“அக்கா இன்னும் என்ன பண்ற? டைம் ஆச்சு! பெங்களூருல இருக்கும் போது தான் ஆபீஸ் போக லேட்டாக்குன, இப்போ சென்னை வந்தும் இதையே பண்றியே!
உனக்கு நியாயமா படுதா? தூங்கி எழுந்து நீ லேட்டா போய் திட்டு வாங்குறதுல நியாயம் இருக்கு. நான் ஏன் திட்டு வாங்கணும்?” எனப் பாவமாகக் கேட்ட திகள்விழியை சாப்பிட்டுக்கொண்டிருந்த நிலாஞ்சி முறைத்தாள்.
நிலாஞ்சி… 23 வயது அழகு சிலை. இயற்கைத் தேன் நிறம் கலந்த மாநிறம் கொண்டவள். அவளது நீள்வட்ட முகத்திற்குப் பொருத்தமாக மூக்கில் போட்டிருக்கும் வளையம் ஆளைச் சுண்டி இழுக்கும்.
B.E சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, கடந்த ஒரு வருடமாக AA Group கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் Junior Estimation Engineer ஆக வேலை பார்க்கிறாள். முதல் ஆறு மாதங்கள் பெங்களூரு கிளையில் வேலை பார்த்தவள், இப்போது மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தாள்.
“அம்மா இவளைப் பாருங்க! என்னைத் திட்டுறா!” என்று பார்வதியிடம் குற்றப்பத்திரிகை வாசித்தாள்.
பாவம் அவளும் என்ன செய்வாள்? ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பிடித்தம். அவளுக்குத் தூக்கம் பிடித்தமானது. இரவு சீக்கிரம் படுத்தாலும் காலையில் லேட்டாக எழுந்திருக்கும் அளவுக்கு மரணத் தூக்கம் போடுவாள் நிலாஞ்சி. இடையில் இடியாவது, மழையாவது, உலகமே அழிந்தால்கூட எழுந்துகொள்ள மாட்டாள்.
தினமும் லேட்டாக எழுந்து, ரேஸுக்குப் போவது போல ஆபீஸுக்குப் போவது நிலாஞ்சிக்கு கைவந்த கலை.
“உங்க அம்மா வெளிய வந்தா என்னைத் திட்டுவா பொண்ணுங்களா? வேலைக்குப் போற நேரத்துல திட்டு வாங்குனா அன்னைக்கு மூட் நல்லா இருக்காது”
“அப்பா! நீங்கதான் பார்வதியோட புருஷன். பார்வதி உங்க புருஷன் இல்லை!” என்ற திகள்விழியைப் பார்த்து முழித்தார் சோமசுந்தரம்.
தமிழ்நாட்டில் வாழும் அப்பாவிக் கணவன்மார்களில் அவரும் ஒருத்தர். மனைவி, “என்னங்க!” என்று கொஞ்சம் சத்தத்தை உயர்த்தினாலே “ஒன்னும் இல்லம்மா” எனச் சரணடைந்துவிடுவார்.
“இல்லடா தங்கம் நான் பார்வதியோட புருஷன் அதான் அமைதியா இருக்கேன். அவ என்ன செஞ்சாலும் இந்தக் குடும்பத்தோட நல்லதுக்காக மட்டும்தான் செய்வா! நம்மளை விட்டா அவங்களுக்கு வேற யாரையும் தெரியாது.”
மனைவியைப் பற்றி பேசும்போது அவர் முகத்தில் வடியும் காதலை எப்போதும்போல இப்போதும் ஆசையாகப் பார்த்த மகள்கள்,
“அப்பா, பார்வதியை ரொம்பத்தான் காதலிக்கிறிங்க! அதான் அம்மா பேச்சு ஓவரா இருக்கு” என்று நிலாஞ்சி குறைப்பட்டுக்கொண்டாள்.
