காதல் கணம் -21

ஒரு‌‌ தகவல். நேற்று இரண்டு அத்தியாயங்கள் (19&20) பதிவிட்டிருந்தேன் ப்ரண்ட்ஸ். யாரேனும் தவற விட்டிருந்தால் வாசித்துவிடவும்.

காதல் கணம்-21

வீசி மறுநாள் ஷ்ரதாவை புத்தகக்கடைக்கு வரச்சொன்னவன், தான் தெரிந்துகொண்டதை சொல்லும்விதமாக தனக்குள்ளேயே தயாராகிக் கொண்டிருந்தான்.

ஆனால், அவள் தன்னருகில் நெருங்கியதும் அவளை சோதிக்கும் விதமாக, “ஷ்ரதா, நான் உங்கப்பா எங்க ரெண்டு பேர்ல யாரை உனக்கு ரொம்பப் பிடிக்கும்?” என்றான்.

அவள் தன் மனதிலிருப்பதை அவனுக்கு உணர்த்தும் விதமாக, அவனை உரசி நின்று, எக்கி அவன் கன்னத்திலொரு முத்தம் பதித்தாள்.

வீசிக்கு அவள் முத்தம் கொடுத்தவிடம் பற்றியெரிந்தது. யோசியாமல் பளாரென அவள் கன்னத்திலொரு அறைவிட்டான்.

கண்ணீர் கரகரவென்று கன்னத்தில் வழிய, அவன் கூறவந்ததை கேட்காமலேயே வெளியே ஓடிவிட்டாள் ஷ்ரதா.

அவளை அறைந்துவிட்டு, “சே! நான் ஏன் அவளை அறைஞ்சேன்? அம்மா சொன்ன மாதிரியே நிதானம்ங்கிறது சுத்தமா என்கிட்ட இல்ல.” என்று தன்னையே கடிந்துகொண்டான் வீசி.

மறுநாளே ஷ்ரதா அழைப்பு விடுத்து பேசியிருந்தால் கூட வீசி அதற்காக மனமுவந்து மன்னிப்பு கேட்டு அவ்விஷயத்தை அத்தோடு மறந்திருப்பான். ஆனால், கிட்டத்தட்ட பத்து நாட்களாகியும் ஷ்ரதா அவனை தொடர்பு கொள்ளாதது தான் அவன் மனதைப்போட்டு மாவாய் பிசையவாரம்பித்தது. கண்ணில் விழுந்த தூசு போல் தினம் உறுத்தி திணறடித்தது.

அடிக்கடி அவள் பேச்சும், முகமும் மனக்கண்ணில் தோன்றி மறைந்ததில் வீசி அவனாகவே இல்லை.

காதிற்குள் ‘ஐ லவ் யூ.. ஐ லவ் யூ’ என்று அவள் குரல் வேறு அகாலத்தில் கேட்டுக் கொண்டிருந்தது.

‘ஒருவேளை இது தான் காதலா?’ என்று முதல்முறையாக வீசி மனம் லேசாகி பறப்பது போல் உணர்ந்தான்.

ஒவ்வொருமுறை ஷ்ரதாவைப் பற்றி சிந்திக்கும்போதும் மனம் மகிழ்ச்சியாக இருந்தது. ‘மேடம் நமக்கு மேல கோபக்காரங்களா இருப்பாங்கப் போலயே?’ என்று தனிமையில் சிரித்துக்கொண்டான்.

‘எவ்வளவு நாள் கோபம் தாக்குப் பிடிக்குதுன்னு தான் பார்ப்போமே?’ என்று வம்பாக மேலும் இரண்டு நாள் பொறுத்துப் பார்த்தான். ம்ஹீம்! அவள் தரப்பிலிருந்து எந்த முன்னேற்றமும் இல்லை.

‘ஜாடிக்கேத்த மூடி தான்’ என்று சிரித்துக்கொண்டு, தானே முதல்முறையாக வழிய சென்று அவளிடம் பேச முடிவு செய்தான் வீசி.

முதல்முறை உண்மையாகவே அவள் மீதுள்ள ஈடுபாட்டால் அவளை சந்திக்கச் செல்கிறோம்; வெறுங்கையோடு செல்வதா? என்று தனது சட்டைப்பையை தடவிப் பார்த்தான். நேற்று அவன் அப்பா உடுமாற்றிற்காக சட்டையெடுக்கச் சொல்லி கொடுத்திருந்த பணம் ரூபாய் ஆயிரம் மட்டும் சொலையாக இருந்தது. இதில் ஏதாவது வாங்கிவிட்டு திருடுபோய்விட்டது என்று வீட்டில் பொய் சொல்லிக் கொள்ளலாம் என்பது அவன் திட்டமாக இருந்தது.

