காதல் கணம் 27
சிவனேஸ்வரனின் கடந்த காலத்தை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த வித்யா இறுதியில், “எது எப்படியோ எங்க அப்பா தான் வீசியை விஜயாதித்தன் கிட்டயிருந்து காப்பாத்தினாரு.” என்று பெருமிதம் தெரிவித்தாள்.
“அப்படி காப்பாத்துற நிலைமையை உருவாக்கினதே நீங்க தானே? புக் ஸ்டால் பத்தி கலெக்டர்கிட்ட போட்டுக் கொடுத்தது யாரு?” என்று காரமாகக் கேட்டான் சிவனேஸ்வரன்.
“எங்கப்பா சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறீங்களா? கேஆர்பியும் அதுல இன்வால்வ் ஆகியிருந்ததால நிச்சயம் எங்கப்பா சொல்லியிருக்க மாட்டாரு.” என்றவள் முடிக்கக்கூட இல்லை, அதற்குள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்திருந்தான் அருண்மொழி.
அவனைப் பார்த்ததும் விக்கித்துப்போன வித்யா, “சிவனேஸா!” என்று அவன் பின் சென்று ஒழிய, அருண்மொழி திரும்பி தன் ஆட்களுக்கு கண்களால் சைகை காட்டியபடியே முன்னேறினான்.
சிவனேஸ்வரன் சுதாரித்து தனது துப்பாக்கியை எடுப்பதற்குள்ளாகவே இருவர் ஓடிவந்து அவனின் கைகளிரண்டையும் முதுகிற்கு பின்னால் மடக்கி கம்பத்தில் கட்டிப்போட்டனர்.
வித்யா கதற கதற அவளை தூக்கிச்சென்றான் அருண்மொழி.
சீதையை ராவணன் கவர்ந்து சென்ற காட்சி கண்முன் நிழலாடியது சிவனேஸ்வரனுக்கு. அவ்வேளை அவன் ஒன்றை மறந்தேப் போனான். அது அவனும் ஒரு ராவணன் தான் என்பதை.
நிலைமை தலைகீழாக, முன்பு வித்யா கட்டிவைக்கப்பட்டிருந்த அதே நிலைகம்பத்திலேயே தற்போது சிவனேஸ்வரனும் கட்டிவைக்கப்பட்டிருந்தான்.
தனது பலத்தையெல்லாம் திரட்டி, எவ்வளவோ முயன்று கயிற்றை அறுக்கப் பார்த்தான். விளைவு, வேயப்பட்டிருந்த மேற்கூரையே அவன் தலையில் இடிந்து விழும் அபாயம் இருந்தது.
சலித்து முயற்சியை கைவிட்டவன், “சே! இப்ப இங்கயிருந்து எப்படி தப்பிக்கிறது?” என்றே புலம்பித் தவித்தான்.
அருண்மொழி அண்ட் கோ சென்று சரியாக இரண்டுமணி நேரம் கடந்திருக்கும், அதற்குள் வேறு யாரோ வருவதுபோல் சத்தம் கேட்கவும், அனிச்சையாய் தலையை உயர்த்திப் பார்த்தான்.
சரேலென அந்தக் குடிசைக்குள் நுழைந்த வீசி, தன் ஆட்களைப் பார்த்து, “இவனை கையக் காலை கட்டி கார் டிக்கில தூக்கிப் போடுங்க” என்றான்.
சிவனேஸ்வரன் செய்திருந்த வேலை அவனை யோக்கியனாய் உருவகப்படுத்தவில்லை வீசிக்கு.
அவன் முகத்திற்கு நேரே குனிந்து, “வித்யாவை பார்க்கும்போது அவ சொல்ற வார்த்தைல தான் உன் முடிவு இருக்கு.” என்று எச்சரித்தான்.
சிவனேஸ்வரன் கூரை இடிந்து விழுந்தாலும் பரவாயில்லை என்று தன் பற்களை கடித்துக்கொண்டு கைக்கயிற்றை அவிழ்க்க முயற்சி செய்தான்.
மேலேயிருந்து கடமுடா சத்தத்துடன் மழைத்துளிகள் சில தன் மேல் சிதறவும் வீசி தன் ஆட்களைப் பார்த்து, “உம்!” என்று கர்ஜித்தான்.
அவ்வளவு தான், அடியாட்கள் ஓடிவந்து சிவனேஸ்வரனின் கண், வாய், கால்கள், கைகள் என்று தனித்தனியே கட்டி கார் டிக்கியினுள் தூக்கிப்போட்டார்கள். உள்ளே துள்ளத் துடிக்க கிடந்தான் சிவனேஸ்வரன்.
