அத்தியாயம் 7
நான் எதுவுமே ஆசைப்படக்கூடாதுன்னு நான் பொறக்கும்போதே என் தலையில எழுதிட்டீங்களா?
ராதிகா தன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்க்க, அங்கு கடும் கோபத்தோடு நின்றிருந்தார் கற்பகத்தின் கணவர் கருணாகரன்.
அவரைப் பார்த்ததும் பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கிய ராதிகா, “மா… மாமா…” என்று அழைக்க,
“வாய மூடு! நீயும் ஒரு பொண்ணு தானே? கொஞ்சம் கூட நாக்கில் நரம்பில்லாமல் பேசுற… சும்மாவா உன் குழந்தை அவளை அம்மானு கூப்பிடுது?” என்று கருணாகரன் கோபத்தோடு கேட்க,
“மாமா… அது வந்து…” என்று ராதிகா ஏதோ கூற வர,
“வாய மூடு! ஒரு நாளாவது அந்த குழந்தைக்கு நீ அம்மாவா இருந்து இருக்கியா? பாசம் காட்டியிருக்கியா? அந்த குழந்தை பிறந்ததுல இருந்து எல்லாத்தையும் பைரவி தானே பார்த்துக்கிறா! அந்த குழந்தைக்கு எங்கே தாய் அன்பு கிடைக்குதோ, அவங்களைத் தானே அம்மான்னு கூப்பிடும். உன் அத்தை தான் புத்தி கெட்டத்தனமா ஏதாவது பேசுறானா, அவகூட சேர்ந்துகிட்டு நீயும் அந்தப் பொண்ணை இப்படி வார்த்தையால ஏன்ம்மா கொல்ற?” என்று கருணாகரன் கோபத்தில் கத்த, அவரின் அந்தக் கோபத்தைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் ஒரு நொடி நடுங்கிப் போயினர்.
“என்னங்க இது என்ன புது பழக்கம், வீட்டு மருமகளை கை நீட்டி அடிக்கிறது? அதுவும் வீட்டோட மூத்த மருமகள்! நீங்க எப்படி அவளை கைநீட்டி அடிக்கலாம்?” என்று கற்பகம் வரிந்துகட்டிக்கொண்டு தன் மூத்த மருமகளுக்காக வர,
“இவ உன் மூத்த மருமகனா? அவ ஒரு இரண்டாவது மருமகள்! அவளும் உன் பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்கு வாழ வந்தவ தான். அதை ஏன் புரிஞ்சுக்காம இப்படி பேசிக்கிட்டு இருக்க நீ?” என்று கருணாகரன் கோபத்தோடு கேட்க,
“ஆமாமா, நல்லா கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ வந்தா… தாலி கட்டி ஆறு மாசம் கூட என் பையன் அவ கூட வாழல, கழுத்துல இருந்த மஞ்சள் கயிறோட ஈரம் காயறதுக்குள்ள என் புள்ளையைக் கொன்னு, தாலியை அறுத்துக்கிட்டு நின்றவ தானே இவ?” என்று கற்பகம் பைரவியைப் பார்த்து நக்கலோடுக்கும் கோபத்தோடும் கூற, கற்பகத்தின் வார்த்தைகளில் பைரவியோ துடித்தே போனாள்.
“கற்பகம், என்ன பேசுறேன்னு பார்த்து பேசு! நாக்குல நரம்பு இல்லாம பேசாத… நம்ம பையன் இறந்து போனதுக்கு அந்தப் பொண்ணு என்ன பண்ணும் பாவம்? நம்ம எல்லாரையும் விட அந்தப் பொண்ணுக்குத் தான் வலியும் வேதனையும் அதிகம்” என்று கருணாகரன் தன் கோபத்தைக் காட்டுப்படுத்திக் கொண்டு கூற,
“ஆமாம், அவளோட வலியையும் வேதனையையும் தான் நாங்களும் பார்க்கிறோமே… புருஷன் செத்தவ மாதிரியா இருக்கா இவ? இவ மினுக்குற மினுக்கும் போடுற ஆட்டமும்… கேட்டா நாட்டியக்காரியாம்! என் தங்கம், என் செல்லப் பையன்… அவனுக்கு எப்படிக் கல்யாணம் பண்ணி எப்படி எல்லாம் வாழ வைக்கணும்னு நினைச்சேன்! ஆனா, இந்த ராசிகெட்ட சனியனைக் கல்யாணம் பண்ணிட்டு வந்து, என் பையன் இப்படி அல்ப்பாயுசுல போவான்னு நான் என்ன கனவா கண்டேன்? இவ என்னைக்கு இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சாளோ, அன்னைக்கு பிடிச்சது இந்த வீட்டுக்கு சனியம்… இன்னும் போகல!” என்று மேலும் மேலும் வார்த்தைகளால் பைரவியைக் கற்பகம் குத்திக் கிழிக்க, ஒரு கட்டத்திற்கு மேல் இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத கருணாகரன், எதுவும் பேச முடியாமல் அமைதியாகத் தன் அறைக்குச் சென்றுவிட்டார். போகும் அவரைப் பார்த்த கற்பகம் திமிரான ஒரு புன்னகையைச் சிந்தினார்.
