தீ 🔥 – 9

அத்தியாயம் 9

 

அண்ணா… என்ன அண்ணா வெட்கமெல்லாம் படுறே? 

 

மித்ரன், அருந்ததி மற்றும் தேவி இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று அங்கிருந்த தூணின் அருகே நின்று கேட்டுக்கொண்டிருக்க, சரியாக அவர்கள் பைரவியின் திருமணத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தபோது, மித்ரனின் பின்னாலிருந்து யாரோ அவனின் தோளைத் தொட்டனர்.

 

முதலில் அதைக்கண்டு கொள்ளாதவன், மீண்டும் மீண்டும் யாரோ பின்னாலிருந்து சுரண்டவும் சலிப்போடு ‘யார் டா அது?’ என்று திரும்பிப் பார்க்க, அங்கே அவனது தம்பி ருத்ரன் தான் நின்றிருந்தான்.

 

“அண்ணா, நீ இங்கே என்ன பண்ற?” என்று ருத்ரன் கேட்க,

 

“டேய்… லூசுப் பயலே! சொல்லாம கொள்ளாம இப்படித்தான் வந்து பின்னால நிப்பியா? அறிவில்ல உனக்கு?” என்று மித்ரன் ருத்ரனைத் திட்டினான்.

 

“அண்ணா, நான் எப்பவும் போல சாதாரணமா தான் வந்து உன்னைத் தொட்டேன்… ஆனா நீ தான் ஏதோ புதுசா நான் உன்னைத் தொட்ட மாதிரி ஓவர் ரியாக்ட் பண்ற” என்று ருத்ரன் கூறினான்.

 

“சரி… சரி, இப்போ உனக்கு என்ன வேணும்? நீ எதுக்கு இங்க வந்த?” என்ற மித்ரன், அருந்ததி இருந்த இடத்தைத் திரும்பிப் பார்க்க, அங்கு அருந்ததி, தேவி மற்றும் இன்னொரு புதிய ஆளும் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

 

“அண்ணா… நீ ஒரு விஷயத்தை மறந்துட்டன்னு நினைக்கிறேன்” என்று ருத்ரன் கூற, மித்ரனும் ‘என்ன’ என்பது போல் ருத்ரனைப் பார்த்தான்.

 

“நான் வாரத்துக்கு இரண்டு இல்ல மூணு தடவை இந்த கோவிலுக்கு வருவேன். ஆனா நீதான் மழைக்குக் கூட கோவில் பக்கம் ஒதுங்க மாட்டே! இப்போ கொஞ்ச நாளா என்னவோ தெரியல, நீ இந்த கோவிலையே சுத்தி சுத்தி வர்றதா கேள்விப்பட்டேன். அதான் என்ன விஷயம்னு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்” என்ற ருத்ரன் தன் அண்ணனை ஏற இறங்கப் பார்க்க, தம்பியின் கேள்வியிலும் பார்வையிலும் திருதிருவென முழித்தான் மித்ரன்.

 

“அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை, எனக்கும் கடவுள் மேல நம்பிக்கை வந்துடுச்சு… அதான் தினமும் வந்து சாமி கும்பிடுறேன்” என்று மித்ரன் மழுப்பலாகக் கூறினான்.

 

“இல்லையே ண்ணா… நீ சொல்றதுக்கும் நீ முழிக்கிற முழிக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லையே!” என்று ருத்ரன் புதிதாக துளிர்விட்டிருந்த குட்டி தாடியைத் தேய்த்துக்கொண்டே கூறினான்.

 

“நீ எந்த வேலைக்கு வந்தியோ அந்த வேலையை மட்டும் பார்த்துட்டு மூடிட்டு கிளம்பு” என்ற மித்ரன், ருத்ரனை அங்கிருந்து கிளப்ப முயற்சிக்க, அவனோ அங்கிருந்து நகர்வதாக இல்லை.

