“எலி தான் எண்ணெய்க்கு காயுது, எலி புளுக்கை ஏன்டா காயணும்? உன் கம்பெனி வேலையை நீ பாரு. முடியலைனா உன் தொம்பியைப் பார்க்கச் சொல்லு.
அதைவிட்டு என்னை ஏன் பார்க்கச் சொல்லி டார்ச்சர் பண்ற? AA Group-ல 4% ஷேர் வச்சிருக்கிற பாவத்துக்கு உன்னோடவே சுத்திட்டு இருந்தா போதுமா? என்னோட கம்பெனி, ரிசார்ட் எல்லாம் பார்க்க வேண்டாமா?
காலையில் உன் ஃபுட் ஃபேக்டரியில் ஆரம்பிக்கிற ரவுண்டு, ஃபுட் ஃபேக்டரி, டெக் சொல்யூஷன், கன்ஸ்ட்ரக்ஷன், ஹோட்டல்னு 24 மணிநேரம் பத்தாம அலையணும்.
வீட்டுக்குப் போய் என்னோட ஆஃபீஸ் ஒர்க் பார்க்கணும்” என்று விடாமல் புலம்பிக்கொண்டிருந்த சரபனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, போனில் கேம் விளையாட ஆரம்பித்தான் ருத்ரா.
“டேய் மண்ணாங்கட்டி! உன்கிட்டதான் பேசுறேன், காதுல விழுதா இல்லையா? முதல்ல சகிலா பட ஹீரோ மாதிரி மொழுமொழுனு சுத்துறதை விட்டுட்டு சட்டை போடுடா!” என்று அழுகாத குறையாகச் சொன்ன சரபனோ, தானே போய் அவனுக்கு ஒரு சட்டையை எடுத்து வந்து கொடுத்தான்.
சலித்தபடி சட்டையைப் போட்ட ருத்ரா, “வா போகலாம்!” என்று அவனோடு காரில் ஏறிக்கொண்டான்.
சரபன் ஒன்றும் இல்லாத பட்டவன் இல்லை. அவனுக்கும் சொந்தமாகச் சில கம்பெனிகளும் ரிசார்ட்டும் உள்ளன. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆரம்பமானது அவர்களது நட்பு. பள்ளி, கல்லூரி, வேலை என இப்போது வரை தொடர்கிறது. நண்பன் குணமான பின்பு கல்யாணம் பண்ணிக்கொள்கிறேன் என்று உறுதியாக நிற்கிறான்.
சரபனுக்கு அம்மா இல்லை. அப்பா பூபதி நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார். ருத்ரா வீட்டில் தங்காமல், தினமும் வேலை முடிந்து வீட்டுக்குப் போவது கூட அப்பாவைக் கவனித்துக்கொள்ளத்தான்.
ருத்ரா குடும்பத்தில் பத்ரனைத் தவிர மற்றவர்களுக்கு சரபன் மீது பாசமும் மரியாதையும் இருக்கிறது. ஏனோ, அவனுக்கு மட்டும் சரபனைக் கண்டாலே பிடிக்காது. அண்ணனுக்குத் துணையாகத் தான் இல்லாமல் இவன் இருக்கிறானே என்ற கோபமாகக்கூட இருக்கலாம்.
“இன்னைக்கு செக்கிங் யாரு வரப்போறான்னு தெரியல. பத்ரன் சார் வந்தா பெட்டரா இருக்கும். அந்தப் பைத்தியக்காரன் வந்தா சின்ன தப்பைக்கூட ஈஸியா கண்டுபிடிச்சுத் தண்டனை கொடுப்பான்!” என்று மேனேஜர், அசிஸ்டன்ட் மேனேஜரிடம் புலம்பிக்கொண்டிருந்தார்.
“எனக்கும் பயமாத்தான் இருக்கு சார். இருங்க… எதுக்கும் இன்னொரு தடவை ஃபைல்ஸ் செக் பண்ணிக்கிறேன்” என்று உள்ளே ஓடினார்.
