6.வேய்ந்தனனின் வல்லினம்

                  6. வல்லினம்

ருத்ரஜித்தின் ஜாகுவாரோ, சீறிப் பாய்ந்துக் கொண்டிருந்தது. அவனுடன் பயணித்த வைகைக்கு, வயிற்றுக்குள் ஊசிப்பட்டாசு முதல் சரவெடி வரை பலவெடிகள் வெடித்த வண்ணம் இருந்தது. கடந்த ஒருவாரக் காலம் மும்பையில் எப்படி போனதென்றே தெரியவில்லை. தற்போது அதற்கு நேர்மாறாக இன்று திருப்பத்தூரை நோக்கி செல்கின்ற இந்த பயணத்தை நினைத்து பயந்தவாறே அவனுடன் வந்தான் வைகைச்செல்வன்.

இந்த ஒரு வாரக்காலத்தில் ருத்ரஜித்தின் வீட்டிலிருந்து, பிரகல்யாவை பெண்பார்க்க வந்தவர்கள், பெண்ணை உறுதி செய்யும் பொருட்டு பூவைத்துவிட்டே சென்றிருந்தனர்.  ருத்ரஜித்திற்கு அனைத்தும் தெரிந்தும் அவன் தடுக்கவோ, அல்லது தன் மறுப்பினை தெரிவிக்கவோ இல்லை. 

பெண்பார்க்கும் படலத்தில் சாலாவும் உடன் சென்றதால், அங்கு நடந்த அனைத்து விசயங்களையும் அவள் மூலம் தெரிந்துக் கொண்டிருந்தான். அப்படி தெரிந்த ஒரு விசயத்தில் ருத்ரஜித்தின் மனம் உலைகலனாக கொதித்தது.

அந்த கோபத்தைத்தான் மகிழுந்தை வேகமாக செலுத்தியபடிக் காட்டிக் கொண்டிருந்தான் ஆணவன்.

“பாஸ். இது மக்கள் அதிகம் வர ஏரியா பாஸ். கொஞ்சம் வேகத்தை குறைச்சா நல்லது பாஸ்.” என்று தட்டித்தடுமாறிக் கூறியிருந்தான் வைகை.

“எனக்கே அட்வைஸ் பண்றியா, வைகை?” என்றவனின் கேள்விக்குள் மறைந்த கோபத்தை நன்கு உணர்ந்தவன், அடுத்த நொடியே மறுப்பாக தலையாட்டினான்.

“இல்லை பாஸ். நீங்க ஓட்டுங்க.” என்று வாயை மூடிக் கொள்ள,

“எதுக்கு? அப்போதான் குறுக்க எவனாவது வருவான். அவன் மேலயே கொண்டு போய் காரை ஏத்துறதுக்கா? ” என்றவன் கூறியநொடி, வைகையின் கருவிழிகள் பயத்தில் பரதம் ஆடியதுதான் மிச்சம்.

‘ரோஸ்டைத் திருப்பி போட்டாலும் குத்தம் சொல்றாரு. திருப்பாமால் விட்டாலும் குத்தம் சொல்றாரே.’ என்றவனின் மனம் அந்தநொடிக் குமுறியது.

“ரொம்ப யோசிக்காத? நேத்து சாலா என்ன சொன்னா?” என்றவன் அதே விசயத்தை இரண்டாவது முறையாக கேட்டான்.

“பொண்ண நேர்ல பார்த்ததும் வைஜெயந்தி அம்மாக்கு பிடிச்சுப் போச்சுனு சொன்னாங்க.”

“அடுத்து, என்ன சொன்னா? அதாவது வீட்டுக்கு வந்த அப்புறம் நடந்தது என்ன?” என்றான் மறுபடியும்.

‘இவரு என்ன தெரிஞ்சதையே திரும்பவும் கேட்குறாரு.’ என்று மனதில் புலம்பிக் கொண்டவன், “அது பொண்ணோட தங்கையையும் பிடிச்சுப்போய், அஜ்ஜூ சாருக்கு, கேட்கலாமானு இந்திரன் ஐயாகிட்ட, அம்மா பேசுனதா சொன்னாங்க. அப்புறம் இந்திரன் ஐயா இருந்துகிட்டு, அந்த பொண்ணு சின்னப்பொண்ணுனு மறுப்பு தெரிவிச்சதா சொன்னாங்க.” என்றதும், சில வினாடிகள் மௌனமே ஆக்கிரமித்தது இருவருக்கும் இடையில்…

மௌனத்தை கலைக்கும் வண்ணம், மீண்டும் வைகையே பேச்சினைத் தொடர்ந்தான். 

