மும்பையின் ஒரு மூலையில், ஆதித்யா இறந்துவிட்டான் என்று உலகம் நம்பிக்கொண்டிருக்க, அவனோ அவன் மரணத்தை கொண்டாடியவர்களின் முன்னால் உயிரை குடிக்கும் மரணத்தின் உருவாய் வந்து நிற்க,
குப்தாவும் , ஷர்மாவும் பயத்தில் உறைந்து விட்டனர்.
“ஸ்கெட்ச் போட்டா இப்படி போடணும்” – என்ற ஆதி தன் கையால் இறந்து போன சூரஜின் உடலை அவனது தலை முடியை பிடித்து தர தரவென்று இழுத்து வந்து குப்தா மற்றும் ஷர்மாவின் காலடியில் வீசினான் .
இப்பொழுது குப்தாவின் கால்கள் தானாய் நடுங்கியது.
ஷர்மாவோ எது போனாலும் பரவாயில்லை, உயிராவது இருக்கட்டும்,
“எனக்கு ஒன்னும் தெரியாது எல்லாம் குப்தாவின் வேலை தான் நான் என்னைக்குமே உங்க விசுவாசி ” என்றபடி ஆதித்யாவின் காலடியில் வந்து விழுந்தான்.
தன் காலில் விழுந்த ஷர்மாவை ஏளனமாய் பார்த்த ஆதி, குப்தாவின் பயத்தை ரசித்தபடி அவனது எதிரில் வந்து நின்று,
“என்ன குப்தா ஜி ஸ்கெட்டிச்சு சரியா போட்ருக்கேனா?” – என்று வினவியவன் தன் பார்வையை அந்த இடத்தை சுற்றிலும் சுழல விட்டு,
“எல்லாம் அமோகமா நடக்குது போல. நான் கூடாதுன்னு சொல்லியும் பண்றீங்க” – என்றான் .
“ ஆதித்யா எதுவா இருந்தாலும் பேசி முடிவு பண்ணலாம். நீ எங்க வழியில குறுக்க வரமா இருந்திருந்தா நான் உன்னை போடணும்ன்னு நினைச்சிருக்க கூட மாட்டேன். உன்னை கொலை பண்ற முடிவு என்னுடையது அல்ல. மீட்டிங்க்ல பேசி எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவு. செஞ்சது தான் நான்.செய்ய சொன்னது சிவகுரு. உன்னால எங்க பிஸ்னஸ் எவ்வளவு முடங்கி கிடக்குது தெரியுமா ??”
” எனக்கு அதெல்லாம் தெரியாது. இப்பவே எல்லாத்தையும் நிப்பாட்டுங்க” – அடங்கி ஒலித்தது ஆதித்யாவின் எச்சரிக்கை குரல்.
குப்தா பதில் பேசுவதற்குள், ” முடியாது டா என்ன பண்ணுவ ” – என்று ஆதித்யாவை முறைத்தபடி வந்தான் குப்தாவின் ஒரே வாரிசு ஓம்காரா குப்தா.
” ஓம் “- மகனை கண்டித்தார் குப்தா .
” விடுங்க டாட் நீங்க ஏன் இவனுக்கு பயப்படுறீங்க. இவன் யாரு நமக்கு தடை போடுறதுக்கு ” என்றவன்.
தன்னை வெறித்து நோக்கி கொண்டிருந்த ஆதியிடம்,” கிளம்புடா இங்க இருந்து ” – விவரம் புரியாமல் மிரட்டினான்.
” நிறுத்திருங்க. இல்லைனா என் அடி ரொம்ப பலமா இருக்கும். அப்புறம் எழுந்திருக்கவே முடியாது.” பறக்கவிருந்த பொறுமையை இழுத்துவைத்தபடி ஓம்காராவிற்கு எச்சரிக்கை விடுத்த ஆதியின் முகம் அக்னி குண்டம் போல கொதித்துக்கொண்டிருந்தது.
” முடியாது டா. உன்னை பத்தி எல்லாம் தெரியும்.” – திமிறினான் ஓம்காரா.