“சார், நாம ஒழுங்கா வேலை பார்த்தா யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது!” என்று ரோஷமாக அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்டில் வேலை செய்யும் ஒருவன் சொல்ல,
“ஆஹான்! அவ்வளவு கான்ஃபிடன்ட்டா நொட்டுற சார் இன்னைக்கு தேதியைத் தப்பா போட்டிருக்க, இதைக்கூடக் கவனிக்கத் துப்பில்ல,
நீ கணக்கு பார்க்க அக்கவுண்ட்ஸ்ல உட்கார்ந்திருக்கியானு பச்சையா கேட்பான். போய் டேட், டைமிங் சரியா எழுதித்தொலை!” என்று அவனை திட்டி அனுப்பினார் மேனேஜர்.
கார் ஃபுட் ஃபேக்டரி வாசலில் நிற்க, கம்பீரமாகக் காரிலிருந்து இறங்கினான் ஏகதச ருத்ரா.
“ருத்ரா சார் பார்க்க ஆளு செம ஸ்மார்ட்டா, அழகா இருக்காரு. இவரை ஏன் பைத்தியம்னு சொல்றீங்க?” என்று புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த பெண் ஒருத்தி வாயைப் பிளந்துகொண்டு அவனை சைட் அடித்தாள்.
“இந்தாம்மா, உன் கண்ணுல தெரியுற கிறக்கத்தை அந்த ஆளு பார்த்தா கண்ணை நோண்டிக் கையில கொடுத்து அனுப்பிடுவாரு! அழகா இருக்கிறவன்கிட்ட ஏகப்பட்ட ஆபத்து இருக்கும். வாய் பார்க்காம உள்ள போ!” என்று சீனியர் அவளை உள்ளே போகச் சொன்னார்.
வழக்கம்போல ஃபேக்டரியைச் சுற்றி ரவுண்ட்ஸ் போனவன், அன்றைய லேப் சாம்பிள்களைப் பார்த்துவிட்டு வெளியே வர, அங்கு ஒருவன் முகத்தில் பயத்தோடு ஓரமாக நின்றிருந்தான். ருத்ராவின் கால்களோ நேராக அவனிடம் போய் நின்றன!
ருத்ராவை அருகில் கண்டதும் அவனுக்கு இன்னும் பயம் தொண்டையைப் பிடித்தது.
“சார்…”
“ஏன் பயப்படுற? என்கிட்ட ஏதாவது சொல்லணுமா?” என்று சாதாரணமாகக் கேட்டான். அந்த வார்த்தைக்கே விட்டால் மயங்கிவிடுவான் போல எதிரே நின்றவன்.
“சார் இவன் கிளீனரா இங்க வேலை பார்க்குறான். உங்களைப் பார்த்துப் பயந்து போய் நிக்கிறான் வேற ஒண்ணும் இவனுக்குத் தெரியாது!” என்று அவசரமாக மேனேஜர் முன்னால் வந்து சொல்லிட,
அவரை அழுத்தமாகப் பார்த்த ருத்ரா, “கிளீனரா இருந்தா எதுவும் தெரியாதுனு அர்த்தமா? ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு. இவனுக்கு என்ன தெரியுது, என்ன தெரியலைனு அவனே சொல்லுவான்!”
சொல்லு என்பது போல அழுத்தமாகக் கிளீனரைப் பார்க்க, அவன் பேச ஆரம்பித்தான்.
“சார், நான் தினமும் காலையில் இந்த யூனிட்டைக் கிளீன் பண்ணுவேன். அப்போ இந்தப் பேப்பர் குப்பைத்தொட்டியில் அரைகுறையா கிழிஞ்சு போய்க் கிடந்தது. அப்புறம் மிக்ஸிங் யூனிட் கீழே வெள்ளை, மஞ்சள் கலர் பவுடர் டஸ்ட்டா படிஞ்சிருந்தது”
“நான் போட்டோ எடுத்து வச்சிருக்கேன். பாருங்க!” என்று தன் போனைக் காட்டினான்.