“ஆனால் பாஸ் அஜ்ஜூ அண்ணாக்கு பேசாமல் அந்த பொண்ணையே பேசி முடிச்சா பரவாயில்லைனு தான் நானும் நினைக்குறேன்.” என்று வெகுளித் தனமாக அவன் கூறியிருக்க,

பாவம் அவன் அறியவில்லை சத்தமின்றி ருத்ரஜித்தின் கோபத்தீயிற்கு அவன் தூபம் போட்டுள்ளான் என்று.

அடுத்தநொடியே ருத்ரனின் முகம் கடுமையைத் தத்தெடுக்க, கோபத்தில் சிவந்த அவனது விழிகள் வைகையை பொசுக்கியது. அவனது பார்வையில் வைகையின் முகம் குப்பென்று வியர்க்க, வாயை மூடியவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தான். இதை சற்று முன்பே செய்திருந்தால் கூட அவனது கோபத்திற்கு ஆளாகாமல் இருந்திருக்கலாம்.

அடுத்த அரைமணி நேரத்தில், பிரகல்யாவின் வீட்டினை வந்தடைந்தனர் இருவரும். மகிழுந்திலிருந்து அவன் இறங்கிய தோரணையிலேயே வைகைக்கு தெரிந்துவிட்டது, நிச்சயம் பெண்ணை பிடிக்கவில்லை என்று கூறிவிடுவான் என்பது.

அவன் வரவிருப்பதை, வைகை முன்கூட்டியே கூறியிருந்ததால், தன் வருங்கால மருமகனை ஓடிவந்து வரவேற்றார் சத்யராஜ் மற்றும் சரஸ்வதி தம்பதியினர். அவர்களைக் கண்டதும் கடமைக்கென புன்னகைத்தவன், சிறு தலையசைப்போடு வீட்டிற்குள்ளே அடியெடுத்து வைத்தான்.

“உட்காருங்க மாப்பிள்ளை.” என்றவர் கூறிய நொடி, அந்த பெரிய இருக்கையில், தனக்கே உரிய தோரணை எதுவுமின்றி, மிக சாதாரணமாக அமர்ந்துக் கொண்டான்.

தங்களது வீட்டைக் காட்டிலும் பலமடங்கு சிறிய வீடுதான் என்ற போதும் அவனது கண்கள் ரசனையாக அவ்வறை முழுவதையும் பார்த்தது.

அதைக் கண்டு புன்னகைத்த சத்யராஜோ, “எல்லாம் பிரகல்யாவோட கைவண்ணம் மாப்பிள்ளை. எல்லாம் பார்த்து பார்த்து செய்வா.” என்றார் பெருமைப் பொங்க.

“ஓ நைஸ்.” என்று முடித்துக் கொண்டவனின் கண்கள் நாலாபுறமும் ஒருத்தியை மட்டும் தேடியது. அதற்குள் சரஸ்வதியோ, மாம்பழச்சாறை எடுத்துக்கொண்டு வந்து ருத்ரஜித்திற்கும், வைகைக்கும் கொடுத்தார்.

அதனைப் பெற்றவன் ஒரு மிடறு அருந்தியபடி, தலை நிமிர அங்கிருந்த அறையிலிருந்து சிறு குழந்தைகள் ஒவ்வொருவரின் தலையும் தெரிய, தன்னை எட்டிப் பார்க்கும் குழந்தைகளைக் கண்டு கன்னக்குழி விழ சிரித்தான் ருத்ரஜித்.

அவனது செயலில் மகிழ்ந்த குழந்தைகள், “ஐ மாமா அழகா சிரிக்குறாரு அக்கா.” என்று துள்ளிக் குதிக்க, “எங்க?” என்று அவர்களோடு சேர்ந்து ஆர்வமாக அபூர்வா எட்டிப்பார்க்க, அந்நொடி குழந்தைகளைக் கண்டு ருத்ரஜித் கண்ணடிக்க, அந்த கண்ணடிப்பினை பெற்றுக் கொண்டது என்னவோ அபூர்வா தான். 

