மலர்-3
மறுநாள்காலை ,
ஆனந்தின் பாட்டி சுந்தரிக்கு நகரின் மிகப்பெரிய மருத்துவமனையில் சிகிச்சைக்கு வர சொல்லி இருந்தான் டாக்டர் அருண். ஆம் !உங்கள் யூகம் சரிதான். முட்டி வலிக்காகதான் அவர் அங்கே வந்திருந்தார்.
அருகில் கணவனுடன் அமர்ந்திருந்தார். கணவர் கதிரேசனுக்கு ஏற்ற சுந்தரிதான் அவர். மனைவியின் சுந்தர முகத்தை பார்க்கும்போதெல்லாம் அவர் முகம் சூரியனாக பளபளகும்தான் . மற்றவர்களுக்கு சூரியனாக இருக்கும் கதிரேசன் மனைவிக்கும் பேரனுக்கும் மட்டும் குளிர்ச்சியான நிலாதான் . முடியாமல் தோளில் சாய்ந்திருந்த சுந்தரி,
“என்னங்க ! நான் பாத்ரூம் போகணும்”
“வா !” மெதுவாக கை பிடித்து அழைத்து சென்றவர் வெளியில் நின்று கொண்டார். “தாள் போடாத.பார்த்து நிதானமா போ”
“சரிங்க!” பதவிசாக சொன்னவர் மெதுவாக அடி எடுத்துதான் சென்றார்.
அமிர்தா அங்கு அவிழ்ந்திருந்த தலையை சரி படுத்திக் கொண்டிருந்தாள்.
வேலையை முடித்துக் கொண்டவள் உள்ளே சென்ற அந்த முதியவர் இன்னும் வரவில்லையே என்ற யோசனையுடன்,
“பாட்டி ! பாட்டி! ” கதவை தட்டினாள் . அவர் தாளிடாததால் அது திறந்து கொண்டது. கழிவறையில் அமர்ந்தவருக்கு ஏனோ சட்டென்று மயக்கம் வந்தது.
“பாட்டி! பாட்டி” என்று அவள் அழைத்து பார்த்தாள் . அவருக்கு கண்ணை திறக்க முடியவில்லை. அரைகுறையாக கண் திறந்தவாறு மெதுவாக அழைத்து சென்று முகம் கழுவி வெளியில் அழைத்து வந்தாள் . மனைவியை பார்த்து பதறியவர், “என்னம்மா ஆச்சு?” அமிர்தாவிடம் கேட்டார் மனைவியை அணைத்தபடி.
“தெரியல ! இருங்க வரேன் என்று சுந்தரியை மெதுவாக அருகில் இருந்த சேரில் அமர்த்தினாள் . உடனே ஓடிச் சென்றவள் பிபி பார்த்தாள் . அது மிகவும் குறைவாக இருந்தது.
“நீங்க எந்த டாக்டர் பாக்கணும்?”
“அருண் ” ஓட்டமாக ஓடியவள் அருணை அழைத்து வந்தாள் .
“பிபி பாருங்க” அவரப்படுத்தினான் அருண்.
“பார்த்துட்டேன் டாக்டர் பிபி அளவை சொன்னாள் . அதிர்ந்த அருண் “ஒடனே இவங்கள அட்மிட் பண்ணுங்க. சொல்லிக் கொண்டே அவருக்கு செலுத்த வேண்டிய மருந்தை எழுதிக் கொடுத்தான்” அனைத்தும் கண் மூடி திறப்பதற்குள் அவசரகதியில் நடந்தது.
விஷயத்தை கேட்டுக் கொண்ட ஆனந்த் அடுத்த பத்தாவது நிமிடம் அங்கிருந்தான்.
இவருக்கு தேவையானதை செய்து விட்டே தன்னுடைய வேலையை பார்க்க சென்றாள் அமிர்தா.
அருணின் அறிவுறுத்தல் படி அவருக்கு பிபி சரி செய்ய இரண்டு நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்க அறிவுறுத்தினான் . பிறகு முட்டி வலிக்கு ஆபரேஷன் செய்யவேண்டும் அதுவும் உடனடியாக என்று கூறி விட்டான்.
பாட்டிக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை. இந்த வயஸுக்கு இதெல்லாம் தேவைதானா ? கணவனிடம் எத்தனையோ கெஞ்சி பார்த்தார். அவரின் கவனிப்பு இவர் வாயை அடைத்து விட்டது. பேரனிடம் கேட்டு பார்த்தாள் . அவன் கண்டிப்பு இவரின் வாயை அடைத்து விட்டது.
“ஏண்டா இப்போ இந்த ஆபரேஷன் ரொம்ப அவசியமா ?” ஆனந்த் பயத்துடனே கேட்டான்.
“ஏண்டா ?”