அத்திட்டத்தின் முதல்பகுதியாக ஆவணிமூலவீதி சென்று, தேடி அலைந்து ஒரு வெள்ளி மோதிரத்தை வாங்கினான் வீசி. பிறகு, தன்னை நினைத்தே சிரித்துக்கொண்டு அவள் கல்லூரிக்குச் சென்றான்.

கல்லூரியை நெருங்கியதும் மீண்டுமொருமுறை தனது சட்டையை இழுத்து சரிசெய்து கொண்டு, பேண்ட் பாக்கெட்டிலிருக்கும் மோதிரப்பெட்டியை தொட்டுப் பார்த்துக்கொண்டே அவளைத்தேடி உள்ளே சென்றான்.

வகுப்பில் பாடம் கவனித்துக் கொண்டிருந்த ஷ்ரதா, சாளரம் வழியாக வீசியைப் பார்த்ததும் வெலவெலத்துவிட்டாள். இருப்பினும், அவனது சைகையில் பேராசிரியரிடம் ‘எஸ்கியூஸ்’ கேட்டுவிட்டு வெளியே வந்தாள்.

தனிமையான இடமாகத் தேடி அவளுடன் அரசமரத்தடியில் வந்து நின்ற வீசி, அங்கு மரத்தில் சுபா-சுந்தர் என்று செதுக்கப்பட்டிருப்பதை பார்த்துக்கொண்டே, “அன்னைக்கு நான் அப்படி முரட்டுத்தனமா நடந்திருக்கக்கூடாது. ச்சே! சாரி ஷ்ரதா. உன்னை அடிச்சிட்டு எனக்கு தூக்கமே இல்ல தெரியுமா? என் மேலயே எனக்கு கோபம்.” என்று அவள் மனதை வார்த்தைகளால் வருட முயன்றான்.

அவன் மன்னிப்பு வார்த்தைகளில் உலுக்கப்பட்ட பூமரமாய் உள்ளுக்குள்ளேயே அதிர்ந்து உதிர்ந்து கொண்டிருந்தாள் ஷ்ரதா.

பின்னே வீசியின் வாயிலிருந்து அவ்வார்த்தைகள் வருவது சுலபமா என்ன?

“நான் தான் அப்படி அவசரப்பட்டு அடிச்சிட்டேன். நீயாவது அடுத்து வந்து பேசியிருக்கலாம் இல்ல? ஆனா, நீ அப்படி பேசாம இருந்தது தான் எனக்குள்ள இருந்த காதலை என்னையே உணர வச்சது. நீ நெனச்சிருக்கலாம் நான் உன்னை காதலிக்கவே இல்லைன்னு. ஆனா, அது இப்ப உண்மை இல்ல ஷ்ரதா” என்றவனுக்கு பதில் சொல்ல முடியாமல், ஒருவித அலைப்புறுதலுடனே நின்றிருந்தாள் அவள்.

அவனுக்கோ ஒன்று அவள் கோபப்பட வேண்டும்; இல்லை, மன்னித்து தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஆக, இரண்டையுமே செய்யாமல் நின்றது சந்தேகத்தை உண்டாக்கியது.

“என்னாச்சி ஷ்ரதா?” என்று அவளருகில் நெருங்கி வர, ஓரெட்டு பின்னால் சென்றாள் அவள்.

அப்போதாவது அவள் தன்னை விலகிச் சென்று வெகுநாட்கள் ஆகிவிட்டன என்பதை வீசி புரிந்திருக்கலாம்.

ஆனால், அவன் அதை உணர்வதற்குள்ளாகவே கல்லூரியின் மதிய இடைவேளைக்கான மணி அடித்தது. மாணவர்கள் அங்குமிங்குமாக உலாவத் துவங்கினார்கள்.

ஷ்ரதா கலங்கிய தனது கண்களை அவசரமாகத் துடைத்துக்கொண்டாள்.

“என்ன ஷ்ரதா சாரி கேட்டும் பதில் சொல்ல மாட்டேங்கிற? இனியாவது எனக்கு போன் பண்ணுவியா? புக் ஸ்டாலுக்கு வருவியா?” என்று ஆர்வமாகக் கேட்டவன்,

பின், ஞாபகம் வந்தவன் போல, “நான் அன்னைக்கு உன்கிட்ட என்ன சொல்ல வந்தேன்னா? உன் அப்பா..” என்று அவள் தந்தை பற்றிய ரகசியத்தை சொல்லப்போனவன், திடீரென அவளது போன் ரிங்டோன் இடைமறிக்கவும் பேசுவதை நிறுத்தினான்.

