10.வேய்ந்தனனின் வல்லினம்

                10. வல்லினம்

அடர்ந்த கானகத்தின் நடுவே அமைந்திருந்த ரகசிய வீட்டினுள் சிறையெடுக்கப் பட்டிருந்தவளின் விழிகளின் ஓரம் கண்ணீர் மடைதிறந்த வெள்ளம் போன்று நிற்காமல் வழிந்தது. இருள் ஆக்கிரமித்திருந்த அவ்விடத்தில், சிறு வெளிச்சம் கூட இல்லை. கட்டப்பட்ட கைகளை அவிழ்க்க போராடிக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.

ஆண்டவா, ஏன் இந்த சோதனை? என்று மனதளவில் நொந்தவளுக்கு, அங்கிருந்த இருள் வேறு அச்சுறுத்தியது. மனதில் பதிந்திருந்த பயத்தை விரட்டியடிக்கப் பார்த்தவள், தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

“ரிலாக்ஸ் லியா. இப்போ நீ கண்ணை மூடியிருக்குறதாக நினைச்சுக்கோ. இப்போ நீ இங்கிருந்து தப்பிக்கணும். உடனே மண்டபத்துக்கு போகணும்.” என்று தனக்கு தானே ஆறுதல் படுத்தியவளுக்கோ, அந்நொடி விஷ்வாவின் எண்ணம் தான் தோன்றியது. அவன் ஒருவன் தானே அவளுக்கு ஏதேனும் ஆபத்து வர வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தான்.

தன்னிலைக்கு முழுமுதற் காரணம் ருத்ரஜித்தே என்று கனவிலும் எதிர்பாராதவளின் இதழ்கள் பிதுங்கியது. மூடியிருந்த கண்களின் இடுக்கில் உவர்நீர் கசிய, தான் உறுதியாக இருக்க வேண்டும்! என்று தனக்குள்ளே மௌன போராட்டம் நடத்தியவள், அதன் பின் எதை பற்றியும் யோசிக்கவில்லை. 

தரையோடு தவழ்ந்தவாறே அங்கிருந்த சுவற்றினை தட்டுத்தடுமாறி வந்தடைந்தாள். பின் சுவற்றின் உதவியுடன் எழுந்து நின்றாள். கை பின்புறமாக கட்டப்பட்டிருக்க, கால்களோ வேறு இருக்கமான நிலையில் கட்டப்பட்டிருந்தது. 

தத்தி தத்தி நடந்தவள், அவ்வறையில் ஏதேனும் கதவோ அல்லது சன்னலோ இருக்குமா என்பதை தேடத் தொடங்கினாள். பெண்ணவளின் உடல் முழுவதும் வியர்வை ஊற்றாய் பெருக்கெடுக்க, தப்பிக்க வழி தெரியாமல் செய்வதறியாமல் தத்தளித்தாள் பெண்.

தன் காதுகளை கூர்மையாக்கியவள், வெளியே கேட்கும் சத்தங்களை கவனிக்கத் தொடங்கினாள். மெல்லிய கீற்றாய் காற்று அங்கிருந்த சிறு துவாரத்தின் வழி கேட்டது. நிசப்த அறையில் அவளது படபடத்த இதயத்தின் சத்தத்தை தவிர்த்து, மிக நுண்ணிய ஒலியாக விசுவிசுவென்று வீசும் பலத்த காற்றின் சப்தம் கேட்க, மெல்லமெல்ல தாவியபடி காற்றின் ஒலி கேட்கும் இடத்தை நோக்கிச் சென்றாள்.

நிச்சயம் அவ்விடம் தப்பிக்கும் வழி  கிடைக்கும் என்று நம்பியது பெண்ணவளின் மனம். நம்பிக்கையோடு தாவியவள், அவ்விடமிருந்த திடமான பொருளொன்றின் மீதே குதிக்க, அவளது கால்கள் இடறியதில் பொத்தொன்று தரையில் விழுந்தாள். 