“இல்லடா! எல்லாருக்கும் இது சக்ஸஸ் ஆகுமா ? சக்ஸஸ் ரேட் குறைச்சுதானே ?”
“ப்ச்! அதெல்லாம் பத்தி நீ கவலை படாத. நான் பார்த்துக்கறேன்” தோளில் தட்டி தைரியம் சொன்னான் அருண். இவனுக்குத்தான் கவலையாக இருந்தது.
நடுவில் ஒரு நாள் வந்து அமிர்தா இவரை பார்க்க வந்தாள்.
“ஹாய் பாட்டி! எப்படி இருக்கீங்க ?”
மலர்ந்த புது மலராக அவள் புன்னகையுடன் வந்ததை பார்த்தவருக்கு தானாக இதழ் புன்னகையை காட்டியது. ஆனால் அது வார்த்தைகளில் வெளிப்படவில்லை.
“ஏதோ இருக்கேன். எனக்கென்ன ?”
“என்ன இப்படி சொல்லிடீங்க ? நாளைக்கு உங்களுக்கு ஆபரேஷன் தானே ? அப்புறம் ஓடி ஓடி போகற உங்கள பிடிக்கறதுக்குள்ள எங்களுக்கு கால் வலி வந்துடுமே ?”
“அதுக்கு மேடம் ஓகே சொல்லணுமே ?” தாத்தாவின் குரல் அதட்டலாக வந்தது.
“ஏன் அதுக்கென்ன? சும்மா ஒரு சின்ன கட் சின்ன ஒட் அவ்ளோதானே அதுக்கு போய் வேண்டான்னா சொல்லுவாங்க ? என்ன பாட்டி?”
“காடு வா வாங்கறது வீடு போ போங்கறது . இதுல இந்த கிழவிக்கு இதெல்லாம் தேவைதானா ?”
“அது சரி இப்படி சொன்னா எப்படி ? பேரன் பேத்தியோட பேரன வளக்கற பொறுப்பில்லாம இப்படி பேசறீங்க?” இடுப்பில் கை வைத்து அவள் மிரட்டியதில் சுந்தரிக்கு சிறப்புதான் வந்தது.
“ஏதோ நீங்கல்லாம் சொல்லறீங்க” என்று அரைகுறை மனதோடுதான் ஒத்துக் கொண்டாள் .
“பை பாட்டி! நாளைக்கு நான் உங்கள வந்து பார்ப்பேனாம். இப்போ நீங்க நல்ல பிள்ளையா படுப்பீங்களாம் “என்று அவளை படுக்க வைத்து விட்டு போனாள் .
“பை தாத்தா! பை பாட்டி ! பை ”
வைதேகி நர்சிடமும் கை ஆட்டிக் கொண்டே சென்றவள் எதிரில் வந்தவன் மீது மோதி நின்றாள். அவளையும் அறியாமல் அவள் வாயில் இருந்து சாரி வந்தது.
சொல்லி விட்டு நகர்ந்தவளை அவனின் சொடக்கு சத்தம் நிறுத்தியது.
“இனிமே என்னை பத்தி என்னோட மேரேஜ் பத்தி பேசற வேல வச்சுக்காத.”
அவன் உயரத்திற்கு பொதுவாக பெண்களை அவன் குனிந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இவளை அப்படியே நேராகவே பார்த்தான்.
அவனை அவனின் கம்பீரத்தை அவனின் ஆளுமையை உயரத்தை மிடுக்கை செதுக்கிய உடற்கட்டை பரந்த கேசத்தை என்று பார்க்காத பெண்களும் இல்லை. ரசிக்காத பெண்களும் இல்லை . இவள் மட்டும் அவனின் கண்களை மட்டுமே பார்த்தாள் . அவனும்தான். அவனுக்கு இருக்கும் திமிரில் அவன் எப்போதுமே எந்த பெண்களையுமே ஏறெடுத்து பார்த்ததில்லை. பவித்ராவையும் அவன் தொழிலுக்காகவே பார்த்தான். ஆனால் அதையும் தாண்டி அவர்களுக்குள் அவர்களை அறியாமலேயே ஒரு நட்பு உருவாக ஆரம்பித்தது.
அன்று அமிர்தா பாட்டியிடம் பேசி விட்டுச்சென்றது அவளையும் அறியாமலேயே பாட்டிக்கு பேரனின் திருமண ஆசையை அதிகப்படுத்தியது. அதையே சாக்காக வைத்து “நீ எப்ப கல்யாணம் பண்ணிக்கிறியோ அப்ப நான் ஆப்ரேசன் பண்ணிக்கறேன்” என்று சொல்ல ஆரம்பித்து விட்டார். பேரன் விடுவானா ?