அவளைக் கண்டதும் இன்ப அதிர்ச்சி அடைந்தவன் மனமோ, ‘சரியான ஆள்கிட்ட தான் போய் சேர்ந்திருக்கு’ என்று நினைத்துக் கொண்டபடி சிரித்தான். அவனது புன்னகையில் பட்டென்று கண்களை பெரிதாக விரித்த அபூர்வா, நாக்கை கடித்தபடி அறையினுள் சென்று மறைந்துக் கொண்டாள்.

“என்னாச்சுடி. உங்க மாமாவை பார்த்தியா?” என்று பிரகல்யா ஆவலோடு தன் தங்கையிடம் கேட்க, “பார்த்தேனே. ஆனால் அக்கா மாமா நேர்ல பாக்க செமையா இருக்காரு.” என்று அவன் புகழ்  பாடியதில், அன்னிச்சையாக சிவந்தது பிரகல்யாவின் முகம்.

“பார்ரா வெட்கமா?” என்றவள் சிரிக்க, “அபூர்வா இங்க வாமா?” என்று அவர்களது சித்தி அழைக்கவும் விரைந்து சென்றாள் பெண்ணவள்.

பிரகல்யாவை பெண் பார்க்க வந்த அன்றே, சத்யராஜ் மற்றும் சரஸ்வதியின் முக்கிய உறவுகள் வீட்டினை ஆக்கிரமித்திருக்க, குழந்தைகள் பெரியவர்கள் என வீடே கல்யாண கலையில் இருந்தது. அனைவரது மகிழ்ச்சியின் ஆயுள் மிகக்குறைவு என்று உண்மையாக வருத்தப்பட்டுப் போய், அமைதியாக பார்த்தான் வைகைசெல்வன். அந்த நிமிடம் வரை நிச்சயம், திருமணத்தை ருத்ரஜித் மறுத்துவிடுவான் என்று ஆணித்தரமாய் நம்பியது அவன் மனம்.

சித்தியின் அருகே சென்ற அபூர்வாவோ, “ஐ லட்டு” என்று அவர் வைத்திருந்த தட்டிலிருந்த லட்டுவை எடுக்க போக, பட்டென்று பெண்ணவளின் கைகளை தட்டிவிட்டவரோ,

“அபூர்வா, உங்க மாமாக்கு கொண்டு போய் ஸ்வீட் கொடு. நீ அப்புறம் சாப்பிடுவியாமாம்.” என்று கூறிய சித்தியோ, லட்டு வைத்திருந்த தட்டை அவளது கைகளில் கொடுக்க, வாங்கிக் கொண்டவள், தன் வருங்கால மாமாவிற்கு கொடுப்பதற்காக துள்ளிக்கொண்டு சென்றாள்.

“இவ என்னோட இரண்டாவது பொண்ணு அபூர்வா. செகென்ட் இயர் படிக்குறா.” என்று தன்மகளை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்த, சத்யராஜைக் கண்டு மெலிதாக முறுவலித்தான் ருத்ரஜித்.

அந்த முறுவலுக்கு பின் மறைந்திருக்கும் சூட்சமம் அவன் மட்டுமே அறிந்த ஒன்று அல்லவா. ஏற்கனவே அறிமுகம் ஆனவளுக்கு மீண்டும் ஒரு அறிமுகமா என்று தான் தோன்றியது அவனுக்கு.

“லட்டு எடுத்துக்கோங்க.” என்று புன்னகையோடு அவள் இனிப்பு தட்டினை நீட்ட, அவளை அழுத்தம் நிறைந்த பார்வை பார்த்தவன், “இரண்டு லட்டு எடுத்துக்கட்டுமா?” என்றான் இரு அர்த்தம்பட. பாவம் அவள் தான் அதை உணரவில்லை.

