Rolex 28

அத்தியாயம் 28

மயூராவின் இந்தத் திடீர் ஆவேசத்தையும் பதற்றத்தையும் பார்த்த பைரவன், மென்மையாகச் சிரித்தவன், மெதுவாகத் தன் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்து, அதனை எடுத்து வெளியே வைத்தான் …

அங்கிருந்து, பாபி கொடுத்தனுப்பியிருந்த அந்தத் தடிமனான, புதிய ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டுகளை வெளியே எடுத்தான். மயூரா பேசுவதை நிறுத்திவிட்டு அந்தப் பணத்தையே பார்க்க, பைரவன் அந்தப் பணக்கட்டுகளை ரோலக்ஸ் படுத்திருந்த அந்தக் கட்டிலின் மீது ‘டக்’ என்ற சத்தத்துடன் தூக்கி வைத்தான்.

“மயூரா… முதல்ல அமைதியா இருமா. நான் ஏன் அப்படி ஒரு கதையைச் சொன்னேன்னு இப்போ உனக்குப் புரியாது. ஆனா, அந்தப் பொய் மட்டும்தான் இப்போதைக்கு நம்ம ரோலக்ஸோட உயிரைக் காப்பாத்தியிருக்கு,” என்று பைரவன் தன் கைகளை விரித்துக் காட்டினான்.

ரோலக்ஸ் கட்டிலில் இருந்த அந்தப் பணக்கட்டுகளைத் தொட்டுப் பார்த்தான், தன் காயத்தின் வலியைக்கூட மறந்து, கட்டிலில் இன்னும் முன்னோக்கி நகர்ந்து அமர்ந்தவனது கண்கள் அகல விரிந்திருந்தன. “என்ன… என்ன சொல்ற பைரவா? உண்மையாவே… உண்மையாவே இந்தப்பணத்தை அந்தப் பாபி தான் கொடுத்தானா? அவனுக்கு என் மேல எந்த ஒரு சந்தேகமும் வரலையா?” என்று தன் கணத்த குரலில், ஆச்சரியமும் திகைப்பும் கலந்த தொனியில் கேட்டான்.

“ஆமா ரோலக்ஸ். இது பாபி கொடுத்தது தான். அதுவும் நூறு சதவீதம் உன்னோட கல்யாணத்துக்கான அவனோட அன்பளிப்புப் பரிசு!” எனப் பைரவன் மீண்டும் அதை உறுதிப்படுத்திச் சொன்னான்.

ரோலக்ஸ் தன் கைகளை காற்றில் அசைத்து, முகம் சுளித்தபடி சைகை செய்தான். ‘பாபி கிட்ட நீ என்ன சொன்ன? அவன்கிட்ட என்ன கதையை விட்டுட்டு வந்திருக்க?’ என்பது போல அவனது சைகையின் வேகம் இருந்தது. அவனது கண்கள் பைரவனின் பதிலை நோக்கித் தவித்தன.

ஒரு நீண்ட பெருமூச்சை விட்ட பைரவன், நாற்காலியில் இன்னும் சற்றே சாய்ந்து அமர்ந்தான். “அங்க நிலைமை அப்படி ரோலக்ஸ். இன்னைக்குக் காலையில பாபி திடீர்னு என் முன்னாடி வந்து நின்னான். அவனோட முகத்துல தர்மாவை இழந்த ஆக்ரோஷம் அப்படியே கொப்பளிச்சுட்டு இருந்தது. ‘ரோலக்ஸ் இப்போ எங்க இருக்கான்? அவனை உடனே இங்க கூட்டிட்டு வா… தர்மாவைக் கொன்ன அந்த நாயை ரோலக்ஸை வச்சுதான் நான் கண்டுபிடிக்கணும்’னு பாபி ரொம்ப அதிகாரமா, ஆவேசமா உத்தரவிட்டான். எனக்கு ஒரு நொடியில என்ன சொல்றதுன்னே புரியல. உன்னோட இந்த நிலைமையில, உடம்பு முழுக்கக் கத்திக்குத்து காயங்களோட நீ அவன் முன்னாடி போய் நிற்கவே முடியாது. அப்படி ஒருவேளை நீ போயிருந்தாலும், உன்னோட காயங்களைப் பார்த்த அடுத்த கணமே பாபிக்கு ஒட்டுமொத்த உண்மையும் தெரிஞ்சிருக்கும், பெரிய சந்தேகம் வந்திருக்கும்,” என்று விவரித்த பைரவன்.