விழுந்த வேகத்தில் நெற்றி வகுட்டிலும், மூக்கிலும் பலமாக அடிபட்டிருக்க, பொத்தென்று விழுந்தவளின் மார்புக்கூடு தரையில் பலமாகப் பட்டதும்   “அம்மா” என்று அலறியவளின் சத்தம் காற்றோடு காற்றாய் மெல்ல மெல்ல கரைந்தது

                       ****

நடுநாயகமாய் அமைந்திருந்த மணமேடையை விட்டு எழுந்த ஆறடி ஆண்மகனின் கண்களில் கோபம் மட்டுமே நிரம்பியிருந்தது. சிவந்த கண்களோடு கையிலிருக்கும் தாலியினை இறுக பற்றியபடி எழுந்து நின்றவனது பார்வை அங்கிருந்த அனைவரையுமே மிரட்டியது.

“இந்த கல்யாணம் நடக்காது.” என்று ஆணித்தரமாக உதிர்த்தான் அவனது வார்த்தைகளை. அவனது சொல்லில் உறவுகளுக்கிடையே மீண்டும் சலசலப்பு துளிர்க்க, அக்னிக்குண்டம் முன்பு அமர்ந்திருந்த அபூர்வாவின் மனதிற்கு மட்டும் இதமாக இருந்தது அவனின் வார்த்தைகள்.

“ருத்ரா என்ன காரியம் பண்ற?” என்று இந்திரன் குழப்பத்தோடு கேட்டார்.

“இந்த கல்யாணம் நடக்காது சித்தப்பா. கண்டிப்பா நடக்காது.” என்றான் உறுதியாக.

“என்ன தம்பி, உங்களுக்காக தான நாங்க எல்லாரும் பேசி இந்த முடிவு எடுத்திருக்கோம். எங்களையும் இப்படி அவமானப் படுத்துறீங்களே.” என்று சபையிலிருந்து பெரியவர் ஒருவர் கேள்வியினைத் தொடுக்க,  அவரை தன் கனல்விழிக் கொண்டு உறுத்து விழித்தவன்,

“வாட் த ஹெல் ஆர் யூ டாக்கிங்? உங்ககிட்ட நான் கேட்டேனா? எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி?” என்றவனின் சிவந்த விழிகளைக் கண்டதுமே அவரின் வாய் அன்னிச்சையாக மூடிக்கொள்ள, மண்டபம் முழுவதும் பெருத்த அமைதி காணப்பட்டது.

“அதோ அங்க மேடையில அமர்ந்திருக்க பொண்ணை பார்த்தும் கூடவா, உங்களுக்கு இரக்கம் வரலை. சி இஸ் இன்னசென்ட். நேத்து வரை அக்கா கல்யாணம்னு நினைச்சு, துள்ளி திரிஞ்சுட்டு இருந்தவளை திடீர்னு மணப்பெண்ணா மாறுனா? அவ மனசு எப்படி ஏத்துக்கும்?” என்றவனின் கருணை பொதிந்த பார்வை அவள் மீது படிந்து மீள, தனக்காக பேசுபவனது செயலில் உள்ளம் குளிர்ந்தவளுக்கோ, அழுகை பீறிட்டு வந்தது, தனக்காக பேச அவராவது இருக்கிறாரே என்று உணர்ச்சியில் வந்த கண்ணீர் அது.

 ருத்ரஜித் ஆரம்பித்த தொடக்கம் முதல் தற்போது வரை கவனித்த விஷ்வஜித்தோ, ‘பின்றியேடா… டேய். இது உன் நடிப்பா? நிஜமானு என்னாலேயே கணிக்க முடியலையே.’ என்று எண்ணிக்கொள்ள, வைகையோ படத்தினைக் காண்பது போல் கண்கள் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான்.

“ருத்ரா உன்னோட வாழ்க்கை என்னாகும்? அவசரப்பட்டு முடிவு எடுக்காத கண்ணா. அக்காகிட்ட நான் என்ன பதில் சொல்வேன்.” என்று பரிதவிப்போடு கேட்டார் வைஜெயந்தி.

“இந்த கல்யாணம் நடக்காதுனு சொல்லுங்க சித்திமா. என் வாழ்க்கையை பத்தி யோசிக்குற நீங்க, ஏன் அந்த பொண்ணு வாழ்க்கையைப் பத்தி யோசிக்கல?”