“குப்பையில கிடக்கிற பேப்பரை எடுத்துட்டு வந்து கதை சொல்லிட்டு இருக்கியா? எங்க வேலையை நாங்க ஒழுங்கா பண்ணிட்டு இருக்கோம். தப்பான இன்ஃபர்மேஷன் கொடுத்தா வேலையை விட்டு விரட்டிருவோம்!” என்ற மேனேஜரைப் பார்த்து அந்த வேலைக்காரன் பயப்பட,
ருத்ரா மேனேஜரைச் சப்பென அறைந்தான். அனைவரும் பயத்தோடு இரண்டு எட்டு பின்னால் நகர்ந்தனர்.
“நானும் பார்த்துட்டே இருக்கேன். உன் அப்பன் வீட்டு கம்பெனி மாதிரி ஓவரா துள்ளுற! இது என் தாத்தா வீட்டு கம்பெனி ஓரமா மூடிட்டு நிக்கணும். புரியுதா?”
பயத்தோடு மேனேஜர் ஓரமாக நிற்க, ருத்ரா கிளீனரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தான்.
“அந்தப் பேப்பர்ல தப்பு இருக்குனு உனக்கு எப்படித் தெரியும்?”
“சார் நான் படிக்காம கிளீனர் வேலைக்கு வரல. பி.எஸ்சி. கெமிஸ்ட்ரி முடிச்சிருக்கேன்! இதுல இருக்கிற காம்பவுண்ட் மிக்ஸ் ஆனா ப்ராடக்ட் குவாலிட்டி இஷ்யூ ஆகும்.
அப்புறம், அந்தப் பவுடர் சோடியம் மெட்டாபைசல்ஃபைட் (Sodium Metabisulfite) எனக்கு நல்லாத் தெரியும். நான் கொஞ்சம் சாம்பிள் எடுத்து வச்சேன். இதை முகர்ந்து பாருங்க. தீக்குச்சி பொருத்தும்போது வர்ற ஸ்மெல் மாதிரி இருக்கும்.
“இந்தப் பவுடரை ஃபுட்ல குறிப்பிட்ட அளவுதான் சேர்க்கணும் சார். ஒருவேளை கூட இருந்தா ஃபுட் குவாலிட்டி போயிடும்.
ஃபுட் பாய்சனிங், தலைவலி, மயக்கம் வரும். உணவுப் பாதுகாப்புத் துறை சோதனை பண்ணும்போது இந்தக் காம்பவுண்ட் அளவு கூடுதலா இருந்தா கம்பெனிக்கு சீல் வச்சுருவாங்க சார்”
“முதல்ல லேப் ஹெட் சார்கிட்ட சொல்லப் போனேன். அவரு பேசவே விடல, இரண்டு மணிநேரமா மேனேஜரைப் பார்க்க வெயிட் பண்றேன். அவரைப் பார்க்க முடியல. நீங்க வந்துட்டீங்க அதான் உங்ககிட்ட எப்படிச் சொல்றதுனு தெரியாம நிக்கிறேன்!” என்று பயத்தோடு சொல்லி முடித்தான்.
“சார் இவன் பொய் சொல்றான்! இன்னைக்குச் சாம்பிள் ரிப்போர்ட் ஆல்ரெடி நீங்க பார்த்துட்டீங்க. அதுல எந்தக் குழப்பமும் இல்ல. இவன் லேப்ல இருந்து சாம்பிள் எடுத்துட்டு வந்து எங்களைத் தப்பு சொல்றான்!”
