தீ🔥 – 6

அத்தியாயம் 6

 

யாருக்கு யாருடி அம்மா? 

 

பைரவியின் இந்த நரகமான வாழ்க்கையில் அவளுக்கு ஆறுதல் கொடுப்பது ஒரு சில விஷயங்களே; அதில் முதலாக அவளின் உயிர் மூச்சான நாட்டியமும், இரண்டாவது அனன்யாவும் தான்…  

 

“அப்பாடா… எப்படியோ அம்மாவும் பொண்ணும் சமாதானம் ஆயிட்டீங்களா? சரி… சரி… டைம் ஆயிடுச்சு, வாங்க போகலாம்” என்று தாரா, பைரவி மற்றும் அனன்யாவை அழைக்க,

 

“ஏய்… தாரா, நீ வீட்டுக்குப் போ… ரொம்ப லேட் ஆயிடுச்சு, எங்களுக்கு என்ன, இங்க பக்கத்துல தானே வீடு! நானும் என் அனன்யா குட்டியும் பேசிக்கிட்டே அப்படியே நடந்தே வீட்டுக்குப் போயிடுவோம்” என்று அக்னி கூற, அவளை இடையில் கை வைத்து முறைத்த தாரா,

 

“பாத்தியா! உன் பொண்ணு வந்ததும் உன்னோட என்னையே கழட்டி விடுற” என்று கூறி முகத்தைத் திருப்பிக்கொண்டால்.

 

“ஏய்… தாரா, என்னடி நீ? உனக்கே நல்லா தெரியும்ல, எனக்கு அனன்யா குட்டி எவ்வளவு முக்கியமோ, அதே மாதிரி தான் நீயும் அப்படின்னு தெரிஞ்சும் என்னடி கேக்குற?” என்று அக்னி, தாராவின் கன்னம் பற்றிச் செல்லமாகக் கொஞ்சினாள்.

இருவரையும் பார்த்துப் புன்னகைத்த தாரா,

 

“இப்படியே பேசியே மயக்கிடு…” என்று கூறி அக்னியின் கன்னத்தில் ஒரு முத்தமும், குட்டி அனன்யாவின் கன்னத்தில் ஒரு முத்தமும் பதித்துவிட்டு,

 

“சரி நேரமாகுது, நான் போயிட்டு வரேன். நீங்க ரெண்டு பேரும் பார்த்து வீட்டுக்குப் போங்க… போனதும் மறக்காம எனக்கு கால் பண்ணுங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றாள் தாரா.

தாரா சென்றதும் அனன்யாவைத் தன் கைகளில் தூக்கிக்கொண்டு, அவளிடம் சிரித்துப் பேசி விளையாடிக் கொண்டே வந்த பைரவி தன் வீட்டினுள் நுழைய, அப்போது சரியாக அவள் காலடியில் ஒரு பாத்திரம் வந்து பெரும் சத்தத்தோடு விழுந்தது. அதில் ஒரு நொடி பயந்து தடுமாறி பின்னால் ஒரு அடி எடுத்து வைத்தவள். பின் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்க, அங்கே ருத்ரகாளியாக நின்றிருந்தார் பைரவியின் மாமியார் கற்பகம்!

 

“அடேங்கப்பா! மகாராணிக்கு இப்போ தான் வீட்டுக்கு வழி தெரிஞ்சிருச்சு போல? நான் கூட இன்னைக்கும் எங்கேயாவது சுத்திட்டுதான் வருவேன்னு நினைச்சேன். பரவாயில்லை, இப்பவாவது வீடு வந்து சேர்ந்தியே…” என்று கற்பகம் கோபத்தோடு பொரிந்து தள்ள,

“அது… வந்து… அதுவந்து அத்தை…” என்று பைரவி தடுமாறினாள்.

“என்னடி சும்மா வந்து வந்துன்னுட்டு? ஆமா மகாராணி, ஏன் நேத்து நைட்டு வீட்டுக்கு வரல? எவன் கூட எங்க போய் கூத்தாடிட்டு இப்போ இங்க வரே?” என்று கற்பகம் நாக்கில் நரம்பில்லாமல் பேச,

“அத்தை… ப்ளீஸ், அப்படி பேசாதீங்க…” என்று பைரவி கண்கள் கலங்கக் கூறினாள்.