வீசி மகாவிற்கு போன்போட்டு விஷயத்தை தெரிவித்தபோது அவன், “உனக்கெப்படி அந்த இடம் தெரியும்?” என்றே குதர்க்கமாக வினவினான்.
வீசி, ‘இவனும் இவன் சந்தேகமும்’ என்று அலுத்துக்கொண்டவன், “நம்ம ஆளுங்க விஜயாதித்தனோட ஆளுங்க ரெண்டுபேரை வில்லாபுரம் ராஜன் ஹாஸ்பிடல்ல வச்சி பார்த்திருக்கானுங்க. அவனுகளைப் பிடிச்சி விசாரிச்சப்போ தான் அவனுகள்ல ஒருத்தனை வித்யா கட்டையால அடிச்சிருக்கான்னும், சிவா விஜயாதித்தன் ஆட்கள்கிட்டயிருந்து அவளை காப்பாத்தியிருக்கான்னும் தெரிஞ்சிருக்கு.” என்று விளக்கினான்.
“சரி, அடுத்து நாம பண்ண வேண்டியது?” என்று மீண்டும் மகா விரைப்பாகவே கேட்க,
“வித்யா விஜயாதித்தன் கைக்குப் போயிட்டதால இனி அவன் சொல்றபடி தான் நாம கேட்டாகனும். எப்படியும் காலைல அவன் மாணிக்ஜிகிட்ட டிமாண்ட் வைப்பான். நீ மாணிக்ஜி வீட்டுக்கு வந்துரு. நானும் அங்க வந்திடுறேன்.” என்றதும்,
“இப்போ உனக்கு சந்தோசமா வீசி? இது தானே உங்க பிளான்?” என்றவனை மதிக்கக்கூட இல்லை வீசி. எதிர்புறம் அழைப்பை துண்டித்திருந்தான் அவன்.
விஷயத்தை கேள்விப்பட்ட ராஜமாணிக்கம் பதட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்துக் கொண்டிருந்தார்.
“எப்படி வீசி? வித்யாவை எப்படி அவன் கையில விட்ட? நான் இந்தப் பசங்களை கூட நம்பல. நீ இதுல இறங்கியிருக்கதால எப்படியும் வித்யாவை கண்டுபிடிச்சிருவன்னு நம்பிக்கையா இருந்தேன். இப்போ நீயே வந்து அவளை விஜயாதித்தன் கொண்டு போயிட்டான்னு சொல்ற. இல்ல, இல்ல, நான் உங்க யாரையும் நம்பியிருக்கக்கூடாது. நானே என் பொண்ணைத் தேடிப் போயிருக்கணும்” என்றவரை நிமிர்ந்துப் பார்க்க முடியவில்லை வீசிக்கு.
மகாவிற்கோ வீசி மீதான ராஜமாணிக்கத்தின் நம்பிக்கை உடைந்ததில் குளுகுளுவென்றிருந்தது.
ராஜமாணிக்கம், வீசி தலைகுனிந்து நிற்பதை பார்க்க சகியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டார்.
“இப்போ அவன் போனுக்காக நான் காத்திருக்கணுமா வீசி?”
அவன் எதுவுமே பேசவில்லை. மௌனமாக நின்றான்.
சரியாக காலை ஏழு ஐம்பதிற்கு விஜயாதித்தனிடமிருந்து அழைப்பு வந்தது. எடுத்ததுமே எதிர்புறம் எக்காளமாக சிரித்து, ராஜமாணிக்கத்தை வெறுப்பேற்றினார் விஜயாதித்தன்.
ராஜமாணிக்கமோ, “நேரத்தை விரயமாக்காம சொல்ல வந்ததை நேரடியா சொல்லு விஜயாதித்தா!” என்று வெறுப்பாகக் கத்தினார்
விஜயாதித்தனுக்கு பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு தான் ஷ்ரதாவுக்காக, ராஜமாணிக்கத்திடம் இதேபோல் கத்தியது ஞாபகம் வந்தது. கூடவே, அப்போது விஷயம் கேஆர்பி வரை சென்று குடும்பஉறுப்பினர்களை வியாபார விஷயத்தில் உள்ளிழுக்கக்கூடாது என்கிற ஒப்பந்தத்திற்கு இருவருமே ஒப்புதல் தெரிவித்ததும் ஞாபகம் வந்தது.