” என்னை பத்தி உனக்கு எதுவுமே தெரியாது ” -ஆதித்யா கபடமாய் சிரித்தான். சிதையில் சிதைக்க போகும் அந்த சிரிப்பின் அர்த்தத்தை உணர்ந்த குப்தாவின் உடல் நடுங்கியது.
” நீயும் திருடன் தான.. என்னமோ போலீஸ் மாதிரி நல்லவன் வேஷம் போடுற ” – பற்களை கடித்தபடி ஆதித்யாவை எதிர்த்து நின்றான் ஓம்.
” ஓம் ” – மகனை பலமாய் கண்டித்த குப்தா ஆதித்யாவின் காலில் விழுந்து மகனுக்காக மன்னிப்பு வேண்டினார்.
” அப்பா என்ன பண்றீங்க முதல்ல எழுந்து நில்லுங்க ” – என்ற ஓம். ஆதித்யாவின் புறம் திரும்பி,
” உன்னை பார்த்தா எனக்கு பயமா இல்லை உன்னால என்ன முடியுமோ அதை பண்ணிக்கோ. இப்போ இங்க இருந்து கிளம்பு ” அவனின் மார்பில் கைவைத்து அவனை வெளியே தள்ளிக்கொண்டே போக,
இழுத்து பிடித்து வைத்த ஆதியின் பொறுமையெல்லாம் காற்றில் திசை மறந்து பறந்து சென்றது.
அவனுக்குள் அடக்கிவைக்கப்பட்ட அரக்கன் சீறியெழுந்தான். உடனே தன் எதிரில் இருந்த ஓமை பார்த்து தன் நெஞ்சை நிமிர்த்தி கொடூரமாக முறைத்தான். புருவத்துடன் விழிகளும் விரிந்திருந்தது. இத்தனை நேரம் இங்கிருந்த ஆதித்யா இப்பொழுது இல்லை.இவன் ஆதித்யா இல்லை. வந்து விட்டான் ஆம் கொடிய அசுரன் வந்துவிட்டான்.
” ஹவ் டேர் யு ” – வெறித்தனமாய் சீரிய ஆதி, நொடி பொழுதில் தன் நெற்றி கொண்டு ஓம்காராவின் நெற்றியில் வேகமாய் மோதினான். அவ்வளவு தான் தரையில் சரிந்து விழுந்தான் ஓம். கோபம் தீராத ஆதி ஓமின் மார்பில் ஓங்கி மிதிக்க தன் கால்களை உயர்த்த.உடனே குப்தா அவனது காலடியில் விழுந்து தன்னையும் தன் மகனையும் மன்னிக்கும்படி கெஞ்சினான்.
” எனக்கு தெரிஞ்சே பண்ற தப்பை மன்னிச்சு பழக்கம் இல்லை. ” – உறுமினான் ஆதி. மறுநொடி ஆதித்யாவின் துப்பாக்கியும் உறுமியது. ஷர்மா மற்றும் குப்தாவின் உயிர் ஆதித்யாவின் துப்பாக்கிக்கு விருந்தாகியது.
” உங்களையெல்லாம் விட்டா மறுபடியும் அதே தப்ப தான் பண்ணுவீங்க ” – முகத்தில் ரத்தக்கறையுடன் கோரமாக காட்சியளித்தான் ஆதித்யா.
பின்பு, “எரிச்சிடு ஒன்னு மிஞ்ச கூடாது” – தன் அருகில் இருக்கும் நாகாவிற்கு ஆணையிட்டான்.
அதன் பிறகு கேட்கவா வேண்டும் அவன் கண் முன்னே அனைத்து போதைப்பொருட்களும் நெருப்புக்கு இறையாகியது. வானை தொடும் அளவிற்கு உயரமாய் எரிந்து கொண்டிருந்த வேள்வித்தீயில், அதர்மத்தை சிதையில் சிதைக்கும் அரக்கனாய் காட்சியளித்தான் ஆதித்யா.