“அங்க என்ன வெட்டிப்பேச்சு? என்னங்க, பேங்குக்குக் கிளம்பலையா? சாயந்தரம் வரும்போது சாமிப் படத்துக்குப் பூ வாங்கிட்டு வாங்க” என்ற மனைவியின் சத்தத்தில்,
“இதோ கிளம்பிட்டேன், பார்வதி! வேற ஏதாவது தேவைன்னா எனக்கு மெசேஜ் பண்ணு” என்று சொல்லிவிட்டுப் போனார் சோமசுந்தரம்.
“அம்மா, அப்பாவை ரொம்பப் பயம்காட்டி வச்சிருக்க!”
“இல்ல திகள்! ரொம்பக் காதலைக் கொடுத்து ஏமாத்தி வச்சிருக்காங்க!” என்று நிலாஞ்சி சிரிக்க,
“இரண்டு பேரும் அடி வாங்கப்போறிங்க, ஒழுங்காக் கிளம்புங்க!” என்ற பார்வதியின் சத்தத்தில் இருவரும் வெளியே ஓடினார்கள்.
“போ அக்கா! இன்னைக்கும் உன்னால லேட். அந்தச் சொட்டை மண்டை திட்டப்போறான்!” என்று முகத்தைத் தூக்கிய தங்கைக்குப் பத்து முத்தங்கள் கொடுத்துச் சமாதானம் செய்துவிட்டு ஸ்கூட்டியை எடுத்தாள் நிலாஞ்சி.
அவசரமாகத் தங்கையை நடனப் பள்ளியில் இறக்கிவிட்ட நிலாஞ்சி, டிராஃபிக் உள்ளே புகுந்து சரியான நேரத்தில் ஆபீஸுக்கு வந்துவிட,
“ச்சே! இன்னைக்கும் தப்பிச்சிட்டா!” என்ற தோழியைப் பார்த்து நக்கலாகச் சிரித்த நிலாஞ்சி, “போடி, போ! என்னை ஜெயிக்க ஒருத்தன் பொறந்து வரணும்!” என வாயாடிவிட்டு உள்ளே போனாள்.
அவள் புண்ணியத்தில் திகள்விழி நடனப் பள்ளியில் திட்டு வாங்கிக்கொண்டிருந்தாள்.
திகள்விழி நிலாஞ்சியின் செல்லத் தங்கை… 21 வயது சுட்டிப்பெண். அவளுக்குச் சிறுவயதிலிருந்தே நாட்டியத்தில் ஆர்வம் அதிகம் என்பதால் முறையாகப் பரதநாட்டியம் கற்று, சிறுசிறு அரங்கேற்றங்களும் செய்திருந்தாள். அதனால் பெயருக்கு ஒரு டிகிரியை வாங்கிவிட்டு, தனக்குப் பிடித்தமான நடனத்தில் முழுக் கவனத்தையும் செலுத்தத் தொடங்கியிருந்தாள்.
அக்காவை வாய்க்குள் திட்டியபடி பால்வடியும் முகத்தோடு நிற்பவளைக் கண்டு மற்ற மாணவர்கள் சிரிப்பை அடக்கினர்.
“இதுதான் லாஸ்ட் வார்னிங்! இனி லேட்டா வந்தா, அகாடமியை விட்டு அனுப்பிடுவோம்!” என்று கடினமாகச் சொல்லிவிட்டுப் போனார் பள்ளி முதல்வர்.
“தினமும் லேட்டா வந்து திட்டுவாங்குறதுக்கு, ஒருநாளாவது சீக்கிரம் எழுந்திருச்சு கிளம்பி வரலாமே!”
“நான் லேட்டா எழுந்ததை நீ பார்த்தியா? வாயைக் கிளறாத, எல்லாம் என் அக்கா எருமையால வந்தது. அவளால நானும் திட்டு வாங்குறேன் வா, பிராக்டிஸ் ஆரம்பிக்கலாம்!” எனத் தோழியோடு உள்ளே போனாள்.
“நிலா, உன்னைச் சீனியர் கூப்பிடுறாரு!”
“இதோ வந்துட்டேன்!” என அவசரமாகத் தன் சீனியரைத் தேடிப் போனாள் நிலாஞ்சி.