“அப்புறம் வேற எப்படிடி யம்மா பேசுறது?” என்று கற்பகம் பைரவியை ஏளனமாகப் பார்த்துக் கேட்க,

“அத்தை, நான் தான் உங்ககிட்ட ஏற்கனவே சொன்னேனே? நேத்து நைட்டு ஒரு முக்கியமான புரோகிராம் இருந்துச்சு, அதனாலதான் வர முடியல. நேத்து நைட்டு புரோகிராம் முடிய ரொம்ப லேட் ஆயிடுச்சு, அதான் தாரா என்னை அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டு போயிட்டா” என்று அவள் கூறினாள். மனதில் கோபம் கொதித்தாலும் அவளுடைய வார்த்தைகளில் அந்த கோபம் வெளிப்படவில்லை.

“என்னடி, எதிர்த்து பேசுற அளவுக்கு வந்துட்டியா? ஊர்ல ஆயிரம் பொண்ணு இருக்க, தேடிப் பிடிச்சு இந்த சனியனைத்தான் கட்டுவேன்னு கட்டினான் பாரு என் பையன்! அவனே சொல்லணும்டி” என்று கற்பகம் பைரவியைப் பார்த்து வெறுப்போடு கூற, பைரவியோ தன் நிலையை நினைத்துத் தன்னைத்தானே நொந்துகொண்டு, அமைதியாகப் பற்களைக் கடித்துத் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு நின்றிருந்தாள்.

“ஏய்… சனியனே! என்னடி நின்னுக்கிட்டே கனவு கண்டுக்கிட்டு இருக்கே? அப்படி எவனை நினைச்சு கனவு கண்டு உருகிட்டு இருக்க?” என்று கற்பகம் வார்த்தைகளால் பைரவியைக் குத்திக் கிழிக்க, அவளோ கண்களில் கண்ணீர் தேங்க, அதனோடே பொங்கி வரும் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு அப்படியே அமைதியாக நின்றிருந்தாள் அக்னி பைரவி.

“ஏய்… என்னடி நான் பாட்டுக்கு இங்க பேசிக்கிட்டே இருக்கேன், நீ என்ன அப்படியே புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி நின்னுகிட்டு இருக்க? போடி போய் உள்ள இருக்கற வேலையைப் பாரு! எங்களுக்கு எல்லாம் பசிக்குது… சாப்பிட ஏதாவது செஞ்சுட்டு, 2 நாளா கிடப்பில் இருக்கிற பாத்திரத்தைக் கழுவு போ…” என்றார் கற்பகம். பைரவியும் சரி என்று தலையாட்டிவிட்டு உள்ளே போக எத்தனிக்க…

“பாட்டி! சும்மா சும்மா அம்மாவைத் திட்டாதீங்க. அம்மா ஒன்னும் சும்மா இல்லை. காலையில ஆபீஸுக்குப் போறாங்க, ஈவினிங் ஆனா டான்ஸ் கிளாஸ் வந்து டான்ஸ் சொல்லிக் கொடுக்குறாங்க. உங்களுக்கு என்ன, நீங்க வீட்ல சும்மாதானே இருக்கீங்க? ஏன் நீங்க இந்த வேலையெல்லாம் செய்ய மாட்டீங்களா?” என்று அனன்யா கேட்க, அடுத்த நொடியே அந்தச் சின்னஞ்சிறு பிஞ்சு முகத்தில் ஓங்கி அறைந்தாள் ராதிகா!

“யாருக்கு யாருடி அம்மா? முதல்ல அவளை விட்டு இறங்குடி சனியனே…” என்ற ராதிகா, பைரவியின் இடுப்பில் இருந்த அனன்யாவை வெடுக்கென்று பிடுங்க, பைரவியோ தவித்துப்போனாள்.