“ருத்ரா, ஆல்ரெடி ரிப்போர்ட் பார்த்துட்டோம். இப்போ என்ன பண்றது? சீனியர்ஸ் சொல்றதைக் கேட்கலாம். இவனைப் போகச் சொல்லு, நமக்கு வெளிய வேலை அதிகம் இருக்கு!” என்ற சரபனை பார்த்து மறுப்பாகத் தலையை ஆட்டிய ருத்ரா, “ஒரு சேர் எடுத்துட்டு வா!” என்றான்.
ஙே என்று முழித்த சரபன் “இவன் என்ன கடையைப் போடுறான்?” என்று முணுமுணுத்துக்கொண்டே ஒரு சேர் எடுத்து வந்து போட்டான்.
“உன் பெயர் என்ன?”
“பாஸ்கர் சார்…”
“குட்! இப்போ உனக்கு ஒரு சான்ஸ் தரேன். தப்பு நடந்துருக்கிறதா நீ சொல்ற யூனிட்ல இருந்து சாம்பிள் எடுத்துக்கோ!
இவங்க பண்ணது தப்புனு நிரூபிக்கப்போறியா? இல்ல நீ சொல்றது சரினு நிரூபிக்கப் போறியோ? அது உன் விருப்பம். டெஸ்ட் பண்ணிப் பார்க்க நீ தயாரா?”
“நான் ப்ரூவ் பண்றேன் சார். ஒரு மணிநேரம் டைம் கொடுங்க!” என்ற பாஸ்கர், இரண்டாம் யோசனையே இல்லாமல் வேகமாக லேபுக்கு ஓடினான்.
“மச்சான்…” என்று இழுத்த சரபனையும், நீ எப்போ ராசா கிளம்புவ? என்று காத்திருந்த வேலையாட்களையும் பார்த்து, “ஏன் நிக்கிறீங்க? உட்காருங்க!” என்றான்.
“சார்…”
“உட்காருங்கனு சொல்றேன்ல!”
அவ்வளவுதான்! படக்கென அங்கேயே சம்மணம் போட்டு அனைவரும் அமர்ந்துவிட, ‘இந்த நாசமாப் போனவனால நிம்மதியாப் பொழுது போக மாட்டேங்குதே!’ என்று உள்ளே கரித்துக்கொட்டினான் சரபன்.
சரியாக ஒரு மணிநேரம் கழித்து வந்த பாஸ்கர்,
“சார் இவங்க சொன்னது தப்பு, இதோ பாருங்க!” என்று டெஸ்ட் ரிப்போர்ட்டைக் காட்டினான். லேப் ஹெட் திருதிருவென முழித்தார்.
“எக்ஸ்ப்ளைன் பண்ணு!”
“கம்பெனில டெய்லி சாம்பிள் டெஸ்ட் செமி-குவான்டிடேட்டிவ் முறையில் எடுப்பாங்க சார். நமக்குத் தெளிவான ரிசல்ட் தெரிய நான் யூஸ் பண்ணது அயன் குரோமடோகிராபி டெஸ்ட்.
கவர்மென்ட் அனுமதிச்ச Sodium Metabisulfite அளவைவிட இதுல அதிகமா இருக்கு!” என்று பேப்பரைக் கொடுத்துவிட்டு ஓரமாக நின்றான்.
சும்மாவே இவன் பேசுவான். இப்போ என்ன பண்ணப்போறானோ! என்று பயத்தோடு மேனேஜரும் லேப் ஹெட்டும் பார்க்க,
“உன் மாஃப் எடுத்து லேப் ஹெட் கையில கொடு!” என்று பாஸ்கருக்கு உத்தரவிட்டான் ருத்ரா.
தயங்கியபடி அதை அவரிடம் நீட்டினான் பாஸ்கர்.
“இன்னையிலிருந்து ஒரு மாசம் உன் வேலை யூனிட்டை சுத்தம் பண்றது! உன் பொறுப்புல இருக்கிற யூனிட்ல நடக்கிற தப்பைக் கவனிக்காம, மக்கள் உயிர்மேல அஜாக்கிரதையா இருந்ததுக்குத் தண்டனை. உன்னை நம்புன கம்பெனியை அஜாக்கிரதையா ஹேண்டில் பண்ணிருக்க, ஒரு மாசம் முடிஞ்சதும் வேலையை விட்டு போயிருக்கணும்!”