“நீ மட்டும் இந்த வீசியை உன் பக்கம் சேர்க்காம இருந்திருந்தா நான் நம்ம ஒப்பந்தத்தை மீற வேண்டிய அவசியமே வந்திருக்காது ராஜமாணிக்கம். எல்லாம் நீயே உருவாக்கிக்கிட்டது தான். மலைப்பாம்பை உன் உடம்பை சுத்திப் போட்டுக்கிட்டு இப்போ இறுக்குதே வலிக்குதேன்னா எப்படி?’
“ங்கோ*** என் பொண்ணு எங்கன்னு சொல்லுடா?”
“ஹாஹாஹா! நீ இப்படி டென்ஷன் ஆகுறதைப் பார்த்தா, பக்கத்துல இருக்க என் அறிவாளி மாப்பிள்ளைக்குக்கூட உன் பொண்ணு எங்கயிருக்கான்னு கண்டுபிடிக்க முடியலை போலயே ராஜமாணிக்கம்?”
“தைரியமான ஆம்பளைன்னா நேருக்கு நேரா என்கூட மோதுடா. அதை விட்டுட்டு பொண்ணை தூக்கியிருக்கியேடா, பொட்*”
“பெருமதிப்பிற்குரிய மாணிக்ஜி அவர்களே! இப்போ என் பொண்ணு உங்க கஸ்டடில இல்ல. உங்கப் பொண்ணு தான் என் கஸ்டடில இருக்கா. அதை கொஞ்சம் ஞாபகம் வச்சிக்கிட்டா நல்லது. அப்புறம் என் பொண்ணை தூக்குறதா இருந்தா, பக்கத்துல இருக்கற என் மாப்பிள்ளைக்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கறது நல்லது” என்றார்.
காரியம் சாதிக்க மௌனம் சாதித்தார் ராஜமாணிக்கம்.
“ம்.. எங்க இப்போ குரலை உசத்திப்பேசுடா வெண்ண? காரியமில்லாம ஒண்ணும் அந்த வருண் சக்கரவர்த்திக்கு நான் மாமனார் ஆகலைடா” எனவும், எதிர்புறம் நறநறவென்று ராஜமாணிக்கம் பல்லைக் கடிக்கும் சத்தம் கேட்டது.
“அந்தப் பயம் இருக்கட்டும். இப்போ நீ என்ன பண்றன்னா, செல்லூர்ல இருக்க என் கிரானைட் குடவுனுக்கு என் புத்திசாலி மாப்பிள்ளையை கூட்டிட்டு வர்ற. பழசை நினைச்சி கேஆர்பி அண்ணேகிட்ட கம்ப்ளைன்ட் கிம்ப்ளைன்ட் பண்ணிடப்போற. அவர்கிட்டயிருந்து போன் வந்தது? இப்போ தாண்ணே கழுத்தறுத்துப்போட்டேன்னு சொல்லி உம்பொண்ணு கதையையே முடிச்சிருவேன். ஜாக்கிரதை! எனக்குத் தேவை நீ உன் கையாலயே வீசியை முடிக்கணும். அவ்வளவு தான். உனக்கும் எனக்கும் நடுவுல அவன் யாரு?” என்று சீறவும், வெடவெடத்துப் போனார் ராஜமாணிக்கம்.
“என்ன சத்தத்தையேக் காணோம் ராஜமாணிக்கம்? ஆதியிலயே ஒழிச்சுக்கட்ட நினைச்சவனை என் பொண்ணு வாழ்க்கையைப் பத்தி கூட கவலைப்படாம எதுக்கு மருமகனாக்குனேங்குற? எல்லாம் அவனை உனக்கு எதிரியாக்கத் தான்டா. கேஆர்பி அண்ணேக்கிட்ட என் உயிரை வேணா கேளுங்க, வீசியை மட்டும் கேட்காதீங்கன்னு சொன்னியே? எங்க இப்போ நீ யாரை காப்பாத்துவன்னு நானும் பார்க்கறேன்.” என்றவர் சவால்விடவும்,
“நீ எல்லை மீறிப்போற விஜயாதித்தா. இதுக்காக நீ நிறைய விலை கொடுப்ப” என்று எச்சரித்தார் ராஜமாணிக்கம்.