“தாராளமா எடுத்துக்கோங்க மாமா.” என்று உரிமையுடன் அவள் பேசிய நொடி, அவனது இதயத்தில் சுகந்தம் பரவ, இனிப்பு ஒன்றினை உண்டவன், “சோ ஸ்வீட்” என்றான் லட்டை ருசித்துக்கொண்டே. 

புன்னகைத்தவளோ, “வீட்டிலயே செஞ்சது.” என்றாள் பெருமிதம் பொங்க. 

பின் வைகைக்கும், இனிப்பை அவள் நீட்ட, ருத்ரஜித் வைகையை திரும்பி பார்த்த பார்வையிலேயே, “எனக்கு வேண்டாம்மா.” என்று மறுப்பாய் தலையாட்டியவனது நாக்கோ, ‘லட்டு போச்சே’ என்று கவலையோடு பார்த்தது.

அபூர்வாவோ தனது சித்தியிடம் சென்றவள், தட்டை அவர் கைகளில் ஒப்படைத்துவிட்டு, பேசிக் கொண்டிருந்தாள்.

சத்யராஜ் ஒருபுறம் தனது மருமகனிடம் அளவலாவிக் கொண்டிருக்க, அவனது பார்வையோ தனக்கு நேரெதிராக இருந்த அபூர்வாவின் மீதே இருந்தது. 

தனது அகன்ற பெரிய விழிகளின் நயனங்களை ஆட்டியபடி, தனது முத்துப்பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருப்பவளின் மீதே, ரசனையாக படிந்தது ருத்ரஜித்தின் பார்வை. அவள் பேசும்போது அசைந்தாடும் கற்றைக் கூந்தலை கவனிப்பதா? இல்லை இதழ்கடையினோரம் தோன்றும் சிறு குழியினை கவனிப்பதா? என்ற யோசனையோடு அவனது பார்வை அவள் மீதே படிந்துக் கொண்டிருந்தது.

அவனின் பார்வை செல்லும் திசையை சரியாக கணித்த வைகைக்கோ பக்கென்று ஆக, ‘ஆத்தி இவரு பார்வையே சரியில்லையே’ என்று நினைத்துக் கொண்டே, அவனது காதருகே சென்றவன் கிசுகிசுத்தான்.

“பாஸ். நீங்க பார்க்க வந்திருக்க பொண்ணோட தங்கச்சி அவங்க. இப்படி பார்த்தீங்கனா ரொம்ப தப்பாகிடும்.” என்று சன்னமாக கூறியதும், அவனை திரும்பி ஒரு பார்வைதான் பார்த்தான் ருத்ரஜித். அவனது பார்வையில், தூக்கிவாரிப்போட, “பாஸ்… அதுவந்து.” என்று தயங்கியவனுக்கு, அதற்குமேல் வார்த்தைகளே எழவில்லை.

ஏற்கனவே அவன்மீது கோபத்தில் இருந்த ருத்ரஜித், தன் கண்களாலே அவனை முறைத்தபடி, வேறு எதுவும் பேசாமலிருக்க, ‘இவருகிட்ட சொல்லாமலே இருந்திருக்கலாம் போல.’ என்று சலிப்புடன் அமைதியாக நின்றுக் கொண்டான் வைகை.

“இன்னும் பொண்ணை அறிமுகப்படுத்தாமல், ஊர்க்கதை எல்லாம் பேசிட்டு இருக்கேன் பாருங்க.” என்று வாய்விட்டு சிரித்த சத்யராஜோ, “பிரகல்யா மாப்பிள்ளை வந்திருக்காங்க. வாமா.” என்று அழைக்க, தனது தந்தையின் அழைப்பில், மஞ்சள் நிற சேலையில் தேவதைப் போல் வந்து நின்றாள் பிரகல்யா.

ஏற்கனவே பெண் பார்த்துவிட்டு சென்றாலும், அன்று அவனைக் காணாமல் தேடிய அவளின் கண்களுக்கு விருந்துப் படைக்க இன்றவன் வந்திருக்கவும், ஆசையும், ஆர்வமும் ஒருசேர தன்னவனை நோக்கினாள் பிரகல்யா.

