் நண்பனால் இவ்வாறு கேட்காமல் இருக்க முடியவில்லை.
“பின்ன.. பெரிய மனுஷன் ஆக வேணாமா?” என்றவன், எழுந்து தான் தேடி எடுத்து வந்த ஒரு சீடியை பிளேயரில் மாட்டினான்.
கூடவே, “எங்க அண்ணன் கலெக்சன்டா. மறைச்சு வச்சிருந்தான்.” என்றான்.
நண்பனானவன் சுவாரசியமாக டீவியைப் பார்க்க, உள்ளாடை சுதந்திரத்தோடு காட்சியளித்த ஆணும், பெண்ணும் தீவிரமாக பயோலஜி படித்துக் கொண்டிருந்தார்கள்.
கண்களை மூடிய நண்பன் விரல்களின் இடைவெளியில், “டீவியை ஆஃப் பண்ணுடா சிவா” என்று கத்த,
சிவனேஸ்வரன் சிரித்துக்கொண்டே, “ஏன்டா, நீ ஆம்பளை தானா?” என்று கிண்டலடித்தான்.
“ப்ளீஸ்டா! எனக்குன்னு ஒரு கற்பனை இருக்கு. இதைப் பார்த்து நான் அதை விகாரமாக்க விரும்பல.” என்ற நண்பன் கிளம்பும் பொருட்டு எழுந்து நின்றான்.
“இதுக்கெல்லாம் என் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் தான் லாயிக்கு. கராத்தே ஃப்ரெண்ட்னு உன்னைக் கூப்பிட்டேன் பாரு.” என்று சலித்தவனிடம்,
“சிவா, நான் கிளம்பவா? டெஸ்ட்க்கு படிக்கணும்டா.” என்று அனத்தியவன்,
“போ! பட், இந்த விஸ்கி விஷயத்தை வெளிய யார்கிட்டயும் சொல்லக்கூடாது.” என்று சிவனேஸ்வரன் சத்தியம் வாங்கவும்,
“ம், சொல்லல. ஆனா, நீ அடிக்கடி இந்த மாதிரி செய்யாத” என்றுவிட்டு வாசல் நோக்கிச் சென்றான்.
அவனை, “வீசி” என்றழைத்த சிவனேஸ்வரன், “உன் அக்காவுக்கு தியாகராஜர் இன்ஜினியரிங் காலேஜ்ல சேர சீட் கிடைச்சிருக்குன்னு சொன்னியே? சேர பணமெல்லாம் ரெடி பண்ணிட்டீங்களாடா?” என்று வினவ,
“ம், அப்பா தெரிஞ்ச இடத்துல வட்டிக்கு பணம் வாங்கியிருக்காரு சிவா. பேங்க்லயும் லோனுக்கு அப்ளை பண்ணியிருக்கோம்.” என்று நம்பிக்கை தெரிவித்த வீசி, இறுதியாக அவனுக்கு கையசைத்து விடைபெற்றான்.
ஆனால், கதவை பூட்டிவிட்டு வந்த சிவனேஸ்வரனுக்கு தான் இயல்பாக இருக்க முடியவில்லை. வீசியின் நன்னடத்தை சிறிதுநேரத்திலேயே அவனுக்குள் குற்றவுணர்வை உண்டாக்கியது. வீசியின் நற்பண்பு அவனையே அவனுக்கு தரம் தாழ்த்திக் காண்பித்தது.
படிப்பை பொறுத்தவரை வீசியைக் காட்டிலும் சிவனேஸ்வரனே முதல் நிலையில் இருந்தான். அதில் அவனுக்குப் பெருமையும் உண்டு.
ஆனால், இப்போது வீசி தனது இந்த கெட்டசெயலில் பங்கெடுக்காதது அவனை வீசியுடன் ஒப்பிடும் போது கேடுகெட்டவனாக உருவகப்படுத்தியது. உடனே விஸ்கிபாட்டிலை தூக்கி குப்பைத்தொட்டிக்குள் போட்டான்.
அவனின் இந்த படபடப்பு நீங்குவதற்குள்ளாகவே அவன் வீட்டிற்கு வந்த ஷ்ரதா, “ஷிவாத்தான்” என்று கத்தியபடியே ஓடி வந்து அவன் வாயில் கேக்கை திணித்தாள்.
பின், “என்ன முழிக்கிறீங்க? இன்னைக்கு எனக்கு பெர்த்டேங்கிறதை மறந்துட்டீங்களா? பரவாயில்ல. அத்த காலைல போன் பண்ணி நீங்க மட்டும் வீட்ல தனியா இருக்கிறதா சொன்னாங்க. அதான் உங்களை எங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாம்னு வந்தேன். ம், சீக்கிரம் கிளம்புங்க. அம்மா வெளிய கார்ல வெயிட் பண்றாங்க” என்றவள் இன்னும் அவன் கழுத்தில் தொங்கியபடியே இருக்க, அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் உடலிலோ மெதுமெதுவாக அந்த ரசாயன மாற்றம் நிகழத் துவங்கியது.
அப்போது அது என்ன உணர்வென்று சிவனேஸ்வரனால் பிரித்தறிய முடியவில்லை. வருடங்கள் பல ஓடிய பின்பு தான் அது காதலென்ற முடிவிற்கே வந்தான் அந்த உத்தமன்.
தற்போது நிகழ்காலம் வந்தவன், மீண்டும் எதையோ நினைத்தவனாக, “நான் அன்னைக்கு அவன் பேச்சை கேட்டிருக்கக்கூடாது ஷ்ரதா. அந்த லெட்டரை கிழிச்சிப் போட்டிருக்கக்கூடாது. உன்கிட்ட கொடுத்திருக்கணும். ஒருவேளை அதை நான் அப்பவே உன்கிட்ட கொடுத்திருந்தா நீ என்னை தானே லவ் பண்ணியிருப்ப?” என்று ஆயிரமாவது முறையாகக் கேட்டான்.