அந்த வெளிநாட்டவனும் ஓமும் ஆதித்யாவை மிரட்சியுடன் பார்க்க அவர்களை இறுக்கமாய் முறைத்தவன், “ஒடுங்க !! ரன் !! ஒரே ஒரு வாய்ப்பு தரேன். என் பார்வை படாத தூரத்துக்கு போய்டுங்க. உயிராவது மிஞ்சும். அடுத்த தடவை பொருளோடு சேர்த்து நீங்களும் சாம்பலாகிடுவீங்க. ம்ம் அப்புறம் நான் நினைக்காம என்னை யாரும் எதுவும் பண்ண முடியாதுன்னு உங்க குரு(சிவகுரு) பாய்ட்ட சொல்லுங்க. ” – என்று ஆதித்யா கடுமையாய் எச்சரித்தான்.
அதற்கு மேல் அவர்கள் அங்கே நிற்பார்களா என்ன? இருவரும் தங்களின் உயிரை கையில் பிடித்தபடி ஓடினர்.
சூரஜ் , குப்தா , ஷர்மா , சிவகுரு , ஆதித்யா யார் இவர்கள் இவர்களுக்குள் என்ன தொடர்பு?
குப்தா , ஷர்மா , இருவரும் கட்டப்பஞ்சாயத்து , அடி தடி , பெண் கடத்தல் , போதை மருந்து கடத்தல் , போன்ற சட்ட விரோதமான செயல்களை சிறிய அளவில் செய்து வரும் லோக்கல் கங்ஸ்டர்கள்.இவர்களை போன்ற லோக்கல் கங்ஸ்டர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்கள் தனி தனி குழுக்களாக இயங்குவர்.
சூரஜ் பணத்திற்காக கொலைகளை செய்யும் காண்ட்ராக்ட் கில்லர். சூரஜின் தலைமையில் நிறைய இளைஞர்கள் வேலைப்பார்க்கின்றனர். இவர்களை கூலிப்படை என்பார்கள். கூலிப்படை என்றால் பணத்துக்காக கொலைகளை ஒரு படை ஆகும். பொதுவாக கூலிப்படைக்கும் அவர்கள் கொலை செய்யும் எதிரிக்கும் நடுவே எந்த தனிப்பட்ட பகையும் இருக்காது. இவர்கள் பொதுவாக சட்டத்திற்குப் புறம்பான வன்முறைச் செயல்களைச் கூட்டாக செய்பவர்கள். செய்யும் குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து கூலியாகப் பணத்தை பெறுவர். இவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகளுடன் மறைமுகமாக தொடர்பு கொண்டிருப்பர் .
ரெட் கம்பெனி என்பது சிவகுரு என்ற நிழல் உலக தாதாவின் நிறுவனம். சிவகுரு தான் குப்தா சர்மா போன்ற சில லோக்கல் கங்ஸ்டர்ஸ் அனைவருக்கும் தலைவன். நிழல் உலகின் டான். இவனது நிறுவனத்தின் வேலைகள் அனைத்தும் அப்படியே அக்மார்க் உலக நாடுகள் அனைத்திலும் தடை செய்யப்பட்ட பிசினஸ்கள். ஆட்கள் கடத்துவது, ஆயுதம் விற்பது, கடத்துவது, பெண்களை கடத்துவது ,போதைப்பொருள்கள் கடத்தி உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பத்திரமாக அனுப்பி வைப்பது என பெரிய சாம்ராஜ்யம் தான் RED கம்பெனி. இதற்கு பல்வேறு துறை அரசு அதிகாரிகள் துணை போகிறார்கள். கண்காணிப்பில் இருக்க வேண்டிய அதிகாரிகள் சொகுசு ஹோட்டல்களில், மது ,மாதுடன் தங்களின் வாழ்வை கழிக்கின்றனர்.
யாராலும் செய்ய முடியாது என்று ஒதுக்கப்பட்ட ‘விஷயத்தை’ கொஞ்சம் கூட உயிர் பயமின்றி சவாலாக செய்து முடிப்பது ஆதித்யாவுக்கு மிகவும் பிடிக்கும். எல்லா சம்பவங்களிலும் அடாவடித்தனம் கை கொடுக்காது என்பது அவனது கொள்கை.