அவன் பேசி முடிப்பதற்குள், கதவருகே நின்றிருந்த மயூரா இன்னும் சில அடிகள் முன்னோக்கி வந்தாள். அவளது இதயம் பயத்தால் பலமாக அடித்துக் கொண்டது. “அப்புறம்… அப்புறம் என்ன அண்ணே பண்ணீங்க?” என்று கேட்டாள்.

பைரவன் மயூராவைப் பார்த்துப் பேசத் தொடங்கினான். “அதனாலதான் ரோலக்ஸ், நானும் வேற வழி இல்லாம அந்தப் கதையை அப்படியே தலைகீழா திருப்பிப் போட்டுட்டேன். மயூராவுக்கு அவங்க வீட்ல அவசர அவசரமா, அவளோட சம்மதம் இல்லாம வேற ஒரு பெரிய இடத்துல கல்யாணம் ஏற்பாடு பண்ணியிருந்ததாவும்… அந்த வற்புறுத்தல் தாங்க முடியாம மயூரா நேரா உன்கிட்ட ஓடி வந்துட்டதாவும் சொன்னேன். உன்னை உயிரையே வச்சிருக்கிற அந்தப் பெண்ணோட நம்பிக்கையை வீணடிக்கத் தோன்றாம, நீயும் வேற வழி இல்லாம அவசர அவசரமா மயூரா கழுத்துல தாலியைக் கட்டிட்டு, அவளைக் கூட்டிக்கிட்டு இந்த விசாகப்பட்டின எல்லையை விட்டே வெளியே ஓடிட்டதா பாபிகிட்ட ஒரு பெரிய பொய் மூட்டையை அவுத்துவிட்டேன். மயூரா அப்பாவோட கண்ணுல படாம இருக்குறதுக்காக, நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாள் தலைமறைவா வெளியே இருக்கப் போறதாவும், நிலைமை சீரான அப்புறமா ஊருக்கு வரப்போறதாவும் அவன்கிட்ட சொல்லி வச்சிருக்கேன்,” என்றான்.

பைரவன் பேசப் பேச, மயூராவின் முகம் இன்னும் பதற்றமாக மாறியது. அவளது கைகள் நடுங்கின. “பாபி… பாபி அதை அப்படியே நம்பிட்டானா அண்ணே? அவனுக்கு நம்ம மேல கொஞ்சம் கூடச் சந்தேகம் வரலையா?” என்று தன் குரலில் இருந்த பயத்தை மறைக்காமல் வேகமாகப் கேட்டாள் மயூரா.

அவளது பதற்றத்தைப் பார்த்த பைரவன், தன் தலையை ஆட்டி, “நம்பிட்டான் மயூரா. அவன் அதை முழுமையா நம்புனதுக்காகக் கொடுத்த பரிசுதான் கட்டில்ல கிடக்குற இந்த பணக்கட்டு. என் கதையில அவனுக்கு எந்த ஒரு ஓட்டையும் தெரியல,” என்றான்.

ரோலக்ஸ் தன் கையில் அந்தப் பணக்கட்டுகளை எடுத்து, அதன் கனத்தை உணர்ந்தபடி தன் தலையணையின் மீது தூக்கிப் போட்டான். அவனது உதடுகளில் ஒரு ஆழமான வியப்பு தெரிந்தது. “நம்பவே முடியல… பைரவா! பாபி இவ்வளவு பெரிய ஏமாளியா இருப்பான்டா நான் நினைக்கவே இல்லை. தன் தம்பியைக் கொன்னவன் நான் தான் அப்படின்ற உண்மை தெரியாம, எனக்கே கல்யாணப் பரிசு கொடுத்தனுப்பியிருக்கான் பாத்தியா!” என ரோலக்ஸ் மெல்லச் சிரித்தான்.

ஆனால், பைரவன் அவனது சிரிப்பைத் தடுத்து, தன் கையை உயர்த்தினான். “விஷயம் இதோட முடியல ரோலக்ஸ். பாபி இந்தத் தடிமனான பணத்தைக் கொடுத்தது மட்டும் இல்லாம, மேற்கொண்டு உங்களுக்கு அங்கே செலவுகளுக்குப் பணம் எதுவும் தேவைப்பட்டாலும் தயங்காம என்கிட்ட கேட்கச் சொல்லியிருக்கான். அதுமட்டும் இல்லாம, இங்க விசாகப்பட்டினத்துல நடக்கிற தர்மாவோட கொலைப் பிரச்சினைகள், போலீஸ் அசைவுகள் எல்லாம் கொஞ்சம் அமைதியா இருக்குற வரைக்கும்… நீ இந்த ஊர் பக்கம், இந்த எல்லைப் பக்கம் வரவே வேண்டாம்னு பாபி ரொம்ப அக்கறையா சொல்லியிருக்கான்,” என்றான்.