அவனது அசரடிக்கும் பார்வையும், அவனது ஆளுமையான தோற்றத்தையும் கண்டவுடன் அவளுக்கோ தேகம் சிலிர்த்தது. மிக மெலிதாக இதழ்களை விரித்தவள், “ஹாய்.” என்றாள் பெண்களுக்கே உரிய சிறு நாணம் எட்டிப்பார்த்தபடி.

பதிலுக்கு “ஹாய்.” என்றவனின் பார்வையில் ஒருவித ரசனை தென்பட, இவையனைத்தையும் கவனித்த வைகைக்கோ, சற்று நிம்மதியாக இருந்தது.

‘அப்பாடா கல்யாண பொண்ணை தான் சைட் அடிக்குறாரு.’ என்று மனதில் நினைத்துக் கொண்டவன் பெருமூச்சொன்றை விட, அதை உணர்ந்தானோ என்னவோ, அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தான் ருத்ரஜித். அவனது பார்வையில் சட்டென்று அவன் அமைதியாகிவிட, மீண்டும் தன் பார்வையினைப் பிரகல்யாவின் மீது பதித்தான். 

“உங்க வீட்டுல எல்லாருக்கும் என் பொண்ணை பிடிச்சிருக்கு. கட்டிக்க போறவரு நீங்க. உங்களுக்கு பொண்ணை பிடிச்சிருக்குதானே மாப்பிள்ளை.” என்று அவனது மனதிலிருப்பதை, அறிந்துக் கொள்ளும் ஆவலோடு கேட்டார் பிரகல்யாவின் தந்தை சத்யராஜ்.

“அதான் நீங்களே சொல்லிட்டீங்களே மாப்பிள்ளைனு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மாமா.” என்றவனின் பார்வை ஒரே நேரத்தில் பிரகல்யாவின் மீதும், அவள் பின்னே கதவருகே, ஆவலோடு எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த, அபூர்வா மீதும் படிய, அதைக் கண்டுக்கொண்ட வைகைக்கோ வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கியது.

நினைத்ததை நடத்தி முடிப்பவன் அவன் அல்லவா? கல்யாணத்தை நிறுத்த வந்திருந்தவன், ஒரே நொடியில் தன் முடிவினை மாற்றியிருக்க, அவன் பார்வை வேறு, இருபெண்களின் மீதும் ஒரே நேரத்தில் படிகின்றதே என்று எண்ணிய வைகைக்கோ, பக்கென்று இருந்தது.

அதன்பின் அவர்களிடமிருந்து விடைபெற்ற ருத்ரஜித்தோ, முன்னே செல்ல, அவன் பின்னே ஓடி வந்த வைகையோ, “பாஸ் உங்களை புரிஞ்சுக்கவே முடியலை. எதுனாலும் பார்த்து பண்ணுங்க பாஸ்.” என்று தவிப்போடு கூறினான்.

இங்கு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அபூர்வாவும், பிரகல்யாவும் வீட்டின் மாடியில் ஏறியிருந்தனர்.

“பார்த்து தான் பண்றேன்.” என்றவன் காரில் ஏறும் முன் அவ்வீட்டின் மாடியினைக் காண, அங்கு தன் தங்கைக்கு பின் மறைந்து நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் பிரகல்யா கண்களில் பட, அவளைப் பார்த்து கண் சிமிட்டியபடி வசீகரிக்கும் தனது அக்மார்க் புன்னகையை தவழவிட்டவனின் பார்வை அபூர்வாவின் மீதும் ஒருமுறை படிந்து மீண்டது.

அவன் மனவோட்டத்தை சரியாக புரிந்துக் கொண்ட வைகையோ, ‘இனி என்னல்லாம் நடக்கப் போகுதோ?’ என்று கவலையுடன் இருப்பெண்களையும் பார்த்தான்.

அதன்பின்னர் ருத்ரஜித் பின்னிருக்கையில் ஏறிக்கொள்ள, இம்முறை வைகை மகிழுந்தினை ஓட்டிக் கொண்டு சென்றான். 

அதன்பின்னர், நாட்கள் அதன் போக்கில் நகர, தன் தங்கையை அழைத்துக்கொண்டு வெளியே சென்றிருந்தாள் பிரகல்யா.

“நம்ம கடையில இல்லாத டிரஸ்ஸா இங்க கிடைக்க போகுது.” தன் தங்கையை குறைப்பட்டுக் கொண்டாள் பிரகல்யா.