புத்தியுடன் கூடிய ஆடாவடித்தனமே ஆதித்யாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது. பல சமயங்களில் அவனது நடவடிக்கைகள் எல்லாம் கை தேர்ந்த அரசியல்வாதிபோல இருக்கும்.
ஆதித்யா தங்கம் , வைரம் , அரசியல்வாதிகள் மற்றும் சமூகத்தில் உள்ள பெரும் புள்ளிகளின் கருப்பு பணம் எனப்படும் ஹவாலா பணங்களை கடல் மூலம் பல்வேறு இடங்களுக்கு அரசாங்கத்திடம் சிக்காமல் கடத்துவதில் கில்லாடி.
நாணயத்தில் இருக்கும் பூ மற்றும் தலை போல. இவர்களை போன்ற தாதாக்களுக்கு இரட்டை முகங்கள் இருக்கும். ஒரு முகம் நிழல் உலகத்திற்கு, பொது உலகிற்கு வேறு முகம்.
ஆதித்யாவின் இருண்ட உலகத்தை பற்றி ஒரு சிலரை தவிர வேறு எவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வெளியுலகிற்கு தெரியும் அளவிற்கு இவனது இல்லீகல் வேலைகள் எதுவும் நடப்பதுமில்லை .
ஆதித்யா தான் மாஃபியாவின் நிழலுக தாதாக்களையே அலற விடும் தாதாவாயிற்றே.இவனை போன்றவர்கள் பொது உலகில் பெரிதும் மதிக்கப்பட்டு வரும் பெரும் தொழிலதிபராக இருப்பார்கள்.
கன்ஸ்ட்ரக்ஷ்ன் கம்பெனி , பார் கஸினோ, அம்யூஸ்மென்ட் பார்க் , ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் , ஜுவல்லரி ஷாப் , கார் தயாரிப்பு நிறுவனம், நிதி நிறுவனம் என்று பல லீகல் தொழில்களில் கொடிகட்டி பறக்கும் ஆதித்யா வெளியுலகிற்கு செல்வாக்குகள் உள்ள செல்வந்தனாயிருந்தாலும் ஒரு சில உயர் அதிகாரிகளுக்கும் , அரசியல் புள்ளிகளுக்கும் அவனது மறுப்பக்கம் நன்றாய் தெரிந்தாலும். இதுவரை அவர்களால் அவனுக்கு எதிராக ஒரு துரும்பை கூட அசைக்க முடியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
ஆதித்யாவுக்கு, மும்பை தாராவியில் குடியிருக்கிற மக்கள் மற்றும் மும்பையில் வசிக்கும் குறைந்த வர்க்க மக்கள், நடுத்தர வர்க்க மக்கள் இடையே நல்ல பெயர் இருந்து வந்தது. கடத்தல் தொழிலில் வரும் வருமானத்தின் பெரும்பகுதியை தேவைப்பட்டால் முழுவதையும் கூட மக்களுக்காக பல்வேறு வகைகளில் உதவி செய்து வந்தான், வருகிறான். அதனால் மக்கள் ஆதித்யாவை கடவுளை போல பார்த்தனர். உதவி என்று வரும் அப்பாவிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் வள்ளல் அவன்.
மக்களின் செல்வாக்கு ஆதித்யாவுக்கு அதிகமாக இருந்ததால் மும்பையில் உள்ள அணைத்து துறைமுகமும் அவனது கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு என்ன நடந்தாலும் நடக்கவிருந்தாலும் இவன் கண்ணை தப்பி நிகழ முடியாது. மக்களை பாதிக்கும் தொழில்களை வன்மையாக எதிர்க்கும் ஆதித்யா. போதை மருந்தால் பாதிக்கப்பட்ட இளம் வாலிபர்களது தாய்மார்களின் கண்ணீருக்காக போதை மருந்துக்கு எதிராக தீவிரமாய் கொடிபிடிக்கிறான்.
