காதல் கணம்-22

காதல் கணம் 22

 

வீசி தன்னைத் தேடி கல்லூரிக்கு வருவான் என்று கனவிலும் எதிர்பார்த்திராத ஷ்ரதா, தற்போது இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்தாள்.

ஒருபுறம் தனக்கு கணவன் ஆக இருக்கும் ஆதீஸ்வரன், மறுபுறம் தன் கனவு நாயகன் வீசி. இருவரில் எவருக்கு தன் மனதில் இடம் என்று சுத்தமாகப் புரியவில்லை அவளுக்கு. தலையைப் போட்டு பிய்த்துக் கொண்டிருந்தாள்.

இறுதியில் கல்லூரியில் தன்னைவிட்டு விலகிச் சென்றவனின் துயர முகமே உள்ளுக்குள் புகுந்து சித்ரவதை செய்ய, ஒரு முடிவிற்கு வந்தவளாய், ஆதீஸ்வரனுக்கு இதுவரை நடந்த கதை அனைத்தையும் ஒலிப்பதிவு செய்து அனுப்பி வைத்தாள்.

இறுதியாக, “சாரி ஆதி அத்தான். உங்களை மாதிரி நல்லவரை மிஸ் பண்ற நிலைமை யாருக்குமே வரக்கூடாது. இவ்வளவு நாள் நான் அவரை வெறுத்துட்டதா நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, இன்னைக்கு தான் நான் அவரு அன்புக்காக எவ்ளோ ஏங்கியிருக்கேங்கிற உண்மை எனக்கு புரிஞ்சது. அந்த அன்போட இன்னைக்கு அவரு என்னை நெருங்கினப்போ, அதை ஏத்துக்காம என்னால இருக்க முடியல. இப்போ நான் அவரை மறந்த மாதிரி நடிச்சிட்டு உங்களை கல்யாணம் செஞ்சுக்கலாம் தான். ஆனா, காலம் முழுசுக்கும் அவர் என் கண்ணுல படாம இருக்கணும். அப்படி பட்டுட்டா நான் உங்கக்கூட வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமப் போயிடும்.” என்று தன் நிலையை அவனுக்கு விவரித்தாள்.

அதைக்கேட்ட அடுத்த நொடியே அவளுக்கு அழைப்பு விடுத்த ஆதீஸ்வரன், “உன் முடிவு இது தானா ஷ்ரதா? எனக்கென்னவோ நீ இந்த முடிவை அவசரத்துல எடுத்த மாதிரி தோணுது. எனக்கு கொஞ்சம் டைம் கொடு. எல்லாம் நான் நேர்ல வந்ததும் பேசிக்கலாம்.” என்றுவிட்டு, தான் மதுரை கிளம்பும் முயற்சியில் இறங்கினான்.

ஷ்ரதாவோ இதில் குழம்புவதற்கு ஒன்றுமில்லை என்று தனக்குத்தானே தைரியம் கூறிக்கொண்டு, “தப்புப் பண்ணிட்டேன் வருணத்தான். சாரி, தப்புப் பண்ணிட்டேன். உங்களை மறக்கத்தான் இப்படியெல்லாம் பண்ணினேன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா? ப்ளீஸ், வருணத்தான் நீங்க நம்பணும். ப்ளீஸ்! ப்ளீஸ்! பிக்கப் த கால்” என்று அவன் எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.

ஆனால், எவ்வளவு முயன்றும் அவள் முயற்சிக்கு பலனாக எதிர்புறம் அவன் போனை எடுக்கவில்லை.

ஷ்ரதா அவனுக்கு தொடர்ந்து,
SORRY
SORRY
SORRY
SORRY
SORRY
என்றே ஐந்நூறு முறைக்கும் மேலாக மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு கீங்கீங்கிற்கும் வீசி போனை எடுத்துப் பார்த்தானே ஒழிய அவளிடம் பேச ஆர்வம் கொள்ளவில்லை.

பதில் எதுவும் வராததில் சோர்ந்துபோன ஷ்ரதா தீனமாக இறைவனை வேண்டத் துவங்கினாள்.

“முருகா! ப்ளீஸ் என் வருணத்தானை என்கிட்ட பேச வச்சிடு.” என்றாள்.