“பிரக்ஸ், நம்ம கடை துணியை நம்மளே போட்டால் என்ன கிக் இருக்கு. இந்த பொட்டிக்ஸ்ல செம கலெக்ஷன்ஸ் இருக்கு. அதுனால இங்க தான், நீ எனக்கு துணி எடுத்துக் கொடுக்குற.” என்றாள் பிடிவாதமாக.

“உத்தரவு மன்னா. போய் எடுங்க.” என்று புன்னகையோடு அவளுடன் கடைக்குள் சென்றாள். கண்களை கவரும் துணிகளைக் கண்டதும் அபூர்வாவின் கண்கள் மகிழ்ச்சியில் விரிய, தன் தங்கையின் மகிழ்ச்சியைக் கண்டு ஆனந்தம் கொண்டாள் பிரகல்யா.

“போ உனக்கு பிடிச்சது எடுத்துக்கோடி.”

“கண்டிப்பா. இரண்டு டிரஸ் எடுத்துப்பேன்.” என்றவள் அங்கிருந்த ஒவ்வொரு உடையையும் எடுத்துப் பார்க்கத் தொடங்கினாள்.

“அக்கா இதுல எது நல்லாருக்கு?” என்றவளின் கைகளில் இராமர் பச்சை நிற லெகங்காவும், இளஞ்சிவப்பு நிற லெகங்காவும் இருந்தது.

“இராமர் கிரின் நைஸ்.” என்றவள் கூற, அடுத்த நொடியே அதை தேர்ந்தெடுத்தவள், “வெயிட்கா ட்ரை பண்ணி பார்த்துட்டு வரேன்.” என்று உடைமாற்றும் அறைக்குள் நுழைந்துக் கொள்ள, பிரகல்யாவும் அங்கிருந்த துணிகளைக் காண ஆரம்பித்திருந்தாள்.

“இளம் எலுமிச்சை நிற, கற்கள் பதித்த, தரையைத் தொடும் நீளமாக கவுன் வகை உடையினைக் கண்டவளுக்கு, அது மிகவும் பிடித்துப்போக, ஆசையாக உடையினைத் தடவிப்பார்த்தது பெண்ணவளின் கைகள்.

“இந்த டிரஸ் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கும் லியா.” அந்நிமிடம் கேட்ட பரிட்சையமிக்க குரலைக் கேட்டதும் யாரென்று உணர்ந்தவள் “விஷ்வா” என்று சொல்லிக்கொண்டே திரும்பினாள்.

“ஹாய் லியா?” என்றான் கண்களை சிமிட்டிக்கொண்டு.

“ஹாய். இங்க என்ன பண்றீங்க?” என்றவளின் பார்வையோ, எங்கு அவன் தன்னை பின்தொடர்கிறானோ என்று சந்தேகமாக படிந்தது.

“பிரெண்டு சிஸ்டர்க்காக டிரஸ் எடுக்க வந்தேன். அதோ அங்கயிருக்காங்க பாருங்க.” என்று பெண்ணவளின் முகப்பாவணைக் கண்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்தான் விஷ்வா.

“ஓ..ஓகே.” என்று புன்னகையுடன் முடித்துக் கொண்டவள் நகர்ந்து செல்ல,

“ஒரு நிமிசம் லியா. நான் சொன்னதை பத்தி எதாவது யோசுச்சீங்களா?” 

“எத சொல்றீங்க?” என்றவளுக்கோ குழப்பமாக தான் இருந்தது.

“அதான். உங்க அட்ரஸ் என் பிரெண்டு டைரியில இருந்துச்சே.”

“அப்போவே இதுக்கான பதிலை சொல்லிட்டேனே விஷ்வா. பக்கத்துல இருக்க ஹாஸ்பிடல் அட்ரஸ் எழுதி வைக்குறதுல என்ன விசயம் இருக்க போகுது?”

“அது இல்லை லியா. என் நண்பனுக்கு நடந்தது யாருக்கும் நடக்கக்கூடாதுனு நினைக்குறேன். எதுக்கும் நீங்க பாதுகாப்பா இருங்க லியா.”