அதைக் கேட்டு ரோலக்ஸ் புருவத்தை உயர்த்த, பைரவன் தன் குரலை தாழ்த்தி, “அதைவிட… அதுக்கும் மேலே இன்னொரு முக்கியமான விஷயம் ஒண்ணு பாபி என்கிட்ட சொன்னான் ரோலக்ஸ். இங்க நம்ம தர்மா இறந்த விஷயம் உனக்குத் தெரிஞ்சிடக் கூடாதுன்னு பாபி ரொம்ப ஜாக்கிரதையா இருக்கான். ஒருவேளை தர்மா இறந்தது உனக்குத் தெரிஞ்சா… நீ தன் தம்பிக்கு இப்படி ஆகிடுச்சேன்னு பதறிப்போய், அந்தப் புதுப் பொண்டாட்டி மயூராவை அப்படியே அந்த இடத்துல விட்டுட்டு அவசர அவசரமா விசாகப்பட்டினத்துக்கு ஓடி வந்திடுவியோனு பாபிக்கு உள்ளுக்குள் ஒரு  பயம் இருக்கு! அப்படி நீ அவசரப்பட்டு வந்தா, மயூராவோட போலீஸ் அப்பா உன்னைக் குறி வச்சு என்கவுண்டர் பண்ணிடுவாரு, உன்னோட உயிருக்கு ஆபத்து வந்திடும்னு பாபி உனக்காக உருகி உருகிப் பயப்படுறான்!” என்று பைரவன் சொல்லி முடித்தான்.

பைரவன் பாபியின் அந்த அதீத பாசத்தையும், அறியாமையையும் விவரித்து முடித்தபோது… அந்த அறையின் சூழல் ஒரு விசித்திரமான முரணைக் காட்டியது.

பாபி எவனுக்காக உருகி, எவனோட உயிருக்கு ஆபத்து வந்துடும்னு பயந்து உண்மையை மறைக்கச் சொன்னானோ… அதே ரோலக்ஸ் தான் தன் தம்பியின் கொலையாளி என்ற இந்த மாபெரும் முரண்பாட்டைக் கேட்ட மயூராவிற்கு, உள்ளுக்குள் சிரிப்பதா அல்லது அழுவதா என்றே புரியவில்லை! அவளது நெஞ்சு பயத்தாலும், இந்த உலகத்தின் கொடூரமான நாடகத்தாலும் ஒருபுறம் நடுங்கிக் கொண்டிருக்க… மறுபுறம் அவளது உதடுகளில் ஒரு கசப்பான, வேதனையான சிரிப்பு வந்து மறைந்தது. இந்த ரத்த பூமி எவ்வளவு பெரிய பொய்களின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைத்து அவள் ஒரு ஓரமாகத் திகைத்து நின்று கொண்டிருந்தாள்.

ஆனால், ரோலக்ஸ் மட்டும் அந்தப் பொய்களைக் கேட்டுச் சிரிக்கவில்லை. அவனது முகம் சட்டென்று ஒரு பாறையைப் போலக் கடினமாக மாறியது. அவனது கண்கள் அந்தப் பணக்கட்டுகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அவனது மூளைக்குள் ஒரு தீவிரமான யோசனை ஓடத் தொடங்கியது.

 

“என்ன ரோலக்ஸ்… இப்படி யோசனையில மூழ்கிட்ட? பாபி உன்னை இந்த அளவுக்குத் தன் சொந்தத் தம்பியை விட அதிகமா, அசைக்க முடியாத விசுவாசத்தோட நம்பியிருக்கான். அவன் மனசுல உன்னைப்பத்தி ஒரு சின்னக் கீறல் கூட இல்லை. இதுக்கு அப்புறம் மேல் உனக்கு என்ன இருக்கு பயம்? நாம நினைச்ச மாதிரியே எல்லாம் சுமுகமா முடிஞ்சிருச்சுல்ல?” என்று பைரவன் வினவினான்.

ரோலக்ஸ் தன் மீசையை மெதுவாக வருடியபடி, தன் அசுரத்தனமான கூர்மையான கண்களை உயர்த்திப் பைரவனைப் பார்த்தான். அவனது பார்வை வழக்கம் போலக் கம்பீரமாகவும், அதே நேரம் ஒருவித எச்சரிக்கையோடும் வெளிவந்தது.