“எங்க நம்ம மேனேஜர் கருத்து கந்தசாமி?” என்று சரபன் மேனேஜரை இழுத்து முன்னால் விட்டான்.
“உங்க வேலையை நீங்க சரியாப் பண்ற நினைப்பு இருக்கலாம். அதுக்காக மத்தவன் சொல்ற கருத்து தப்பா இருக்கணும்னு அவசியம் இல்ல. பொறுப்பான பதவியில இருக்கிங்க. ஸோ, பார்த்து நடந்துக்கோங்க. ஒன் மந்த் சஸ்பென்ஷன்!”
“பாஸ்கர், இனி உன்னோட வேலை கிளீனர் இல்ல. லேப் அசிஸ்டன்ட்!” என்று அவன் தோள்களைத் தட்டிச் சொல்லிவிட்டு அங்கிருந்து போனான் ருத்ரா.
தன் ஆட்களுக்குக் கண்களைக் காட்ட, யார் இந்த வேலையைச் செய்தார்கள் எனக் கண்டுபிடிக்க அவர்கள் போனார்கள்.
காரில் அமர்ந்திருந்த சரபன் ருத்ராவைப் பார்ப்பதும் முகத்தை திரும்புவதுமாக இருக்க,
“என்ன கேக்கணுமோ கேளு! நான் என்ன புதுப்பொண்ணா? மாப்பிள்ளை போல திரும்பி திரும்பிப் பார்த்து வெட்கப்படுற?”
“ஆமா நீ புதுப்பொண்ணு. நான் மாப்பிள்ளை! போற போக்கைப் பார்த்தா தனித்தனியா கல்யாணம் பண்ணிச் செட்டில் ஆக முடியாது போல, உன்னையே கல்யாணம் பண்ணி உன் வீட்டுக்கு வந்திடுறேன். அதைவிடு எப்படி அந்தப் பையன் உண்மை சொல்றான்னு நம்புன?”
“ரொம்ப ஈஸி! தப்பு பண்ணிட்டு பயத்தோட நிக்கிறவனுக்கும், தப்பு நடந்திடக்கூடாது உண்மையை வெளியே சொல்லணும்னு நினைச்சுப் பயப்படுறவனுக்கும் வித்தியாசம் இருக்கு. அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன் சரியாப் பயன்படுத்திக்கிட்டான்.
நான் சொல்றது சரினு நீ யோசிக்கும்போது உனக்குள்ளேயே நீ மாட்டியிருப்ப, அதுவே தன்னை குற்றம் சொல்றவங்க எங்க தப்பு பண்றாங்கனு பாரு, உன்னை சரினு நிரூபிக்க உன்னைச் சுத்தி நடக்கிறதை கவனிக்க ஆரம்பிப்ப, நிறைய கத்துப்ப. அவன் திறமையானவன் நான் யூஸ் பண்ணிக்கிட்டேன்!”
பிஸ்னஸ் இப்படிதான் என எளிமையாகச் சொன்னவனை அசந்து போய்ப் பார்த்தான் சரபன்.
“இந்தத் தெளிவை ஆரலி விஷயத்துல யூஸ் பண்ணா நாங்க நிம்மதியா இருப்போம் மச்சான்!”
“என் ஆரலி! சாக்லேட் மஃபின்! என்னைக்குத் திரும்பி வருகிறாளோ, அன்னைக்கு எனக்கு பிடிச்ச பைத்தியம் தெளிஞ்சிடும். உங்களுக்கும் விடுதலை கிடைச்சிடும்!” என்று ரசனையாகச் சொன்னவனை,
“கிழிஞ்சது போ! அப்போ எங்களுக்கு இந்த ஜென்மத்துல விடுதலை கிடையாதுனு முகத்துக்கு நேரா சொல்லுடா, லவடேகாபால்! காதல் பண்றானாம் காதல்!” என்று எரிச்சலாகச் சொன்னவனை முறைத்தான் ருத்ரா.