“வாட். என்ன பேசுறீங்க? எனக்கு என்ன ஆபத்து வரப் போகுது. நான் நல்ல மூட்ல இருக்கேன். அதைக் கெடுக்காதீங்க ப்ளீஸ்.” என்றவள் அவனை செல்லுமாறு கைக்காட்ட , அவளை வருத்தம் நிறைந்த பார்வை பார்த்துக்கொண்டே சென்றான் விஷ்வா.

“யாருக்கா அவரு?” என்று உடைமாற்றியபடி வெளியே வந்த அபூர்வா கேட்க, 

“தெரிஞ்சவரு… அதவிடு, வாவ் பேபி ரொம்ப அழகா இருக்கடி.” என்றாள் புன்னகையுடன்.

“என் அக்கா செலக்சன் எப்போதுமே பெஸ்ட் தான்.” என்றாள் முகம் மலர்ந்தபடி. இருந்தும் தன் அக்காவிடம் பேசியவனைப் பற்றியே அவள் மனம் யோசித்தது.

“அக்கா அவரை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே.” என்று அவள் இழுக்கவும், பிரகல்யாவிற்கு புரிந்துவிட்டது காவல்நிலையத்தில் பார்த்த ஞாபகத்தில் கூறுகிறாள் என்று.

“எங்காவது பார்த்திருப்ப விடு.” என்று அவளது கவனத்தை திசைத் திருப்பியவளுக்கு ஒரே கவலைதான் எங்கு மீண்டும் அந்த நினைவு தன் தங்கையை பாதித்துவிடுமோ என்று.

“ஆனால் ஒன்னுக்கா. இவரு அழகா இருக்காரு. ஆனாலும் என் ருத் மாமாவிட கொஞ்சம் கம்மி தான்.” என்று பளிச்சென்று சிரித்தாள்.

“அடிவாங்குவ அபூ. போ இன்னொரு டிரஸ் எடுக்குறேனு சொன்னியே அத பாரு.” என்று பிரகல்யா நினைவுப் படுத்தியதும், மற்றொரு உடையைத் தேர்ந்தெடுக்க விரைந்தாள் சின்னவள்.

கடையிலிருந்து வெளியே வந்த விஷ்வா, தன் நண்பனிடமிருந்து விடைப்பெற்று அங்கிருந்து சென்றான். ஒரு குறிப்பிட்ட தூரம் அவன் சென்றிருக்க, அவன் செல்லும் பாதையில் அவனை இடைமறித்தான்  ஒருவன்.

“சார், நாங்க வந்த கார் ஓடாமல் நின்னுடுச்சு. கொஞ்சம் காரை இவங்களோடு சேர்ந்து தள்ள முடியுமா? நான் ஸ்டார்ட் பண்றேன். குழந்தைங்க வேற இருக்காங்க.” என்று விஷ்வாவிடம் உதவியினை நாடினான் அவன்.

கையில் குழந்தையை வைத்தபடி, நின்றிருந்த பெண்மணியைக் கண்டதும் இரக்கம் கொண்ட விஷ்வா, தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தியபடி அவர்களது காரின் அருகே சென்றான்.

“நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க.” என்று அவன் கூறியபடி திரும்ப, அவனது தலையிலேயே மரக்கட்டை ஒன்றால் பலமாக தாக்கியிருந்தான் மற்றொருவன், அதை எதிர் பாராதவனோ மயங்கியபடி கீழே சரிய, அவனை அள்ளிக் காரில் போட்டிருந்தனர் அந்த ரவுடிகள்.

மேலும் நடிக்க வந்த பெண்ணிடம் ஐநூறு ரூபாயைக் கொடுக்க, “அய்யே இது எங்க பத்தும். ஆயிரமாவது கொடுய்யா.” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டாள் அந்த பெண்மணி.

“அடிச்சு மூஞ்சியை உடைச்சிடுவேன்டி. குழந்தையை வெச்சுட்டு அஞ்சு நிமிசம் நின்னதுக்கு ஆயிரமா? போடிங்கு.” என்று கைகளை அந்த அடியாள் ஓங்கியநொடி, மிரண்டவள் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்.

