மலர் 11

மலர்-11

  இடுப்பு பகுதியில் மட்டும் அழகாக கட் செய்ய பட்டிருந்ததாலோ என்னவோ வெற்றிடையில் அவன் கரம் பட்டதும் அவளுக்கு சிலிர்த்தது. இவனுக்கு ஷாக்கே அடித்தது. கைகள் பின்னிக் கொண்டது போல அவர்கள் ஒருவருக்கொருவர் மனதாலும் பேச ஆரம்பித்தனர். அடுத்த சில நிமிடங்களில் அதுவும் மாறிப் போய்  ஒருவர் மனதில் ஒருவர் செல்ல ஆரம்பித்தனர் கண்கள் வழியே.கால்கள் தானாகவே ஆட்டத்தை தொடர்ந்தது. ஏதோ  இருவருமே வேறு  உலகத்தில் சஞ்சரித்தார்கள்.  

 ஒரு கட்டத்தில் தாங்க முடியாதவளாக ரெஜிதா அவனிடமே, “வில் யூ  மேரி மீ?” என்று கேட்டு விட்டாள் . கம்பீரமான ஆண்  மகன் முதல் முறையாக தடுமாறிப்  போனான். 

 அவள் கண்கள் அவனை  மயக்கியதா? சொப்புப்  போல காண்பிக்கும் வர்ணம்  தீட்டிய  உதடுகளா? ட்ரிம்  செய்யப்பட்ட வில் போன்ற புருவங்களா? உடற் கட்டை  எடுத்து காட்டும்  உடையா? அல்லது அதற்குள்  மறைய  முயற்சி  செய்யும்  மற்ற பாகங்களா? எடுத்து காட்டப்பட்ட மார்புகள் அவனை  ஈர்த்திருக்கலாம். 

 நிச்சயம் அதற்குள் மறைந்திருக்கும் மனம் அவனை ஈர்க்க  முடியாது. அதை  அவன் அறிந்து  கொள்வானா?

 அவனை காப்பாற்றும் விதமாக பாடல் நிறுத்தப்பட்டு உணவுக்கான அழைப்பு விடுக்கப் பட்டது. அவர்களின்  நீண்ட நேர தேடலும் முடிவுக்கு வந்தது.

     பபே முறையில் இருந்த உணவுகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல எடுத்துக் கொண்டனர். அவ்வப்போது மற்ற தெரிந்த நண்பர்களிடமும் தலை காட்டி விட்டு வந்தான் ஆனந்த். அதில் இள வட்டங்கள் ஆனந்த் ரெஜிதா ஜோடியை பற்றி கேட்க தவறவில்லை. அவர்கள் கேட்கும்போது ஏனோ அவனுக்கு முகத்தில் சிறு வெட்கம் வரத்தான் செய்தது.  

 அங்கே  நடந்த ட்ரிங்க்ஸ் பார்ட்டியில் இவன் கலந்து கொள்ளவில்லை. தாத்தாவுக்கு தெரிந்தால் முடிந்தது கதை. ஆனால் ரெஜிதாவோ சற்று  அளவுக்கு  மீறியே குடித்து விட்டுத் தான்  வீட்டிற்கு  சென்றாள். வர்மாவும் வந்த  இடத்தில் எத்தனை தான் கெஞ்சுவார் பாவம்.

ஆனந்தோ  மரியாதை நிமித்தம்,

 வர்மா, க்ரிஷ்ணமூர்த்தி என்று ஒவ்வொருவராக  என்று சொல்லி விட்டு கிளம்புவதற்கு சற்று நேரமாகித்தான் போனது.

வீட்டிற்கு வருவதற்குள் அவன் சற்று சிரமப்பட்டுதான் போனான். வேறு வழி இல்லாமல் காரை இயக்கிக் கொண்டு வந்தான். இல்லை என்றால் காற்றில் அவன் ஜோடியுடன் மிதந்து கொண்டு வந்திருப்பான். 

 பாட்டி மருந்தின் வீரியத்தில் தூங்கி இருந்தாள் . தாத்தா மட்டும் பேரனின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார். ரெஜிதாவின்  நினைவில் இருந்தவனுக்கு பழைய வழக்கங்கள் மறந்து போயிற்று. பேரனின் கார் வந்ததும் தன்னை வந்து பார்ப்பான் பிறகு தூங்கலாம் என்று தாத்தா காத்திருந்ததுதான் மிச்சம். பேரன் வரவே இல்லை. அவன் அவளின் வாசனை வீசும் தன் உடையை முகர்ந்து கொண்டிருந்தான். அவளின் வாசமும் இவனின் ஆடையில் ஒட்டி இருந்த வாசனை திரவியமும் அவனை வேறு உலகத்திற்கு அழைத்துச்சென்றது. 

 மெதுவாக பேரனின் அறைக்கு வந்த முதியவர் பார்த்த காட்சி இதுதான். தாத்தா லேசாக கதவை தட்டவும் திடுக்கிட்டவன் தாத்தா என்று பதறியடித்துக் கொண்டு எழுந்திருந்தான்.

“என்னப்பா அப்பவே வந்துட்ட போல ?”

“ஆமாம் தாத்தா! நீங்க இன்னும் தூங்கலையா?”

பேரனின் சிவந்த முகம் தாத்தாவுக்கு புது கதை சொல்லியது.

“நீ வந்து பார்ப்பியான்னு பார்த்தேன்.”