வீராப்பாக இவ்வளவு நாள் வீசியிடம் பேசாமல் இருந்த சிவனேஸ்வரனுக்கு, தன் அண்ணனுக்கும் ஷ்ரதாவுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருப்பதே இந்த வீசியால் தான் என்றறிந்தபோது கோபம் தாங்கவில்லை. மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் ஷ்ரதாவின் அந்தக் காதலன் யாரென்று. அது அவனுக்குமா தெரியாது?

“எவ்வளவு தைரியமிருந்தா ஷ்ரதாவை வெளிய கூட்டிட்டுப் போவான் ராஸ்கல்? ஷ்ரதா கால்ல போடுற ஒரு நெயில்பாலீஷுக்காக தன் ஒரு மாச சம்பளத்தை தியாகம் செய்யணும் அவன். ச்சே! அவன் வியர்வை நாத்தத்தை எப்படி ஷ்ரதா சகிச்சிக்கிறா?” என்றே ஷ்ரதாவை தன் இதய சிம்மாசனத்தில் ஏற்றி வைத்திருப்பவனாக விசனப்பட்டான்.

மாபெரும் மலையை நகர்த்தி வைப்பதுபோல இப்போது அவன் முன்னே இரு வேலைகள் இருந்தன. ஒன்று, ஷ்ரதாவுக்கு வீசி மேல் உள்ள மயக்கத்தை தெளிய வைப்பது. இரண்டு, தன் அண்ணன் ஆதீஸ்வரன் மூலமாகவே ஷ்ரதாவின் அவசரக் கல்யாணத்தை நிறுத்துவது.

ஆனால், இரண்டையும் எவ்வாறு செய்து முடிப்பது? என்றே குழம்பிக் கொண்டிருந்தவன், பிறகு ஒரு வழி கண்டவனாக தனது அண்ணன் ஆதீஸ்வரனுக்கு தான் ஷ்ரதாவை உயிருக்கு உயிராக விரும்புவதைப் பற்றி நீண்ட பத்தியொன்றை தயார் செய்து வாட்ஸப்பில் அனுப்பி வைத்தான்.

திரையில் எதிர்புறம் அவன் அதை வாசித்துவிட்டான் என்பதைக் குறிக்கும் ப்ளூ டிக்குகள் தோன்றியபோது பக்பக்கென்று அடித்துக்கொண்டது அவன் இதய தண்டோரா.

சிறிது நேரத்திற்குப் பின், மேலே பெயர்பட்டையில் ‘typing’ என்று வந்தபோது கிரிக்கெட் மேட்சில் வெற்றி தோல்வியை முடிவு செய்யும் கடைசி ஓவரை சீட் நுனியில் உட்கார்ந்துப் பார்ப்பவன் போலவே மொத்த எதிர்பார்ப்பையும் கண்ணில் தேக்கி, இதயம் எகிற பார்த்திருந்தான் சிவனேஸ்வரன்.

நீண்ட காத்திருப்பிற்குப் பின் மூன்றே வரியில் பதில் அனுப்பியிருந்தான் ஆதீஸ்வரன்.

“நீ ஏன் இதை முன்னாடியே என்கிட்ட சொல்லல சிவா? நான் இப்போ மதுரைக்கு வரத்தான் ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன். நான் நேர்ல வந்ததும் நாம இது பத்தி பேசிக்கலாம்.” என்று டைப்பியிருந்தான்.

பார்த்ததும் சிவனேஸ்வரனுக்கு உச்சிக் குளிர்ந்துவிட்டது. இவ்வளவு நாள் ‘ஆதிக்கிட்ட இதை எப்படி சொல்லப்போறேன்? இதை அவன் எப்படி எடுத்துப்பான்?’ என்றே மனதுக்குள் மறுகிக் கொண்டிருந்தவனுக்கு தன்னைப் பிணைத்து வைத்திருந்த பெரிய விலங்கொன்று அறுபட்டதுபோல் இருந்தது.

“எனக்கிருந்த பெரி..ய்ய தோஷம் விலகிடுச்சி. இன்னும் இந்த வீசி தான். அவனுக்கும் இன்னைக்கே முடிவு கட்டுறேன்” என்று வீசியை சந்திக்க புத்தகக்கடையை நோக்கி விரைந்தான் சிவனேஸ்வரன்.