 

“என்ன அண்ணா… ரொம்ப லவ்வு பண்ற போல?” என்று ருத்ரன் கேட்க, அதில் சற்று அதிர்ந்து போன மித்ரன்.

“

எ… என்னடா ல… லவ்வு… லவ்வு கிவ்வுனு பேசிக்கிட்டு இருக்கே? நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை! நா… நான் உண்மையிலேயே சும்மா சாமி கும்பிடலாம்னு தான் வந்தேன்” என்று திக்கித் திணறி கூறியவன், தன் தம்பி நம்பும் அளவுக்குச் சமாளிக்க முயல, அதில் சத்தமாகச் சிரித்தான் ருத்ரன்.

 

“நீ சமாளிக்கிறது கேவலமா தெரியுது…” என்று கூறியவன் மேலும் வாய்விட்டுச் சிரிக்க, மித்ரனோ அசடு வழிய நின்றிருந்தான்.

 

“நானும் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன். எப்பவும் அந்த முறுக்கு மீசையை முறுக்கிக்கிட்டு, சட்டைக் கையை மடிச்சுவிட்டுக்கிட்டு, சும்மா சிங்கம் மாதிரி ‘எங்கே எவன் கிடைப்பான், அவனை எப்படி அடிச்சி பிரிக்கலாம் அப்படின்னு ஆள் தேடுறவன் நீ… ஆனா இப்பவெல்லாம் ஏதோ ஹீரோ மாதிரி ரெடி ஆகுற, கண்ணாடி முன்னாடி நின்னு உனக்கு நீயே பேசிக்கிற… அதுமட்டுமா, நீ டோட்டலா ஆளே சேஞ்ச் ஆயிட்டே! இதிலிருந்தே தெரியலையா, நீ லவ்வுங்கிற நோயால் பாதிக்கப்பட்டு இருக்கேனு?” என்று ருத்ரன் கிண்டல் செய்ய, எப்போதும் கோபமாக இறுகியிருக்கும் மித்ரனின் முகத்தில் சிறு வெட்கம் தோன்றி மறைந்தது.

“அண்ணா… என்ன அண்ணா வெட்கமெல்லாம் படுறே? என்னால நம்பவே முடியல ண்ணா!” என்று ருத்ரன் மேலும் மித்ரனை கிண்டல் செய்ய,

 

“அடேய்… உன்னைக் கொல்லப் போறேன் பார்த்துக்கோ! முதல்ல இங்கிருந்து போடா…” என்றவன் ருத்ரனை விரட்டினான்.

 

“ஹான்… போறேன் போறேன்… ஆனா போறதுக்கு முன்னாடி ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு?” என்றவன் மித்ரனை நெருங்கி,

 

“அந்தப் பொண்ணு யாருன்னு சொல்லு, நான் வேணும்னா அந்தப் பொண்ணுகிட்ட போய் என் அண்ணா உன்னை லவ் பண்றான்னு சொல்லிப் பேசுறேன்” என்று ருத்ரன் கூறினான்.

 

“அடி… செருப்பால் நாய்! போடா முதல்ல இங்கிருந்து!” என்று அடித்து விரட்டாத குறையாகத் தன் தம்பியைத் துரத்தி விட்டுத் திரும்பிய மித்ரனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அங்கு அருந்ததி, தேவி, சக்கரவர்த்தி மூவரும் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தைப் பற்றி பேசி முடித்திருந்தனர்.

 

அதனால் மித்ரனுக்கு இந்தத் திருமணப் பேச்சைப் பற்றி எதுவும் தெரியாமல் போகவே, அருந்ததி பைரவியின் நடனத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போது மித்ரனுக்கு அவள் கண்டிப்பாக சித்ரா பௌர்ணமி அன்று வருவாள் என்பது புரிந்தது.

