காதல் 6

பப்பில் டிஜேவின் இசைக்கேற்ப இளம் பெண்கள், ஆண்கள் என்று இருபாலரும் தங்கள் நண்பர்களுடன் இணைந்து ஆடிக் கொண்டிருக்க, ஆஷிக்கும் தனது பெண் தோழியுடன் ஆடிக் கொண்டிருந்தான். 

ஆதர்ஷ் தனியே ஒரு நாற்காலியில் அமர்ந்து ஒரு கிளாசில் மதுபானத்தை மெல்ல மெல்ல அருந்தியாவாறே தன் மொபைலில் மூழ்கி இருந்தான். அப்பொழுது அவனருகே வந்து அமர்ந்த ஒரு பெண் தன்னை அவனுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டு அவனிடம் பேசிக் கொண்டிருக்க, அவனும் அவளுடன் பேசிக் கொண்டிருந்தான். 

அப்பொழுது ஆஷிக்கின் அலைபேசி ஒலிக்க, அதில் காவ்யா என்ற பெயர் வர ஆஷிக் பிசியாக ஆடிக் கொண்டிருப்பதைப் பார்த்தவன் தனக்குள், 

“ஃபோனை ஏன்டா என்கிட்ட தர, இத்தோட சுமார் பத்து தடவை இந்தக் காவ்யா கால் பண்ணிட்டா. உன்னை என் நண்பனா வச்சுட்டு நான் என்னவெல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு?” என்று புலம்பியவன் சிறு எரிச்சலுடன் ஃபோனை கட் செய்ய, எதிரே இருந்த பெண் அவனைக் கவனிப்பதை உணர்ந்தவன்,

தன் முகபாவனையை மாற்றிக்கொண்டு வராத புன்னகையை, வற்புறுத்தி வரவைத்து அவளைப் பார்த்து சிரிக்க, பதிலுக்குச் சிரித்தவள், “ஷால் வீ டான்ஸ்?” என்று கேட்டாள்.

“கண்டிப்பா, லெட்ஸ் கோ.” என்றவன் தனது நாற்காலியில் இருந்து எழும்பிய மறுநொடி, தனது ஃபோன் ஒலிக்க மிகவும் எரிச்சல் அடைந்தவன், அந்தப் பெண்ணிடம் வேலை இருப்பதாகக் கூறி விடைபெற்றுக் கொண்டு நேராகச் சென்று ஆஷிக்கை அழைக்க,

இசையின் மழையில் நனைந்து கொண்டிருந்த ஆஷிகோ, “என்னடா?” என்று ஆடியவாறே கேட்க,

எரிச்சல் அடைந்த ஆதர்ஷ், “பார்க்கிங் ஏரியாவுக்கு உடனே வா.” என்று முறைத்தான்.

“சொல்லுடா, நான் பிஸியா இருக்கேன்.” என்று புன்னகையாய் கூற,

“அடீங்க… இப்போ வர போறியா, இல்லையா?” என்று கண்டிப்பாய் கூறியவனிற்கு மறுப்பு கூற முடியாமல் ஆஷிக்,

“போடா வரேன்.” என்று வேண்டா வெறுப்பாய் கூறியவன், தன் தோழிகளிடம், “கேர்ள்ஸ் ஐ வில் பீ பேக்.” என்று கூறிவிட்டு, வெளியே சென்று ஆதர்ஷின் தோளில் தட்டியவாறு அவனது கையில் இருந்த ட்ரிங்க்ஸ் கிளாஸை வாங்கி காரின் மீது ஏறி அமர்ந்துகொண்டு, 

“என்னடா, சொல்லு.”

“டேய் உன் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் ஏன்டா என் நம்பரை குடுக்குற?”

“உனக்கு யூஸ் ஆகுமேனுதான் குடுத்தேன், ஏன் என்னாச்சு?”

“ம்ம் மண்ணாச்சு… டேய் இந்தக் காவ்யா ஃபோன் பண்ணிட்டே இருக்காடா, அவ தொல்லை தாங்க முடியல. அவகிட்ட பேசி தொலைடா.”

“ஐயோ ப்ளீஸ்டா! ஷாப்பிங் போறதுக்காகக் கூப்பிடுவா, நாளைக்குத் தியா மூவிக்குக் கூட்டிட்டு போனு சொல்லிருக்கா. அவகிட்ட என்ன சொல்லி தப்பிக்குறதுனு நானே முழிச்சுட்டு இருக்கேன், இதுல இவ வேறையா? முடியாதுடா என்னால… நீயே எதாவது சொல்லி சமாளிடா.”