திறமையான பெண். ஆறே மாதங்களில் வேலையில் திறமை வாய்ந்தவள் என்று பெயரெடுத்தது மட்டுமல்லாமல், தற்காலிக ஊழியரிலிருந்து நிரந்தர ஊழியராகப் பதவி உயர்வும் சீக்கிரமே கிடைத்துவிட்டது.
“சார் உள்ள வரலாமா?” என்ற அனுமதியோடு உள்ளே வந்தவளைக் கண்டு சிரித்த சீனியர் ரமேஷ், “வா நிலா! உனக்காகத்தான் வெயிட்டிங். இதை ஓபன் பண்ணிப் பாரு” என ஒரு ஃபைலைக் கொடுத்தார்.
அதை வாங்கித் திறந்து பார்த்தவளின் கண்கள் விரிந்தன.
“சார், இவ்வளவு பெரிய லெவல் என்னால சரியாப் பண்ண முடியுமா?”
“நீ லாஸ்டா டிசைன் பண்ணிக் கொடுத்த பிளான் கஸ்டமருக்கு மட்டுமில்ல, எம்.டி.க்கும் ரொம்பப் பிடிச்சுப்போச்சு. இது உன் திறமைக்கான உயர்வு இன்னும் நிறையக் கத்துக்கிட்டு முன்னேறிப் போகணும்” என்று மனதார வாழ்த்தினார்.
“ரொம்ப தாங்க்ஸ் சார், நான் எதிர்பார்க்கல! கண்டிப்பா இந்தப் ப்ராஜெக்ட் நல்லபடியா முடிய நம்ம கம்பெனிக்கு உதவியா நான் கடைசிவரை இருப்பேன்”
“நாங்க உன்னை நம்புறோம். நெக்ஸ்ட் மண்டே பத்ரன் சார் கூட நீ டெண்டர் நடக்குற இடத்துக்கு போகணும் ஞாபகம் வச்சுக்கோ. அவருக்குப் பர்ஃபெக்ஷன் ரொம்ப முக்கியம். கொஞ்சம் சொதப்புனாலும் பாரபட்சமே பார்க்காமல் நம்மளைத் திட்டுவாரு. கேர்ஃபுல்லா பிரிப்பேர் பண்ணிட்டுப் போ” என்றார்.
‘அவன் திட்டுவான்னு நீங்க சொல்லித்தான் தெரியணுமா! அது வாயா, இல்லை லண்டன் பாதாளச் சாக்கடையானு எனக்கே ரொம்ப நாளாகச் சந்தேகம் இருக்கு!’ என மனதிற்குள் நினைத்தாலும், வெளியே சிரித்தபடி தலையாட்டிவிட்டு வந்தாள்.
பத்ரனின் உக்கிர அவதாரத்தைத் தினமும் பார்க்கிறாளே! அதுவும் வெள்ளைக்காரத் துரை இங்கிலீஷில் கெட்ட வார்த்தைகளில் காதுவலிக்க திட்டினாலும், பாதி வார்த்தை புரியாமல் முழிப்பதால் யாருக்கும் பெரிதாகப் பாதிப்பு இருக்காது.
‘இவன்கூடக் குப்பை கொட்டணுமா?’ என்ற கவலை இருந்தாலும், தன் திறமையை நிரூபிக்கவும் அடுத்த நிலையை அடையவும் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தாள் நிலாஞ்சி.
“நிலா வாழ்த்துகள்டி! ட்ரீட் எங்க?” என கூட வேலை செய்பவர்கள் அவளை சூழ்ந்து கொள்ள,
“தரேன்! தரேன்! கேன்டீன்ல டீயும் பஃப்ஸும் வாங்கித் தருவேன். அவ்வளவுதான் ட்ரீட்” என்றவளை கொடூரமாக முறைத்தார்கள்.
“வேண்டாம்னா போங்க! நமக்குக் காசை வேஸ்ட் பண்ணப் பிடிக்காது” என்றாள்.
அவள் குணம் தெரியுமே! சரியான கஞ்சப் பிசுனாரி. வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துவருவது ஓகே, இவள் ஸ்நாக்ஸ் முதற்கொண்டு எடுத்துவந்துவிடுவாள்.