“ஏண்டி சனியனே… உன்கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன், இந்த ராசி கெட்டவளை ‘அம்மா’னு கூப்பிடாதேனு? உன்னைப் பெத்தவ நான் இங்கே இருக்கும்போது, நீ என்னடி அவளைப் போய் ‘அம்மா அம்மா’னு ரொம்பத்தான் உருகுற?” என்று ராதிகா அந்தப் பிஞ்சுக் காதைப் பிடித்துத் திருகினாள்.

“அய்யோ அக்கா வேண்டாம், அவ ஏதோ சின்னப் பொண்ணு தெரியாம சொல்லிட்டா, அவளை விடுங்க” என்று பைரவி, ராதிகாவிடமிருந்து அனன்யாவை பிரிக்க முயற்சிக்க,

“அடச்சீ! என் மேலிருந்து கையை எடுடி ராசி கெட்ட நாயே! உன் கை என்மேல பட்டாலே அது பாவம்” என்று தன்னைத் தொட்ட பைரவியின் கைகளை வெடுக்கென்று தட்டிவிட்ட ராதிகா, அவளைப் பார்த்து முகம் சுளித்தவாறு,

“நீ சொன்னது சரிதான், இவத்தான் ஏதோ சின்னப் பொண்ணு தெரியாம உன்னை ‘அம்மா’னு கூப்பிட்டா. ஆனா உனக்கு எங்கடி போச்சு புத்தி? அவ அப்படி கூப்பிட்டா, ‘அப்படியெல்லாம் கூப்பிடாதே, எனக்கு அந்த அருகதையே கிடையாது’ அப்படின்னு சொல்ல வேண்டியதுதானே? என்ன, அதையும் இதையும் ஆசைகாட்டி என் பொண்ணை உன் பக்கம் இழுத்துக்கலாம்னு கற்பனைக் கோட்டை கட்டுறியா?” என்று பைரவியைப் பார்த்துக் கடுமையாகக் கேட்டாள் ராதிகா.

“அப்படியெல்லாம் இல்லை அக்கா… அவ என்னை ‘அம்மா’னு கூப்பிடும்போது ஏனோ என்னால அதை மறுக்க முடியலை” என்று பைரவி கூற, ஒற்றைப் புருவம் உயர்த்திப் பைரவியை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்த ராதிகா,

“மறுக்க முடியலையா? அதுசரி… எனக்கு ஒரு சந்தேகம்! என் குழந்தை ‘அம்மா’னு கூப்பிடும்போது மறுக்க முடியலைன்னு சொல்றியே… ஒருவேளை நாளைக்கே என் புருஷன் வந்து உன்னை ‘பொண்டாட்டி’னு கூப்பிட்டா, அதையும் மறுக்காமல் அவர் கூப்பிட்டதும் அவர் கூட போய் படுத்துடுவியா?” என்று ராதிகா கேட்க, இங்கு பைரவிக்கோ ஒரு நொடி உயிரே போனது.

“அதுசரி, நீ அமைதியா நிக்கிறதைப் பார்த்தா கூப்பிட்டதும் போயிடுவே போலயே? ஹான்… உன்னைச் சொல்லியும் குற்றமில்லை, பாவம் நீயும் என்ன பண்ணுவே? உனக்கும் ஆம்பளை சுகம் தேவைப்படும் இல்லையா…” என்று அவள் கூறி முடிக்கும் முன்னே, அவள் கன்னத்தில் இடியென இறங்கியிருந்தது ஓர் அறை!

அதில் அதிர்ந்துபோன ராதிகா, தன்னை அடித்தது யார் என்று நிமிர்ந்து பார்த்தாள்…

அனன்யா பைரவியின் குழந்தை இல்லையா? அப்படியென்றால், ஏன் அனன்யா பைரவியை அம்மா என்று அழைக்க வேண்டும்? பைரவிக்குத் திருமணம் ஆகிவிட்டதா? அப்படி என்றால் அவள் கணவன் யார்? அவளுக்குத் திருமணமாகிவிட்டது என்றால், நடேசன் ஏன் அவளைத் திருமணம் செய்துகொள் என்று கூறினார்? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்…

தீராத காதல் தீயாக மோத…

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!