“எதாவது…”

“ம்ம்… என்னத்தையோ சொல்லி சமாளி.” என்று ஆஷிக் கூற, 

ஆதர்ஷ் தன் மனதிற்குள், ‘இப்போ நான் பண்ண போற காரியத்துல இனிமே நீ எந்தப் பொண்ணுக்கும் என் நம்பரை குடுக்க மாட்டடா என் நண்பா.’ என்றவன்,

அந்தப் பெண்ணின் ஃபோன் காலை அட்டெண்ட் செய்து, “ஹாய் காவ்யா, எப்படி இருக்க?” 

“எஸ் ஐயம் குட்!” 

“ஆஷிக் உன்னை பத்திதான் பேசிட்டு இருப்பான், நீ எப்ப கால் பண்ணுவனு ஏங்கிட்டு இருப்பான். அவன் ஃபோன்ல சிக்னல் இல்லாம இருந்திருக்கும், அதான் அட்டென்ட் பண்ணிருக்க மாட்டான். 

அவன் என் கூடத் தான் இருக்கான், அவன்கிட்ட பேசணுமா? அவன் இவ்வளவு நேரம் என்கூடத் தான் பேசிட்டு இருந்தான், நீ கால் பண்றதுக்குக் கொஞ்ச நேரம் முன்னாடிதான் அவன் ஃப்ரெண்ட் ரீனா வந்தா. 

ஆமா ரீனாதான், ரெண்டு பேரும் இதோ பத்து நிமிஷத்துல வந்திருவோம், எதோ முக்கியமா பேசணும்னு சொல்லிட்டு ரூம்குள்ள போனாங்க. ஆனா ரூம்குள்ள போய் அரை மணிநேரம் ஆச்சு…” என்றதும் ஆஷிக் அவனிடம் இருந்து ஃபோனை வாங்க முற்பட, அவனைத் தடுத்த ஆதர்ஷ் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு காவ்யாவிடம், “ரொம்ப நேரமா கதவை தட்டிட்டு இருக்கேன்…” என்று தன் காரின் கதவைத் தட்டியவன், 

“ஆனா ரெண்டும் பேரும் திறக்க மாட்டிக்காங்க, அப்படி என்னதான் ரெண்டு பேரும் உள்ள பண்ணுவாங்கனு தெரில. பேசணும்னு சொன்னாங்க, ஆனா பேச்சு சத்தமே கேட்கல. வேற ஏதும் பண்ணுவாங்கனு நினைக்கிறேன். ஏன் காவ்யா அவங்க உள்ள அப்படி என்னதான் பண்ணுவாங்க?” என்று அந்தப் பெண்ணையே கேட்க,

சட்டென்று ஆதர்ஷின் கையில் இருந்து ஃபோனை வாங்கிய ஆஷிக், “காவ்யா, ஆதர்ஷ் விளையாடுறான்.” என்று கூற, அவளிடம் இருந்து எந்தவித பதிலும் வராமல் போக, அப்பொழுதுதான் அவள் ஃபோனை கட் செய்திருந்தது தெரிய, 

ஆஷிக், ஆதர்ஷிடம், “என்னடா ஃபோனை வச்சுட்டா? அறிவிருக்காடா? ஏன்டா இப்படிப் பண்ணின? அவ என்னை என்ன நினைச்சுருப்பா?”

“நான் என்ன சொல்ல வரேன்னு முழுசா கேட்காம வச்சுட்டா, அவ முழுசா கேட்ருக்கணும்டா. ஆஷிக் ரூம்ல இருக்கான், ரீனா வாஷ்ரூம்ல இருக்கானு சொல்ல வர்றதுக்குள்ள ச்ச… இப்படி கட் பண்ணிட்டு போய்ட்டாளே?” என்று ஆஷிக்கைப் பார்க்க, 

ஆஷிக் சிரித்தவாறே, “யு ஆர் டிஸ்கஸ்டிங்!” என்று அடிக்க,

அவனைத் தடுத்தவாறே ஆதர்ஷ், “எஸ், ஐ க்னோ.” (yes, i know) என்று கூறி, ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சிரித்தனர். 

“இனிமே என் நம்பரை குடுப்ப?”

“சத்தியமா மாட்டேன்டா, சரியான சகுனிடா நீ.” என்றவாறு ஆதர்ஷின் கழுத்தை விளையாட்டாக ஆஷிக் நெறிக்க, இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டிருந்தனர். 

அப்பொழுது ஆஷிக்கையே உற்று பார்த்துக் கொண்டிருந்த ஆதர்ஷ் சிறு புன்னகையுடன், “டேய் ஆஷிக்!” என்று அழைக்க, மொபைலில் கேம் விளையாடி கொண்டிருந்தவன், ஆதர்ஷின் பக்கம் திரும்பாமலே,

“சொல்லுடா.” என்று கூறிவிட்டு கேமிலே கவனமாய் இருக்க,

“ரொம்பச் சந்தோஷமா இருக்கப் போல?” என்று ஆதர்ஷ் கேக்கவும், 

“ஓ…” என்று கத்தியவன், ரொம்ப நாளா இந்த லெவலை முடிக்க ட்ரை பண்ணிட்டு இருந்தேன், இப்போ முடிச்சுட்டேன்.” என்று கூற,

“அது இருக்கட்டும் முதல்ல எனக்குப் பதில் சொல்லு, ரொம்ப சந்தோஷமா இருக்கப் போல?”