“இங்கதான் பைரவா விஷயமே இருக்கு…” என்று செய்கை செய்தவன் …

“பாபி என் மேல அளவுக்கு அதிகமா நம்பிக்கை வைத்திருக்கிறான். அந்த நம்பிக்கைதான் இப்போ எனக்குப் பெரிய சுமையா தெரியுது. ஒருவேளை… ஒருவேளை இந்த தர்மா கொலை விஷயம் ஏதோ ஒரு தடையத்தாலயோ இல்ல வேற யாராலயோ வெளியே தெரிஞ்சா, பாபி என்ன பண்ணுவான்? அவனோட இந்த அதீத பாசம் அப்படியே தலைகீழா மாறி எவ்வளவு பெரிய மிருகமா மாறுவான்னு எனக்கு நல்லாவே தெரியும். அந்தப் பாசத்தோட மறுபக்கம் எவ்வளவு கொடூரமானதுன்னு எனக்கே தெரியல பைரவா,” என்றான் ரோலக்ஸ்.

பைரவன் கசப்புடன் சிரித்தான். அவன் எழுந்து வந்து ரோலக்ஸின் கட்டிலுக்கு அருகில் நின்றான். “ரோலக்ஸ்… நீ இவ்வளவு தூரம் ஆழமா சிந்திக்க வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை. பாபிக்கு உன் மேல இவ்வளவு நம்பிக்கை இருக்கோ இல்லையோ, அது இப்போ முக்கியம் இல்ல. ஆனால், அன்னைக்கு அந்த தர்மா இறந்தது உன்னால தான் அப்படின்ற விஷயம் மட்டும் பாபிக்குத் தெரிஞ்சாலே… இங்க நிலைமை என்ன ஆகும்னு நல்லாவே உனக்குத் தெரியும். இந்த விசாகப்பட்டினமே ரத்தக் காடா மாறும். பாபியோட மொத்தப் படையும் நம்ம தலைக்கு முன்னாடி வந்து நிக்கும். அதை நாம இப்போதைக்குத் தடுத்து நிறுத்தியிருக்கோம், அவ்வளவுதான்,” என்றான் பைரவன் அழுத்தமான குரலில்.

பைரவன் சொல்வதைக் கேட்டுப் பொறுமையாகத் தன் தலையை ஆட்டினான் ரோலக்ஸ். அவனது முகத்தில் எந்த ஒரு பயமும் இல்லை, மாறாக ஒரு முதிர்ச்சியான அமைதி குடியேறியிருந்தது.

“புரியுது பைரவா… நீ சொல்ற ஆபத்து எனக்கு நல்லாவே புரியுது,” என்றான்.

ஆனால் அறையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த மயூரா, இருவரின் பேச்சையும் கேட்டுத் தன் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டவள் மெல்ல முன்னோக்கி வந்து, ரோலக்ஸின் கைகளைப் பற்றிக் கொண்டாள். அவளது கண்கள் கலங்கியிருந்தன.

“ரோலக்ஸ்… இனிமேல் நீ அந்தப் பாபியோட சாம்ராஜ்யத்துக்குள்ள, அந்த நரகத்துக்குள்ள போகவே வேண்டாம். எப்படியோ பாபி உன்னை இப்போதைக்கு முழுசா நம்பியிருக்கான். அதனால, பைரவன் அண்ணா அங்கே சொன்ன கதை படி இந்தக் கல்யாணமான விஷயம் நமக்கு ஒரு வகையில நல்லதாப் போயிடுச்சு. நாம இந்த ஊரை விட்டு ஓடிப் போயிட்டதா வெளியே இருக்கிற போலவே இருக்கட்டும். நாம இங்கேயோ இல்ல வேற எங்கேயோ மறைஞ்சு வாழ்றதுதான் உனக்கு நல்லது ரோலக்ஸ்,” என்று அவள் அவசர அவசரமாகக் கூறினாள்.

ரோலக்ஸ் அவளது முகத்தையே பார்த்தான். மயூரா தன் பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்தாள். “உனக்கும் உடம்பு முழுசாச் சரியானதும், நாம இந்த விசாகப்பட்டினத்தை விட்டே, இந்த மாநிலத்தை விட்டே தூரமா ஓடிப் போயிடலாம். வேற எங்கேயாவது புது இடத்துக்குப் போய், யாருக்கும் தெரியாம ஒரு சாதாரண மனிதர்களா நாம பிழைச்சிக்கலாம் ரோலக்ஸ். இந்த ரத்தமும் கொலையும் உனக்கு இனிமேல் வேண்டாம்,” என்று அவள் கெஞ்சும் தொனியில் சொன்னாள்.

