அத்தியாயம் 10
இது அப்பவே தெரிஞ்சிருந்தா நம்ம எப்போவோ இவளைக் கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிருக்கலாமே?
பைரவியின் நடனத்தை மித்ரன் தன்னையும் மறந்து ரசித்துக்கொண்டிருக்க, பைரவி தன் நடனத்தை முடித்துவிட்டு கீழே இறங்கி வந்தவள், தன் தாயின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள்.
“அக்னி! அதெல்லாம் வேண்டாம்டா…” என்று தூக்கிவிட்ட அருந்ததி, தன் மகளின் தலையில் கைவைத்து ஆசீர்வதித்து அவள் கன்னத்தில் முத்தமிட்டார். அக்னி பைரவியும் தன் தாயைக் கட்டியணைத்துக்கொண்டாள். அப்பொழுது அங்கே வந்த தேவி மற்றும் சக்கரவர்த்தி இருவரும்,
“சூப்பர்டா! எவ்வளவு அருமையா டான்ஸ் ஆடுற! உன்னோட இந்த நாட்டியம்தான் அந்த சிவபெருமான் உனக்குக் கொடுத்த வரம்” என்று தேவி அந்தப் பெண்ணவளின் தலையில் கைவைத்துக்கூற,
“இது என் அம்மா எனக்குக் கொடுத்த வரம் ஆன்ட்டி. அவங்க எனக்குக் கொடுத்தாங்க, அதை நான் சரியான முறையில் கத்துக்கிட்டேன்” என்று பணிவோடு பைரவி கூறினாள்.
அப்பொழுது இவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த மித்ரனை இடித்துத் தள்ளிவிட்டு, ஒரு உருவம் வேகமாக பைரவியின் அருகே சென்று அவள் கையைப் பிடித்துக்கொண்டு சுற்ற,
“டேய்… இடியட்! விடுடா என்னை… என்ன பண்ற? விடுடா!” என்று பைரவி கத்தினாள்.
“அடேய்… வீணாப்போனவனே! விடுடா என் பொண்ணை” என்று அருந்ததியும் அவன் முதுகில் இரண்டு அடி போட, வலி தாங்க முடியாமல் பைரவியின் கையை விட்டவன், தன் முதுகை நீவிக்கொண்டே அருந்ததியின் புறம் திரும்பினான்—நம் மித்ரனின் தம்பி ருத்ரன்!
“அரு… இப்போ எதுக்கு என்னை அடிச்சீங்க? நான் என் செல்ல பையூ குட்டி டான்ஸ் ஆடுன அழகில் மயங்கிப்போயிட்டேன்” என்று ருத்ரன் உருட்ட,
“டேய்… சும்மா உருட்டாத! நீ வந்ததே லேட்டு, இதுல நான் ஆடுன அழகிலே மயங்கிட்டியா? எப்படிடா இப்படி வாய்க்கூசாமல் பொய் சொல்ற? முதல்ல என்கிட்ட நீ பேசாத, உன்மேல நான் செம கோபத்துல இருக்கேன். உன்னைப் பார்த்தாலே எனக்கு அப்படியே கோபம் கோபமா வருது” என்று பைரவி தன் முகத்தைத் திருப்பிக்கொள்ள,
“ஏய்… பையூ! என் செல்லக்குட்டி, கோச்சுக்காதடி… லேட்டா வந்ததுக்கு வெரி வெரி சாரி! ஆபீஸ்ல கொஞ்சம் வேலை, இப்பதான் நான் ஜாயின் பண்ணிருக்கேன். அதான்… கோச்சுக்காதடி என் பட்டுக் குட்டி” என்று அவளின் தாடையைப் பிடித்து ருத்ரன் கொஞ்சிக்கொண்டிருக்க, இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மித்ரனின் நெஞ்சம் படார் என்று வெடித்தது!
‘இவன் என்ன நம்ம ஆளுகிட்ட போய் இப்படி பேசிட்டு இருக்கான்? டேய்… மித்ரா, இது சரியில்லையே…’ என்று மித்ரன் மைண்ட் வாய்ஸில் பேசிக்கொண்டிருக்க, இங்கு பைரவியும் ருத்ரனுடன் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அனைவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். போகும் தன் தம்பியின் சட்டையைப் பிடித்து இழுத்த மித்ரன்,
“டேய்… நீ இங்க என்னடா பண்ற?” என்று ருத்ரன் மற்றும் தன் கண்மணியின் இடையே இருக்கும் உறவைப் பற்றித் தெரிந்துகொள்ளக் கேட்க,
“டேய்… அண்ணா, அந்த கேள்வியை நான் கேட்கணும்! நீ என்ன புதுசா இங்க வந்திருக்க? இது சரியில்லையே… அன்னைக்கே நான் கேட்டதுக்கு நீ சரியா பதில் சொல்லல, என்ன விஷயம்?” என்று ருத்ரன் கண்கள் சுருக்கிக் கேட்டான்.