“ஏன்டி, பத்து ரூபா டீ வாங்குற காசை மிச்சம் பண்ணிக் கோட்டையா கட்டப்போற?”
“கோட்டை கட்டுறேனோ! வீடு கட்டுறேனோ! ஒரு பைசா வேஸ்ட் பண்ண மாட்டேன்” எனப் பிடிவாதமாக இருப்பாள் நிலாஞ்சி.
“உன்னைப் பத்தித் தெரிஞ்சும் ட்ரீட் கேட்டோம் பாரு, சரி சிக்கன் பஃப்ஸ் வாங்கித்தா!” என்று அவளது டீம் ஆட்கள் அவளைக் கேன்டீனுக்கு இழுத்துப்போக, கவலை மறைந்து கலகலக்க ஆரம்பித்துவிட்டாள்.
சோமசுந்தரம் தனியார் வங்கியில் உதவி மேலாளராக இருக்கிறார். இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால், தனியார் வேலையில் வரும் அளவான பணத்தைப் பாதுகாப்பாகப் பிள்ளைகள் பெயரில் சேமித்து வைக்கிறார்.
பார்வதி பொறுப்பான குடும்பத் தலைவி. வீட்டையும் கவனித்துக்கொண்டு, பிள்ளைகளையும் அருமையாக வளர்த்தெடுத்த பெண்மணி. இருவருக்கும் இரண்டு பெண்கள்தான் உலகம். நால்வருக்குள் அனைத்துமே அடங்கிவிடும் சந்தோஷமோ, துக்கமோ! அவர்களே பகிர்ந்துகொள்வார்கள்.
மாலை வேலை முடிந்து வெளியே வந்த நிலாஞ்சி தங்கையைக் கூப்பிட நடனப் பள்ளிக்குப் போக, திகள்விழி முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு வண்டியில் ஏறினாள்.
“ரொம்பக் கோவமா இருக்கியா? சரி,சரி கோவமா இரு. நாளைக்கு பத்து மணிக்கு டான்ஸ் ஸ்கூல் போகலாம்”
“அக்கா ப்ளீஸ் வேண்டாம்! இன்னைக்குக் கறாராக சார் சொல்லிட்டார் நாளைக்கும் லேட்டா போனா டிஸ்மிஸ் பண்ணிடுவாங்க” எனக் கெஞ்ச ஆரம்பித்துவிட்டாள்.
“அவ்வளவு தைரியம் வந்திருச்சா அந்தச் சொட்டை மண்டையனுக்கு? உன் பெர்ஃபார்மன்ஸ் நல்லா இருக்கு, போட்டிக்கு அங்க அனுப்புங்க, இங்க அனுப்புங்கன்னு அவன் டப்பா ஸ்கூலைப் பெருமை பீத்த, பர்மிஷன் கேட்டு ஃபோன் பண்ணட்டும். இருக்கு அந்த ஆளுக்கு!”
விட்டால் வண்டியை அவர் வீட்டுக்கு திருப்பிவிடுவாள் போல!
“ஐயோ அக்கா! நான் பாவம் இல்லையா? நாளையிலிருந்து நான் பஸ்ல போய்க்கிறேன். நீ ஸ்கூட்டியில ஆபீஸ் போ” என்றாள் திகள்விழி.
இருவரும் பேசிக்கொண்டே வந்ததால், நிலாஞ்சி வண்டியைக் கடையில் நிறுத்தியதைத் திகள் கவனிக்கவில்லை.
“இதென்ன சாட் கடைக்கு வந்திருக்கோம். பானிபூரி சாப்பிடப் போறோமா?”
“ஆமாம், இன்னைக்கு ஒரு குட் நியூஸ் இருக்கு. சொல்றேன் வா” எனத் தங்கையைக் கைப்பிடித்து உள்ளே அழைத்துப்போனாள்.
தனக்குக் கிடைத்திருக்கும் பெரிய ப்ராஜெக்ட் பற்றி தங்கையிடம் சொல்லி மகிழ்ந்தாள் நிலாஞ்சி.