அது வீசி ஷ்ரதா அனுப்பிய ‘SORRY’ மழையில் நனைந்துக் கொண்டிருந்த நன்னேரம்.

திடும் பிரவேசமாக உள்ளே நுழைந்த சிவனேஸ்வரனைப் பார்த்ததும், வீசி தன் கைப்பேசியை கல்லாப்பெட்டிக்குள் மறைத்து வைத்தான்.

சிவனேஸ்வரன் வீசியிடம் நலம் விசாரிக்கக்கூட இல்லை.

எடுத்த எடுப்பிலேயே, “என்ன வீசி ஆளே மாறிப்போயிட்ட போல இருக்கு?” என்று குத்தலாகக் கேட்டான்.

வீசி பதிலுக்கு அவனை அளப்பது போலப் பார்த்தான்.

சிவனேஸ்வரன் அங்கிருந்த நாற்காலியில் அவனுக்கு முன்பு சென்று உட்கார்ந்தபடியே வில்லங்கமாக பேசினான்.

“ம், நானும் உன்னை என்னவோன்னு நினைச்சேன் வீசி. நீ உன் அக்காவுக்கு மேலேயும்  கெட்டிக்காரன் தான்னு நிரூபிச்சிட்ட. எப்படி, எங்க கை வைக்கணும் உனக்கு நல்லாவேத் தெரிஞ்சிருக்கு. ஒருவேளை இந்த நரித்தந்திரம் எல்லாம் உங்க குடும்ப ப்ளட்லயே கலந்ததா வீசி?” எனவும், வீசியின் கண்கள் இரண்டிலும் கோபம் கொப்பளித்தன.

அவனது உதடுகள் துடிப்பதைக் கண்ட சிவனேஸ்வரன், “கோபப்படுறியா வீசி? உண்மையை சொன்னதும் சுருக்குன்னு இருக்கா? உன்னைப்போய் யோக்கியன்னு நம்பி என் ஷ்ரதாவை இங்க அனுப்பி வச்சேனேடா? எனக்கு நல்லப்பாடம் கத்துக் குடுத்துட்ட” என்று சீறினான்.

“சிவா நடந்தது தெரியாம பேசாத! ஷ்ரதா என்னை முன்னாடியிருந்தே விரும்பியிருக்கா” என்று வீசி சத்தமாக சொல்லத்தான் முயன்றான். ஆனால், பாதியிலேயே குரல் உள்ளேப் போய்விட்டது.

“துரோகி, பேசாதடா! அவ மனசைக் கெடுத்ததே நீதான்டா” என்று பேய் பிடித்தவன் போலக்கத்தினான் சிவனேஸ்வரன்.

“சிவா, அவ உன்னை லவ் பண்ணவே இல்ல” என்று வீசி மறுத்து சொன்ன அதேவேளை, கோபத்தில் என்ன செய்கிறோமென்றே தெரியாமல் அவனை மூர்க்கமாகத் தாக்கி வீசியின் சில்லுமூக்கை உடைத்தான் சிவனேஸ்வரன்.

மூக்கில் ரத்தம் சொட்ட நின்றிருந்த வீசி, மடக்கிய தனது கைவிரல் முஷ்டிகளை தளரவிட்டான்.

“ஏற்கனவே நான் நொந்துபோய் இருக்கேன்டா சிவா. உன் வலி என்னன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது.” என்றவனின் பேச்சை சிவனேஸ்வரன் சட்டை செய்யவில்லை.

“ஷ்ரதா இனி என் பொண்டாட்டி. இனி நீ அவளை பார்க்கவோ பேசவோக்கூடாது. மீறிப் பார்த்தா விளைவு மோசமா இருக்கும். என் மாமாவைப் பத்தி உனக்குத் தெரியும்ல? ஜாக்கிரதை!” என்று திண்ணமான குரலில் எச்சரித்துவிட்டுப் போனான்.

அவன் போகும்போது முன்னால் நடைபாதையில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை எட்டி உதைத்துவிட்டுப்போக, வீசி தான் கல்லாவிற்குள் மறைத்து வைத்த நோக்கியாவை வெளியில் எடுத்துப் பார்த்தான்.