மொத்தமாக ரவுண்ட்ஸ் போய் சரபனின் இடுப்பை ஒடித்துவிட்டுக் கடைசியாக தன் நட்சத்திர ஹோட்டலுக்கு நண்பனை இழுத்துப் போனான் ருத்ரா.
“நீ மனுஷனே இல்ல தெரியுமா? நான் புட் ஏரியால உட்கார்ந்து சாப்பிடப்போறேன் நீ உள்ள போடா!” என்று ரெஸ்டாரன்ட் பக்கம் ஓடிவிட்டான் சரபன்.
“இடியட்!” என்று திட்டியபடி உள்ளே போனவனது இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. தன் நெஞ்சில் கைவைத்த ருத்ரா சுற்றிலும் பார்க்க, ஒருவரும் கண்ணில் படவில்லை.
“சார் போகலாமா?” என்று விமல் கேட்க, பதில் சொல்லாமல் எதிர்ப்பக்கம் ஓட ஆரம்பித்தான் ருத்ரா.
“ஐயோ, இவரு திரும்ப ஓடிப்போறாரு! யாராவது பிடிங்களேன்!” என்று விமல் ருத்ராவின் பின்னால் ஓடிவந்தான், அவனைக் கண்ணுக்கெட்டும் தூரம் வரை காணவில்லை.
இடியாப்பத்தில் பாயாவை ஊற்றி நன்றாகப் பிசைந்து வாயில் வைக்கப்போன சரபன் முன்பு அழுதுவிடும் பாவனையோடு நின்றான் விமல்.
கையலிருந்த இடியாப்பத்தை தட்டில் போட்ட சரபன் “என்ன ஓடிட்டானா?” என்று சாதாரணமாக கேட்டான்.
“ஆமாம் சார்!”
“இதைச் சொல்லவா உனக்கு மாசம் ஐம்பதாயிரம் கொடுத்து வேலைக்கு வச்சிருக்கேன்? பரதேசி செக்யூரிட்டியைக் கூட்டிட்டுப் போய் அவனை தேடு. நிம்மதியாத் தின்னு, தூங்கி ஆறு வருஷம் ஆச்சு!” என்ற புலம்பலோடு கையைக் கழுவிவிட்டு ருத்ராவை தேடிப் போனான்.
ருத்ராவைத் தேடி ஒரு கூட்டமே அலைந்துகொண்டிருக்க, அதே ஹோட்டலில் தன்னோடு வேலை பார்க்கும் பெண்ணின் எங்கேஜ்மெண்ட் பார்ட்டிக்கு வந்திருந்தாள் நிலாஞ்சி.
“எங்கேஜ்மெண்ட் மட்டுமே இவ்வளவு ஆடம்பரமா செலவு பண்ணா? கல்யாணம் வானத்துல பந்தல் போட்டு மேகத்துல வைப்பாங்க போல!” என்று ஆச்சரியமாக கேட்டவளை முறைத்தாள் ஒருத்தி.