“சூப்பர் அக்கா! நீ திறமைசாலி இன்னமும் நீ பெரிய பதவிக்குப் போகணும்” எனச் சந்தோஷமாகச் சொன்ன தங்கையை ஆதுரமாகப் பார்த்தன அவள் விழிகள்.
இருவரும் ஜாலியாகச் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போனார்கள்.
“அம்மா அடிக்கப்போறாங்க! சீக்கிரம் போகலாம்” என்று புலம்பியபடி அவசரமாக திகள் வண்டியை ஓட்டிச் செல்ல,
“பொறுமையாவே போ! அம்மா இன்னைக்கு திட்ட மாட்டாங்க, உனக்கு ஒரு சர்ப்ரைஸ் ரெடி பண்ணியிருக்கேன்” என்றவளைப் புரியாமல் பார்த்த திகள்,
“என்ன சர்ப்ரைஸ்? நிஜமாவே சொட்டை மண்டையனுக்கு ஆப்பு வச்சிட்டியா?” எனப் பரபரப்பாகக் கேட்டாள்.
“அட எருமை! வீட்டுக்குப் போ. உனக்கே தெரியும்!”
அவசர அவசரமாகத் திகள் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்க, கேட் உள்ளே புதிதாக ஒரு ஸ்கூட்டி நின்றிருந்தது.
“அக்கா!” எனக் கத்தியபடி நிலாஞ்சியை அணைத்துக்கொண்டாள் திகள்.
“இது எனக்காக வாங்குனியா? சொல்லவே இல்ல! சூப்பரா இருக்கு ஆனா ஏன் புது ஸ்கூட்டி? ஏற்கனவே லோன் வேற கட்டுறோம். வெட்டிச் செலவு!” என்று சோகமாகச் சொன்ன தங்கையை அணைத்துக்கொண்டாள் நிலாஞ்சி.
“உன்னோட குட்டி மூளைக்கே கணக்குப் பார்க்கத் தெரியும் போது, எனக்கு லோன் இருக்குறது தெரியாதா? ஆல்ரெடி நான் சென்னை வந்ததும் முப்பதாயிரத்திலிருந்து முப்பத்தைந்தாயிரமா சம்பளத்தைக் கூட்டிட்டாங்க மேடம்!
பத்து மாசம் டியூ கட்டுனா போதும். அந்த வேலையை நான் பார்த்துக்குவேன் பெரிய மனுஷி போலப் பேசாம, நாளைக்கு சீக்கிரமா எழுந்து வண்டிக்குக் கோவில்ல தேங்காய் உடைச்சிட்டு ஸ்கூல் கிளம்பிப் போ!” என்றாள்.
“ரொம்ப தாங்க்ஸ் அக்கா! நான் அம்மா, அப்பாவைக் கூட்டிட்டு வரேன். நாம போட்டோ எடுக்கலாம்!” என உற்சாகமாக உள்ளே ஓடினாள்.
பார்வதி மூத்த மகளை முறைக்க,
“சாரி அம்மா! ஆல்ரெடி சொல்லணும்னு நினைச்சேன். நீங்க மறுத்துருவிங்கனு அப்பாவோட போய் வண்டி புக் பண்ணிட்டேன்” என்று அம்மாவைச் சமாதானம் செய்தாள்.
“பார்வதி…” எனப் பாவமாகத் தன்னை அழைத்த கணவரைத் திட்ட முடியவில்லை.
“சரி, சரி! வெளியே நின்னு ஆட்டம் போட்டது போதும். அப்பா வரும்போது சிக்கன் எடுத்துட்டு வந்திருக்காரு சப்பாத்திக்குக் கிரேவி வச்சுட்டேன். சாப்பிட வரலையா?”
“இதோ வந்துட்டோம்! லெக் பீஸ் எனக்குத்தான்!” என முதல் ஆளாக உள்ளே ஓடிய நிலாஞ்சியை,
“இல்ல, எனக்கு வேணும்!” என்று துரத்திக்கொண்டு ஓடினாள் திகள்.