அதற்கு மேல் தான் பேசினால் கற்பகத்தின் வார்த்தைகள் இன்னும் மோசமாகும் என்பது கருணாகரனுக்குத் தெரியுமே, அதனால் அவர் அமைதிக்காக அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால் பைரவிக்கோ பேசுவதற்குக் கூட ஆளில்லாமல் அனாதையாக நின்றிருந்தாள்.
கற்பகம் பைரவியைத் திட்டுவதையும், அதை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாமல் தன் அறைக்குச் சென்ற கருணாகரனையும் பார்த்து குரூரமாகப் புன்னகைத்தனர் ராதிகாவும் ஐஸ்வர்யாவும்.
“பாட்டி, அம்மாவைத் திட்டாதீங்க. அம்மா பாவம், அழுவுறா!” என்று அனன்யா மீண்டும் பைரவியின் அருகே போக, அந்தப் பிஞ்சுக் கையை அழுத்திப் பிடித்துத் தன் புறம் இழுத்த ராதிகா,
“இனி அவளை அம்மா கிம்மான்னு கூப்பிடுற வேலையெல்லாம் வச்சுக்காத!” என்று குழந்தையை அதட்டியவள். பைரவியின் புறம் திரும்பி,
“இன்னொரு தடவை இவ உன்னை அம்மானு கூப்பிடுறதைப் பார்த்தேன், கூப்பிடுற அவ நாக்கிலேயே சூடு வச்சுருவேன்! இங்க பாருடி, உனக்கும் சேர்த்துதான் சொல்றேன்… இன்னொரு தடவை இந்த ராசிகெட்ட நாயைப் போய் அம்மானு கூப்பிட்டா தோலை உரிச்சுப்புடுவேன், பார்த்துக்கோ… வாடி!” என்று ராதிகா அனன்யாவை இழுத்துச் செல்ல, அவளோ அழுதுகொண்டே “அம்மா” என்று திரும்பி பைரவியைப் பார்க்க, அந்நிலையிலும் அனன்யா தன்னை அம்மா என்று அழைத்ததை கண்ட பெண்ணவளின் உள்ளம் துடித்து போனது.
போகும் அனன்யாவைக் கண்களில் கண்ணீரோடு பார்த்தவாறு பைரவி நின்றிருக்க, அவளை ஓர் ஏளனப் புன்னகையோடு பார்த்த ஐஸ்வர்யா, தன் தாயின் அருகே சென்றாள்.
“அம்மா, நாளைக்கு எங்க காலேஜ்ல எல்லாரையும் டூர் கூட்டிட்டு போறாங்க. ஆல்ரெடி எல்லாரும் அதுக்கு பணம் கட்டிட்டாங்க, ஆனா நான் மட்டும் தான் இன்னும் பணம் கட்டல. போன வாரம் கேட்டதுக்கு இரண்டு நாள் கழிச்சு வாங்கிக்கோன்னு சொன்னீங்க, ஆனா இன்னும் கொடுக்கல” என்று சிணுங்கிக் கொண்டே கூற,
“எவ்வளவு பணம் டா செல்லம் வேணும்?” என்று தன் மகளைச் செல்லம் கொஞ்சி கற்பகம் கேட்க,
“எனக்கு ஒரு 5000 வேணும் அம்மா…” என்று ஐஸ்வர்யா கூறினாள். கற்பகமோ தன் மகளின் தாடையைப் பிடித்துக் கொஞ்சி,
“எங்கே டா செல்லம் டூர் போறீங்க?” என்று கேட்க, அவளும் தாங்கள் போகும் இடங்கள் அனைத்தையும் கூறி, “ப்ளீஸ்மா, எனக்கு எப்படியாவது அமௌன்ட் ரெடி பண்ணி கொடு” என்று பாவமான முகத்தோடு கேட்டாள்.
“நீ எதுக்குடா இப்போ கெஞ்சுற, ஒரு நிமிஷம் இரு” என்று கூறியவர், தன் அறைக்குள் சென்று 5 நிமிடத்தில் திரும்பி வந்தார். அப்போதே அனன்யாவை அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே வந்தாள் ராதிகா.