அவள் கைப்பேசியின் திரையைக் கண்டதுமே கலவரமாகி வீசியையும் திரையையும் மாறிமாறிப் பார்த்தாள்.

அவனுக்கு அவளது பதற்றம் ஏதோ தவறு என்று சொல்லியது. ஒருவேளை விஜயாதித்தனாக இருக்குமோ? அவருக்கு தங்களது காதல் விஷயம் தெரிந்திருக்குமோ? சுற்றி அவரது ஆள் யாரேனும் வேவு பார்க்கிறார்களா? என்றே சிந்தித்தவனுக்கு, அவளை சந்தேகப்படவே தோன்றவில்லை.

அருகில் வந்து பலவந்தமாக அவள் போனை பிடுங்கிப் பார்த்தவன், திரையில் ‘Aadhi aththan’ என்று இருக்கவும், அவளையும் திரையையும் மாறிமாறிப் பார்த்தான்.

ஷ்ரதாவோ குற்றவுணர்வில் தலை குனிந்திருந்தாள். அவளுக்கு தன் போனைப் பிடுங்க தைரியமும் இல்லை; ‘இனி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. உங்கக்கூட பழகினதையெல்லாம் கனவா நினைச்சு மறந்திருங்க’ என்று சொல்லத் தெம்பும் இல்லை. கண்ணீரைச் சொறிந்தபடியே நின்றிருந்தாள்.

வீசி அவசரமாக அவள் வாட்ஸாப்பிற்குள் சென்று பார்த்தான். ஆதியுடனான அவளது உரையாடல்கள் எல்லாம் அவள் அவனது கை நழுவிப் போய்விட்டதாகவே கட்டியம் கூறின.

அதன்பின் அவன் அவளிடம் எதுவும் கேட்கவில்லை. தனது பேண்ட் பாக்கெட்டிற்குள்ளிருந்த மோதிரப்பெட்டியை மட்டும் அவள் முகத்தில் எறிவது போல் அங்கேயே வீசிவிட்டுப் போனான். ஷ்ரதா அந்த பெட்டியைக் கையிலெடுத்து அவன் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இமைகள் இமைக்கவில்லை. ஆனால், கண்மணிகள் மட்டும் கண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தன.

வீசியால் இன்னும் நம்பவே முடியவில்லை. ஒரு இரண்டு வார இடைவெளி எப்படி என்னையும் அவளையும் பிரிக்க முடியும்? இப்படி நடப்பதற்கு அவள் என்னை அன்றே திருப்பி அறைந்திருக்கலாமே? ஏன்? ஏன் இப்படி என்னை ஏமாற்றினாள்? என்று பலவாறு புலம்பித் தீர்த்தான்.

அவர்களின் வாட்ஸாப் உரையாடல்கள் வேறு அடிக்கடி அவன் கண்முன்னே வந்துபோனது.

*

Aadhi aththan: beauty i urgently need 5 kisses

Shraddha: ich. ich. ich. ich. ich

Aadhi aththan: I can feel your lips on my lips. You know what? It’s very soft and warm. Can you feel my lips (^_-)

Shraddha: mm

*

தனக்கு முன்னாலிருந்த பேப்பர் வெயிட்டை சுவற்றை நோக்கி எறிந்து தனது கோபத்தை கட்டுப்படுத்தினான் வீசி.

அடுத்து ஒரு உரையாடலை அவன் மூளை ஸ்க்ரீன்சாட் எடுத்து  காட்டியது.

*

Aadhi aththan: night nee en bed la endha side paduppa baby? right or left?

Shraddha: your wish aththan

Aadhi aththan: luv u baby  

Shraddha: luv u 2 aththan

*

“எப்படி உன்னால அவன்கூட போன்லயே குடும்பம் நடத்த முடிஞ்சது ஷ்ரதா?” -மேசையை தட்டினான் வீசி.

புத்தகம் வாங்க வந்திருந்த இருவர் இரண்டாம் கட்டிற்குள்ளிருந்து எட்டிப் பார்த்தார்கள்.

“ஒண்ணுமில்ல” என்று சொல்லி கீழே எதையோ தேடுவது போல பாவனை செய்த வீசி அடுத்த உரையாடலை நினைத்துப் பார்த்தான்.

*

Aadhi aththan: baby i will kiss on all of your moles. How many kisses will you get at that time?