இரு பெண்களையும் புன்னகையோடு பார்த்தபடி உள்ளே வந்தார்கள் இருவரும்.
“சார் கர்நாடகா, கேரளா பார்டர்ல இருக்குற மலைக் கிராமங்களில் தேடிட்டு இருக்கோம். கண்டிப்பா மேடமை கண்டுபிடிச்சதும் தகவல் சொல்றோம்”
போனை ஸ்பீக்கரில் போட்டிருந்த ருத்ரா, “ம்…” என்ற ஒற்றை பதிலோடு அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
‘நல்லவேளை, இன்னைக்கு தப்பிச்சேன்!’ என்று நினைத்த தகவல் சொன்னவன், வியர்வை வடிந்த நெற்றியைத் துடைத்துக்கொண்டு ருத்ரா சொன்ன வேலையைச் செய்யப்போனான்.
பால்கனியில் அமர்ந்திருந்த ருத்ராவின் பார்வையோ அகண்ட அண்டவெளியை இலக்கில்லாமல் வெறித்துக்கொண்டிருந்தது.
மற்றவர்கள் சொல்வதைப்போல ஆரலி இறந்துவிட்டாள் என அவன் நம்பவில்லை. அவனுக்கிருக்கும் பிரச்சினை ஒரு காரணமா, இல்லை ஏதோ ஒன்றால், அவள் திரும்பி வருவாளா என உறுதியாக தெரியாமல், அவளுக்காகக் காத்திருக்கிறான்.
தலைவலி அதிகமாக, வெறிபிடித்ததுபோலக் கத்தியவன் அறையிலிருந்த விஸ்கி பாட்டில்களைப் போட்டு உடைக்க ஆரம்பித்தான்.
பொருட்கள் உடையும் சத்தம் கேட்டு வேகமாக அறைக் கதவைத் திறந்து ஓடிவந்த சரபன், ருத்ராவின் கோபத்தில் பயந்தாலும், அவனைப் பின்னிருந்து அணைத்து அமைதிப்படுத்தப் பார்த்தான்.
“மச்சான் சொன்னா கேளு, கோவப்படாத! கையில இருக்குற பாட்டிலைக் கீழே போடு…”
“முடியாது! எனக்கு ஆரலி வேணும். அவள் இல்லாம பைத்தியம் பிடிக்குது!” என்று கத்தியபடி தன் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு வெளியே வந்த ருத்ராவைச் சரபனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
“முட்டாள்! அந்தப் பொண்ணு உயிரோட இருக்கும்போது நாயைவிடக் கேவலமா விரட்டி அடிச்சிட்டு, அவ செத்ததும் காதல்னு சொல்ற அறிவுகெட்டவனே! உன் ரிப்பேர் ஆன மூளையை நேராக்கி யோசிச்சுப்பாரு. ஆரலியை வீட்டைவிட்டு கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளுனவன் நீதான்!”
அவனும் எவ்வளவுதான் பொறுத்துப்போவான்? உலகத்தில் இல்லாத ஒருத்தியைத் தேடி வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருக்கும் நண்பன் மீது ஆத்திரமாக வந்தது.
‘சரி… அவ செத்துட்டானு ஏத்துக்கிட்டு ட்ரீட்மென்ட் எடுத்தா, ஆரலி பைத்தியம் தெளிஞ்சிடும். அதுக்கு முதல்ல அவள் செத்துட்டானு ருத்ரா நம்பணும்.
அவன் நார்மல் ஆகக் கொஞ்சமாவது குணமாகியிருக்க வேண்டும். அதற்கு ட்ரீட்மென்ட் எடுத்திருக்க வேண்டும்” என ஒரு வட்டத்துக்குள் மாட்டி, ருத்ரா வாழ்க்கை மட்டும் இல்லாமல் மற்றவர்களும் லூப்பில் மாட்டி ஓடிக்கொண்டிருக்க சரபனுக்கே எரிச்சலாக வந்தது.