“வாழ்க்கையில ஒருதடவை வரப்போற கல்யாணத்தை ஜாலியா செலிப்ரேட் பண்றதை விட்டுட்டு கணக்குப் பார்த்தா நல்லா இருக்காது நிலா”
“அதான்டி நானும் சொல்றேன். ஒரு தடவை பண்ணப்போற கல்யாணத்துக்கு அதிகமாச் செலவு பண்றது வேஸ்ட். இந்தச் செலவை மிச்சம் பண்ணா ஒரு வீடு வாங்கிடலாம்” என சிக்கனவாதி அட்வைஸ் கொடுக்க,
“எம்மா தாயே, வாயை மூடு! மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கேட்டா கலவரமாகிடும். இவ்வளவு பேசுறியே, நீ எப்படிக் கல்யாணம் பண்ணிக்கப்போற? மண்டபம், வரதட்சணை செலவு இருக்கும்ல”
“நான் காசு அதிகமா செலவு பண்ண மாட்டேன்பா! மாப்பிள்ளை குடும்பம், என் குடும்பம், இரண்டு குடும்பம் மட்டும் நல்ல ஹில் ஸ்டேஷனுக்குப் போய், அங்கிருக்கிற கோவில்ல கல்யாணம் முடிச்சிட்டு, ஃபேமிலியா என்ஜாய் பண்ணிட்டு வருவோம்!” என்றவளை கூட்டமே அற்பமாகப் பார்த்தது.
“அப்போ மேரேஜ், ஹனிமூன், ஃபேமிலி ட்ரிப்… த்ரீ இன் ஒன் காம்போனு சொல்லு!” என்று அவளைக் கிண்டல் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
“போங்கடி ஓவரா பண்றீங்க!” என்று கோபித்துக்கொண்டு வெளியே வந்தவள், மெதுவாகக் கார்டன் ஏரியாவுக்கு நடந்து போனாள். இரவு எட்டு மணி என்றாலும் விளக்குகளின் ஒளியால் பகல்போல அந்த இடம் மின்னியது.
“அழகா இருக்கே இடம்! பணம் இருந்தா கட்டிடத்தை கூடக் கலையா மாத்தலாம் போல!”
அதிசயமாக அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தபடி மெதுவாக நடந்து வந்தாள் நிலாஞ்சி. திடீரென வேகமாகத் தன் மீது ஒருவன் மோதிட, அவனோடு சேர்ந்து கீழே விழவும் கரண்ட் போகவும் சரியாக இருந்தது.
“அம்மா!” என்ற சத்தத்தோடு கீழே விழுந்தவள் மீது ருத்ரா அழுத்தமாக விழுந்து கிடந்தான்.
“ஹேய் எழுந்திருடா! எருமை, கண்ணு தெரியாம ஓடி வந்து விழுற!” என்று திட்டியபடி அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டு எழுந்துகொள்ளப் பார்த்தாள் நிலாஞ்சி.
அவளிடமிருந்து வந்த வாசனை ருத்ராவின் மூளையைச் செயலிழக்கச் செய்தது.
ஆரலி! என்று முணுமுணுத்தவன், அவளை இழுத்துத் தன்மீது போட்டுக்கொண்டு இறுக்கமாக அணைத்தான். அவன் செயலில் அதிர்ந்தாள் பெண்ணவள்.
“பைத்தியக்காரா என்னடா பண்ற? இப்போ நீ விடல, கத்தி செக்யூரிட்டியைக் கூப்பிடுவேன் விடு!” என்று கத்தியவள், முடியில் வைத்திருந்த பூவிலிருந்து ஹேர் பின்னை கழட்டி எடுத்து அவன் நெஞ்சிலேயே கோபமாகச் சொருகிட, வலியில் லேசாக அவன் பிடி தளர்ந்தது.
“பொறுக்கி நாயே! பொண்ணுங்க தனியா இருந்தா போதும், வாய்ப்பு கிடைச்சா தொட்டுப் பார்க்க வந்திடுவியா இடியட்!” என்று திட்டியபடி, இரத்தம் வரும் அளவுக்கு நாலு முறை ஹேர்பின்னை ஆயுதமாக்கி அவனைக் காயப்படுத்திவிட்டு வெளியே ஓடிவிட்டாள்.
மல்லாக்கப் படுத்திருந்தவன் மனதிலோ மழைச்சாரல், வெளியே வலியில் இரத்தத்தூறல் என இருவேறு உணர்வுகளில் சிக்கியிருந்தான்.
கரண்ட் வந்ததுகூடத் தெரியாமல் கனவு கண்டுகொண்டிருந்தவனைத் தேடி வந்தான் சரபன்.