“ஐஸ்ஸூம்மா… இந்தா, இதுல 8000 இருக்கு, பார்த்துச் செலவு பண்ணு. பத்திரமா போயிட்டு வாடா செல்லம்” என்று கற்பகம் கூற,
“அம்மான்னா அம்மா தான்!” என்று கூறி அவர் கன்னத்தில் முத்தமிட்ட ஐஸ்வர்யா, அங்கு நின்றிருந்த ராதிகாவைப் பார்த்து ஓர் ஏளனமான புன்னகையைச் சிந்திவிட்டுச் செல்ல, இங்கு ராதிகாவுக்கு வயிறு பற்றி எரிந்தது.
‘8000 வாங்கிட்டு போறியா? இருடி, உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன்’ என்று கருவிக் கொண்ட ராதிகா, கற்பகத்தின் அருகே சென்று,
“அத்தை… எனக்கு ஒரு 10,000 வேணுமா இருக்கு” என்று ஏதோ கொடுத்து வைத்தது போல் கேட்க, கற்பகம் புருவம் சுருக்கி,
“எதுக்கு இப்போ உனக்கு அவ்வளவு பணம்?” என்று கேட்க, சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவரின் காதில் ஏதோ கூறினாள் ராதிகா.
“அதுக்குத்தான்…” என்று கண்ணடித்துக் கூற,
“ஓ… அதுக்கா, இரு… இரு…” என்று கற்பகம் மீண்டும் தன் அறைக்குச் சென்று பணம் எடுத்து வந்து ராதிகாவின் கையில் கொடுக்க, ராதிகாவும் அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு உடனடியாக எங்கோ கிளம்பிச் சென்றுவிட்டாள்.
அவர்கள் இருவரும் போனதும், அங்கு இவ்வளவு நேரம் நின்றிருந்த பைரவி தயங்கித் தயங்கி கற்பகத்தின் அருகில் வந்தாள்.
“அத்தை… எனக்கு ஒரு 200 ரூபாய் வேணும்” என்று கேட்க, ஒற்றைப் புருவம் உயர்த்தி “எதுக்கு?” என்று கடுமையான குரலில் கற்பகம் கேட்டார்.
“அது… அது வந்து… எனக்கு இன்னும் ஆபீஸ்ல சேலரி போடல. நாளைக்கு ஆபீஸ் போறதுக்கு ஆட்டோவுக்குப் பணம் வேணும். அதுவுமில்லாம Sanitary pad தீர்ந்து போச்சு, அதுவும் வாங்கணும்” என்று பைரவி தயங்கித் தயங்கி கூற, அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தார் கற்பகம்.
“ஏன் அம்மணி, நடந்து ஆபீஸுக்குப் போக மாட்டீங்களா? ஆட்டோவுல தான் போவீங்களா?” என்று கேட்க,
“அதுவந்து அத்தை…” என்று ஏதோ பைரவி கூற வர, அவளை ‘போதும்’ என்பது போல் கைநீட்டித் தடுத்த கற்பகம், தன் கையில் இருந்த 100 ரூபாயை மட்டும் கொடுத்துவிட்டு,
“நீ கிழிக்கிற கிழிக்கு இது போதும்… இதை வச்சு நீ ஆபீஸ் போவியோ இல்ல அதை வாங்குவியோ, அது உன் பாடு! இப்போ போய் வீட்ல இருக்குற எல்லா வேலையையும் பாரு. நீ பாட்டுக்கு ரெண்டு நாள் வீட்டுப் பக்கமே வரல… வீட்ல இருக்குற வேலையெல்லாம் யாரு, செத்துப் போன உங்க அம்மா வந்து செய்வாளா? போடி…” என்று அவளைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாகக் கற்பகம் துரத்தினார்.
தன் அறைக்கு வந்த பைரவி, தனக்குள் இருந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கண்களை மூடித் திறந்தாள். தன் கையில் இருந்த கைப்பையை (Handbag) தூக்கி எறிந்துவிட்டு, முகம் கழுவி உடையை மாற்றிக்கொண்டு சமையலறைக்குச் சென்று பார்க்க, அங்கே சமையலறை மொத்தமாகத் தலைகீழாகக் கிடந்தது. அதைப் பார்த்த பைரவிக்குத் தலைவலி வந்ததுதான் மிச்சம்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் சமையலறை முழுவதையும் சுத்தம் செய்து, பாத்திரங்கள் அனைத்தையும் துலக்கி அடுக்கி வைத்துவிட்டு. இரவுவுக்கு தேவையான உணவுகளையும் சமைத்து வைத்துவிட்டு தன் அறையில் சென்று முடங்கிக் கொண்டாள். அந்த வீட்டைப் பொறுத்தவரை அனைவரும் சாப்பிட்டு முடித்த பின்புதான் பைரவி சாப்பிட வேண்டும் என்பது எழுதப்படாத விதி!
அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் பைரவி வந்து பாத்திரங்களைத் திறந்து பார்க்க, அதில் இவளுக்கென சிறிதளவு உணவு கூட இல்லை.
‘அடக் கடவுளே… என்ன இது, நான் எப்பவும் செய்யறதை விட இன்னைக்குக் கொஞ்சம் சேர்த்துத் தானே சமைச்சு வச்சேன்…’ என்று நினைத்துக்கொண்ட பைரவிக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்தது. ஒரு விரக்திப் புன்னகையைச் சிந்திவிட்டுச் சென்று பிரிட்ஜைத் திறந்து பாலை எடுத்தவள், அதைச் சூடு செய்து ஒரு டம்ளரில் ஊற்றிக் கொண்டு, இரண்டு ரொட்டித் துண்டுகளை எடுத்து அதனோடு சேர்த்துச் சாப்பிட்டாள். பின் சிறிதளவு தண்ணீர் குடித்துவிட்டுச் சென்று படுத்துக் கொண்டாள் அக்னி பைரவி… இது இன்று மட்டுமல்ல, வாரத்தில் கிட்டத்தட்ட நான்கு நாட்கள் இதுதான் நடக்கும். பைரவியும் இந்த வாழ்க்கைக்குப் பழகிக்கொண்டாள்.
ஏதோ பசி தீர்ந்தும் தீராமலும் பால், ரொட்டி சாப்பிட்டுவிட்டு தன் அறைக்கு வந்தவள், அங்கே சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தாள் அக்னி பைரவி. கண்ணிமைக்காமல் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவாறே மெல்ல அதன் அருகே சென்று, அதில் இருந்தவனின் முகத்தை வருடினாள்.
“எதுக்கு நீங்க என் வாழ்க்கைக்குள்ள வந்தீங்க? அப்புறம் ஏன் என்னை அனாதையா இந்த நரகத்துல விட்டுட்டு போனீங்க? நீங்களாவது போகும்போது என்னை உங்ககூட கூட்டிட்டு போயிருக்கலாம் இல்ல? நான் இங்க வாழ்ற வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்னு தெரியல! எனக்குன்னு இந்த உலகத்துல யாரு இருக்காங்க? எனக்கு உயிர் கொடுத்த அப்பா நான் பொறக்குறதுக்கு முன்னாடியே என்னை விட்டுட்டு போயிட்டாரு… என்னை இந்த பூமிக்குக் கூட்டிட்டு வந்த என் அம்மாவும் எனக்குத் துணையா இருக்க வேண்டிய நேரத்துல என்னை உங்க கையில பிடிச்சுக் கொடுத்துட்டு போயிட்டாங்க… சரி, இனி இது தான் என் வாழ்க்கைனு என் மனசைத் தேத்திக்கிட்டு உங்க கூட வாழலாம்னு நினைச்சா, ‘கடைசி வரைக்கும் உன் கூடவே தான் இருப்பேன்’னு கை பிடிச்சுச் சொன்ன நீங்களும், இப்போ என்னை மட்டும் இல்ல, இந்த உலகத்தையே விட்டுட்டு போயிட்டீங்க…” என்று கதறி அழுதாள்.
தன் எம்பெருமான் சிவனின் நடராஜர் சிலையைப் பார்த்து,
“இப்படி யாரும் இல்லாம அனாதையா வாழ்வதற்கு எதுக்கு எனக்கு இந்தப் பிறப்பைக் கொடுத்தீங்க? நானும் இவங்கள மாதிரி சாதாரண மனுஷிதானே? எனக்குன்னு சொந்த பந்தம், அன்பு, பாசம், காதல் அப்படின்னு எதுவும் இருக்கக்கூடாதா? நான் எதுவுமே ஆசைப்படக்கூடாதுன்னு நான் பொறக்கும்போதே என் தலையில எழுதிட்டீங்களா?” என்று கதறி அழுது கொண்டிருந்தவளுக்கு ஆறுதல் கூறத்தான் பாவம் அங்கு யாரும் இல்லை!
ஏன் அக்னி பைரவி இதுபோன்ற ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும்? அங்கே இவளை இளவரசியாகப் பார்த்துக்கொள்ளும் மாமாவும் அத்தையும் இருக்க, இவள் ஏன் இங்கு கஷ்டப்பட வேண்டும்? கற்பகம் கூறியது போல் பைரவியின் கணவன் இறந்துவிட்டானா? அப்படியென்றால் அவள் ஒரு விதவையா? அப்படி அவள் வாழ்க்கையில் என்னதான் நடந்தது? நம் கதையின் நாயகியும் நாயகனும் சந்திப்பார்களா?
இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்…
தீராத காதல் தீயாக மோத…