பின் அந்த ரவுடிகளோ காரை உயிர்ப்பித்துக் கொண்டு யாரேனும் பார்க்கும் முன்னேரே அவ்விடத்தை விட்டுச் சென்றிருந்தனர்.

செல்லும் வழியில் யாருக்கோ தனது கைபேசியில் அழைப்பை விடுத்தவன், “டார்கெட்டை பிடிச்சாச்சுங்க முதலாளி.” என்று கூறியதும், இவர்கள் சென்ற வழியினை மறைத்தபடி வந்து நின்றது கருப்பு நிற ஜாகுவார்.

காரை நிறுத்தியவர்கள், “யார்ரா இவன்?” என்று அதிர்வுடன் பார்க்க, தனது காரிலிருந்து நிதானமாக இறங்கியபடி, தனது கூலிங் கிளாசைக் கழற்றி ஃஊப் என்று ஊதியிருந்தான் ருத்ரஜித்.

காரிலிருந்த நாலு ரவுடிகளும் தங்களது ஆயுதங்களை கையில் ஏந்தியபடி வெளியே இறங்க, அவர்களைக் கண்டு லேசாக இதழ் வளைத்து சிரித்தான்.

“யார்ரா நீ. எதுக்கு எங்க வழியை மறைச்சு நிக்குற?” என்று நாலு ரவுடிகளுக்குமே குழப்பமாக இருந்தது. இந்த ஆள் அரவமற்ற இடத்தில் இவன் எப்படி வந்தான் என்பது.

“ரொம்ப தப்பு பண்ணிட்ட. என்னை மரியாதை இல்லாமல் பேசி.” என்று மிடுக்காக  பின் பாக்கெட்டிலிருந்தை துப்பாக்கியை எடுத்தவன், “எங்க சுடலாம்.” என்று குறிப் பார்க்க, அவன் கையிலிருந்த துப்பாக்கியைக் கண்டு ஒரு நிமிடம் மிரண்டாலும், பயத்தை வெளிக்காட்டாமல் நின்றனர்.

“என்னடா பயம் காட்டுறியா? பொம்மை துப்பாக்கி தான அது.” என்றவன் கூறியபடி சிரிக்க, அவனோடு சேர்ந்து மூவரும் சிரித்தனர்.

அடுத்த நொடியே சத்தமின்றி குண்டு, சிரித்தவனது காலை கிழித்துக் கொண்டு செல்ல, மற்ற மூவருக்கும் பயத்தில் விழிகள் பிதுங்கி வெளி வராத நிலைதான்.

“இன்னும் ஐந்து குண்டு இருக்கு. உங்க நாலு பேரையும் கொல்ல, அஞ்சு செகன்ட் போதும். உள்ள இருக்கவனை எங்கிட்ட ஒப்படைச்சுட்டு, நான் பத்து என்றதுகுள்ள ஓடிருங்க.” என்றவன், “ஒன்று” என்று எண்ணத் தொடங்கியிருக்க, அடுத்த நொடியே மயங்கிய விஷ்வாவை கீழே அவன் முன்பு படுக்க வைத்தவர்கள், குண்டு பாய்ந்த வலியில் துடித்துக் கொண்டிருந்தவனைக் காரில் ஏற்றிக்கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மறைந்தனர்.

தன் முன்னே மயங்கிக் கிடந்த விஷ்வாவை, தூக்கியவன் தனது காரில் போட்டபடி விரைந்து அங்கிருந்து சென்றான். செல்லும் வழியில் மயங்கிக்கிடந்த விஷ்வாவினைக் கண்டவன்,  ” என் கேம்மை ஸ்பாயில் பண்ண யாரு வந்தாலும் சரி. அவங்க நிலைமை இதுதான்.” என்று அழுத்தமாக உரைத்துக் கொண்டது அவனின் உதடுகள் மட்டும் அல்ல, கண்களும் தான்.

மாயவனின் சதிவலையில்

வீழும் பெண்ணவளை

மீட்க வந்தவனோ – இன்று

மயக்க நிலையிலிருக்க…

வேந்தனவனின்

பார்வை ஒவ்வொன்றும்

பல மொழிகள் பேச,

அப்பார்வையில் வீழ்வாளோ!

இப்பெண்பாவை……!

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!