ஆதித்யா அள்ளி வீசும் பணத்திற்காக அவனுக்கு உளவு சொல்ல போலீஸ் வட்டாரங்களில் ஏகப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள். பெரிய பெரிய அரசியல் புள்ளிகளின் அந்தரங்க ரகசியங்கள் அவனிடம் சிக்கி இருப்பதால் வேறு வழியின்றி அவர்களும் ஆதித்யாவுக்கு ஸலாம் வைக்கின்றனர்.
ஒருமுறை அவன் எச்சரிக்கும் பொழுதே திருந்திவிட்டால் உயிராவது கிடைக்கும் இல்லையேல் கொடூரமான மரணம் தான். எங்கே தங்களின் அந்தரங்க அசிங்கத்தை மேடை ஏற்றிவிடுவானோ என்று பயந்து பாதி அதிகாரிகள் மற்றும் அரசியில் பிரமுகர்கள் ஆதித்யாவின் கண் பார்வைக்கு தலையசைத்தபடி நெருக்கமாக வலம் வர. மீதம் உள்ளவர்கள் உயிருக்கு பயந்தே அவன் முன்பு அடிபணிந்தனர்.
அதனால் போதை மருந்து கடத்தல் தொழில் செய்து வரும் குப்தா, சிவ குரு மற்றும் ஷர்மா போன்றவர்களுக்கு ஆதித்யா பெரும் தலைவலியாய் ஆனான் . இதன் காரணமாக ஆதித்யாவை தீர்த்துக்கட்ட நினைத்த குப்தா , சிவகுருவிடம் சென்று தஞ்சம் அடைய. காண்ட்ராக்ட் கிள்ளர் சூரஜ் மூலமாக ஆதித்யாவை கொலை செய்ய திட்டமிட்டனர்.
இந்த நேரத்தில் சிவ குருவின் குரூப்பில் இருந்து வெளியான பிரகாஷ் தாகூர் ஆதித்யாவுடன் இணைத்து அவனுக்கு எதிராக அவனை வீழ்த்த தீட்டப்பட்ட திட்டத்தை பற்றி கூற. நூலிழையில் ஆங்காங்கே ஏற்பட்ட காயங்களுடன் உயிர் பிழைத்திருக்கிறான் ஆதித்யா.
சாதாரண அடியாளாக இருந்த ஆதித்யா நிழல் உலகின் தாதாவாக உருவானது எப்படி ??? சிவகுரு ஆதித்யா மீது கொண்டு பழி உணர்ச்சிக்கு காரணம் என்ன ? ?
2012 மும்பை – துபாய்
மும்பையை சேர்ந்த பிரபல தங்க வியாபாரி என்று அழைக்கப்படும் ராணாகுரு என்கின்ற மும்பை நிழல் உலகின் தாதா துபாய்க்கு சுற்றுலா செல்வதாக சொல்லிவிட்டு அங்கே வைத்து தனது இல்லீகல் பிசினஸ்களை செய்து வந்தார்.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை வரி கட்டாமல் இந்தியாவுக்கு வாங்கியும் வந்தார். விற்றும் வந்தார். அடிக்கடி இவர் வந்து போவது இந்திய கஸ்டம்ஸ் அதிகாரிகளின் பார்வைக்கு உறுத்த சில நேர்மையான அதிகாரிகள் ராணாவை திட்டமிட்டு மடக்க காத்திருந்தனர்.
மிக விலையுயர்ந்த தங்கக்கட்டிகள் அடங்கிய பெட்டியை துபாயில் இருந்து இந்தியா கொண்டுவர வேண்டும். அதன் மதிப்பு அப்போதே பல கோடிகள் கஸ்டம்ஸ் அதிகாரிகள் தன்னை மடக்கப்போவதாக வந்த செய்தியை கேட்டு பதறிய ராணா துபாயில் சிக்கினால் உயிர் தப்பிப்பது கஷ்டம் என்பதை அறிந்து அதை அங்குள்ள தனது நண்பன் தங்கியிருந்த இடத்தில் அவனுக்கே தெரியாமல் மறைத்து வைத்து உடனடியாக தாயகம் திரும்பினார்.