“நீ அந்த பொண்ணை நல்லா பார்த்துப்ப ருத்ரா. அந்த நம்பிக்கையில தான் கண்ணா இந்த ஏற்பாடுக்கு சம்மதிச்சேன்.” என்று வைஜெயந்தி ஆதங்கத்துடன் கூற, வெற்று புன்னகை ஒன்றை பரிசளித்தான் ருத்ரஜித்.

“காதல் இல்லாமல் கட்டாயத்தோட எப்படி சித்திமா? வெறுப்பு மட்டும் தான் அங்க இருக்கும். அப்படி இருக்கப்போ நான் எவ்ளோ அன்பா பார்த்தாலும் காதல் மட்டும் மலராது.” என்றவனின் பார்வை அபூர்வாவின் மீது படிந்து மீண்டது.

நிதர்சனம் பொருந்திய உண்மை தானே. கட்டாயத்தில் நிகழும் மணவாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது எவ்வாறு கிட்டும். காலப்போக்கில் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு அதில் காதலை மலர வைக்கவே நாட்கள் பிடிக்கும் அல்லவா? அப்படி என்றாலும் அபூர்வா மனதில் இது தனது அக்காவிற்கான வாழ்க்கை என்பது ஆணித்தரமாக பதிந்த இந்நிலையில் அவளது இந்த திருமணம், இரு மனங்களின் நடுவே விரிசலை மட்டுமே நிகழ்த்தும்.

“இதுதான் என் முடிவு. இந்த கல்யாணம் நடக்காது.” என்று உறுதிப்படக் கூறியவன், மணமேடையில் அமர்ந்திருந்த அபூர்வாவை நோக்கி கைநீட்டினான்.

மருட்சியுடன் பார்த்தவளோ, தனது இமைகளை மூடிதிறந்தபடி மனநிம்மதியுடன் அவனது கைகளை பற்றினாள். இதுவரை மாமா என்ற மரியாதை அவள் மனதில் எவ்வளவு இருந்ததோ, அதைவிட நூறுமடங்கு மரியாதை அதிகரித்திருந்தது அபூர்வாவிற்கு. 

அந்த நம்பிக்கையோடு அவனது கைத்தலம் பற்றியபடி எழுந்துக் கொண்டவள், அவன் பின்னே நடந்தாள்.

அக்னியை சுற்றி வலம் வரவேண்டிய இருவரும், வெவ்வேறு மனநிலையில் கைகளை பற்றியிருந்தனர். அவன் கொடுத்த மோதிரம் போட்டிருந்த பெண்ணவளின் தளிர் கைகளை பற்றியவன் முகத்தில் சிறு சலனம் கூட இல்லை.

அபூர்வாவை அழைத்துக்கொண்டு சத்யராஜின் கைகளில் ஒப்படைத்திருந்தவன், “இவ உங்க  பொண்ணு மாமா. இங்க யாருமே தப்பு பண்ணலை. அப்படி இருக்கும் போது யாரோட தப்புக்கும், யாரும் பரிகாரம் பண்ண வேண்டிய அவசியமும் இல்லை.” என்று உறுதியாக பேசியவன் அவரைக் கண்டு ஆறுதலாக தலையசைத்து விட்டு நகர, சத்யராஜ் மற்றும் சரஸ்வதி இருவருமே அவனுக்கு கைகளைக் கூப்பியபடி நன்றியினை தெரிவிக்கப் பார்க்க, வேண்டாமே என்பது போல் சத்யராஜின் கைகளை கீழே இறக்கினான் ருத்ரஜித்.

அபூர்வா ருத்ரஜித்தை தான் பார்த்தாள். இமை மூடாமல் பார்த்தாள். இப்படியும் ஒருவனா? என்று அதிசயித்துப் பார்த்தவளது கண்களில் முற்றும் முழுவதுமாக நிரம்பியிருந்தான் ருத்ரஜித்.

அவள் புறம் திரும்பியவனோ, “நல்லா படிக்கணும். வேறு எத பத்தியும் யோசிக்காத. உன் அக்காவை உங்ககூட சேர்த்து வைக்குறது என் பொறுப்பு.” என்று புன்னகையோடு கூற, கண்களில் நன்றி பொங்க, சரியென தலையசைத்தாள் பெண். அதன்பின்னர் அங்கிருந்து விறுவிறுவென சென்றவனது கண்களோ, அங்கு நின்றிருந்த விஷ்வஜித்தைக் கண்டு ஏளனம் பொங்க பார்த்தது.