“ஹாஹாஹா! ரொம்ப பதட்டமா இருக்குல்ல ராஜமாணிக்கம்? ம், பதட்டமா தான் இருக்கும். எனக்குத் தெரியும், உன் பொண்ணு மேல உனக்கு ரொம்ப பாசம்னு. தப்பில்ல, நானும் ஒரு காலத்துல அப்படித்தான் இருந்தேன். ஆனா, இப்போ எனக்கு குடும்பம், பொண்டாட்டி, பிள்ளைன்னு எதுவுமே கிடையாது. ஆமா, எதுவுமே கிடையாது. எனக்கு என் ஊருல நான் மட்டும் தான் ராஜாவா இருக்கணும். சரி சொல்லு, யாரை இப்போ காப்பாத்தப்போற? வருண் சக்கரவர்த்தியையா? இல்ல, உன் பொண்ணையா?” என்று கேலியாகக் கேட்டார் விஜயாதித்தன்.
ஒரு கட்டத்தில் ராஜமாணிக்கத்தின் அந்த மௌனம் தன்னை அவமதிப்பது போல் தோன்ற, “என்ன ராஜமாணிக்கம் பேச்சையேக் காணோம்? உன் கேங்ல பேசத் தெரிஞ்சவன் யாராவது இருந்தா, அவன்கிட்ட போனைக்கொடு. உச்! பதட்டத்துல என் மாப்பிள்ளைக்கிட்ட கொடுத்துறப்போற. அட! நீ யோசிக்கிறதைப் பார்த்தா என் மாப்பிள்ளை உசுரு தான் உனக்கு முக்கியம் போலயே? அப்போ சரி ராஜமாணிக்கம், நான் உன் பொண்ணை…” என்றவர் முழுதாக சொல்லக்கூடயில்லை,
“இல்ல, இல்ல, நான் நீ சொல்றபடியே செய்யுறேன்” என்று பதறினார் ராஜமாணிக்கம்.
“உன்னைப் பத்தி எனக்குத் தெரியும் ராஜமாணிக்கம்” என்று அழைப்பைத் துண்டித்தவர் அருண்மொழியிடம் பேசுவதற்காக திரையைத் தட்டினார்.
எடுத்ததும், “ஆங்! சொல்லுங்கப்பா” என்றான் அவன்.
“இப்போ எங்கயிருக்க அருண்மொழி?”
“காரோட நம்பர் பிளேட்டை மாத்திட்டு தேனி ரோட்டுல தான்பா சுத்திக்கிட்டிருக்கோம்.”
“ம், சரியா ஒம்பதே முக்காலுக்கு நம்ம செல்லூர் குடவுன் பின்னாடி வந்துரு. பத்து மணிக்கு அந்த வீசியை ராஜமாணிக்கமே போட்ருவான். கவனமா கேளு! ராஜமாணிக்கம் வீசியை போட்டுத் தள்ளின பின்னாடி தான் பொண்ணு அவன் கைக்கு சேரணும்”
“கண்டிப்பாப்பா. அது வரைக்கும் வெளியே உங்கப் போனுக்காக வெயிட் பண்றோம்பா.”
“ம், அப்புறம் வீசியை பொணமா அள்ளிட்டு வந்து நீதான் உன் தங்கச்சி மடியில போடணும். மணி இப்போ எட்டு. நான் இப்போ வீட்டுலயிருந்து கிளம்பினா தான் சரியாயிருக்கும்” என்றவர் அழைப்பை துண்டித்துவிட்டு திரும்ப, ஸ்தம்பித்த பாவனையில் அழுது வடிந்த முகத்துடன் நின்றிருந்தாள் ஷ்ரதா.
மறுபக்கம் போனை காதைவிட்டு கீழிறக்கிய ராஜமாணிக்கத்திடம், “என்னாச்சிண்ணே? என்ன சொல்றான் அந்த விஜயாதித்தன்?” என்று தன் காது கடுக்கனை தடவியபடியே கேட்டான் மகா.
ராஜமாணிக்கத்திடம் ஒரு அசாத்திய அமைதி நிலவியது. அவர் டீபாயிலிருந்த சிகரெட் பெட்டியிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி வாயில் வைத்தார்.
“மாணிக்ஜி”
மகா கூப்பிட்டிருந்தால் இன்னும் மௌனியாகவே இருந்திருப்பாரோ என்னவோ, கூப்பிட்டது வீசி என்பதால் நிமிர்ந்து உட்கார்ந்தார் ராஜமாணிக்கம்.
வலப்புறம் நின்றிருந்த மகாவிடம் நாசி வழியே புகைவிட்டபடி பொய் சொல்லத் துவங்கினார்.
“மகா, போன தடவை அவன் கார் ஒண்ணை எடுத்துட்டு வந்தோம் இல்லையா? அதைக் கேட்கறான். ரொம்ப ராசியான காராம்.” என்றார்.