“நீங்க ஆபரேஷன் பண்ணாத்தான் பொண்ணு பாக்க போக முடியும்” என்றான். இவர்களின் செல்ல சண்டையை தனது முறுக்கிய மீசைக்குள் மறைத்துக் கொண்டார் தாத்தா. இறுதியில் வென்றது என்னவோ பேரன்தான் .
அதே சமயம் “என் பொண்டாட்டிய ஏமாத்திடாத பேரனே” என்று கட்டளை பிறப்பிக்க தவறவில்லை தாத்தா. மனைவிக்கு அறுவை சிகிச்சை உள்ளே நடந்து கொண்டிருந்தாலும் தாத்தா வெளியில் சொல்ல முடியாத அழுத்தத்தில் இருந்தார். அவருக்கு எல்லாமே அவர் மனைவிதான். திருமணத்திற்கு பெண் பார்த்த காலத்தில் ஆரம்பித்த அவர்களின் காதல் இதோ இன்னமும் தொடர்கிறது.
மகன் பேரன் அண்ணன் தம்பி எத்தனையோ உறவுகள் இருந்தாலும் கணவன் மனைவி என்பது தனி . காதலர்களாக இருக்கும் போது “கால் வலிக்குதுடா” சொல்ல வேணும். சொன்னால்தான் தெரியும். திருமணத்திற்குப் பிறகு வயிற்றில் பிள்ளை இருந்தால்” என்ன கால் வீங்கி இருக்கு? அவர்களே செய்வார்கள்.” வயதான காலத்தில்,” என்னம்மா? கால் வலிக்குதா?” ஏதோ ஒரு இணைப்பும் பிணைப்பும் செய்ய வைக்கும். பெண்கள் எப்போதுமே கேக்கவே வேணாம். அவர்களின் உள் உணர்வா அல்லது தாய்மையா? தானாகவே பார்த்து பார்த்து செய்வார்கள்.
“ஒரு வாய் காபி குடு”. அதிகாரமாக கேட்க முடியும். ஒரு நாளைக்கு எத்தனை தடவைதான் காபி குடுப்பீங்களோ? அதட்டலாகத் தான் பதில் வரும். ஆனால் அது அக்கறை. மற்றவர்களிடம் அது வராது. அன்னையைத் தவிர.
“இங்க பாரு ஆனந்த், நாங்க ரெண்டு பேருமே உயிரை பிடிச்சு வச்சுருக்கறது ஒனக்காகதான். உன்ன ஒருத்தி கைல புடிச்சு கொடுத்துட்டா எங்களுக்கு போதும். எங்க காலத்துக்கு அப்புறம் நீ தனியா நின்னுட கூடாது. உன்ன பெத்தவங்களோட கடமையும் எங்களுக்கு இருக்கு. சீக்கிரமா ஒரு பொண்ண பாக்கற வழிய பாரு. முதல்ல ஏதாவது சைட்ல ரிஜிஸ்டர் பண்ணு ”
‘பாட்டிதான் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க. நீங்களுமா ?” அவன் கண்ணில் வேதனை தெரிந்தது. பேரனின் கையில் தட்டிக் கொடுத்தவர், “ஒருத்தனுக்கு வாழ்க்கைல எல்லாமே தப்பவே நடக்காதுப்பா”
“ஓகே தாத்தா! ஒன் வீக்ல பண்ணறேன்” அரைகுறை மனதோடு சொன்னான் . அவன் வருங்கால மனைவியை பார்க்கும்போது அவனே தலை கீழாக மாறிவிடுவான் என்று தாத்தா நினைத்தார்.
அவன் வாழ்க்கையே தலை கீழாக மாறப் போகுதே என்று ஆத்தர் நினைத்தார்.
“அதெல்லாம் முடியாது. இப்பவே பண்ணு . அப்பதான் என்னால சுந்தரியை சமாளிக்க முடியும்”
“ஏன் தாத்தா இப்படி பொண்டாட்டிக்கு பயப்படறீங்க ? உங்க முறுக்கு மீசையை பார்த்தா ஊரே பயப்புடுது. ஆனா நீங்க ?”
“அதெல்லாம் கல்யாணம் பண்ணி பாருடா பேராண்டி! அப்ப புரியும்.” இருந்த கடின நிலைமையை கடக்க இருவருக்குமே கடினமாகத்தான் இருந்தது. ஏதேதோ பேசி பொழுதை கழித்தனர் .
அருண் வந்து, “ஒன்னும் பயப்பட வேண்டாம். ஆபரேசன் நல்லபடியா முடிஞ்சுது. கொஞ்ச நேரம் மயக்கத்துல இருப்பாங்க. பயப்படாதீங்க தாத்தா. ஆனந்த் உன்கிட்ட அப்புறமா பேசறேன். டேக் கேர்”
தாத்தாவை கண்களால் காட்டி விட்டு போனான்.
தொடரும்…