நீங்க நினைக்குறதை நடத்துறவன் நான் இல்லை. நீங்க எதிர்பார்க்காததை நடத்தி காட்டுறவன் தான், நான் ருத்ரஜித்! என்று அவனது பார்வையின்வீச்சே பதிலினைக் கூறிவிட, அதே அழுத்தம் சிறுதும் குன்றாமல் வீறுநடை போட்டு மண்டபத்திலிருந்து வெளியேறி இருந்தான் ருத்ரஜித்.

வைஜெயந்தியும் இந்திரனும் செய்வதறியாமல் நின்றவர்கள், அப்போதுதான் அங்கு நின்ற விஷ்வாவினை கவனித்தனர். அங்கு நடந்த கலவரத்தில் தங்களது மகனது வருகைகூட அவர்களது கண்களை எட்டவில்லை என்பதுதான் நிதர்சனம். 

“அஜ்ஜூ” என்று கலங்கிய விழிகளோடு தன் மகனிடம் வந்த வைஜெயந்தியோ, அவன் மீது சாய்ந்தபடி கண்ணீரில் கரைந்தார்.

“அம்மா. வீட்டுக்கு போய் பேசிக்கலாம். அப்பா அம்மாவை வீட்டுக்கு கூப்பிட்டு போங்கப்பா.” என்று சமாதானம் செய்தவன் இருவரையும் வழியனுப்பினான்.

“அஜ்ஜூ அண்ணா. நம்ம ஒன்னு நினைச்சா, இங்க நடக்குறது வேறயா இருக்கே? என்ன அண்ணா நடக்குது?” என்ற வைகைக்கோ குழப்பம் இன்னும் தீர்ந்தப்பாடில்லை.

“காலம் தான் பதில் சொல்லும். நீ வீட்டுக்கு போ வைகை. அப்புறம் இது பத்தி பேசலாம்.” என்றவனின் மனம் முழுவதும் நிரம்பியிருந்தாள் லியா. 

அவன் உள்மனமோ அவள் ஆபத்தில் இருக்கிறாள் என்பதை கூறிக்கொண்டே இருக்க, அவ்விடம் இருக்க பிடிக்காமல் வெளியேறச் சென்றவனது கண்களில் பதிந்தது கீழே இருந்த கடிதம், பிரகல்யாவின் கடிதம். அதை படித்த அதிர்ச்சியில் சத்யராஜ் கீழே போட்டிருக்க, கண்களில் பட்ட கடிதத்தை கையில் எடுத்துக்கொண்டான் விஷ்வஜித்.

தான் வந்த காரினை நோக்கி சென்றவன், கையிலிருக்கும் கடிதத்தை பிரித்துப் பார்த்தான். அச்சு அசலாக அவளது கையெப்பம் என்றாலும் அதிலிருந்த சிறுபிழை அவனுக்கு எதையோ கூற, தன் கண்களை மூடியவன் அவளது கையெழுத்தை நினைத்து பார்த்தான்.

மருத்துவமனையில் அவள் மேசையின் மீதிருந்த காகிதத்தில் கூட அவளது கையெழுத்தை கண்ட நியாபகம் துளிர்க்க, இது அவள் கைப்பட எழுதியதா? இல்லை அவளைப் போன்று யாரோ எழுதிய சதியா? என்பதை அறிந்துக் கொள்வதற்காக அங்கிருந்து சென்றிருந்தான் விஷ்வஜித்.

                          ***

வெய்யோன் தனது உக்கிரத்தை குறைத்துக் கொண்டு, செந்நிற கதிர்களை வானம் முழுவதிலும் பரவச் செய்திருக்க,  அந்த ரம்மியமான வேளையில் அடர்ந்த கானகத்தை நோக்கி,  குறுக்கு வழிப்பாதை ஒன்றில் சென்றுக் கொண்டிருந்தது எஸ்- கிராஸ் மாருதி.