Shraddha: chiiiiiii

Aadhi aththan: please baby. please baby. I want to know where that thiruttu rascals olinjifying

(。>﹏<。)

*

“அய்யோ! எனக்கு ஏன் இப்படி வலிக்குது? நான் ஏன் இப்படி புலம்புறேன்? உன்னை அப்பாவின்னு நினைச்சேனே. என்னை இப்படி அடிமுட்டாளாக்கிட்டியேடி!” என்று நாகரீகம் கருதாமல் அலறினான் வீசி.

ஷ்ரதா அவன் இப்படி தன்னை தேடி வருவான், மன்னிப்பு கேட்பான் என்றெல்லாம் நினைக்கவே இல்லை. ஏனெனில், அன்று அவன் தன்னை அறைந்தபோது தான் அவன் தன்னை காதலிக்கவே இல்லையென்பதை புரிந்துகொண்டாள்.

வீசி தன்னை அறைந்து அவமானப்படுத்திய அன்று அழுதுகொண்டே வீட்டிற்கு கிளம்பிய ஷ்ரதா தனதறைக்குச் சென்றதும் கைப்பையையும், துப்பட்டாவையும் வீசியெறிந்தாள்.

உண்மையை ஜீரணிக்க முடியாமல் பிச்சி போல புலம்பியவள், “தப்பு தான், அன்னைக்கு உங்களை மிரட்டி என்னை லவ் பண்ண வச்சது தப்பு தான். அதுக்கு எனக்கு சரியான தண்டனைய கொடுத்திட்டீங்க? ஏன் வருணத்தான், ஒரு பொண்ணே தேடி வந்து காதலை சொன்னா இப்படி தான் உதாசீனம் பண்ணுவீங்களா? பசங்க பண்ணினா மட்டும் தான் அது தெய்வீகக் காதல், மண்ணாங்கட்டி எல்லாம். அதுவே ஒரு பொண்ணு பண்ணினா அலைஞ்சான் கேஸு, ம்?

“இதையெல்லாம் நான் உங்க முகத்துக்கு நேரா கேட்கணும். ஆனா, என்னால முடியலையே. உங்களை நெருங்கினாலே என் சுயமரியாதையை இழக்கிற மாதிரி இருக்கு. ஒவ்வொரு தடவையும் என் அழுகை பிடிக்கலைன்னு சொல்ற உங்கக்கிட்ட ஏன் வருணத்தான் என்னை அழ வைக்கிறதே நீங்க தான்னு என்னால சொல்ல முடியல? உங்கப்பொய் எனக்கு பிடிக்கல வருணத்தான். என் மேல நீங்க காட்டுற அலட்சியம் எனக்கு சுத்தமாப் பிடிக்கல. நிச்சயம் இனி நான் உங்களை நினைக்க மாட்டேன். உங்க நினைவு வராதபடி இருக்க, கண்டிப்பா நான் ஏதாவது செய்யணும். செய்வேன்!” என்று தீர்மானித்த சமயத்தில் கண்ணீரும் வற்றித்தான் போனது.

உள்ளெழும் நினைவு பிம்பங்களை எல்லாம் அவளால் தீயிட்டு பொசுக்க முடியவில்லை. அவனாக நினைத்து அலுக்காமல் எத்தனை முறை முத்தம் கொடுத்திருப்பாள் அந்தக் கரடிபொம்மைக்கும், கண்ணாடிக்கும்?

குயிலின் தந்திரத்தால் தன் முட்டை என்று குயில் முட்டையை அடைக்காத்து வரும் காக்கா, ஒருநாள் அது தன் குஞ்சல்ல; குயிலின் குஞ்சு என்றறியும்போது எப்படிக் கரையுமோ, அப்படித்தான் தன் காதல்முட்டையும் ஏமாற்றிய வலியில், கரைந்துக் கொண்டிருந்தாள் ஷ்ரதா.

அசந்தர்ப்பமாக அவளின் கைப்பேசி மெட்டிசைத்தபோது வீசி தான் என்று ஆர்வமாக எடுத்துப் பார்த்தாள். அப்போது மட்டும் வீசி பண்ணியிருந்து, ஏதாவது சமாதானம் சொல்லியிருந்தால் ஷ்ரதா அதிகம் யோசித்திருக்க மாட்டாளோ என்னவோ? ஆனால், போன் பண்ணியிருந்தது ஆதீஸ்வரன்.

திரையைப் பார்க்க பார்க்க அவளுக்கு ஆத்திரமாக வந்தது.  கோபத்தில் திட்ட வேண்டும் என்று அழைப்பை ஏற்று காதில் வைத்தவள், அவன் எடுத்ததுமே நான்கு ‘இச்’ சத்தங்களுடன் “ஐ லவ் யூ பேபி” எனவும்,

கோபத்தில் முகம் தக்காளியாக, “ஐ ஹேட் யூ” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

அது இன்று மட்டும் நடக்கும் நிகழ்வல்ல என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.