ஷ்ரதா ‘SORRY’ அனுப்புதலை இன்னும் நிறுத்தியிருக்கவில்லை.

இவ்வளவு நேரமும் கோபம், வலி, பொறாமையென்றே சிக்கித் தவித்துக் கொண்டிருந்தவனுக்கு, சிவாவின் மிரட்டல் தான் ஷ்ரதாவை தன்னால் வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாதென்கிற உண்மையை புரிய வைத்தது.

அவன் எந்தப் பதற்றமுமின்றி சொல்லிப் பார்த்தான், “ஐ லவ் யூ ஷ்ரதா” என்று.

அப்போதே அவன் அதை ஷ்ரதாவிடமும் சொல்லியிருந்தால் பின்னால் நிகழவிருக்கும் பல விபத்துக்களை தவிர்த்திருக்கலாம். ஆனால், காலம் இன்று தனக்கு தந்த வாய்ப்பை, நாளை தராது என்கிற உண்மை அறியாமல் ஷ்ரதாவை தவிக்கவிட்டுக் கொண்டிருந்தான் அவன்.

உலகம் எனும் கோப்பையில் உயரத்தில் எவனோ ஊற்றி வைத்து அருந்தும் மது தான் இந்த இரவா? போதையில் சுயம் மறந்து கிடந்தவர்கள் அனைவரும் காலையில் தான் போதை தெளிந்தார்கள். அதில் சிவனேஸ்வரனும் ஒருவன். அவன் தன் கல்லூரிக்குக் கிளம்பும்பொருட்டு தனது போன் சார்ஜரை பேகிற்குள் திணித்துக் கொண்டிருந்தான். அப்போது தான் வரவேற்பறையில் கோகிலா ஓலமிட்டுக் கத்திக் கொண்டிருந்தார்.

அவசர அவசரமாய் வெளியே ஹாலுக்கு ஓடிவந்துப் பார்த்தவனுக்கு பிரச்சனைக்கு காரணம் டீவியில் ஓடிய செய்தியே என்று தெரிந்தபோது, கண்கள் அங்கு நிலைகுத்தி நின்றன.

டீவியில் விஜயாதித்தனின் புத்தகக்கடைக்குள் சோதனை நடந்து கொண்டிருப்பதும், கீழே முக்கியச்செய்தியாக ‘இருபத்திரண்டு அஸ்திகளுக்கும், கிரானைட் குவாரி முதலாளிக்கும் என்ன சம்பந்தம்?’ என்று ஓடிக்கொண்டிருப்பதும் தெரிந்தது.

மாவட்ட ஆட்சியர், தடயவியல் நிபுணர்கள், காவல் துறையினர் மற்றும் ஊடகத்துறையினர் என்று மகாளிப்பட்டியே அமளி துமளியானது. முக்கிய அதிகாரிகள் அனைவரும் வந்துவிட்டதால் அனைத்து ஊடகங்களிலும் இது தான் தலைப்புச்செய்தியானது.

“அய்யோ! என் அண்ணனைப் பத்தி ஏதோ தப்பு தப்பா சொல்றாங்க பாருங்க. வாங்க, சீக்கிரம் அண்ணன் வீட்டுக்கு போவோம்” என்று அவசரப்படுத்தினார் கோகிலா.

சிவனேஸ்வரன் மற்றும் அவனின் குடும்பத்தினர் அனைவரும் அங்கு சென்று சேர்வதற்குள், விஜயாதித்தனை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

விபரம் கேட்ட ஊடகத்துறையினரிடமும், டிஐஜி கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்: “இந்த ரகசிய அறையைப் பத்தி நேத்து தான் கலெக்டர் சாருக்கு தகவல் வந்திருக்கு. சார் உடனே களத்துல இறங்கி ஆக்சன் எடுத்திட்டாங்க. தகவல் கொடுத்தவரோட பெயரை உங்களுக்கு இப்போ சொல்ல முடியாது. தட் இஸ் வெரி கான்பிடென்ஷியல். உள்ள சுவர் ஃபுல்லா லாக்கர் ஷேப்ல மின் தகன எந்திரமா இருக்கு. இருபத்திரண்டு அஸ்தி பார்சல் அதுலயிருந்து கைப்பத்தியிருக்காங்க. அப்புறம் இன்னும் சில ஆவணங்களும் சிக்கியிருக்கு. புக்ஸ்டால் ஓவ்னர் விஜயாதித்தனையும், ஸ்டாலோட வொர்க்கர்ஸ் ரெண்டுபேரையும் விசாரணைக்காக கைது பண்ணியிருக்கோம். விசாரணையோட முடிவுல தான் உண்மை என்னன்னு தெரிய வரும்” என்றவர் சொன்னதும், சுற்றி சலசலப்பு உண்டானது.