மயூரா தன் கைகளை உருக்கமாகப் பற்றிப் பேசுவதை ரோலக்ஸ் நிமிர்ந்து பார்த்தான். அவனது முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லை. அவன் பேசாமல் தன் கைகளை உயர்த்தி, அவளுக்கு மட்டுமே புரியும் தன் ரகசியச் சைகையிலே அவளிடம் ஒரு கேள்வியைக் கேட்டான்.

‘மயூரா… எனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு நீ பயப்பிடுறியா? இந்த ரோலக்ஸ் அழியப் போறான்னு உனக்குத் தோணுதா?’ என்பது போல அவனது சைகையின் வீச்சு இருந்தது. அவனது கண்கள் அவளது உள்மனதை ஊடுருவிப் பார்த்தன.

மயூரா தன் தலையை வேகமாக இடவலமாக ஆட்டினாள். அவளது கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வழிந்தது. “எனக்கு அந்தப் பயம் இல்லை ரோலக்ஸ்… இந்த உலகத்துல இருக்குற எந்த ஒரு சக்தியாலயும் உன்னைத் தகர்க்க முடியாது, உன்னை வீழ்த்த முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். உன்னோட பலம் என்னன்னு உன்னை விட எனக்கு நல்லாத் தெரியும் ரோலக்ஸ். ஆனாலும்… இது தேவையில்லாத பிரச்சினை. உனக்கு எதுக்கு இந்தத் துரோக நாடகம்? ஒரு விஷப்பாம்பு இருக்குற புத்துக்குள்ள, எலியா நீ வாழணுமா? அந்தப் பாபிக்கு முன்னாடி நீ ஒரு பொய்யான விசுவாசியாக நடிக்கணுமா? அதுக்காகத் தான் நான் சொல்றேன்… நமக்கு இது எதுவும் வேண்டாம்,” என்று தன் மனதின் பாரத்தைக் கொட்டினாள்.

மயூரா சொன்ன வார்த்தைகள் பைரவனின் மனதையும் சற்றே சிந்திக்க வைத்தன. அவன் மெதுவாகத் திரும்பி ரோலக்ஸைப் பார்த்தான்.

“ஆமா ரோலக்ஸ்… மயூரா சொல்றதும் ஒரு வகையில சரிதான். உனக்கு உடல்நிலை முழுசாச் சரியானதுக்கு அப்புறம், இந்த லட்சக்கணக்கான பணத்தை வச்சுக்கிட்டு, மயூராவை அழைச்சுட்டு நீ எங்கேயாவது தூரமாப் போயிடு. பாபி உன்னைத் தேட மாட்டான், ஏன்னா நீ மயூரா கூடப் பாதுகாப்பா இருக்கணும்னுதான் அவன் நினைக்கிறான். நீ இங்க இல்லாத வரைக்கும் பாபியோட சாம்ராஜ்யம் அமைதியா இருக்கும். போலீஸ் சந்துருவும் உன்னைத் தேட மாட்டான். நீ எங்கேயாவது போய் நிம்மதியா ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கு. அதுதான் எல்லாருக்கும் நல்லது,” என்று பைரவனும் மயூராவின் கருத்துக்கு ஆதரவாகப் பேசினான்.

கட்டிலில் அமர்ந்திருந்த ரோலக்ஸ், தன் முன்னால் நின்றுகொண்டிருந்த தன் பைரவனையும், மயூராவையும் மாறி மாறிப் பார்த்தான். இருவரின் கண்களிலும் தன் மீதான பாசமும், தன் உயிருக்கான பாதுகாப்பின் தவிப்பும் அப்பட்டமாகத் தெரிந்தன. அவர்கள் இருவருமே தன் நலனுக்காகத்தான் இந்த ஊரை விட்டுப் போகச் சொல்கிறார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான்.

ரோலக்ஸ் இருவர்களின் கண்களையும் ஆழமாக உற்றுப் பார்த்தான். அவனது இதழ்களின் ஓரத்தில் ஒரு மெல்லிய, குரூரமான அசுரப் புன்னகை மீண்டும் அரும்பியது.

அவன் என்ன முடிவெடுக்கப் போகிறான்?

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!