“ஓ! சாரி! சாரி! தாத்தா ஏதோ நினைப்புல வர மறந்துட்டேன்”. தலையை லேசாக சொரிந்து அசடு வழிந்தவனை பார்த்ததும் தாத்தாவுக்கு புரிந்தது. “சரி நம்ம பேரன் எங்கையோ வகையா  சிக்கிட்டான்” மனதிற்குள் யோசிக்க தொடங்கினார்.

“சரி பா! சாப்டீயா? நேரத்தோட தூங்கு”

சொல்லி விட்டு தனது அறைக்கு புறப்பட்டார். 

அடுத்து வந்த நாட்களில் ஆனந்தும் ரெஜிதாவும் தொடர்ச்சியாக சந்திக்க தொடங்கினர்.  மீட்டிங்கை  கான்சல் செய்தான் அவளுடன் மாலையில் தேனீர் அருந்த சென்றான். அவளுக்காக தொழிற்சாலைக்கு செல்வதை தள்ளி போட்டான் அவளுடன்  ஷாப்பிங் சென்றான். இவர்களை பற்றி இங்கும் அங்கும் அரசல் புரசலாக செய்திகள் கசியத் தொடங்கின. 

இதில் அமிர்தாவுக்குத்தான் நிம்மதி. அவளைப் பற்றி ஆனந்த்  கவலைப்படுவதே இல்லை. ஆனால்  வழக்கம் போல வந்து பாட்டி  தாத்தாவுடன் சிறிது நேரம் செலவழிப்பான். பேரனாக வாய் திறக்கட்டும் என்று தாத்தா காத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒருநாள் ஆனந்த் ரெஜிதாவுடன் வீட்டிற்கு வந்த போது  அவனிடம் வர்மா நேரடியாகவே கேட்டார்.

 “என்ன ஆனந்தன் நீங்க ரெண்டு பேரும்  ரொம்ப கிளோஸாகிடீங்க?”

இவனுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை.

“ரெஜிதாவுக்கு உங்கள ரொம்ப பிடிச்சுருக்கு. அவ உங்ககிட்ட பேசி இருப்பான்னு நினைக்கறேன்” 

“எஸ் அங்கிள்! அவ சொல்லி இருந்தா. பட்  நாந்தான் இன்னும் வீட்டுல பேசல” தயக்கமாகச் சொன்னான்.

“இட்ஸ் ஓகே! முதல்ல உங்களுக்கு ஓகேவான்னு சொல்லுங்க. அப்புறம் நான் வீட்டுல வந்து பேசறேன் ” 

“அதில்ல அங்கிள் தாத்தா பாட்டி. அவங்ககிட்ட கேட்காம எதுவும் சொல்ல முடியாது”

“நோ ப்ராப்ளம். இப்பவே அவளை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க. அவங்ககிட்ட கேளுங்க. பட் ஒரு கண்டிஷன். அவங்க ஓகே சொன்னா  உடனே  கல்யாணம். இல்லன்னா இனிமே நீங்க ரெண்டு பேரும்  மீட் பண்ணவே கூடாது. ஏன்னா இண்டஸ்ட்ரில என்னோட கௌரவம் ரொம்ப முக்கியம். ஓகே ரெஜிதா ?”

“எஸ் டடா(டாட்)”

அவன் கண் மூடி திறப்பதற்குள் படு குஷியாக வண்டியில் ஏறி அமர்ந்திருந்தாள் ரெஜிதா. ஆனந்தின் மூளை செயல்பாடு இழந்திருந்தது. ரெஜித்தாதான் பேசிக் கொண்டே வந்தாள் .

 “நீங்க என்னைப்பத்தி என்ன சொல்லுவீங்க? இவதான் ரெஜிதா. மை  லவ். இல்ல! இல்ல! ஷி ஸ் மீ கேர்ள் பிரண்ட். இவளதான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன். ம்ம் வேற எப்படி சொல்லுவீங்க ? தி கிரேட் வர்மாவோட பொண்ணு. நாங்க கல்யாணம் பண்ணிக்கபோறோம்”. 

அதில் ஒரு யோசனையில் கூட அவன் அவர்களிடம் அனுமதி வாங்குவதாக வார்த்தைகள் இல்லை. 

அவளின் வார்த்தைகள் தான் அவன் மூளையை சலவை செய்ததோ?

யாரோ ஒரு பெண்ணுடன் வந்திறங்கும் பேரனை மாடி பால்கனியில் இருந்து தாத்தா பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த பெண் துளியும் வெட்கம் இல்லாமல் ஆனந்தின் புஜத்தைக் கட்டிக் கொண்டு வந்தாள் அவளின் அனைத்து பகுதிகளும் படும் விதமாக. தாத்தாவை பார்த்த போதும் அவள் அப்படியேதான் இருந்தாள். 

ஆனந்திற்குத்தான் அவஸ்தையாக இருந்தது.

அவள் கையை மெதுவாக விலக்கினான்  தாத்தாவின் பார்வைக்குப் பின். பாட்டியும் மெதுவாக ஹால் சோபாவுக்கு வந்து அமர்ந்தார் கணவனின் அழைப்பினால் அமிர்தாவின் உதவியுடன். 

“வாப்பா!  இன்னிக்கு என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட? இது யாருப்பா?”

“தாத்தா இவ ரெஜிதா . வர்மா குரூப்ஸ் வர்மாவோட ஒரே பொண்ணு”

“அடடே வர்மாவோட பொண்ணா  நீ? அப்பா  எப்படி இருக்காரு ?”

“ம்! பைன் அங்கிள்!” மிக அளவாக வாயில் இருந்து புன்னகை வந்தது.

பேரன் எதையோ சொல்ல வந்ததை புரிந்து கொண்டவர், 

“சொல்லுப்பா” என்றார்.

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!