விஷயத்தை கேள்விப்பட்டதிலிருந்தே பெரும்புள்ளி கேஆர்பிக்கு இருப்பு கொள்ளவில்லை. டிஐஜிக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார்.

கலெக்டர் பேட்டி கொடுக்க ஆரம்பிக்கவுமே அவரைவிட்டு தள்ளி வந்த டிஐஜி, “அதான் எனக்கு தகவல் கிடைச்சதுமே உங்கக்கிட்ட சொல்லிட்டேனே சார்? முன்னாடியே சொல்லனும்னா இன்னைக்கு காலையில தானே எனக்கேத் தெரியும்? எவனோ ஒருத்தன் டேரக்டா கலெக்டருக்கே போன் பண்ணி துப்பு கொடுத்திருக்கான். இந்த ஆள் இளம் ரத்தம் பார்த்தீங்களா? அதான் நேர்மைன்னு நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு கிளம்பிட்டான். இப்போதைக்கு விஜயாதித்தன் பேர் மட்டும் தான் சிக்கிருக்கு. உங்கப் பேர் எதுவும் வெளிய வராதபடி பார்த்துக்க நம்ம ஆளுங்க நாலு பேரை ஏற்கனவே உள்ள நிற்க வச்சிருக்கேன் சார். ஆமா முன் ஜாமீன் ரெடி பண்ணிட்டீங்களா சார்? ம் அப்போ சரி சார்.” என்று பேசிவிட்டு, இணைப்பு துண்டிக்கப்படவும் கலெக்டர் அருகில் வந்து கம்பீரமாக நின்றுகொண்டார்.

வீசியையும், அந்த புக்ஸ்டாலை கூட்டி சுத்தம் செய்யும் முதியவரையும் நான்கு‌ மணி நேரங்களுக்கு மேலாக விசாரித்த காவலதிகாரிகள், அவர்களுக்கும் இந்த ரகசிய அறை அஸ்திக்கும் எந்தவித சம்பந்தமுமில்லையென்று ஊர்ஜிதமாகவும், அவர்களை குடைவதை விட்டுவிட்டார்கள்.

விஜயாதித்தனுடனான விசாரணை தான் தொடர்ந்து நடந்துக் கொண்டேயிருந்தது. கேஆர்பி அனுப்பிய வழக்கறிஞர்களும் அருண்மொழியும் வெளியே அவருக்கு காத்திருந்தார்கள்.

மாலை ஆறு மணியளவில் விசாரணை முடிந்தபோது தன்னை சந்திக்க வந்த வழக்கறிஞரிடம் விஜயாதித்தன், “புக்ஸ்டால் பத்தி கலெக்டருக்கு போன் பண்ணினது யாரு?” என்று உறுமலாகக் கேட்டார்.

நிச்சயம் அந்தத் துரோகிக்குரிய தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என்று விசாரிக்கும்போதே அவர் கண்கள் சிவந்தன.

வழக்கறிஞரானவர், “கடையில வேலை பார்க்கிற பையன் தான் சொன்னதா சொல்லிக்கிறாங்க.” என்றதும்,

உடன் நின்ற அருண்மொழியும், “ஆமாப்பா, ஜீவா சொன்னான். ரெண்டு வாரத்துக்கு முன்னாடி அவன் உள்ளப்போய் பார்த்தது சிசிடிவில பதிவாகியிருக்கு” என்றான்.

“ஓஹோ!” என்றவர்,

“இப்போ அவனை எதுவும் செய்ய வேணாம். நான் வெளிய வந்ததும் பார்த்துக்கலாம்.” என்றார்.