“ப்பூ! அது தானாண்ணே? அது நம்ம கேரேஜ்ல தான் கெடக்குண்ணே. நான் போய் வண்டியைப் போட்டுட்டு பாப்பாவை அழைச்சிட்டு வந்திடுறேண்ணே.” என்று கிளம்பினான் மகா.
“இல்ல மகா. அவன் காரை என்னை கொண்டு வந்து விட சொல்றான்.”
“அண்ணே! அவன் ஏதோ ஸ்கெட்ச் போட்டிருக்க மாதிரி தெரியுதுண்ணே”
“இல்ல மகா, அவன் என்னை தனியா வரச் சொல்லல. அதனால பயப்பட வேணாம்.”
“சரிண்ணே, இப்போவே போய் காரை எடுத்திட்டு வந்திடுறேன்.”
மகா வருவதற்குள் ராஜமாணிக்கம் விஸ்கியை இரண்டு லார்ஜ் உள்ளே இறக்கியிருந்தார்.
செல்லூர் கிளம்பும்போது அந்தக் காரை மகா தான் ஓட்டினான். பக்கத்தில் வீசி உட்கார்ந்திருந்தான். பின்னால் ராஜமாணிக்கம் பதட்டமாக நெற்றியைத் தடவிக் கொண்டிருந்தார். அவரது இடுப்பில் கனமான பிஸ்டல் ஒன்று உட்கார்ந்திருந்தது. வீசி அவரை ஃப்ரன்ட் மிர்ரரில் பார்த்துக்கொண்டே வந்தான்.
செல்லூர் கிரானைட் குடவுனிற்கு வந்த பின்பு, காரிலிருந்தவர்களிடம், “எல்லாரும் உங்க பிஸ்டலை காருக்குள்ளேயே போட்டுட்டு வாங்க. அவன் பொருள் எதுவும் எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கான்” என்றார் ராஜமாணிக்கம்.
“அண்ணே! கண்டிப்பா இது ஸ்கெட்ச் தாண்ணே” என்று அறுதியிட்டு சொன்னான் மகா.
“மகா உனக்கு தொழில் சொல்லிக் கொடுத்தது யாரு?” என்றவர்,
அவன், “என்னண்ணே இப்படி கேட்குறீங்க? நீங்க தாண்ணே” எனவும்,
“அப்போ நான் சொல்றேன். எல்லாத்தையும் உள்ளப் போடுங்கடா!” என்று பதட்டத்தில் பலமாக சவுண்ட் விட்டார் ராஜமாணிக்கம்.
மகாவிற்கு விழுந்த அதட்டலில் மற்றவர்கள் அனைவரும் தாமாகவே முன் வந்து பொருட்களை காரினுள் தூக்கிப்போட்டார்கள். மகா கோபித்துக்கொண்டு முதல் ஆளாக குடவுனிற்குள் சென்றான். அனைவருமாக அந்த இடத்தையே அரைமணிநேரத்திற்கும் மேலாக அலசியிருப்பார்கள். ஆனால், ஒரு ஈ காக்காக் கூட தட்டுப்படவில்லை.
அது ஏற்கனவே வீசியை கடத்தி வந்து, கிரானைட் கட்டிங் மிஷினால் முதுகில் தடயம் போட்ட இடம் என்பதால் ஒருவித அதிர்வலை கிளம்பியது அவனுக்குள்.
அன்றைய நாள் மட்டும் மாணிக்ஜியின் ஆட்கள் வராமல் இருந்திருந்தால்? நினைக்கும்போதே குப்பென்று வியர்த்தது அவனுக்கு. தலையை உதறி தன்னை சமாளித்துப் பார்த்தான். இன்னும் ஏதோ ஒரு அபசுருதி அவனுக்குள் ஒலிப்பது போலவே இருந்தது. ஞாபக நீரோடையின் சலசலப்பு வேறு தொடர்ந்து அவனை இம்சித்தது.
பெரிய ராட்சத இயந்திரங்களையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்த மகா, “என்னண்ணே, மணி பத்தாகிடுச்சு இன்னும் யாரையும் காணோம்?” என்க, சுற்றி முற்றி பார்த்த ராஜமாணிக்கம் வேறு வழியின்றி தன் பிஸ்டலை வெளியே எடுத்தார்.
காதல் கணம் கூடும்…
இன்னும் இரண்டு அத்தியாயங்களில் நாவல் நிறைவு பெற்றுவிடும் ஃப்ரெண்ட்ஸ். இப்போதாவது நாவல் குறித்து ஓரிரு வார்த்தைகள் சொல்லலாமே:)