“டேய் உனக்குத் தூங்க இடம் இல்லைனா இங்க வந்து படுத்திருக்க, எந்திரிடா!” என்று அவனைத் தூக்கிவிட, அப்போதுதான் ருத்ரா நெஞ்சில் காயம்பட்டு இரத்தம் வருவது தெரிந்தது.
“என்ன ஆச்சு ருத்ரா? கீழே விழுந்ததுல காயம் பலமா பட்டுருச்சா… வா, ஹாஸ்பிடல் போகலாம்!” என்று பரபரத்தான்.
“இது என் ஆரலி கொடுத்த பரிசு!”
“பேய் எதுவும் சுத்துதா?” என்று சுற்றிலும் பார்வையை ஓட்டிய சரபன், “சரி,சரி! நீ கீழே விழுந்ததை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். அதுக்காகப் பேய், பூதம்னு புரளியைக் கிளப்பிவிடாத, முதல்ல இங்கிருந்து போகலாம்”
“பேயா?” என்று யோசித்த ருத்ரா, அவன் ஆரலியைப் பேய் என்று சொன்னதும் சரபனின் சட்டைக் காலரை இறுக்கிப் பிடித்தான்.
“தெரியாமச் சொல்லிட்டேன் விட்டுரு மச்சான்! அடிச்சிடாத…” பொத்தென சரபனை கீழே விட்டவனிடம் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல்,
“நெஞ்சுல மட்டும்தான் பரிசு கொடுத்தாளா? இல்ல…” என்று கேட்டு வைக்க,
“ஏய்!” என அவனை அடிக்க கை ஓங்கினான் ருத்ரா.
“இல்லடா! வயித்துல, கை, கால்ல பரிசு கொடுக்கலையானு கேட்டேன். ரொம்பக் கோவப்படாத அப்புறம் மூக்குல ரத்தம் வரும்!” என்று பம்மியபடி சொன்னவனை முறைத்த ருத்ரா,
“நீ வீட்டுக்குக் கிளம்பு. நான் மேனேஜரைப் பார்த்துட்டுக் கிளம்புறேன்!” என்றான்.
“மச்சான் சேர்ந்து போகலாம்!” என்று தயக்கமாகச் சொன்னவனை அழுத்தமாகப் பார்த்தன ருத்ராவின் விழிகள்.
அவனைத் தனியாக விட மனதில்லை என்றாலும், ருத்ரா பொறுமையாக சொல்லும்போதே போய்விட்டால் நல்லது எனத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே போனான் சரபன்.
அவன் போனதும் தன் காலுக்கு அருகில் கிடந்த மல்லிகைப்பூவை எடுத்து ஆழமாக சுவாசித்தவன் இதழ்களோ, “உன் செல்லப்பெயருக்கு ஏத்த மாதிரி இப்போ கொடியா இருக்கியே, கொடிச்சி!” என்று மந்தகாசப் புன்னகையோடு சொன்னபடி உள்ளே போனான்.
ஹோட்டல் மேனேஜரிடம் தோட்டத்தைச் சுற்றியிருந்த கேமரா ரெக்கார்டிங்கை வாங்கிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான்.
தன் ஸ்கூட்டியில் வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்த நிலாஞ்சியின் வாயோ, அந்த முகம் தெரியாதவனைப் பங்கமாகத் திட்டிக்கொண்டே வந்தது.
“தெரியாம விழுந்துட்டான் நினைச்சேன்! நாய் வேணும்னே கட்டிப்பிடிக்கிறான். இடியட்! ச்சை, இவனால ஹோட்டல்ல இருக்கிறவங்ககிட்ட சொல்லாம வந்துட்டேன். மூட் ஸ்பாயில் ஆகிடுச்சு. சாப்பிடாம வந்துட்டேன்!” என்ற கவலையோடு வீட்டுக்குப் போனாள்.