அவனால் அந்த இருபத்திரண்டு வயது சம்பவத்தை மறக்க முடியவில்லை.
சிவனேஸ்வரனும், வீசியும் ஜோடிக்காளையாக சுற்றித் திரிந்த அக்காலத்தில், ஒரு நாள் சுமார் முப்பது நிமிடங்களுக்கு மேலாகவே சிவனேஸ்வரனுக்காக அவனது வீட்டில் காத்திருந்தான் வீசி.
அவனின் காத்திருப்பு அவஸ்தையிலிருந்து விடுதலை கொடுக்க, “வந்திட்டேன்டா” என்று தன் சட்டையின் காலரை சரிசெய்தபடியே வெளியே வந்தான் சிவனேஸ்வரன்.
அவன் அணிந்திருந்தது புது சட்டை என்பதை அதன் மொடமொடப்பிலிருந்தே தெரிந்துகொண்ட வீசிக்கு, அவனது இந்தப் பிரத்யேக அலங்காரத்திற்கு தான் காரணம் தெரியவில்லை.
“போலாமா?” என்று கேட்ட சிவனேஸ்வரன் தன் மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்துக்கொள்ள, மணி பத்தைக் கடந்திருந்தது.
பத்தரைக்கு மேல் சென்றால் உபயோகமில்லை என்று நினைத்தவன், “ம்! க்விக்டா” என்றபடியே வெளியே வந்து தனது பைக்கை கிளப்பினான்.
‘தடுக்கி விழுந்தா நியூ டீலக்ஸ் தெரு. அதுக்கு எதுக்கு பைக்?’ என்று சிவனேஸ்வரனை யோசனையாய் பார்த்த வீசி, அப்போது தான் பெட்ரோல் டேங்கின் மீது கிடந்த அந்த பிரவுன் அட்டைப் போட்ட நோட்டைக் கவனித்தான். ஆனாலும், சிவனேஸ்வரனே சொல்லட்டும் என்று பொறுமை காத்தான்.
அவர்கள் இருவரும் மாகாளிப்பட்டி சாலையிலிருக்கும் பாரதிதாசனார் பள்ளிக்கு எதிரேயுள்ள விஜயாதித்தனின் புத்தகக்கடை காரியமாகத் தான், அவரைப் பார்க்க சென்று கொண்டிருந்தார்கள்.
இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அந்த புத்தகக்கடையில் ‘வேலைக்கு ஆள் தேவை’ என்று பதாகை இருந்ததையும் கவனித்திருந்தார்கள். இந்தப் பயணத்தின் பின்னணியும் அது சம்பந்தப்பட்டதுவே.
கடந்த மூன்று வருடங்களாகவே கணிசமான ஊதியம் எதுவும் இல்லாமல் நலிந்து போயிருந்தது வீசியின் குடும்பம். பாலிடெக்னீக் படிப்பை முடித்த இந்த மூன்று வருட காலத்தில் மூன்று நிறுவனங்கள் மாறியிருந்தான் அவன். எந்த நிறுவனமும் நிரந்தரப்பணி எனும் பேச்சை மட்டும் மறந்தும் எடுக்கவில்லை. வேலைக்கு வருகிறாயா? வா. வேலையை விட்டு நிற்கிறாயா? நில். நீ போனால் உன் இடத்திற்கு வர வெளியே ஆயிரம் பேர் வேலையில்லாமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே அவர்களின் தாரக மந்திரமாக இருந்தது.
வீசி முதலில் இந்த புத்தகக்கடை அறிவிப்பைப் பார்த்தபோது அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏதாவது எடுபுடி வேலையாக இருக்குமென்று நினைத்தான். சிவனேஸ்வரன் அந்த வேலையில் சேர்பவர்களுக்கு ஊதியம் மாதம் இருபதாயிரம் என்றபோது தான் அவனுக்கு கூடுதல் ஆர்வம் பிறந்தது.
எப்படியாவது தான் அந்த வேலையைப் பெற்றுவிட்டால் உசிதம் என்று நினைத்தவன், சிவனேஸ்வரனிடமே அதற்கான உபாயத்தையும் கேட்டான்.
சிவனேஸ்வரன், “அது நம்ம மாமா கடை தான்டா” என்று சீண்ட, வீசியோ அந்த ‘மாமா’ எனும் பதத்தையே வெறுத்தான்.
சிவனேஸ்வரனுக்கு விஜயாதித்தன் மாமன் என்பது தொப்புள் கொடி உறவு. ஆனால், வீசிக்கு அவர் மாமன் என்பது அவன் அக்கா வழி வந்த தாலிக்கொடி உறவு. அதனால் சிவனேஸ்வரன் வீசியுடன் மிதப்பாக சென்று கொண்டிருந்தான்.
தன் மாமாவிற்கு தன் மேல் அளவு கடந்த பிரியம் உண்டு என்ற மமதையில், தான் கேட்டால் நிச்சயம் இந்த வேலையை அவர் வீசிக்கு கொடுப்பார் என்ற நம்பிக்கையில், அவனை தன்னுடன் அழைத்து வந்திருந்தான் சிவனேஸ்ரன்.
ஆனால், வீட்டை நெருங்கியவுடனேயே அவனுக்குள் ஒரு அபசுருதி. திரும்பி வீசியைப் பார்த்தான்.
வீசி அவனிடம் பார்வையால் என்னவென்று கேட்க, ஒன்றுமில்லை என்றவன் மீண்டும் சாலையில் கவனத்தை செலுத்தினான்.
காதல் கணம் கூடும்…