“அப்போ, என்னாலதான் அவ என்னைவிட்டுப் போயிட்டான்னு சொல்றியா?”
“இன்னுமா உனக்கு விளக்கிச் சொல்லணும்? உன்னால, உன் டார்ச்சரால உலகத்தை விட்டே போயிட்டா போதுமா? நீ இப்படியே பினாத்திக்கிட்டு அலைஞ்சா, அவ ஆத்மாகூட உன்னை மன்னிக்காது!” என்றான் கோவமாக,
“நான் தப்பு பண்ணிட்டேன்! எனக்கு நானே தண்டனை கொடுத்தா ஆரலி திரும்பி வந்திடுவா!” என்று இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் கையிலிருந்த பாட்டிலைத் தன் தலையில் உடைத்துக்கொண்டான் ருத்ரா.
“ஐயோ, கடவுளே!” என்று அலறிய சரபன், செக்யூரிட்டி ஆட்களை வரவைத்து ருத்ராவை அமுக்கிப் பிடிக்கச் சொன்னான்.
ஆறு பேர் சேர்ந்தாலும் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
“விடுங்க!” என்று ஒரு உதறலில் ஆட்களை நிலைதடுமாறி விழச்செய்தான். வேறு வழியில்லாமல் மயக்கமருந்து ஊசியைப் போட்டான் சரபன்.
அவன் முகமோ இறுக்கமாக இருந்தது.
டாக்டர் வந்து ருத்ராவுக்கு வைத்தியம் பார்த்துவிட்டுப் போனார்.
“அவர் கோவப்பட்டா நீங்களும் கோவமாப் பேசாதீங்க சரபன். நமக்குப் பேஷன்ஸ் முக்கியம்! ருத்ராவின் குற்றவுணர்ச்சியை நாம குறைக்கணும். அவரால்தான் ஆரலி இல்லைனு திரும்ப நினைவுபடுத்தினா, தன்னையே அழிச்சுக்கிற நிலைமைக்குப் போயிடுவாரு” என்று டாக்டர் எச்சரித்தார்.
“சாரி டாக்டர்! கோவத்துல அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுட்டேன். இனி பத்திரமா பார்த்துக்குறேன்” என்று சோர்வாகச் சொன்னான்.
“தட்ஸ் ஓகே சரபன். ஆரலியை விட்டுட்டு ருத்ராவோட கவனம் வேற எதுல போகுதுனு கண்காணிங்க. பொருளோ, செயலோ, ஈவன் மனுஷங்களா இருந்தாலும் ஓகே!
அவர் கவனம் வேற ஒருத்தர் மேல, இல்லை பிடிச்ச செயல்கள் மேல போனா, நம்மளால ருத்ராவின் தீவிரத்தைக் குறைக்க முடியும்”
“ஓகே டாக்டர் நான் பார்த்துக்குறேன்” என்றவன், அவர் போனதும் மயக்கத்தில் இருக்கும் ருத்ராவைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
தன்னை முறைத்துப் பார்க்கும் பாட்டியை ‘நீ முறைச்சாலும், நான் சொன்னது சரிதான்’ என்ற பதில் பார்வை பார்த்துக்கொண்டிருந்தான் பத்ரன்.
யாருக்காகப் பேசுவது எனத் தெரியாமல் இருவருக்கும் இடையே சாம்பவி முழித்துக்கொண்டு நின்றார்.
“கண்ணா அமைதியா இருப்பா! பாட்டியை எதிர்த்துப் பேசாத…”
“அவன் உன்னோட மூத்த பிள்ளையை ஒன்னுக்கும் உதவாதவன்னு சொல்றான்! இவனை கண்ணே மணியேனு கொஞ்சிட்டு இருக்க”
மருமகளை முறைத்தபடி சொன்னார் அபிராமி.
“அத்தை” எனப் பயத்தோடு இருவரையும் பார்த்தார் சாம்பவி.