காரின் வேகமே, உள்ளே அமர்ந்திருந்தவனின் வேகத்தை பறைச்சாற்றியிருக்க, இருபுறமும் வளர்ந்திருந்த ஆளுயுற மரங்களுக்கு நடுவே இருந்த மண்சாலையில் புழுதி படர, ஆள்நடமாட்டமற்ற அவ்விடத்தில் அமைந்திருந்த வீட்டின் முன் நின்றது மகிழுந்து.

மகிழுந்திலிருந்து இறங்கியவன், அவ்வீட்டை நோக்கி நடந்தான். கீழே கிடந்த காய்ந்த இலைகளின் மீது அவனது பாதம் அழுத்தமாக பட, சருகுகளின் சத்தமும், விசுவிசுவென்று வீசிய காற்றின் சத்தமும் எதுவும் அவனது காதுகளை அடையவில்லை. அவன் எண்ணம் முழுவதுமே உள்ளேயிருப்பவளைப் பற்றியிருக்க, தன்னிடமிருக்கும் சாவியினைப் பயன்படுத்திக் கதவினைத் திறந்தவனோ உள்ளே சென்றிருந்தான். 

பெண்ணவள் அடைக்கப்பட்டிருக்கும் அறையை நோக்கிச் சென்றவன், பூட்டியிருக்கும் கதவினைத் திறந்தான். அவன் கதவு திறக்கும் சத்தம் கேட்டும் கூட பெண்ணவள் விழிக்கவில்லையே? இன்னும் மயக்கத்தில் தான் இருக்கிறாளா? என்ற யோசனை அவனுள்ளே எழ, அவ்வறையிலிருந்த சோலார் மின்விளக்குகளை ஒளிரச் செய்தான்.

அவ்வறை முழுவதையும் தன் கண் கொண்டவன் அளவெடுக்க, அறையின் மூளையில் விழுந்துக்கிடந்த பிரகல்யாவை பார்த்ததுமே எதுவோ சரியில்லை என்பதை புரிந்துக்கொண்டான். 

அங்கிருந்த மூட்டைகளை கவனிக்க தவறியவள் கீழே விழுந்திருக்கிறாள் என்பதை அறிந்தவன் அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான். 

 பெண்ணவளை திருப்பி பார்க்க அவளது நெற்றியிலிருந்து வழிந்த செங்குருதி காய்ந்துப்போய் இருக்க, “சிட்” என்று கோபத்தில் சிவந்தவன் அவளைத் தன் இருகைகளில் ஏந்திக்கொண்டு, அதற்கு அருகே இருந்த அறைநோக்கி விரைந்தான். 

அங்கிருந்த மெத்தையின் மீது பெண்ணவளை படுக்கவைத்தவன், முதலில் அவளது கைகால்களில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்த்துவிட்டான். 

அதன்பின்னர், நெற்றியிலும், பெண்ணவளின் நாசியிலிருந்து வடிந்து காய்ந்துப்போன குருதியினை முதலில் சுத்தம் செய்தவன், அவளது காயத்திற்கு மருந்திட்டான். 

இவ்வளவு நடந்தும் கூட மயக்கத்திலிருந்த பிரகல்யாவிற்கு விழிப்பே வரவில்லை. அவளை உறுத்து விழித்தவனின் கண்களில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது. அங்கிருந்த பொருட்களை எல்லாம் கோபத்தில் தூக்கி எறிந்தவன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு, மிக கடினப்பட்டே தன் கண்களைத் திறந்தாள் பிரகல்யா. சுளீரென்று தலை ஒருபுறம் வலிக்க, விழுந்ததில் மூக்கு வேறு உடைந்ததால் வில்லென்று வலி வேறு இருந்தது. தன் தலையைப் பற்றியபடி எழுந்தவள் அப்போது தான் கவனித்தாள், தான் மெத்தையின் மீது படுத்திருப்பதை. 

“ந… நான் எப்படி இங்க?” என்று தலையில் கைவைத்துக் கொண்டவள் அப்போதுதான் கவனித்தாள் தலையிலிருந்த கட்டினை. தனக்கு யாரோ முதலுதவி செய்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்தவளின் உதடுகள் “ரு… ருத்ரஜித்.” என்று உதிர்க்க, அந்தநொடி அவள் முகம் முழுவதும் வியர்த்தது.