அந்தத்தொனி மகனாகிய அருண்மொழிக்கே கிலியூட்டியது. ‘மதுபாலாவால இதை தாங்கிக்கிற முடியுமா? நிச்சயம் அவ தம்பிக்கு இது தேவை தான்.’ என்று நினைத்துக்கொண்டே, “சரிங்கப்பா” என்றான்.

விஜயாதித்தன் பார்வையில் வேட்கையோடு, “நான் வெளிய வர்ற வரைக்கும் என் இடத்துல நீ தான் நின்னு எல்லாத்தையும் பார்த்துக்கணும் அருண்மொழி” என்றபோது,

‘என்ன! உங்க இடத்துல நானா?’ என்று அருண்மொழி புல்லரித்துப்போனவன், மீண்டும் அடக்கமாக, “சரிங்கப்பா” என்றான்.

விஜயாதித்தனை சீக்கிரம் பெயிலில் வெளியே எடுத்துவிடலாம் என்று வழக்கறிஞர் சொன்ன தைரியத்தில் வீட்டிற்கு வந்த அருண்மொழி, வீசியை முன்னிறுத்தி மதுபாலாவிடம் மல்லுக்கட்டினான்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போய், “எங்கப்பா வெளிய வந்த பின்னாடி இருக்கு உன் தம்பிக்கு. அவனை அஸ்தியாப் பார்க்க ரெடியாயிரு” என்று பயமுறுத்திவிட்டுப்போகவும், மதுபாலாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தனது இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு தனது தாய்வீட்டிற்கே வந்துவிட்டாள்.

அவள் இரவு ஒன்பது மணிக்கு ஜெயவிலாஸில் இருக்கும் தன் தாய்வீட்டிற்கு வந்து சேர்ந்த சமயம் தான், பிரகாஷ் சக்கரவர்த்தியும் தனக்குத் தெரிந்த கவுன்சிலர் ஒருவரின் உதவியுடன் வீசியை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்.

அவனைப் பார்த்ததுமே மதுபாலா அழுதுவிட்டாள்.

“ஏன்டா உனக்கு இந்த வேண்டாத வேலை? எவ்வளவு பெரிய சிக்கலை நீ இழுத்து வச்சிருக்கத் தெரியுமா? உன்னை அவங்க கொல்ல தீர்மானிச்சிட்டாங்கடா.” என்று கமறிய குரலில் கூறினாள்.

அவள் கூறியதன் எதிரொலிப்பு ஒரு சதவீதம் கூட அவன் முகத்தில் தெரியவில்லை.

அபிராமி, “வருண்” என்று அவனருகில் வந்து தோளைத் தொட்டபோது தான் கணீர் குரலில் பேசினான்.

“நான் யாருக்கும் எந்தத் தகவலும் கொடுக்கல. என் பேரைச் சொல்லி வேற யாரோ தான் கலெக்டருக்கு தகவல் கொடுத்திருக்காங்க. அப்புறம் ஒரு அப்புராணியை ஒண்ணும் போலீஸ் பிடிச்சிட்டு போகல. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்னு சும்மாவா சொன்னாங்க.” என்று நக்கலாகக் கூறினான்.

“என்னால தான் எல்லாம். தெரிஞ்சே புதைக்குழியில விழுந்துட்டேன். இப்போ உங்களையும் சேர்த்து உள்ள இழுத்துக்கிட்டு இருக்கேன்.” என்று தன் தலையிலடித்துக்கொண்டு அழுத மதுபாலா, திடீரென பித்துப் பிடித்தவள் போல, “இல்ல, இனி நீ இங்க இருக்கக்கூடாது வருண். ம்மா, ப்பா, இவனை எங்கேயாவது வெளியூருக்கு அனுப்பி வைங்க. அவங்க மோசமானவங்க. நீ எங்கேயாவது வெளியூருக்கு போயிடு வருண்” என்று கெஞ்சினாள்.

அபிராமியும், பிரகாஷ் சக்கரவர்த்தியும் மதுபாலா சொல்வதே சரி என்று அவனை வற்புறுத்தத் தொடங்கினார்கள்.

வீசி அவர்களிடம், எவ்வளவோ முரண்டு பண்ணிப் பார்த்தான். இறுதியில், “சரி, நாளைக்கு காலைல போறேன்” என்ற சமாதானத்திற்கு வந்தான்.

காதல் கணம் கூடும்…
 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!