அவன் தொடர்ந்து, “ப்ளீஸ், ப்ளீஸ், போன் அட்டன் பண்ணு பேபி” என்றே தகவல் அனுப்பிக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் ஷ்ரதா தானே அழைப்பு விடுத்து, “உங்களுக்கு இப்போ என்ன தான் வேணும்?” என்று எரிச்சலாகக் கத்த,

“உன் லவ் தான் வேணும் பேபி. ஹே ப்ளீஸ்! போனை கட் பண்ணிடாத. டியூட்டியில இல்லாத போது மட்டும் தான் என்னால உன்கிட்ட பேச முடியும்.” என்று இரக்கத்தை சம்பாதித்தான்.

அவளோ என்றும் இல்லாத திருநாளாக அவன் பேச்சிற்கு செவிமடுத்தாள்.

அதையே நல்ல அறிகுறியாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து அக்கறையாக விசாரித்தான் ஆதீஸ்வரன், “சாப்ட்டியா பேபி?” என்று.

அவளுக்கு நடந்தவைப் பற்றியே யோசித்து சித்தபிரம்மையில் ஆழ்வதற்கு, யாருடனாவது பேசி மனதை திசை திருப்புவது உசிதம் என்றுபட்டது.

அதனால், “ம், நீங்க?” என்றாள்.

அப்போது தான் அவளுக்கு இன்னொரு விஷயமும் புலப்பட்டது. இதுநாள் வரை வீசி அவளிடம் ‘சாப்பிட்டாயா?’ என்று ஒரு வார்த்தைக்கூட விசாரிக்காதது, அவனுக்கு அவள் மேல் உள்ள அக்கறையை அப்பட்டமாக எடுத்துரைத்தது.

“இன்னைக்கு காலேஜ்ல என்ன நடந்தது?” என்று உரையாடலை நீட்டித்துக்கொண்டேப் போனான் ஆதி.

ஷ்ரதா அவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் மெதுமெதுவாக யோசித்து பதிலளித்தாள். ஆதியும் அவள் ஏதோ மனக்கவலையில் இருப்பதை புரிந்துகொண்டு தன் கல்லூரிகாலங்களில் நடந்த நகைச்சுவைகளை எல்லாம் அவளுடன் சுவாரசியமாக பகிர்ந்து கொண்டான்.

ஷ்ரதாவிற்கு இடையிடையே ‘நாம் ஏன் இவருக்கு பதிலளித்துக் கொண்டிருக்கிறோம்?’ என்ற கேள்வி எழுந்தாலும், அக்கரைக்கு இக்கரை பச்சையாக, அவன் அன்பு அவளுக்குப் பிடித்திருந்தது.

மனக்கிளையொன்று படக்கென்று முறிந்து விழ, முறிந்த இடத்தில் ஆறுதல் கிளியாய் வந்து அமர்ந்தான் ஆதீஸ்வரன்.

உண்மையில் தன்னை அவன் காதலிக்கிறான் என்கிற உணர்வை தான் அவள் ரொம்ப காதலித்தாள்.

ஆதீஸ்வரன் சிலநேரம் ஜோக் சொல்லி அவளை சிரிக்க வைத்தான். சிலநேரம் வழிசலாகப் பேசி அவளை எரிச்சலூட்டினான். இன்னும் சில நேரம் வெட்கப்பட வைத்தான்.

தொடர்ந்து ஏழு நாட்கள் இரவு ஒன்றரை மணிவரை அவன் அவளுடன் பேசிக் கொண்டிருந்தது, மிகப்பெரும் மாற்றத்தை அவளுள் ஏற்படுத்தியிருந்தது. எந்தவொரு நொடியில் அவள் அவனிடம் விழுந்தால் என்று அவளுக்கே தெரியவில்லை.

அதனால் தான் இடையில் ஒருநாள் அவன் வேலைப்பளூவில் அழைப்பு விடுக்காமல் இருந்தபோது கூட, தானே அவனுக்கு அழைப்பு விடுத்து சண்டை பிடித்தாள்.

அவன் அவளது கோபங்களையெல்லாம் தாங்கினான். பதிலுக்கு அவள் தனது தாபங்களைத் தாங்க எதிர்பார்த்தான். அதுவும் விரைவிலேயே ஈடேறியது. 

காதல் கணம் கூடும்… 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!