“என்ன அத்தை? உனக்கும் உன் புருஷனுக்கும் ருத்ரா மேல அக்கறை இல்லை. நாங்க அவனை அப்படியே விட முடியாது எங்களுக்கு அவன் முக்கியம்!” என்ற அபிராமியின் பேச்சில் கண்கள் கலங்க நின்ற அம்மாவைக் கண்டு பத்ரனுக்குக் கோபம் அதிகமாக வந்தது.
“பாட்டி யாருக்கும் அவன் மேல அக்கறை இல்லாம இல்லை. அம்மாவுக்கு ருத்ரா மேல பாசம் இல்லைனு சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு? ஆக்ஸிடென்ட் ஆகி அவன் சாகக் கிடந்தப்போ அம்மா எவ்வளவு துடிச்சாங்கனு நீங்களே பார்த்திங்க.
பெத்த தாய், கூடப் பிறந்த தம்பி, பாசமா வளர்த்த பாட்டினு நம்மளை மூணாவது மனுஷங்களா ஒதுக்கி வச்சது உங்க பேரன்.
அப்போகூட வீட்டுக்கு வாடானு கெஞ்சுனோம். ஆனால் அவன்! அந்தச் சரபனை நம்புற அளவுக்கு நம்மளை நம்பலைனு எனக்கு ஆத்திரமா இருக்கு”
“பத்ரா, அவன் நிலைமை தெரிஞ்சும் இப்படிப் பேசுறியே?”
“போதும் பாட்டி! என்ன மோசமான நிலைமையா இருந்தாலும் நாம நினைச்சா அதைச் சமாளிக்க முடியும். அவன் சரியாகணும்னு அவனே விரும்பல. உங்க எல்லாரையும் விட நான் என்னோட அண்ணனை ரொம்ப மிஸ் பண்றேன்!
சிங்கம் போல யாரையும் தன்னை நெருங்க விடாம வச்சிருந்த என் அண்ணன், இப்போ புத்தி பேதலிச்சவனா இருக்கான். அவன் சரியாகி என் கிட்ட வரலைனாலும் பரவாயில்லை.
இப்படி கெட்ட பெயரைப் பொது இடத்துல வாங்காம இருந்தா போதும். ‘உன் அண்ணன் பைத்தியமா இருக்கான், மிருகம் போல அடிக்குறான்’னு ஆட்கள் என் காதுபடப் பேசும்போது வருத்தமா இருக்கு பாட்டி”
“இதே நிலைமை தொடர்ந்தா, அவனோட மரியாதையைக் காப்பாத்த அவனைக் கொல்லவும் நான் தயங்க மாட்டேன்!” என்ற பத்ரனின் வார்த்தையில் சாம்பவி வெடித்து அழ ஆரம்பித்தார்.
“ஏன்டா இப்படி பேசுற? நீங்க இரண்டு பேரும் எங்களுக்கு முக்கியம் பத்ரா! பாட்டி சொல்றதைக் கேளு. அவனை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வா! நானும் உன் அம்மாவும் அவனைப் பார்த்துக்குறோம்”
“புரியாம பேசாதிங்க பாட்டி! அவன் ரொம்ப அக்ரஸிவா நடந்துக்கும்போது உங்களால, அம்மாவால மட்டும் இல்ல, நம்ம வீட்டுல வேலை பார்க்குறவங்க ஒட்டுமொத்தமா சேர்ந்தாலும் அவனைக் கண்ட்ரோல் பண்ண முடியாது. இங்க பாருங்க…” என ருத்ராவின் வீட்டில் அவன் ஆடிய ருத்ர தாண்டவத்தைப் போனில் காட்டினான்.
சரபனை முழுதாக நம்பி அண்ணனை விட அவன் விரும்பவில்லை. அவன் ஆட்கள் அங்கே பாதிக்குப் பாதி இருக்கிறார்கள்
“இதுக்கு என்னதான்பா தீர்வு? என் புள்ளை திரும்ப ‘அம்மா’னு என்கிட்ட வரமாட்டானா? என் மடியில் படுத்துத் தூங்க மாட்டானா?”
“அழாதீங்க அம்மா! சீக்கிரம் நான் ஒரு முடிவெடுக்குறேன்” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டுப் போனான் பத்ரன்.