“அது… அது… ஹான்! இன்னைக்கு சித்ரா பௌர்ணமி, அதான் சிவனை தரிசனம் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன். அதோட எனக்கு இன்னும் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வேற வரல, அதான் அந்த சிவபெருமான் கிட்ட ஒரு மனு போட்டுட்டு போகலாம்னு வந்தேன்” என்று மித்ரன் ஏதேதோ சொல்லி ருத்ரனைச் சமாளிக்க, அவனைக் கீழிருந்து மேலாகச் சந்தேகத்தோடு பார்த்த ருத்ரன், தன் தாடியைத் தடவிக்கொண்டே,
‘வர வர பயபுள்ள பண்றதெல்லாம் சரியில்லையே… ஏதோ ஒன்னு தப்பா இருக்கு, கண்டுபிடிக்கிறேன்டா’ என்று தன் மனதிற்குள் நினைத்துக்கொண்டான். தன் தம்பியின் பார்வையின் அர்த்தம் உணர்ந்து மித்ரன் திருதிருவென விழிக்க, ருத்ரனும் கண்கள் சுருக்கி இன்னும் அவனை ஆழ்ந்து நோக்கினான்.
“சரி சரி… என்னை கேள்வி கேட்கிறது இருக்கட்டும். இப்போ ஒரு பொண்ணுகிட்ட கை பிடிச்சு, கட்டிப்பிடிச்சு பேசிக்கிட்டு இருந்தியே, அந்த பொண்ணு யாருடா?” என்று மித்ரன் கேட்க, சில நொடிகள் யோசித்தவன்,
“யாரைக் கேட்குறீங்க?” என்று தன் புருவம் சுருங்கக் கேட்டான் ருத்ரன்.
“அதான்டா… அந்த கிளாசிக்கல் டான்ஸ் ஆடுச்சே, அந்தப் பொண்ணு” என்று திக்கித் திணறி மித்ரன் கூற,
“ஓஹ்… பையூ குட்டியைக் கேட்குறீயா?” என்று ருத்ரன் கேட்க, ருத்ரனின் ‘பையூ குட்டி’ என்ற அழைப்பில் கடுப்பான மித்ரன்,
“ம்… ஆமா… ஆமா… அதே பொண்ணுதான்! அவ உனக்கு என்ன வேணும்?” என்று கடுப்போடும், அதே சமயம் ஒருவித படபடப்போடும் கேட்டான்.
“அந்த லூசு என்னோட பிரெண்டு… பைரவி. நான் தான் ஆல்ரெடி வீட்ல சொல்லிருக்கேனே?” என்று ருத்ரன் கூற,
“டேய்… அந்தப் பொண்ணு பார்க்க எவ்வளவு அழகா இருக்கா? அவளைப் போய் லூசுன்னு சொல்ற?” என்று மித்ரன் கோபத்தோடு கேட்டான்.
“அவ பார்க்கத்தான் அழகு, ஆனா சரியான மெண்டல்! பாவம் அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவனை நினைச்சுதான் எனக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கு” என்று ருத்ரன் உச்சி கொட்டிக்கொள்ள,
“டேய்… அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவன் கொடுத்து வச்சிருக்கணும்! ஏதோ ஜென்மத்துல செஞ்ச புண்ணியம் பண்ணவன்தான் அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போறான், நீ வேணா பாரு” என்று மித்ரன் பைரவியை ரசித்தவாறே கூறினான். மித்ரனைக் கண்கள் சுருக்கிப் பார்த்த ருத்ரன்,
“அதை நாங்க பார்த்துக்கிறோம் அண்ணா… நீ அதைப் பற்றிக் கவலைப்படாதே” என்று கூறினான்.
“அதுசரி… நீ இந்தப் பொண்ணைப் பத்தி இதுவரைக்கும் என்கிட்ட சொல்லவே இல்லையே? அவ பேர் என்ன?” என்று தெரியாதது போல் மித்ரன் கேட்க,
“உன்கிட்ட நான் நிறைய தடவை சொல்லிருக்கேன். ஆனா நீதான் அதைக் காதுல வாங்குனதே இல்லை. எனக்கு இருக்கிறது ஒன்னு ரெண்டு பெஸ்ட் பிரண்ட்ஸ்தான், அதுலயும் என்னோட பெஸ்ட் பெஸ்ட் பிரண்ட் இவதான்! இவளைப் பற்றி நிறைய தடவை நான் உன்கிட்ட பேசி இருக்கேன். ஆனா நீதான் ஏதாவது சொல்ல வந்தாலே மூஞ்சியைத் திருப்பிட்டு போயிடுற… அதுலயும் எப்பப் பாரு ‘எக்ஸாம் எக்ஸாம்’னு சுத்துன, உனக்கு எப்படிடா அவளைப் பற்றி தெரியப் போகுது?” என்று ருத்ரன் கேட்டான்.
“அப்படியா…?” என்று சந்தேகத்தோடு கேட்ட மித்ரனின் உள்ளமோ,
‘இது அப்பவே தெரிஞ்சிருந்தா நம்ம எப்போவோ இவளைக் கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிருக்கலாமே? டேய்… மித்ரா, பெரிய தப்பு பண்ணிட்டடா…’ என்று தனக்குள் கூறிக்கொண்டது.
தன் தம்பிக்குச் சந்தேகம் வராத அளவிற்குப் பைரவியைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டான். இப்படியே நாட்கள் சென்றுகொண்டிருந்தன. நாளுக்கு நாள் மித்ரனின் அந்த ரகசியக் காதல் ரகசியமாகவே வளர, இப்படி ஒரு காதல் வளர்வது நம் பைரவிக்கு பாவம் தெரியாமலே போனது…
பைரவிக்கு மித்ரனின் காதல் தெரியவருமா? அப்படியே தெரிந்தாலும் பைரவி மித்ரனின் காதலை ஏற்றுக்கொள்வாளா? இவர்களின் திருமணம் எப்படி நடந்தது? அப்படி மித்ரனுக்கு என்ன நேர்ந்தது? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்…
தீராத காதல் தீயாக மோத…