இந்தியாவில் ராணாவுக்கு எதிராக கடுமையாக சோதனைகள் செய்தார்கள். நடந்த எல்லா சோதனைகளிலும் எதுவும் கிடைக்கவில்லை. ராணாவை மடக்க நினைத்த அதிகாரிகள் ஏமாற்றத்துடன் சென்றனர். காலம் கடக்க கடக்க. பண நெருக்கடியால் மிகவும் ராணா வருத்தப்பட, வேறு வழியில்லாமல் பல்வேறு நபர்களின் உதவிகளை நாடினார்.
ஆனால் அவர்கள் சிரமம் எடுத்தும்,தங்கக்கட்டிகளை இந்தியாவுக்கு கொண்டுவர முடியவில்லை. அப்பொழுது தான் தொழிலில் வளர்ந்து வந்த ஆதித்யா, ராணாவை அணுகி தங்கக்கட்டிகளை தான் எடுத்துவருவதாக கூறினான்.
அவனது தோற்றத்தையும் அவன் கூறிய வார்த்தைகளையும் கேட்ட ராணாவுக்கு சிரிப்பு தான் வந்தது.
” பெரிய பெரிய ஜாம்பவன்களால் முடியாததை நீ முடிச்சிடுவியா ??” ஏளனமாய் எல்லி நகையாடினார்.
எழுந்த கோபத்தை தன் நெஞ்சில் தக்கவைத்துக்கொண்ட ஆதித்யா சமயம் வரும்பொழுது நஞ்சாய் அவனுக்கே திருப்பி தர காத்திருந்தான்.
“ஒரு வாய்ப்பு குடுங்க இதுல உங்களுக்கு எந்த நட்டமும் ஏற்ப்பட போவதில்லையே ” – அமைதியுடன் கேட்டான். நம்பிக்கையே இல்லாமல் ஒப்புக்கொண்டார்.
அப்பொழுது ஆதித்யா இருபத்தைந்து வயது வாலிபன். தங்கத்தை வெற்றிகரமாக கொண்டு வந்தால் அதற்கு கைமாறாக கொண்டுவரும் தங்கத்தில் பாதி பங்கு தனக்கு வேண்டுமென்று கேட்டான்.
இவன் எங்கே கொண்டு வர போகிறான் என்கின்ற அலட்சியத்தில் ராணாவும் ஒப்புக்கொண்டு ஆதித்யாவின் டீலுக்குத் தலையாட்டினான்ர்.
தங்கத்தை தரம் மாறாமல் எடை குறையாமல் சொன்னபடி சொன்ன தேதியில் ராணாவிடம் கொண்டுவந்து சேர்த்தான் ஆதித்யா. மிரண்டு போனான் ராணா. என்ன செய்வது என்று புரியாமல் ஆதித்யாவுக்கு சலாம் அடித்து நன்றி கூறினார் ராணா.
“எப்படி உன்னால முடிஞ்சிது ??”என்று ராணா எத்தனையோ முறை கேட்டும், ஆதித்யா அதனைப்பற்றி வாய் திறக்கவே இல்லை. ஆனால் அந்த ரகசியம் ஆதித்யாவுக்கும் , அவனது வலது கை நாகேந்திர ப்ரதாப் என்கின்ற (நாகா)க்கும் மற்றும் அவனது நெருங்கிய கூட்டாளிகளும் மட்டுமே தெரிந்திருந்தது. அந்த ரகசியம் இப்பொழுது வரை ரகசியமாகவே உள்ளது.