அவனை நேரில் கண்டால் சட்டையை பற்றிக்கொண்டு கேள்வி எழுப்ப அவள் மனம் நினைத்தாலும், மயக்கமருந்து செலுத்திய நொடி அவன் சிரித்த சிரிப்பை நினைத்தவளுக்கோ, தற்போது கூட உடல் நடுங்கியது.

“முதல்ல இங்க இருந்து நான் கிளம்பணும்.” என்று தீர்மானமாக கூறியவளுக்கோ கட்டிலிருந்து எழவே சிரமமாக இருந்தது. விழுந்த வேகத்தில் ஆங்காங்கே உடலில் உள்காயங்கள் ஏற்பட்டிருக்க, தட்டுத்தடுமாறி எழுந்துக் கொண்டாள் பிரகல்யா.

அவ்வறையை சுற்றி நோட்டமிட்டவள், மிரண்ட விழிகளுடன் அவ்வறையின் கதவினைத் திறக்க, பூட்டப்படாத கதவு எளிதாக திறந்தது. கதவு திறந்த நிம்மதியில் பெருமூச்சொன்றை விட்டவள், யாரேனும் இருக்கிறார்களா? என்று நோட்டம் விட்டுக்கொண்டே பதுங்கியபடி நடந்தாள்.

அவ்விடமிருந்த மாடிப்படிகளைக் கண்டதும் விரைந்தவள், யாரேனும் கீழே இருக்கிறார்களா? என்று எட்டிப் பார்த்தபடி காலடி சத்தம் கூட வெளியே கேட்காத வண்ணம் மிக மெதுவாக தனது அடிகளை எடுத்து வைத்தாள்.

ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து வைத்தவளது மனமோ படபடவென அடித்துக் கொண்டிருந்தது. எங்கு அவன் வந்துவிடுவானோ, என்று எச்சிலை விழுங்கியபடி நடந்தவளுக்கு அவ்விடமே அச்சுறுத்தும் வகையில் இருந்தது. 

ஒழுங்காக பராமரிக்கப்படாத அவ்வீட்டில் அனைத்து இடங்களிலும் தூசி படிந்திருக்க, பழமையான பொருட்களும், அச்சுறுத்தும் ஓவியங்களும் அவளை பயம் கொள்ள செய்தது.

 வீட்டின் தரைத்தளத்தை அடைந்தவள், சுற்றிலும் பார்வையை சுழலவிட்டபடி, நடுநாயகமாக அமைந்திருந்த அவ்வீட்டின் கதவினைத் திறக்க முற்பட, “எங்க போறீங்க டாக்டர் மேடம்.” என்ற ஆளுமை நிறைந்த குரல் அவளது செவிவழி அடைய தூக்கி வாரிப்போட்டது பிரகல்யாவிற்கு.

கைகால்கள் நடுக்கமெடுக்க, பெண்ணவளின் உச்சந் தலையிலிருந்து வியர்வை காதோரமாய் வழிய, நெஞ்சு படபடக்க திரும்பியவளுக்கு எதிரே இருந்த நாற்காலியின் மீதே கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்தான் ருத்ரஜித்.

அவனைக் கண்டதுமே அவளது விழிகளில் கண்ணீர் திரண்டது. மணாளனாய் எண்ணியவன் செய்த காரியத்தை நினைக்கும் போதே பெண்ணின் மனம் குமுறியது. துடிக்கும் உதடுகளை கட்டுப்படுத்த பெரும்பாடுபாட்டாள் பெண்.

“ஏன் இப்படி பண்ணீங்க?” என்றாள் வலி நிறைந்தக் குரலில்.

ஆணவனோ, கண்களில் சிறு வலி கூட இன்றி, இதழில் ஏளனப்புன்னகை படர மிக சாவகாசமாக நாற்காலியிலிருந்து எழுந்தவன், அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்தான்.

“இப்போ கூட உன் காயத்துக்கு நான் காரணமே இல்லையே டாக்டரம்மா.” என்றவனின் உதாசீனம் நிறைந்த பேச்சில், முகம் சுளித்தாள் பிரகல்யா.