“ஆமா, ரொம்ப நாள் கழிச்சு இந்த கேமை கம்ப்ளீட் பண்ணிருக்கேன்ல?”

“ஓ… உங்களுக்கு நான் எதைப் பத்தி பேசுறேன்னு தெரியாது?”

என்ற ஆதர்ஷின் பார்வையிலையே, அவன் எதைப் பற்றிப் பேச வருகிறான் என்பதைப் புரிந்துகொண்ட ஆஷிக், சில நொடிகளுக்குப் பிறகு தன் மௌனம் கலைத்து,

“நீ எதைப்பத்தி பேசவரனு எனக்கு நல்லாவே புரியுது மச்சான், நான் ஜியாவை மறக்க முடியாம கஷ்டப்படுறது உண்மைதான். எப்படிடா அவளை மறக்க முடியும்? காதலை எனக்குள்ள முதல் முதலா விதைச்சவடா அவ, என்னைக்கும் அவ இங்க இருப்பா.” என்று தன் இதயத்தைக் காட்டியவன், 

“மத்தவங்க மாதிரி நான் மூவ் ஆன் பண்ணிட்டேன், அப்படி இப்படினு நான் பொய் சொல்ல மாட்டேன். அவ இல்லாம எனக்கு ஒரு வாழ்க்கையே இல்லை என்று இருக்கிற போது, நான் எப்படிடா மூவ் ஆன் பண்ணுவேன்? இருந்தாலும் என்னைப் பத்தி முழுசா புரிஞ்சிக்காம என் ஃபேமிலிய சுட்டிக்காட்டி, என்னைத் தனியா விட்டுட்டு போனவடா அவ. 

நினைச்சாலே கோபமா வருதுடா… எவ்ளோ வலிக்குது தெரியுமா? அவளுக்கு வலிக்கலையா? என்னைப் பத்தி ஞாபகமே வராதா? நான் மட்டும் தான்டா ஃபீல் பண்றேன், அவ நல்லாதான் இருக்கா. எல்லாம் அவ பண்ணிட்டு என் மேல தப்பு இருக்குற மாதிரி பேசுறாடா. அதான் தாங்கிக்க முடியல. இப்போ கூட எல்லாத்தையும் மறந்துட்டு அவளோட நான் வாழ தயாரா இருந்தாலும், அவ முடியாதுனுதான் சொல்லுவா, தப்பெல்லாம் என்னோடதுனு சொல்லுவா.

சரியான திமிர் புடிச்சவடா அவ, அவ எனக்கு வேண்டாம்.” என்றவன் தன் கண்களின் ஓரம் கசிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு, கையில் இருந்த கிளாசை காட்டி, “மச்சான் இந்த ட்ரிங்க்ஸ் மேல சத்தியம் பண்ணி சொல்றேன், அவ எனக்குச் சத்தியமா தேவையே இல்லை.” என்றவன், அந்த க்ளாசில் இருந்த மதுபானத்தை ஒரே நேரத்தில் தன் வாயில் ஊற்றி அந்த காலி கிளாசை தரையில் போட்டு உடைக்க,

ஆதர்ஷ் ஆஷிக்கிடம், “டேய், என்னடா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சத்தியம் எல்லாம் பண்ணின, இப்போ என்னன்னா அந்த க்ளாசையே உடைச்சுட்ட. அப்போ சத்தியத்தையும் உடைச்சுருவியா?” என்று கேட்டு புன்னகைக்க,

“சிரிடா… ஏன் சிரிக்க மாட்ட? எல்லாம் என் விதி!”

“அப்படி இல்லடா, உன் மனசுல இருக்கிற ஈகோவை தூக்கி போட்டுட்டு, அமைதியா திங்க் பண்ணுனு சொல்றேன்.”

“ஈகோ… எனக்கு இருக்கா? அவளுக்கு இருக்காடா?”

“நீயா நானானு போட்டி போடாத, உனக்கு வேணும்னா நீ கொஞ்சம் இறங்கிப் போ தப்பில்லை.” என்ற ஆதர்ஷிடம், 

“வண்டிய எடுக்குறியா? தூக்கம் வருது.” என்று கூறி, ஆஷிக் காரில் அமர,

ஆதர்ஷ் தனக்குள், ‘எனக்குத் தெரியும்டா, நீ ஜியாவை இன்னும் லவ் பண்றனு. உன் காதல் உண்மையானது, அதுவே உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கும்.’ என்றவன், ஆஷிக்குடன் அவனது இல்லம் சென்றான்.

***

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!