ஆதித்யாவின் இந்த செயல் மும்பை நிழல் உலகின் தாதாக்களின் மத்தியில் பெருமையாக பேசப்பட்டது. ஆனால் ஆதித்யாவின் பெயர் பெரிதாக வெளிவரவில்லை. அப்படி இருக்க தங்கம் கையில் கிடைத்ததும் ராணா தன் செல்வாக்கை வைத்து மொத்த தங்கத்தையும் தானே எடுத்துக்கொண்டு ஆதித்யாவுக்கு தண்ணி காட்ட திட்டமிட்டதோடு நிறுத்தி விடாமல். அவனையும் அவனது ஆட்களையும் கொலை செய்ய ஆட்களை அனுப்ப, அதில் ஆதித்யாவின் கூட்டாளி மாலிக் மஸ்தானின் உயிர் பறிபோனது.
வாழ்க்கையில் சந்தித்த பலவித ஏமாற்றங்களில் ஏற்கனவே நிலைகுலைந்து இருந்த ஆதித்யாவுக்கு, ராணா செய்த துரோகம் ஆத்திரத்தை கிளப்பியது. மஸ்தானின் உயிர் பறிபோனதில் தீராத வெறி கொண்ட ஆதித்யா கொடிய மிருகமாக உருவெடுத்தான். அதுவரை அவனை ஒரு துரும்பாக நினைத்திருந்த ராணா அது துரும்பல்ல.உயிரை பறிக்கும் கூர்வாள் என்பதை அறிந்தார்.முதன்முதலாக ஆதித்யாவின் இன்னொரு முகத்தை ராணா உட்பட மும்பையின் நிழல் உலக தாதாக்கள் அனைவரும் கண்டு மிரண்டனர்.
ராணாவை வலுக்கட்டாயமாக அவன் வீட்டில் இருந்து தரதரவென்று மற்ற தாதாக்கள் கூடியிருக்கும் சபைக்கு இழுத்து சென்று அவர்கள் முன்பு வீசிய ஆதித்யா மற்றும் அவனது ஆட்கள். அங்கிருந்து தப்பி ஓட நினைத்த ராணாவை பிடித்து ஓங்கி எட்டி உதைத்து கீழே தள்ளினான். அதை சற்றும் எதிர்பாராத ராணா கீழே விழவும்,
” துரோகி நம்புனவங்களுக்கு துரோகம் பண்ற உன்னை மாதிரி ஆளுங்க இந்த உலகத்துல வாழவே கூடாது. உன் சாவு எல்லாருக்கும் ஒரு பாடம். ” – கர்ஜித்தான். வழிகளில் தீப்பொறிகள் தெறிக்க, அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே மாறி மாறி கொடுமையான ஆயுதங்களால் ராணாவை தாக்கினான். ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கிடந்தார் ராணா.
ராணாவை மிருகம் வேட்டையாடுவது போல வேட்டையாடினார்கள் ஆதித்யாவின் ஆட்க்கள். தட்டிக்கேட்கவும், தடுக்கவும் அங்கிருந்த யாரும் தயாராய் இல்லை. உடம்பெல்லாம் ரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்தததும் மயங்கி சரிந்தார் ராணா .
” என்னை ஏமாத்தணும்னு நினைச்சா முடிவு இப்படி தான் இருக்கும்.இங்க இருக்கிற எவனை பார்த்தும் என்னாகும் பயம் இல்லை. முடிஞ்சா என்னை கொல்லுங்க டா “-என்று தன் பார்வையாலே எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றான்.
ஆதித்யாவை பார்த்து நிழல் உலகமே அதிர்ந்தாலும். ராணா குருவின் மகன் சிவகுரு மற்றும் தன் தந்தையின் சாவுக்கு காரணமாயிருக்கும் ஆதித்யாவை பழிதீர்க்க வெறிகொண்டு காத்திருக்கிறான் .
தர்மத்தை நிலைநாட்ட அதர்மத்தை கைது செய்து கர்வத்துடன் வரும் அர்ஜுனின் பாதையும். அதர்மத்தை துடிக்க துடிக்க தன் கையால் வேட்டையாடி இன்னும் போதாது என்கின்ற வெறியுடன் எதிர்திசையில் வரும் ஆதித்யாவின் பாதையும் இணையுமா ?? இணைந்தால் என்னாகும் ??