பெண்ணவளின் காயத்தைக் கண்டு, பரிதாபம் கொள்வது போல முகத்தை வைத்தவன், “அச்சச்சோ ரொம்ப அடிபட்டுடிச்சோ?” என்றவனது முகம் நொடியில் அனலாய் மாறியிருக்க, அவளை நோக்கி விரைந்து வந்தவன், பிரகல்யாவின் தலைமுடியைக் கொத்தாக பற்றினான்.

“எதுக்கு இப்படி உன்னை நீயே காயப்படுத்திகிட்ட? ஆர் யூ மேட்?” என்றான் கர்ஜனையோடு.

வலியில் முகம் சுருக்கியவளுக்கோ, ஒருநிமிடம் ‘தான் காயப்பட்டதற்காக கோபம் அடைகிறானே? ஏன்? கண்டிப்பாக அவனுக்கு என்மீது அன்பு உண்டு. ஆதலால் தானே முதலுதவி எல்லாம் செய்திருக்கிறான்.’ என்ற எண்ணம் மேலோங்க, அவளது முகமாற்றத்தை உணர்ந்தவன், அவளது சிகையை மேலும் இறுக்கி பிடித்தான்.

“உன்னை காயப்படுத்த நான் இருக்கும் போது, நீ எப்படிடி காயப்படுத்திக்கலாம்?” என்றவனின் கருணையற்ற பதிலில் ஒரு நிமிடம் தான் நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை புரிந்துக் கொண்டவளின் உதடுகள் துடித்தது.

“எதுக்கு இந்த நாடகம்? எதுக்கு என்னை நம்ப வெச்சு ஏமாத்தினீங்க? உங்களுக்கு இரக்கமே இல்லையா?” என்று கூறியவளின் விழிகளிலிருந்து கண்ணீர் உருண்டோடியது.

அதைக் கண்டு ஏளனமாக வளைந்தது ருத்ரஜித்தின் இதழ்கள், “குட் ஜோக்… நம்புறவங்களை ஏமாத்துறத பத்தி நீ பேசுறியா?” என்றவனின் கண்களில் நொடியில் கோபம் குடிக்கொள்ள, சிவந்த அவனது விழிகளைக் கண்டு மிரண்டவள்,

“நான் என்ன பண்ணேன். ஏன் இப்படி என்னை சித்ரவதை பண்றீங்க? உங்களை நம்புனதை தவிர்த்து, நான் எந்த தப்புமே பண்ணலை.” விழிகள் கலங்கியபடி, இதழ்கள் துடிக்க கூறுபவளை யார் கண்டாலும் இரக்கம் என்பது தோன்றும். ஆனால் அவனுக்கோ அது சிறிதும் தோன்றவில்லை போல, அவளது சிகையைப் பற்றியபடி, அங்கிருந்த சன்னலின் அருகே அழைத்து சென்றவன், அவளது முகத்தை சன்னலின் கம்பியின் மீதே அழுத்திப் பிடித்தான்.

“அங்க பாருடி. அங்க பாரு.” என்று வெளியே காட்ட, இருளைத் தவிர்த்து அவ்விடம் ஒன்றுமே புலப்படவில்லை பெண்ணவளுக்கு.

அவளது புரியாத பார்வையை புரிந்துக் கொண்டவனோ, “மேல வானத்தை பாரு.” என்று சுட்டிக்காட்ட, ஏற்கனவே அவன் அழுத்தியதில் வலி தோன்ற, வலியுடனே தன் கண்களை உயர்த்தியவள் சலனமற்ற வானத்தை கண்கள் இடுங்கப் பார்த்தாள்.

 

துளிக்கூட காதல் இல்லை…

துளியளவு கூட இரக்கம் இல்லை…

ஏனிந்த சாபம்…

ஏனிந்த கோபம்.…

வானைக் காட்டும் மாயவனின்

கண்களில் சிறு காதல்கூட

தோன்றவில்லையே…. 

விழுந்த வலியைக் காட்டிலும்

உன் வார்த்தைகள் வலிக்க

செய்கின்றதே…..!

இந்த நிமிடம் கூட உன் சொல்லை

கேட்கும் என் கண்களுக்கு

விடுதலை அளிக்கமாட்டாயா?

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!