 

 

‘அப்போ அவ கண்டிப்பா சித்ரா பௌர்ணமி அன்னைக்கு இங்க வருவா… ஆனா எந்நேரம் வருவான்னு தெரியலையே!’ என்று யோசித்தவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அங்கிருக்கும் ஐயரிடம் கொஞ்சம் கொஞ்சமாகப் பேச்சுக் கொடுத்து, அவள் அன்று உறுதியாக வருவாளா, அப்படி வந்தால் எந்நேரம் வருவாள் என்று விசாரிக்க,

 

“பைரவி எதை மறந்தாலும் மாசம் மாசம் பௌர்ணமி அன்னைக்கு வரதை மறக்க மாட்டா அதுவும் சித்ராபௌர்ணமி அன்னைக்கு இந்த சிவன் முன்னாடி ஆடுற அந்த நாட்டியத்தை மறக்கவே மாட்டா! அவ ஆடுற நாட்டியத்தை பார்க்குறதுக்காகவே நிறைய பேர் வருவாங்க…” என்று கூறி, அந்த ஐயர் பைரவியைப் பற்றித் தனக்குத் தெரிந்த அனைத்தையும் கூற, மித்ரனும் பைரவி பற்றிய மொத்தத் தகவலையும் அறிந்துகொண்டான்.

 

இதோ மித்ரன் ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த சித்ரா பௌர்ணமியும் வந்துவிட்டது. அன்று பௌர்ணமி மட்டுமல்லாமல் சிவராத்திரியும் என்பதால், நிறைய மக்கள் கூட்டம் அங்கு கூடியிருந்தது. சிவனின் இறுதிப் பூஜை முடித்துவிட்டு அனைவரும் அந்த கோவில் மண்டபத்தில் கூட, மித்ரனோ தன் மனங்கவர்ந்த கண்மணியைத் தேடித் திரிந்தான்.

 

‘ச்சே… இவ்வளவு கூட்டத்துல எப்படி அவளைத் தேடி கண்டுபிடிக்கிறது?’ என்று மித்ரனின் கண்கள் பெண்ணவளை வலைவீசித் தேடிக்கொண்டே இருந்தன. அப்போது அவன் பின்னாலிருந்து சலங்கை ஒலி கேட்க, அதோடு ஒரு பெண்ணின் மெல்லிய குரலும் ஒலித்தது.

“எக்ஸ்க்யூஸ் மீ (Excuse me), கொஞ்சம் வழி விடுங்க…”

 

அந்தப் பெண்ணின் குரலில் மெல்ல திரும்பிப் பார்த்தவன், தன் முன் நின்றிருந்த பெண்ணவளின் அழகில் மொத்தமாக மயங்கித்தான் போனான் மித்ரன்!

 

“எக்ஸ்க்யூஸ் மீ (Excuse me), உங்களைத்தான்… கொஞ்சம் நகருங்க” என்று மீண்டும் தன் சிவந்த இதழ் திறந்து கூறினாள் அக்னி பைரவி.

 

“அக்னி, நேரமாகுது… வாடா!” என்று அருந்ததி தன் மகளை அழைக்க,

 

“இதோ வந்துட்டேன் அம்மா!” என்றவள், அவன் நகர்வதாகத் தெரியவில்லை என்றதும், தன் பிஞ்சுக் கை கொண்டு ஆணவனின் திண்ணிய மார்பில் லேசாக அழுத்தம் கொடுத்துத் தள்ளிவிட்டு, அவனைக் கடந்து சென்றுவிட்டாள்.

 

முதலில் பைரவியுடன் இணைந்து இன்னும் சில பெண்கள் நாட்டியம் ஆட, இறுதியாக பைரவி மட்டும் தனியாக நடனம் ஆடினாள்.

 

மித்ரனின் லட்சியக் காதல் நிறைவேறுமா? பைரவி அவனைத் தன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்வாளா? பைரவிக்கு திருமண பேச்சு நடந்தது தெரிந்தால் மித்ரன் என்ன செய்வான்? பைரவிக்கு பார்த்த அந்த மாப்பிள்ளை யார்? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்…

 

தீராத காதல் தீயாக மோத…

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!